Wednesday, January 19, 2022

VAINVA VINNOLI

 வைணவ விண்ணொளி  -  நங்கநல்லூர்   J  K   SIVAN



ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் ஸ்வாமி தேசிகன் 

பாரத தேசம் பெற்றெடுத்த  உயர்ந்த வேதாந்திகளில் ஒருவர்  சுவாமி தேசிகன், நிகமாந்த தேசிகன், வேதாந்த தேசிகன் என்றெல்லாம் பெயர் கொண்ட  ஒரு தென்னிந்திய வைணவ  மஹா ஆசார்யன்.

நாம் சரியாக செல்ல வேண்டிய   திசையை  வழி காட்டுபவன்  தேசிகன்.   ஆசார்யன் என்பதும் இது போல்.  சாரி  என்றால்  நடப்பவன்.  பாத சாரி காலால் நடந்து செல்பவன்.  கஜாச்சாரி   யானைமேல்  செல்பவன்.  எனவே  சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழிகாட்டுபவன் ஆசார்யன். ஆழ்வார்களில்  மிகவும்  போற்றப்பட்ட ஒருவரையும்  இப்படித்தான்  ''நம்''  ஆழ்வார்கள் என்றும்.  ஸ்ரீ ரங்கம் பெருமாள், ''நம்'' பெருமாள், என்றும்  பாராட்டிப் போற்றி  வணங்குகிறோம்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரே  ஒரு  தேசிகன் மட்டுமே   அந்த பெயருக்கான  உயர்ச்சி
பெற்றவர் சுவாமி தேசிகர். அவர் 1268 ல்  தூப்புல்  எனும் கிராமத்தில் காஞ்சி நகரத்தில்  அனந்த சூரி  - தோதாரம்பா  தம்பதிகளுக்கு  வெகு காலம் கழித்து  ஏழுமலையான் அருளால்  பிறந்தவர்.  அதனால் தான் வேங்கடநாதன்  எனப் பெயரிட்டனர்.  திருப்பதியில்  வெங்கடேசன் ஆலயத்தின்  மணியின்  நாதம்  மலை மேலே கணீர்  என்று ஒலிக்கும்போது பக்தர்கள் மனம் ஆனந்த ப்ரவா ஹத்தில்  இன்புறும்.   அந்த  வெண்கல மணியை பெருமாள் கொடுத்து  தான்  விழுங்கியதாக கனவு கண்டாள்  தோதராம்பாள்.  
 ராமானுஜரைப் போன்று  தேசிகரும்  கணீரென்று  வேத நாதம் எங்கும் ஒலிக்க  பிரகாசிப்பார் என்று  பெருமாளே  அருளினார் போல் இருக்கிறது.  அதனால்  தான் பெருமாள் சந்நிதியில்  இன்று வரை  மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும் ஒலிக்கும். தாய் மாமன் அப்புள்ளார்  ஐந்து வயதில் அவரை  நடாதூர்  அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்ற போது   அந்த முதியவர்  ஒரு கணம் சிறுவன்  தேசிகனைப்  பார்த்து பிரமித்தார்.  பிரசங்கத்தை   ''எங்கே  நிறுத்தினோம்?''  என்பது  ஒரு கணம்  மறந்து போய் அதை யோசிக்கையில்,  சரியாக  அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார்  ஐந்து வயது தேசிகர்.

இருபது  வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்த தேசிகன் 21ம்  வயதில்  கனகவல்லி என்கிற  திருமங்கையைக் கைப்பிடித்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

கடலூருக்கு  7 கி.மீ  தூரத்தில்  ஒரு அற்புத க்ஷேத்ரம் திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர்  இப்போது சுருங்கி  திருவந்திபுரம்  ஆகிவிட்டாலும்  தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும்  சுருங்கவில்லை.  இங்கு தான் ஒரு  சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி கருட மந்த்ரம் ஜபித்து கருடன் (வேதத்தின் உருவம்)  தரிசனம் தந்து ஹயக்ரீவ மந்திர உபதேசம் செய்து,  தேசிகன் விருப்பப்படி அவரது நாக்கில் குடிகொண்டார்.   ஹயக்ரீவர்  மஹா விஷ்ணுவின் ஒரு அவதாரம்,  சிரம்  குதிரை போல் இருக்கும், தேகம் மனித உடல்.   ஹயக்ரீவர்  னது சிலா ரூபத்தையும்  தேசிகரும்  கொடுத்தார். அந்த ஹயக்ரீவ  விக்ரஹத்தை இன்றும்  அங்கே தேவநாத பெருமாள்  சந்நிதியில்  காணலாம்.  நான் கண்டு மகிழ்ந்தேன்.

காஞ்சி விஜயம் செய்து பிறகு  பல  திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன்  ''பிரபத்தி' எனும் சரணாகதி தத்தவத்தை விளக்கி வைஷ்ணவ சமூகம்  பயன்பெற செய்தவர். நியாச விம்சதி, நியாச தசகம், நியாச திலகம் என்று  வடமொழியிலும்,  அடைக்கலப் பத்து, அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும்  அளித்த பெரிய  ஞானி. சகல கலைகளும் அறிந்த  கைதேர்ந்தவர்கள்  சர்வ தந்திர ஸ்வதந்திரர்  என்று அழைக்கப் படுவார்கள்,  ராகவேந்திரரைப் போன்று இவரும் அவ்வாறு ஒருவர்.

திருப்பதி சென்று  தயா சதகம் இயற்றினார்.  பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.  ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர்  சென்று  ஸ்ரீ ராமானுஜரை வழிபட்டு  அங்கே யதிராஜ சப்ததி  என்ற ஸ்லோகம் உருவானது.   ஸ்ரீ ரங்கத்தில்  ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான்  வேதாந்த தேசிகர்  என்று நாம் இன்றும் அவரை அறிவது.. ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

1327ல் அலாவுத்தினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே  பல ஆலயங்களை அழித்தபோது  ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும்  ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும்  எடுத்துச் செல்லப்பட்டது. இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு  செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடமிருந்து  அரிய  வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் தேசிகன்  

''ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்''  என்று  பெருமாளை  அவர்  பாடியதே  அபிதி ஸ்தவம்  என்ற ஸ்லோகம்.

ஸ்ரீ ரங்கத்தில்  ஆழ்வார்களின்  விக்ரஹ பூஜை கூடாது  அவர்களில்  பலர் பிராமணர்களே அல்ல,  என்றும் திவ்ய பிரபந்தம்  சமஸ்க்ரிதம் அல்ல  அதை ஓதக்கூடாது''  என்றும்  பத்தாம் பசலிகள் சிலர்  தடுக்க  அனைவருக்கும்  ஆழ்வார்கள் பெருமையை எடுத்துரைத்து, திவ்யப்ரபந்தம் வேத சாரம் என்று  நிருபித்து இனியும் இம்மாதிரி எதிர்ப்புகள் வரக்கூடாதே  என்று  முன் யோசனையாக  கல்வெட்டுகளில்  ராப்பத்து  பகல் பத்து உத்சவ மகிமை ஆகியவற்றை இன்றும்  நமக்கு விளங்கச செய்தவர் தேசிகர். ஸ்ரீ ரங்கநாதன் இதனால் மனமுவந்து 'இனி ஒவ்வொருநாளும்  என்  இந்த  ஆலயத்தில்  சுவாமி தேசிகனை நினைவு கூர்ந்து  '' ராமானுஜ தயா பாத்ரம்'' எனும் தனியனை  சொல்லிவிட்டு  பிறகு  திவ்ய ப்ரபந்தம் ஓத வேண்டும்'' என்று  வழக்கப் படுத்தினார்.   தேசிகர் ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள்  திரு அரங்கனை பாதாதி கேசம் வரை  வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம்  இயற்றினார். இதை படிக்கும்போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல்   மனதில் தோன்றுகிறது.

''நீர்   என்ன  பெரிய  ஞானஸ்தர், பண்டிதர்  என்ற  நினைப்போ?  ஒரே நாளில்  1000 பாக்களை ரங்கநாதர்  மேல்  இயற்ற முடியுமா  உம்மால்?'' என்று  சில பெரிய கனத்த  தலைக்காரர்கள் சவால் விட ''ரங்கநாதனைப் பாட  முடியாமலா  போகும்  என்று  தேசிகர் சவாலை  ஏற்றாரே தவிர, அன்று முழுதும் சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்ததில் போய்விட்டது.   ''அடடா,   நாளை  காலையில்  1000 பாக்களை இயற்றியதைக்  காட்ட வேண்டுமே, என்று இரவு யோசித்தார். 

''தேசிகா, என்  பாதுகையிலிருந்து  ஆரம்பியேன் '' என்று ஸ்ரீ ரங்கநாதனே  எடுத்துக் கொடுக்க, விடிகாலை  4 மணிக்கு  எழுத்தாணியைப்  பிடித்தார்.  மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி  ஸ்லோகம் உருவானது. அதை  உச்சரிக்கவே  குறைந்தது  7 மணி நேரம் ஆகும் நமக்கு.  மறுநாள் காலை  பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ''கவிதார்க்கிக சிம்ஹம்'' என்ற  பட்டத்தை  அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில்  ஆண்டாளை வழிபாட்டு  கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது  திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம்  தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே  உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனிவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம்  என்ன அரிசியோடு என்று கேட்க,  ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும்  என்று  கையால்  கூட  தங்கத்தை தொடாமல்   தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே  எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய  நண்பன் விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால், ''தேசிகா,  நீ  எதற்காக  ஏழ்மையில் வாடுகிறாய், வா என்னிடம், இங்கு  உனக்கு நிறைய  பரிசு வழங்க  ஏற்பாடு செய்கிறேன் என்றான் ''  வித்யாரண்யனுக்கு (அது தான் அவன் பெயர்) அவர்  பதிலாக  எழுதியதே  நமக்கு பொக்கிஷமாக கிடைத்த ''வைராக்ய பஞ்சகம்''.
 நாம்   தேசிகரின் நண்பர்  வித்யாரண்யருக்கு  கடன் பட்டிருக்கிறோம். அவரால் அல்லவோ  ''வைராக்கிய  பஞ்சகம் '' நமக்கு   பரிசாக கிடைத்தது.  நன்றி  வித்யாரண்யரே .  அடுத்து  வைராக்ய  பஞ்சகம் எழுதுகிறேன்.

ஆதி சங்கரர்  ஒரு  ஏழைப் பெண்ணுக்கு  பொன் மழை பெய்ய வைத்த  கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா?. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில்  நடந்திருக்கிறதே.

காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள், ஒரு ஏழைப் பையன் தனது  திருமணத்துக்கு உதவி கேட்டபோது ''தம்பி.  நீ  தேசிகர் என்று ஒருவர்  ரெண்டு தெரு தள்ளி  வசிக்கிறார். பணக்காரர். யார் கேட்டாலும் பணம்  தருவாரே,அவரைப் போய்  கேள். கொடுப்பார்'' என்று அனுப்ப, அந்த அப்பாவி   தேசிகரது  எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக  வரதராஜ பெருமாள் கோவில் சென்றார்.   தாயாரின் சந்நிதியில் அவளை '' தாயே, நீ இவனுக்கு உதவி செய்''  என  வேண்டினார் தேசிகர்.  அவரது  மனதைத் தொடும் ''ஸ்ரீ ஸ்துதி''  தாயாரை  உடனே அங்கே ஒரு  பொன்மழை பெய்ய  காரணமானது..  

ஒரு  பாம்பாட்டி தேசிகரிடம்  ''என்னுடைய விஷ  பாம்புகளை  உங்களால் சமாளிக்க முடியுமா?''  என்று சவால் விட,   அவர் தரையில் ஒரு கோடு  போட்டு '' உன் பாம்புகள் இந்த  கோட்டைத்  தாண்டட்டும்'' என்றார். சில விஷ  பாம்புகள்  கோட்டைத் தாண்ட முயன்றபோது  தேசிகர் உச்சரித்த  கருட மந்திர  ஸ்லோகம் கேட்ட  கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை  உணவாகத்  தூக்கிக் கொண்டு போய் விட்டான்.  பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ''என் பிழைப்பே இந்த பாம்புகள் 'தான் '' தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார்.

''உங்களால் எல்லாமே  செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும்  ஒரு  சாதாரண கிணறு கட்ட முடியுமா  உங்களால்?''  என்று  ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.
''சரியப்பா கட்டுகிறேன்''
' நான் கொடுக்கும் கற்களை மட்டுமே  கொண்டு அதைக் கட்டவேண்டும்''
''ஆஹா  அப்படியே.' என்ற தேசிகர்  அவன் கொடுத்த  அளவு சரியில்லாத கோணா  மாணா  கற்களைக் கொண்டே  கட்டிய  அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது. எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.   மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க,  அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில் தனது உருவத்தையே  தத் ரூபமாக  சிலையாக வடித்துக் காட்டியபோது  அசந்து போனான். அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை  உளியால் வெட்டும்போது  அவன் வெட்டிய பாகங்கள் அவருடைய உடலிலிருந்து  ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய்  அவர் காலடியில்  விழுந்து மன்னிக்க வேண்டினான்  அந்த சிற்பி. தனது உருவத்தை தானே  தேசிகர்  வடித்த சிலை இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே. மேலே சொன்ன அவர் கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம். நான் பார்த்து இருக்கிறேன் கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி ஒரு மண்டபத்தில் உள்ளது.
தேசிகர்  101 வருஷம்  வாழ்ந்தார்.  தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர்  தனது குமாரர்  குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ''திருவாய் மொழி,  உபநிஷத்  எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்''  என்றார்.  பரமபதம் அடைந்தார்.  தாயார்  ரங்கநாயகி  தன்னருகே ஒரு சந்நிதியில்  தேசிகரை  இருத்திக்கொண்டாள். வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும்  நிலுவையில் இருக்கிறது.

''ராமானுஜ  தயா பாத்ரம், ஞான வைராக்ய பூஷணம்,
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்  வந்தே வேதாந்த தேசிகம் ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...