Monday, January 10, 2022

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆண்டாள்:

24  '' கோ (விந்) தா''

கோதை எனும் ஆண்டாளை பற்றி எழுதுவது பேசுவது என்றால் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பெண்ணை இதுவரை இந்த உலகம் கண்டதில்லையே. இனியும் காணப் போவ தில்லை. பெண் என்று சொல்லிவிட்டேனே -- அவள் பெண்ணாகப் பிறந்த பூமி தேவியா, லக்ஷிமி பிராட்டியா? இருவருமேவா?
பிறந்தது எங்கே? ஸ்ரீ வில்லிப்புத்தூர்
பிறந்தது என்றால் என்ன? அவள் கண்டெடுக்கப்பட்டது
அவள் பெற்றோர் யார் ? தானாக தோன்றிய  கடவுளுக்கு பெற்றோர் ஏது ?
அப்படியென்றால் வளர்த்தவர்? ஆழ்வார்களில் பெரிய்ய்ய பெரியாழ்வார்
அவருக்கு வேறு பெயர் ஏதாவது? அவர் பெயர் விஷ்ணு சித்தர் ஆனால் அவரை எல்லோரும் அழைக்கும் பெயர் பெரியாழ்வார்.
எத்தனை பாடல்கள் எழுதி.....? முப்பதே போதுமே --முப்பது லக்ஷத்துக்கு சமம்
வில்லிப்புத்தூர் ?? 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ரெண்டு வேடர்கள் வில்லி மற்றும் புத்தன் ஆகியோ ரால் உருவாக்கப்பட்ட க்ஷேத்ரம்.

ஆண்டாளுக்கு அவள் கண்டெடுக்கப்பட்ட நந்தவனத்திலேயே  பெரிய கோவில்  இருக்கிறது. அவளை கண்டெடுத்த  பெரியாழ்வாருக்கும் சந்நிதி உண்டு. .

பெரியாழ்வார் வில்லிப்புத்தூரில் வடபத்ரசாயியை வழிபட்டுக் கொண்டு அந்த கோவிலுக்கு சேவை செய்து வந்தவர். அழகான நறு மண மலர்கள் கொழிக்கும் நந்தவனம் வளர்த்து வித விதமாக புஷ்பங்களை தொடுத்து மாலைகளாக்கி பெருமாளுக்கு அன்றாடம் சாற்றிமகிழ்பவர். ஒருநாள் நந்தவனத்தில் புஷ்பங்களை பறிக்க சென்றபோது ஒரு சிறு  சிசுவின்  அழு குரல் கேட்டு அதை துளசி வனத்தில் கண்டெடுத்தார். வளர்த்தார். கோதை என்று பெயர் சூட்டினார். கோதை என்றால் பூமா தேவியின் பரிசு என்று ஒரு அர்த்தமாமே. அவளை சிறந்த விஷ்ணு பக்தை யாக்கினார். அவரது வளர்ப்பு செல்ல மகளானாள் கோதை.   அவளை ஸ்ரீ வைஷ்ணவ சிரோமணியாக்கினார்.

விஷ்ணு சித்தரைப் பொருத்தவரை அவரது ஒரே லட்சியம் தினந்தோறும் தனது பெரிய அகண்ட நந்தவனத்தில் துளசி மற்றும் அநேக நறுமண மலர்கள் பூத்துக் குலுங்க நிறைய செடிகள், கொடிகள் எல்லாம் வளர்ப்பது. குழந்தை போல் அவர் வளர்த்த அந்த நந்த வனம் புஷ்ப வனமாக காட்சி யளித்தது.

அன்றாடம் விடிகாலை பரந்தாமனைப் பாடியவாறு பெரிய பூக்குடலையோடு விஷ்ணுசித்தர் நந்த வனம் முழுதும் சுற்றி அந்த மலர்கள் கொடிகளோடு பாசத்தோடு பேசியவாறு பூக்களை, துளசி தளங்களைப் பறித்து ஆஸ்ரமத்துக்கு கொண்டு வந்து தானே அவற்றை தொடுத்து மாலையாக்கி தனது கையாலேயே அழகிய மணவாளனுக்கு, ரங்க மன்னாருக்கு, வட பத்ர சாயிக்கு சூட்டி மகிழ்வார். விசிறுவார். அப்படி ஒருநாள் பூப்பறிக்கும் நேரத்தில் தான் கோதையை துளசி  வனத்தில் கண்டார். 
அங்குள்ள ஆலய மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வட பத்ர சாயி - கிழக்கு நோக்கி கிடந்த திருக்கோலம். தாயார் ஸ்ரீ ஆண்டாள்.

லோக மாதாவே ஆண்டாளாக  அவதரித்தவள். பொறுமையின் பூஷணமாக பூமா தேவியைப் போற்றுகிறோம். மகாலக்ஷ்மியே அவதாரம் செய்து ஆண்டாளாக தோன்றினாள். அவள் சாதாரண இடத்தில் தோன்ற முடியுமா?  விஷ்ணு சித்தர் போன்ற புண்ய புருஷரிடமல்லவோ சேர்ந்து வளர்க்கப்பட வேண்டும்? எனவே தான் அவள் வில்லி புத்தூரை தேர்ந்தெடுத்தாள். அவள் தேர்ந்தெடுத்த தந்தை சாமான்யமானவரா. ஆழ்வார்களிலேயே மிகப் பெரியவராக போற்றப்பட்ட பெரியாழ்வார். இந்த பெரியாழ்வாருக்கு மற்றுமொரு மிகப்பெரிய பாக்கியம், அந்த அரங்கனுக்கே, ரங்க ''மன்னாரு''க்கே ''மாமனார்''

உலகத்துக்கே தாயானவள் ''அப்பா'' என்று அழைக்கப் பெற்ற புகழுடையவர் விஷ்ணு சித்தர். அவர் பெயரின் அழகைப் பாருங்களேன். யாருக்காவது இப்படி ஒரு பெயர் உண்டா? ''விஷ்ணுவையே சித்தம்'' எல்லாம் நிரம்ப உடையவர்.

ஆண்டாளை முதல் முதலாக பெரியாழ்வார் கண்ணால் கண்டது ஆடிப் பூரம் அன்று. நாம் குழந்தை களை பிரசவ ஆஸ்பத்திரியில் யாரோ ஒரு நர்ஸ் கையில் பார்க்கிறோம். அல்லது ஆஸ்பத்திரி தொட்டிலில் பார்க்கிறோம். விஷ்ணு சித்தர் அவளைப் பார்த்தது துளசி வனத்தில். நந்தவனத்தில். என்ன புனிதம்? விஷ்ணுவின் இதயத்தில் துளசியோடு கூடி பாகம் பிரியாதவள், விஷ்ணுவின் மனம் கவர்ந்த துளசியில் கண்டெடுக்கப்பட்டவள். நள வருஷம் ஆடி மாதம். பூர நக்ஷத்ரம் அவள் ஜனன தினமாக கொண்டாடப்படுகிறது. பூமா தேவியே, பூமியில் விளையும் புண்ய தாவரமான துளசியில்! . சயன்ஸ்காரர்கள் துளசியின் மருத்துவ உடல் காக்கும் சக்தியைப் பற்றி புத்தகம் புத்தகமாக எழுது  கிறார்கள்.பேசுகிறார்கள். லேட் பேர்வழிகள். ஆழ்வாருக்கு அப்போதே தெரியும் அவள் ''உடலை மட்டும் அல்ல உலகையும் சேர்த்து'' காப்பவள் என்று.

''என்ன ஆச்சர்யம் என் நந்தவனத்தில் பெருமாளுக்கு புஷ்பம் அல்லவோ வளர்க்கிறேன். பூ இருக்கும் இடத்தில் பூவையா? பூம்பாவையா? இது நனவா? கனவா? எனக்கு கண் தெரிகிறதா? கலக்கமா? மயக்கமா? இல்லையே ! காதில் ஒரு சின்னஞ்சிறு சிசுவின் குரல் கேட்கிறதே. கனவல்ல, நனவு தான். என் கை அவளைத் தூக்கியதில் கனக்கிறதே. பூமியையே அல்லவா சுமக்கிறார் பெரியாழ்வார். கனக்காமல் என்ன செய்யும்?   யார் இந்த குழந்தை? அருகிலே ஒருவருமில்லையே. இந்த தனிக் காட்டில் எனது நந்தவனம் மட்டும் தானே ஏதோ ஒரு ஒதுக்குப்புறத்தில் உள்ளது . ஜன நடமாட்டம் இல்லாத இடத்தில், விடியற் காலையில் எப்படி இங்கே ஒரு பெண் சிசு? மனது பூரா விஷ்ணுவின் எண்ணம் தானே அவருக்கு. விஷ்ணு சித்தரல்லவா? . இது அந்த மாலே மணிவண்ணனின் வேலை தான் என புரிகிறது. குழந்தையை வளர்க்க வேண்டியது தான் இனி எனக்கு அடுத்த முக்ய கார்யம்.

அந்த தனித்த ஆஸ்ரமத்தில் நந்தவனத்தில் துளசி வனத்தில், ஒரு சிறிய பர்ணசாலையில் இன்றுமுதல் இனி இரண்டு ஜீவன்கள்.  அன்று இரவு அவர் தூங்கவில்லை. என்ன பேர் வைக்கலாம், எப்படி அழைக்கலாம்?  பல பெயர்கள் வரிசையாக வந்தன. எல்லாவற்றிற்கும் சிகரமாக ஒரு பெயர் நிலையாக மனத்தில் நின்றது.

 ''கோதா '' அதாவது '' பூமி தேவியின் பரிசு''. கூப்பிடவும் எளிது. (நமக்கும் தான் ''கோதா ''கோவிந்தா!. அவன் முதல் எழுத்து ''கோ'' கடைசி எழுத்து ''தா'' -- கோதா. முதலும் முடிவும் உலகில் அவள் தானே. ) பொருத்தமாக அமைந்த காரணப்பெயர் வேறு. அவருக்கு தெரியுமா பூமா தேவிக்கே ''அவள் பரிசு'' என்றே பெயர் வைத்து விட்டோம் என்று ! வேறு சிலர் கோதை என்றால் அழகானவள், சுருள் சுருளாக முடியுடையவள் என்றெல்லாம் கூட கூறுகிறார்கள். நாம் நமக்கு பிடித்த ''பூமி தேவியின் பரிசு'' என்கிற பெயரையே விரும்புவோமாக.

ஆங்கில வருஷம் கணக்குப்படி கோதை -- இனி அவளை அப்படியே அழைப்போம். கி. மு 3005ல் பிறந்தாள் என்று கூறுகிறார்கள். நமக்கு ஆண்டாள் வருகை முக்யமாகட்டும். வருஷம் தெரிந்து என்ன பண்ணப்போகிறோம்.  ஐந்து வயதிலிருந்தே அப்பாவோடு பூப்பறித்து தொடுத்து அரங்கனுக்கு மாலை தயாரிக்க உதவினாள் . 

கோதை பெரியாழ்வாரின் மேற்பார்வையில் பாசுரங்கள் இயற்றலானாள் . அரங்கனைப் பற்றி அவ்வளவும் அறிந்து கொண்டாள் . அவனை அடையவும் முற்பட்டாள். அரங்கன் நினைவு அவளை முழுதும் ஆட்கொண்டது. அவனுக்கே ஆளானாள். அவனுடையவள் என்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள். அரங்கனுக்கென்று தொடுத்த மாலையை தினமும் தனது தோள்களில் அணிந்து தானும், தான் தொடுத்த மாலையும், இரண்டுமே அவனுக்கு பொருத்தமா என்றும் அறிய முற்பட்டாள். கிணற்றில் தெளிந்த நீரில் தனது மாலையிட்ட உருவத்தை பார்த்து மகிழ்ந்தாள். இன்றும் அந்த கிணறு வில்லிப்புத்தூரில் இருக்கிறது. நிறைய காசை போட்டு நிரப்பி பார்க்கமுடியாதபடி கம்பி வலைகள்!! 
அவளது திருப்பாவையில் அவள் ஆயர்குடி பெண்ணாக யமுனை நதியில் மற்ற பெண்களுடன் நோன்பு நோற்றாள் . கிருஷ்ணனை வேண்டினாள் . ஒரு வேளை ராதையே தான் கோதையோ?
கண்ணனை பரிபூர்ணமாக சரணாகதி அடைந்தால் கிட்டும் பலன் அத்தனையும் சொல்கிறாள். கிருஷ்ணனின் சௌலப்யம் புரியவைக்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...