Wednesday, July 31, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
14ம் நாள் யுத்தம் தொடர்ச்சி

ஜெயத்ரதன் அஸ்தமித்தான்

சூரியன் என்றையும் விட அன்றைக்கு அதி வேகமாக மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதைபோல தெரிந்தது. ஒருவேளை சூரியனுக்கு வாழ்வா சாவா யாருக்கு, அர்ஜுனனுக்கா, ஜெயத்ரதனுக்கா என்று பார்க்க ஆசையோ?. அஸ்தமனத்துக்குள் அர்ஜுனன் ஜெயத்ரதனை கொன்றால் அதில் ஆச்சர்யமில்லை. ஆனால் அவனை நெருங்கவிடாமல் கௌரவ சேனை தடுத்து விட்டால் அர்ஜுனன் மரணமடைவானே. சீக்கிரம் அர்ஜுனன் வெல்லட்டும் என்று வேகமாக நகர்கிறானோ?

ரிஷியஸ்ரிங்கருக்கு அலம்புஷன் என்று ஒரு ராக்ஷஸ மகன். அவன் மாயாஜாலங்களில் கை தேர்ந்தவன். பலவான். அவன் கௌரவ சேனையில் சேர்ந்து பாண்டவ சே
னையை வதைக்கிறான். பல பேர் முயன்றும் அவனை தடுக்க முடியவில்லை. கடோத்கஜன் அவனோடு மோதி வெகு நீண்ட யுத்தத்துக்கு பிறகு அவனைக் கொல்கிறான். அலம்புஷன் மறைவு கௌரவ சேனைக்கு ஒரு பெரிய நஷ்டம். சாத்யகியை எதிர்த்த துச்சாதனன் தாக்கு பிடிக்க முடியாமல் பின் வாங்கி செல்கிறான். கர்ணன் சல்லியன் எய்த அம்புகளை தடுத்து நொறுக்குகிறான் சாத்யகி.

''சஞ்சயா, சூரியன் மறைய இன்னும் எத்தனை நாழி இருக்கிறது? அர்ஜுனன் என்ன செய்கிறான் பார்த்து சொல்'' என பதறுகிறானா, கதறுகிறானா திருதராஷ்டிரன்?

ஜெயத்ரதனை பாதுகாத்து காப்பாற்றிய பெருஞ் சேனையை தகர்த்துக் கொண்டு கிருஷ்ணனின் தேர் முன்னேறுகிறது.. இரு கைகளாலும் அர்ஜுனன் அம்புகளை செலுத்தி கௌரவ சேனையைச் சிதறடிக்கிறான். அவனை அவந்தி அரசர்கள் விந்தன், அனுவிந்தன் சேனை எதிர்க்க சற்றே நேரத்தில் அவர்கள் சேனையை அழித்து இருவரையும் அர்ஜுனன் கொன்று முன்னேறுகிறான். ஆனாலும் இன்னும் ஜெயத்ரதன் அர்ஜுனன் கண்ணில் படவே இல்லை.

''துரியோதனன் உன் முன்னே தென் படுகிறான். முடிந்தால் இவனைக் கொன்றுவிடு" என்றான் கிருஷ்ணன்.

''நான் கொன்றால் பீமன் சபதம் என்னாவது. பாவம் அதுவரை முடிந்தவரை அவன் மூச்சு விடட்டுமே''. என்றான் அர்ஜுனன். எனினும் இவனை சும்மா விடப்போவதில்லை என்று அவன் மீது சரங்களை எய்தபோது அவை பயனற்று திரும்பி கீழே விழுந்தன. அர்ஜுனன் கிருஷ்ணன் இருவருக்குமே இது ஆச்சர்யம்! அதற்காக த்தான் மார்பை காட்டிக்கொண்டு நிற்கிறானா துரியோதனன்.!

'என்ன அர்ஜுனா உன் காண்டீபம் பலமற்றுப் போய்விட்டதா. அல்லது உனக்கு சக்தி இல்லையா.?? ஒரு கணம் அர்ஜுனன் யோசித்தான். திடீரென்று அவனுக்கு ரகசியம் புரிந்தது.

''கிருஷ்ணா, துரியோதனன் துரோணரிடம் கவச மந்திரம் பெற்று அவர் அணிவித்த கவசத்தால் உயிர் தப்பினான். அந்த மந்திரம் எனக்கும் ஆச்சாரியார் உபதேசித்திருக்கிறார்'' என்றான் அர்ஜுனன்

நேரமாகிக் கொண்டே வந்தது. ''அர்ஜுனா நான் பாஞ்சஜன்யத்தை ஒலிக்கிறேன். நீ கௌரவ சேனையை தாக்கிக் கொண்டே வேகமாக முன்னேறி ஜெயத்ரதனை நெருங்கு'' என்றான் மீண்டும் கிருஷ்ணன்.

துரோணரின் நோக்கம் யுதிஷ்டிரனைப் பிடிப்பது. அதற்கு அவர் சேனை உழைத்தது. க்ஷேமத்ருதி த்ரிகர்த்தர்களில்
ஓருவன்.பெரிய வீரன். அவன் சாத்யகியைத் தாக்கி யுதிஷ்டிரனை நெருங்க வ்ரிஹத்க்ஷகன் அவனை தடுத்து போரிட்டு அவனை கொன்றான். விரதன்வன் எதிரே எதிர்த்து வரும் திருஷ்டகேதுவை தடுக்க இருவருக்கும் யுத்தம் நடந்தது. இரு யானைகள் மோதுவது போல் போரிட்டனர். ஒரு கதாயுதத்தால் விரதன்வனின் மார்பை பிளந்து அவனை திருஷ்டகேது கொன்றான். சகாதேவன் த்ரிகர்தன் நிரமித்திராவை கொன்றான்.

யுதிஷ்டிரனுக்கு கவலை வந்து விட்டது. 'காலையில் கௌரவப்படைக்குள் பிளந்து உள்ளே சென்ற அர்ஜுனன் திரும்பவில்லையே. தனியே கௌரவ சேனைக்கடலில் கலந்து மறைந்துவிட்டான். எண்ணற்ற அதிரதர்கள் சூழ்ந்து கொண்டு அவன் ஒருவனை தாக்குகிறார்கள். அவர்களை மீறி எப்படி அவன் ஜயத்ரதனை அடைந்து கொல்வான்? ஒருவேளை அர்ஜுனனைக் கொன்றுவிட்டார்களா, மகன் போலவே தந்தைக்குமா முடிவு? கிருஷ்ணனின் பாஞ்சஜன்ய நாதம் கேட்டதே, அது அபாய அறிவிப்பா? சாத்யகி, நீ என்னை காத்தது போதும். நானே என்னை காப்பாற்றிக் கொள்கிறேன். நீ உடனே அர்ஜுனனைத் தேடிச்செல். அவனுக்கு உன் உதவி தேவையாயிருக்கும். இந்த நேரத்தில் அவனைக் காக்க வேண்டியது உன் கடமை. நீயும் கிருஷ்ணனுமாக விருஷ்ணி குலத்தில் எங்களை இதுவரை காத்தவர்கள். இந்த நேரம் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய்'' என்றான் யுதிஷ்டிரன்.

'அரசே, ஜயத்ரதனைக் கொன்று திரும்பும் வரை யுதிஷ்டிரனை காப்பது உன் கடமை'' என்று சொல்லி எனக்கு கட்டளை இட்டு . அர்ஜுனனும் கிருஷ்ணனும் சொன்னதை நான் எவ்வாறு மீற முடியும்'' என்றான் யுயுதானன் என்ற பெயர் கொண்ட சாத்யகி.

''இல்லை, சாத்யகி அவர்கள் கட்டளையை விட என் கட்டளை உயர்ந்தது. நீ உடனே அர்ஜுனனைத் தேடிச் செல்.''

' உங்களை சிறைபிடிப்பதாக துரியோதனனுக்கு வாக்களித்து துரோணர் உங்களை அடைய யுத்தம் செய்யும் நேரத்தில் நான் எப்படி உங்களை விட்டு அகல முடியும்? '' என்றான் சாத்யகி,

' அது என் கவலை, நீ உடனே செல்'' என்று ஆணையிட, சாத்யகி பொறுப்பை பீமனிடம் ஒப்படைத்துவிட்டு அர்ஜுனன் பின்னால் போகிறான்.

ஜலசந்தன் எதிர்த்து தடுக்க கடும்போருக்கு பிறகு சாத்யகி ஜலசந்தனைக் கொன்றுவிட்டு முன்னேறுகிறான். துரோணரின்
சேனை, யவனர்கள், காம்போஜர்கள், த்ரிகர்த்தர்கள், கர்ணன், துச்சாதனன், துரியோதனன், சல்லியன், காந்தாரர்கள் இத்தனை அரசர்கள் படைகளையும் பிளந்து அர்ஜுனனை நெருங்கிவிட்டான் சாத்யகி. அர்ஜுனனோ அழிவின் அவதாரமாக கௌரவ சேனைகளை அழித்துக்கொண்டு ஜயத்ரதனை கொல்ல மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தான். இன்னும் ஜயத்ரதன் எதிரே தென்படவில்லையே. சூரியன் மேற்கு முனையை நெருங்கிவிட்டான்.

துரோணரை எதிர்த்த கேகய அரசன் வ்ரிஹத்க்ஷத்ரன் கடைசியில் அவரால் கொல்லப் படுகிறான். அவரை திருஷ்டகேது தொடர்ந்து எதிர்க்கிறான். சிசுபாலன் மகனான அவனும் துரோணரின் அம்புகளால் தாக்குண்டு மாண்டான். தொடர்ந்து எதிர்த்த ஜலசந்தன் மகனும் உயிரிழக்கிறான். பாண்டவ சைனியத்தை துரோணர் அழித்துக்கொண்டே யுதிஷ்டிரனை நெருங்குகிறார். பாஞ்சாலன் க்ஷத்ரதர்மன் துரோணரை எதிர்த்து தன் உயிரை விடுகிறான்.

''துரோணரை எதிர்த்த பீமனை, அரசே, உன் மக்கள் வ்ரிந்தாரகன், அபயன், சுஷேணன், தீர்க்கநேத்ரன், துர்விமோசனன் ஆகியோர் சூழ்ந்து தாக்க, பீமன் பலமாக அவர்களைத் தாக்குகிறான். முடிவில் உன் பிள்ளைகள் வ்ரிந்தாரகன், அபயன் பவுத்ரகர்மன், சுதர்சன், துர்விமோசனன் ஆகியோரை பீமன் கொல்கிறான். மற்றவர்கள் உயிர்தப்பி ஓடுகிறார்கள். பீமன் அர்ஜுனனை நெருங்கி விடுகிறான். பீமனும் அர்ஜுனனும் ஒருவரை ஒருவர் அறிந்ததை உரத்த குரலில் சப்தமிட, கிருஷ்ணனும் சேர்ந்துகொள்கிறான். இந்த மூவரின் குரல் யுத்த களத்தில் அங்கே யுதிஷ்டிரனுக்கு கேட்க அவன் அவர்கள் உயிரோடிருப்பதை அறிந்து மகிழ்கிறான். ரத்தம் பெருகி ஆறாக ஓட, பிணங்களாக இருபக்க வீரர்களும் சைன்யங்களும் மலையாக கண்ணை மறைக்க, நேரம் ஆக ஆக யுத்தம் மும்முரமடைகிறது.

''ஐயோ சஞ்சயா, எனக்கு அர்ஜுனனிடம் கூட பயம் இல்லை. பீமனின் நினைவு தான் என்னை எப்போதும் வாட்டுகிறது. என் மக்களை பீமன் நான் பயந்தபடியே ஒவ்வொருவராக கொல்கிறானே. விதியே அவன் உருவில் வந்து நிற்கிறதே. என் குல நாசம் நெருங்குகிறதே'' என்று கதறுகிறான் திருதராஷ்டிரன்.

துரியோதனன் கர்ணனும் வில்லிழந்து தேரிழந்து தடுமாறுவதை கண்டதும் நேராக துரோணரிடம் ஓடுகிறான்

.''குருவே, அர்ஜுனன், பீமன் சாத்யகி ஆகியோர் கடைசியாக நின்ற கர்ணன் படையையும் பிளந்து ஜெயத்ரதனை அடைந்து விட்டார்களே. . உடனே நீங்கள் திரும்பி வந்து அவனைக் காப்பாற்றுங்கள் '' என்று அழைக்க யுதிஷ்டிரனை கைப்பற்றும் முயற்சியில் இருந்து துரோணர் விடுபடுகிறார்.

''கர்ணனை, பீமன் பலமுறை தேரையும் வில்லையும் இழக்கச் செயது கடைசியில் அவனுக்கு துணையாக வந்த உன் மகன் துர்ஜயனையும் கொன்று விட்டான். துரியோதனன் கோபம் கொண்டு இன்னொரு சகோதரன் துர்முகனை பீமனைத் தாக்கும்படி ஏவ பீமன் துர்முகனையும் கொல்கிறான் . திருதராஷ்டிரரே, தொ டர்ந்து எதிர்த்த உமது பிள்ளைகள், சித்ரன், உபசித்ரன் , சாருசித்ரன், சித்ரவர்மன், சரசன் எல்லோரும் கூட பீமனை எதிர்த்து போரிட்டு அவனால் யம பட்டணம் சென்று விட்டார்கள்'' என்கிறான் சஞ்சயன்.

துரியோதனனால் மேலும் அனுப்பப்பட்ட மற்ற ஏழு சகோதரர்கள் கர்ணனுக்கு உதவ பீமனோடு மோதுகிறார்கள். அவர்கள் வரவைக் கண்டு மகிழ்ந்த பீமன் அரசே, உன் பிள்ளைகள் அந்த ஏழுபேரையும் அந்த பலசாலி பீமன் கொன்றான். இறந்தவர்கள் யார் தெரியுமா? சத்ருஞ்சயன், சத்ருஸாஹன், சித்ராயுதன், திரிதன், சித்ரன், சித்திரசேனன், விகர்ணன். ' இதில் விகர்ணன் ஒருவனே பீமனால் மதிக்கப் பட்ட நல்லவன்.

பீமனின் கர்ஜனை யுதிஷ்டிரனுக்கு கேட்கிறது. மகிழ்கிறான். கர்ணனும் பீமனும் சளைக்காமல் யுத்தம் புரிந்தாலும் கடைசியில் கர்ணனும் குந்திக்கு கொடுத்த வாக்கை நினைவு கூர்ந்து பீமனைக் கொல்லாமல் அங்கிருந்து நகர்கிறான்.

''கிருஷ்ணா, எதற்கு சாத்யகி என்னை தேடிக்கொண்டு வந்தான்? யுதிஷ்டிரனுக்கு பாதுகாப்பாக இரு என்று சொல்லியும் துரோணரின் எதிர்ப்புக்கு அவரை ஆளாக்கி விட்டு வந்ததால் நாம் ஜெயத்ரதனைக் கொல்லும் முயற்சியோடு இவனையும் காக்க வேண்டும், யுதிஷ்டிரர் போதுமான பாதுகாப்பு இன்றி இருப்பதால் அவரையும் இங்கிருந்தே த்ரோணரிடமிருந்து காக்க வேண்டுமே. சூரியன் சற்று நேரத்தில் மலை வாயில் விழும் நேரம் ஆகிவிட்டதே' என்று அர்ஜுனன் சொல்லும்போதே பூரிசிரவஸ் படையோடு சாத்யகியை தாக்க நெருங்கினான்.

மஹா வீரர்களும் சம லசாலிகளுமான பூரிச்ரவஸும் சாத்யகியும் துவந்த யுத்தம் புரிந்தனர். திடீரென்று பூரிசிரவஸ் இடது கையில் சாத்ய கியின் சிரத்தை பிடித்து வலதுகையில் ஒரு வாள் ஏந்தி கொல்ல முயன்றபோது கிருஷ்ணன் ''அர்ஜுனா, அதோ பார், நமது நண்பன் சாத்யகியை பூரிசிரவஸ் கொல்லப் போகிறான் உடனே சாத்யகியைக் காப்பாற்று ''என்று சொல்ல அர்ஜுனன் ஒரு அஸ்திரத்தால் பூரிஸ்ரவஸின் வாளேந்திய வலது கரத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் துண்டிக்கிறான்.

''உன்னைத் தாக்காத போது, உன்னிடம் நேரடியாக யுத்தம் செய்யாதபோது என்னை பேடித்தனமாக எப்படி தாக்கினாய்? என்று கேட்ட பூரிஸ்ரவஸிடம் அர்ஜுனன் யுத்த நெறிகளை அறிவிக்கிறான். எனக்குதவ வந்தவனை மற்றவன் தாக்கும்போது நான் அவன் உயிர் காக்க வில்லை என்றால் அது பாபம். மேலும் நிராயுதபாணியாக உன்னுடன் யுத்தம் புரிந்த சாத்யகியை வாளால் வெட்ட முனைந்ததே அதர்மம் தானே? அபிமன்யுவை உன்னோடு சேர்த்து ஆறு அதிரதர்கள் நிராயுத பாணியாக இருந்த சிறுவனைக் கொன்றீர்களே அது எந்த தர்மம்? மேலும் யுத்தம் என்று வந்தால் ஒருவரை தாக்கும்போது அவரோடு உள்ள மற்றவர்களையும் அழிப்பது தர்மமே என்கிறான் அர்ஜுனன். பூரி ஸ்ரவஸ் கிருஷ்ணனை இகழ்கிறான்.சாத்யகி பூரிஸ்ரவஸை அதே வாளால் வெட்டி கொன்றான்.

ஜெயத்ரதனின் பாதுகாவல் சேனை தளர்ந்து விட்டது. ''கிருஷ்ணா இன்னும் சில நிமிஷங்கள் தான் உள்ளன. ஜெயத்ரதனிடம் தேரைக் கொண்டு செல்'' என்றான் அர்ஜுனன்.

''கர்ணா, அங்கே பார் அவசரமாக அர்ஜுனன் ஜயத்ரதனை நெருங்குகிறான். எப்படியாவது அஸ்தமன காலம் வரை ஜயத்ரதனை நாம் உயிரோடு காப்பாற்றி விட்டால் சபதத்தில் தோற்ற அர்ஜுனன் தானே தீ மூட்டி மாண்டு விடுவான். அது நமக்கு வர பிரசாதம் '' என்றான் துரியோதனன். கர்ணன் விரைந்தான். கிருபர், அஸ்வத்தாமன், சல்லியன், சகுனி, துரியோதனன் சேனைகள் அனைத்துமே ஜயத்ரதனை சூழ்ந்து கொண்டன. அர்ஜுனன் வேகமாக இரு கைகளாலும் அம்புகளை செலுத்த எண்ணற்ற தலைகள் கீழே உருண்டன.

மேற்கே அடிவானத்தை நோக்கி சூரியன் சிவந்த உருண்டையாக கீழ் நோக்கி இறங்க முயன்றான். பலர் செலுத்திய அம்புகள் மூடு பனியாக அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் முழுசாக மறைத்தன. அதையும் மீறி அவன் அம்புகளை செலுத்தி அவற்றை தடுத்தும் உடைத்தும் செயல் புரிந்தான். தேர்கள் யானைகள் தடையாக எதிரே வரிசையாக வேறு நிறுத்தப்பட்டு ஜெயத்ரதனை அர்ஜுனன் அணுக வொட்டாமல் செய்தன. ரத்த ஆறு வெள்ளமாக ஓடி அதன் போக்கில் உடைந்த தேர்களும், இறந்த யானை குதிரைகள், சிதைந்த மனித உடல்களுமாக மேலே செல்லமுடியாமல் தடையாக காட்சியளித்தது. இதோ, அர்ஜுனன் எதிரே ஜயத்ரதனைக் கண்டு விட்டான். அவனது அம்புகள் மழையாகப் பொழிந்தன. ஜெயத்ரதனின் தேரோட்டியின் தலை விரைவில் கீழே உருண்டது. தேர் குதிரைகள் தறிகெட்டு ஓடின. தேர் குடை சாய்ந்தது, குடை ஒடிந்து ஜயத்ரதன் ஓடிச் சென்று எங்கோ மறைந்துவிட்டான். கௌரவ சேனை சூர்ய அஸ்தமனத்துக்குள் ஜெயத்ரதன் உயிரோடு இருக்க ஆவலாக எதிர் நோக்கினார்கள்.

''சற்றே நேரம் தான் இருக்கிறது. அர்ஜுனா, நான் சொல்வதை கேள். உன்னால் ஜயத்ரதனை நெருங்க முடியாமல் அனைத்து அதிரதர்களும் சூழ்ந்து அவன் அவர்களுக்கு நடுவே ஒளிந்து கொண்டிருக்கிறான் . நான் த்யான யோகத்தில் மாய இருளை வரவழைக்கிறேன். அவர்கள் அஸ்தமனம் ஆகிவிட்டது என்று தைரியமாக ஜெயத்ரதனை வெளியே விடுவார்கள் அந்த நேரம் பார்த்து ஜயத்ரதனை தவறாமல் கொன்றுவிடு. இது ஒன்று தான் நீ உயிர் தப்ப கடைசி வழி'' என்றான் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா, நீ சொல்வதை செய்பவன் நான் '' என்றான் அர்ஜுனன்.
கிருஷ்ணனின் யோக மாயையால் மேகங்கள் சூழ்ந்து சூரியன் அஸ்தமனமாகிவிட்டதாக தோன்றியது. கௌரவர்கள் மகிழ்ந்தார்கள். ஆடி ஓடினார்கள். ''அர்ஜுனன் தோற்றான் இனி அவன் மரணம் நிச்சயம்'' என்று ஆரவாரித்தார்கள்.
ஜயத்ரதன் உயிர் தப்பிய சந்தோஷத்தில் வெளியே வந்தான். எல்லோரும் அவனை தூக்கிக் கொண்டாடினார்கள். ஜெயத்ரதன் தலையை உயர்த்தி மேலே சூரியன் மறைந்ததை உயிர் தப்பினோம் என்ற ஆர்வத்தோடு பார்த்தபோது அவன் தலை தெரிந்தது அர்ஜுனனுக்கு.
'அர்ஜுனா கொல் அவனை'' என்றான் கிருஷ்ணன். தயாராக இருந்த அர்ஜுனனின் அம்புகள் சீறிப் பாய்ந்து துரியோதனன், கர்ணன், கிருபர் , அஸ்வத்தாமா ஜெயத்ரதன் அனைவரையும் தாக்கின. அர்ஜுனனின் தாக்குதலை எதிர்பார்க்காத கௌரவ சேனை சிதறியது. ஜயத்ரதன் மீதுள்ள பாதுகாப்பு தளர்ந்தது. அர்ஜுனன் மந்திரங்கள் உச்சரித்து செலுத்திய அம்பு ஜெயத்ரதனின் தலையை உடலிலிருந்து துண்டித்தது.

இங்கு ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்க வேண்டும்.
ஜயத்ரதன் பிறக்கும்போது அவன் தந்தை வ்ரிதக்ஷத்ரனிடம் அசரீரி ஒன்று ''உன் மகன் ஒரு சிறந்த வீரன். க்ஷத்ரிய அரசன் ஆவான். அவனை தெய்வீக சக்தி கொண்ட புகழ் மிக்க ஒரு க்ஷத்திரியன் ஒருவன் தான் கொல்ல முடியும். வேறு யாராலும் அவனை வெல்லமுடியாது. '' விரிதக்ஷத்ரன் உடனே அதை தொடர்ந்து ஒரு வரம் கேட்டு பெற்றான்

''தெய்வமே என்மகனை அப்படிப்பட்ட ஒரு வீர க்ஷத்திரியன் கொன்று என் மகனின் தலை எவனால் பூமியில் விழுகிறதோ
அவன் தலை உடனே நூறு சுக்கலாக வெடிக்கவேண்டும் '' . இந்த வரத்தின் மூலம் தனது மகனைக் கொன்றவன் பழிவாங்கப் படுவான் என்று தந்தை நினைத்தான்.
''அப்படியே ஆகுக'' என்றது அசரீரி தெய்வம். ஜயத்ரதன் அரசனானவுடன் அவன் தந்தை வ்ரிதக்ஷத்ரன் வானப்ரஸ்தம் மேற்கொண்டு கானகத்தில் தவம் செய்யப் போய்விட்டான். இன்னும் இருக்கிறான்.
இது கிருஷ்ணனுக்கு ஞாபகம் வந்ததால் உடனே அர்ஜுனனிடம்
'அர்ஜுனா ஜாக்கிரதை. ஜயத்ரதன் தலை கீழே விழுந்தால் உன் தலை நூறு சுக்கலாக உடனே வெடிக்கும். எனவே வ்ரிதக்ஷத்ரன் இங்கே தான் அருகே சமந்தபஞ்சகம் அருகே வனத்தில் தவம் செய்து கொண்டிருக்கிறான். ஜயத்ரதன் தலையை ஒரு தகுந்த வாயு அஸ்திரத்தால் காற்றில் தூக்கிச் சென்று வ்ரிதக்ஷத்ரன் மடியில் சென்று விழச்செய்'' என்றான் கிருஷ்ணன். அப்படியே செய் தான் அர்ஜுனன். ஜெயத்ரனின் தலையை சுமந்த அஸ்திரம் அதை தவம் செய்து கொண்டிருந்த விரிதக்ஷத்ரன் மடியில் தொப்பென்று போட்டது. அதை ஏதோ ஒரு மரத்திலிருந்து விழுந்த காயோ கனியோ என்று சரியாகக் கூட கவனிக்காமல் கீழே தள்ளிவிட்டான் தந்தை. ஜெயத்ரதனின் தலையை அவன் கீழே விழச் செய்ததால் வ்ரிதக்ஷத்ரன் தலை அவன் வேண்டிய வரத்தின் படியே நூறு சில்லுகளாக சிதறி வெடித்து அவன் மாண்டான்.

ஜயத்ரதன் உயிரிழந்த கணமே இருண்டிருந்த வானம் பளிச்சென்று மீண்டும் சூரிய பிரகாசத்தில் சிவந்து காணப்பட்டது. இந்த குறைந்த இருட்டு நேரத்தில் எட்டு அக்ஷ்வுணி சைன்யத்தை அர்ஜுனன் அழித்தான். கிருஷ்ணனின் பாஞ்ச ஜன்யம் கம்பீரமாக ஒலித்தது. அர்ஜுனனின் தேவதத்தமும் சேர்ந்து ஒலித்தது.

சூரிய வெளிச்சத்தில் ஜெயத்ரதனைக் கண்ட கௌரவசேனை அவன் தலை இன்றி இறந்திருந்ததை கண்டு நடுங்கியது. வெற்றி சங்கநாதம் எங்கோ யுதிஷ்டிரனின் காதிலும் விழுந்து அவன் ஜயத்ரதன் மாண்டான் என அறிந்தான். துரியோதனன் சிலையாக நின்றான். எதிரே நின்ற துரோணர், கர்ணன், கிருபர் அஸ்வத்தாமன், மற்றோரையெல்லாம் ஒரு துரும்பாக பார்த்தான்.

திருதராஷ்டிரன் மூர்ச்சையடைந்தான் சஞ்சயன் அவனை ஆஸ்வாஸப் படுத்திக் கொண்டிருந்தான். சூரியன் மெதுவாக அஸ்தமித்தான்.ஆனால் ஜயத்ரதன் அதற்கு முன்னமே அஸ்தமித்துவிட்டானே.

Tuesday, July 30, 2019

DENTURE

 ஒரு ''ப(ல்)லான '' விஷயம்   J K SIVAN 

ஒரே விஷயம் தான்  ஆனால்  அர்த்தம் அனுபவம் இரண்டும் வேறுபடும்  நிலைமை நாம் அநேகர் வாழ்க்கையில் அறிந்ததுண்டு. 



ஒரு நல்ல நண்பன் டாக்டர் என்பதால் அவனிடம் சிக்கிக்கொண்டு அவஸ்தை படுபவர்கள் பலர். அதே சமயம் ஒரு நல்ல டாக்டர் நண்பனாக அமைந்து அவரால் ஆனந்தம் அடைபவர்களும் உண்டு.  அப்படி ஒரு டாக்டர் எனக்கு கிடைத்தது கிருஷ்ணன் கருணை. அதே டாக்டர் ஆன்மீகவாதியாகவும் இருந்து நிறைய நல்ல  பணிகளில் ஈடுபடுவதும், தர்மம் செய்வதும், உதவுவதுமாக  அந்த காலத்து ''பல்''லவ அரசர்கள் போல் அமைந்தால் இன்னும் எத்தனை சௌகர்யம். பல்லவர்களை போல் அவரும் சிவ பக்தர். எப்போதும் சிவபஞ்சாக்ஷர மந்த்ரங்கள், ருத்ரம் சமகம் சொல்பவர். அவரது பத்து வயது  மகனுக்கும் கூட  அபிஷேக முறைகள் ருத்ரம் சமகம் எல்லாம் தெரியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் வீட்டில் ஒன்றிரண்டு முறை அனுஷம் ஏகாதச ருத்ரம் எல்லாவற்றிலும் பங்கு கொண்டிருக்கிறேன்.  எனக்கு கிடைத்த டாக்டர் அப்படி ஒருவர்  அவரும் ஒரு கிருஷ்ணன் தான். டாக்டர் ஜெயகிரிஷ்ணா. இன்முகம் காட்ட பற்கள் அத்தியாவசியம். அவர் சிரித்துக்கொண்டே இருப்பவர். எல்லோருக்கும்  அழகிய பற்களைக் கட்டி, காட்டி, சிரிக்கச்  செய்யும்  கிருஷ்ணன். அவர் சிரிப்பில் போஸ்டர்களில் நாம் பார்க்கும் அரசியல் வாதி சிரிப்பு இருக்காது. 

நங்கநல்லூரில் முதலில் எனக்கு அறிமுகமானதே அவர் அங்கு  ஒரு கிளை ஆரம்பித்தபோது . நான் நங்கநல்லூர்  முதியவர்கள் நல சங்க செயலர்.  என்னையும் திறப்பு  விழாவில் ஒரு விளக்கேற்ற அழைத்தார்கள். அவரது உதவியோடு ''பல''  முதியவர்களுக்கு  அங்கு இலவச ''பல்'' சோதனை, மருந்துகள்,ப்ரஷ், பேஸ்ட் எல்லாம் கொடுத்தார். அப்படித்தான் என் பல்லும் அவரது நட்பை நாடியது.

அவரது மருத்துவ மனையில் நுழைந்தாலே  ஏதோ ஒரு வெளிநாட்டு, பெரிய ஸ்தாபனத்தில் நுழைந்தது போன்ற தூய்மை, அமைதி, கவனிப்பு, புத்தம் புதிய சாதனங்கள், இதோடு அவர் குறித்த நேரத்தில் ஒவ்வொருவருக்கும்   இன் முகத்துடன் ஊக்கத்துடன்  சிகிச்சை அளிப்பது ஒரு அசாதாரண விஷயம்.  

முதல் பல் டாக்டர் முனுசாமி பச்சை மரத்தை பார்  என்று சொல்லி ப்ளக்  என்று குறடாவால் ஆடிய பல்லை பிடுங்கி ஏதோ மரத்துக்கு ஓட்டைகளை அடைக்கும் லப்பம் மாதிரி ஒரு கெட்டியான களிம்பு பிடுங்கப்பட்ட பல் துவாரத்தில் அடைத்த காலம் முதல் பல பல் டாக்டர்களின்  சிகிச்சைகளை ''அனுபவித்து'' இருக்கிறேன். எனவே மனதில் கொஞ்சம் உறுத்தலுடன் தான் பல் உபத்திரவம் செய்தபோது டாக்டர் ஜெயகிரிஷ்ணனை நெருங்கினேன். 

பற்களுக்கு செடிகள், மரங்கள் போல் வேர் உண்டு. ஆழமாக உள்நோக்கி செல்லும் அவற்றில் நோய் infectiion  ஏற்பட்டு வலி            தாங்கமுடியாமல் இருக்கும். சில பற்கள்  பெண்களின் நாணம் போல் கூசும். உச்சந்தலை வரை ஜிவ்வென்று அதிரும். வலிக்கும். தூக்கத்தை விழுங்கிவிடும். எவரைக்கண்டாலும் கத்த வைக்கும். கோபத்துக்கு தாய்.  கடந்த ஐந்து வருஷங்களில் ரெண்டு மூன்று பற்களின் வேர்கள் சோதிக்கப்பட்டு (ரெண்டு மூன்று முறை அந்த  சாய்மான நாற்காலியில் வாய் பிளந்து அமர்ந்து) அவரை சீர் செய்யப்பட்டன (root canal treatment ). அப்புறம் இதை எழுதும் வரை வலியோ பல்லைபற்றிய சிந்தனையோ இல்லை.   பற்கள் சிலவற்றுக்கு மஹான்களைப் போல் ஜீவ சமாதி அவசியம் என்பதை அவரிடம் அறிந்து கொண்டேன். என்னுடைய  சில பற்கள் காலத்தால் கரைந்து  குறைந்து சிதைந்து போன்றவற்றை பிடுங்காமல், அவற்றிக்கு தந்தம் மாதிரி     ஒரு  உலோகஉரை crown  அவரால்  பிரதிஷ்டை செய்யப்பட்டு அவற்றின் நிஷ்டையை இதுவரை எதுவும் கலைக்கவில்லை. அதே போல பற்களைக் கெட்டியாக பிணைத்துக்கொண்டிருக்கும் அவற்றின் ஆதார சதை சிலசமயம் பற்களுக்கும் தனக்கும் இடைவெளி ஏற்படுத்திக்கொண்டு வீங்கியோ, நலிவுற்றோ,  துன்புறுத்தும். அவற்றை லேஸர் மூலம் குணப்படுத்தி இருக்கிறார். அதுவரை சாப்பிடுவது ரொம்ப கடினம்.  குளிர்ந்த, சூடான நீருக்கு கூட  அங்கே  அனுமதி இல்லை.  

 அதேபோல் இன்னொரு விஷயம் அவசியம் சொல்லவேண்டும்.  

அவரது நிறுவனத்தின் பெயர் அப்போது   ஒரு  அதிசயமான பெயர் கொண்டது. தந்த ரக்ஷா.   பல தந்த ராக்ஷஸர்களிடம் சிக்கிய என் பற்களுக்கு உண்மையிலேயே டாக்டர் ஜெயகிரிஷ்ணாவின் தந்த ரக்ஷா ஒரு புகலிடமாக அமைந்தது. என்னைப்போல பலருக்கும் தான்.  நங்கநல்லூரில் மட்டும் அல்ல. எங்கிருந்தோவெல்லாம் அவரைத் தேடி வருகிறார்கள் என்றால் சும்மாவா? மடிப்பாக்கத்தில் இருக்கும்  DR  JAY'S DENTAL CARE ல் அவரை சந்திக்கலாம். 

SKST SAPTHAHAM



                 SKST  பாகவத சப்தாஹம்.  J K SIVAN 


























 நங்கநல்லூரில் ஸ்ரேஷ்டமான ஆடிமாதத்தில்  முதலில் சப்தாஹம் துவங்கி வைத்தது  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் என்ற எளிய நிறுவனம். இதை நிகழ்த்த பொருத்தமானவர் என தேர்ந்தெடுத்து மதுராந்தகம் திருமால் கவிச்செல்வர், கைங்கர்ய சீமான் இன்னும் பலப்பல பட்டங்கள், விருதுகள் பெற்ற  சமஸ்க்ரிதம், ஆங்கிலம், தமிழ் என்னும் மும்மொழிகளிலும் சிறப்பாக பேசும் எழுதும் திறமை வாய்ந்த  ஆன்மீகச் செல்வர்  உ.வே. ஸ்ரீ S  ரகுவீர பட்டாச்சார்யரை அழைத்தோம். அவரும் எங்கள் விருப்பத்துக்கு செவி சாய்த்து ஜூலை 22  2019  முதல்  27.2.2019 வரை ஆறு நாட்கள் , நம்பர் 20  ராம்நகர் முதல் மெயின் ரோடு, நங்கநல்லூரில், முதல் ஆறு சப்தாஹ பிரசங்கத்தை விமரிசையாக நிகழ்த்தினார்.   அநேகர் பங்கு கொள்ள  இடவசதி காரணமாக  7ம் நாள் ஸப்தாஹத்தை  நங்கநல்லூர் 15வது தெருவில்  ரஞ்சனி மண்டபத்தில் நிகழ்த்த்தினோம். 


அன்று   மாலை மூன்று மணிக்கே  சில குழந்தைகள், பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகளையும்  அறிவித்தோம். அமோகமான  வரவேற்புடன் அந்த நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.  

ஸ்ரீ ரகுவீர பட்டாச்சாரியார் அவர்களது ருக்மிணி கல்யாணம் என்ற தலைப்பில் சப்தாஹத்தின் நிறைவு  உபன்யாசம்  மாலை 6.30 முதல் 8 வரை அன்று தொடர்ந்தது. 

 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் நிறுவனம் வருஷாவருஷம் ஒரு சிறந்த கிருஷ்ண  சேவா  பக்தரை வரவேற்று கௌரவிப்பது வழக்கம்.2019 வருஷ ஸ்ரீ கிருஷ்ண சேவா அவார்ட்  என்ற விருது இந்த வருஷம் ஸ்ரீ ரகுவீர  பட்டாச்சார்யரை அடைந்தது மிகப்  பொருத்தம். அதுவும் அவர் பாகவத சப்தாஹம் நிறைவு செய்த  ஞாயிறு  287.2019 அன்று.   இந்த அவார்ட்  அளிப்பதில் பங்கு கொண்டவர்கள் ஸ்ரீ சுந்தரம் மீனாட்சி குடும்பத்தினர். அவர்களே நேரில் வந்திருந்து வாழ்த்தி வணங்கி  SKST  சார்பில் அந்த அவார்ட் விருது பத்திரத்தை அவருக்கு அளித்தனர். 

 ஸ்ரீ ரகுவீர பட்டாச்சாரியார் ஒரு கவிதை பாராட்டு எழுதி  அதை அவரே வாசித்து  ஸ்ரீ  ஜே.கே. சிவனை வாழ்த்தியது ஆச்சரியம் 

ஒரு இளைஞர் அற்புதமாக மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமியை படம் வரைந்து  அதை ஸ்ரீ ரகுவீர  பட்டாச்சார்யருக்கு அவரது தந்தை அதை  ஸ்ரீ ரகுவீர  பட்டாச்சார்யாருக்கு அளித்தார். அற்புதமான ஓவியத் திறமை. வாழ்க கிருஷ்ணன் அருளோடு. 

இது போன்ற சேவைகளில் பங்குகொள்ள விரும்புவோர் எங்களை அணுகலாம்.
  ஜே கே சிவன்   தொலைபேசி  9840279080

Monday, July 29, 2019

ARASAR KOYIL








யாத்ரா விபரம்     J K  SIVAN   
                                                                      

                    ஆறுவிரல்  மஹாலக்ஷ்மி

நாம் மிகவும் புண்ணியசாலிகள். மறக்காமல் முதுகில் தட்டிக்கொள்ளுங்கள்.  நமது தேசம் ஒன்றில் தான் எண்ணற்ற ஆலயங்கள் இன்னும் இருக்கின்றன.  எவ்வளவோ இருந்து பல அழிந்தும் இன்னும் சில மிஞ்சி உள்ளதே .  ஆலயம் என்பதன் பொருளே  ஆன்மாவோடு  லயம் ஆவது. கோ: தெய்வம்  , இல்: இருக்கும் இடம். இப்போது புரிகிறதா நமது முன்னோர்கள் எதற்காக  கோயில்களுக்கும்  ஆலயங்களுக்கும் முக்யத்துவம் கொடுத்து  தமது  வாழ்க்கையை  இறைவனோடு பிணைத்துக் கொண்டார்கள் என்று?.


சமீபத்தில்  நண்பர்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு திடீரென்று புறப்பட்டு அரசர் கோவில் என்ற க்ஷேத்ரம் சென்றேன்.
சில வருஷங்களுக்கு  முன்பு நண்பர்களோடு  நான் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மார்கத்தில் சில கோவில்கள் சென்றபோது  இந்த ஆலயத்தை  முதன்முதலாக தரிசித்தது நினைவில் வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், படாளம் அருகே பாலாற்றங்கரையில் ஒரு அமைதியான கிராமம். அதன் பெயர்  வேடிக்கையானது.  அரசர் கோவில். சென்னையிலிருந்து தென்மேற்கே 67 கி.மீ,    செங்கல்பட்டிற்குத் தென்மேற்கே 27 கி.மீ, காஞ்சிபுரத்திற்குக் கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், படாளம் கூட்டுச் சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், தாம்பரம் – திண்டிவனம் ரெயில் மார்க்கத்தில் படாளம் ரெயில் நிலையத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலும்  இந்த அரசர் கோவில் இருக்கிறது.

இந்த கோவிலில் அதிசயம் என்னவென்றால்  இங்கே ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருள்பாலிக்கிறார்.  குச்சியை நான்காகப் பிளக்கும் அதிசய கல் துளை கொண்ட ஆலயம், சுக்ரன் ஐக்கியமான ஸ்தலம் பெருமாள்  கமல வரதராஜப் பெருமாள்.  இந்தக் கோயிலில் முதலில் தாயாரைத்தான் வணங்க வேண்டும்.

செல்வங்களை வேண்டியவர்க்கு வாரி வழங்குபவள்  மஹாலக்ஷ்மி. மொத்தமாக  64 லட்சுமிகள் உண்டு.  அவர்கள் அனைவரிலும் பிரதானமானவள் தாயார் சுந்தர மகாலட்சுமி.  ஆதி மூல லட்சுமி . பெயருக்கேற்றபடி  சுந்தரமஹாலக்ஷ்மி அதி சுந்தர ரூபவதி.   குபேர சம்பத் சக்தி. வாரி வழங்குபவள். சிறு குழந்தை போல ' புசு புசு'  கன்னம்.  சிரித்த முகம். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.தாமரை பீடத்தில் பத்மாசன நிலையில் காட்சி தரும்  தாயார். மேல் இரு கரங்களில் தாமரை. கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரை.  பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலுக்கு அடுத்து ஆறாவது விரல்.  சுக்ரன் ஆறு எனும் எண் சம்பந்தப்பட்டவர். அவரை  தனது ஆணைக்குட்பட்டு செயல் பட வைக்கும் சக்தி கொண்டவள் இந்த   தாயார்.

 ஒருவன்  நன்றாக சுபிக்ஷமாக இருந்தால்   ''அவனுக்கு என்னப்பா சுக்ர தசை. கொழிக்கிறான்''  என்கிறோம்.  இங்கே  மஹாலக்ஷ்மி சுக்ரனையே  தனது வசம் கொண்டு தன ஆகர்ஷண லக்ஷ்மியாக அருள் பாலிக்கிறாள். பிரதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் இங்கே வந்து  தாயாரை வழிபடுகிறார்.   பெருமாள் ‘கமல’ வரதராஜ பெருமாள். இவரை காஞ்சி வரதருக்கும் மூத்தவர்,  அண்ணா, என்பார்கள் .

ஒரு  கதை.   பிரம்மா சாப பாப விமோசனம் தேடும்போது நிறைய ரிஷிகளை, முனிவர்களை  கேட்கிறார்.  ராஜாவும், விஷ்ணுவும் சேர்ந்து இருக்கும்  ஒரு க்ஷேத்திரத்துக்கு சென்று  தரிசித்தால் பாப  விமோச்சனம் நிச்சயம்''  என  அவர்கள் சொல்ல இங்கே வருகிறார்.   நாராயணன் பாலாற்றங்கரையில் இங்கே  வாசம் செயகிறார். ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார்.  இருவரும் இங்கே இருப்பதை அறிந்து  தரிசித்து ப்ரம்மா, பாப விமோசனம் பெறுகிறார். அரசர் கோவில் வரதராஜப் பெருமாளை, பிரம்மா தவமிருந்து வழிபட்டதால்  பூலோக வைகுண்டம் என்ற சிறப்புப் பெயர்.

ஜனக மஹாராஜா முதலில்கட்டிய கோவில்  எனவே   இதற்கு  அரசர் கோவில் என்று பெயர் வந்தது என்கிறார்கள்.

தாயார்  சந்நிதி  கிழக்கு நோக்கி  உள்ளது. பாற்கடலில் உருவானவள் பாலாற்றை பார்த்தபடியிருக்கிறாள். அழகிய கல் மண்டபம் .காதுகளில்  குண்டலங்கள், கைகளில் அணிகலன்கள், சங்குக் கழுத்தில் மூன்று துளசி மணி மாலைகள், துளசி மணி மாலையின் முடிவில் துளசிப் பத்திரம் போன்றவையும், நெற்றியில் சூரிய –சந்திர பிரபைகள் .

 மேற்கே பழமையான ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் ‘சுந்தர’னாக ஆஞ்சநேயர்  காட்சியளிக்கிறார்.

வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்க ளையும் கொடுப்பாள் மகாலட்சுமி. தாயார் சன்னிதி சடாரியில் மேல் உள்ள பாதத்திலும் ஆறு விரல்கள்.

தாயாருக்கு பலாச்சுளை நைவேத்தியம் சிறப்பு. இப்படி பலாச்சுளைகளை கொடுத்த சித்தரின் சிற்பம் மண்டபத்தில் இருக்கிறது. தாயார் கருவறை முன் மண்டபம் முழுக்க சிற்பங்களின் அணிவகுப்பு.

அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம் குபேர கோமுகம் என்கிறார்கள்.

பெருமாள் கமல வரதராஜர் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம். வலது கரத்தில் தாமரை மொட்டு. தாயார் கொடுத்ததால்  ‘கமல’ வரதராஜர்.  பிள்ளையார் தும்பிக்கை ஆழ்வார் என்று வணங்கப்படுகிறார். பெருமாள் சன்னிதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் ஆகியோர் உற்சவர்கள்..  கருவறையில் அழகிய லட்சுமி நரசிம்மர் உற்சவர்.

விஜயநகர பேரரசர்கள், மூன்றாம் ராஜராஜன், ஜடாவர்மன், சுந்தர பாண்டியன் ஆகியோர் திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் சொல்வதால்  மிக பழைய கால கோவில்.

கோயிலின் தல விருக்ஷம்  அரசமரம். இறைவன் திருப்பெயர் திருவரசு நாயனார், திருவரசூர் எம்பெருமாள் என கல்வெட்டு சொல்கிறது.

இங்கே  பாலாறு  மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி  வழக்கமாக ஓடாமல்  வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வது அதிசயம். ஆகவே  இது தட்சிண பிரவாகம்..

கருடாழ்வார் சன்னிதியின் எதிரே 24 தூண்கள் கொண்ட அழகிய கல் மண்டபம் உள்ளது. பெருந்தேவி தாயார் சன்னிதியின் முன்மண்டபம் சிற்பக் கலைநயம் மிக்கதாகும். தாயார் சன்னிதி கருவறை முன் மண்டபத்து தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டினால் வித்தியாசமான சப்தத்தை எழுப்புகின்றன. அமர்ந்த நிலையில் உள்ள சிறிய யாழிகளின்  தலையில் இருந்து எண் பட்டையிலான கல்தூண்கள் ஐந்து அமைந்துள்ளன. இவற்றை பதினாறு பட்டைகள் கொண்ட தூண்  ஒன்று உள்ளே நின்று இணைக்கிறது. அனைத்து தூண்களையும் இணைத்து ஒரே கல்லில் செதுக்கியுள்ள கலைநயம் போற்றத் தக்கதாகும். தாமரை இதழ்களோடு ஒவ்வொரு தூணுமே அமைந்துள்ளன.

மண்டபத்தின் வலதுபுறம் உள்ள தூணின் உச்சியில் தாமரை இதழ்களில் குச்சி நுழையும் அளவிலான துளை ஒன்று காணப்படுகிறது. அதில் ஒரு சிறு  ஈர்க்குச்சியை நுழைத்தால் மறுபுறம் உள்ள துளை வழியே அது நான்காகப் பிளந்து வெளிவருகிறது. இந்த அதிசயம் சிற்பியின் கைவண்ணத்தைப் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது.


சித்திரையில் வரும் பவுர்ணமி அன்று காலை வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு, லட்சுமி நாராயணபுரம், பூதூர் வழியே ஈசூர் சென்று அங்குள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருள்வார். அங்கே பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். (காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் சார்பாகவும், காஞ்சிக்கு அருகே ஓடும் பாலாற்றில் சித்திரா பவுர்ணமி அன்று திருஊரல்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது)


கோவிலின் வடமேற்கே தென்புறச் சுவரில் காணப்படும் மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டு (கி.பி.1237), வடச்சுவரில் , தென்புறச் சுவரில் காணப்படும் முதலாம் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1259) கல்வெட்டு, வடமேற்குச் சுவரில் அமைந்துள்ள இரண்டாம் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1291) கல்வெட்டு, படைவீடைத் தலைநகராகக் கொண்ட ராஜ நாராயண சம்புவராயர் (கி.பி. 1352) கல்வெட்டு, ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள விஜயநகர பேரரசர் கல்வெட்டு போன்றவை இத்தலத்தின் தொன்மையை  காட்டுகிறது.  இந்தக் கல்வெட்டுகள்  யார்  யார்  அப்போது  நிலக்கொடை, பசுதானம்  கொடுத்த்தார்கள், வரிவிலக்கு பெற்றார்கள் என தெரிந்துகொள்ளலாம்.  சோழ பாண்டியர் காலத்தில் முக்கியத்துவம் பெற்ற  ஒரு திருக்கோவிலாக இருந்திருக்கிறது. . மூன்றாம் ராஜராஜன் காலத்தில் சிறப்புற்று இருந்த இந்த ஆலயம், பின்னர் பழுதடைந்து மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயனின் ஆட்சி காலத்தில் திருப்பணி மேற்கொண்டு புனரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

நான்  சில வருஷங்களுக்கு முன்பு போன போது கோவில் சிதிலமடைந்து  செடிகள் மரங்கள்  கோவில் கோபுரத்தில் காணப்பட்டது மனதை பிளந்தது.    ஒரு விஷயம்.  பட்டாச்சாரியார் எங்கோ இருப்பதை அறிந்து அவருக்கு டெலிபோன் பண்ணி அரைமணி நேரம் கழித்து வந்தார்.  வந்தவர் ஒரு அதிசயமாக ஒரு விஷயம் சொன்னார்.

''இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் வர முடியாது. தாயார் அனுக்கிரஹம் இருந்து அழைத்தால் தான் வர முடியும்.  உங்களுக்கு இன்று  இங்கே வர எப்படி தோன்றியது.   உங்களில் யாரோ  மக நக்ஷத்திரக்காரர் இருக்கிறாரோ அவரால் தான் வந்தீர்களோ....!!''
என்னுடன் 16-17 பேர்.  விசாரித்ததில் என்னைத் தவிர  வேறு யாரும்  மக  நக்ஷத்திரக்காரன் இல்லை.   அடியேன்  அந்த கண்ணன் பட்டாச்சார்யரை முன் பின் பார்த்ததில்லை நான் தான் மற்றவர்களை  அழைத்து வந்தவன். என் நக்ஷத்ரத்தை  பேப்பரில்  போடவில்லை. அதை தெரிந்துகொள்ள  எவருக்குமே விருப்பமுமில்லை.பின் எதற்கு .....இவர்.... இப்படி.... ஏன் ஏன்  ஏன் ? ஏதோ  ஒரு சக்தி இருக்கிறது. வாஸ்தவம் தான்.

 மஹாலக்ஷ்மி செல்வம் தருபவள். ஆதி மூல லட்சுமி .  64  லட்சுமி அவதாரங்களாக இருப்பினும் அனைத்துக்கும் ஆதாரம். செல்வம் என்றால்  ரூபாய் அல்ல. அஷ்ட ஐஸ்வர்யங்கள்.
ஶ்ரீசுந்தர மஹாலக்ஷ்மி சமேத ஶ்ரீகமல வரதராஜப் பெருமாள்  அருள் பாலிக்கும் இந்த க்ஷேத்ரம் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயம். 

பிரம்ம தேவன் ஶ்ரீமந்நாராயணனைக் குறித்து தவமியற்றிய க்ஷேத்ரம். தவத்தில் மகிழ்ந்த ஶ்ரீமந் நாராயணன் ஶ்ரீதேவி ஶ்ரீபூமிதேவி சமேதராக பிரம்ம தேவனுக்குத் திருக்காட்சி தந்து அருளினாா்.பிரம்ம தேவனின் வேண்டுகோளை ஏற்று தினைப் பொழுதும் திருமகளைப் பிரியாத திருக்கோலத்தில் எம்பெருமான் இத்தலத்தில் நித்யவாசம் செய்து வருகிறார். 

திருக்கோயில் அா்ச்சகா் திரு கண்ணன் பட்டாச்சாாியாா் டெலிபோன் 96985 10956 


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...