Wednesday, July 10, 2019

wealth



                          ஈடற்ற செல்வம்    J K SIVAN 


காசியில் ஒரு பிராமணன் வசித்து வந்தான்.  காசியில் இந்த ஒரு பிராமணன் அல்ல, எத்தனையோ பிராமணர்கள் வசித்தாலும்  நான் சொல்லும் கதை இவனைப் பற்றி மட்டும் தானே.  அவனுக்கு ஒரு மகள். அவனோ பரம ஏழை. எப்படி அவளுக்கு சீர் செயது, நகைகள் அணிவித்து கல்யாணம் பண்ண முடியும்?
அவன் சிவபக்தன். காசியில் ரொம்ப பிரபலம் விஸ்வநாதர் தானே. அவரிடம் சென்றான். ''சிவா, என் மகள் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் தாயேன்?''   சிவனைத் தவிர வேறு யாரிடமும் கேட்க தோன்றவில்லை.   

 “ பணம் வேண்டுமா உனக்கு. நேராக  பிருந்தாவனம் போ. அங்கே  சனாதன கோஸ்வாமி என்று ஒரு   துறவி இருப்பார் அவரைக் கேள்''  என்கிறார் காசி  விஸ்வநாதர்.  பிருந்தாவனம் நடந்து போனான். சனாதன கோஸ்வாமி எங்கே இருக்கிறார் என்று விசாரித்து அவர் வீடு அடைந்தான்.    அவர் யமுனா நதிக் கரையில்  காளிங்கன் எனும் விஷ நாகம் இருந்த வீடு அருகே மணல் மேட்டில் பஜனை பண்ணிக் கொண்டிருந்தார். கோவணாண்டியாக இருந்த அந்த துறவியா பணம் கொடுப்பார்?   வீடு வீடாக சென்று பிக்ஷை வாங்குகிறவராக இருக்கிறாரே! ஒருநாளைக்கு ஒரு தரம் ஒரே ஒரு சப்பாத்தி உப்பில்லாமல் சாப்பிடுகிறவர்.

கோஸ்வாமி பார்வை பிராமணன்  மேல்  பட்டது. அருகே அழைத்தார்.

''யாரப்பா நீ  புதிதாக இருக்கிறாய் இந்த பக்கம்?''

''குருநாதா, என்  பெண் கல்யாணம் நிச்சயம் செய்யவேண்டும். அதற்கு பணம் வேண்டும்.....காசி விஸ்வநாதனைக் கேட்டேன். அவர் உங்களிடம் அனுப்பினார்''

கோஸ்வாமி யோசித்தார்.''அப்பனே, நானோ ஒரு கோவணாண்டி. சொத்து சுகம், செல்வம் எதுவும் இல்லாதவன்.  விரும்பாதவன் . காசி விஸ்வநாதன்  என் மனதில்   உறைபவன்.  அவன் என்னிடம் அனுப்பினான்  என்றால் ஏதோ அர்த்தம் இருக்கவேண்டும்.   ஆஹா   இப்போது  ஞாபகம் வருகிறது. எப்போதோ ஒரு ஞானி என்னிடம் ஒரு  மந்திரக் கல்லை கொடுத்தார். அதை வைத்து எதை தொட்டாலும் தங்கமாகும்  என்றார்.  அதை   எனக்கு தேவையில்லை என்பதால் இங்கே தான் எங்கோ மண்ணில் வீசினேன். புதைந்து போயிருக்கும்.  உனக்கு வேண்டுமானால் தேடி தோண்டி எடுத்துக் கொள்'' 

ஒரு வாரத்துக்கு மேலாக  அந்த ஏழை பிராமணன் யமுனாநதி மணலை எல்லாம் புரட்டி போட்டான். யாரிடமும் ரகசியத்தை சொல்லவில்லை. ஒருநாள் சிறிதாக மஞ்சளாக ஒரு கல் கிடைத்தது. அதை எடுத்து ஒரு இரும்பு துண்டின் மேல் தேய்த்தான். அது பொன்னாக மாறியது. அவனுக்கு எப்படி இருக்கும்?? யோசியுங்கள் நான் எழுதப்போவதில்லை.  வீட்டுக்கு ஓடினான். காசி விஸ்வநாதா என் பிரார்த்தனை வீண் போகவில்லை என்று நன்றியோடு வணங்கினான். பாதிவழியில் சட்டென்று ஒரு எண்ணம்.  ஏன் கோஸ்வாமி இதை வேண்டாம் என்று தூர எறிந்தார்? நிறைய தங்க ஆபரணங்கள் அவரிடம் சேர்ந்திருக்குமே ?''
திரும்பி கோஸ்வாமியிடம் சென்றான்.

''ஏன் திரும்பி வந்துவிட்டாய்?''

''யோசித்தேன் குருநாதா.  இந்த 'தொட்டால் பொன்னாகும்'' மந்திரக்கல்லை நீங்கள் ஏன் வேண்டாமென்று தூக்கி இருந்தீர்கள். ஒருவேளை இதைவிட உயர்ந்த சாதனம் ஒன்று உங்களுக்கு கிடைத்து, நீங்கள் அதை வைத்திருக்கிறீர்களோ என்று ஒரு எண்ணம். அதை தெரிந்துகொள்ள விருப்பம்''''

''சரி. அப்படி என்றால் முதலில் இந்த மந்திரக் கல்லை யமுனையில் வீசி எறி'' பிராமணன் அவ்வாறே செய்தான்.

''இங்கே வா... உன் காதில் ஒரு மந்திரம் சொல்கிறேன் கேள்.  இது உலகத்தில் எல்லோரும் தேடும் சாதாரண  பொன், வெள்ளி,  வைர ஆபரணத்தை விட உயர்ந்தது.  பிராமணன் கிட்டே அமர அவன் காதில் அவர் உபதேசித்தார்:

''ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண , கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ''  இதை நீ கெட்டியாக பிடித்துக்கொண்டால் ராதை, கிருஷ்ணன்  எனும்   ஈடிணையற்ற   விலைமதிப்பில்லாத அபூர்வ  செல்வம் உன்னை வந்தடையும். இங்கேயே  இரு. உன் மகள் திருமணம் தானாகவே நடக்கும்.     பிராமணன் அப்படியே செய்தான். அவனுள் ஒரு மாற்றம் தெரிந்தது.   ஒரு வார காலம் கூட ஆகவில்லை.   அவன்  பெண்ணை யாரோ ஒரு தனவந்தர் யாத்ரீகர்  தனது மகனுக்கு திருமணம் செய்து கொண்டார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...