Saturday, July 27, 2019

VIKRAMADHITHTHAN VEDHALAM STORIES



விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள்
- J K SIVAN

விறுவிறுப்பு தொடரட்டும்

''யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'' என்பது ரொம்ப பிடித்த அர்த்தமுள்ள சொல். எனக்கு இன்பம் படிப்பதில், அதை முடிந்தவரை மற்றவர்க்கு சொல்லுதல், நேரே எல்லோரிடமும் சொல்ல முடியுமா? ஆகவே தெரிந்த எழுத்து மூலம் அதை அனுப்புதல். அப்படித்தான் என்னை சிறுவயதில் கவர்ந்த பிரேமா பிரசுர விக்ரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன் அவர்கள் ஆற்காட் சாலையில் கோடம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் காணப்படும்போது கண்டு வணங்கி இருக்கிறேன். அவர் எனக்கு ஒரு விக்ரமாதித்தன் புத்தகம் கொடுத்தார். எங்கோ அது காலப்போக்கில் காணாமல் போனாலும் கதைகள் மனதில் பதிந்திருக்கிறது.
வேதாளம் காளிகோவில் முருங்கை மரத்தில் பிணத்தில் தலை கீழாக தொங்கி கொண்டு இருக்கும். விக்ரமாதித்தன் அதை பிடித்து கீழே இறக்கி தோளில் போட்டுக்கொண்டு நடப்பான். வழியெல்லாம் ஒரு கதை சொல்லும். பேசாமல் கேட்டுக்கொண்டே வருவான். முடிவில் ஒரு புதிர் கேள்வி போடும். அதற்கு சரியான பதில் சொல்லாவிட்டால் அவன் தலை வெடித்துவிடும். அவன் பதில் சொல்லிவிடுவான். அவன் மௌனம் கலைந்தவுடன் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடும்.
இதற்கு முந்திய பதிவில் வேதாளம் யாராக இருந்து சாபம் பெற்று முருங்கை மரத்தில் தொங்கியது என்று சொன்னேன். அது ஒரு கதை சொல்வதை விக்ராமாதித்தனோடு நாமும் கேட்போம். இதற்கிடையில் இன்னொரு கோணம்.
மகா வீரன், அதி புத்திசாலி உஜ்ஜயினி மன்னன் விக்ரமாதித்தன் அமர்ந்த தங்க சிம்மாசனம் போஜராஜனுக்கு கிடைக்கிறது. அதில் அமர அவன் முயற்சிக்கும்போது அந்த சிம்மாசனத்தின் 32 படிகளில் உள்ள பெண் வடிவ பதுமைகள் அவனை தடுத்து ஒவ்வொன்றும் நீ விக்கிரமாதித்தனுக்கு சமமாகிவிடுவாயா சொல் என்று விக்கிரமாதித்தனை பற்றிய கதை ஒன்று சொல்கிறது. அதை கேட்ட போஜன் நிச்சயம் நான் விக்ரமாதித்தன் இல்லை என்று திரும்பி போகிறான். ஒவ்வொரு படி பொம்மை சொல்லும் கதைகளில் மூன்று பொம்மைகள் சொல்லிய கதை கேட்டீர்கள். இன்று நான்காவது படி பொம்மை சொல்லும் கதை;
நான்காவது முறையாக போஜன் அந்த அழகிய தங்க சிம்மாசனத்தில் ஏறி அமர படியில் காலெடுத்து வைக்கிறான். நான்காம் படி நிறுத்துகிறது. யார் என்று பார்த்த போது அந்த படியில் இருந்த பெண் பதுமை பேசுகிறது.
''நில் போஜா, நான் கேட்பதற்கு பதில் சொல்?
இதோ பார் பெண் பொம்மையே உனக்கு முன்னால் மூன்று பொம்மைகள் என்னை கேட்ட அதே கேள்வி தான் நீயும் கேட்கப்போகிறாய் என்று எனக்கு பழக்கமாகிவிட்டது. நிச்சயம் நான் விக்ரமாதித்தன் ஆகமுடியாது என்பது எனக்கே தெரியும். ஆனாலும் நீ சொல்லவந்த விக்ரமாதித்தன் கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன் சொல்.'' என்கிறான் போஜன்.
நான்காவது படியில் உள்ள மங்கள கல்யாண வல்லி எனும் அந்த பெண் பொம்மை சொல்லும் கதை. அஹோ
வாரும் பிள்ளாய் , இது சம்பகவல்லி பற்றிய கதை. கேள், சொல்கிறேன்.குறுக்கே பேசாதே.
ஆறுமாதத்திற்கு ஒருமுறை விக்ரமாதித்தன் தனது தம்பியும் மந்திரியுமான பட்டி யோடு காட்டுக்கு செல்வான். வேதாளத்தை சந்திப்பான். அதை சுமப்பான். அது கதை சொல்லும்.
ஒரு சமயம் இப்படி காட்டுக்கு போகும்போது, வழியில் ஒரு சௌகரியமான சத்திரம், விடுதி யில் தங்குகிறான். அதை அடுத்து ஒரு தூய்மையான குளம் தென்படுகிறது. விக்கிரமாதித்தனும் பட்டியும் அதில் நீராடி குளித்து களைப்பு நீங்கினார்கள் .எங்கிருந்தோ நறுமணத்தோடு கம்மென்று சம்பக மலர் வாசனை மூக்கை துளைத்தது.
''பட்டி நீ போய் எங்கிருந்து இந்த நறுமணம் வருகிறது என்று கண்டுபிடி.'' என அனுப்பினான் விக்ரமாதித்தன். பட்டி தேடினான் யாரையெல்லாமோ கேட்டான். தெரியவில்லை. பிறகு இருவரும் சேர்ந்து காட்டில் சுற்றி தேடினார்கள்.
நாலு வழிப்போக்கர்களை கண்டபோது அவர்கள் இந்த இருவரையும் நெடுந்தூரம் கூட்டிச் சென்று அதோ தெரிகிறது பார் ஒரு நகரம் அது தான் விஜயநகரம். அதன் ராஜா தான் விஜயரங்கன். அவன் அழகிய மகள் தான் சம்பகவல்லி. பிறக்கும்போதே கம்மென்று ஷண்பக மலர் வாசனையோடு பிறந்ததால் அந்த பெயர். இப்போது 22 வயதாகிறது. பன்னிரண்டு வருஷங்களாக அவள் ஒரு தவம் செயகிறாள். எந்த ஆண் வாசனையும் அவளை நெருங்கக் கூடாது என்று.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நீ குளித்தாயே அந்த குளத்துக்கு வருவாள். தடாகத்தில் ஆயிரம் நண்பிகளோடு நீராடி மகிழ்ந்து சத்திரத்தில் தங்கி திரும்புவாள். இது அவள் வழக்கம். அவள் குளத்துக்கு வரும் முதல் நாள் ராஜா தண்டோரா போ ட்டு விடுவான். எந்த ஆணும் அவள் வரும் நாளில் அந்த பக்கமே வரக்கூடாது, குளத்தில் குளிக்கக்கூடாது, சத்திரத்தில் தலை காட்டக்கூடாது.. மீறினால் தலை இருக்காது'' என்று. அவள் தங்குவதே நாலாபுறமும் எழுப்பிய மதில் சுவர்களுக்கு இடையே உள்ள கோட்டை அந்தப்புரத்தில் தனது தோழிகளுடன் தான். ஆகவே நீ ங்கள் இருவரும் இங்கிருந்து சீக்கிரம் திரும்பி போய்விடுங்கள். ராஜாவின் ஆட்கள் பார்த்தல் உங்கள் தலைகள் காணாமல் போய்விடும்'' என்கிறார்கள் அந்த வழிப்போக்கர்கள்.
பட்டிக்கு ஆர்வம் அதிகமாயிற்று. எப்படியாவது அந்த பெண்ணை விக்கிரமாதித்தனுக்கு திருமணம் செய் து விடவேண்டும் என்று. பட்டி விஜயநகர ராஜாவின் மந்திரியை போய் சந்திக்கிறான். தனது விருப்பத்தை சொல்கிறான். மந்திரி ராஜா விஜயரங்கனிடம் விஷயத்தை சொல்ல ஏற்கனவே ராஜா ஒரு ரகசியம் புரியாமல் தவித்தவன். ''ஏன் சம்பகவல்லி இப்படி ஆண் வாசனையே நெருங்கக்கூடாது என்று ஒரு நிபந்தனை போட்டு தவம் இருக்கிறாள்.இதை தெரிந்துகொள்ள விக்ரமாதித்தன் உதவுவான் என்று தோன்றுகிறது.
பட்டி விஜயநகரத்திலிருந்து திரும்புகிறான். வரும் வழியில் பட்டி களைத்து போய் காட்டில் ஒரு பெரிய நிழல் தரும் ஆல மரத்தடியே படுக்கிறான். அங்கே வாழ்ந்து வந்த ஒரு முனிவர் ''யார் இவன் இவ்வளவு அழகான வாலிபன் என்று ஆச்சர்யப்படுகிறார். அவன் அழகில் எங்கே தனது மனைவி மயங்கி விடுவாளோ'' என்று பயம் வந்துவிடுகிறது. தனது கையில் இருந்த ஒரு தர்ப்பையை அவன் மீது போடுகிறார். உடனே, பட்டி ஒரு அழகிய பெண்ணாகிறான். முனிவர் சந்தோஷமாக போய்விடுகிறார். சற்று நேரத்தில் அவர் மனைவி அங்கே வருகிறாள். பட்டி அழகிய பெண்ணாக தூங்குகிறான். ''அடே, இவ்வளவு அழகிய ஒரு பெண் இந்த காட்டில் எப்படி வந்தாள்? தனது கணவர் முனிவர் கண்ணில் இந்த அழகிய பெண் பட்டால் அவர் மனம் கிலேசமடையுமோ என்று யோசிக்கிறாள். அருகே ஒரு புல்லை பறித்து மந்திரம் சொல்லி அவன் மீது வீச பட்டி மீண்டும் ஆணாகிறான். அவள் சென்றபிறகு பட்டி முனிவர், அவர் மனைவி இருவரும் தன மீது போட்ட ரெண்டு தர்ப்பைகளையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக் கொள்கிறான்.
விக்கிரமாதித்தனை சந்தித்து விஷயம் சொல்கிறான். பட்டி ராஜாவாக வேஷம் தரித்து விக்கிரமாதித்தனை பெண்ணாக்கி விஜயநகரம் போகிறார்கள். விஜயரங்கன் அவர்களை வரவேற்கிறான்.
''நான் சால்ய தேசத்து ராஜா இது என் மனைவி, உஜ்ஜயினி ராஜா விக்ரமாதித்தன் தங்கை '' என்று ராஜாவிடம் அறிமுகம் செயது கொள்கிறான் பட்டி.
''ஆஹா ராஜா விக்ரமாதித்தன் மைத்துனனா நீங்கள்?''
''ஆமாம் ராஜா, ஆனால் என்ன பிரயோஜனம். என்னிடம் கப்பம் கேட்கிறான்.வருஷா வருஷம் ஆயிரம் பொற்காசுகள் கட்டவேண்டுமே. எங்கள் ராஜ்யத்தில் இப்போது பஞ்சமும் வறட்சியாக இருக்கிறது. எப்படி கப்பம் கட்டுவது? விக்ரமாதித்தன் ரொம்ப கெடுபிடி. ஆகவே ஒரு யோசனை. உங்களிடம் ஆயிரம் பொற்காசுகள் கடனாக வாங்கி திருப்பி தரும் வரை என் மனைவி உங்கள் மகள் அரண்மனையில் இருக்கட்டும். விரைவில் உங்கள் கடனை அடைத்து அவளை திரும்ப அழைத்துக் கொண்டு லபோகிறேன்''
''மனைவியை அடமானம் எல்லாம் வைக்கவேண்டாம். நான் தாராளமாக பொற்காசுகள் தருகிறேன்'' -- விஜயரங்கன்.
''அது முறையில்லை ராஜா, என் மனைவி உங்கள் மகளோடு சேர்ந்து இருக்கட்டுமே. அவளுக்கும் நெடுநாளாக ஒரு ஆசை சண்பகவல்லியை சந்திக்க'' என்றான் பட்டி. திரும்பும் வழியில் விஜயரங்கன் கொடுத்த பொற்காசுகளை ஒரு இடத்தில் புதைத்து வைக்கிறான். அவன் மகன் வேதாளம் துணையுடன் அங்கே ஒரு வண்டாக மாறி சம்பகவல்லி அந்தப்புரத்தில் மேலே ஒரு இடத்தில் இருந்து தினமும் அங்கே நடப்பதை கவனிக்கிறான்.
விக்ரமை சம்பகாவுக்கு விக்ரமியை ரொம்ப பிடித்துவிட்டது. எவ்வளவு சாதுர்யமான பெண். நெருங்கிய நண்பியாகிறாள். ஒருநாள் விக்ரமி ''ஏன் சம்பகா, எப்போதும் சோக வடிவமாக இருக்கிறாய் ? என்னிடம் உன் மனதை பகிரக்கூடாதா? என்கிறான் விக்ரமியான விக்ரமாதித்தன்.
அதை ஏன் கேட்கிறாய். ஒரு கதை சொல்கிறேன் கேள்; சதுரகிரிக்கு ஒரு ராஜா சைந்தவன். அவன் பிள்ளை தான் சித்திரசேனன். காட்டில் ஒரு முனிவரிடம் குருகுலவாசம் செயது கல்வி கற்கும்போது அவனுக்கு வில்லிய சிங்கன் எனும் ஒரு வேடன் நண்பனாகிறான்.நெருங்கிய நண்பனாகிறான். ''வில்லிய சிங்கா , உனக்கு எப்போது கஷ்டம் ஏதாவது நேர்ந்தாலும் என்னிடம் வா'' என்றதால் பலமுறை வில்லியசிங்கன் சென்றபோதும் ராஜாவாகிவிட்ட சித்ரசேனனை பார்க்க அனுமதி கிடைக்க வில்லை. பலநாள் அரண்மனை கோட்டை வாசலில் நிற்பான். சித்திரசேனன் அவனை கண்டுகொள்ளவே இல்லை. வில்லிய சிங்கன் ஒரு வேடனாகவே பரம்பரை தொழிலில் ஈடுபட்டான். அடர்ந்த காட்டில் ஒருநாள் வழி தெரியாமல் உள்ளே எங்கோ சென்று விட்டான் வில்லியசிங்கன். அங்கே ஒரு குகை. அதற்குள் சென்ற வில்லியசிங்கன் அங்கே ஒரு கிழ அருவருப்பான ஒரு முனிவர் ஒரு இளம் அழகிய பெண்ணின் மடியில் படுத்துறங்குவதை பார்த்தான். அந்த பெண் ஜாடையில் உடனே இங்கிருந்து போய்விடு. விழித்துக்கொண்டால் முனிவர் நம் இருவரையும் சேர்த்து கொன்றுவிடுவார் ' என்று வில்லியசிங்க னுக்கு அவசர ஜாடைக் கட்டளையிடுகிறாள். எப்படியோ வில்லியசிங்கன் ஊர் திரும்பி ஒரு நாள் சித்ரசேனனை சந்திக்கிறான்.
பால்ய நண்பனை அடையாளம் புரிந்துகொள்கிறான் சித்திரசேனன். அப்போது காட்டில் சந்தித்த முனிவர் இளம்பெண் விஷயம் சித்திரசேனன் காதுக்கு போகிறது. ''ஓஹோ அவ்வளவு அழகா அந்த பெண். அவளை கட்டாயம் சந்திக்க வேண்டும்'' என்று சித்திரசேனன் முடிவெடுத்தான். இருவரும் காட்டுக்குள் அந்த குகைக்கு செல்கிறார்கள்.
அங்கே வழக்கம்போல் முனிவர் அந்த அழகிய பெண் மடியில் தலைவைத்து தூங்கும்போது ''வில்லிய சிங்கா , நீ மெதுவாக அந்த முனிவர் தலையை எடுத்து உன் மடியில் வைத்துக்கொள் நான் அந்த பெண்ணை காப்பாற்றுகிறேன்'' என சொல்ல, அவ்வாறே அவனும் செய்ய, சித்திரசேனன் அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடி, அடுத்த ஊரில் அவளை மணந்துகொண்டு அவள் அவன் மனைவியாகிறாள். வெகு நேரம் கழித்து முனிவர் கண் திறந்து பார்த்து கடும் கோபம் கொண்டு வில்லியசிங்கன் மூலம் விஷயம் அறிகிறார்.
'அடே வில்லியசிங்கா, நல்ல நண்பன் என கருதி அந்த சித்திரசேனன் நட்பை நம்பி இந்த காரியம் செய் தாய். உண்மையான நெருங்கிய நட்பு பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேள் என்று ஒரு கதை ஆரம்பிக்கிறார் முனிவர்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...