Monday, July 29, 2019

SHIRDI SAIBABA



மனித உருவில் ஒரு தெய்வம் J K SIVAN
ஷீர்டி சாய் பாபா

4 அன்பே தெய்வமானது

எல்லோருக்கும் தெரிந்ததை எழுதும்போது வளவளவென்று நீட்டி எழுதவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இப்போது யாருக்கும் அதிக நேரம் கிடையாது. படிப்பது என்பது மறந்து மறைந்து போகும் ஒரு கலையாகி விட்டது இல்லையா? ஷீர்டி சாயி பாபா என்ற பெயர் ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப் படுவது. அவரைப் பற்றி எல்லா விஷயங்களும் எல்லோருக்கும் ஏற்கனவே தெரியும். ஆகவே கொஞ்சமாக ஞாபகப்படுத்தினால் போதும் என்பதே என் எண்ணம்.

இருநூறு இருநூற்றிஐம்பது வருஷங்களுக்கு முன்பு ஷீர்டி கிராமம் ஒரே புழுதி படிந்த அழுக்கு கிராமம். அதிக மக்கள் தொகை இல்லை.அங்கொன்று இங்கொன்று சில இடிந்த ஆலயங்கள், மசூதிகள் இருந்தன. அதில் யார் வந்து தங்கினாலும் கேட்பாரில்லை. இப்படி ஒரு மசூதியில் அயல் நாட்டு தேசாந்திரிகள், பக்கீர்கள், வெளி யே அதிகம் தெரியாத ஞானிகள் மஹான்கள் வந்து தங்கினார்கள். நமது பாபாவுக்கு அந்த இடம் பிடித்து விட்டது. அங்கே போய் தங்க ஆரம்பித்தார். அங்கே வரும் தேசாந்திரி ஆன்மீகவாதிகளின் நட்பு பிடித்தது.. அவர்களிடம் அநேக விஷயங்கள் தெரிந்து கொண்டார். தேவிதாஸ் என்று ஒருவர் பல வருஷங்களாக அடிக்கடி ஷீர்டி வந்து அங்கே தங்குவார். கங்கா பீர் என்கிற சாமியாரும் , ஜானகி தாஸ் என்கிற சாதுவும் கூட அடிக்கடி வருவார்கள்.

பாபா சும்மா இருப்பாரா. அந்த சிதிலமான மசூதியை சுற்றி நந்தவனம் அமைத்தார். தினமும் பூச்செடி கொடிகளுக்கு நீர் வார்ப்பார். அருகே சற்று தூரத்தில் ஒரு பெரிய கிணறு. அதில் தாம்புக் கயிற்றால் நீர் சேந்தி தோளில் மண் குடம் நிறைய நீர் சுமந்து கொண்டு வருவார். பூச்செடிகள் ஆவலாக அவர் அளிக்கும் நீருக்கு காத்திருக்கும். நன்றாக வளரும். கொடுத்த வைத்த செடி கொடிகள்!.

கங்கா பீர் சந்தோஷமாக ஒருநாள் மற்றவர்களிடம் ''இந்த மனிதர் பாபா சாதாரண மனிதர் அல்ல. அவர் இங்கே வந்ததிலிருந்து ஷீர்டி புனிதமடைந்து விட்டது. இந்த பூக்கள் எவ்வளவு ஆனந்தமாக பூக்கின்றன அவரால். அவர் ஒரு சிறந்த ஆபரணம் ஷீர்டிக்கு'' என்கிறார்.

ஏவாளை மடம் என்ற ஒன்று அங்கே இருந்தது. அதை சேர்ந்த அனந்தநாதர் என்கிற துறவி, ''கங்கா பீர், சாதாரண ஆபரணமா இந்த பாபா...இல்லை. அவர் விலையுயர்ந்த வைர வைடூர்யம்'' என்கிறார்.
சாமந்தி, நந்தியாவட்டை, பல வாசனை பன்னீர் பூக்கள் செடிகளை எல்லாம் ஒரு தரம் பாபா பக்கத்து கிராமம் ரஹதாவுக்கு சென்று கொண்டுவந்தார். அவைகளை நட்டு, நிறைய தண்ணீர் ஊற்றி அவை மளமளவென்று வளர ஆரம்பித்தன. தாதியா என்கிற உள்ளூர் குயவன் ரெண்டு சரியாக வேகாத பானைகளை அவருக்கு இலவசமாக கொடுத்தான். அவற்றில் நீரை மொண்டு கிணற்றிலிருந்து தூக்கி வந்தார். அவர் தங்கிய வேப்ப மரத்தடியில் அந்த ரெண்டுநீர் நிரம்பிய பானைகளை வைத்திருந்தார். சாயந்திரத்துக்குள் வேகாத பச்சை களி மண் பானைகள் கரைந்து விரிசல் விட்டு நீர் பூமியில் இறங்கிவிட்டது.

பாபாவால் வளர்க்கப்பட்ட பூந்தோட்டம் இன்றும் ''சமாதி மந்திர்'' எனும் ஷீர்டி சாயி பாபா ஆலயத்தில் உள்ளது.

இன்னொரு குட்டிக்கதை சொல்லி முடிக்கிறேன். ஷீர்டி க்கு அருகில் இருந்த ஒரு ஊரில் வசித்த ஒரு பக்தர், அக்கல்கோட் மஹாராஜா என்று அழைக்கப்படும் ஒரு மஹானின் பாதச்சுவடுகளை வணங்கும் வழக்கம் கொண்டவர். தனது ஊரிலிருந்து அடிக்கடி பாய் க்ரிஷ்ணாஜி அலிபாக்கர் என்கிற அந்த பக்தர் அக்கல்கோட் கிராமத்துக்கு நடந்து போவார். அக்கல்கோட் மகாராஜ் பாதச் சுவடுகளை வழிபடுவதால் மன நிம்மதி பெற்றவர் அவர். வெகுநாட்கள் ஆகிவிட்டதே சீக்கிரம் அடுத்தவாரம் ஒருநாள் அக்கல்கோட் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்த சமயம் ஒரு இரவு அவர் கனவில் அக்கல் கோட் மகாராஜ் துறவி காட்சி அளித்தார்.

''நீ அவ்வளவு தூரம் அக்கல்கோட் வரவேண்டாம். நான் இப்போது நீ இருக்கும் ஊருக்கு அருகே இருக்கும் ஷீர்டி கிராமத்திலேயே இருக்கிறேனே.'' என்று சொல்லி மறைந்தார்.

பாய் கிருஷ்ணாஜி மறுநாள் பொழுது விடிந்தும் விடியாததுமாக ஷீர்டி நடந்தார். அங்கே சாய் பாபா பற்றிப் கேள்விப்பட்டு அவரை சென்று வேப்பமரத்தடியில் பார்த்தார். வணங்கினார். மனம் அமைதியுற்றது. அக்கல்கோட் மகாராஜ் அவதாரம் தான் அவர் என்று மனதில் தீர்மானமாக பட்டது. அங்கே அந்த வேப்ப மரத்தடியில் பாபாவை வணங்கி அவர் பாதச்சுவடுகளை பதித்து பிரதி ஷ்டை செய்து அதை புனித பாதுகா ஆலயமாக்கினார். விடாமல் பூஜைகள் நைவேத்தியங்கள் அங்கே நடந்தது.

“சதா நிம்பவிருக்ஷஸ்ய மூலாதிவஸத் சுதஸ்ரவினம் திக்தம்பியபிரியம் தம் தரும் கல்பவிருக்ஷாதிகம் சதா யந்தம் நாம மஹேஸ்வரம் சத்குரும் ஸாய்நாதம், சத் குரும் ஸாய்நாதம்'' என்கிற மந்திரத் ஸ்லோகத்தை விடாமல் சொல்லி வந்தார்.

ஷீர்டியில் முஹைதீன் தம்போலி என்கிற வஸ்தாத் பயில்வான் வசித்து வந்தான். ஒருநாள் அவன் பாபாவை தன்னோடு மல்யுத்தத்துக்கு அழைத்தான். அவனோடு மோதி தோற்றுப் போனார். பாபா. அதற்கு காரணம் தன்னுடைய ஆடை என்று தோன்றியதோ என்னவோ? அதற்குப் பிறகு நீளமான ஒரு தொளதொள அங்கி உடுக்க ஆரம்பித்தார். அதற்கு கஃனி KAFNI என்று பெயர். இடுப்பில் ஒரு நாடாவை இறுக்கி முடிந்துகொள்வார். தலையில் ஒரு துண்டு சுற்றி இடது காதோரம் முடிச்சு. அது தான் நாம் இன்றும் காணும் பாபா உருவம். எப்போதும் ஒரு கோணியில் அமர்வார். அது தான் ஆசனம். ''ஏழ்மை, எளிமை தான் ராஜ அந்தஸ்து. பகவான் தீன தயாளன்இல்லையா? '' என்பார்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...