Thursday, July 18, 2019

VIKRAMADHITHTHAN STORIES

விக்ரமாதித்தன் கதைகள் J K SIVAN

நானும் வேதாளமும் ​

நான் முதலில் வேதாளத்தை பார்த்தது கிருஷ்ணய்யாவால் தான். ரொம்ப சாது. அதிர்ந்து பேசமாட்டார். சிரித்த முகம். பஞ்சகச்சம், தெலுங்கு கலந்த கொச்சைத்தமிழ். தலை முடியை அதிக பட்சம் ஆறு நிமிஷத்தில் துல்லியமாக எண்ணி விடலாம். 32ல் இருபதுக்கு மேல் தொலைந்து போன பற்கள். சந்தமாமா காரியாலயத்தில் தெலுங்கர்கள் அதிகம் வேலை பார்த்தார்கள். சித்ரா என்று ஒருவர் அற்புதமாக விக்ரமாதித்தன் வேதாளம் படம் போடுவார். கிருஷ்ணய்யா மாதம் தவறாமல் சூளைமேட்டில் பஜனைகோவில் தெருவில் வசித்த எனக்கு எதிர்வீட்டிலிருந்து ''இந்தாடா சிவா இந்த மாசம் அம்புலிமாமா. கடையில் இன்னும் நாலுநாள் கழித்து தான் வரும்.' அட்வான்ஸ் காபி எனக்கு இப்படி கொடுத்துவிடுவார். பேசும் படம் என்ற சினிமா புத்தகம் காட்டுவார். தரமாட்டார்.''இதெல்லாம் படிக்கவேண்டாம். கெட்டுபோயிடுவே'' எட்டு ஒன்பது வயசுக்கு அப்புறம் நான் கெட்டுப்போய் இருந்தால் கிருஷ்ணய்யாவோ பேசும்படமோ ஜவாப்தாரி இல்லை. கிருஷ்ணய்யா வீட்டில் சங்கர் என்கிற சித்ராக்காரரை பார்த்திருக்கிறேன் . தமிழ்க் காரர். அவரும் '' சித்ரா'' என்பவரும் அம்புலிமாமா முழுதும் அற்புத படங்களை போடுபவர்கள். அவர்களில் சித்திரங்களில், நேரிலேயே விக்கிரமாதித்தனை அவன் தோளில் வேதாளத்தை பார்த்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
யார் இந்த வேதாளம்?
''விக்ரமாதித்தா , காளஹஸ்தி தெரியுமா உன்ன? தெற்கே ஒரு புராதன பிரபல சிவாலயம். அது சோழ ராஜ்யத்தில் சேர்ந்திருந்தபோது அந்த ஆலய அர்ச்சகன் நான். மூன்று காலமும் சிவனுக்கு ஏதாவது நைவேத்தியம் பண்ணுவேன். அதுவே எனக்கு ஆகாரம். ஒருநாள் நைவேத்தியம் பண்ணிய அன்னத்தை வீட்டுக்கு எடுத்துச்செல்ல மறந்து போய்விட்டேன். இரவு நேரம். மீண்டும் கோவில் கதவை திறந்து சிவன் சந்நிதி சென்றபோது சிவன் மடியில் பார்வதி அவர் சொல்லும் கதை ஏதோ சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தாள். பிரசாதம் எடுத்துக்கொண்டு உடனே கதவை சார்த்திவிட்டு வீடு திரும்பினேன். உனக்கு நான் சொன்ன கதைகளை தான் சிவன் அம்பாளுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள் போல இருக்கிறது. வீட்டுக்கு நான் சென்றவுடன் என் மனைவி என்னை பிலுபிலு என்று ஏன் இத்தனை நேரம் ஆயிற்று என்று பிடித்துக்கொண்டாள். நான் நடந்ததை சொன்னேன். ''அந்த கதையெல்லாம் எனக்கு நீ இப்போது சொல்லு'' என்று பிடிவாதம் பிடித்தாள்'' .இதை யாருக்கும் வெளியே சொல்லமாட்டேன் என்று'' சத்யம் வாங்கிக்கொண்டு சொன்னேன். அதை மீறி பலரிடம் இந்த கதைகளை சொல்லிவிட்டாள். சிவன் கோபம் என் மீது பாய இப்போது நான் வேதாளம். ''ப்ரபோ, என்னை மன்னித்து ரக்ஷிக்கவேண்டுஜ்ம். இந்த சாபத்திலிருந்து விமோசனம் தரவேண்டும் என்று கெஞ்சினேன்''
''நீ இப்போது முதல் உஜ்ஜயினியில் காளியின் கோவில் அருகே உள்ள முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்குவாய். ஒருநாள் விக்ரமாதித்தன் என்று ஒரு ராஜா உன்னை பிடிக்க வருவான். அப்போது இந்த 24கதைகளையும் அவனுக்கு சொல்லு. ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு கேள்வி கேள். அவன் 23 கதைகளுக்கு சரியாக பதில் சொல்லுவான். நீ அவனுக்கு அடிமையாக அவன் உயிருள்ளவரை சேவை செய்து அவன் விண்ணுலகம் செல்லும்போது நீயும் முக்தியடைவாய். ”

இப்படி வேதாளம் சொல்வதாக கதைகள் வரும். காத்திருங்கள். முன்பே சொல்லிவிடுகிறேன். விக்ரமாதித்தன் கதைகள் நிறைய மாறுதல்களோடு சொல்கிறார்கள். போஜராஜன் கண்டுபிடித்த விக்ரமாதித்தன் தங்க சிம்மாசன புதுமைகள் சொல்வதும் நடுவே வேதாளம் சொல்லும் கதைகளும்


சேர்த்தே தருவேன். வேதாளம் என்னை நிறைய வேலை வாங்குகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...