Sunday, January 31, 2021

 

ஏகஸ்லோகி     ---           J K  SIVAN
ஆதிசங்கரர்

                             ஒண்ணே  ஒண்ணு  தான்....

ஆதிசங்கரரைப் பொறுத்தவரை  வெட்டு  ஒண்ணு  துண்டு ஒண்ணு  தான். ரெண்டே கிடையாது.  நோ டூயலிட்டி.  அத்வைதம்.   எல்லாம் ஒண்ணு  தான். அவர் தப்பு இல்லை  நாம் தான்  தப்பு.  எல்லாம் ஒண்ணே  ஒண்ணு தான் புரிஞ்சுவிட்டால்  நாம் வேறு சங்கரர்  வேறு இல்லையே.

ஆயிரக்கணக்கான  ஸ்லோகங்கள் எழுதியிருக்கிறவர் '' ஒரே  ஒரு ஸ்லோகம்'' என்று ஒரு ஸ்லோகம் எழுதியதை தான் இன்று படிக்கிறோம்.


किं ज्योतिस्तवभानुमानहनि मे रात्रौ प्रदीपादिकं
   स्यादेवं रविदीपदर्शनविधौ किं ज्योतिराख्याहि मे ।
चक्षुस्तस्य निमीलनादिसमये किं धीर्धियो दर्शने
   किं तत्राहमतो भवान्परमकं ज्योतिस्तदस्मि प्रभो ॥

கிம் ஜ்யோதிஸ்தவ  பானுமான ஹனி மே  ராத்ரோவ் ப்ரதிபாதிகம் ஸ்யா  தேவம் ரவி தர்சன  விதெள  கிம் ஜ்யோதிராக்யாஹி மே சக்ஷுஸ் த்ஸ்ய நிமிலநாதி சமயே கிம் தீ தியோ தர்சனே கிம் தத்ராஹம்  அதோ  பவான்பரமகம் ஜ்யோதிஸ்தத ஸ்மி ப்ரபோ:

''ஐயா கொஞ்சம் நில்லுங்க. எந்த வெளிச்சம் உங்களுக்கு உதவுது?யோசிச்சீங்களா?  பகலிலே  சூரியன். பொழுது சாய்ஞ்சா  தீபங்கள், விளக்குகள்.? அவ்வளவு தானா?   சூரியனும்  தீபங்களை இருந்தா வெளிச்சம் தெரிஞ்சுடுமா?  கண்ணு  வேண்டாமா? சரி  கண்ணுடைய ஒளி இந்த ஒளி யெல்லாம் பார்க்க  உதவுது.  கண்ணை மூடிக்கிட்டா? என்ன தெரியும்? நமக்குள்ளே  ஞானம் , அறிவுன்னு ஒண்ணு  இருக்கு இல்லை யா? அது ஒளி காட்டுது.  சரிங்க.  ஞானம் உள்ளே  இருக்குது. ஒளிகாட்டுது ன்னு யார்  உணர முடியும்?  ஆத்மான்னு, உயிர், ஜீவன்  என்று ஒன்று இருந்தா தானே  மத்ததெல்லாம் தெரியும், புரியும். செத்ததுக்கு என்ன தெரியும்?

ஆகவே  பகவானே  புரிஞ்சுக்கிட்டேன்.  ஆத்மா ன்னு ஒரே ஒரு ஒளி தான் உள்ளே வெளியே எல்லாம் வெளிச்சம் போடறது.  பிரகாசமானது. நீதான்  பிரம்மமே ,  அந்த ஆத்ம ஒளி. நீ  ஒண்ணு  தான்  எல்லாமே''.

SURDAS

 

ஸூர்தாஸ்   -       J K  SIVAN  


  9. நின் தாமரைப்பதமே கதி
 
பக்தி பரவசத்தால் தன்னை இழந்து இறைவ னோடு ஒன்றி அவனது ப்ரபாவத்தில் மூழ்கி ஆனந்தமான நிலையிலிருக்கும் மஹான்கள் இந்த உலக சிந்தனை துளியும் இல்லாதிரு ப்ப வர்கள். அவர்களது வாக்கில் சத்யம் எதிரொலிக் கும். அவர்கள் எழுத்தில் கற்பனையில் உண்மை பிரதிபலிக்கும். நம்மால் காண முடியாததை ஆனந்தமாக கண்டு விமர்சிப்பார்கள். அவர்களை படிக்கும்போது, அனுபவிக்கும்போது  கொஞ்ச மாவதுநம்மை  மாற்றும்.   எனவே   அடிக்கடி  இதில்    'டச்'   இருக்கவேண்டும்.   

அப்படிப்பட்ட  ஒரு மஹான்  கண்ணற்ற  ஸூர் தாஸ்.
கண்ணன் ஸூர்தாஸ் மூச்சில் இருந்து பாடலாக வெளிவந்து எவர்  எழுத்தாலோ இன்று நம் முன்னே   ஹிந்தியில், ஆங்கிலத்தில் புத்தகமாக நிற்கிறான். 
ஸூர் தாஸ் பேசிய  பாடிய  மொழி தெரியாத நாமும் அவரோடு சேர்ந்து கண்ணனை  ரசிக்க வேண்டாமா? அதன் மூலம்சூர்தாஸின் இன்பத் தில் கடுகளவாவது அனுபவிக்க வேண்டாமா?    இன்று ஒரு பாடல்.


''ஹே மனமே,  வா உனக்கு ஒரு நல்ல வழி சொல்லித்தருகிறேன். அங்கே இங்கேஓடாதே. அதோ பார் ஒளிவீசும் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறதே அது என்னவென்று அறிவாயா? செந்தாமரைக் கண்ணனின் தாமரை மலர்ப் பாதங்கள்.  அது  யாருடையதென்று யோசிக்கிறாயா? அதுதான்நமது நந்தகோபன் மகன் கிருஷ்ணன் திருப்பாதங்கள். . எவன் திருவடி துணை இருந்தால் பயங்கள் நீங்குமோ அவனுடையது..

அரிது அரிது மானுடராகப்பிறத்தல் அரிது. அப்படிப் பிறந்து, இந்தவாழ்க்கை சம்சார கடலை தாண்ட வேண்டாமா? அதற்குசாதுக்களின் சத் சங்கம் தேவை இல்லையா?

இதோ என்னைப்  பார்.  கண்ணற்றவன்.பார்வை அதனால் கிடையாதென்பதால்  இரவு எதுபகல் எது எனக்கு? எல்லாமே இருட்டு. தூக்கம் ஏது?  தேஹத்தில்  உஷ்ணம்குளிர்ச்சி, மழை வெயில் படுவது தெரிகிறது. அனுபவிக் கிறேன். அற்ப சுகத்தைநாடி கொடிய, கருமிகளுக்கு உழைத்தேன். என்ன பிரயோஜனம்?

நான் யார்? அந்த கோவிந்தனின் தாசானு தாசன். நவ வித பக்தி என்பார்களேஅதில் தான் எனக்கு விருப்பம்?  ஓஹோ  நவவித பக்தி என்னவென்று  சொல்லவில்லையா?.
சொல்கிறேன்

 என் ஹரியின் பெருமைகளை கேட்பது,  அவன் பெருமைகளை நாவினிக்க சொல்வது, பேசுவது, ஸ்மரிப்பது, கணநேரமும் விடாமல் அவனை நினைவி னில் நிறுத்திக் கொள்வது,  பிரார்த்தி ப்பது, அவன் செந்தாமரை திருவடிகளில் சரணடைவது, நறுமண வாசமிகு மலர்களால் அவனைஅர்ச்சிப்பது, வாசனாதி திரவியங்களால் அவனைமகிழ்விப்பது, அவனுக்கு உற்ற நண்பனாக சேவைபுரிவது, இதையெல்லாம் விடு..... என்னையேஅவனுக்காக மறந்து இழந்து அவனுக்கு என் உயிர் உடல் பொருள் ஆவி அனைத்தும்அர்ப்பணிப்பது.... போதுமா ??
போதும்போதும் போதும்..... என்கிறார் சூர்தாஸ் இந்த அருமையான பாடலில்:


Bhajahoon re man sri nand nandan abhaya charan arvind hey
Durlabh manav janam satsange tar jaave bhav sindh re
Sheet Aatap Vatavariyat , ae din aavanijaani re
Biphale sevenu kripan durjan chapal sab sukh lagi re…
Sravan Kirtan Smaran Vandan Paadsevan Dasya re
Poojan Sakhijan Atmanivedan , Govind Das abhilashi re…
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 

LOST TEMPLE




 ஒரு அக்ரமத்தின் கதை. J K SIVAN

ஈவு இரக்கமில்லாமல் சில நல்ல உயிர்க ளையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது கொரோனா. எனது அருமை நண்பர், விஜயபாரதம் ஆசிரியர் மா. வீரபாகுவின் மறைவு பெரிய வெற்றிடத்தை தந்துள்ளது. அவர் இழக்கக்கூடிய ஒரு மனிதர் அல்ல. சத்யத்துக்கும், நேர்மைக்கும்,குரல் கொடுத்த தீரர். பயமரியாத 72 வயது வீரர். என்னவோ தெரியவில்லை, இறப்பதற்கு ரெண்டு மாதங்கள் முன்பு என்னை நங்கநல்லூரில் வந்து சந்தித்தார் நண்பர்களுடன். சில புத்தகங்கள் பரிசளித்தேன். அவர் என்னை சந்தித்தது இந்த கட்டுரையை நான் எழுதிய
பிறகு (TO APPRECIATE MY WRITING)

''கோவில் போய் கோர்ட் வந்தது டும் டும்''

ஸ்ரீ வீரபாகு ஒழுக்க சீலர். ப்ரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர். இனிய குணத்தவர். மக்களிடம் நேசம் கொண்டவர். எல்லாவற் றிற்கும் மேலாக இந்திய தேசிய வார இதழ் ''விஜய பாரத'' ஆசிரியர் , ஸ்ரீ ம . வீரபாகு. RSS இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட சமூக சேவகர். அரைநூற்றாண்டுக்கு மேல் தன்னலமற்ற தேச சேவை: வணங்குகிறேன்:

விஜய பாரத ஏடு தனது அக்டோபர் 3-2017 இதழில் ஒரு பூதாகரமான செயதியை வெளியிட்டது

ஏற்கனவே இருந்த சிவ, விஷ்ணு கோயில் களை இடித்துவிட்டு அந்த இடத்தில் தான் ஆங்கிலேயர்கள் இப்போதிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தை கட்டினார்கள்'' -
இந்த விஷயம் எனக்கு புதியது. மறைக்கப் பட்ட ஒரு மாபெரும் பூசணிக்காய் . என்னால் இதை ஜீரணிக்க முடியாமல் கொஞ்சம் விஷயம் தேடினேன். செய்தி ஆதார பூர்வ மானது என்று தெரிய வருகிறது. முழு விவரமும் தேடவேண்டும்.

'' சென்னை சௌகார்பேட்டை பகுதியில் சென்னகேசவ பெருமாள் கோயில் இருக் கிறது. இதை பாரதத்தை சுரண்ட வந்த கிழக்கிந்திய கம்பெனி நிதி அளித்து கட்டச் செய்தது என்று 'வரலாறு' . இது உண்மையல்ல. சுத்தப் பொய் . சென்னை உயர்நீதிமன்றம் இப்போது இருக்கிறதே அங்கே தான் சென்னை மல்லீஸ்வரர், சென்னை கேசவர் ஆலயங்கள் இருந்தன. கிழக்கிந்திய கம்பெனி வெள்ளையன் இவற்றை இடித்து விட்டு கோர்ட் கட்டினார்கள்.

ஹை கோர்ட் கட்டிட 150வது ஆண்டுவிழா நிகழ்ச்சியின் போது இந்த வெளியே பரவாத செயதி அம்பலமானது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பேசும்போது: 'ஆஹா நமது நீதிமன்றம் ஒரு புனிதமான இடத்தில் அமைந் திருக்கிறது' என்று கொண்டாடினார். புனிதமான இடத்தில்' என்றால் கோயில் இருந்த இடம் தானே!.

சென்னை மாநகருக்கே அந்தப் பெயர் வருவ தற்கு ஒரு காரணம் சென்ன கேசவ பெருமாள், சென்ன மல்லீஸ்வரர் இரட்டை ஆலயங் கள்தான். கிழக்கிந்தியக் கம்பெனி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை விஸ்தரிப்பதற்காக இந்த இரட்டைக் கோயில்களை தகர்க்கப் போவதாக அறிவித்ததும் அன்றைய பக்தர்கள், ஹிந்து பெருமக்கள் புயலாய் சீறினார்கள். கவலை வேண்டாம் இந்த வேறு இடத்தில் கோயில் கட்ட பணமும் இடமும் தருகிறோம் என்று கிழக்கிந்திய கம்பெனி அவசரமாக சொல்லிப் பார்த்தது. அன்றைய ஹிந்துக்களின் தலைவ ரான மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் ஆவேசமுற்றார். ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர்.

''போய்யா, உன் பணம் யாருக்கு வேண்டும்'' என முடிவெடுத்து கோயில் இடிக்கப் படுவதைக் கேள்விப்பட்டு தன்னுடைய சொந்த செலவில் சென்ன கேசவப் பெருமாளையும் சென்னமல்லீஸ்வரரையும் தேவராஜ முதலித் தெருவில் 1700 ல் பிரதிஷ்டை செய்தார். வெள்ளையன் அரசாங்கம் தருவதாக சொன்ன பணத்தை நிராகரித்து தன் சொந்த செலவில் கோயில் கட்டிமுடித்தார். குறிப்பாக சென்ன மல்லீஸ்வரர் கோயிலை ஆலங்காத்தா பிள்ளை என்ற வணிகர் கட்டிக்கொடுத்தார். ஆதியில் இந்த இரு கோயில்களும் 1646லேயே கட்டப்பட்டவை என்கிறார் சென்னை பற்றி வரலாற்று குறிப்புகள் தரும் எஸ். முத்தையா. அந்த இரண்டு கோயில்களையுமே பேரி திம்மப்பா என்ற மொழிபெயர்ப்பாளர் கட்டியிருந்தார். யார் கட்டினால் என்ன?

கோயில் இருந்த காலத்தில் அந்த வளாகத் தில் இருந்த சிறிய நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வருகிறவர்கள் கோயிலிலிருந்து அர்ச்சகர்கள் கொண்டுவரும் துளசி தீர்த்தத்தை வார்த்து 'நான் சொல்லும் சாட்சி உண்மை. பொய் அல்ல' என்று சபதம் ஏற்பார்கள். இதைப் பார்த்துவிட்டு வழக்குத் தொடர்ந்தவர்கள் சிலரும் 'நான் தொடுத் திருப்பது உண்மையான வழக்கு. பொய் வழக்கு அல்ல' என்று சபதம் ஏற்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சாதாரண மக்களின் மன நிலை எப்படி இருந்தது,

புனித ஜார்ஜ் கோட்டையை விஸ்தரிக்க கோயிலை இடித்தது மட்டும் அல்ல. 1844ல் வெள்ளையன் ஒரு சட்டம் இயற்றி அதன்படி கிறிஸ்தவராக மதமாற்றப்பட்டவர் சொத்துக்கு வாரிசாக தொடர்ந்து இருக்க முடியும். ஏறக்குறைய அதே சமயத்தில் கிறிஸ்தவ இறை இயலை (தியாலஜி) சென்னை பல் கலைக்கழகத்தில் கட்டாயப் பாடம் ஆக்கினான்.

பிரபல அவுரி வர்த்தகரான கஜுலு லட்சுமிநரசு செட்டி இந்த மதமாற்ற சட்டத்தை எதிர்த்து 1846ல் சென்னை நகரில் கண்டன கூட்டம் நடத்தி னார். இதையடுத்து அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது. 1888ல் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஒரு மாணவர் மதமாற்றப்பட்டார். அது மாநிலமெங்கும் கடுமையான பதட்டத்தை ஏற்படுத்தியது.

இதெல்லா ம் நடந்து முன்னூறு வருஷங்க
ளுக்கு மேல் ஆகிவிட்டது. சென்னை கேசவர் சென்னை மல்லீஸ்வரர் கோயிலை இடித்து கிழக்கிந்தியக் கம்பெனி உயர்நீதிமன்றம் கட்டியது என்ற செயதியை இப்போது அறிந்தும் கூட இத்தனை ஆண்டுகள் கழித்தும் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. சென்னை என்ற நமது அருமை மாநகருக்கே பெயரை தந்துள்ள சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவ பெருமாள் ஹை கோர்ட் வருவதற்காக காணாமல் போனதா?? இடித்த கோயிலை வேறு இடத்தில் கட்டிக்கோ என்று வெள்ளையன் பணம் தந்தபோது அதை நிராகரித்த சென்னை ஹிந்துக்கள் என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

ஹை கோர்ட் நாலு வாசலை கொண்டது. பெரிய கோவில்களில் இன்றும் நான்கு வாசல்கள் இருப்பதை நினைவூட்டு கிறது. ஆமாம் இங்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல், மேற்கு வாசல், வடக்கு வாசல் உள்ள பெரிய கோவில்கள் இருந்தது. இப்போது வெறும் வாசல் மட்டும் நீதி மன்றத்துக்கு என்று தெரிகிறது.

நல்ல நீதிபதி, நல்ல பக்தர் நல்ல நீதிபதியாக திகழ்ந்த டி. முத்துசாமி ஐயர் நல்ல பக்தரா கவும் திகழ்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் அமரும் இடம் பழைய கோயிலில் மூலஸ்தானம் என்று அவருக்குத் தெரியும். எனவே, தனது பணிக்காலம் முழுதும் நீதிமன்றத்திற்கு உள்ளேயே அவர் காலணி அணிந்து செல்வது இல்லை.

Wikipedia படித்தேன். அதில் கோவில்களை அகற்றிய செயதி இருக்கிறது. சென்னை நில உடமை பற்றிய பழைய சில விவரங்களை படித்தேன். அதிலும் இது ருசுவாகிறது.

''மெட்ராஸ்'' 22.8.1639 அன்று பேர் பெற்று உருவானது. அதில் வாழ்ந்த முக்கிய பிரமுகர்களில் இருவர் பேரி திம்மண்ணன் எனும் பிரான்சிஸ் டே Francis Day எனும் வெள்ளைக்காரரின் உதவியாளன். இன்னொ ருவர் நாக பட்டன் எனும் கிழக் கிந்திய கம்பனிக்கு பீரங்கி வெடி மருந்து தயாரிப் பாளர். சென்ன கேசவ பெருமாள் கோவிலை, சென்னமல்லீஸ்வரர் கோவிலொடு சேர்த்து திம்மண்ணன் நாராயணப்பையர் என்பவ ருக்கு தானமளித்தான்.

ஸர்வதாரி வருஷம் சாலிவாகன சகாப்தம் 1569 சித்திரை மாசம் 28ம் நாள் அன்று மெட்ராஸ் சென்னை கேசவ பெருமாள் கோவிலை தான பத்ரம் எழுதி நாராயணப்பய்யருக்கு அளித் தான். மெட்ராஸ் சென்னை ஆனது இந்த கோவிலால் தான் என்று சொல்கிறார்கள். ''சென்னபட்டணத்தில் நான் சென்னை கேசவ பெருமாள் கோவில் காட்டினேன். அதை மானியமாக நிலத்தோடு உனக்கு மாற்றி அளிக்கிறேன். இனி நீ புத்ர பௌத்ராதி உரிமையோடு சூரிய சந்திரர்கள் உள்ளவரை ஆண்டு அனுபவிக்கவும். இந்த தானத்தை எதிர்த்து தடுத்தவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவை கொண்ட பாபத்தை அனுபவிப்பார்கள். மனப்பூர்வமாக பேரி திம்மண்ணன் ஆகிய நான் எழுதி கொடுத்த தான பத்ரம்'' இந்த சென்னைகேசவ பெருமாள் கோவில் அதற்கு முன் நாகபட்டன் வசம் இருந்தது . இதற்கு தாய் பாத்திரம் ரெண்டு வருஷம்முன்பு அதே கோவில் மானியத்தை நாகப்பட்டன் பேரி திம்மண் ணனுக் கு எழுதிக் கொடுத்தது. இந்த ஆலயம் இப்போது உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தில் கட்டப்பட்டிருந்தது. அப்புறம் காணாமல் போனது.
1710 வரை பெரிய கோவில் என்று வரை படங்களில் காண்கிறது. பலர் தரிசித்ததாக அறிகிறோம்.1746 முதல் 1749 வரை சென்னை பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்து மீண்டும் கிழக்கிந்தியுங் கம்பனி வெள்ளையர் வசம் வந்து போது பாதுகாப்புக்காக ''கருப்பு நகரம்'' blacktown எனும் சென்னை பலப்படுத் தப்பட்டது. 1757ல் சென்னகேசவ பெருமாள்-சென்னை மல்லிகேஸ்வரர் கோவில் வெள்ளை யர்களால் அழிக்கப்பட்டது. கோவிலின் கற்கள் சுவர் கட்ட உபயோகமானது. 250,000 சதுர அடி நிலம் கொண்ட கோவில் மான்ய நிலம் அழிந்தது. வேறு இடத்தில் அந்த அளவு நிலம் தருகிறோம். கட்டிக்கொள்ள பணம் தருகிறோம்'' என்றது வெள்ளை அரசாங்கம். மணலி முத்து கிருஷ்ண முதலியார் பணம் வேண்டாம் நிலம் கொடு என்று நிலம் பெற்று கெங்கு ராமையா தெரு, தேவராஜ முதலி தெரு, NSC போஸ் தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு இடைப்பட்ட இடத்தில் இப்போது இருக்கும் கோவிலாக கட்டப்பட்டது.''

GOPALAKRISHNA BHARATHIYAR

 

கோபாலக்ரிஷ்ண  பாரதியார்  -   2        

              J K   SIVAN  

தமிழ் தாத்தா  உ.வே.சா.வின் தமிழ் ஆசான் திருச்சிரபுரம்  (திருச்சி)  மஹா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அக்காலத்தில் தலை சிறந்த தமிழாசிரியர். அறிஞர்.  கவிஞர். அவருக்கு  கோபாலக்ரிஷ்ண  பாரதியாரின் நந்தனார் சரித்திரம் பிடிக்கவில்லை.

என்னதான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு  சிவபக்த  நாயனாரின் மூலக் கதையை சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் வரும் திருநாளைப்  போவார் நாயனார் சரிதத்தை '' நந்தனார் சரித்திரம்''  என்ற கற்பனைப் பாத்திர  சரித்ரமாக்கி  பாடி வருவது  சரியில்லை எனறு  மனதில் எண்ணம்.  

இது தெரியாமல்  ஒரு நாள் பாரதியார் பிள்ளைவாளிடம்  தனது  நந்தனார் சரித்திரத்திற்கு  வாழ்த்துப்   பாயிரம் பெறுவதற்கு   பிள்ளையின்  வீட்டைத் தேடி திருச்சி வந்தார். வீடுதேடி வந்த பிராம்மணரிடம் தப்பெடுக்க வேண்டாமென்று பிள்ளைவாள் நினைத்தார்.

'' கோபாலக்ரிஷ்ண பாரதியாரே, நீங்கள் இதை முக்கியமாக சங்கீத நாடக பாணியில் அமைத்திருக்கிறீர்கள். எனக்கோ சங்கீதம் பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல சங்கீத வித்வத்துவம் உள்ள எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம்''  என்று சொல்லி அனுப்பிவிட்டார்.பிள்ளை அவர்கள், தமது மாணாக்கர் உ.வே. சுவாமிநாதையர் போன்றவர்களிடம் மேலே சொன்ன தனது மனசில் இருந்ததைச் சொன்னார்.  இதை  உ.வே.சா. தனது  என் சரிதத்தில்  எழுதியுள்ளார்.  அதனால்தான் இப்போது உங்களுக்கு நான் இந்த விஷயத்தைச் சொல்ல முடிகிறது.

கோபாலகிருஷ்ண பாரதி பிள்ளையை விடுவதாக இல்லை. ஒருநாள் மறுபடியும் திருச்சிக்கு  பிள்ளைகளின் வீட்டுக்கு வந்தார்.

'' பண்டித, பாமர ரஞ்ஜகமாக நீங்கள் எழுதியிருக்கிற இந்த நூல் தானே பிரசித்தி அடையும். என் வாழ்த்துப் பாயிரம் அவசியமேயில்லை'' .       பிள்ளை அவர்கள்  இப்படிச்சொல்லி,  பாரதியாரை அப்போதும் திருப்பியனுப்பி விட்டார்.

பாரதி பல தடவை நடையாக நடந்து பிறகு மீண்டும் ஒரு நாள்  விடா முயற்சியோடு  கொளுத்தும் வெயிலில் நடுமத்தியான வேளையில் பிள்ளை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள்ளே பிள்ளை சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்று தெரிந்தது. அவர் எழுந்திருந்து வருகிறபோது வரட்டும் என்று வாசல் திண்ணையில் பாரதி உட்கார்ந்து விட்டார். உட்கார்ந்தவர் தன்னையறியாமல் தான் இயற்றிய நந்தன் சரித்திர கீர்த்தனைகள் பாட ஆரம்பித்தார்.

உள்ளே அரைத் தூக்கமாயிருந்த பிள்ளையின் காதில்  பாரதியின் பாடலில் உள்ள  பக்தி பாவம், ராக பாவம் இரண்டும் பூர்ணமாக இருந்த அந்தப் பாட்டு விழுந்ததால் அவரும் அதில் ஆகர்ஷணமாகிவிட்டார். அந்தப் பாட்டுகளில் இலக்கணப் பிழைகள் வழு என்பது இருப்பதாகவும் ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது குறை. இப்போது, பாடியவருடைய பக்திப் பிரவாகத்தில் அந்த வழுவெல்லாங்கூட அடித்துக்கொண்டு போய் விட்டாற் போலத் தோன்றிற்று. அந்த பிரவாகத்தைத் தடைப்படுத்த வேண்டாமென்றே, அவர் தொடர்ந்து தூங்குகிற மாதிரி இருந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

 ''வருகலாமோ? ''என்ற பாட்டுக்கு பாரதி வந்தார். ( யூ ட்யூபில் M M தண்டபாணி தேசிகர் பாடிய இந்த நந்தனார் திரைப்பட பாடல் இணைத்திருக்கிறேன். கேட்டுவிடுங்கள்.)

ஏற்கெனவே அந்த வார்த்தையை இலக்கண சுத்தமில்லை என்று பிள்ளை கண்டித்திருக்கிறார். வருகை, போகை என்று உண்டு. வருதல், போதல் என்றும் உண்டு. அவை இலக்கண சுத்தமான பிரயோகங்கள். இரண்டு மில்லாமல் இதென்ன ''வருகல்'' ?ஆரம்ப வார்த்தையே சரியாயில்லையே. வரலாமோ? என்றாலே சரியா யிருக்குமே என்று சொல்லியிருக்கிறாராம்.

ஆனால் இப்போது நந்தனார் தூரத்திலிருந்து சிதம்பரம் கோவிலை தரிசனம் பண்ணி, ஒரு பக்கம் பக்தியிலே தாபமான தாபம். இன்னொரு பக்கம் தன்னுடைய பிறவியை நினைத்துத் தயக்கமான தயக்கத்தோடு கண்ணுக்குத் தெரியாத நடராஜாவை மனக் கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியும் அந்த சந்நிதானத்துக்குத் தானும் வரலாமா, வரலாமா என்று என்றைக்கோ உருகி உருகிக் கேட்டதை, அதே தாபத்தோடு பாரதி உருக்கமாகப் பாடிக் கேட்டவுடன் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளைக்கு இலக்கணப்பிழை, திருமுறையை மாற்றிய பிழை எல்லாம் மறந்து போய்விட்டதாம்.

இப்பேர்ப்பட்ட பக்த சிகாமணி நாம் திரும்பத் திரும்ப விரட்டியடித்தும் பாயிரத்துக்காக வருகலாமோ? என்று நம்மிடமே கேட்பது  போல் பண்ணி விட்டோமே என்று ரொம்பவும் பச்சாத்தாபப்பட்டுக் கொண்டு வாசலுக்கு ஒடி வந்தாராம்.       ''வருகலாமோ''அவரையும் வரவழைத்து விட்டது. அவரிடமிருந்து பாயிரத்தையும் வரவழைத்துவிட்டது.  

 MM   தண்டபாணி தேசிகர்  என்ற சங்கீத வித்துவான்  நந்தனாராக நடித்து  ஒரு  கருப்பு வெளுப்பு படம்  1942ல் வெளிவந்தபோது எனக்கு  3  வயசு.  ஜெமினிஸ்டுடியோ தயாரிப்பு.  செருகளத்தூர் சாமா தான்  வேதியர்.  படத்தில் பேச்சை விட  பாட்டுகள் தான் அதிகம்  அந்தக்காலத்தில்.  இன்றும்  இந்த படத்தை  யூ ட்யூபில் பார்க்க முடிகிறது.
அருமையான சில பாடல்கள்  அந்த படத்தில்  தேசிகர்  பாடி இருக்கிறார்.  சில:
ஆனந்த நடமிடும் பாதன்
பிறவா வரம் தாரும் (இராகம்: லதாங்கி, ஆதி தாளம், தேசிகர்)
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் (நாதநாமக்கிரியை, ரூபகம், தேசிகர்)
பாவிப்பறையன் இந்த ஊரில் வந்துமிவன் (தோடி, ஆதி, தேசிகர்)
எனக்குமிரங்கினான் எம்பிரான்(கேதாரகௌளை, மிச்ரம், தேசிகர்)
கனகசபையைக் கண்ட பிறகோர் காட்சியுமுண்டோ (காபி, ரூபகம், தேசிகர்)
எல்லோரும் வாருங்கள் சுகமிருக்குது பாருங்கள் (பிலகரி, ஆதி, தேசிகர்)
காக்க வேண்டும் கடவுளே (பந்துவராளி, ஆதி, தேசிகர்)
தில்லையம்பலத் தலமொன்றிருக்குதாம் (ராகமாலிகை-ரூபகம், தேசிகர்)
சிதம்பர தெரிசனமா (முகாரி-ஆதி, தேசிகர்)
காணவேண்டாமோ - இருகண் இருக்கும்போதே (ஸ்ரீரஞ்சனி-ஆதி, தேசிகர்)
ஜாதியிலும் கடையேன் மறையாகம நூல்கள் (ராகமாலிகை-விருத்தம், தேசிகர்)
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது (சங்கராபரணம்-ஆதி, தேசிகர்)
ஹரஹர ஜகதீசா அருள்புரி பரமேசா (சிந்துபைரவி, தேசிகர்)
என்னப்பனல்லவா எந்தாயுமல்லவா (வராளி, பஜனை, தேசிகர்)
ஐயே மெத்தக்கடினம் உமதடிமை (ராகமாலிகை-ஆதி, தேசிகர்)
வருகலாமோ ஐயா நாமங்கே (மாஞ்சி-மிச்ரம், தேசிகர்)
வீறாடுமுயலகன் முதுகில் ஒரு கால் வைத்த (ராகமாலிகை-விருத்தம், தேசிகர்)

இதில்  வறுகலாமோ  பாட்டுக்கான  யூட்யூப் லிங்க்  தருகிறேன். தேசிகர்  ராக பாவத்துடன் பக்தி பொங்க  பாடுவதை கேளுங்கள் .  எச்சரிக்கை:   இக்கால  ஹீரோக்களை மனதில் கொண்டு படத்தை பார்க்கவேண்டாம்:

https://youtu.be/urcPeMDyxmo

GOPALAKRISHNA BHARATHI



 


கோபாலகிருஷ்ண பாரதியார் (1810-1896) -    1.                          J K  SIVAN 
                                     
தமிழில் அற்புதமாக, பக்தி தோய்ந்த, எளிய,  இனிய  சந்தம் மிகுந்த,  கேட்டாலே  தலை, கை  உடல்  ஆடவைக்கும்,  மனம் கவரும்  பாடல்களை பலர்  தந்திருக்கிறார்கள்.  இதற்கு  சிறந்த  இலக்கண  ஞானம், கல்வி அறிவு  வேண்டாம். பக்தி  நெஞ்சில் ஆழப்பதிந்திருந்தால்  அது தானே வேர் விட்டு வளர்ந்து வெளிவரும், மலரும். மயக்கும்.   அப்படி ஒருவர்  தான்  சிதம்பரம் கோபாலகிருஷ்ண பாரதியார்.

நாகபட்டினத்துக்கு பக்கத்தில் நரிமணம் எனும் கிராமம் உள்ளது.  இப்போது அங்கே பூமியை தோண்டி பாதாளத்திலிருந்து எரிவாயு எடுப்பதாக எல்லாம் படிக்கிறோம்.   அங்கே  ஒரு  விலை மதிப்பிடமுடியாத ஒரு புதையல் கிடைத்ததே  அது தெரியுமா?

சிவராம பாரதியார்  எனும்  சங்கீத  உபன்யா சகர்,ப்ரவசன கர்த்தா  பிழைப்புக்காக   நரிமணம் , முடிகொண்டான்,  ஆனை தாண்டவபுரம், மாயூரம் என்று பல இடங்களில் குடும்பத்தை  இடம் மாற்றி வாழ்ந்தவர்.  சிவராம பாரதிக்கு ஒரு மகன். கோபாலக்ரிஷ்ணன்.  பிள்ளைக்கு   ஐந்து வயது முதல் சங்கீதம் கற்றுக்கொடுத்தார் அப்பா. அப்போது பிரபலமான சங்கீத வித்வான்களில் ஒருவர் கனம் கிருஷ்ணய்யர். (கனம்  என்றால்  குண்டான, இல்லை. அடிவயிற்றிலிருந்து ஸ்வரம் எழுப்பி உதடு அசையாமல் பாடுவது. அசுர சாதகம் செய்தால் தான் இது முடியும். இவரைப் பற்றி எழுதி இருக்கிறேன்.  உ.வே.சா.  உறவினர்.  கனம்  பாடுவதில்  கிருஷ்ணய்யர் கெட்டி என்பதால்  ''கனம்  கிருஷ்ணய்யர்''என்ற  விருது. கனம் கிருஷ்ணய்யர், மற்றும் ஹிந்துஸ்தானி உஸ்தாத் ராமதாஸ் ஆகியோரிடம்   கோபால க்ரிஷ்ணன்  சிஷ்யனாக சேர்ந்து கர்நாடக சங்கீதம் ஹிந்துஸ்தானி எல்லாம் கற்றுக் கொண்டான் . இது தவிர மாயூரத்தில் கோவிந்த யதி என்பவரிடம் வேதங்கள்  கற்றான்.

இங்கிலிஷ் வந்து நம்மை குட்டிச் சுவராக்காத காலம்.  வளர்ந்து  கோபாலகிருஷ்ண பாரதி ஆனார். பிரம்மச்சாரி.  யோக பயிற்சி உண்டு.  அறுபத்திமூவரில்  ஒருவரான  திருநாளைப் போவார் என்ற நாயனாரின் சரித்திரத்தை  நந்தனார் சரித்திரம் என்று எழுதியது உலகப்புகழ் பெட்ற  பாடல் திரட்டு.

நாயனார் தாழ்குல, தீண்டத்தகாத ஒரு சிவ பக்தர்.  கோபாலகிருஷ்ண பாரதி, கதா காலக்ஷேப பிரியரா தலால்   தான் எழுதிய சரித்திர சங்கீத நாடகத்தை  தானே பாடி பிரசங்கம் பண்ணினார்.  நந்தனார் சரித்ர கீர்த்தனை'' எங்கும் பிரபலமாயிற்று.  இன்றும் பாடப் பட்டு வருகிறது.  

நந்தனார் கதை தெரியாதவர்களுக்கு  ஒரு சுருக்கமான அறிமுகம்:

நந்தனார் ஒரு தாழ்ந்த, தீண்டத்தகாத குலத்தவர் என சமூகம் ஒதுக்கி வைத்த காலம்.  ஏழை விவசாயி. சிதம்பர நடராஜன் மேல் உயிர். ஆனால் ஆலயப்பிரவேசம் பண்ண வாய்ப்பில்லை. தூர நின்றே வெளியே இருந்து தரிசனம் பண்ணவேண்டும்   என்ற  வாழ்க்கை  லக்ஷியம். நிறைவேறுமா?   விவசாயியின் எஜமானன்  பண்ணையார் ஒரு ஈவிரக்கமில்லாத வேதியர் பிராம்மணர். இது கதையில் தான்.  அறுபத்து மூன்று   நாயனார்கள் சரித்திரங் களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற  திருநாளைப்போவார் சரித்திரத்தில்  பண்ணை யார்  ப்ராமண வேதியர் பாத்திரம்  இல்லை.  நாயனார் எந்த  பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியதில்லை.  தத்தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாசனம் செய்யப்பட்டிருக்கும். நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத் ''துடவை''   என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை  திருநாளைப்போவாரும்  பெற்றுத் தம் சொந்த நிலத்தில் பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணம்  சொல்கிறது. பிறந்தது   முதல் சிவ சிந்தனை தவிர வேறே  கிடையாது  என  சேக்கிழார் பாடுகிறார்.   க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய்க்கொண்டே அவர் சிவத்தொண்டு செய்துவந்ததாகத்தான் மூல நூலான பெரிய புராணத்திலிருக்கிறதே தவிர ஒரு கொடுங்கோல் பிராம்மணரிடம் அடிமைப்பட்டு ஒரே இடத்தில் கட்டிப் போட்டாற்போலக் கிடந்தாரென்று இல்லை.

கோபாலக்ரிஷ்ண  பாரதியின்  நந்தனார் சரித்திரத்தில் இப்படி ஒரு வேதியர் கொடுங்கோல் பிராம்மணரை  சிருஷ்டி பண்ணியதும்  ஒரு பிராம்மணரான  கோபாலகிருஷ்ண பாரதி தான்.  அவர்  சிவ பக்தியில் ஊறி  கேட்கிற எவருடைய நெஞ்சத்தையும்  பக்தியில் கரைக்கும்படியான உயர்ந்த  பாட்டுகள் கவனம் செய்தவர்.   ஒரு  மஹா சிவராத்திரி புண்யகாலத்தில்   சிவனோடு  கலந்து விட்டவர்.  ஏழை எளியவர்களிடம் ரொம்பவும் இளகின சுபாவத்துடன் இருந்தவர் .  நல்ல நாடக உணர்ச்சி, உணர்ச்சியைப் பாராட்டித் தரும் சாமர்த்தியம் எல்லாமும் படைத்தவராக இருந்தவர்  பாரதியார். 
கோ.கி. பாரதியார்  காலத்தில் தமிழகத்தில்  மிராஸ் வண்ணம் பிராம்மணர்களில் ஒருத்தர் இரண்டு பேர் உழவு செய்யும் ஆள்காரர்களை ரொம்பவும் கொடுமைப்படுத்தியதையும், அப்படியும் அந்த எளிய ஜனங்கள் எதிர்த்துச் சண்டை போடாமல், ''இப்படித்தான் நம் ஜன்மா'' என்று சகித்துக்கொண்டு வாழ்ந்ததையும்  அறிந்தவர்.   எந்த ஜாதியரானாலும் பக்திச் செல்வத்தைக் குறைவறப் பெற்று ஈச்வரனு டனேயே இரண்டறக் கலக்கும் உன்னத நிலைவரை போய்விட முடியும் என்று காட்டவே அவர் நேரில் கண்ட நிலவரத்தை நாடகத் திறமையில் ஒன்றாகச் சேர்ந்து வேதியர் பாத்திரத்தை சிருஷ்டித்திருக்கலாம்.   பறைத் துடவை பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளாக ஆக்கி அவரிடம் கொடுமைப்படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே சீன்களைக் கற்பனைப் பண்ணி அருமையான சிவ பக்தி பாடல்களை புகுத்தி நந்தன் சரித்திரக் கீர்த்தனையாகப் பாடி இருக்கிறார்.

இன்னும் சில  ருசிகர தகவல்கள் அடுத்த பதிவில்.

Saturday, January 30, 2021

SURDAS

 

ஸூர் தாஸ்          J K    SIVAN 


          8  எப்படிச் சொல்வேனடி??

உணர்ச்சியின் உச்சத்தில் திளைத்திருக்கும் போது பேச்சு வராது என்பது நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவமானது. புரிகிறது எனக்கு. வாய் பேச வரவில்லையே ? பேச  மறந்து போய்விட்டேனா? பேச தெரிந்தும் வார்த்தைகளே அகப்படவில்லையா ? திடீரென்று   ஊமையாகிவிட்டேனா ? மற்ற நேரத்தில் எல்லாம் பொட்டுக் கூடை பேச்சு பேசும் என் வாய் அந்த கறுப்புப் பயல் கிருஷ்ணனைப் பற்றி பேச நினைக்கும் போது மட்டும் ஏன் இப்படி மக்கர் செய்கிறது? நெஞ்சில் நிறைந்தது வாயில் வரவில்லையே? என்ன  காரணமாக  இருக்கும்? ஒருவேளை அவனது பெருமைகளை அருமைகளை, அதீத செயல்களை நினைத்தால் இந்த மாபெருங் கருணா சமுத்திரத்தை எந்த வாய்ச் சொற்களால் அளந்து சொல்லமுடியும் என்ற மலைப்பா? திகைப்பா? பிரமிப்பா? 

சரி, அந்த பயல் சிறு குழந்தை தானே, சுலபத்தில் அவனை விஷ  மூட்டி கொன்றுவிடலாம். அது ஒரு  சுண்டைக் காய் வேலை என்ற திமிரோடு வந்த பூதகிக்கு , ''இந்தா எனக்கு பால் ஊட்ட வந்த    ''தாயென வந்த பேயே, உனக்கு என் பரிசு என்று அவள் உயிரையே குடித்து விட்டு பொக்கை வாய் சிரிப்பைக் காட்டியதை எந்த வார்த்தைகளால் விவரிப்பேன்?

சர்வ வேதங்களும் சகல உபநிஷதங்களும் , மகரிஷிகளும் ஞானிகளும் அவனை முழுமையாக விவரிக்க திணறும்போது, ஒரு சாதாரண கோபி, யசோதா எனும் தாய்     'இனி எப்படி வெளியே சென்று விஷமம் பண்ணுவாய் என பார்க்கிறேன்''     என்று அவன் கண்களில் நீர் ததும்ப  கெஞ்ச கெஞ்ச , அவனை ஒரு சிறு கயிற்றால் வயிற்றில் கட்டினதை எப்படி விவரிப்பேன்?

''அதிசயம்'' என்ற வார்த்தையை யார் கண்டுபிடித்தது?  . இந்தா ஐயா உனக்கு ஒரு பிடி சர்க்கரை அதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்ல வழியில்லையே! பல காலம் கம்சனால் சிறையில் வாடிய உக்கிரசேனனை, கம்சனைக் கொன்று மதுராபுரியை மீட்டு, மீண்டும் ராஜாவாக் கினாயே, எப்படி?

பவ்யமாக மரியாதையோடு, வணங்கி, உன் தலையைக் குனிந்து    ''நீங்களே மீண்டும் எம்அரசனாக ஆள வேண்டும்'' என்றாயே அதை எந்தவார்த்தையால்விவரிப்பேன்? மேலே சொன்னதை மட்டுமே தானே திருப்பி திருப்பி சொல்ல முடிகிறது? அது அந்த உக்கிரசேனனின் உணர்ச்சியையோ, உன் கருணையையோ விவரித்ததாக ஆகுமா?    

சரி, அதை விடுவோம். ஜராசந்தன் பல ராஜாக்களை வென்று அடிமைப்படுத்தி சிறையில் அடைத்து வைத்து வாட்டினபோது, அவனை பீமனைவிட்டு கொல்லச்செய்து, அந்த ராஜாக்களை மீட்டாயே அப்போது அவர்கள் உன்னை வாழ்த்தினதை எத்தனை வார்த்தைகளில், எந்தெந்த வார்த்தைகளில் சொல்வது?, யாரால்முடியும்?

கிருஷ்ணனாக, நீசொன்னதை, ராமனாக நீ செய்ததையாவது சொல்வோம் என்றால், ஒரு சின்ன சம்பவத்தை கூட சொல்ல முடியவில்லையே. உதாரணமாக தனது கணவர் ரிஷி கௌதமர் இட்ட சாபத்தில் பல வருஷங் கள் கல்லாக மாறி வாடிய அஹல்யாவை ஒரு நொடியில் உன் காலடியால் மீண்டும் உயிர்ப் பித்தாயே அவள் அப்போது கடல் மடையாக கொட்டிய வார்த்தைகளை வெறும் அர்த்தமற்ற, நாம்  அடிக்கடி காரணமில்லாமல் நன்றி உணர்ச்சியே இல்லாமல் சொல்லும்     ''தேங்க்ஸ்'' என்ற வார்த்தையால் சொன்னால் சரியா? முறையா? அடுக்குமா? நியாயமா?

எப்போதோ நாராயணனாக,  கஜேந்திரனை முதலை வாயிலிருந்து கண நேரத்தில் மீட்டாயே அதையாவது விவரிக்கலா மென்றால் அது கூட முடியவில்லையே கிருஷ்ணா!!   . கஜேந்த்ரனின் நன்றி  உணர்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் அவனைவிட பெரியதாக இருக்கும் போல் இருக்கிறதே. நான் எங்கே போவேன்?

விடாத மழையில் அந்த தொத்தல் குடிசை  கூரைகள்  காற்றில் பறந்து விழுந்த போது உடனே ஒரு கூரை வேய்ந்தாயே, அப்போது அந்த ஏழை பக்தர் நாமதேவர் வாய் பிளந்து ''பாண்டு ரங்கா ஆஆஆ'' என்று அடி வயிற்றிலிருந்து ஒலித்தாரே , அதன் பின் ஒளிந்து கொண்டி ருந்த நன்றி உணர்ச்சி களை எந்த வார்த்தை களால், எப்படி எழுத்தால் விவரிப்பேன் சொல் ?

மேலே சொன்னதெல்லாம் நான் எழுப்பும் கேள்விகள் அல்லவேஅல்ல, கண்ணில்லாத சூர்தாஸ் அருமையான ப்ரஜ்பாஸி எனும் பழைய வடமொழியில் எவ்வளவு அழகாக கேட்கிறார். அது எந்த மொழி வார்த்தை களாக இருந்தால் என்ன?

மனதில் நிரம்பி வழியும் என் பிரார்த்தனை களை புரிந்து ஏற்றுக் கொள் கிருஷ்ணா. என் வார்த்தைகள்  என்னால் முடிந்தவரை தான் அதை சொல்ல முடிந்தது அவ்வளவுதான்'' என்கிறார் சூர்தாஸ் இந்த பாடலில். எனக்கு பிரிஜ்பாசி வடமொழிகள் எதுவும்  தெரியாது. யாரோ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை வைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு கிருஷணனை , என்னையே  சூர்தாசாக நினைத்துக்கொண்டு மனதில் தோன்றியதை எழுதுகிறேன். 

The voice falters
when it sings of the deeds of the Lord
who's an ocean of mercy.
He gave guileful Putana, who posed as his mother, a
mother's reward!
He of whom the Vedas and the Upanishads sing as the Unmanifest,
let Yashoda bind him with a rope,
lamented Ugrasena's grief,
and after killing Kansa made him king
paying him obeisance, bowing low;
Freed the kings held captive by jarAsandha
at which the kingly hosts sang his praises;
removing Gautama's curse
he restored life to stone-turned Ahalya:'
all in a moment he rescued Braj's ruler from the sea-monster running to his
aid as a cow to her calf,"
he came hastening to rescue the king of the elephants;
he got Namadeva's hut thatched.
says Suradasa, O, make Hari hear my prayer


CHIRANJEEVI

 


சிரஞ்சீவிகள் தெரியுமா?  -   J K  SIVAN  

திடீர்னு  ஒரு ஸ்லோகம் நினைவுக்கு வந்தது.  வாரா வாரம்  சனிக்கிழமை எண்ணெய்  தேய்த்து குளிப்பாட்டும்போது  அம்மா  தொடைகளில்  ஏழு ஏழு  எண்ணெய்  சொட்டு  புள்ளிகள் வைத்து சொல்லும் ஸ்லோகம் காதில் ஒலிக்கிறது.

''அஸ்வத்தாமா,  பலி ,  வ்யாஸா,  ஹநுமான்ச்சா,  விபீஷணா,   க்ருபா,  பரசுராமா,  ஸப்ததே சிரஞ்சீவின: ''

இந்த  ஏழு பேரைப் போல  என்றும்  மரணமில்லாமல்   நானும் சிரஞ்சீவியாக இருக்கவேண்டுமாம்.  நான் மட்டுமல்ல  என் சகோதரர்கள் இருவரையும் அப்படி  இருக்க வேண்டி தான்  எண்ணெய்  தேய்த்து குளிப்பாட்டுவாள்.  அம்மா  வாக்கு  கொஞ்சம் பலித்து  நான்  82ல் இருக்கிறேன். என் மூத்த அண்ணா 87+  நிச்சயம் நாங்கள் சிரஞ்சீவிகள் இல்லை.  சஞ்சீவி மூலிகை  சாப்பிடாதவர்கள்.

நல்ல வேளை.  நாம்  வாழ்த்துவது எல்லாமுமே  பலனளிப்பதில்லை. நாம்  ரிஷிகள் இல்லை.  யார்  நம்மை  நமஸ்கரித்தாலும்  காலில் விழுந்து வணங்கினாலும்  '' சிரஞ்சீவியாக  இரு''  என்று  வாழ்த்துபவர்களை இப்போதெல்லாம் அதிகம் காணோம்.  என்  இளையவயதில் நிறைய பேர் இப்படி  வாழ்த்துபவர்கள். அப்படி எல்லோரும்  சிரஞ்சீவியாகிவிட்டால்??   அப்பப்பா.  நினைத்துக் கூட  பார்க்க முடியவில்லை.  உலகம் கும்பலைத்  தாங்காது.  

பெண்களை  ''சௌபாக்கியவதி''யாக இரு என்று  அதேபோல்  வாழ்த்துவது வழக்கம். அதால்  ஆபத்து இல்லை. எல்லா பெண்களும் என்றும் சௌபாக்கியவதிகளாக இருக்க நானும்  வேண்டுகிறேன். வாழ்த்துகிறேன். 

சிரஞ்சீவி  என்றால் என்ன.  யாரோ  தெலுங்கு நடிகர் போல இருக்கணுமா?  

ஸமஸ்கிருதத்தில் चिर.  chira ,  சிர என்றால்  ரொம்ப நாள், பல்லாண்டு,  எனப் பொருள்..ஆகவே சிரஞ்சீவி என்பது நிலையாக நீண்ட காலம் வாழ்வது.   சாகாவரம் பெறுவது.  அப்படி  எல்லோரும் சாகாவரம்
பெற்றதில்லை.  ஏழுபேர்  சிரஞ்சீவி என்று புராணம்  ஒப்புக்கொள்கிறது.   இந்த  ஏழு சிரஞ்சீவிகள் யார்? 

விஷ்ணுவின் தசாவதாரத்தில்  ஐந்தாவது அவதாரம்   குள்ள  வாமனன்.   மூன்றடி மண் கேட்டு  மஹாபலி சக்ரவர்த்தியை  (கொல்லாமல் ) பாதாளத்தில் அழுத்தியவன்.  மஹாபலி  பிரகலாதனின் பேரன். ரொம்ப நல்லவன். நன்றாக நாட்டை ஆண்டவன். கேரளன் . ஓணம் பண்டிகை அன்று அவனுக்கு வருஷா வருஷம் வரவேற்பு.  மஹாபலி ஒரு சிரஞ்சீவி. 

இன்னொரு  சிரஞ்சீவி  பரசுராமன்.   மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்.   ரிஷி ஜமதக்னி குமாரன். தந்தையின் கட்டளைப்படி தாயின்  ''சிரம் சீவி'' யவன்  சிரஞ்சீவியாகிவிட்டான்.  கார்த்தவீர்யனை வென்றவன்.   க்ஷத்ரியர்கள் அக்கிரமத்தை அடக்கியவன்.  அவனும் கேரள சம்பந்தப்பட்டவன்.  ராமரோடு மோதி தனது  கர்வம்  அடங்கியவன்.  கேரளாவுக்கு பரசுராம க்ஷேத்ரம் என்று இன்றும் பெயர்.   பரசுராமன் என்ற பேர் கொண்ட நிறைய  மலையாளிகள்  இருக்கிறார்கள்.    

விஷ்ணுவின் இன்னொரு அவதாரமான ராமனின் தூதன்  ஆஞ்சநேயன்.  பராக்ரமன். புத்திசாலி. பலசாலி வாயுபுத்திரன்.  சுந்தரன் என்ற அழகன்.  சுந்தரகாண்ட நாயகன்.   அவன் இல்லையென்றால்  ராமாயணம் இல்லை.  அவன் ஒரு  சிரஞ்சீவி.

ராமாயணத்தில் இன்னொரு முக்கிய பாத்திரம் நல்ல  ராக்ஷசனான  விபீஷணன்.  சீதையை அபகரித்து தவறு என்று அவளை மீண்டும் ராமனிடம் சேர்ப்பித்து மன்னிப்பு கேள்  என்று சொல்லி யதால்  அண்ணன்  ராவணனால்  விரட்டப் பட்டவன்.  ராவணன்  இந்திரஜித் எனும் மேகநாதன்  ரஹஸ்ய  சக்திகளை ராமனுக்கு அறிவித்து  ராவண வதத்துக்கு காரணமானவன்.  அவனால் தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நமக்கு இன்றும் தரிசனம் தருகிறார்.   அவன் ஒரு சிரஞ்சீவி. 

மஹாபாரதத்தில் ஒரு முக்கியமான பாத்திரம்  துரோணாச்சாரியார். ரிஷி பாரத்வாஜர் மகன். துரோணர் மகன் அஸ்வத்தாமன்.  அஸ்திர வித்தையில் கை  தேர்ந்தவன்.  துரியோதனனுக்கு  நன்றிக்கடன் பட்டு உழைத்தவன். அவன் இழந்த   தவவலிமை மீண்டும் பெற  தவம் இன்னும்   செய்துகொண்டிருக்கிறான். அவன் ஒரு சிரஞ்சீவி.  பாண்டவ வம்சத்தை  அழித்தவன் என்று சொல்லலாம்.

துரோணருக்கு தனது  சகோதரி  கிருபியை  மணமுடித்து  அவருக்கு  கௌரவர்கள் அரண்மனையில் தநுர் சாஸ்திரம் கற்பிக்க  ஆச்சார்யனாக  பணிபுரிய ஏற்பாடு செய்தவர்  கிருபாச்சார்யர்.. எவராலும் வெல்லமுடியாத  தனுர் வித்தை நிபுணர். அவர் ஒரு சிரஞ்சீவி.

ஏழாவதாக  முக்கியமானவர்  வேத வியாசர்.  அவரே விஷ்ணு அம்சம் என்று விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்கிறது.  மஹா பாரதம், பாகவதம்  பதினெட்டு புராணங்களை நமக்கு அளித்தவர வேத வியாசர். அவர் ஒரு சிரஞ்சீவி.

மேலே  சொன்ன ஏழுபேரும்  விஷ்ணு சம்பந்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  எட்டாவது சிரஞ்சீவியாக  மார்க்கண்டேயனை சொல்வது வழக்கம்.  எமனிடமிருந்து தப்பியவன்.  சிவனால் உயிர் பிழைத்தவன்.
 சிவபக்தன்.

நாம்  நிச்சயம்  சிரஞ்சீவிகளாக  விரும்பமாட்டோம்.  இந்த   உலகின் துன்பங்கள் ஜாஸ்தி பார்த்துவிட்டோம். போகப்போக  இன்னும்  கஷ்டம் தான் அதிகம்,.  பேங்க் வட்டியை குறைத்துக்கொண்டு போகும். விலைவாசி அதே வேகத்தில் உயரும். கத்திரிக்காய் வாங்கக்கூட  நம்மால் முடியுமா  என்று யோசிக்கவேண்டி வரும். நடுநடுவே  கொரோனா மாதிரி ஏதாவது வீட்டோடு முடக்கி போட்டுவிடும்.  இந்த நிலையில்  சிரஞ்சீவியா?? ஐயையோ . நான் இந்த ஆட்டத்தில் இல்லை.

VETRI VERKAI

 



வெற்றி வேற்கை/நறுந்தொகை    -      J K   SIVAN 
அதி வீர ராம பாண்டியன்.

                அருமையான ஒரு பாண்டியன்.

ஆயிரமாயிரம் வருஷங்களாக   தஞ்சாவூர் ஜில்லா  எல்லையில்  கடலோரத்தில் இப்போது இருக்கும் ஒரு ஊர்  அதிராம்பட்டினம். அதில் ஒரு ராஜா இருந்தான். பெயர்  அதிவீர ராம பாண்டியன்.  அவன் பெயரால் அது அதிவீரராம பட்டினம்  என்று இருந்து சுருங்கி  அதிராம்பட்டினமாகிவிட்டது.  ராஜா  பிரபலமான எழுத்தாளனாக  இருக்கிறான்.  கொஞ்சம்  பலான  விஷயங்கள்  பற்றியும் ஆராய்ந்து புத்தகம்  எழுதி இருக்கிறான். நாம் அதைத் தொடப் போவதில்லை.இவன் பெயரில் ரெண்டு மூன்று பேர் இருக்கிறார்கள்.  


இந்த ராஜாவை முதலாம் அதிவீர ராம பாண்டியன்  பிற்கால பாண்டிய மன்னன்.  (1564-1606) என செப்பேடுகள் நிறைய சொல்கிறது.  இலக்கியப்பணியோடு  கோவில் திருப்பணிகளும்  செய்தவன்.   ஸமஸ்க்ரிதம்  அறிந்தவன்.  ஹர்ஷன் எழுதிய  நைஷதம்  தமிழில் இந்த ராஜாவின்  நைடதம்  ஆகும். எனக்கு  ரொம்ப பிடித்தது  அவனுடைய  வெற்றி வேற்கை,  அற்புதமான ஒரு நூல். இதற்கு இன்னொரு பெயர்  நறுந்தொகை.    தென்காசியில்  உள்ள அருமையான சிவன் கோவில் இவன் கட்டியது .  அதிவீர ராம பாண்டியனின் ஒரு அருமையான  நறுந்தொகை  செய்யுள்  உதாரணத்துக்கு கொடுக்கிறேன். யாரையும்  சும்மா  ஆளைப்பார்த்து  எடை போடாதே என்பதை விளக்குகிறது இந்த பாடல்.


''தேன்படு பனையின் திரள்பழத்து ஒரு விதை
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.

அர்த்தம்:    பனம்பழம்  சாப்பிட  இனிப்பாக சுவையாக இருக்கும். அதன் விதை பெரியது. பெரிய உயரமான மரமாக வளரும். என்ன பிரயோஜனம். ஒரு ஆள் கூட  வெயிலுக்கு அதன் கீழே நிழல் பெற முடியாதே.   ஆல மர விதை அப்படி இல்லை. கடுகு மாதிரி தான் உருவம்.  அடேங்கப்பா, அது முளைத்து மரமானால் ஒரு பெரிய  ராஜா தனது யானை குதிரைப் படையோடு அதன் நிழலில்  இளைப்பாறலாம்.  ஆகவே  ஒருவனின் உருவத்தை  வைத்து இவன் பெரியவன்  இவன் சிறியவன் என்று  தப்பு கணக்கு போடுவது தான் தப்பு.

Friday, January 29, 2021

NATARAJA PATHTHU

 

நடராஜ பத்து  --    J K  SIVAN 

               
  9. ஒரே வழி

நண்பர்களே,  இதுவரை  பத்து பாடல்களில் எட்டு  அனுபவித்தோம். முருகேச முதலியாரின் நடராஜ பத்து ஒரு புதையல் நமக்கு. குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். அவர்கள் வாழ்வு இன்பகரமாக அமையும். பக்தி ரொம்ப அவசியம்.

இன்னும் ஒரே ஒரு பாடல் பாக்கி இருக்கிறது.  நாளை  முருகேச முதலியாரை வணங்கி அவர் ஆசியோடு விடைபெறுகிறோம்.

பாடல்  9 

'தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன
 தன் பிறவி உறவு கோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன 
தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன 
சீடர்கள் இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன,
 நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் 
எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.''

''பரமேஸ்வரா,  பாதியுமை பாகா,  நான் நன்றாக புரிந்து கொண்டு விட்டேன். ஞானம் வந்து விட்டது என்று கூட என்னால் மார் தட்டி சொல்லமுடியும். எப்படி என்கிறாயா?'' 
கேள்:
இந்த உலக வாழ்க்கையை ஒரு கணம் நன்றாக சிந்தித்தேன். என் மனதில் என்ன தோன்றியது தெரியுமா?
எனக்கு தாய் என்று ஒருவள், தந்தை என்று ஒருவன், கூடப்பிறந்ததுகள் சில,  திருதராஷ்டிரன் மாதிரி நூறு பிள்ளைகள் , உற்றார் உறவினர், ஊருக்கே  ராஜா, மலை மலையாக செல்வம் குவிந்து எங்கு பார்க்கினும் நிறைந்து -- இதெல்லாம் இருப்பதால் என்ன பயன் ?

எனக்கு முன்னே எத்தனை ராஜாதி ராஜன்கள், சக்ரவர்த்திகள் இந்த பூமியை ஆள்வதற்கு ரத்தம் சிந்தி சண்டை போட்டு ஜெயித்து ஆண்டார்களே, எங்கே அவர்கள்? எங்கே போனார்கள்?

எல்லாம் கற்றவன் என்று பெயர் பெற்றோ , என்னைச் சுற்றி அநேக எடுபிடிகள், சிஷ்ய கோடிகள் இருந்தோ என்ன பயன்?

உடலை வருத்தி, பல வருஷங்கள் முயன்று அலைந்து கற்ற பல சித்து வித்தைகள், பல நாட்கள் தூக்கமின்றி விழித்து கடைபிடித்த விரதங்கள்- இவற்றால் என்ன பயன்?

ஒன்றா இரண்டா, ஊரெல்லாம் சென்று எண்ணற்ற நதிகளில் மூழ்கி புண்ய ஸ்நானம் செய்தேனே -- அதாலாவது பயன் ஏதாவது உண்டா?

இதோ எமன் ஆளை அனுப்பி விட்டானே, ஓலை எனக்கு வந்து விட்டதே, நான் கிளம்ப வேண்டுமே, நான் போகாமல் தடுக்க மேலே சொன்ன ஏதாவது ஒன்று, அல்லது  ஒரு  ஜீவன்,  உதவுமா?

எங்கோ ஒரு ரேஷன் கடை கூட்டத்தில் உளுத்தம்பருப்பு, அதுவும் ஒரு கிலோவுக்காக, உபயோகமான நேரத்தை வீணடித்து கடைசியில் ''தீர்ந்து விட்டது. இன்று போய் நாளை வாராய்'' கேட்டு வந்தபோது அங்கே நான் கண்ட அனைத்து தலைகளில் ஏதாவது ஒன்று எனக்கு தெரிந்ததா, சொந்தமா, பந்தமா? அது போல் தான் எல்லாமே, ஒட்டாத உறவு, பந்தம், சொந்தம் , சொத்து, சுதந்திரம் எல்லாமே.

என் காதில் பட்டினத்தார் ஒலிக்கிறாரே நீங்களும் கேட்டு தெளிவு பெறுங்கள்:

''ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின் தாள் (ஒன்றே ) சதம் கச்சி ஏகம்பனே

உன்னருளால் உன் தாளை வேண்டி அடைய வேண்டியது மட்டும் தான் நான் செய்யவேண்டியது.

திருநீலகண்டா, சிதம்பரேசா , நீ என்னவேண்டுமானால் செய்து கொண்டிரு, யார் மீதோ, எதன் மீதோ உன் மனம் இருந்த போதிலும், தயவு செய்து உன் கடைவிழிப் பார்வையை மட்டுமாவது என் மீது வையேன். நான் தான் கெட்டியாக 'சிக்' கென உன்னிரு பொற்பாதங்களை பிடித்துக் கொண்டிருக்கிறேனே. வேறொன்றும் உதவாது எனக்கு. உன் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே... 
இது தான் நடராஜ பத்தின் 9 வது பதிக சாராம்சம். 


geethanjali

 கீதாஞ்சலி   -  தாகூர்  -      J K  SIVAN 


 
          12    ''இங்கே இருக்கிறேன். எங்கோ தேடுகிறாயே ?''

12. The time that my journey takes is long and the way of it long.
I came out on the chariot of the first gleam of light, and pursued my voyage
through the wildernesses of worlds leaving my track on many a star and planet.
It is the most distant course that comes nearest to thyself,
and that training is the most intricate which leads to the utter simplicity of a tune.
The traveller has to knock at every alien door to come to his own,
and one has to wander through all the outer worlds to reach the innermost shrine at the end.
My eyes strayed far and wide before I shut them and said `Here art thou!'
The question and the cry `Oh, where?' melt into tears of a thousand streams and
 deluge the world with the flood of the assurance `I am!'

ரவீந்திரநாத் தாகூரின் அற்புதமான கீதாஞ்சலி பாடல்களில் இது ஒன்று. அடிக்கடி படித்து ரசிப்பேன்.
''நான்  ஒரு  வழிப்போக்கன்.  தோளிலும்  தலையிலும் மூட்டையை மாற்றி மாற்றி சுமந்துகொண்டு பயணிக்கிறேன்.  
என் எதிரே வெகு நீண்ட பாதை, வளைந்து வளைந்து  முடிவில்லா மல்  எங்கோ செல்கிறது. அதை அடையும் நேரமோ கணக்கில் வராத அளவு நீண்டது.  கடிகார முள்  பன்னிரெண்டை பல முறை சுற்றவேண்டி இருக்கும்.  நான்  போய்  சேரும்  இடமும்  வெகு வெகு  வெகு தூரம்.  நான் விண்வெளியில் என் தேரில் ஜம்மென்று உட்கார்ந்துகொண்டு செல்கிறேன்.

பொழுது விடிந்து  சூரியனின்  பொன் கிரணங்கள்  இருளை நீக்கி,  என்னை வழி செலுத்துகிறது. நான் சந்தித்த முதல் சூரிய கிரணமே நான் பயணிக்க துவங்கிய தேர். என்னை நீண்ட பயணத்தில் செலுத்தும் தேர்.என் பாதையில்  என்னை சுற்றிலும் என்னென்னவோ உலகங்கள்,   விண்வெளி  மண்டலங்கள், நக்ஷத்திரங்கள்,  கிரஹங்கள்,  எங்கும்  நிசப்தம். குளிர்காற்று, இதமாக இளம் சூரியன் உதயமாவதை   அறிவிக்கும் சிவந்த கீழ்வானம். உலகமெனும் காடும் மேடும் என் வழியில் இருந்தால் தான் என்ன? 

நக்ஷத்திரங்கள் சந்திரன் காட்டும் ஒளியில் நிழல் ஏது? பயணம் தொடர்கிறேன்.

கிருஷ்ணா,  இந்த   நீண்ட  பாதையில்  என் தொலை தூர பயணம்  வெகு தூரம் என்னை  இட்டு சென்றாலும்   உன்னருகே தான்  கடைசியில்  கொண்டு சேர்க்கும்.    இந்த என் பிரயாண பயிற்சி கடினமானது, உன்னை நெருங்க நெருங்க உன் குழலோசை கொஞ்சம் கொஞ்சமாக என் செவியில் இன்பமாக பெருகுகிறதே. கடைசியில் உன்  எளிய இனிய புல்லாங்குழல் ஒலி உன்னை அடையாளம்  காட்டுமே..மனதில் நம்பிக்கை ஊட்டும் .

இது உன்னை நோக்கி செல்லும் நீண்ட  பாதை என்றாலும்  கிட்டத்தில் உன்னருகில் கொண்டு செல்லும். அனால்  அதற்கு  முன்பு எத்தனையோ இடையூறுகள் இருக்கத்தானே செய்யும்.  அவற்றை கடந்து தான்  செல்ல வேண்டும்.  பணிவும், பொறுமையும், விடா முயற்சியும் தேவைதான்.

உன்னைத் தேடிவர நான் பல பேரிடம் யோசனை அறிவுரை, உபதேசம் கேட்டவன்.  வழி கேட்டவன். எங்கெங்கோ சுற்றி அலைந்து எத்தனையோ கதவுகளை தட்டி வழி கேட்ட  பின்னால்  தானே   நான்  செல்லவேண்டிய   இடம்  தெரியவரும். என் கண்கள் உன்னை எங்கெங்கோ தேடின. காணவில்லை.    தேடிக் கொண்டே தான் இருந்தேன். கடைசியில் கண்மூடி இங்கு தான் இருப்பாய் என்று அறிந்தேன், ஆமாம் கண்ணா,   என்னுள் நீ என்றும் இருக்கிறாய் என மெதுவாக உணர்ந்தேன்.    வெளி உலகெங்கும் எதையெல் லாமோ  தேடி அலைந்து தான்  உள்  உலகில் நீ இருப்பது புரிகிறது. அது தெரியும் வரை ''கிருஷ்ணா, நீ எங்கே எங்கே'' என்று உரக்க கத்தினேன், அழுதேன்.  என் கண்ணீர்  பல நதிகளாகி, ப்ரவாஹமாக பெருகி,   ஒரு ப்ரளயமாக  மாறி     ''இதோ இங்கேயே இருக்கி றேனே. பார்க்க மாட்டேன் என்கிறாயே ...'' என்ற உன் நம்பிக்கை தரும் குரல் எல்லோரும் கேட்க,  காற்றாக, புயலாக, கடலலையாக, விண்ணின் மின்னலாக, இடியாக, ப்ரளயமாக, சுனாமியாக, எண்ணற்ற தாரகைகளாக, தேவதைகளாக, கிருஷ்ணா, நீ எனக்கு உறுதியளித்ததில் என்னை மறந்தேன்.

என்மனக்கடலில்  நீ  நிறைந் திருப்பதை உணர்ந்தேன். இனி வார்த்தைகள் தேவை இல்லை.    எங்கும் நிறைந்த நீ என்னுள்ளும் இருப்பதை  உணர்ந்துவிட்டேன்.                        

 

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்   -       J K   SIVAN   


''இரு மஹாத்மாக்கள் சந்திப்பு''
        
ஜனவரி 30.   இதே நாளில்  73 வருஷங்களுக்கு முன்பு  இந்தியாவே அதிர்ச்சியில் ஆழ்ந்த மாபெரும்  இழப்பு நேர்ந்தது. மஹாத்மா  காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நினைவாகவே நடந்து கொண்டிருந்தேன்.  ஒரு குரல் கேட்டது.
'ஹாப்பி நியூ இயர் சார்'. 
'ஆஹா   உங்களுக்கும்  அதே''     என்  வாய் பதிலளித்ததே தவிர என் அருகே வந்து,  இப்படி,   ஒரு மாசம் லேட்டாக  வாழ்த்திய  ஆசாமி யார் என்று மனதுக்குள் ஒரு போராட்டம்.  எங்கே பார்த்திருக்கிறேன்?. பழகிய முகமாக இல்லையே?  ஆள் மாறாட்டமாக  இந்த வாழ்த்தா?  எங்கே, எப்போது, ...... யார்  இவர்?.....
என்னோடு  நங்கநல்லூர்  பார்க்கில்  அவரும்   கூடவே  நடந்தார். 

' தினமும் இந்த பார்க்குக்கு வருவீர்களா''  என்று பேச்சு கொடுத்தார் '
'ஆமாம்'
'உங்களோடு  கோவில்களுக்கு  ஒரு முறை  என் சகோதரியோடு வந்திருந்தேன்''
''ஓ அப்படியா.  எங்கோ  பார்த்தமாதிரி இருக்கிறதே என்று யோசித்தேன்.
''நான்  தான்  சார்  கபாலீஸ்வரன் ... மறந்துட்டீளா .  மதுரை...... என் தங்கை தான்  டீச்சர்  கமலா''
''ஓ    இப்போ  புரியறது...அடடா  கமலாவின் அண்ணா  அல்லவா நீங்கள்  அடையாளம் தெரியாமல் தடுமாறினேன்''
''இப்போ தாடி மீசை.  அதால் உங்களுக்கு  உடனே தெரியவில்லை அல்லவா?
'' அதனால் ஒருவேளை  இருக்கலாம்.''
''நான்  உங்களை தூரத்திலிருந்தே  அடையாளம் கண்டுகொண்டேன்.   நீங்கள் மாறவே இல்லை சார்.  நாம்  இதே  30ம் தேதி  ஜனவரி  2014 லே  கேரளா கோவில்கள்  சென்று பார்த்தோம்''
''ஆமாம்...  என் மனதிற்குள்  அது ஆறு ஏழு வருஷங்களுக்கு முன்னால் என்பது தெரிந்தது'' நான் ஏற்பாடு செய் து  16 பேரோடு  சென்ற   எத்தனையோ  யாத்திரைகள், புனித பயணங்களில்  அது  ஒன்று. 

''நெல்லிச்சேரியிலே  மத்தியானம்  சாப்பிட்டுட்டு  ரெஸ்ட்  எடுக்கும்போது  எல்லோருக்கும்   மஹாத்மா காந்தி    அங்கே  மஹா பெரிய வாளை சந்தித்தது பற்றி சொன்னீர்கள்.''

''ஆஹா,    பரவாயில்லையே  இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறீர்களே''

''சில சம்பவங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை அல்லவா. நீங்கள் சொன்னது கதை மாதிரி இருந்தது''
''ஓ '' என்றேன். என் மனத்தில்  அந்த சம்பவம் பற்றிய நினைப்பு  மீண்டும் திரையில் ஓடியதால்  உங்களுக்கும்  அந்த விஷயம் சொல்கிறேன். 
 ++++
 ஆயிற்று  கிட்டத்தட்ட  93-94  வருஷங்கள்.  நாள் எப்படி பறக்கிறது பார்த்தீர்களா?

அப்போது நமது நாடெங்கும்  ஒரு  புத்துணர்ச்சி.  இந்தியா சுதந்திரம் பெறவேண்டும். எப்பாடுபட்டாவது  அதை  அடைந்தே தீருவோம். அமைதி வழி, அஹிம்சா வழியில்  மட்டுமே  என்ற  காந்திஜியின்  பின்னால் நாடு முழுதும்  தொண்டர்கள்.   டிவி,  போட்டோ கவரேஜ்,  வீடியோ,  மீடியா, பேனர்,  கட்  அவுட்  என்று  எதுவுமே   தெரியாத  காலம்.   காந்தி நாடு முழுதும்  ரயிலில் மூணாம்  கிளாஸில்  தான் பிரயாணித்தார்.
 
தென்னிந்தியாவுக்கு  1927 பிற்பகுதியில் காந்தி   வந்தார்.  யாரோ  சொல்லி  கேள்விப்பட்டு  வெகு ஆர்வமுடன் '' இந்த  பிரதேசத்தில் காஞ்சிபுரம்  மட  சங்கராச்சர்யார்  வந்திருக்கிறார்  என்கிறார்களே, அவரை நான் 
 பார்க்கவேண்டும்''   என்ற உந்துதல்  காந்திக்கு  ஏற்பட்டது. விசாரித்ததில்  அப்போது  விஜய  யாத்ரையில் காஞ்சி  மஹா பெரியவா  கேரளாவில்  நெல்லிச்செரி என்கிற  ஊரில்  தங்கியிருக்கிறார்  என்று அறிந்தார்.
 
காந்திஜி  பாலக் காட்டில் நெல்லிச்செரி சென்றநாள்  15.10.1927.
''இங்கே  காஞ்சி  பரமாச்சார்யர் எங்கே  தங்கியிருக்கிறார்?''
''பாபுஜி  அவர் அதோ  அந்த  மாட்டுத்  தொழுவத்தில் தான்  வாசம் பண்ணுகிறார்''
''மாட்டுத்  தொழுவத்திலா?  ஜகத்  குருவா?''  
''அவர்  எங்கும்  இது  போன்ற  இடத்தில்  தான்  தங்குகிற சந்நியாசி''

பசுமாட்டுத்  தொழுவத்தில்  வாசலில்  பெரிய  கும்பல் சேர்ந்துவிட்டது.  
வாசலில்  மஹாத்மா  காந்தி வந்திருக்கிறார் என்ற விஷயம்  உள்ளே  இருந்த பெரியவாளுக்கு சென்றதும் வாசல் வந்து  நின்ற  மகாத்மாவை பரமாச்சாரியார்  வெளியே வந்து வரவேற்றார்.   காந்திக்கு  இது  ஒரு  புது அனுபவம்.  காவி   பருத்தி  ஆடையில்  ஆதி சங்கரரின் வாரிசாக,   மாலை  வெயிலில்  முகம்  பொன்னிறமாக  ஜொலிக்கபுன்னகை  அணிந்து நின்ற  சிறிய உருவம்  காந்தியை ஒரு  கலக்கு கலக்கியது.  உருகிப்போய் விட்டார்.  இரு கரங்களும்   தானாகவே உயர்ந்தன.  சேர்ந்தன.அவற்றின் பக்தி த்வனி அலாதியாக  வெளிப்பட்டது,  பேச்சின்றி.  பேச்சுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆனந்தானுபவம்  காந்திக்கு .    
 
பரமாசார்யருக்கோ,   இந்த  நாடு  செய்த புண்யத்தால்  தோன்றி,  வெகு எளிமையின் சின்னமாக, சத்ய ஸ்வரூ பமாக நாட்டின் சுதந்திர  விழிப்பின்  தலைவன்,  இந்த மாபெரும்  தேசத்தில் ஒரு  ஏழை விவசாயியின்  கோலத்தைக்  கொண்டவரைச் சந்தித்ததில் மட்டற்ற  மகிழ்ச்சி.  
 
மகாத்மாவுக்கோ தெய்வீகத்தின், தெய்வத்தின், வேதகால உருவாக காட்சியளிக்கும் ஒரு  பரமாச்சார்யரை  சந்தித்ததில் ஆனந்தம்.  

''தாங்கள் அமர வேண்டும்'' என்றார்  மஹா பெரியவா ஆங்கிலத்தில்.

தனது மதிப்பையும்  மரியாதையும்  வணக்கத்தையும் காந்திஜி   ஆச்சர்யருக்கு  தலை குனிந்து  மனப்பூர்வமாக  அளித்தார். அவரும் பெற்றுக்கொண்டார். அவர் அருகிலேயே காந்திஜி தரையில் அமர்ந்தார்.  சுற்றியிருந்தோர் அமைதியாக  தூரத்தில்   வெளியில்  நின்றுகொண்டு  இந்த அற்புதத்தை கண்ணாரக்  கண்டு ஆனந்தித்தனர்.
   
நிசப்தத்தில்  பரிபூர்ண  அமைதியில் இரு  உயர்ந்த  உள்ளங்கள் கலந்தன.  ஒன்றின.  சில நிமிஷ  ஆன்ம விசாரத்திற்குப்  பிறகு, சம்பாஷணை   துவங்கியது.

''ஸம்ஸ்க்ரிதத்திலேயே  பேசுவோமா?'' என்றார்  மஹா பெரியவா .

''நீங்கள்  ஸம்ஸ்க்ரிதத்திலேயே   பேசுங்கள்.  நான்  புரிந்துகொள்ள முடியும்.  நான்  ஹிந்தியில்  பதில் சொல்கிறேனே.'' என்றார்  தேச பிதா.

''ஆஹா,  அப்படியே  பேசுவோமே. எனக்கும்  அந்த பாஷையில்  நீங்கள்  பேசுவது  புரிந்து கொள்ள முடியும்.''

மூன்றாம்  மனிதர்  ஒருவர்  இல்லாமல்  இரு மனித  ரூப  தெய்வங்களும்  ஒரு மணி நேரத்துக்கும்  மேலாக  சம்பாஷித்தனர்.  இன்று  வரை  என்ன பேசினார்கள்  இருவரும்  என்று  ஒருவருக்கும்  தெரியாது.

காந்திஜியோடு  உடன்  வந்திருந்த  ராஜாஜி  வெளியே  மற்றவர்களோடு சேர்ந்து   நின்று கொண்டிருந்தார்.   மாலை நேரம்  6 மணியாகப் போகிறது.  காந்திஜி  இரவு  உணவு  அருந்தும்  நேரம்  அது.  6 மணிக்குப்  பின்  அவர்  எந்த  உணவும்  அருந்த மாட்டாரே.   ராஜாஜிக்கு  கவலை.  6  மணிக்கு சில  நிமிஷங்கள்  முன்பு  மாட்டுத்  தொழுவத்திற்குள்  நுழைந்தார்.  இருவரையும்  வணங்கிவிட்டு  

''பாபுஜி  நீங்கள்  உணவு  அருந்தும்  நேரம்''  என்று  நினைவூட்டினார்.
கைகளை  உயர்த்தி,  ''நிறுத்து''    என்ற  சைகையில்  காந்திஜி  ராஜாஜியிடம்  ''இந்த  மகானோடு  நான்  அனுபவித்த  சம்பாஷணையே   எனது  இன்றைய  உணவு.   உள்ளம்  வயிறு  இரண்டும் நிரம்பியிருக்கிறதே''  என்றார்,.

''சுவாமிஜி  நான்  விடைபெறுகிறேன்  நன்றி''
''எனக்கும்  ரொம்ப  சந்தோஷம்.  இந்தாருங்கள்'' .  ஒரு  பொன்னிற  ஆரஞ்சு பழத்தை   நீட்டினார்  மஹா பெரியவா..

''எனக்கு  ஆரஞ்சு  ரொம்ப  பிடிக்கும்.   மீண்டும் நன்றி''  என்று  புன்னகையோடு  பெற்றுக்கொண்டு சென்றார்  காந்திஜி.
 
அன்று  கோயம்பத்தூரில் ஒரு கூட்டம். காந்திஜி-மஹா  பெரியவா  என்ன  பேசினார்கள்  என்று  நிறைய பேர்  ஆவலாக  கேட்டதற்கு  தேச பிதா  கூட்டத்தில்  சொன்னது:   '' இது உண்மையிலேயே  எனக்கு  ஆன்ம திருப்தி அளித்த  ஒரு  சந்திப்பு.  எனது எத்தனையோ  கேள்விகளுக்கு ஜகத் குருவிடமிருந்து  விடை கிடைத்தது''
 
பல வருஷங்களுக்கு  அப்புறம், 1968ல் நவம்பர்  மாதம்  ஒரு  விழாவில்  மஹா  பெரியவாளிடம்  
சிலர்  நீங்கள் மகாத்மாவோடு  கேரளாவில் நெல்லிச்சேரியில்  சந்தித்து  பேசியது  பற்றி  சொல்லுங்கள்  என்று  கேட்டார்கள். 

'' காந்திஜி  பாலக்காடு  வருவதுற்கு  சில  நாட்கள்  முன்பு கொல்லப்பட்ட ஒரு  ஆர்ய சமாஜ்  துறவி  சுவாமி  ஸ்ரத்தானந்தாவைப்  பற்றி பேச்சு வந்தது. அப்போது காந்திஜி   இத்தகைய சம்பவங்கள்  எதிர்காலத்திலும்  நேரிடலாம். கொலையாளிகள்  மீது  எனக்கு  எக்காலத்திலும்  வெறுப்போ,கோபமோ  பகை உணர்ச்சியோ தோன்றாமல் அவர்களை  அன்போடு  அணைக்க எண்ணம்  உருவாக வேண்டும் என்பது என் வேண்டுதல் சுவாமி. இதைபெற  நான்  முயற்சிப்பேன் ''  என்று  கூறினார்.  அவ்வாறே தான்  1948 ஜனவரி 30 அன்று நடந்தது''

 பரமாச்சார்யர்  தொடர்ந்தார்.  ''இந்த 'பூலோகத்தில்  இப்படி ஒரு  அபூர்வமான பகைவனுக்கும்  அருள்வதற்கு  நெஞ்சம்  வேண்டும்'' என்று பாரதியார் வாக்குக்கு  உதாரணமாக திகழ்ந்தவர்  மஹாத்மா காந்தி '' என்று  தோன்றியது.  சத்தியத்தை கடைப்பிடித்தவர்  ஒருவரை  சந்திப்பது அரிது '' 
+++
அப்புறம்  நானும் கபாலீஸ்வரனும்  பார்க்கில்  எதைப்பற்றி  என்னவெல்லாம் பேசினோம் என்பதா இங்கு முக்கியம்?


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...