Saturday, January 30, 2021

CHIRANJEEVI

 


சிரஞ்சீவிகள் தெரியுமா?  -   J K  SIVAN  

திடீர்னு  ஒரு ஸ்லோகம் நினைவுக்கு வந்தது.  வாரா வாரம்  சனிக்கிழமை எண்ணெய்  தேய்த்து குளிப்பாட்டும்போது  அம்மா  தொடைகளில்  ஏழு ஏழு  எண்ணெய்  சொட்டு  புள்ளிகள் வைத்து சொல்லும் ஸ்லோகம் காதில் ஒலிக்கிறது.

''அஸ்வத்தாமா,  பலி ,  வ்யாஸா,  ஹநுமான்ச்சா,  விபீஷணா,   க்ருபா,  பரசுராமா,  ஸப்ததே சிரஞ்சீவின: ''

இந்த  ஏழு பேரைப் போல  என்றும்  மரணமில்லாமல்   நானும் சிரஞ்சீவியாக இருக்கவேண்டுமாம்.  நான் மட்டுமல்ல  என் சகோதரர்கள் இருவரையும் அப்படி  இருக்க வேண்டி தான்  எண்ணெய்  தேய்த்து குளிப்பாட்டுவாள்.  அம்மா  வாக்கு  கொஞ்சம் பலித்து  நான்  82ல் இருக்கிறேன். என் மூத்த அண்ணா 87+  நிச்சயம் நாங்கள் சிரஞ்சீவிகள் இல்லை.  சஞ்சீவி மூலிகை  சாப்பிடாதவர்கள்.

நல்ல வேளை.  நாம்  வாழ்த்துவது எல்லாமுமே  பலனளிப்பதில்லை. நாம்  ரிஷிகள் இல்லை.  யார்  நம்மை  நமஸ்கரித்தாலும்  காலில் விழுந்து வணங்கினாலும்  '' சிரஞ்சீவியாக  இரு''  என்று  வாழ்த்துபவர்களை இப்போதெல்லாம் அதிகம் காணோம்.  என்  இளையவயதில் நிறைய பேர் இப்படி  வாழ்த்துபவர்கள். அப்படி எல்லோரும்  சிரஞ்சீவியாகிவிட்டால்??   அப்பப்பா.  நினைத்துக் கூட  பார்க்க முடியவில்லை.  உலகம் கும்பலைத்  தாங்காது.  

பெண்களை  ''சௌபாக்கியவதி''யாக இரு என்று  அதேபோல்  வாழ்த்துவது வழக்கம். அதால்  ஆபத்து இல்லை. எல்லா பெண்களும் என்றும் சௌபாக்கியவதிகளாக இருக்க நானும்  வேண்டுகிறேன். வாழ்த்துகிறேன். 

சிரஞ்சீவி  என்றால் என்ன.  யாரோ  தெலுங்கு நடிகர் போல இருக்கணுமா?  

ஸமஸ்கிருதத்தில் चिर.  chira ,  சிர என்றால்  ரொம்ப நாள், பல்லாண்டு,  எனப் பொருள்..ஆகவே சிரஞ்சீவி என்பது நிலையாக நீண்ட காலம் வாழ்வது.   சாகாவரம் பெறுவது.  அப்படி  எல்லோரும் சாகாவரம்
பெற்றதில்லை.  ஏழுபேர்  சிரஞ்சீவி என்று புராணம்  ஒப்புக்கொள்கிறது.   இந்த  ஏழு சிரஞ்சீவிகள் யார்? 

விஷ்ணுவின் தசாவதாரத்தில்  ஐந்தாவது அவதாரம்   குள்ள  வாமனன்.   மூன்றடி மண் கேட்டு  மஹாபலி சக்ரவர்த்தியை  (கொல்லாமல் ) பாதாளத்தில் அழுத்தியவன்.  மஹாபலி  பிரகலாதனின் பேரன். ரொம்ப நல்லவன். நன்றாக நாட்டை ஆண்டவன். கேரளன் . ஓணம் பண்டிகை அன்று அவனுக்கு வருஷா வருஷம் வரவேற்பு.  மஹாபலி ஒரு சிரஞ்சீவி. 

இன்னொரு  சிரஞ்சீவி  பரசுராமன்.   மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்.   ரிஷி ஜமதக்னி குமாரன். தந்தையின் கட்டளைப்படி தாயின்  ''சிரம் சீவி'' யவன்  சிரஞ்சீவியாகிவிட்டான்.  கார்த்தவீர்யனை வென்றவன்.   க்ஷத்ரியர்கள் அக்கிரமத்தை அடக்கியவன்.  அவனும் கேரள சம்பந்தப்பட்டவன்.  ராமரோடு மோதி தனது  கர்வம்  அடங்கியவன்.  கேரளாவுக்கு பரசுராம க்ஷேத்ரம் என்று இன்றும் பெயர்.   பரசுராமன் என்ற பேர் கொண்ட நிறைய  மலையாளிகள்  இருக்கிறார்கள்.    

விஷ்ணுவின் இன்னொரு அவதாரமான ராமனின் தூதன்  ஆஞ்சநேயன்.  பராக்ரமன். புத்திசாலி. பலசாலி வாயுபுத்திரன்.  சுந்தரன் என்ற அழகன்.  சுந்தரகாண்ட நாயகன்.   அவன் இல்லையென்றால்  ராமாயணம் இல்லை.  அவன் ஒரு  சிரஞ்சீவி.

ராமாயணத்தில் இன்னொரு முக்கிய பாத்திரம் நல்ல  ராக்ஷசனான  விபீஷணன்.  சீதையை அபகரித்து தவறு என்று அவளை மீண்டும் ராமனிடம் சேர்ப்பித்து மன்னிப்பு கேள்  என்று சொல்லி யதால்  அண்ணன்  ராவணனால்  விரட்டப் பட்டவன்.  ராவணன்  இந்திரஜித் எனும் மேகநாதன்  ரஹஸ்ய  சக்திகளை ராமனுக்கு அறிவித்து  ராவண வதத்துக்கு காரணமானவன்.  அவனால் தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நமக்கு இன்றும் தரிசனம் தருகிறார்.   அவன் ஒரு சிரஞ்சீவி. 

மஹாபாரதத்தில் ஒரு முக்கியமான பாத்திரம்  துரோணாச்சாரியார். ரிஷி பாரத்வாஜர் மகன். துரோணர் மகன் அஸ்வத்தாமன்.  அஸ்திர வித்தையில் கை  தேர்ந்தவன்.  துரியோதனனுக்கு  நன்றிக்கடன் பட்டு உழைத்தவன். அவன் இழந்த   தவவலிமை மீண்டும் பெற  தவம் இன்னும்   செய்துகொண்டிருக்கிறான். அவன் ஒரு சிரஞ்சீவி.  பாண்டவ வம்சத்தை  அழித்தவன் என்று சொல்லலாம்.

துரோணருக்கு தனது  சகோதரி  கிருபியை  மணமுடித்து  அவருக்கு  கௌரவர்கள் அரண்மனையில் தநுர் சாஸ்திரம் கற்பிக்க  ஆச்சார்யனாக  பணிபுரிய ஏற்பாடு செய்தவர்  கிருபாச்சார்யர்.. எவராலும் வெல்லமுடியாத  தனுர் வித்தை நிபுணர். அவர் ஒரு சிரஞ்சீவி.

ஏழாவதாக  முக்கியமானவர்  வேத வியாசர்.  அவரே விஷ்ணு அம்சம் என்று விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்கிறது.  மஹா பாரதம், பாகவதம்  பதினெட்டு புராணங்களை நமக்கு அளித்தவர வேத வியாசர். அவர் ஒரு சிரஞ்சீவி.

மேலே  சொன்ன ஏழுபேரும்  விஷ்ணு சம்பந்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  எட்டாவது சிரஞ்சீவியாக  மார்க்கண்டேயனை சொல்வது வழக்கம்.  எமனிடமிருந்து தப்பியவன்.  சிவனால் உயிர் பிழைத்தவன்.
 சிவபக்தன்.

நாம்  நிச்சயம்  சிரஞ்சீவிகளாக  விரும்பமாட்டோம்.  இந்த   உலகின் துன்பங்கள் ஜாஸ்தி பார்த்துவிட்டோம். போகப்போக  இன்னும்  கஷ்டம் தான் அதிகம்,.  பேங்க் வட்டியை குறைத்துக்கொண்டு போகும். விலைவாசி அதே வேகத்தில் உயரும். கத்திரிக்காய் வாங்கக்கூட  நம்மால் முடியுமா  என்று யோசிக்கவேண்டி வரும். நடுநடுவே  கொரோனா மாதிரி ஏதாவது வீட்டோடு முடக்கி போட்டுவிடும்.  இந்த நிலையில்  சிரஞ்சீவியா?? ஐயையோ . நான் இந்த ஆட்டத்தில் இல்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...