Thursday, January 14, 2021

gitanjali

 

கீதாஞ்சலி -   J K  SIVAN 


தாகூர்  -  ஒரு அமர கவிஞன்

கீதாஞ்சலி எழுதுமுன் அதன்  சிருஷ்டி கர்த்தா பற்றி சில வார்த்தைகள்:
நமது ஞாபக சக்தி இருக்கிறதே, ரொம்ப அபாரம். இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்பது கூடநினைவில் இல்லை.  நாம் எப்படி என்றோ வாழ்ந்த மகான்களை நினைக்கப் போகிறோம்? .தாடிக்காரர்களில் சிலர் மோசமாக இருப்பவர்களும் உண்டு அருமையானவர்களும் உண்டு.  பறவைகளில் குருவி,  ராஜாளி, கிளி,  கருடன் இல்லையா அது போல். நான் சொல்லும் தாடிக்காரர் வசதியானவர். எதையும் அறுக்க, வெட்ட, உடைக்கச்  சொல்லாதவர்.அமர காவியங்களைப்  படைத்தவர். உலகம் புகழ்ந்த   நோபல்  பரிசு பெற்ற கவியோகி ரவீந்த்ரநாத்தாகூர் (1861-1941).   ஒரு விசித்திரமான மனிதர்.  அவர் மனதில் ஓடும் எண்ணங்களை வரிசைப்  படுத்த முடியாது.   வெள்ளத்தை   குடத்தில் பிடிக்கமுடியுமா?

ஆழ் மனத்தில்  அரும்பும்  எண்ணங்களை, வெளியே காணும் இயற்கை சூழலோடு பொருத்தி கலந்து அளிக்கும்  கவிஞன். இதுவரை காணாத தோற்றங்கள்.  இயற்கையோடு  ஒன்றிய எண்ணக்குமுறல்கள்.  பக்தி அடிநாதம் இணைக்கும் கற்பனைக் கட்டிடம். எந்த தெய்வத்தையும் பெயர் குறிப்பிடாமல் பொதுவாக  கண்டவர்.  நோபல் பரிசு பெற தகுந்ததாக  அவரது கீதாஞ்சலி தேர்வு பெற்றது.  கீதாஞ்சலி கண்ணனை பற்றி அவன் நாமத்தை பற்றி கூறவில்லை. புல்லாங்குழல் அங்கே யாழாக  காட்டப்பட்டது.  உருவமற்ற அவன்  தோன்றினான், பேசினான், உதவினான், அணைத்தான், ஆதரித்தான், வழிகாட்டினான். வழி நடத்தினான். சில சமயம் ஆணாக  சில சமயம்  பெண்ணாகவும்  தோற்றளித்தான்.

வங்காள மொழியில்  53 பாடல்களையும்  ஆங்கிலத்தில் மற்ற  தொகுப்புகளி லிருந்து  50 என்று மொத்தம்  103 கவிதைகள் கீதாஞ்சலியாக நமக்கு  பரிசளிக்கிறார்  தாகூர்

ஒரு தனித்த  இதயத்தின் வெளிப்பாடுகளாக இவை பல்வேறு சூழ்நிலைகளில்  மக்கள் மேல் அன்பு, தயை, கருணை, இரக்கம் கொண்டதாக  அமைந்துள்ளது ஆச்சர்யம்.

தாகூரின் எழுத்தில் எப்போதுமே  உள்ளே  ஒரு மெல்லிய சோகம், ஏக்கம்  இழையோடியிருக்கும்.  துயரம்  இயலாமை, தெள்ளத் தெரியும்.  ஒருவேளை   தாகூரின் மனைவி  ம்ருணாளினி மறைவாலும்,  மகள் ரேணுகாவின் மறைவாலும் (1902)  தந்தை தேவேந்த்ரநாத் தாகூரை இழந்ததாலும்  (1905) , மகன்  சமிந்திரா 1907ல் மறைந்ததாலும் தனிமை முழுசாக அவரை விழுங்கிவிட்டதோ?   அடுத்தடுத்து  மரணத்தின் சோகம்  அவரை ஆட்கொண்டதோ?  அவர்  கவிதைகளில் அடிக்கடி  வரும்  திடீர் மழையும்   எப்போதும் காரிருளும், வாடைக் காற்றும் தான் அந்த துக்கத்தின் சாயலோ?

இறைவனின் கருணையைப்  பாடும் வரிகளில் இயற்கையாக,  காணும் யாவையிலும் அவனை  உணர்வதை  தாகூர் வர்ணிக்கும் அழகே கீதாஞ்சலி.

எங்கோ வெகு தூரத்தில் இருப்பதாக  அறியும்  அவனை  அவன் சுவாசம்  பிடரியில் பின் கழுத்தில் படும் அளவு நெருக்கமாகி  அவரால் உணரமுடிகிறது. தினசரி வாழ்வில் தெய்வீகத்தை அனுபவிக்க முடிகிறது.  இருளில் ஒளி, ஒலியில்  ஒன்றிட முடிகிறது.

அரசனாகவும் ஆண்டியாகவும் அவனை அணுகமுடிகிறது.  காற்றில், கொடியில் மலரும் அரும்பில் ஆண்டவன்  அன்பை அனுபவித்து அவனை  அணைக்கிறார்.

தனிமையில் ஒரு வனப்பிரதேசத்தில்  இப்போது  உத்தர காண்டில்,  ஒரு பழைய இல்லத்தில்  தாகூர்  தனிமையாக வசித்து கீதாஞ்சலி எழுதினார் . அங்கே  சிறுத்தை, பாம்புகள், வன விலங்குகள், ஊர்வன, நடமாட்டம் அதிகமிருந்தும்  அவர் பாறைகள்  மேல் கரித்துண்டுகளால்   கீதாஞ்சலி கவிதைகளை எழுதி மகிழ்ந்தார்  என்பார்கள்.  கங்கையில் படகு வீட்டில்  வசித்து  இரவெல்லாம் மிதந்து கொண்டே  இயற்கை
யோடு ஒன்றி  எழுதுவார்.   அவரது சிதிலமான வீட்டு படங்களை பார்த்தேன். இணைத்திருக்கிறேன்.
 
எனக்கும் தான்  82 நடக்கிறது.   என்ன பிரயோஜனம்? தாகூர்   80  வருஷ  வாழ்நாளில் சாதித்தது எத்தனையோ யுகங்களுக்கு போதுமானது. குருதேவ்  என்றுஎல்லோராலும் போற்றப்பட்டவர். சிறந்த தத்துவ ஞானி.நமது முண்டாசு கவிஞனுக்கும் காந்திஜிக்கும்ரொம்ப பிடித்தவர்.அவர் எழுதிய கீதாஞ்சலி அற்புதமான ஒரு காவியம் . அடிக்கடி  எடுத்து சிலது அப்பப்போ  படிப்பேன் .ஆஹா அதை கொஞ்சம் அள்ளி வீசினால் என்ன?

ஏற்கனவே  உங்களுக்கு  தாகூரின்  காபூல்காரன், ராய் சரண், சுபா, போஸ்ட்மாஸ்டர்,  படிக் சக்கரவர்த்தி  போன்ற  மனதைப் பிழியும் கதைகளை சுருக்கி தந்திருக்கிறேன். கடைசியாக '' ஒரு ஊரிலே ஒரு ராஜா...''. எழுதினேன்.

தாகூர்  பிஞ்சிலே பழுத்த ஞானி.  முதல் வங்காள மொழிகவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில்.
கீதாஞ்சலி   தாகூரின்அற்புதமான மனம் கவரும் எண்ணச் சிதறல். எல்லா மொழிகளும் எல்லோருக்கும் தெரியாது. வங்காளியில் படிக்க முடியாவிட்டாலும்  அவரே  ஆங்கிலத்தில் மொழி  பெயர்த்தற்கு நன்றிக்  கடன் பட்டிருக்கிறோம்.  இல்லாவிட்டால்  நம்மால் வங்காள கீதாஞ்சலியை  எப்படி படிக்க முடியும்.?  

தாகூர்  குடும்பத்தில் பல கலைஞர்கள்,  கவிஞர்கள்  உள்ளார்கள். கோகோந்த்ரநாத், அபனீந்திரநாத், தேவேந்திரநாத், த்விஜேந்திரநாத்  தாகூர்கள்   பலே பலே
கீதாஞ்சலியில்  இனி  தினமும் ஒன்று  சுமாராக அடுத்த நூறு நாட்களுக்கு அறிந்து கொள்வோம்.

                                                             

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...