Monday, January 25, 2021

RDAY

 எல்லோரும் இந்நாட்டு மன்னர்  J K   SIVAN  



என்றும்   ஜனவரி 26   ஆகஸ்ட் 15  நமக்கு  பொன்னாள்  தான். அருமையான சம்பவங்கள் நிகழ்ந்த நாட்கள். ஆகஸ்ட் 15 நம் தேசம் வெளியாட்கள் தலையீடு இன்றி  நீ என்னவேணுமானாலும் செய்துகொள்ளலாம்  என்ற  
உரிமை தந்த சுதந்திரநாள்.  ஒன்றா இரண்டா? பல நூறு  ஆண்டுகள்  அல்லவோ  எவரெவரோ அல்லவா   இங்கே வந்து நம் தலை மீது உட்கார்ந்து   கொண்டு  அவர்கள் விருப்பம் போல் ஆட்டி வைத்தார்கள்?
அப்பாடா  நிம்மதி.   ஜனவரி  26 அப்படி நாம்  பெற்ற  சுதந்திரத்தை எப்படி அனுபவிப்பதுஎன்று தெளிவு படித்து  தேர்ந்தெடுத்து  நடைமுறையில் கொண்டுவந்த நாள். 

நமக்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது?     போகும் வழியில் சாப்பிட எதுவும்  கிடைக்காது  என்பதால் புறப்படும்போதே   கையில் எது கிடைக்கிறதோ அதை  கட்டிக்கொண்டு   ரயிலுக்கு புறப்படுவது போல் நமக்கு 1947 ல் கிடைத்தது.    

சுதந்திரம் கொடுத்தவன் யார்?  அழையாத விருந்தாளியாக  உள்ளே  புகுந்து நம்மை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து அடிமையாக்கி நம்மையே  ஆண்டு, பிறகு நாம்  விழித்துக்கொண்டோம் என்று உணர்ந்து ஒரு நாள் வேறு வழியின்றி சரி நீங்களே  இனி உங்களை ஆண்டுகொள்ளுங்கள் என்று விலகியவன் .  எடுத்த பொருளை அப்படியே  திருப்பித் தராமல்  மூன்று துண்டாக்கி விட்டு விட்டு போனவன்.   அதால் விளையும் கஷ்டம் தெரிந்து வேண்டுமென்றே அப்படி செய்தவன்.

 நமது அவல நிலையை உணர்ந்து,  இருப்பதை அலசி, சட்டங்கள் இயற்றி, நம்மை நாமே  எந்த  ராஜா, கவர்னர் ஜெனரலும் இல்லாமல் எப்படி ஆள்வது என்று சிந்தித்து,  சுதந்தரம்   விளைத்த  ரத்த காயங்கள் ஆறி, சிதைந்து கிடந்த நாட்டை  ஒருவழியாக  ஒன்று சேர்த்து  குடியரசு நாடாக  மாற்ற  ரெண்டரை  வருஷம் ஆயிற்று. நடுவே சுதந்திரம் வாங்கிக்கொடுத்த   காரண கர்த்தாக்களில் ஒருவரான  காந்தி கொல்லப் பட்டு ஒரு களேபரம்.  

நம்மிலிருந்து பிரிந்து போன பாகிஸ்தான் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது.  காந்தி தாத்தா  இல்லாதது  பெரிய குறையாக இருந்த நேரம்.  துண்டாக பிரிந்ததையெல்லாம்  ஒருவழியாக ஒட்டி  சேர்த்து மொத்தமாக்கி நம்  குடியரசானோம்.

ஜனவரி 26, 1950 நாம்  குடியரசின் பிரஜைகள். இதை  நான்  என் எப்படி  கொண்டாடினேன் என்று திரும்பி பார்க்கிறேன். 

சூளைமேட்டில்  கார்பொரேஷன் ஸ்கூலில்  முதல் நாளே  சுப்ரமணிய அய்யர்  சொல்லிவிட்டார்.  
'டே  பசங்களா,  நாளைக்கு  காலம்பர  6 மணிக்கு எல்லோரும் இங்கே வரணும். டிரஸ் பளிச்சினு இருக்கணும். எவனாவது குளிக்காம, தலை சீவாம, அழுக்கு டிரஸ்ஸோட   வந்தால்  பிர ப்பம்  பழம் ஒவ்வொரு கையில்  அஞ்சஞ்சு சூடா கிடைக்கும். ஜாக்ரதை'' , யதேச்சாதிகாரத்தொடு  குடியரசு விழா அழைப்பு  எங்களுக்கு.

குடியரசு தினம்  என்றால் என்ன என்று  எங்கள் யாருக்குமே எதுவுமே  தெரியாது. ஆனால்  அரசல் புரசலாக  கேட்டு நாங்களே  தெரிந்துகொண்டது என்னவென்றால்    காலையில் மூவர்ணமாக ஒரு  சின்ன  காகித துண்டு  தருவார்கள் . அதன் பெயர் கொடி . அதை சட்டையில் குண்டூசியால் குத்திக் கொள்ளவேண்டும்.   துணியில்   சிகப்பு வெள்ளை பச்சை    மூவர்ணம் கொண்ட    கொடியை ஒரு கம்பத்தில் ஏற்றுவார்கள். அப்போது கைதட்டி  சொல்லிக்கொடுத்ததை  பாடவேண்டும்.  கோலாட்டம் கும்மி அடிக்கவேண்டும்.  வரிசையாக பேசாமல் நிற்கவேண்டும்.  யாரோ பேசுவார்கள்.  வெகு நேரம் நிற்க வைத்த  பிறகு  மிட்டாய் கொடுப்பார்கள். யாராவது  ஏதோ பேசின பிறகுதான்  மிட்டாய் என்பதால்  புரியாமலே அந்த ஆள் எப்போ பேசி முடிப்பார் என்று காத்திருப்போம்.

காக்கி அரை நிஜாரை  வீட்டிலே  தோய்த்து, அதை கையாலே  அழுத்தி   சுருக்கம் நீக்கி,  பஞ்ச பாத்ரத்தில் தணல் நிரப்பி  துணியால் பிடித்துக்கொண்டு  தாழ்வாரத்தில் தரையில் அதற்கு     ''இஸ்திரி''   போட்டு  அதோடு  உடன்பிறவாத  அரைக்கை  பச்சை கோடு  போட்ட  (என்னிடமிருந்த  ஒரே ஒஸ்தி யான சட்டை )   சட்டைக்கும்  இஸ்திரி போட்டு  அணிந்து  காலில் செருப்பில்லாமல்   காலை 6 மணிக்கு  பள்ளியில் காத்திருந்தேன். வயது 11.

காவேரியம்மா டீச்சர், சரோஜினி டீச்சர்  எல்லாம்  பெண்களை ஒருபுறமும் பையன்களை ஒருபுறமும்  உயரம் பார்த்து  கொடி கம்பத்தை சுற்றிலும் வரிசைப் படுத்தி நிறுத்தினார்கள்.  கொடி  கம்பத்திற்கு முதல் நாளே  பச்சை சிவப்பு வெள்ளையில்  எது முதலில்  சிகப்பா  பச்சையா என்று  அய்யரிடம் கேட்டுக்கொண்டு பள்ளிக்கூட   ஆல் -இன் - ஆல்  அப்பாதுரை  வர்ணம் பூசினான் .   முதலில் பச்சையை பூசிவிட்டு திட்டு வாங்கி  சுரண்டிவிட்டு மறுபடியும் சிகப்பை முதலில்  பூசினான்.

என் நண்பன்  கிருஷ்ணமூர்த்தி, பட்டுநூல் கார பையன்.  சூளைமேடு சௌராஷ்ட்ரநகர் தெருவில் வசித்தவன் பள்ளிக்கூடம் அருகிலேயே இருப்பதால் அவன் வீட்டில் இருந்து  தோரணம் எல்லாம் கொண்டுவந்தான்.

கிருஷ்ணமூர்த்தி  ஒடிசலா இருப்பான்.  கிடுகிடுவன்று  மரம், கொம்பு எல்லாம் குரங்கு போல்  ஏறுவான். அவனைக்  கொடிமர உச்சியில்  ஏறச்சொல்லி கொடியை  மடக்கி அதற்குள் நிறைய  உதிரிப்பூ வைத்து மடித்து கயிற்றுக்குள்  சுமாராக செருகி   இழுத்ததும்  உடனே  சரியாக அவிழுமாறு  வைக்கணும் ''  என்று  சுப்ரமணிய அய்யர்  உத்தரவு கொடுப்பார். அவர் சொன்னபடி மேலே அதை கட்டிவிட்டு கம்பத்தில்  சறுக்கிக்கொண்டே  கீழே  இறங்கினான்.  

தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி,  பள்ளிக்கூட  மூன்று  அறைகளை  பெருக்கி, மரங்கள்  உதிர்த்த  சருகுகளை அள்ளிக்கொட்டி ,கொளுத்தி,  வேளா  வேளைக்கு  மணி அடிக்கும் உத்தியோகமும் செய்து வந்த அப்பாதுரை பள்ளிக்கூட முழுதும் தரையை பெருக்கி  சுத்தமாக வைத்திருந்தான்.  
  டீச்சர்கள்  சுண்ணாம்பு  கலர்  பொடி , மாவு  கோலம் எங்கும் நிறைய  போட்டிருந்தார்கள்.  மாணவிகள்  ஒத்தாசை செய்தார்கள்.   சுண்ணாம்பு,   காவி கோடுகள், நல்வரவு எல்லாம்  வாசல்  தெரு வரை இப்படி   கோலமாக  போட்டு வைத்திருந்தது.  

''வாழிய செந்தமிழ்;;  பாட்டுபாடுவதற்கு  ஆறு ஏழு பெண்கள் கடைசி நிமிஷ ஒத்திகை பார்த்தனர். . சரோஜினி  டீச்சர் ஒவ்வொருமுறையும்  வெவ்வேறு சுருதியில் பாடிக் காட்டினாள் . ஒவ்வொருமுறையும் வேறு  மாதிரி பாடுவாள்..

 ஆறுமணிக்கு வந்தவர்கள்  வெகு நேரம் காத்துக் கொண்டு நின்றோம். வெய்யில் கிழக்கே  சுள்ளென்று எரித்தது.  

ஏழரை மணிக்கு  வடிவேல் நாயக்கர்  வெள்ளை வேஷ்டி அரைக்கை  கதர் ஜிப்பா  நெற்றியில் பட்டையாக திருநீறு, குங்குமம். வெள்ளை மீசையோடு கை ரிக்ஷாவில் வந்து இறங்கினார். அப்போதெல்லாம் சூளைமேட்டில்  அதிகம் சைக்கிள் ரிக்ஷா கிடையாது. குதிரை வண்டி அல்லது கை ரிக்ஷாதான். ஒருவர் இருவர் போவதாக இருந்தால்  கை ரிக்ஷா, நிறைய பேர் போனால் குதிரை வண்டி.

நாயக்கர்  எல்லோரையும்  தலையைச் சாய்த்து  மிரள மிரள  பார்த்து  மேல் துண்டால்  வியர்த்த  முகம் துடைத்துக் கொண்டார். அவருக்கு கூட்டம் பிடிக்காது. கூட்டத்தில் பேச  சொல்லி  ஏன்  இப்படி  சித்ரவதை செய்கிறார்கள் என்று முணுமுணுத்துக் கொண்டார்.   

நாயக்கர்  பவ்யமாக வியர்வை குளியலோடு ,  நடுக்கத்துடன்  சுப்ரமணிய அய்யர் அருகில் நின்று நெளிய  அய்யர்  எல்லோரையும் கை தட்டச்  சொன்னார்.  தட்டினோம். நாயக்கர் மிரள  மிரள விழித்தார்.  அய்யர் பேசினார். 

  ''நமது நாட்டில் இன்று குடியரசு தினம். என்று ஒன்றிரண்டு வார்த்தைகள் இரத்தின சுருக்கமாக சொல்லி விட்டு  ''நாயக்கர் அய்யா  கொடியேற்றுவார். பேசுவார்''  என்றார்.

நாயக்கர்  கிணற்றில்  வாளியில் நீர் இறைப்பதைப் போல் சர் சர் என்று கயிரை  இழுத்து அது கம்பத்தின் உச்சியில் திரும்பி நின்று நான் அவிழமாட்டேன் என்றதால்  கிருஷ்ணமூர்த்தி மீண்டும்  கம்பத்தின் உச்சிக்கு  தாவி னான். அதை அங்கே மெதுவாக இழுத்து சரி செய்து திருப்பிவிட்டு சறுக்கியபடி இறங்கினான். அதற்குள் நாயக்கர் கயிற்றை இழுத்து கிருஷ்ணமூர்த்தி மீது மலர் மாரி  பொழிந்தது.

''பேச்செல்லாம் எதுக்குங்க . நீங்களே பேசுங்க,   குளந்தைங்க  பாடட்டுமே''  என்றார் நாயக்கர்.

சரோஜினி ஜாடை காட்ட  பெண்கள் கோரசாக வாழிய செந்தமிழ்,  தாயின் மணிக்கொடி  எல்லாம்  பாடி டான்ஸ் ஆடினார்கள் . நாயக்கர் கைதட்டினார். உடனே   நாங்களும்   கை தட்டினோம்.

''உங்க கையாலே  முட்டாய்  கொடுங்கோ''.  சுப்ரமணிய அய்யர்  நாயக்கரிடம்  முதல்  மிட்டாய் பெற்றார். பிறகு டீச்சர்கள். அப்பாதுரை, பிறகு சின்ன பெண்கள், சின்ன பையன்கள், அப்புறம் பெரிய பெண்கள் பையன்கள்.  

நாயக்கர் பலசரக்கு கடை வைத்திருந்ததால்  கோழி முட்டை சைஸில்  கலர் கலராக  மிட்டாய் சப்ளை பண்ணினார்.  அது  பாதியிலேலே  தீர்ந்ததுவிட்டதால்.  அச்சு வெல்லம்  எமர்ஜென்சி சப்ளையாக  கொண்டு வரச்  சொல்லி  எங்களுக்கு எல்லாம்  அச்சு வெல்லக் கட்டி தான் கிடைத்தது. கோழிமுட்டை மிட்டாய்  என்  வரை வராததால்  முதல் குடியரசு தின  ஏமாற்றம் எனக்கு.

"நாயக்கர்வாள்  குடியரசு தின வாழ்த்து செய்தி  சொல்லுங்க '' என்று  மறுபடியும்  சுப்ரமணிய அய்யர் சீண்ட ,    ''நீங்களே எதாவது சொல்லிடுங்க'' என்று நாயக்கர் வியர்த்து கொட்டியவாறு  தப்பித்தார்.

பள்ளிக்கூட  வாசலில்  தண்ணீர்ப்பந்தல்  வைத்து வருவோர் போவோர்க்கு  நீர்மோர் பொறிகடலை சப்ளை  செய்வதற்காக   சுப்ரமணிய அய்யரிடம்  பொறி மூட்டை,  மோர் பானைகள் எல்லாம்  கொண்டுவரச் சொல்லி   நாயக்கர் தந்து விட்டு  கை ரிக்ஷாவெயில் உட்கார அவரை இழுத்துக்கொண்டு  அது மறைந்தது. 

அப்போதைக்கும்  71 வருஷங்களுக்கு  அப்புறம்  இப்போதைக்கும் என்ன வித்யாஸம் என்று யோசித்தேன்.  அப்போது குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாமல் வளர்க்கப் பட்டோம்.   நாயக்கர் போன்றோர்  உதவி செய்ய ஆசைப் பட்டார்கள். போட்டோ, பேப்பரில் படம் பேர், என்று ஆசை இல்லை.  பேசவே தெரியாது.    இப்போது  அதெல்லாம்  முற்றிலும் மாறிவிட்டது.  ''குடி அரசு''க்கு  அப்போது இருந்த அர்த்தம்   இப்போ  வேறு அர்த்தம் தருகிறது. இப்போது பேசத்தெரியாதவர்களே இல்லை.  
 
மற்றபடி   மாற்றங்கள் அப்படி ஒன்றும் சொல்லும்படியாக இல்லையே.    மன்னராட்சி  முடிந்ததற்கு கைதட்டி  இப்போது  ''பல மன்னர்கள்''  ஆட்சி எங்கும் விதவிதமாக  நடக்க  ஆனந்தமய  'குடி'  மக்களாகிவிட்டோமோ! . 

தாயுமானார்  சொன்னபடி  ''எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அன்றி 
 வேறொன்றுமறியேன் பராபரமே!
 

--
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...