Thursday, January 14, 2021

THIRUCHAZHAL

 



மணி வாசகர்   J K   SIVAN

                 திருச்சாழல் பாடல்கள்  18-20

இன்றைய  பதிவுடன் நாம்  மணிவாசகரின்  திருச்சாழல் இருபது பாடல்களையும் நிறைவு செய்கிறோம்
பதினெட்டாவது பாடல்:

18,சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.

ஜலந்தரன் என்ற  ராக்ஷஸன் நீரிலிருந்து தோன்றியதால்  அவனுக்கு  இந்த பெயர். எல்லா ராக்ஷஸர்களையும்  போலவே  அவனும்   சிவபெருமானை வணங்கி  ''என்னை எவராலும் வெல்ல முடியாதபடி வரம் கொடுங்கள்'' என்று கேட்டு பெற்றான்.   உடனே  இந்திரலோகம் சென்றான். இந்திரனை வென்றான், ப்ரம்மலோகத்தில் பிரம்மாவை வென்றான். மஹா விஷ்ணுவையும் வெல்ல பாற்கடல் சென்றான். கடைசியில் வரம் கொடுத்த பரமசிவனையும் வென்று கைலாசத்தை அபகரிக்க வந்தான்.

அவன் எண்ணம் புரிந்த  பரமேஸ்வரன்  தன் கால் விரலால்   நிலத்தில் ஒரு  வட்டம் வரைந்து   ''அதை எடுத்து  தலைக்கு மேல் தூக்கிப் பிடி. உன் பலத்தைப்  பார்க்கலாம்'  என்கிறார்.  ஜலந்தரன் அந்த   வட்ட நிலத்தை  பேர்த் தெடுத்து தலைக்கு மேல்   தூக்க அந்த வட்டம் சக்கரமாக மாறி  அவன் கரத்தாலயே   அது  அவன் கழுத்தை அறுத்து அவன்  மாண்டான்.   இது லிங்க புராணத்தில் ஒரு கதை.   ஜலந்தரனைக் கொன்ற  சிவனுக்கு  ஜலந்தராகரன் என்று ஒரு பெயர்.  

ஹே  பெண்ணே,   உன் சிவன்  சலந்தரன் என்ற அசுரனை ஒரு  சக்கரத்தால் கொன்று  பிறகு அந்த  சக்ரத்தை  எதற்கு  மஹா விஷ்ணுவிடம் கொடுத்தாராம்?  என்ன காரணம் உனக்கு தெரியுமா?

ஏன் உனக்கு தெரியாதா?  கேள் சொல்கிறேன்.  காரணம் இல்லாமல் சிவன் எந்த காரியமும் செய்ய மாட்டார் என்பதை முதலில் புரிந்து கொள் . மேலே சொன்ன கதையை தொடர்ந்து இன்னொன்று சொல்வேன் அதையும் படி. உனக்கு விடை கிடைக்கும். 


 விஷ்ணு  தனது  இரு விழிகளில் ஒன்றை  வெளியே எடுத்து  புஷ்பமாக சிவனை பூஜித்தால்  சிவனுக்கு  பிடிக்காதா?  இந்தா உன் கண்ணைப் பெற்றுக் கொள் என்று  தன்னிடமிருந்த ஒரு சக்கரத்தை கொடுத்தார். ஒரு கதை சொல்கிறேன் கேள்.

மஹா விஷ்ணு என்றாலே  சங்கு , சக்ரம்,  நம் கண்முன் தோன்றுகிறது. அந்த சக்ரத்தின் பெயர்  சுதர்சன சக்ரம்.    ஸுதர்சனம் என்றாலே  தெய்வீகமான , திருப்தியளிக்கும், புனித தரிசனம் என்று அர்த்தம். பெருமாள் கோவில்களில் சுதர்சன சக்ரம்  சக்கரத்தாழ்வார் என்று பெயரோடு தனி  சந்நிதியில் ஒரு பக்கம் நரசிம்மரோடு அருள் பாலிப்பது தான் தெரியுமே.  கெடுதல்கள் நீங்க   சுதர்சன ஹோமம் பண்ணுவது  நாம்  சக்கரத்தாழ்வாரின் அருள்பெறவே.  

சென்னை அருகே  காஞ்சி அரக்கோணம் பாதையில்  திருமால்பேர் (திருமால்பூர் இப்போது) என்ற ஊருக்கு ஆலய தரிசனத்துக்கு சென்ற போது அங்கே  ஒரு  அற்புத விஷயம் தெரிந்து கொண்டேன்.

செந்தாமரைக்கண்ணன்   மஹா விஷ்ணு   சிவனுக்கு  ஆயிரம்  தாமரை மலர்களோடு அர்ச்சனை செய்து  வழிபடும் போது ஒரு தாமரைப்பூ   குறைவாக  இருந்தது. அடேடே , ஆயிரத்துக்கு ஒன்று குறைகிறதே என்ன பண்ணுவது? என்று எண்ணின  விஷ்ணு,   தாமரைப்பூ   வேறு  எங்கும் கிடைக்காததால்  அவசரத்துக்கு தனது இடக் கண்ணையே ஆயிரமாவது தாமரையாக எடுத்து பூஜிக்கிறார்.    இதனால்  அந்த ஊருக்கே   விஷ்ணுவின் பேர்.   '' திருமால்  பேர்”   என்பது  காலத்தில் கரைந்து  இப்போது திருமால் பூர் ..அவசியம் ஒருமுறை சென்று தரிசியுங்கள்.
மேலே சொன்ன ரெண்டு விஷயங்களை தான் இந்த பாடலில்  மணிவாசகர்  குறிப்பிடுகிறார்.

19. அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்
தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ.

நீ  நன்றாக கதைகள் சொல்கிறாய். எனக்கு  இன்னொரு விஷயம் சொல்?  எதற்கு  உங்கள் சிவன் புள்ளி புள்ளியாக புலித்தோலை அணிகிறார்?  மஞ்சளில் கருப்பு   கோடு  பிடிக்குமா?  எதற்கு  விஷத்தை விழுங்கி
னார்?. ஏன் இந்த தற்கொலை முயற்சி?  என்ன வருத்தம்?

ஒரு  வாலிப  அவதூதர்  (ஆடையற்றவர்)   ரிஷிகள் வாழும் காட்டில் நுழைகிறார். ரிஷி பத்னிகளும் இருக்கிறார்களே என்பதால்  அந்த இளைஞன்  வருகையைத்தடுக்க  ரிஷிகள்  ஒரு பெரிய  குழியை வரும் வழியில் தோண்டி அதற்குள்  ஒரு பசியோடு இருக்கும் பெரிய புலியையும்  விடுகிறார்கள். மறைத்திருந்த அந்த குழியில்  வாலிபர்  விழுந்து ஒரு கணத்தில் அந்த புலியைக் கொண்டு அதன் தோலை இடுப்பில் சுற்றிக்கொண்டு ரிஷிகளை அணுகி  அவர்களை வாழ்த்துகிறார்.  வந்தவர்  சிவன் என்று புரிந்து வணங்குகிறார்கள் ரிஷிகளும்  ரிஷிபத்னிகளும் என்று ஒரு புராண கதை.   சிவனுக்கு தன்னுடைய பெருமை மஹிமை தெரியாது.  எதையும்  லக்ஷியம் செய்யாத  ஞானி. ப்ரம்மம்.  திருப்பாற்கடலை கடையும் போதும்  அம்ரிதமும்  அதோடு  ஹாலஹால  விஷமும் தோன்ற, விஷத்தால் எந்த உயிருக்கும்  ஆபத்து கேடு விளையக்கூடாது என்று அது அத்தனையும் ஒரே உருண்டையாக பண்ணி விழுங்கிய பெருந்தகை பரமசிவன்.
சிவனுக்கு எதற்கு தற்கொலை?  பிறப்பு இறப்பு இல்லாத பிஞ்ஞகன். இந்த சம்பவம் அவரது பெருங்  கருணையைக் காட்டுகிறது. 

20,  அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறம்முதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ.

அது சரி  இதற்கு விளக்கம்கொடு  பெண்ணே?   எதற்கு  சிவன்  ஒரு கல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து  நான்கு ரிஷிகளுக்கு  ஞானம் புகட்டினார்?

நான்கு  என்பது  அறம்  பொருள் இன்பம்  வீடு  எனும்  நிலைப்பாடுகள். இம்மைக்கும் மறுமைக்குமானவை.  அவற்றை சனகாதி முனிவர்க்கு மௌனமாகவே  அறிவுறுத்தியது தான் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தியாக அவர் சின் முத்திரை காட்டி  விளக்கியது.  மௌனம் தான்  சிறந்த  பிரசங்கம், உபன்யாசம். முனிவர் களுக்காக  சொல்லப்பட்டது அல்ல. அவர்களை நிமித்தமாகக் கொண்டு நமக்கு அறிவுறுத்தியது.

கல் ஆலமரம் என்றால் விழுதுகள்  இல்லாத   மெளனமாக நிற்கும் ஆலமரம். காண்பது அதிசயம்  இதுபற்றி ஒரு பொய்யா மொழி  பிள்ளையார் கோவில் கதை இருக்கிறது.  அப்புறம்  சொல்கிறேன். 

மணிவாசகரே, உங்கள்  திருச்சாழல் இருபதும் மிக நன்றாக  ரசித்தோம். மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...