Monday, January 28, 2019

MORAL STORY



முனிவரின் உபதேசம் J.K. SIVAN

கிருஷ்ணன் எல்லோர் மனத்திலும் உறைந்திருப்பவன். அவனுக்கு ஜாதி மதம், கீழோர் மேலோர், பணக்காரன், ஏழை, ஆண் பெண், ஆத்திகன் நாத்திகன் வித்யாசம் எல்லாம் கிடையாது. அவன் தண்ணீர் பாதிரி.

பகவானை நீருக்கு ஒப்பிடலாம். அது இருக்கும் இடத்தை, அதோடு சேர்ந்திருப்பதை, அதன் தன்மையை வைத்த்து அதை அறிகிறோம். பூஜைக்கு கங்கை ஜலமாக புனிதமாக தெரிகிறது. சில குடிக்க, சில குளிக்க, சில பாத்திரம் கழுவ, துணி துவைக்க, சில எதற்குமே உபயோகமாகாத துர்நாற்றம் பிடித்ததாக காண்கிறது. மூக்கைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து நகருகிறோம். சென்னையில் ஒரு காலத்தில் கூவம் இப்படி தான் இருந்தது. சித்ரா டாக்கீஸ் பக்கமே போகமுடியாது. எப்படி துர்கந்தமான நாற்றத்தை விட்டு ஓடுகிறோமோ அதுபோல் மனிதர்களில் தீயவர், கெட்டவர்களை கண்டால் விலகவேண்டும். ஆனால் அவர்களின் உள்ளேயும் ஆத்மா உள்ளது.

பரமஹம்ஸரை ஒரு பக்தன் கேட்டான்:

''குருவே, ஒரு கெட்டமனிதன், நமக்கு துன்பம், கேடு விளைவிக்க திட்டமிடுகிறான் என்று தெரிந்தால் நாம் சும்மாவா இருக்கவேண்டும்?''

'' ஒவ்வொருவனும் தனக்கு தீங்கு மற்றவனால் விளையும் என்று தெரிந்தாலே தீயவன், பழகாத தகாதவன் என்று அறிந்து அவனை விட்டு விலகவேண்டும். ஒருவனை தீயவன் என்று முத்திரை குத்தி, அவன் நமக்கு கெடுதி செய்வான் என்று கருதி, அவனை தண்டிப்பது, அவனுக்கு தீங்கு விளைவிப்பது தவறு. இது புரிய ஒரு கதை சொல்கிறேன்.

ஒரு காட்டில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் தங்கள் பசுக்கள் கன்றுக்குட்டிகளை அருகே இருந்த காட்டிற்கு இட்டுச்சென்று மேய்ப்பது வழக்கம். அங்கே விளையாடிக்கொண்டிருப்பார்கள். அங்கே ஒரு விஷ பாம்பு வசித்தது அவர்களுக்கு தெரிந்ததும், அந்த பக்கம் போவதற்கே தயக்கமாக இருந்தது. மாடு கன்று மேய்க்க இயலவில்லை. 'விஷ நாகம் எப்போது எங்கிருந்து வந்து யாரை கடிக்குமோ'' என்று உயிருக்கு பயந்தார்கள்.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு முனிவர் வருகிறார். அவரிடம் சிறுவர்கள் ''சாமி, அந்த காட்டு பக்கம் போகாதீ ங்க . ஒரு பெரிய விஷ நாகம் அங்கே இருக்கிறது.''

''அதனால் என்னப்பா. எனக்கு விஷப்பாம்புகள் அடக்கும் மந்திரம் தெரியும். பாம்பிடம் எனக்கு பயமில்லை ''
முனிவர் காட்டுப்பாதையில் நடந்தார். அவரோடு வர பையன்கள் பயந்தார்கள். வழியில் புஸ என்று சப்தமுடன் படமெடுத்து அந்த விஷ நாகம் முனிவர் முன் நின்றது. முனிவர் ஒரு மந்திரத்தை உச்சரித்தார். அது தலையை சுருக்கிக்கொண்டு சாதாரண கயிறு போல் சுருண்டு அவர் காலடியில் கிடந்தது.

''ஏ . பாம்பே, எதற்கு நீ எல்லோரையும் கடிக்கிறாய். உன்னைக்கண்டு பயப்படுகிறார்கள். கெட்ட பெயர் சம்பாதிக்கிறாய். உனக்கு ஒரு மந்திரம் சொல்கிறேன். அதை உச்சரித்தால் உனக்கு பகவான் ஸ்மரணை உண்டாகும். உன்னுடைய கடுமையான தீங்கு செய்யும் குணம் விலகும். பாம்பு மந்திரத்தை கற்றுக்கொண்டது. எவருக்கும் தீங்கு நினைக்காத ஆன்மிக சாது பாம்பாக மாறியது. முனிவரை வணங்கியது.

''முனிவரே நான் எப்படி இனிமேல் நடந்து கொள்ளவேண்டும் என்று உபதேசியுங்கள்?' என்றது பாம்பு.
' நான் சொல்லிக்கொடுத்த மந்திரத்தை விடாமல் சொல்லிக்கொண்டே இரு. யாரையும் எதையும் கடிக்காதே.' நான் அப்புறம் வரும்போது உன்னை பார்க்கிறேன்.'' முனிவர் சென்றுவிட்டார்.

சில நாட்கள் சென்றது. காட்டில் பயத்தோடு சிறுவர்கள் பாம்பைக் கண்டனர். அது எங்கோ ஒரு ஓரமாக சுருண்டு கிடந்தது. யாரையும் கடிக்கவில்லை. அது கடிக்காமல் ஒரு ஓரமாக நகர்ந்து கொண்டிருந்தாலும், அதன் மேல் கல்லை வீசினார்கள். துன்புறுத்தினார்கள். அப்போதும் வலியை பொறுத்துக்கொண்டு பாம்பு அவர்களை தாக்கவில்லை, கடிக்கவில்லை. ஒரு புழுவைப் போல் நடந்துகொண்டது. பயம் நீங்கிய சிறுவர்கள் அதை நெருங்கி இப்போதெல்லாம் அதன் வாலைபிடித்து இழுப்பது, அதை பிடித்து மரத்தின் மேல், கல்லின் மேல் அடிப்பது போன்ற சுற்றி எறிவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் கண்களில்கண்ணீரோடு அந்த பாம்பு பொறுத்துக் கொண்டது. வாயில் ரத்தம் கக்கியது. மயங்கியது. மரணத்தின் வாயிலில் ஊசலாடியது. நகரவே முடியவில்லை.

''பாம்பு செத்துவிட்டது வாங்கடா போகலாம்'' பையன்கள் சந்தோஷமாக திரும்பினர். சிறிது நேரத்தில் மெதுவாக ஊர்ந்து பாம்பு தனது பொந்துக்குள் நுழைந்தது. எலும்புகள் நொறுங்கி வாடியது.ஆகாரம் தேடி வெளியே போக முடியவில்லை. பட்டினியில் எலும்பும் தோலுமானது. இருட்டில் மெதுவாக வெளியே வந்து ஏதாவது கிடைத்தது உண்டு ஜீவித்தது. பையன்களுக்கு பயந்து வெளியே கண்ணில் படாமல் வாழ்ந்தது. விடாமல் முனிவர் உபதேசித்த மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு வந்தது.

ஒரு மாதம் கழிந்தது. முனிவர் மீண்டும் ஒருநாள் அந்த காட்டுப் பக்கம் வந்தார். பாம்பு ஞாபகம் வந்தது. தேடினார். பையன்கள் பாம்பு செத்து போய்விட்டது கொண்டுவிட்டோம் என்று பெருமையாக சொன்னார்கள். முனிவருக்கு பாம்பு இறந்திருக்காது. தான் உபதேசித்த மந்திரம் அதற்கு உதவி இருக்குமே என தோன்றியது.

''என் நண்பா, பாம்பே எங்கே இருக்கிறாய். வா என்னிடம்.'' என்கிறார். தனது குருவின் குரல் கேட்டதும் பாம்பு மெதுவாக முடியாமல் ஊர்ந்து எதிரே வந்தது.

'எப்படி இருக்கிறாய் நண்பா?''

'' ஏதோ இருக்கிறேன் குருவே. ''

'' ஏன் அடையாளம் தெரியாமல் இளைத்து, மெலிந்து நோய்வாய்ப்பட்டு இருக்கிறாய்?''

''குருவே, தாங்கள் உபதேசித்தபடி நான் எவருக்கும் தீங்கு செய்யாமல் சாத்வீகமாக இலையும் காயும் கீழே விழுந்த பழங்களிலும் உயிர் வாழ்கிறேன்.''

முனிவருக்கு புரிந்துவிட்டது. சாத்வீகமான பாம்பை மாடு மேய்க்கும் பையன்கள் துன்புறுத்தின் மரண தருவாயில் இருக்கிறதே.

" உனது சாத்வீகம் உன்னை இந்த நிலைக்கு கொண்டுவரவில்லை. அதை பையன்கள் புரிந்து கொள்ள வில்லை. நீ ஒரு முட்டாள் பாம்பு. உன்னை பாதுகாத்துக் கொள்ள தெரியாத மக்கு. நான் உன்னை எவரையும் கடிக்காதே என்று தானே சொன்னேன். சீறாதே, பயமுறுத்தாதே என்றா சொன்னேன்? அருகில் எவராவது வந்தால் நீ உஸ் என்று சீறி அவர்கள் உன்னை துன்புறுத்தாமல் காத்துக்கொண்டிருக்கலாமே. அவர்களை பயமுறுத்தி அதன் மூலம் உன் உயிரை பாதுகாத்துக்கொண்டிருக்கலாமே. இதனால் எவருக்கும் தீங்கு இல்லையே.''



பசுவுக்கு கொம்பும், குதிரை மானுக்கு வேகமும் முள்ளம்பன்றிக்கு முள்ளும், ஆமைக்கு ஓடும், தன்னை பாது காத்துக் கொள்ளத் தானே பகவான் கொடுத்திருக்கிறான். மனிதனுக்கு புத்தியை தந்திருக்கிறான். கெட்டவர்களிடமிருந்து விலக தான் அறிவை தந்திருக்கிறான்.

Sunday, January 27, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம் J.K SIVAN
மஹா பாரதம்.
மஹா பாரதத்தில் ராமாயணம்

மார்க்கண்டேய மகரிஷி வருகிறார் என்றாலே அவரோடு பல கதைகளும் நம்மை வந்தடையும் என்பது நமது அனுபவத்தில் இதுவரை தெரிந்தது தானே. யுதிஷ்டிரனுக்கு இராமாயண கதைகள் எடுத்து சொல்கிறார்.

''மாரீசா, ஒரே வழி தான் உனக்கு. ஒன்று என் கையால் மரணம். அல்லது நான் சொல்வது போல் நீ தந்திர மந்திரங்களால் ராம லக்ஷ்மணர்களை அப்புறப்படுத்தி சீதையை தனிமைப் படுத்த வேண்டும். ஒருவேளை ராமனாலோ லக்ஷ்மணனாலோ நீ கொல்லப்படலாம். வெற்றிகரமாக முடித்தால் உனக்கு ராஜ போகம் என்னால். யோசித்து முடிவெடு. ரெண்டே நிமிஷம் டைம்.'' என்றான் ராவணன்.

தனது முயற்சி வெற்றியடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் என்றும் ராம லக்ஷ்மணர்களாலோ அல்லது ராவணனாலோ மரணம் என்பது நிச்சயம் என்றிருந்தபோது, ராமன் கையால் மரணம் அடைவதே உசிதம் என்று மாரீசன் முடிவெடுத்து ராவணன் திட்டத்துக்கு உடன்பட்டு பொன்னிற மாய மானாக சீதை முன் நிற்கிறான் .

பிறகு நடந்தது தான் தெரியுமே. சீதையின் விருப்பத்தை நிறைவேற்ற மாரீச மாயமானை ராமன் தொடர்ந்து காட்டுக்குள் ஓடி, சாகுமுன் மாரீசன் ராமன் குரலில் 'ஹா லக்ஷ்மணா, ஹா சீதா'' என்று கதற, சீதை காவலுக்கு நின்ற லக்ஷ்மணனை ராமனைத் தேடிப் போக விரட்ட, ராவண போலி சந்நியாசி காவி உடை, கமண்டலத்தோடு சீதையை நெருங்கி தான் யார் என்று சொல்லி, அவள் மயங்கி விழுந்ததும், அவளை முடியைப் பிடித்து இழுத்து தனது தேரில் (மகாபாரதத்தில் வியாசர் இவ்வாறு தான் எழுதுகிறார்) அவளைக் கடத்தி இலங்கை செல்கிறான்.

வழியே கழுகரசன் கிழ ஜடாயு சீதையின் கூக்குரல் கேட்டு ராவணனைத் தடுத்து சண்டை போட்டு வெட்டுப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கீழே விழ, சீதை தனது ஆபரணங்களை எல்லாம் புஷ்பக விமானத்திலிருந்து கீழே வீச, ஒரு மூட்டையாக ஆபரணங்கள் ரிஷ்யமுக பர்வத்தில் சுக்ரீவனிடம் கிடைக்க, சீதை இலங்கையில் அசோகவனத்தில் சிறைப்பட்டாள் .

மாரீச மாயமானைக் கொன்ற ராமன் வேகமாக தனது குடிலை நெருங்குமுன் வழியே லக்ஷ்மணனைக்கண்டு சீதையை தனியே விட்டு வந்த காரணம் அறிந்து, சீதையைக் காணாமல் வாடி,, தேடி, வழியில் ஜடாயுவை சந்தித்து ராவணன் சீதையை கடத்திய விபரம் அறிந்து லக்ஷ்மணனோடு ரிஷ்யமுக பர்வதம் நோக்கி நடக்கிறான். ராவணன் எந்த திசையில் சென்றான் என்று அறிவதற்குள் ஜடாயு தென் திசை ஜாடை காட்டி மரணம் எய்துகிறான். தந்தையின் நண்பன் ஜடாயுவுக்கு ஈமக் கிரியைகள் செய்து விட்டு தண்டகாரண்
யத்தில் தெற்கு நோக்கி நடக்க வழியே தலையற்ற பெரிய வயிறு கொண்ட ஒரு ராக்ஷசன், கபந்தன், எதிர்த்து லக்ஷ்மணை நீண்ட கரங்களால் பிடிக்கிறான். ராமனும் லக்ஷ்மணனுமாக கபந்தனின் நீண்ட கரங்களை துண்டாக்கி அவனை கொல்கிறார்கள். கபந்தன் உடலிலிருந்து ஒரு கந்தர்வன் அதி சுந்தர ரூபனாக வெளிப்பட்டு ராமனை வணங்குகிறான்.

''யார் நீ?''

''ஸ்ரீ ராமா, நான் விஸ்வவசு. ஒரு பிராமணன் சாபத்தால் இந்தக் கணம் வரை ஒரு ராக்ஷசனாக வாழ்ந்து அவதிப்பட்டேன். நான் இந்த வனத்தில் வெகு காலமாக உழல்கிறேன். என்னை விடுவித்து மோக்ஷம் அருளிய உங்களுக்கு ஒரு சேதி சொல்வேன். ராவணன் என்ற லங்காதிபதி சீதையை கடத்தி இலங்கைக்கு தூக்கி சென்று விட்டான். நீங்கள் நேராக பம்பா நதிக்கரை ஓரமாக உள்ள ரிஷ்யமுக பர்வதத்தில் வாழும் சுக்ரீவன் என்ற வானர அரசனை சந்தியுங்கள் அவன் உதவுவான். ராவணனை அவன் அறிவான்.''

''அப்புறம் என்ன ஆயிற்று?'' என்று கேட்ட யுதிஷ்டிரனுக்கு மார்கண்டேய ரிஷி விவரமாக சொன்னது:

சுக்ரீவன் தனது அருகில் இருந்த நால்வர்களில் ஒருவனான ஹனுமானிடம் ''அதோ வருகிறார்களே யார் இந்த இரண்டு புதியவர்கள்? ஒருவேளை வாலியின் ஆட்களோ என்று விசாரித்து வா'' என ஆணையிட, ஹனுமான் முதன் முதலாக ராமரைச் சந்திக்கிறான். ஹனுமான் மகிழ்ச்சியோடு அவர்களை சுக்ரீவனிடம் அழைத்து செல்ல, சுக்ரீவன் சீதையின் ஆபரணங்களை காட்ட பிறகு சுக்ரீவனுக்கு உதவ ராமன் ஒப்புக்கொள்ள, அவன் வாலியை போருக்கு அழைக்க, தனது மனைவி தாரை சொல்லியும் கேளாமல் வாலி சுக்ரீவனோடு மோத, வாலி வதம் முடிந்து சுக்ரீவன் கிஷ்கிந்தா அரசனாகி, வானரப் படை திரட்டி சீதையை தேட சுக்ரீவன் வாக்களிக்கிறான் .

இலங்கையில் அசோக வனத்தில் திரிஜடை என்கிற ராக்ஷசப் பெண் மட்டுமே சீதைக்கு அனுகூலமாக இருந்து, தான் கண்ட கனவில் ராவணாதியர் அழிவு, ராமனின் வரவு, எல்லாம் எடுத்து சொல்கிறாள். ராவணனால் உனக்கு ஒரு ஆபத்தும் இல்லை. ஏனென்றால் நள குவேரன் சாபத்தால் ராவணன் எந்த பெண்ணையும் அவள் விருப்பத்துக்கு மாறாக நெருங்க முடியாது என்கிறாள்.

மார்கண்டேய ரிஷி மேலும் யுதிஷ்டிரனுக்கு ராமாயணத்தை விவரிக்கிறார்:

சொன்ன கெடு முடிந்தும் சுக்ரீவன் படைகளோடு வரவில்லை. கார்காலம் முடிந்து லக்ஷ்மணன் சுக்ரீவனுக்கு ராமனின் பராக்ரமத்தை உணர்த்தி ''வாலி போன வழி நீயும் போகவேண்டுமா? கடமையை நிறைவேற்று '' என்று அறிவுறுத்த சுக்ரீவன் தவறை உணர்ந்து வேகமாக செயல்படுகிறான். வானரவீரர்கள் பல்வேறு திசைகளிலும் தேட ஹனுமான் தென் திசை நோக்கி வீரர்களோடு பயணிக்கிறான். ஹனுமான் கடலைத் தாண்டி இலங்கையில் அசோக வனத்தில் சீதையை தரிசித்து ராமனின் முத்திரை மோதிரத்தை சீதை பெற்று, அவளது கணையாழியை ராமனுக்கு அடையாளமாக பெற்று வருகிறான்.

ஹனுமான் ராமனிடம், அவர்கள் சீதையைத் தேடி தெற்கே எல்லா இடங்களிலும் தேடி காணாமல் ஒரு வனத்தில் ஜடாயுவின் சகோதரன் சம்பாதியை சந்தித்து அவன் மூலம் இலங்கைக்கு வழி தெரிந்து கொண்டு, கடலைத் தாண்டியது, கடலில் மைனாகத்தை சந்தித்து, மாய ராக்ஷசியின் வாயிலிருந்து வெளியேறி தப்பி இலங்கிணியை வென்றது, சீதையை சந்தித்தது இலங்கையை தீக்கிரையாக்கியது எல்லாம் சொல்கிறான்.

வானர சைன்யம் கடற்கரையை நெருங்கி சமுத்ரராஜன் ராமனை சந்தித்து, பிறகு நளன் , நீலன், ஜாம்பவான், ஹனுமான் ஆகியோர் பாலம் அமைக்கிறார்கள். விபீஷணன் ராவணனால் விரட்டப்பட்டு தனது வீரர்களுடன் ராமனை சரணடைகிறான். ஒரு மாத காலத்தில் நளன்இலங்கைக்கு பாலம் கட்டி அமைத்து வானர சைன்யம் இலங்கை சென்று, அங்கதன் ராவணனிடம் தூது செல்கிறான். ராவணன் அங்கதனைக் கொல்ல ஆணையிட்டு, அங்கதன் தப்பி, ராமனிடம் செல்கிறான். யுத்தம் மூள்கிறது. இலங்கைக் கோட்டைகள் தகர்க்கப் பட்டு, சர்வ நாசமடைகிறது. ராக்ஷசர்கள் எண்ணற்றோர் பலியாகிறார்கள். ராவணனின் பலமிக்க சேனாதிபதிகள், ப்ரஹஸ்தன் , தும்ரக்ஷன் ஆகியோரும் மாளவே, கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து எழுப்பப் படுகிறான்.


MORAL STORY

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.....
J.K. SIVAN

இந்த உலகம் விசித்திரமானது. இதைப் படைத்த ப்ரம்ம தேவன் அடேயப்பா பலமடங்கு அதை விட விசித்ரமானவன். இல்லாவிட்டால் இத்தனை விதமான மனிதர்களை படைத்து, அவர்களுக்குள் சொல்லமுடியாத அளவு விசித்திர புத்தியை கொடுப்பானா? சாமண்ணா தான் அதிகம் எல்லா விஷயமும் தெரிந்தவன் என்று காட்டிக்கொள்வதில் பெருமை அடைபவன். தனக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்று தீர்மானமாக இருப்பவன். நான் அவனைப் பார்த்தபோதெல்லாம் தமிழில் என்ன சாமு சௌக்கியமா. உடம்புக்கு ஒண்ணுமில்லாமல் இருக்கிறாயா? என்று வழக்கம்போல் அர்த்தமில்லாத, அவன் உடலில் அக்கறையே இல்லாமல் கேட்கும்போது எல்லாம் எனக்கு இங்கிலீஷில் தான் பதில் சொல்வான். அவன் பதிலில் உடம்பு என்றால் என்ன என்று அங்கு வேறு ஆணி வேறு என்று தெரிந்தவன் போல், சௌக்கியம் என்பது அவரவர் சாமர்த்தியத்தால் தான் உண்டாவது என்றும் 1900த்தில் ஒருவர் இன்னொருவரை பார்த்து இப்படி கேட்டதை பற்றி எல்லாம் சொல்வான். சொல்லும்போது உரக்க சொல்வான். பதில் எனக்கு மட்டும் அல்ல, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து. அவர்கள் கவனிக்கிறார்களா, தனது அறிவுபூர்வ பதிலை ஒரு வார்த்தை விடாமல் கேட்கிறார்களா என்று அளவெடுப்பான்.

பதிலுக்காக நான் மாட்டிக்கொண்டு நிற்பேன். அவனைப் பற்றி தெரிந்தவர்கள் ஆவியாக மறைந்திருப்பார்கள்.

சாமு ஒரு ஊருக்கு சென்றான். அங்கே ஒரு பெரிய புளியமர தோப்பு முதலாளி புருஷோத்தமனை பார்த்தான். புருஷோத்தம நாயக்கர் பரம்பரை பணக்காரர் . ஐந்து ஆறாவது வகுப்போடு படிப்பு போதும் என்று நிறுத்தி புளி யை அபிவிருத்தி செய்து பணம் சேர்த்தவர். வாயாடி. ஆகவே சாமு வை புளியைப் போல் சரியாக எடை போட்டுவிட்டார் .

ரெண்டு பேரும் ஆற்றங்கரை அரசமரத்தடி விநாயகர் அருகே மேடையில் அமர்ந்து காற்று வாங்கும்
போது சாமு ஆரம்பித்து விட்டான்.

''நாயக்கரே உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா?''.
''எதுக்கு தம்பி?''
''இல்லை. சின்ன கேள்வி தான். விளையாட்டு வினா. பயப்படாதேங்கோ. சுலபமாக தான் கேட்பேன். சரியா பதில் சொன்னால் பத்து ரூபா. அப்பறம் நீங்க கேளுங்கோ நான் பதில் சொன்னா எனக்கு ஐந்து ரூபா கொடுத்தா போதும். ஆளுக்கு ஒரு கேள்வி மாத்தி மாத்தி கேட்போம்.''
''அட போ தம்பி. இதெல்லாம் எதுக்கு நிறைய ஜோலி இருக்கு நமக்கு''.
''என்ன நாயக்கரே ஜகா வாங்குறீங்க. சரி போங்க, ஒரு கேள்விக்கு ஐம்பது ரூபா தரேன்''.
''எனக்கு வேணாம்பா''
''நூறு ரூபா''
''ஹுஹும் தேவை இல்லை ப்பா''
''இருநூறு ரூபா.
''நான் தான் சொல்லிட்டேனே வேண்டாம்னுட்டு . உடமாட்டேங்கிறியே''
''சும்மா உங்களோடு பேச ஆசைப்பட்டு தானே கேக்கறேன் நாயக்கர். இப்படி வச்சுக்கலாம். நீங்க கேள்வி கேட்டு எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஆயிரம் ரூபா தரேன். உங்களுக்கு பதில் தெரியாவிட்டால் ஒரு ரூபா கொடுத்தா போதும்.''
''சரி தம்பி இன்னிக்கு நேரம் சரியில்லே போல் இருக்கு யாருக்கோ. போவட்டும். ஆனால் நான் தான் முதல்லே கேள்வி கேட்பேன். சரியின்னு சொன்னீன்னா ஆரம்பிக்கறேன்.''
சாமுவுக்கு சந்தோஷம். ஜெயித்து விட்டோம் இந்த நாட்டுப்புறத்தானை மடக்க வேண்டும். தனது அறிவை அவன் மெச்சி திகைக்க வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டான்.
''நீங்க முதல்லே கேள்வி கேளுங்க நாயக்கரே'' .

தலையில் முண்டாசை ஒரு முறை அவிழ்த்து இருக்க மறுபடியும் கட்டிக்கொண்டு மீசையை இடது கையால் ஆசையாக தடவி விட்டு நாயக்கர் தொண்டையை கனைத்துக் கொண்டு தனது கேள்வியை கேட்டார்.

''இதோ பார் தம்பி, எதுக்கு ஐந்து தலை, நாற்பது காலு, குளத்துதண்ணிலே அடியிலே இருக்குது. சொல்லு?''

சாமு மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்தான். பல விதங்களில் கேள்வியை புரட்டி புரட்டி விடை தேடினான். ஒன்றுமே புரியவில்லை.

''என்னாது தம்பி அது சொல்லு?''

மீண்டும் மீண்டும் தலையை சொரிந்துகொண்டு கண்ணை மூடிக்கொண்டு ஒற்றைக் காலில் நின்று எல்லாம் யோசித்தான் சாமு. ஹுஹும் விடை கிடைக்காமல் ஈனஸ்வரத்தில் ''தெரியலே நாயக்கரே '' என்று சொல்லி பையில் துழாவி ஆயிரம் ரூபாய் எண்ணி நாயக்கரின் நீட்டிய கையில் வைத்தான். அதை வாங்கி எண்ணி இடுப்பில் வேட்டியில் முடிந்து கொண்டு நாயக்கர் எழுந்து நின்றார். புளியந் தோப்புக்கு நடந்தார்.

''நாயக்கர், நீங்களே விடை சொல்லுங்க. அது என்னாது ?''

''அட போ தம்பி எனக்கு என்ன தெரியும். சும்மா ஏதோ வாயிலே வந்ததை கேட்டேன். இந்தா ஒத்தை ரூபா நான் தோத்ததுக்கு'' என்று சொல்லி நடந்தார்.



சாமு இப்போதெல்லாம் யாரையும் கேள்வி கேட்பதில்லையாம்.

Friday, January 25, 2019

NOSTALGIA



நாம் இந்நாட்டு மன்னர்கள் J.K. SIVAN

ஒரு பழம் புத்தகம்.... ஏதோ ஒரு கதை அதில் கண்ணில் பட்டது....

ஒரு பழையகாலத்து பரந்து விரிந்த காடு. அதில் எல்லாம் நிறைய இருந்து எதுவுமே கிடைத்தது. அதை பல மிருகங்கள் மாற்றி மாற்றி பலகாலம் ஆண்டுவந்தன. ஒரு சிங்கத்தின் பிடியில் அது வெகுகாலம் இருந்ததாம். இந்த சிங்கம் கொடியது. அதால் தீமை தான் அதிகம். என்று ஒரு மான் புரட்சி செய்தது. ஏன் சிங்கம் நன்றாக தானே நம்மை ஆள்கிறது. என்று கரடிகள், குரங்குகள் கத்தின. இல்லை சிங்கம் நம்மை அழிக்கிறது. மற்றொரு காட்டுக்கு இங்கிருக்கும் ஆடு மாடுகளை அப்புறப் படுத்தி ஒவ்வொன்றாக இங்கே அழிந்துவிடும். வேண்டாம் இது இனிமேல் என்று மானும் அதை சேர்ந்த ஆடு மாடுகள் கத்தின. சிங்கத்திற்கு பல இடங்களில் எதிர்ப்பு அதிகரித்தது. '' சரி நான் போகிறேன். நீங்களே உங்கள் புது ராஜாவை நியமித்துக் கொள்ளுங்கள்'' என்று முடிவெடுத்த சிங்கம் சும்மா போகவில்லை. இதோ இந்த ஓநாய்க்கு உங்களோடு இருக்க பிடிக்கவில்லையாம். அதன் கூட்டத்துக்கும் ஒரு இடம் கொடுத்துவிட்டு மீதியை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று காட்டை ரெண்டு மூன்று துண்டாக்கிவிட்டது. மான்கள் ஆடுகள் குதிரைகள் குரங்குகள் சந்தோஷத்தால் கூத்தாடி தங்களுக்கு புதிய தலைவனாக இருக்க அந்த கிழ மானையே விரும்பினாலும் அது ஏற்காமல் ஒரு வரி குதிரையை அடையாளம் காட்டி அது பொறுப்பேற்றது. வரிக்குதிரை நல்லது மாதிரி தான் தெரிந்தது. அதனிடம் நிறைய எதிர்பார்த்த விலங்குகள் ரெண்டு மூன்று தலைமுறைகள் காத்திருந்தன. வரிக்குதிரை வம்சம் வரிசையாக கூட்டம் சேர்த்து வருஷங்கள் தான் ஓடியது. அதன் கூட்டம் சுபிக்ஷமாக வளர்ந்தது மற்றதெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு மேலே பார்த்தது...... இந்த காட்டில் எல்லாம் நிறைய இருந்தாலும் நமக்கு ஏன் இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லை? இந்த கேள்விக்கு பதில் தெரியாத விலங்குகள் காட்டில் ஒரு மாறுதல் உண்டுபண்ணி ஒரு காளை மாடு பொறுப்பேற்றது. அதால் முடிந்ததை செய்தது. இது வரிக்குதிரை கும்பலு க்கு பிடிக்கவில்லை.... ஏகப்பட்ட ரகளை ......

''.சே என்ன கதை இது..உப்பு சப்பு என்று ... மேலே படிக்க எனக்கு பிடிக்கவில்லை..

இன்று ஜனவரி 26. காலை 7 மணிக்கு கொடி ஏற்றுவார்கள்.... மிட்டாய் கொடுப்பார்கள். நான் எட்டு வயதில் சுதந்தர இந்தியப் பையன் ஆனவன். சூளைமேடு கார்பொரேஷன் ஸ்கூலில் முதல் நாளே சுப்ரமணிய அய்யர் சொல்லிவிட்டார். 'டே பசங்களா, நாளைக்கு காலம்பர 6 மணிக்கு எல்லோரும் இங்கே வரணும். டிரஸ் பளிச்சினு இருக்கணும். எவனாவது குளிக்காம, தலை சீவாம, அழுக்கு டிரஸ் சோட வந்தால் பிரம்பு பழம் ஒவ்வொரு கையில் அஞ்சஞ்சு சூடா கிடைக்கும். ஜாக்ரதை'' இப்படியே சுதந்திர தினம், ரெண்டு வருஷம் கழித்து குடியரசு தினம்.......யதேச்சாதிகாரத்தொடு குடியரசு விழா எங்களுக்கு. .

குடியரசு தினம் என்றால் என்ன என்று எங்கள் யாருக்குமே எதுவுமே தெரியவில்லை. பள்ளி மைதானத்தில் தூங்கு மூஞ்சி மரத்தின் அருகே உயரமாக ஒரு கம்பத்தில் கொடி ஏற்றி பாடுவார்கள், பெண்கள் கோலாட்டம் கும்மி அடிப்பார்கள். வரிசையாக நிற்க வைத்து மிட்டாய், கொடி எல்லாம் கொடுப்பார்கள். யாராவது ஏதாவது பேசின பிறகு தான் மிட்டாய் என்பதால் புரியாமலே அந்த பேசும் ஆள் எப்போது பேசி முடிப்பார் என்று காத்திருப்போம்.

காக்கி அரை நிஜாரை வீட்டிலே துவைத்து, அதை கையாலே அழுத்தி சுருக்கம் நீக்கி, பஞ்ச பாத்ரத்தில் தணல் நிரப்பி துணியால் பிடித்துக்கொண்டு தாழ்வாரத்தில் தரையில் அதற்கு மேற்படி ''இஸ்திரி'' போட்டு அதன் உடன்பிறவா அரைக்கை பச்சை கோடு போட்ட (என்னிடமிருந்த ஒரே ஒஸ்தி யான சட்டை ) ஒரு நல்ல சட்டைக்கும் இஸ்திரி போட்டு அணிந்து காலில் செருப்பில்லாமல் நடந்து வந்து 6 மணிக்கு பள்ளியில் முதல் சுதந்திர தினத்தை கொண்டாடியபோது எனக்கு வயது 11.

சரஸ்வதி, சரோஜினி டீச்சர்கள் எல்லாம் பெண்களை ஒருபுறமும் பையன்களை ஒருபுறமும் உயரம் பார்த்து கொடி கம்பத்தை சுற்றிலும் வரிசைப் படுத்தி நிறுத்தினார்கள். கொடி கம்பத்திற்கு முதல் நாளே பச்சை சிவப்பு வெள்ளை என்று எது முதலில் சிகப்பா பச்சையா என்று சுப்ரமணிய ஐயரிடம் பல முறை கேட்டுக்கொண்டு அப்பாதுரை கொடி கம்பத்திற்கு வர்ணம் பூசியது ஞாபகம் இருக்கிறது. சௌராஷ்ரநகர் கிருஷ்ணமூர்த்தி மரம், கொம்பு எல்லாம் குரங்கு போல் ஏறுவான். அவனை கொடி மர உச்சியில் ஏறச்சொல்லி கொடியை மடக்கி கயிற்று முடிச்சுக்குள் சுமாராக செருகி கயிற்றின் நுனியை இழுத்ததும் உடனே சரியாக அவிழுமாறு வைக்கணும் '' என்று சுப்ரமணிய அய்யர் உத்தரவு கொடுத்தார்.

தொட்டியில் நீர் நிரப்புவது, மரங்களின் இலைகளை பெருக்குவது, வேளா வேளைக்கு தூங்குமூஞ்சி மரக்கிளையில் தொங்கிய இரும்பு தண்டவாள துண்டை அடித்து மணி ஓசை எழுப்புவது போன்ற வேலைகளை செய்து வந்த அப்பாதுரை பள்ளிக்கூட தரை முழுதும் சுத்தமாக இலை தழை இல்லாமல் வைத்திருந்தார்.

சுண்ணாம்பு கோடுகள், நல்வரவு எல்லாம் வாசல் வரை கோலமாக எழுதி வைத்திருந்தது. வாழிய செந்தமிழ் பாட்டுபாடுவதற்கு ஆறு ஏழு பெண்கள் கடைசி நிமிஷம் வரை பயின்று கொண்டிருந்தனர். சரோஜினி டீச்சர் பாடிக் காட்டிக் கொண்டிருந்தாள் . ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு மாதிரி பாடுவாள். . வெகு நேரம் காத்துக் கொண்டு நிற்போம்.

ஏழரை மணிக்கு வடிவேல் நாயக்கர் வெள்ளை வேஷ்டி அரைக்கை கதர் ஜிப்பா நெற்றியில் பட்டையாக திருநீறு, குங்குமம். வெள்ளை மீசையோடு கை ரிக்ஷாவில் வந்து இறங்கினார். அப்போதெல்லாம் சூளைமேட்டில் அதிகம் சைக்கிள் ரிக்ஷா கிடையாது. குதிரை வண்டி, அல்லது கை ரிக்ஷா தான். ஒருவர் இருவர் போவதாக இருந்தால் கை ரிக்ஷா, நிறைய பேர் போனால் குதிரை வண்டி. வடிவேல் நாயக்கர் சூளை மேட்டில் ரெண்டு மூன்று கடைகள் வைத்திருந்தவர். துணிமணி, , மளிகை கடைகள். காந்தி பற்றி எல்லோரிடமும் பேசுவார்.

நாயக்கர் எல்லோரையும் தலையைச் சாய்த்து மிரள மிரள பார்த்து மேல் துண்டால் முகம் துடைத்துக் கொண்டார். அவருக்கு கூட்டம் பிடிக்காது. கூட்டத்தில் பேசுவது சித்ரவதை.

சுப்ரமணிய அய்யர் ''நமது நாட்டில் இன்று குடியரசு தினம். என்று ஒன்றிரண்டு வார்த்தைகள் இரத்தின சுருக்கமாக சொல்லி விட்டு ''நாயக்கர் ஐயா கொடியேற்றுவார். பேசுவார்'' என்றார்.

நாயக்கர் கிணற்றில் வாளியில் நீர் இறைப்பதைப் போல் சர் சர் என்று கயிரை இழுத்து அது கம்பத்தின் உச்சியில் திரும்பி நின்று நான் அவிழமாட்டேன் என்றதால் கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கம்பத்தின் மீது தாவி ஏறினான். அதை அங்கே மெதுவாக இழுத்து சரி செய்து திருப்பிவிட்டு இறங்கினான். அதற்குள் நாயக்கர் கயிற்றை இழுத்து கிருஷ்ணமூர்த்தி மீது மலர் மாரி பொழிந்தது.

''குழந்தைகள் பாடட்டுமே'' என்றார் நாயக்கர்.

சரோஜினி ஜாடை காட்ட பெண்கள் கோரசாக வாழிய செந்தமிழ், தாயின் மணிக்கொடி எல்லாம் பாடினர். டான்ஸ் ஆடினார்கள் .நாயக்கர் கைதட்டினார். உடனே நாங்கள் எல்லோரும் கை தட்டினோம்.

''உங்க கையாலே முட்டாய் கொடுங்கோ'' என்று சுப்ரமணிய அய்யர் சொல்லி நாயக்கரிடம் முதல் மிட்டாய் பெற்றார். பிறகு டீச்சர்கள். அப்பாதுரை, பிறகு சின்ன பெண்கள், சின்ன பையன்கள், அப்புறம் பெரிய பெண்கள் பையன்கள். நாயக்கர் பலசரக்கு கடை வைத்திருந்ததால் கோழி முட்டை சைஸில் கலர் கலராக மிட்டாய் சப்ளை பண்ணினார். அது பாதியிலேயே தீர்ந்தது விட்டதால். அச்சு வெல்லம் எமர்ஜென்சி சப்ளையாக கொண்டுவரச் சொல்லி எங்களுக்கு எல்லாம் அச்சு வெல்லக் கட்டி தான் கிடைத்தது. கோழிமுட்டை மிட்டாய் கிடைக்கவில்லை. முதல் குடியரசு ஏமாற்றம். நாயக்கர்வாள் குடியரசு தின வாழ்த்து செய்தி சொல்லுங்க '' என்று ஹெட்மாஸ்டர் சுப்ரமணிய ஐயர் சொல்ல
''நீங்களே எதாவது சொல்லிடுங்க'' என்ற நாயக்கருக்கு வியர்த்து கொட்டியது.
பிறகு வாசலில் தண்ணீர்ப்பந்தல் வைத்து வருவோர் போவோர்க்கு நீர் மோர் பொறி கடலை சப்ளை செய்ய சுப்ரமணிய ஐயரிடம் கொஞ்சம் அரிசி அவல் பொறி மூட்டை, சில மோர் பானைகள் எல்லாம் கொண்டுவரச் சொல்லி நாயக்கர் தந்து விட்டு கை ரிக்ஷாவில் உட்கார்ந்து இழுக்கப்பட்டு விரைந்தார்.

அப்போதைக்கும் இப்போதைக்கும் என்ன வித்யாஸம் என்று யோசித்தேன். அப்போது குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாமல் வளர்க்கப் பட்டோம். இப்போது அவர்களுக்கு தெரியாதது இல்லை. நாயக்கர் போன்றோர் உதவி செய்ய ஆசைப் பட்டார்கள். போட்டோ, பேப்பரில் படம் பேர், என்று ஆசைப்பட தெரியவில்லை. பேசவே தெரியாது. இப்போதும் மிட்டாய் கொடுக்கிறார்கள். நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சுப்ரமணிய ஐயர் போல் இன்றும் நிறைய பேர் சொல்கிறார்கள். அர்த்தம் ஏனோ புரியவில்லை.



MORAL STORY




கடவுள் தந்த பரிசு J.K. SIVAN

பாண்டி துரைக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. சே என்ன உலகம், எனக்கு ஒரு வேலையும் கிடைக்க மாட்டேன் என்கிறதே. இந்த கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? அப்படி என்றால் ஏன் என் குறை அவர் காதில் விழவில்லை? எனக்கு உதவ ஓடி வரவில்லையே. நேற்று கூட ஒரு கதை கேட்டேன். ஒரு பிரசங்கி கடவுள் நமக்கு எல்லாம் கொடுப்பவர் என்கிறார் என் விஷயத்தில் அப்படி ஒன்றும் காணோமே.

பாண்டித்துரை தாடி வளர்த்துக்கொண்டு காவி அணிந்து கொண்டு ஒரு குருவை தேடி அலைந்தான். ஒரு நாள் காலை அவன் வசித்த கொட்டாம்பட்டி கிராமத்துக்கு ஒரு சந்நியாசி வந்தார். எல்லோரும் அவர் பெரிய ஞானி.கேட்டதெல்லாம் ஆருள்பவர் என்கிறார்கள். பாண்டி அவரை தேடி சென்றான். அவரை தனியாக பிடிக்க முடியவில்லை. எப்போதும் யாராவது அவரை சூழ்ந்த வண்ணம் இருந்தார்கள். முதியவர். முகத்தில் தேஜஸ் தெரிந்தது.

அன்று சாயந்திரம் அவரை தனிமையில் சந்திக்க முடிந்தது. அவரிடம் தனது குறைகளை சொல்லி அழுதான். சாமியார் அவனுக்கு அறிவுரைகள் சொன்னார்.

''சரி அப்பனே கடைசியாக உன் குறை என்ன என்று சுருக்கமாக சொல்லு. ''

''இந்த கிருஷ்ணன் பாரபக்ஷம் உள்ளவன் என்று தெரிகிறது சுவாமி. எத்தனையோ பேரை லக்ஷாதி பதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் ஆக்குகிறான். எனக்கு மட்டும் ஒன்றுமே கொடுக்கவில்லையே. ''

''சரி என்னை சில பேர் சிலது வேண்டும், நிறைய பணம் தருகிறேன் என்று சொ
ல்கிறார்கள். அதை உன்னிடம் அறிவிக்கிறேன். நீ தந்து அவர்களிடமிருந்து வேண்டிய பணம் பெற்று சந்தோஷமாக இருக்கிறாயா?''

''சரி சுவாமி. சொல்லுங்கள்''

ஒரு பக்தன் மனைவிக்கு ஒரு கை தேவை. உன்னிடம் இரண்டு கை இருக்கிறதே ஒன்றை தருகிறாயா ஒரு லக்ஷம் ரூபாய் தருவார்களாம்.

முதல் தடவையாக ஆசையாக தன் இரு கைககளையும் தடவிப் பார்த்துக்கொண்டான் பாண்டி. ''இல்லை சுவாமி என்னால் தர இயலாது.''

ஒரு கால் தேவையான ஒருவர் அட்ரஸ் இருக்கிறது எவருக்காவது ஒரு காலை கொடுக்கிறாயா ஐந்து லக்ஷம் தருவார்.

''ஐயோ என் காலை நான் தரமுடியாது சுவாமி.''
நீ எதை கேட்டாலும் கொடுக்கிறேன், வீடு, வாசல், கார், பேங்கில் நிறைய பணம், எல்லாம் தர ஒருவர் தயார். உன் இரு கண்களை கொடுக்கிறாயா''

''போதும் சுவாமி, நான் உலகத்துல இருக்கிற அத்தனை பணம் கொடுத்தாலும் என் கண்களை தரமாட்டேன். ''

''அப்போ என்ன சொல்றே நீ. ஒரு பைசாவும் நீ கொடுக்காமல் உனக்கு இவ்வளவு விலை உயர்ந்த பொருள்களை பகவான் கிருஷ்ணன் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் கூட உனக்கு நன்றி இல்லையே உனக்கு. அவரை குறை சொல்றியே'' அவர் கொடுத்ததை சரியாக உபயோகிக்க உனக்கு தெரியவில்லை என்றால் அவர் என்ன செய்வார். போய் அவரை நினைத்து நன்றாக உழைத்து சந்தோஷம் தேடு. உனக்காக அது காத்துக்கொண்டிருக்கிறது.



நல்லவன் கெட்டவன் எல்லோருக்கும் பகவான் பாரபக்ஷம் கொஞ்சமும் இன்றி, அருமையான இந்த சொத்துக்களை கொடுத்திருக்கிறார். நன்றி கூறி நாம் அவற்றை நல்லபடியாக ஜாக்கிரதையாக நமக்கும் பிறக்கும் பயன்படுமாறு உபயோகிக்க வேண்டாமா?

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...