Wednesday, January 16, 2019

KRISHNA KARNAMRUTHAM



கிருஷ்ண கர்ணாம்ருதம்   J.K. SIVAN 
லீலா சுகர் 
                   
                      யார் இந்த கிருஷ்ணன் ?

கிருஷ்ணன் -- அடடா,  அவன் பெயருக்கு தான் எத்தனை அர்த்தங்கள்!  ''கர்ஷதி'' -  எல்லோர் உள்ளங்களையும் ஆகர்ஷிப்பதால் கிருஷ்ணன்.  திருடன்...  எத்தனை கோபியர் வீடுகளில்  வெண்ணை சட்டி  அபேஸ். அல்லது உடை பட்டது. வெண்ணை மட்டுமா, உள்ளங்களையும் திருடியவன்,   அதால் கிருஷ்ணன்.  கருப்பு என்று ஒரு அர்த்தம். அவன் கார்மேக வண்ணன், காரொளி வர்ணன்.சச்சிதானந்த ஸ்வரூபன் என்று ஒரு அர்த்தம்.
ஆமாம்   கிருஷ்ணன் ஏன் பிறந்தான்?   சும்மா  ஒரு அவதாரம் என்று சொல்லலாமா?  இல்லையே. நிறைய பேருடைய  விருப்பங்களை, அபிலாஷைகளை பூர்த்தி செய்ய அல்லவோ அவன் பிறந்தான்.? கொஞ்சம் சொல்லட்டுமா?

தேவகி, வசுதேவர், யசோதை, நந்தகோபன்,  இவர்களுடைய முன் பிறவியில்  ''நானே உங்களுக்கு மகனாக வருகிறேன்'' என்று வாக்கு கொடுத்து அதை நிறைவேற்ற கிருஷ்ணனாக பிறந்தான்.

துஷ்ட நிக்ரஹ , சிஷ்ட பரிபாலனம் பண்ண, பூமியில் பாரம் குறைய, அக்கிரமங்கள் அழிய,  வழக்கமாக நாராயணன் எடுத்த ஒரு அவதாரம் கிருஷ்ணன்.

முந்தைய அவதாரமான  ராமாவதாரத்தில்  தண்ட காரண்ய ரிஷிக்கள் , ,  ''ராமா உன்னை ஆலிங்கனம் பண்ணிக்கொள்ள வேண்டுமே  ''என்று ஆசைப்பட்டபோது, நிச்சயம், அடுத்த ஜென்மத்தில் நீங்கள் என்னையும்  நான் உங்களையும் ஆலிங்கனம் செய்துகொள்வோம்  என்று வாக்களித்து அவன் கிருஷ்ணனாகவும் , அவர்கள் கோபிகளாகவும் துவாபர யுகத்தில் பிறந்தார்கள்.  அவ்வாறே தேவர்கள், தேவமாதர்கள் விருப்பமும் ஆயர்பாடியில் நிறைவேறியது. ஒரு படி மேலே போய், நாராயண பட்டத்ரி நாராயணீயத்தில்  உபநிஷத்துக்களுக்கும் அப்படி ஒரு ஆசை என்கிறார். கிருஷ்ணனாக அவதரித்து, அவரவர் விருப்பத்திற்கேற்ப, நண்பன், சகோதரன், உறவினன், காதலன் என்ற உறவுகள் ஏற்படுத்திக்கொண்டான் கிருஷ்ணன்.   தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ண எடுத்த அவதாரம்.  எல்லாவற்றுக்கும் மேலாக  மனிதர்களாகிய
நமக்கு  கீதாசாரம் உபதேசிக்க அர்ஜுனன் மூலம்  பகவத் கீதையை அளிக்க எடுத்த அவதாரம் கிருஷ்ணன்.
இன்னும் நமக்கு தெரியாத எத்தனையோ காரணங்கள் கூட இருக்கலாம். ஒவ்வொன்றையும் சொல்லிவிட்டா கிருஷ்ணன் செய்பவன்.

ஸ்ரீ லீலா சுகர் எழுதிய கிருஷ்ண கர்ணாம்ருதம் ஒரு அற்புத நூல்.  13ம் நூற்றாண்டு காவியம். கிருஷ்ணனை நேரிலும், தியானத்திலும், கனவிலும் கண்டு எழுதியது. நிறைய  கிருஷ்ணா கர்ணாம்ருத பாடல்கள்  அர்த்தம் புரியாமல் கேட்டு அனுபவித்திருக்கிறேன். கொஞ்சம் அர்த்தம் சொல்கிறேன் இனிமேல்.  இதில் என்னை ஈடுபட வைத்தது ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஸ்தோத்திரங்கள். 


கர்ணாம்ருதம் என்றால் சிலருக்கு புரியாமல் இருக்கலாம். சிம்பிள். கர்ணம் என்றால் காது. காது குத்தும் விழாவுக்கு கர்ண பூஷண பத்திரிகை வீட்டுக்கு நிறைய வந்திருக்குமே. அம்ருதம் என்றால் தேவ மிர்தம், பாற்கடலில் தேவர்களுக்கு கிடைத்த அமரத்வம் தரும் டானிக். அப்படி ஒரு இனிய சுவைமிக்க ஒரு வஸ்து காதுக்குள் நுழைந்தால் எப்படி சந்தோஷமாக இருக்கும். நல்ல பாடல், இனிய குரல், அர்த்தம் செறிந்த ஒரு கவிதை, சுகமான ராகத்தில் காதுக்குள் நுழைந்தால்....?? அதைதான் நான் மேலே சொன்ன சிம்பிள் தமிழில் ''இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே'' என்று பாரதியார் தனக்கே உரித்தான கொஞ்சும் தமிழில் சொன்னார்.

அப்படி இன்பத்தேனாக காதில் நுழையும் ஒரு அற்புத பாடல் தொகுப்பு பக்தி நிறைந்த ''கிருஷ்ண கர்ணாம்ருதம்'' இதில் என்ன அதிசய பொருத்தம் என்றால். கிருஷ்ணன் என்று சொன்னாலே என் போன்றோருக்கு ''கிக்'' ஏறிவிடும். அந்த கிருஷ்ணனை இன்னும் அற்புதமாக வர்ணித்து இனிய சுவை கூட்டி ஸ்லோகங்களாக சொன்னால்....!! அது தான் கிருஷ்ண கர்ணாம்ருதம்.

ஒரு அபூர்வ பக்தி ரசம் சொட்டும் காவியம் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். யாருடைய கர்ணத்தில் (செவியில்) இது அம்ருதமாக பாய்கிறது? ''தேன் வந்து பாயுதே'' என்று பக்தன் காதிலா, அல்லது பக்தனின் பரிசுத்த பக்தி பாடல் -தேனாக பகவான் காதிலா? எப்படி எடுத்துக்கொண்டாலும் சரியாகவே உள்ளது. என்னை மிகவும் ஈர்த்தது இந்த ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். ஸ்ரீ எம். கே. வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய இந்த ஸ்லோகங்களின் அர்த்தங்கள் படித்தேன். ரொம்ப ரசித்தேன். என் நண்பர், நமது முகநூல், வாட்ஸாப் அன்பார் ஸ்ரீ பம்பாய் எஸ். விஸ்வநாதன் இதை புத்தமாக எனக்கு அனுப்பியிருந்தார். in a piece of paper, he added a note ''Respected Sivan sir, ...... I will be overjoyed if you find this book useful for your writing to us..''
மேற்கொண்டு  கிருஷ்ண கர்ணாம்ருதம்  ரசிப்போம் ருசிப்போம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...