Thursday, January 17, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மஹா பாரதம்

''துர்வாசருக்கு போஜனம்''

''நீ கேட்குமுன்பே நான் கூறுகிறேன் ஜனமேஜயா''
யுதிஷ்டிரன் ஆவலாக எதிர்பார்க்கும் கதையை வியாசர் சொல்கிறார். ''அதைச் சுருக்கமாக உனக்கு சொல்கிறேன் கேள் :

''குருக்ஷேத்ரத்தில் குடும்பத்தோடு ஒரு முனிவன் . அவன் பெயர் முத்கலன். வயலில் சிதறி கிடக்கும் தானிய மணிகளில் ஜீவித்து வாழ்ந்தவன். அந்த ஆசிரமத்தில் அவன் அதிதிகளையும் உபசரித்து மகிழ்வித்தவன். ஒருநாள் துர்வாசரும் அவரது சிஷ்ய கோடிகளோடு முத்கலனுக்கு அதிதி யாக வந்தார். அவர்களுக்கு போஜனம் ஏற்பாடு செய்யவேண்டுமே. எப்படியோ அவரையும் அவர் சிஷ்யர்களையும் திருப்தியோடு உணவளித்து அனுப்பி மீண்டும் மீண்டும் இருமுறை துர்வாசரும் சிஷ்யர்களோடு வந்து போஜனமருந்தி முத்கலனை வாழ்த்தி சென்றார்.

துர்வாசர் மிகக் கடுந்தவம் புரிந்த சக்தி வாய்ந்த மகரிஷி அல்லவா. அவர் முத்கலனுக்கு ஒரு வரம் அளிக்கிறார்:

'முத்கலா , உன் எளிய வாழ்க்கையிலும் நீ செய்யும் அதிதி போஜன உபசாரம் அநேகரை மகிழ்வித்து அவர்கள் ஆசியை நீ பெற்றதால் உன் உடலோடு நீ முக்தி அடையத் தகுந்தவன்''. இப்படி துர்வாசர் சொல்லியபோதே ஒரு தேவலோக புஷ்பக விமானம் அங்கே வந்து இறங்கி அதிலிருந்து ஒரு தேவ தூதன் அவர்கள் எதிரே கைகட்டி நின்றான்.''வாருங்கள் மகரிஷி முத்கலரே, தங்களை தேவலோகம் அழைத்து போகிறேன்'' என்றான்.

'முத்கலா, பார்த்தாயா உன் சேவையின் புண்ய பலனை?

முத்கலன் அந்த தேவதூதனைப் பார்த்து ''தேவனே, நமஸ்காரம். நான் தேவலோகம் செல்வதால் அங்கே புதிதாக நான் அடையப்போகும் இன்பம், நன்மைகள் என்னவென்று சொல்லமுடியுமா?

''மேல் உலகம் அதன் பேரில் உள்ளபடி இந்த உலகத்துக்கு மேலே உள்ளது. அங்கே தெய்வீக புருஷர்கள் ஸ்திரீகள், கல்ப தருக்கள், காமதேனு, தேவ ரிஷிகள், முனிவர்கள், தேவதைகள், சகலமும் உள்ளது. பாபிகளுக்கும், அதர்ம, அசத்திய ஆசாமிகளுக்கும் அங்கே இடம் இல்லை.

அதற்கு மேலும் பல உலகங்கள் உள்ளன. அங்கே பசி தாகம் எதுவுமே கிடையாது. பூக்கள் வாடாது. எங்கும் வேத நாதம் ஒலிக்கும். துன்பம், அசுபம் சம்பந்தப்பட்டது எதுவுமே கிடையாது. அழுக்கு இருட்டு, பயம் எதுவுமே இல்லை. இன்னும் மேலே உள்ள உலகங்களில் பிரம்ம லோகம், கைலாசம், எல்லாம் உள்ளன. அங்கு உள்ளவர்கள் ரிபுக்கள். தெய்வங்கள், தெய்வங்களின் தெய்வங்கள் எல்லாரும்.அங்கே இருப்பார்கள்.. அதற்கும் மேல் நாராயணன் மஹாலக்ஷ்மி உள்ள வைகுண்டம் உள்ளது. .அங்கே நேரமோ காலமோ இல்லை. இன்பமோ துன்பமோ பிரித்துப் பார்க்க முடியாத சஹஜ நிலை. இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இங்கிருந்து உன்னைப் போல் அங்கே செல்பவர்கள், தங்கள் புண்யபலன் தீரும்வரை இந்த இன்பம் துய்க்கலாம்.பிறகு பூமியில் மீண்டும் பிறவி எடுக்கவேண்டும்.

'' முத்கலரே, நான் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன், தயாராக இருந்தால் உடனே என்னோடு கிளம்புங்கள், தங்களை அழைத்துக்கொண்டு தேவலோகம் செல்வோம்.'' என்றான் தேவதூதன்.

முத்கலன் சிரித்தான். வணங்கியவாறு அந்த தேவதூதனிடம் ''தேவதூதா நீ செல்லலாம். என்னை அழைத்ததற்கு நன்றி. எனக்கு இன்பமோ துன்பமோ, எல்லாம் ஒன்றே. நீ சொன்னது எதுவுமே இங்கேயே நான் அனுபவித்து வருகிறேன்.எனக்கு வருத்தமோ, பயமோ, எதிர்பார்ப்போ, ஏமாற்றமோ எதுவுமே இல்லை. நீ போகலாம்'' இவ்வாறு முத்கலன் கூறினார். நீயும் யுதிஷ்டிரா, இவ்வாறு மனநிலை உள்ளவன் '' என்றார் வியாசர்.

பனிரண்டு வருஷங்கள் இவ்வாறே வனத்தில் வாழ்ந்தவன். இன்னொரு வருஷம் முடிந்து உங்கள் ராஜ்யத்தை பெற்று நல்லாட்சி புரிந்து மேன்மை பெறுவாய். என்று வாழ்த்து கூறிவிட்டு வியாசர் மறைந்தார்.

ஹஸ்தினாபுரத்தில் துரியோதனன் தூங்கவில்லை. எப்படியாவது பாண்டவர்களுக்கு துன்பம் மேலும் மேலும் விளைவிக்க வேண்டும் என்றே சிந்தித்துக்கொண்டிருந்தான். பாண்டவர்கள் அநேக ரிஷிகளுக்கும் முனிவர்களும் பிராமணர்களுக்கும் அன்னதானம் அளித்து ஆசிபெறுவது அவனுக்கு ஆத்திரத்தை கூட்டியது. அவன் ஆத்திரம் பொறாமையாக மாறுவதற்கு இன்னொரு விஷயமும் அவன் காதில் எட்டியது. திரௌபதியிடம் சூரியன் அளித்த ஒரு பாத்திரம் இருக்கிறதாம்.. அதில் அவள் சமைத்த உணவு எத்தனைபேர் வந்தாலும் அவர்களுக்கு திருப்தியாக சம்ருத்தியாக வளர்ந்து கொண்டே போகுமாம். அவளும் கடைசியில் சாப்பிட்டு விட்டு அதை கழுவி கவிழ்த்து வைத்தால் அடுத்து மறுநாள் தான் அது மீண்டும் தானாகவே அன்னதானம் அளிக்க பயன்படுமாம்'' -- இந்த விஷயம் நியாயமாகவே அந்த அநியாயக்காரனுக்கு எரிச்சலை மூட்டியதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

துரியோதனன் சிந்தனை இப்படி கொடிகட்டி பறக்கும் நேரம் பார்த்து ஒரு தூதுவன் உள்ளே நுழைந்து கை கட்டி நின்றான்.

''என்ன விஷயம் சொல்?''
'' மஹாராஜா மகரிஷி துர்வாசர் நமது தலைநகரம் ஹஸ்தினாபுரம் அருகே வந்துகொண்டிருக்கிகிறார்.''

அவன் கேட்ட விஷயம் அவனுக்கு ஒரு புதிய எண்ணத்தை மனதில் தோற்றுவித்தது.

பதினாயிரம் சிஷ்யர்களோடு துர்வாசரை வரவழைத்து அவருக்கு உபசாரம் செய்தான் துரியோதனன். துர்வாசரிடம் ஒரு பழக்கம். எப்போது பசிக்கும் என்று தெரியாது. பசித்தபோது உடனே உணவு கொடு என்று கேட்பார். உணவு கொடுத்தால் மகிழ்ந்து வரம் கொடுப்பார், கொடுக்கவில்லை என்றால் சபிப்பார். அந்த கோபக்கார ரிஷியின் வரமும் சாபமும் பலிக்கும். இதையே உபயோகித்தால் என்ன?

துரியோதனன் அளித்த விருந்தில் மகிழ்ந்து துர்வாசர் ''துரியோதனா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

''முனி ஸ்ரேஷ்டரே, எங்கள் குல மூத்தவன் யுதிஷ்டிரன். எங்களுக்கு அவன் மேல் பக்தியும் பாசமும் அதிகம். எங்களை மகிழ்ந்து வாழ்த்திய நீங்களும் உங்கள் அனைத்து சிஷ்யர்களும் இதேபோல் காம்யக வனம் சென்று திரௌபதி எல்லோருக்கும் அன்னதானம் அளித்து முடிந்து ஓய்வெடுத்து இருக்கும் அந்தி நேரத்தில் சென்று பிரத்யேகமாக அவர்கள் அளிக்கும் அன்னதான உபசாரம் பெறவேண்டும் ''

''ஒ அப்படியா, உனக்கு இது திருப்தி தரும் என்றால் நாங்கள் அங்கே செல்வோம்'' என்று வாக்களித்தார் துர்வாசர். துரியோதனன் கர்ணன் ஆகியோர் தங்கள் திட்டம் கை மேல் பலனளித்தது கண்டு பரம சந்தோஷம் கொண்டனர். துர்வாசர் பாண்டவர்களிடம் உணவு இல்லாத நேரத்தில் அவர்களை அணுகப்போகிறார் பத்தாயிரம் பேரோடும் பசியோடும். உணவில்லை என்றதும் அவர் கோபம் எப்படி எல்லை மீறும் என்ன சாபம் கொடுப்பார் பாண்டவர்களுக்கு என்று கற்பனையில் களித்தனர்.

துரியோதனனுக்கு வாக்களித்தபடியே துர்வாசர் ஒருநாள் காம்யக வனம் மாலை நேரத்தில் கிட்டத்தட்ட இருட்டியபிறகு சென்றார். திரௌபதி அன்றைய உணவு அத்தனையும் தானம் செய்து அனைவரும் உண்டபின் சூரியன் அளித்த அக்ஷய பாத்திரத்தை கவிழ்த்து வைத்துவிட்டு ஓய்வெடுத்த நேரம் துர்வாசர் பத்தாயிரம் பேரோடு பசியுடன் அதிதியாக வருகிறார் என்ற சேதி கிடைத்தது.

''அடடா, மகரிஷி துர்வாசர் இந்த அந்தி நேரத்திலா பதினாயிரம் சிஷ்யர்களோடு இங்கே வருகிறார்?.....



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...