Tuesday, January 8, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J.K. SIVAN 
மகா பாரதம் 
                                                            
                     கௌசிகனின் அதிர்ச்சி                                     
                                       
எல்லோருக்கும் தெரிந்த ஆனால் மறக்க முடியாத, மீண்டும்  மீண்டும்  ஞாபகத்துக்கு வரும்போது,  சிலருக்கு  புதிதாக,   இனிக்கும் சின்ன கதை.

கௌசிகன் என்று ஒரு பிராமணன் வேத சாஸ்திரங்கள் கற்று தேர்ந்து ஒரு மரத்தடியில் த்யானம் செய்து கொண்டிருந்தபோது மேலே மரக்கிளையில் இருந்த ஒரு கொக்கு அவன் மீது எச்சம் இட்டது.   கோபத்தோடு அந்த கொக்கை பார்த்தான்.  அட  இது என்ன ஆச்சர்யம்!    அந்த கொக்கு, அவன் பார்வைத் தீயிலே சுட்டெரிந்து கீழே விழுந்தது. கௌசிகன் தனது தவ வலிமையில் பெருமை கொண்டான். தான் ஒரு சக்திமான் என்று பெருமை அவனுக்கு. எவரையும், எதையும் ஒரு பார்வையாலேயே எரித்து விடக்கூடிய  ''நெற்றிக்கண்ணில்லாத  சிவன் ''.

கௌசிகன் ஒரு நாள் பிக்ஷைக்கு ஒரு வீட்டிற்கு சென்றபோது அந்த வீட்டு பெண்மணி பிக்ஷா பாத்திரத்தை சுத்தம் செய்து பிக்ஷை போடத்  தயாரானாள். அந்த நேரம் பார்த்து எங்கோ சென்றிருந்த அவள் புருஷன் பசியோடு வீடு திரும்பவே, அவனை கவனிப்பதற்காக வாசலில் இருந்த பிராமணனை  ''சற்று பொறுங்கள், கணவரை கவனித்து விட்டு வருகிறேன் ''  என்று சொன்னாள். கணவன் ஆகாரம் முடித்தபின்  வாசலில் காத்திருக்கும்  கௌசிகனுக்கு அவள் பிக்ஷை எடுத்துக். கொண்டு வாசலில்  அந்த பிராமணனிடம் வந்தபோது தான்  அவன் முகத்தில்  கோபத்தைக்  கவனித்தாள் .

''என் கணவர் எனக்கு தெய்வம். அவரை முதலில் உபசரித்தபின் உங்களுக்கு  பிக்ஷை போட  வருவதற்கு சற்று தாமதமானது''.
''பிராமணர்கள் அல்லவோ முதலில் கவனிக்கப்படவேண்டியவர்கள். அதிதி பிக்ஷை அல்லவோ முக்கியம். அதைக்காட்டிலுமா  உன் கணவனுக்கு உபசாரம் ஸ்ரேஷ்டமானது?' இது பிராமணர்களை அவமதிப்பது ஆகாதா? பிராமணர்கள் நெருப்பு போன்று சுட்டெரிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என்று தெரியாதா உனக்கு?

'பிராமணரே மன்னிக்கவும்.  நான் கொக்கல்ல. கோபம் தணியுங்கள். ரிஷிகள், முநிஸ்வரர்கள் கோபம் கொண்டு தவவலிமை இழந்தது நான் அறிவேன்.என் கணவனுக்கு பணிவிடை செய்வதே எனக்கு பிரதானமான கடமை.' மற்றதெல்லாம் அப்புறம் தான்.  இது தான் பதிவிரதா தர்மம். இதைப் பற்றி இன்னும் தெரியவேண்டுமானால்,   அவரவர் கடமையைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமானால்  இங்கிருந்து நேராக  மிதிலைக்கு சென்று, அங்கே ஒரு கடமை தவறாத ஒரு சாதாரண மாமிச தொழிலாளி இருக்கிறான். அவனை நாடுங்கள். அவன் சொல்லித்தருவான்''  என்று  அந்த பெண்மணி கூறுகிறாள். பிக்ஷை விடுகிறாள். கெசிகன் பெற்றுக்கொண்டு நடக்கிறான். 

கௌசிகனுக்கு  ஒரே ஆச்சர்யம்.  எப்படி இவளுக்கு என் பார்வையில் ஒரு கொக்கு  எரிந்தது தெரிந்தது? இவளை  இதற்கு முன் நான்  பார்த்ததே இல்லையே? அந்த பெண்ணின் ஆற்றலையும் தனது தவறையும் உணர்ந்தான்.   அவள் சொன்ன அந்த மாமிசம் விற்பவனை பார்த்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தான்.  மிதிலை சென்றான்.  விசாரித்தான்,  அந்த மாமிச வியாபாரியை  அவனது கடையில் சென்று பார்த்தான்.

தூரத்திலேயே அவனைப் பார்த்த அந்த மனிதன் ஓடி வந்து கௌசிகனை வணங்கினான். 

'என்னைச் சந்திக்க வந்ததற்கு நான் பாக்கியம் செய்தவன். நீங்கள் எதற்கு என்னை தேடி வந்தீர்கள் என்றும் எனக்கு தெரியும். யார் அனுப்பியது என்றும் உணர்வேன்' என்றான் அவன்.

இந்த இரண்டாவது அதிசயமும் கௌசிகனைப் புரட்டிப் போட்டது.

'வாருங்கள் என் வீட்டிற்கு'' என்று அவன் கௌசிகனை அழைத்து போனான்.

''நீ இவ்வளவு ஞானியாக இருக்கிறாய். அதற்கும் உன் மாமிசம் வெட்டி விற்கும் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லையே'' என்றான் கௌசிகன்.
''நான் செய்வது என் குடும்ப, குலத் தொழில். என் முன்னோர்களை, என் பெற்றோர்களை நான் தெய்வமாக வணங்குகிறேன். அவர்களுக்கு செய்யும் கடமையில் துளியும் தவறமாட்டேன். உண்மை பேசுவேன். உழைத்து வரும் வருமானத்தில் தான தர்மங்கள் செய்து மீதம் இருந்தால் அது என் குடும்ப ஜீவனத்துக்கு என்று வாழ்பவன். எங்கள் தேசத்தை ஜனகன் ஆண்டுவருகிறார். இங்கே தர்மம், நியாயம், நேர்மை, நீதிக்கு பஞ்சமில்லை. நாங்கள் எல்லோரும் அவரவர் கடமையை தவறாது செய்பவர்கள்.நான்கு வேதமும் இரட்சிக்கப் படுவது இங்கே. நான் செய்யும் தொழில் மாமிச வியாபாரம். ஆனால் என் உணவில் அது இல்லை.

பெரியோரிடம் மரியாதை, சேவை, சாந்தம், தான தர்மம் இதுவே சிறந்த பண்பு. வேதத்தின் சாரம் சத்தியம். சத்தியத்தின் செயல் சுய கட்டுப்பாடு. சுயகட்டுப்பாடின் வெளிப்பாடு பற்றற்று இருத்தல் என்று சிறந்த தர்மங்களை பற்றி எல்லாம் அந்த மாமிச வியாபாரி  கௌசிகனுக்கு விளக்குகிறான்.

மேலும் சொல்லுங்கள்  என்கிறான்  கௌசிகன்.  மாமிச வியாபாரி தொடர்கிறான்.

''என் தொழில் எனது பூர்வ ஜன்ம கர்ம பலன். எனவே அதை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும்''

சுருக்கமாக  சொல்ல வேண்டுமானால்,  பஞ்ச பூதங்கள், பஞ்ச இந்த்ரியங்கள், ஆத்மா இவற்றைபற்றி  எல்லாம் அந்த பிராமணன்  கௌசிகனுக்கு,   உபதேசம் செய்த மாமிச தொழிலாளி, அவனை தன்னுடைய வயது முதிர்ந்த பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கிறான்.

 ''இவர்கள் என் தெய்வங்கள், இவர்களை வணங்கிவிட்டு தான் மற்ற தெய்வங்கள் எனக்கு'' என்கிறான். நீ மிதிலையில் பார்த்த அந்த பெண் தனது கணவனுக்கு பணிவிடை செய்து பிறகே தெய்வங்களை பூஜிப்பவள். அவள் என்னை ஞானத்தால் அறிந்து உன்னை இங்கே அனுப்பினாள்''

நீ செய்த தவறை உணர்வாய். உனது பெற்றோர் ஆசி, அனுமதியின்றி நீ வேதம் கற்றுக்கொள்ள கிளம்பிவிட்டாய்.அவர்கள் துயரத்தில் கண் பார்வை இழந்தார்கள். உடனே திரும்பி சென்று அவர்களை அணுகி மன்னிப்பு கேட்டு, அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்கள் நல்லாசியை பெறு''  என்று  கௌசிகனுக்கு  அந்த மாமிச வியாபாரி அறிவுரை கூறுகிறான்.   கௌசிகன் தலை குனிந்து தனது ஊரை நோக்கி நடக்கிறான்.  

இனி அடுத்த கதைக்கு செல்வோம். THE BOOK AINDHAM VEDHAM IN TWO VOLUMES AVAILABLE FOR DISTRIBUTION. INTERESTED MAY CONTACT 9840279080


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...