Friday, January 4, 2019

GEETHA GOVINDAM

கீத கோவிந்தம் J.K. SIVAN
ஸ்ரீ ஜெயதேவர்
கிருஷ்ணா, நீயே தீர்ப்பளி ?

வாத்சல்யத்துக்கு வசப்படாதவர் யார்? கண்ணன் ராதை உறவு அத்தகையது. பேராற்றல் உடைய கிருஷ்ணன் என்றால் அந்த ஆற்றல் ராதாவே தான் என்கிறது ஜெயதேவரின் கீதகோவிந்தம்.

எந்த அளவுக்கு ராதையை கண்ணன் உயர்வாக போற்றி மதித்தான் என்பதை ஜெயதேவர் அஷ்டபதியில் ''‘மம சிரஸி மண்டனம் தேஹி பத பல்லவ
முதாரம்’ என பாடுவதன் மூலம் அறியலாம். ‘ என்னுயிர் ராதா, உன்னுடைய தளிர்ப்பாதங்களை என் தலையில் வை’ என்பவன் கிருஷ்ணன் இங்கே.

இது எதை குறிக்கும். பக்தனின் பூரண பக்தியில், பாசத்தில், பகவான் நெகிழ்கிறான். வசப்படுகிறான். ஒரு குழந்தை நடக்க கற்றுக்கொள்ளும்போது தாயை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், குழந்தையை நோக்கி தாய் பாசத்தோடு நான்கு அடிகள் எடுத்து வைப்பாளல்லவா. அது போலவே.
பக்தனுக்காக இறைவன் எந்த அளவுக்கு இறங்கிவருகிறான் என்பதை கீத கோவிந்தம் காட்டியிருக்கிறது.

ஏற்கனவே நான் சொல்லியபடி, ராதையின் பரிசுத்தமான பக்தியால், வாத்சல்யத்தால் கண்ணன் வசப்பட்டு இந்த வரிகளைச் சொல்வதாக ஜெயதேவர் எழுதிவிடுகிறார். அதன் பிறகு, இதென்ன அபச்சாரமாக இருக்கிறதே என்று அதை அடித்துவிட்டு, ஆற்றில் நீராடச் செல்கிறார். ஜெயதேவரின் தோற்றத்தில் வரும் கண்ணனோ, அடித்த வரிகளை மீண்டும் எழுதிவைக்கிறார். ஜெயதேவருடைய மனைவி பத்மாவதி கொடுக்கும் பிரசாதத்தையும் உண்டுவிட்டுச் செல்கிறார்.

ஆற்றில் குளிக்கச் சென்ற ஜெயதேவர் திரும்பிவந்து பார்த்தால், ஓலையில் தான் அடித்த வரிகள் மீண்டும் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறார். ‘நீ எழுதினாயா?’ என்கிறார் மனைவியிடம். ‘நீங்கள்தானே எழுதிக் கொண்டிருந்துவிட்டு, உணவருந்தினீர்களே’ என்கிறார். இது கண்ணனின் லீலைதான் என்பதை ஜெயதேவர் உணர்ந்துகொள்கிறார்.

ஒரு நாள் பூரி ஜகந்நாதர் கோயிலுக்குச் சென்ற அரசன், ஜகந்நாதரின் ஆடைகள் கிழிந்திருப்பதைப் பார்த்து திகைக்கிறான். கோபத்தோடு ''ஏன் இப்படி ஜெகந்நாதனுக்கு கிழிந்த வஸ்திரங்களை சாத்துகிறீர்கள் ?'' என்கிறான் அர்ச்சகர்களிடம்.

'' அரசே உங்கள் அனுக்ரஹத்தால், தினமும் புதிது புதிதாகத்தான் ஆடைகளைச் சூட்டுகிறோம். ஆனாலும், ஆடைகள் கிழிவதன் மர்மம் புரியவில்லை என்றார்
களாம் அர்ச்சகர்கள்.

அன்றிரவே ஜெகந்நாத பக்தனான அரசனுக்கு ஸ்ரீ ஜகந்நாதரே இந்தக் குழப்பத்துக்கு என்ன காரணம் என்று சொன்னாராம். அது, கீத கோவிந்தம் பாடல்களை யார் பாடினாலும் அவர்களின் பின்னால் நான் போய்விடுவேன். ‘ஸ்ரித கமலா’ என்னும் பாடலை மாடு மேய்க்கும் ஒரு பெண் பாடிக்கொண்டே போவாள்.

அவளின் பின்னாலேயே காட்டுக்குள் செல்வதால், கல், முள்ளில் ஆடைகள் மாட்டி கிழிந்துவிடுகின்றன என்றாராம் ஜகந்நாதர். உடனே அரசன் இனி அஷ்டபதி பாட்டைக் கண்ட இடங்களில் பாடக் கூடாது. கோயிலில் ஜகந்நாதரின் முன்பாக மட்டுமே பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தாராம்.

ஊடலை கட்டுக்குள் வைத்து, விரசமாக்காமல் தக்க இடத்தில் முற்றுப்புள்ளி வைத்து இன்னொரு கூடலுக்கான தொடக்கப்புள்ளியாக, தொடர் புள்ளிகளாக பேரின்பமாக அமைத்த காட்சித் தொகுப்புகள், பரிபூரணமான பேரின்பத்தை நோக்கி இழுத்துச் செல்லும் கலைப் படைப்பாக பக்தர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது ஜெயதேவரின் கீத கோவிந்த அஷ்டபதி பாடல்கள்.

ஸ்ரீ ஹரியின் விருப்பப்படி வியாச முனிவர் தான் ஒரு பிராமண குடும்பத்தில் துந்துபில்வா என்னும் ஊரில் ஜெயதேவராக அவதரித்தார் என்பார்கள். . சகல புராண இதிகாசங்களையும் கற்றறிந்த அவர், கடவுளின் புகழ் பாடுவதே இந்த கலியுகத்தில் சிறந்த வழி என தெரிந்து கொண்டார். அவர் காலத்தில், கிருஷ்ண நாம ஜபம் பிரசித்தியாக இருந்தபோதிலும், இவர் கிருஷ்ண லீலைகளை பாடலாக கீதகோவிந்தம் என்ற பெயரில் எழுதினர். இவை பத்ம புராணத்தை பின்னணியாக கொண்ட பாடல்கள்.

இதில் ராதா-மாதவ பிரேமையையும், கோகுலத்தில் கிருஷ்ணனின் லீலைகளைப் பற்றியும் பாடியுள்ளார். இதை பல பண்டிதர்களும், மக்களும் விரும்பிப்
பாடலாயினர்.

ஜெயதேவரின் கீத கோவிந்தம் கிருஷ்ண பக்தி பாடல்கள் பிரபலமாக பரவுவதை அறிந்த அந்த ஊர் ராஜா, தானும் கிருஷ்ணன் மேல் இத்தகைய பாடல்களை கிருஷ்ண பக்தி சாகரமாக எழுதி அது மக்கள் மத்தியில் ஜெயதேவரின் கீத கோவிந்தம் போலவோ, அதைவிட சிறந்ததாகவோ வரவேற்கப்படவேண்டும் என்று ஆசைப்பட்டான். தவறில்லை. எனவே அவன் தனது பாடல்களை ஒரு புத்தகமாக்கியோ, ஓலைச்சுவடாக்கியோ எல்லோரும் அதை ஏற்க கட்டளையிட்டான். ராஜா என்பதால் அவனால் கட்டளையிட முடிந்தது.
அதிகாரம் வேண்டுமானால் செலுத்தலாம். மனதில் கிருஷ்ண பக்தியை தனது பாடல்கள் மூலம் அவனால் வற்புறுத்த முடியுமா. எந்த வித ஆரவாரமும் இன்றி ஜெயதேவரின் கீதகோவிந்தம் மக்கள் ஆதரவைப் பெறுவதை அறிந்த அரசன் ஒரு திட்டம் இட்டான்.

கிருஷ்ணா, நானும் உன் பக்தன். உன் மீது ஜெயதேவரைப் போலவே முழு மனதோடு பாடல்கள் இயற்றியுள்ளேன். உன் ஆலயத்தில் வைத்து ஜெகந்நாதா, உன் சந்நிதியில் உன் முன்பு, என் பாடல்களையும், ஜெயதேவர் பாடல்களையும் வைத்து கதவைப் பூட்டி விடுகிறேன். எது சிறந்தது என்பதை நீயே தீர்ப்பளிக்கவேண்டும். இப்படி ஒரு ஒப்பந்தம் ஜெகந்நாதனோடு அந்த ராஜாவுக்கு. அன்று இரவு அவ்வாறே இருவர் பாடல்களும் ஜெகந்நாதன் முன் வைக்கப்பட்டு ஆலயம் கதவுகள் மூடப்பட்டது.

மறுநாள் காலை ஆர்வத்தோடு ராஜா விடியற்காலையே குளித்து தனது கடமைகளை முடித்து சந்நிதி வந்து கதவு திறந்து பார்த்தான். ஸ்ரீ ஜெயதேவரின் பாடல்கள் மட்டுமே அங்கு இருந்தது. ராஜாவின் பாடல்கள் தொகுப்பு வெளியே கிடந்தது. அரசன் விசனமடைந்தான். '' ஜெகன்னாதா என்னை மன்னித்துவிடு, என்னையும் ஏற்றுக்கொள்'' என வேண்டினான். ஜெகந்நாதன் என்ன செய்தார்??

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...