Saturday, January 12, 2019

AVVAIYAR



                பக்தியும்  பகவான்  நட்பும்  J.K. SIVAN 
 

சேர நாட்டில்  ரொம்ப காலத்துக்கு முன்பு  ஒரு ராஜா.  திருமாக்கோதை என அவனுக்கு பெயர்.  நல்ல  சிவபக்தன்.  இப்போதைய  திருச்சூர் மாவட்ட கொடுங்களூர்  தான் அப்போது  மகோதை.  தலைநகரம்.   இந்த ராஜாவுக்கு  ஒரு சக்தி இருந்தது.  அவன் மிருகங்கள் பக்ஷிகள் பேசும் பாஷை புரிந்து கொள்வான். யார்  இந்த  திருமாக்கோதை என்று மண்டையை சொறிந்து கொள்ளவேண்டாம்.  அவர்வேறு யாருமில்லை.  நமக்கு அறிமுகமான சேரமான் பெருமாள் நாயனார்.   அவருக்கு கழ
ற்றறிவார் நாயனார்,  பெருமாக் கோதை என்ற பெயர்களும் உண்டு.

இந்த  ராஜா   தனது பதவியாலும்  உடலில் தரித்த   ஆபரணம், ஆடையிலும் தான்  ராஜா. மனசிலே  சந்நியாசி.  பிறந்ததிலிருந்து  மனம் சிவன் பால் ஈடுபட்டு  கொடுங்களுருக்கு  பக்கத்தில் திருவஞ்சிக் குளத்திலுள்ள மகாதேவன் ஆலயத்தில்  தொண்டு செய்யும் சிவனடியார்.   சுந்தரர் கைலாயம் செல்ல வெள்ளையானையில் ஏறியஇடம் - திருவஞ்சிக்குளம் கேரளா

இவர் மனது பூரா சிவநாமம் நிரப்பி, உள்ளமெல்லாம் அந்த உள்ளங்கவர் கள்வனை நினைத்து கண்களில் நீர் பெருக  பாடும்போதெல்லாம், அந்த சிதம்பரம் நடராஜனின் ஆனந்த  தாண்டவ   சிலம்பொலி ''கலீர் கலீர்’ எனக் காதில் ஒலிக்கும்.   அவ்வளவு பாக்கியசாலி  இந்த ராஜா. 

ஒருநாள் ஏனோ அந்த சிலம்பொலி கேட்கவில்லை. ஏன்? 
என் பக்தியில் ஏதாவது குறையா. தப்பு ஏதாவது செய்துவிட்டேனோ?  மனமுடைந்த திருமாக்கோதை இனியும் சிவனுக்கு பிடிக்காமல் நான் இருந்தென்ன பயன்? இந்த உயிரை விட்டுவிடுவோம்  என வாளை  உருவின சமயம்  அவன் காதில் வழக்கமான சிலம்பொலி சலங் சலங் என கேட்டது.  தொடர்ந்து ஒரு குரலும் அசரீரியாக அவனுள் கேட்டது.

''அப்பனே, என் சிலம்பொலி உனக்கு கேட்கவில்லை என்பதற்கு காரணம்  உன் பக்தியில் ஏதோ குறை அல்ல.  என் இன்னொரு பக்தன் சுந்தரன் அற்புதமாக இயற்றி பாடிய தேவாரத்தில் மெய் மறந்து போனேன். என் கால்கள் ஆடவில்லை. என் சதங்கையும் ஒலிக்கவில்லை. அதனால் உனக்கும்  எதுவும் கேட்கவில்லை. சரியா?'' என்றது சிவன் குரல். 

சேரமான் பெருமாளுக்கு சுரீர் என்று மனதில் ஏதோ தைத்தது. ''அடடா  பரமேஸ்வரனையே கவர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை நான்  இதுவரை கேட்காமல் போய்விட்டேனே ''என்று மனம் நொந்து சுந்தரர் வாழ்ந்த திருவாரூர் சென்றார் . சுந்தரரின் நண்பரானார்.  ''எனக்கு கேட்கவேண்டும் நிறைய பாடுங்கோ '' என்று தேவாரப்பாடல்களை ப்பாடச்சொல்லி  கேட்டார். சேரமானின்  அன்புக் கட்டளைக் கிணங்கி  சுந்தரர் திருவஞ்சிக் குளம் சென்று  திருவாஞ்சிக்குளத்தில் மஹாதேவர் மேல் சுந்தரர்  பாடின தேவாரங்கள் அற்புதமானவை.
சிலகாலம் சேரமானோடு தங்கிய  பிறகு  பாண்டிநாடு சிவஸ்தலங்களை  தரிசித்து திருவாரூர் திரும்பினார் சுந்தரர்.

மீண்டும் சேரமான் அன்பு நினைவுக்கு வந்து திருவஞ்சிக்குளம் சென்றார். மகாதேவனை  நெஞ்சுருகி பாடினார். 

ஒருநாள்  ஸ்நானாதி கர்மங்கள் முடிக்க நேரமாகியதால், சுந்தரர் மட்டும் மஹாதேவ தரிசனம் காண சென்றார்.  பூவுலக வாழ்வு முடிக்கும் நேரம் வந்துவிட்டது அவருக்கு.  தலைக்கு தலை மாலை பதிகம் பாடினார். ஐராவதம் தேவ சிவ கணங்கள் புடை சூழ  சுந்தரரை வரவேற்று கைலாயம் அழைத்து செல்ல மஹாதேவர் ஆலய  வாசலில் காத்து நின்றனர் .  ''அடாடா என் நண்பன் சேரமான் இன்னும் வரவில்லையே. இவர்களை காக்க வைக்க கூடாதே''   என்று வருந்தி சுந்தரர்  தனியாக புறப்பட்டு சென்றார். 

பூதகணங்களும் காத்திருந்தமையால் ஐராவதத்தை வலம் வந்து யானையில் ஏறி கைலாயம் நோக்கி சுந்தரர் பயணமானார்.   தாமதமாக வந்த சேரமான்  சுந்தரரை ஆலயத்தில் காணாது இறைவன் அருளால் நடந்ததை அறிகிறார். தானும் அவரைத் தொடர்ந்து செல்ல வேண்டுகிறார். தனது குதிரையின் மீதேறி  அதன் காதில் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதி  ''சுந்தரரை பின் தொடர்'' என்கிறார்.  குதிரை பறக்க ஆரம்பித்து விட்டது. அதற்கும் புண்ணியம். கைலாச பதவி!  ஐராவதத்தை விட வேகமாக சென்று விட்டது.  ராஜாவை பின் தொடர்ந்து அவனது மந்திரி, சேனாதிபதி ஆகியோரும் உயிரை மாய்த்துக் கொண்டு மேலே கிளம்பிவிட்டார்கள்.

இவர்கள் அத்தனைபேரும்  ஒரே நாளில் கைலாசத்தை தேடி செல்லும் விஷயம்  எங்கோ திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில்  பிள்ளையாருக்கு பூஜை செய்து கொண்டிருந்த ஒளவைக்கு தெரிந்து விடுகிறது.
சேரமான் சுந்தரர்  இருவருமே ஒளவையின் பக்தி அறிவார்கள்.  'ஒளவையே  நீயும் வாயேன். இடம் இருக்கிறது சேர்ந்து கைலாயம் போவோம்'' என்று அழைக்கிறார்கள். 

''இப்படி அவசரப்படுத்தினால் எப்படி?  நீங்கள் தயாராக ஏற்பாடு எல்லாம் பண்ணிக்கொண்டு கிளம்பிவிட்டீர்கள். நான் இங்கே  பிள்ளையாருக்கு பூஜை செய்வதை பாதியில் நிறுத்தி விட்டு  எப்படி வருவேன்? நீங்கள்  போங்கள். நான் அப்புறம் வரேன்.'' என்கிறாள் ஒளவை.

பிள்ளையாருக்கு நிதானமாக பூஜை   செய்து ''கைத்தல நிறைகனி  அப்பமுடன் அவல், பால், தெளி தேன், பாகு பருப்பு எல்லாம்  நைவேத்தியம் பண்ணுகிறாள்.  விநாயகர் அகவல் பாடுகிறாள் . அவளால் நாமும் அல்லவா அதை பாடி விநாயகனை வணங்குகிறோம். ஒளவையார் அளித்தவற்றை நிதானமாக உண்கிறார் பிள்ளையார்.   பிள்ளையாருக்கு எல்லாம் தெரியும். சும்மா சீண்டி பார்க்கிறார்.

''ஒளவையே, உனக்கு என்ன வேண்டும் என்னை கேள். தருகிறேன்'' 
''உனதருள் ஒன்றே போதும் கணேசா''
'சரி  என் மேல் ஒரு பாட்டு பாடு. எனக்கு கேட்க வேண்டும் ''
‘சீதக்களப செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசைபாட பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்’ என கணீரென்று பாடுகிறாள் ஒளவை.
72 அடிகள் கொண்ட விநாயகர் அகவல். (சீர்காழி குரலில்  நான்  மயங்குகிறேன்)  ஒளவையின் குரலில் கணேசர் மயங்கி 
''சரி வா என்னிடம் ''  என்கிறார்.  அருகில் ஒளவை கை கூப்பியவாறு வர, ஒற்றைக் கொம்பனின் துதிக்கை அவளை வாரி அப்படியே மேல் நோக்கி நீள்கிறது.  கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் ஒளவை எல்லோருக்கும் முன்னால்  கைலாயம் சென்று   மற்றவர்கள் வந்து சேர காத்திருக்கிறாள் !

சுந்தரர் ஏறி வந்த ஐரவாதம், சேரமானின் குதிரை  அப்புறம் நிதானமாக வருகிறது.   கிழவி அல்லவா?  சிவனின் முன் காலை நீட்டி அமர்ந்திருக்கிறாள் ஒளவை. பார்வதியின் சேடிகளில் ஒருவள் அருகில் வந்து ''பாட்டியம்மா,  பரமேஸ்வரன் முன்னால் காலை நீட்டுவது அபச்சாரம். காலை மடக்குங்கள் ''
''அம்மா குழந்தை, எனக்கு கால் மடக்க முடியவில்லையம்மா.  உனக்கு தெரிந்தால் சொல்லேன். எந்த பக்கம் பரமேஸ்வரன் இல்லை என்று அந்த பக்கம் காலை திருப்பிக் கொண்டு உட்காருகிறேன்''
பரமேஸ்வரனுக்கு தெரியும் ஒளவையின் பக்தி. 

ஆச்சர்யத்தோடு  ''ஒளவையே  எங்களுக்கு பின்னால் கிளம்பிய நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் இங்கு வரமுடிந்தது?''என்கிறார்கள் ஜோடியாக  சுந்தரரும் சேராமனும். 

ஒளவை பாடலாக பதிலளிக்கிறாள்:

‘மதுர மொழி நல் உமையாள் சிறுவன் மலரடியை
முதிர நினைய வல்லார்க்கு அரிதோ ? முகில் போல் முழங்கி
அதிரவரும் யானையும் தேரும் அதன் பின் சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குல மன்னனே’

''பார்வதி மைந்தன் விநாயகன் திருவடி தொழுது  வணங்குபவர்களுக்கு எல்லாம் எளிது.  பெரிய கருமேகம் இடி இடித்து வருவது போல் பிளிறி வேகமாக வரும் ஐராவதம், காற்றை விட வேகமாக வரும் குதிரையையும் விட விநாயகன் தும்பிக்கை படுவேகமாக எத்தனை காத தூரத்தையும் மின்னல் வேகத்தில் கடந்து நமக்கு   அருளும் ''என்கிறாள் ஒளவை.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...