Tuesday, November 30, 2021

vainava vinnoli

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர் J K  SIVAN   


8.   ''அத்தை தின்று அங்கே கிடக்கும் ''

எல்லோராலும்  பாட்டெழுத முடியாது.  பல  காகிதங்களை கிழித்துப்போட்டு தன்னைச் சுற்றி ஒரு பெரிய காகிதமலை எழுப்பியவர்கள் என்னையும் சேர்த்து அநேகர்.  ஹுஹும்   கவிதை, பாட்டு  எழுதுவது இவ்வளவு கஷ்டமா?  இலக்கணம் தெரியாதவன், தெரிந்தவன் எவனுக்கும் இதே கதி. அப்படி அவன் பாட்டு எழுதினாலும் அதில் உயிர்ச்சத்து இருக்கவேண்டும்.  வாசகனைக் கட்டிப்போட வேண்டும். பலமுறை சிந்திக்க வைக்கவேண்டும்.  பக்தி ரஸம்  ததும்ப வேண்டும். அப்போது தான் ஒரு பாரதி, கண்ணதாசன் கிடைப்பான்.  கரம் கூப்பி  தொழவைக்க  ஆழ்வார்கள் தோன்றுவார்கள்.
 
அப்படிப்பட்ட ஒரு கவிஞர்களில் ஒருவரது கவிகள், பாசுரங்கள், பாக்கள் எந்த அளவிற்கு தேன் சொட்ட அமைந்திருந்தால், இனிமையாக இருந்தால், அவரது  உண்மைப் பெயர் மறக்கப்பட்டு ''மதுர கவி'' என்று நினைக்கப்படுவார். போற்றப்படுவார், தெய்வமாக கருதப்படுவார்?'' 

இதை உணரும்போது  ''ஆஹா,  மதுர கவி ஆழ்வாரின் பாசுரங்களை உடனே படித்து மகிழ ஆர்வம் ஏற்பட வில்லையா?. எனக்கு ஏற்பட்டது மட்டுமல்லாமல் யோசிக்க வைத்தது. மற்ற ஆழ்வார்களுக்கும் இவருக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம் ?
மற்ற பதினொரு ஆழ்வார்கள் வைகுந்தனை, மாலவனை வேண்டி துதி பாடிய போது , இந்த மதுர கவி மட்டுமே தனது ஆசானை, குருவை,  கோவிந்தனை விட  அதிகமாக நேசித்தவர் .  தமது குருவைப் பற்றி மட்டுமே பாசுரங்கள் இயற்றி திருப்தி அடைந்தவர்.  இது ஒன்றே போதாதா அவர் மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் குருவை   தெய்வத்துக்கு முன்பே  வழிபட்டவர் என்று உணர்த்த,   சீரிய ஆச்சாரிய பக்தியை வெளிப்படுத்த இன்னொரு மதுர  கவி  பிறக்கவேண்டும்.

மதுரகவி ஆழ்வாருக்கு மற்றுமுண்டான பெயர்கள் இன் கவியார், ஆழ்வார்க்கு அடியான்.(''பொன்னியின் செல்வனில்'' வரும் ஆழ்வார்க்கடியான் நம்பி இவர் இல்லை)

மதுர கவி  ஆழ்வார் பிறந்தது திருக்கோளூர் என்ற கிராமத்தில்.ஆழ்வார் திருநகரி என்கிற வைணவ க்ஷேத்ரத்தின் அருகே உள்ளது.  இவரைப் பற்றி  அறிய முற்படும்போது தான் எனக்கு  திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் பழக்கமாயிற்று. அவளைப்  பற்றி தெரிந்துகொண்டபோது  உடனே  அவளது 81  உதாரண புருஷர்கள் ஸ்த்ரீகள் பரிச்சயமாயினர்.  ''கேள்வி ஒன்று, பதில் எண்பத்தி ஒன்று '' என்ற புத்தகம் உருவாயிற்று. இன்னும் நிறைய அன்பர்களுக்கு அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன். (வேண்டுவோர்  அணுக: 9840279080  வாட்ஸாப்ப் ).

கி .பி. ஒன்பதாவது நூற்றாண்டில் ஈஸ்வர வருஷம் முதன்மை வாய்ந்த இந்த மதுர கவி  ஆழ்வார் முதல் மாதமான சித்திரையில் ஜனித்து  சித்திரை நக்ஷத்திரத்தோடு முத்திரை பதித்தவர். இவரை கருடனின் அம்சமாகவும் -- வைனதேயன் (வினதாவின் மகன்)-- என்று கருதுவதால் தான் 11 பாசுரங்கள் மட்டுமே அளித்து எங்கோ உயரே சென்றுவிட்டார். கருடன் அல்லவா?

இந்த ஆழ்வாரை குமுத கணேசர் என்னும் விஷ்வக்சேனரின் சிஷ்யரே தான் பூமியில் வந்து பிறந்தவர் என்றும் கூறுவார்கள். இதற்கு எது ஆதாரம் என்றெல்லாம் கேட்கவேண்டாம். ஆராய நேரமோ அவசியமோ இல்லை. 

ஆழ்வார்களில் சிறந்தவர் என்ற உண்மை இவர் பதினொரு பாசுரங்களே எழுதி அவை நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் முக்யமாக நடுநாயகமாக வைக்கப்பட்டுள்ளதிலிருந்தே தெரிய வருகிறதே.

மதுரகவியின் கண்ணினுட் சிறுதாம்பு அந்தாதி வகையைச் சேர்ந்த பாசுரம். இப்பாசுரங்களைப் பாடிய பிறகே திருவாய் மொழி பாசுரங்கள் துவங்கும் வழக்கம் என்பதிலிருந்தே இவற்றின் முக்யத்வம் புரியும்.

நாதமுனிகள் 12000 முறை கண்ணினுட் சிறுதாம்பு பாசுரங்களைப் பாடிய பிறகு அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. சாக்ஷாத் நம்மாழ்வாரே அவருக்கு தரிசனம் கொடுத்து 12 ஆழ்வார்களின் பாசுரங்களை, நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை, அருளினார் என்பது சரித்திரம். 

மதுரவி, நம்மாழ்வாருக்கும் முன்னே தோன்றியவர். நம்மாழ்வாரின் முதன்மையான சீடராக விளங்கிய இந்த ஆழ்வார் நம்மாழ்வாருடைய ''திருவாய் மொழி''  யை வைஷ்ணவ சமுதாயம் அன்றாட வாழ்வில் நித்ய பாராயணம் செய்யும் அளவுக்கு பரவச் செய்தார். அந்த காலத்தில் பிரசுர வசதிகள் ஏது ? வாய் மொழியாகவே பல இடங்களுக்கு அது பரவ வேண்டுமானால் எத்தனை பேர் அதைக் கற்று, சென்ற இடமெல்லாம் அனுபவித்துப் பாடி, மற்றோர் பலரும் அதே வண்ணம் செய்ய வைத்திருக்க  வேண்டும்!!. இதைத்தான் பிரம்மப் பிரயத்தனம் என்று சொல்கிறோமோ?

எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் இந்த மதுர கவியை பற்றி சுருக்கமாக சொல்லும்போது  
''பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்கள் மொத்தம் பதினொன்று தான். அவை எல்லாம் குருகூர் சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் புகழைப் பாடுவதே. இருப்பினும் மதுரகவி வைணவர்களின் மரியாதைக்கு உரியவர் - அவர்தான் நம்மாழ்வாரைக் கண்டுபிடித்துப் பாடல்களை உலகுக்கு வெளிப்படுத்தியவர் என்கிற தகுதியில் நம்மாழ்வாரையே தனது தெய்வமாகக்கொண்டு அவர் பிரபந்தத்தைப் பரப்பியவர். நம்மாழ்வாரை உலகுக்குக் காட்டி அவர் பாடல்களை ஓலைப்படுத்தியவர் மதுரகவிகள் என்பதில் ஐயமில்லை.  
வயதில் சிறியவராக இருந்தாலும், அறிவிலும் தமிழிலும் பெரியவரான நம்மாழ்வாரைத் தன் குருவாகக் கொண்டார். அவருக்கு மற்ற தெய்வங்கள் தேவைப்படவில்லை.''

"நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே"

''எனக்கு வேறு தெய்வமில்லை, குருகூர் சடகோபன்(நம்மாழ்வார்)தான் தெய்வம் என்று அவர் மேல் பதினோரு பாடல்கள் பாடி, ஆழ்வாரின் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டவர் மதுரகவியார்.

நம்மாழ்வார் நீண்டகாலம்  ஜீவியவந்தராக இல்லை  என்று அறிகிறோம். பதினாறு வயது வரை வாய் பேசாதிருந்துவிட்டு மதுரகவியாரைச் சந்தித்ததும் தன் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல் களையும் செஞ்சொற் கவிகளாக அவருக்குச் சொல்லியிருக்கிறார்.  

மொத்தம் பதினோரு பாடல்கள்தான் எழுதியிருந்தாலும் மதுரகவியின் பாடல்களைத் திருமந்திரத்தின் நடு மந்திரமான "நமோ" என்பதின் விளக்கம் என்று சொல்கிறார்கள்.

''கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
நண்ணி் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே."

நுட்பமான கண்ணிகளால் ஆன சிறிய கயிற்றினாலே கட்டப்பட்ட கண்ணபிரானைக் காட்டிலும் தென்குருகூர் நம்பி எனும் சடகோபன் என்னும்போது என் நாக்கில் தித்திக்கும் (அண்ணிக்கும்) அமுது ஊறும். பகவானை விட பாகவதன் முக்கியம் என்பது வைணவத்தின் ஆதாரக் கருத்துகளில் ஒன்று.
ஆசார்யனே என் குரு தாய் தந்தை எல்லாம் என்கிறார்  கவி.

"நன்மையாய் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே"

படித்தவர்கள் என்னைச் சிறியவனாகக் கருதலாம். அதனால் என்ன, என் அன்னையும் தந்தையும் அவன்தான். அவன்தான் என்னை ஆட்கொள்கிறான், சடகோபன் என்னும் நம்பி. சங்கப் 
 பலகை
யில் ஆழ்வாரின் பாடலை வைத்து அதன் ஏற்றத்தை நிரூபித்தவரும் மதுரகவி தான்.

'ஓம் நமோ நாராயணாய' என்பது திருமந்திரம். அதில் ஓம் என்பது முதல் பதம், நமோ என்பது மையப் பதம், நாராயணாய என்பது மூன்றாவது பதம். இதில் ஓம் என்பது பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பதைச் சொல்கிறது என்கிறார்கள். இரண்டாம் பதம் ஆச்சாரியனுக்குத் தொண்டு செய்வதை வலியுறுத்துவதாகச் சொல்கிறார்கள்.

மதுரகவியின் 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' பாசுரங்களை திருமந்திரத்தின் மத்தியப் பதமாகவே எண்ணி அதைப் பிரபந்தத்தின் நடுவே வைத்திருக்கிறார்கள். மிக ஆச்சரியமாக இது அமைந்துள்ளது.
பதினோரு  கண்ணினுட் சிறு தாம்பு  பாசுரங்களை  12,000 தடவை சேவித்தவர்களுக்கு நம்மாழ்வார் காட்சி தருவார் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. நாதமுனிகள் தான் ''நான் பார்த்தேனே'' என்கிறாரே.

இந்த ஆழ்வார் பதினொரு பாசுரங்கள் மட்டுமே எழுதினார் என்பதைவிட அவர் செய்த மாபெரும் சேவை வைணவ உலகம் மறக்க முடியாததொன்று. நம்மாழ்வாரின் அனைத்து திருவாய் மொழி பாசுரங்களையும் 1102 ஐயும் பிரதி எடுத்து, சிறப்பித்து, உலகறியச் செய்தவர் என்ற ஒன்றே போதாதா!.
நம்மாழ்வார் பேச்சின்றி இருந்தவர் பிறந்தது முதல். ஒரு புளியமரத்தின் உட் பகுதியில் அமர்ந்திருந்தவர். அவர் முதலில் பேசியது மதுர கவியிடம் மட்டும் தான்.
அதன் பின்னே ஒரு கதை உலாவுகிறதே.  அதை மீண்டும் ஒரு முறை சொல்லி நிறைவு செய்கிறேன். 

 ஒரு நாள் மதுரகவி தனது வட இந்திய யாத்ரையில் சரயு நதி யில் ஸ்நானம் செய்து கொண்டி ருந்தபோது அவர் எதிரே வானில் பளிச் சென்று ஒரு ஒளி தோன்ற,  இது என்ன ஆச்சர்யம் என்று  அண்ணாந்து பார்த்தவரை  அது  காந்த சக்தியாக ஈர்க்க அதையே தொடர்ந்து சென்றார். அது தென் திசை நோக்கி பயணித்தது. அதைப் பார்த்துக்கொண்டே தெற்கே நகர்ந்தவர், அந்த ஒளி எங்கே நின்றது என்று பார்க்கும்போது அது ஆழ்வார் திருநகரியைக் கடந்து ஒரு பெரிய புளியமரத்தடியில் அவரை நிற்க வைத்து விட்டு  மறைந்தது.   விண்ணொளி  தேடி வந்தவர்  எதிரே  அங்கே  ஒரு ஞான ஒளிச்  சிறுவன் அமர்ந்திருந்தான். 16 வருடங்களாக கண் மூடி, வாய் பேசாமல், காது கேளாமல் த்யானத்தில் இருந்தவன். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று உணர ஆழ்வாருக்கு வெகு நேரம் ஆகவில்லை. அந்த பால யோகியின் அருகே சென்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.

''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?''
பிறந்தது முதல் இதுவரை பேசாமல், பார்க்காமல் உண்ணாமல் இருந்த அந்த பாலயோகி உடனே பதில் சொல்கிறார்
''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்''
இந்த வாசகம் மிக ஆழமானது. எத்தனையோ அர்த்தங்களை உள்ளே அடக்கியது. அழிவே சாஸ்வதமான இந்த உடலில் உள்ளே  தோன்றுகிற ஆத்மா என்கிற ஜீவன் எதை உட்கொண்டு ஜீவிக்கும்? என்ற பொருள் கொண்டால் ஜீவாத்மா சம்சாரத்தில் உழலும்போது அதாவது எண்ணற்ற உடல்களில் உட்புகுந்து அதன் கர்மாக்களின் பலநாள் சிக்கிக் கொண்டு அதன் பலனில் கட்டுண்டு கிடக்கும்.  பின்னர்  சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு ஜீவன் பரமாத்மாவை நாடி வைகுண்டம் சேரும்.
அப்படியே சாஷ்டாங்கமாக கீழே விழுந்து சரணடைந்தார். நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டார்.
பிறகு நடந்ததை எல்லாம்  ஸ்ரீ வைஷ்ணவ சரித்திரம் கூறுகிறதே. 

ஆழ்வார் பாசுரங்கள் அனைத்துமே வைஷ்ணவ சிந்தாந்தம் வேதாந்தம் நிறைந்தவை. சைவமும் வைணவமும் தக்க சமயத்தில் அவதரித்து, சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வேகமாக பரவி வந்த ஜைன புத்த மதத்தை தடுத்து நிறுத்தியது. இதில் ஆழ்வார்களின் பங்கு இன்றியமை யாதது.

1879ம் ஆண்டு மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களுக்கு ''பெரிய வாச்சாம்பிள்ளை வியாக்யானம் , ஸ்ரீ ராமனுஜரின் அரும்பதம், பிரசுரிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் PDF ரூபத்தில் என்னிடம் உள்ளது. (உங்களால் புரிந்து கொள்ள முடியாத நீண்ட மணிப்ரவாள நடையாக இருந்தாலும் - வேண்டும் என்பவர் என்னை அணுகவும். முகநூலில் அதை அனுப்ப வசதி, வகை இல்லை. வாட்சப்பில் 9840279080  அல்லது  மின்னஞ்சலில்  jksivan @gmail .com  ல் தொடர்பு கொண்டால் அனுப்ப எனக்கு காசோ பணமோ  செலவில்லை, நான் குறைந்தும்  போய்விடமாட்டேன்.

 

NIRVANA DHASAKAM 1

 ஆதி சங்கரர் -     நங்கநல்லூர் J K  SIVAN  

நிர்வாண தசகம் - 

ஆதி சங்கரர் அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர். ஷண்மத ஸ்தாபகர். அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக வேத சாரம், உபநிஷதுகளை வழங்கியவர்.   இந்த நிர்வாண தசகம் (நிர்வாணம் என்றால் ''ஆடையில்லாமல்'  அல்ல.  பிரம்மத்தை தவிர மற்றதில் பற்றற்ற )  தசகம் என்றால் 10.  ஏழு வயதில்   சந்நியாசியாகி,  பிறகு  மலையாள தேசத்தில்  காலடி க்ஷேத்ரத்திலிருந்து  காலடி வைத்து  நடையாக கிளம்பிய சிறுவன் சங்கரன்  காடும் மலையும் கொடிய வனவிலங்குகளையும் கள்வர்களும்,  கொன்று தின்னும்  காபாலிகர்கள்,  அரக்கர்கள்  வாழும் இடங்கள் எல்லாம் கடந்து வடமேற்கே நர்மதா நதிக்கரை செல்கிறார். அங்கே ஒரு முதியவர் .ஒரு மலையாள தேச பாலகன், சர்வ தேஜஸுடன் தனது எதிரே வணங்கி நிற்பதைக்கண்ட  முதியவர் சங்கரன் மீது ஆர்வம் கொண்டு 
'' ஏ, சிறுவா,  நீ யார்?''   என்று கேட்கிறார்.
'' நான்  யார்?''  என்பதை தான் நானும் தேடி அலைகிறேன் குருநாதா''  என்கிறான் சிறுவன்.

 இப்படி ஸ்வய  விசாரத்தில் ஆரம்பித்த 10 ஸ்லோகங்கள் அக்கணமே  பாடுகிறார் ஆதி சங்கரர்.         அதுவே  இப்போது  நாம் அறிந்துகொள்ளும்  'நிர்வாண தசகம்'' . அந்த முதியவர் தான் ஆதிசங்கரரின் குரு கோவிந்த பாத ஆச்சாரியார்.  

 என்று கேட்கிறார். அவரை குருவாக வேண்டிய சங்கரர் அப்போது சொல்லிய பதில் தான் பத்து ஸ்லோகங்களாக (தசகமாக) நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.

நிர்வாணம் என்றால் ஆடையின்றி இருப்பது அல்ல. அப்படி தான் நமக்கு சொல்லி  கொடுத்திருக்
கிறார்கள். உண்மையில் அது ஆத்மாவை குறிக்கும் சொல். இல்லாதது போல் இருப்பது. அதனால் தான் இந்த ஸ்லோகங்களில் ஆதி சங்கரர் ஆத்மாவை விவரிக்கும்போது நான் அது இல்லை, இது இல்லை என்று ஒவ்வொன்றாக கூறுகிறார்

தன்னை மனது தேகம், ஐம்புலன்கள் சம்பந்தப்படாத ஒரு பரிசுத்த ஆத்மாவாக, அறிவித்துக் கொள்கிறார்.

न भूमिर्न तोयं न तेजो न वायुर्न खं नेन्द्रियं वा न तेषां समूहः ।
अनैकान्तिकत्वात्सुषुप्त्यैकसिद्धस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥१॥

Na bhoomir na thoyam na thejo na vayu,
Na Kham nendriyam vaa na thesham samooha,
Anaikanthikathwath suspthyeka siddha,
Thadekovasishta Shiva kevaloham. 1

ந பூமிர்ந தோயம் ந தேஜோ ந வாயுர்ந கம் நேந்த்ரியம் வா ந தேஷாம் ஸமூஹ: |
அநைகாந்திகத்வாத்ஸுஷுப்த்யைகஸித்தஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௧||

குருநாதா, ''நான்  யார் ?''  என்னை இந்த கேள்விகள் பல முறை நானே கேட்டுக் கொண்டேன். அதில் நான் அறிந்தது நான் இந்த பூமி அல்ல, நான் பூமியைச் சுற்றிலும் உள்ள நீரும் அல்லன். ஒளி தரும் அக்னியும் இல்லை. ஆகாசமும் நான் அல்ல. எங்கும் காணும் காற்றும் இல்லை நான். ஐம்புலன்கள் ஆட்டுவிக்கும் இந்த தேகமும் அல்ல. நான் சொன்னதெல்லாம் ஒன்று சேர்ந்த உருவமும் அல்ல. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நான் சொன்னதெல்லாம் நிரந்தரம் இல்லாதது. நான் சிவன் எனும் ஆத்மன். மூன்று நிலைகளிலும், தூக்கம், விழிப்பு, கனவு என்று எதிலும் உள்ளவன். எதுவுமே இல்லாமல் போனாலும்,  எப்போதும்  இருப்பவன்.'' இது நிர்வாண தசகத்தில் முதல் ஸ்லோகம்.

நீ யார் என்று ஒரு வாத்தியார் கேட்டால் நாம் இப்படி பதில் சொன்னால் நமக்கு வாத்தியாரே கிடைக்க மாட்டார். நாம் வேறு ஆதி சங்கரர் வேறு. கோவிந்தபாதர் புரிந்து கொண்டார். ஆத்மஸ்வரூபன் அத்வைதன் அந்த பாலகன் என்று. சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறார்.

தொடரும் 

PESUM DHEIVAM

 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


97. மஹா பெரியவாளின்  திடீர்  நடராஜா தரிசனம்.

மஹா பெரியவாவின்  முதல் சிதம்பர விஜயத்தைப் பற்றி  சொல்லும்போது சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

வாத்தியங்கள் பலவகை நமது தேசத்தில் ஒலி இன்பம் தருபவை.  சில வாத்தியங்கள் பழைய காலத்தோடு மறைந்து விட்டன. 
வாத்தியங்களில் மேலோட்டமாக மூன்று வகை.  சர்ம வாத்யம். - அதாவது தோல் கருவிகள். மிருதங்கம், தவில், கஞ்சிரா, உடுக்கை, நகரா, பஞ்சமுக வாத்யம்,  செண்டை,  போன்றவை.  மிருகங்களின் தோல் உபயோகப் படுத்தியவை.   கையாலும் குச்சியாலும்  வாசிக்கப்படுபவை.இதில் ஒரு சப்தம் முடிந்தபின் அடுத்ததை ஆரம்பிப்பது  ''சாபு''  எனப்படும் .

தங்தி வாத்யம் என்பவை, உலோக கம்பிகள், நரம்புகளால் இழுத்துக் கட்டப்பட்டவை.  வயலின் எனும் பிடில், வீணை,  தம்புரா, இன்னும் என்னென்னவோ. இப்படி தந்திகளின்  அதிர்வால் ஒலி  எழுப்பு
பவை.  

மூன்றாம் வகை  துளை வாத்தியங்கள்,  இவற்றை  வாயுரேந்திரிய வாத்யம் என்பது. காற்றை உள்ளே செலுத்தி அபூர்வ நாதங்களை  உருவாக்குவது.  புல்லாங்குழல், நாதஸ்வரம், சாக்ஸோ போன்  கிளாரினெட், போன்றவை.
 
சிதம்பரம் நடராஜாவின்  டமருகம் அவரது தாண்டவ நடனத்தின்  இடையே ஒலிக்கும்.    ஆடலரசன்  ஆடியது  சனகர், பதஞ்சலி, வ்யாக்ரபாதர்  ஆகியோர் மற்ற ரிஷிகளுடன்  ஆனந்தமாக  பார்த்து  அனுபவிக்க.  ஞானதிருஷ்டியால் அந்த  ப்ரம்ம ரிஷிகள்   பரமேஸ்வரனின் பிரபஞ்ச  நடனத்தை செவியால்  கேட்டு, கண்ணால் பார்த்து அனுபவிக்க முடிந்தது. 

நமது கண்களில்  லென்ஸ் என்று ஒரு  கண்ணாடியை விட  அதி நுட்பமான வசதி நாம் பிறந்தது முதல் உண்டு. இந்த லென்ஸினால் தான் நமது பார்வையின் சக்தி அமைகிறது. வயதாக ஆக இயற்கையாக பகவான் தந்த லென்ஸ் சக்தி இழந்து வெளியே கண் டாக்டர் தரும் சோடா பாட்டில் கண்ணாடி லென்ஸ் தேவைப்படுகிறது. சரியாக நாம் கண்ணின் அருமை தெரிந்து புரிந்து அதை பாதுகாப்பதில்லை .  இருளில்  மொபைல், கிட்டே அமர்ந்து டிவி, அரை இருட்டில் புத்தகம், ஓடும்  வாகனங்களில் படிப்பது போல எத்தனையோ காரியங்களால் கண்ணின்  பார்வை குறைகிறது. 
ஆகவே தான் டாக்டர் கொடுத்த கண்ணாடி உதவியால்  தான்  ஐந்து அடி தூரத்தில் அதி வேக மாக பன்றிக்குட்டி வருவது தெரிந்து கொள்கிறோம். 

சனகாதி முனிவர்கள் எந்த  செயற்கை வாசித்தவர்.  லென்ஸும்  இல்லாமல் இயற்கையாக  உள்ள கண்களின் லென்ஸினால் ஆனந்த சபேசன் நடனம் கண்டனர். மஹா விஷ்ணு தான் பக்க வாத்யக்காரர். மத்தளம் வாசித்தவர்.  ப்ரம்மா  தாளம் போட்டவர்.  ஆட்ட இறுதியில்  நடராஜாவின் டமருகத்தில் (உடுக்கையில்) இருந்து பதினாலு விதமான சப்தங்கள் உண்டாயின . அந்த சப்தங்கள்  பரமேஸ்வரனின் சிவ ஸ்வரூபத்தை ஆனந்தமாக ரசித்தவையாக தென்பட்டன.

நந்திகேஸ்வரரும் சிவானந்த  தாண்டவத்துக்கு  மத்தள வாத்யக்காரர்.   இந்த பதினாலு வகை சப்தங்களை நந்திதேவர்  சிவபக்தி ஸ்தோத்ரமாக அர்த்தம் புரிந்து கொண்டு அருமையாக ஒரு பாஷ்யம் எழுதினார் என்பார்கள்.
 
ஆனந்த சபேச நடனம் பார்த்தவர்களில்  பாணினியும் ஒருவர்.   அந்த சப்தங்களை கேட்ட பிறகு தான்  பாணினி வியாகரண சூக்தம்  எழுதினவர்.  ''அ''வில்  ஆரம்பித்து  ''ல் ''  முடிவாக  அது உருவானது.   மொழி தோன்றிய வரலாறு இது. உலகின் அநேகமாக எல்லா மொழிகளுக்கும் முதல் அக்ஷரம்  ''அ''சப்தம் உடையது. 

வ்யாகரணத்தின் மூலம், ஆதாரம் தான்,   மஹேஸ ஸூத்ரம் எனப்படுவது. அது தான்  பரமேஸ்வரன் நடராஜாவின் டமருகத்திலிருந்து ஒலித்த சப்தம்.   நடராஜாவுக்கு அருகே  பதஞ்சலி  வியாக்ர பாதர்களை காண்கிறோம்.  எங்கே நடராஜா படம், விக்ரஹம்  பார்த்தாலும் இந்த ரெண்டு ரிஷிகளை அவர் அருகில்  பார்க்கலாம். ஏற்கனவே  சொல்லி இருக்கிறேன், எழுதி இருக்கிறேன்.  பதஞ்சலி ஆதிசேஷன் அம்சம். அங்கே மகாவிஷ்ணுவிடம் இருப்பவர், இங்கே  பரமேஸ்வரன் திருவடியில்   இருப்பவர்.  ஆகவே  பரமேஸ்வரன் தான் வியாகரண சாஸ்திரத்திற்கு மூலமானவர், அடிப்படை யானவர்.

சிதம்பரம் வந்து சேர்ந்த அன்றே, இரவு மஹா பெரியவா   மடத்தில் எப்போதும் தனக்கு  வஸ்திர கைங்கர்யம் பண்ணும் தொண்டன்,  ஒரு  இளைஞனை அழைத்தார்.

''இதோ பார், நீ  நாளைக்கு காலம்பற, விடிகாலை, ஐந்து மணிக்கு,  எனக்கு புது வஸ்திரம் எடுத்துண்டு சிவகங்கை தடாகத்துக்கு (குளத்துக்கு ) வந்துடு. என்ன புரியறதா?  இது உனக்கும் எனக்கும் தவிர வேறே யாருக்கும் தெரியவேண்டாம்.''

மறுநாள் விடிகாலை மஹா பெரியவா  அந்த இளைஞனோடு  குளத்தில் இறங்கினார். ஸ்னானம், ஜபம் எல்லாம் முடிந்தது.  நடராஜா சந்நிதி திறக்கும் முன்பே அங்கே காத்திருந்தார்.  வழக்கம்போல் வந்த  அர்ச்சக தீக்ஷிதர் மஹா பெரியவா அங்கே நின்றுகொண்டு  ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு  திடுக்கிட்டார்.  யார் இப்படி மஹா பெரியவா முன்னறிவிப்பு இன்றி திடீர் என்று வந்து நிற்பார் என்று எதிர்ப்பார்த்திருப்பார்கள்?

காவல்காரன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான் அவனை சீக்கிரமாக கூப்பிட்டு  எல்லா தீக்ஷிதர்களுக்கும் மஹா பெரியவா வந்திருப்பதை  அறிவிக்கச்  சொல்லி அனுப்பினார் அர்ச்சகர்.
ஓடினான்  அவன்.   நிமிஷத்தில் சேதி பறந்து சென்றது.  நூற்றுக்கணக்கானோர் அந்த விடிகாலையில் நடராஜா சந்நிதியில் திறண்டு விட்டார்கள்.  ஒருத்தர் பாக்கியில்லாமல் அனைத்து தீகிஷிதர்களும் மஹாபெரியவளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார்கள்.

 'மஹாபெரியவாளை ஏக தடபுடலோடு வரவேற்க  ஏற்பாடுகள் செய்திருக்கிறது.  இப்படி  ஏமாத் திட்டீளே என்று வருந்தினார்கள்''

''நான் ஆவலோடு  வந்தது  நடராஜாவுடைய  விஸ்வரூபம் தர்சனம் பண்ண''  என்றார்  பெரியவா. 
முதல் பூஜா  தரிசனம் தான் விஸ்வரூப தர்சனம். நான் இங்கே இருக்கிறவரைக்கும்  ஒவ்வொரு நாளும்  எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வந்துண்டே தான் இருப்பேன்''

தரிசனம் முடிந்ததும்  மஹா பெரியவாளை  எல்லா தீக்ஷிதர்களும் தேவஸ்தான மரியாதைகளோடு அவர் தங்கியிருந்த மடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

''மஹா பெரியவா  கோவிலில் சில நாட்கள் இருக்கணும் , ஆயிரங்கால் மண்டபத்தில் சந்திர மௌலீஸ்வரர் பூஜை  பண்றதை  எல்லாரும் பாக்கணும்''
 என்று வேண்டிக் கொண்டார்கள்.  

ஸ்வாமிகளை வரவேற்று  ஸமஸ்க்ரிதத்தில்  அருமையாக  ஒரு பிரசங்கம் செய்தவர்  உபன்யாச ரத்நாகரம்  ஸ்ரீ C.S . சிவகாமசுந்தர தீக்ஷிதர்.  தமிழியில் மொழிபெயர்த்தவர் அவர் புத்ரன்  C .S சச்சிதானந்த தீக்ஷிதர்.   மஹா பெரியவா  சிதம்பரம் ஆலயத்தில் பதினைந்து நாட்கள் தங்கி இருந்தார். 

தொடரும் 


sri lalitha sahasranamam

  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்லோகங்கள்  105-107  நாமங்கள் 509-523 

मेदोनिष्ठा मधुप्रीताबन्धिन्यादि-समन्विता ।
दध्यन्नासक्त-हृदयाकाकिनी-रूप-धारिणी ॥ १०५॥

Medhonishta maduprita bandinyadi  samanvita
Dadyannasakta hrudaya kakini rupadharini – 105

மேதோனிஷ்டா, மதுப்ரீதா, பந்தின்யாதி ஸமன்விதா |
தத்யன்னாஸக்த ஹ்றுதயா, காகினீ  ரூபதாரிணி -  105

मूलाधाराम्बुजारूढा पञ्च-वक्त्राऽस्थि-संस्थिता ।
अङ्कुशादि -प्रहरणा वरदादि-निषेविता ॥ १०६॥

Muladharanbujarudha panchavaktrasdhi sanpdhita
Ankushadi praharana varadadi nishevita – 106

மூலா தாராம்புஜாரூடா, பம்சவக்த்ரா,‌உஸ்திஸம்ஸ்திதா |
அம்குஶாதி ப்ரஹரணா, வரதாதி னிஷேவிதா || 106 ||

मुद्गौदनासक्त-चित्ता साकिन्यम्बा-स्वरूपिणी ।
आज्ञा-चक्राब्ज-निलया शुक्लवर्णा षडानना ॥ १०७॥

Mudgaodanasaktachitta sakinyanba svarupini
Aagynachakrabja nilaya shuklavarna shadanana – 107

முத்கௌதனாஸக்த சித்தா, ஸாகின்யம்பாஸ்வரூபிணீ |
ஆஜ்ஞா சக்ராப்ஜனிலயா, ஶுக்லவர்ணா, ஷடானனா || 107 ||


  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (509-523) அர்த்தம்  


* 509* 
मेदोनिष्ठा -மேதோனிஷ்டா -- 

சருமம் , ரத்தம், சதை, அதற்கப்புறம்  நாலாவது  கொழுப்பு சத்து சேர்ந்தது இந்த தேகம் என்று உணர்த்துகிறது இந்த நாமம்.  உடலில் நாலாவது சக்ரம்.  காமினி உடலின் கொழுப்பு சத்தை கண்காணிக்கிறாள்.


*510* 
मधुप्रीता -மதுப்ரீதா,-    

மது என்றால்  தேன்.  காகினிக்கு தேன்  ரொம்ப பிடிக்கும்.  மது என்றால் போதை தரும் பானத்தையும்  குறிக்கும். அதைப்பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை.  அதில் ஊறவைத்த காய் கனிகள் காகினிக்கு  நைவேத்யமாக படைப்பார்கள்.  நெய் , தேன், பால், சிறிது கலந்து அர்பணிப்பார்கள்.


*511* 
बन्धिन्यादिसमन्विता -பந்தின்யாதி   ஸமன்விதா --   

காகினிக்கு அருகில் பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, போன்ற ஆறு உதவியாளர்கள் எப்போதும் சூழ்ந்திருப்பார்கள்.


 *512* 
दध्यन्नासक्तहृदया -தத்யன்னாஸக்த ஹ்ருதயா--

 காகினிக்கு என்னென்ன பிடிக்கும் என்று  அவளது நாமமே சொல்கிறது அல்லவா?  இப்போது அவளுக்கு  தயிர் சாதம் ரொம்ப பிடிக்கும் என்கிறது இந்த நாமம்.     


*513* 
 काकिनीरूपधारिणी -  காகினீ  ரூபதாரிணி   --  

அசப்பில்  காகினி  மாதிரியே  தோற்றமளிப்பவள் என்று ஒரு நாமம். காகினி ஸ்வாதிஷ்டான சக்ரத்தின் அதிபதி.


 * 514 *
 मूलाधाराम्बुजारूढा -மூலா தாராம்புஜாரூடா--   

மூலாதார  கமலத்தின் மேல் வீற்றிருப்பவள் அம்பாள்.  ஆதாரமான சக்தி பீடம்.


* 515 * 
 पञ्चवक्त्रा -பஞ்சவக்த்ரா,-  ‌ 

ஐந்து முகம் கொண்டவள்.  அவள் பெயர் இப்போது  ஸாகினி.   இது ஐந்தாவது சக்ரம்.  இந்த யந்த்ரத்திற்கு  பஞ்சவக்த்ரம் என்று பெயர்.   இந்த  ஐந்து முக யந்திரத்தை சிவ பெருமான் ராவணேஸ்வரனுக்கு  அவன் தவத்தை  மெச்சி பரிசாக கொடுத்தார் என்று ராமாயணத்தில் வரும்.


 * 516 *
 अस्थिसंस्थिता - ஸ்திஸம்ஸ்திதா --  

இது வரை ஐந்து விஷயங்களாக, அதாவது, எலும்புகள்.  சருமம், ரத்தம், சதை, கொழுப்பு சத்து எல்லாம் பார்த்தோம், இனி உடலில் அடுத்தது  எலும்புகள். அம்பாள் உடலை இவ்வாறு உறுதியுள்ள தாக செய்கிறாள்.  


* 517 * 
 अङ्कुशादिप्रहरणा - அங்குஶாதி ப்ரஹரணா ---  

மற்ற ஆயுதங்களோடு  அங்குசத்தையும்  கரத்தில் ஏந்தியவள்.  ஸாகினி அங்குசதாரி  என்று இந்த நாமம் சொல்கிறது.  அவளது நான்கு கரங்களில் அங்குசத்தை தவிர, புத்தகம், தாமரை மலர் ஏந்தியவளாக, ஒரு கரம் சின் முத்திரை காட்டுகிறது.சில நூல்கள்  அவள்  சூலதாரி, தண்டம் ஏந்தி யவள் , கமண்டலம், ருத்திராக்ஷ மாலை ஏந்தியவளாக காட்டுகிறது.


 * 518 *
 वरदादिनिषेविता -வரதாதி நிஷேவிதா--   

ஸாகினியை ச்சுற்றி  வரதா ஸ்ரீ,  ஸந்தா , ஸரஸ்வதி  என்ற யோகினிகள் புடை சூழ்ந்திருக்கிறார்கள் என்கிறது இந்த நாமம்.


* 519 * 
 मुद्गौदनासक्तचित्ता -முத்கௌதனாஸக்த சித்தா --

பாசி பருப்பு கலந்த  பருப்பு சாதம் பிரியமாக உண்பவள் ஸாகினி என்கிறார்  ஹயக்ரீவர் இந்த நாமம் மூலம்.  ஒரு சின்ன ரெஸிபி கொடுக்கிறேன். 

வேகவைத்த பாசி பருப்பு, (பயத்தம் பருப்பு) வெல்லம் ,தேங்காய் துருவல், ஜீரகம் கொஞ்சம், நெய் , பால். இதெல்லாம் தான்  பாகும் பருப்பும், தெளி தேனும் பாலும் கலந்து தருவது போல் இருக்கிற தல்லவா? இது அம்பாளுக்கு பிடித்த நைவேத்தியம். செய்து அர்ப்பணியுங்கள், நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வேண்டியதை தருவாள்.


* 520 * 
 साकिन्यम्बास्वरूपिणी -ஸாகின்யம்பாஸ்வரூபிணீ --   

ஸாகினி  அம்பாள் ஸ்வரூபம் என்கிறது இந்த நாமம்.  மூலாதார சக்ர  நாயகி அவள்.


 * 521 *
आज्ञाचक्राब्जनिलया -ஆஜ்ஞா சக்ராப்ஜனிலயா-   

ஆக்ஞா  சக்ரத்தில் குடி கொண்டு ஆள்பவள் என்று ஒரு நாமம்.  ஆஞ்ஞா சக்ர தாமரையில் காண்ப வள் அம்பாள்.


* 522 *
 शुक्लवर्णा -,ஶுக்லவர்ணா --   

வெள்ளை வெளேர் என்று ஆடை உடுத்துபவள் என்கிறது.  சரஸ்வதி தேவி ஞாபகம் வருகிறதா? அவளே இவள். இவளே அவள்.


* 523 *
 षडानना -, ஷடானனா --  

ஆறுமுகம் கொண்டவன் முருகன் மட்டும் அல்ல.  அம்பாளும் தான் என்கிறார் ஹயக்ரீவர். ஷடானனா என்றால் ஆறு வதனங்கள் கொண்டவள் என்று அர்த்தம்.


 சக்தி பீடம்  :  சாமுண்டீஸ்வரி ,  மைசூர்


மைசூர்  ரஸம் தெரியும்.  ஜம்மென்று  தலைப்பாகை கட்டிய மைசூர்  மஹாராஜா என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். மைசூர் என்ற கர்நாடக தேசத்தை ஆண்டவர்.  ஆனால்  அந்த அரசருக்கும்  ரொம்ப  காலத்திற்கு முன்னால் அந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்தவன்  அரசன் என்பதைக் காட்டிலும் அசுரன் என்று சொல்லலாம்.  அவன் பெயர்  மஹிஷாசுரன்.   எருமைத்  தலையன் . அந்த ஊர் அதனால்  எருமைத்தலை ஊர்  மஹிசூரு  என்று இருந்தது. எல்லோரும்   வேகமாக பேசி பேசி அதை மைசூர் ஆக்கி விட்டார்கள்.  மஹிஷாஸுரன் எல்லோரையும் வாட்டி வதைத்தான். அவன் கொடுமை தாங்கமுடியாமல் தவித்தனர்.  அவனை ஆண்கள் யாரும் கொல்ல முடியாது என்பதால்  விஷயம்  பார்வதி தேவி வரை போயிற்று.   அவள் சாமுண்டேஸ்வரியாக உருவெடுத்து  அவனை தவமிருந்து கொன்றாள். அவனோடு மோதுவதற்கு முன்  அவள் ஒன்பது நாள் தவம் இருந்ததது தான்  தான் நவராத்ரி. பத்தாவது நாள் அவள் மஹிஷாசுரனை கொன்றது விஜய தசமி.   சாமுண்டேஸ்வரி குன்று,   16 அடி  உயரம்  25 அடி  நீளம் பெரிய நந்தி ஆகியவை இன்றும் அநேக கோடி யாத்ரிகர்களை மகிழ்விக்கிறது. மைசூர்  தசரா  எனும் நவராத்ரி பண்டிகைக்கு பேர் போனது. உலகமே  திரண்டு  வரும். 


பெங்களூருக்கு விமான போக்குவரத்து வசதி இருக்கிறது. அங்கிருந்து மைசூருக்கு  நிறைய  பஸ் கார் வசதி உண்டு. 140 கி.மீ. தூரம்.





Monday, November 29, 2021

KUDHAMBAI CHITHTHAR

 குதம்பை சித்தர்--  நங்கநல்லூர்  J K  SIVAN 


இதற்கு முன் எழுதிய  சில குதம்பை சித்தரின் பாடல்கள்  நிறைய பேருக்கு பிடித்திருந்தது என்று அறிகிறேன்.  இன்று  இன்னும்  சில  பாடல்கள் பதிவிடுகிறேன்.  அவர் பாடல்களுக்கு அர்த்தம் சொல்ல அவசியமே இல்லை. எளிதில் புரியும். ரெண்டடி பாடல்கள் தானே. அதில் ஒன்று திரும்ப திரும்ப வருவது.

   ''தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்
     மூவரும் ஆவாரடி குதம்பாய்
     மூவரும் ஆவாரடி.

அடியே  பெண்ணே,  இந்த திருமூர்த்திகள்  இருக்கிறார்களே, ப்ரம்மா, விஷ்ணு,  சிவன். இவர்களைத்தான் விண்ணோரும் மண்ணோரும்  சதா தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தேடுகிறார்கள்.  வெவ்வேறாக தெரியும்  இந்த மூவருமே  மொத்தத்தில் ஒருவரே தானடி.

சத்தாகிச் சித்தாகித் தாவர சங்கமமாய்
     வித்தாகும் வத்துவடி குதம்பாய்
     வித்தாகும் வத்துவடி.22
 
பெண்ணே,  தெரிந்துகொள்ளடி,  ஸத் , சித் , ஆனந்தம்  என்றெல்லாம் யோகிகள் சொல்வார்கள். உலகில் தோன்றிய  தாவர ஜங்கம  வஸ்துக்கள்  எல்லாவற்றுக்கும்  கூட  அந்த பரமாத்மா ஒருவர் தானடி ஆதாரம்.  அவர் தான் வித்து. அதிலிருந்து விளைந்தது மற்றெல்லாம்.

உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
     திருவாகி நின்றது காண் குதம்பாய்
     திருவாகி நின்றது காண்.23

பெண்ணே இதையும் தெரிந்துகொள்ளடி.  எதெல்லாம் உருவமோ, எதெல்லாம் அருவமோ, எதெல்லாம் ஒளிவீசுகிறதோ, எதெல்லாம் எல்லையற்ற  பெருவெளியோ , அந்த  தெய்வம் ப்ரம்மம் என்று புரிந்துகொள்ளடி.
 
நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
     பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
     பாருமாய் நின்றதைக் காண்.24

பெண்ணே, பஞ்ச பூதங்கள்  அனைத்தும் அந்த பரமாத்மாவின் வெவ்வேறு ஸ்வரூபங்கள் தான் என்று உணர்ந்து கொள்ளடி.
 
புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச்
     சிவனாலே ஆகுமடி குதம்பாய்
     சிவனாலே ஆகுமடி.25

பெண்ணே,  எல்லாமே ஸாஸ்வதம்  என்று நினைக்கிறாயே , பொய் அதெல்லாம்.  அழிவில் தான் தோற்றம். தோற்றத்தின் முடிவு தான் அழிவு .  பழையன கழிதலும்  புதியன புகுதலும்  நியதி. எல்லாம்  அந்த  சிவன் ஒருவனாலே தான் என்பதை மறவாதேடி ..
 
அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல்
     புவனத்தில் உண்மையடி குதம்பாய்
     புவனத்தில் உண்மையடி.

பெண்ணே, நீ  நினைக்கிறாய்  எல்லாம் உன் முயற்சியால் சாமர்த்தியத்தால் என்று,  அது மடமையடி.  நன்றாக புரிந்துகொள் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது அப்பட்டமான உண்மை.  

(திருவிளையாடல் சினிமாவில் கூட  சிவாஜி கணேசன், சிவனாக  கண்ணை பெரிதாக உருட்டி விழித்து,  TMS  குரலில்  ''நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே '' என்று பாடுவாரே  அது இந்த உண்மையை எளிதில் எல்லோர் மனதிலும்  பதிய வைக்க). 

காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்
     ஆரணஞ் சொல்லுமடி குதம்பாய்
     ஆரணஞ் சொல்லுமடி.27

பெண்ணே,  உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் காரியம் இணைபிரியாமல் உண்டு. காரணம் இன்றி காரியம்  இல்லை,  பகவான் சித்தம் என்பது தான் காரணம், அது நிறைவேறுவதும் நமது மூலம் அவன் சங்கல்பம்.. இதை வேதங்களும் சாஸ்திரங்களும் நிறைய சொல்கிறதடி.
  
காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றுந்
     தாரணி சொல்லுமடி குதம்பாய்
     தாரணி சொல்லுமடி.28

மேலே சொன்னதன்  விளக்கம் இது.  காரணம் இன்றி காரியம் இல்லை. இது உலக வழக்கு. விதி முடிந்து மண்டையைப் போட்டால் கூட  ஏதோ ஒரு வியாதி பெயரைச்சொல்லி அது  அவனை நின்றுவிட்டது என்கிறோம். டாக்டர்கள் பாடு கொண்டாட்டம்.  வாழ்நாள் பூரா சேர்த்து, கடன் வாங்கி டாக்டர் மருந்து  ஆஸ்பத்திரி என்று  விரயம் செய்து  விதி விட்ட வழியில்  வெறுங்கையுடன் போகிறோம்.
 
ஆதிசகத்து என்று அநாதி மகத் தென்று
     மேதினி கூறுமடி குதம்பாய்
     மேதினி கூறுமடி.29

பெண்ணே, உலகில் ஸர்வம்  விஷ்ணு மயம் ஜகத், ப்ரம்மமயம் ஜகத். என்கிறோமே என்ன அர்த்தம்?  இந்த உலகம் ஒரு மாயத்தோற்றம்.  விதவிதமான கலர்களோடு  மாற்றங்களோடு நம்மைக் கவரும் அழியும்  தோற்றம். இது தான் ஜகத்.   இதை ஆட்டுவிப்பது,  இதன் ஆதாரம்,  அந்த  அழிவற்றப்ரம்மம் எனும் அளவற்ற, உருவற்ற  மஹத் என்ற பேரருள்.  இதை தான் வேதங்கள் சொல்கிறதடி.

  யானை தலையாய் எறும்பு கடை யாய்ப்பல்
  சேனையைத் தந்தானடி குதம்பாய்  
சேனையைத் தந்தானடி.31
 
அடேயப்பா, இந்த ப்ரபஞ்சத்தில் தான் எத்தனை உயிர்கள் படித்துக்கொண்டே இருக்கிறான் அந்த பிரமன்.  யானை போன்ற பெரிது முதல் எறும்பு போன்ற  சின்னூண்டு வரை, எவ்வளவு விதமான ஆச்சரியமான உருவங்களில் எண்ணற்ற  ஜீவராசிகளை  அவன் படைக்கிறான். ஜீவாத்மாக்களில் உள்ள அந்த பரமாத்மா தான் எல்லாவற்றுக்கும் காரணம்.

மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே
     எண்ணளவு இல்லையடி குதம்பாய்
     எண்ணளவு  இல்லையடி.32

மனிதன் அறிவு  என்னவெல்லாம் செய்கிறது பார்த்தாயா பெண்ணே.  ஊர்கள், உலகம் என்று மண்ணால்  ஏதேதோ  எல்லை, அளவு  அவன்  காட்டலாம். ஆனால்  இவ்வளவு வஸ்துக்களை  படைக்கும் அந்த பரமாத்மனையோ,  அவன் காரியங்களையோ, அறிவதற்கு,   எண்ணுவதற்கு இன்னும் ஒரு அளவு, அளவுகோல்,  கிடைக்கவில்லையடி..

அழிக்கமுடியாத  ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
     சோதியாய் நின்றானடி குதம்பாய்
     சோதியாய் நின்றானடி.33

ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் நடத்தும் அந்த ஆதி அந்தமில்லாத,  தோற்றம் மறைவு இல்லாத  பரஞ்சோதியை, ஒளியாக கும்பிடடி.
 
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
     தேவன் அவனாமடி குதம்பாய்
     தேவன் அவனாமடி.34

பெண்ணே  அவனை யார்  என்று நினைக்கிறாய்?  அவன் தானடி நமக்கெல்லாம்  இந்த  ஜீவன், உயிர், உள்ளம், எண்ணம், புத்தி, உடல் எல்லாமே  தந்தவன். ப்ரம்மமாகிய  பரமேஸ்வரன். அவனை வணங்கடி..
 
சத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம்
     சத்தியம் உள்ளானடி குதம்பாய்
     சத்தியம் உள்ளானடி.35
 
கடவுள் இல்லை என்று எவன் சொன்னான்?  அவன் உள்ளான் .  அவனே  நாதம் . ஓம்கார பிரணவ ஸ்வரூபம். அவனே ஒளி ஒலி, குணம், குணம் இல்லாதது, எல்லாமானவன் , அவன் தான் அழிவற்ற  ஸத்யம்  ஸத்யம்  ஸத்யம்  என்று புரிந்துகொள்ளடி பெண்ணே. தெரிந்துகொள்ளடி.

குதம்பை சித்தரை அடிக்கடி வணங்கி  அருள்வாக்கு பெறுவோம்.

Sunday, November 28, 2021

VAINVA VINNOLI

  வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN                        


6. ''கண்ணனையே காண்க நம் கண்''

ஆழ்வார்களின் தமிழ் அமிழ்துக்கு ஒப்பானது. எப்படி அவர்களால் இவ்வளவு தெளிவாக, எளிமையாக தேனில் பாகை கலந்து தருவது போல் பக்தியை தீந்தமிழில் சேர்த்து அளிக்க முடிந்ததோ?. பேயாழ்வாரின் 100 பாசுரங்களில் எல்லாமே இனிக்கிறது. இடமின்மை காரணமாகவும், வாசகர்களின் படிக்க நேரமின்மை காரணமாகவும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு அளிக்கிறேன்.

இவரைப் பற்றி முன்பு  எழுதியிருந்தது ஞாபகம் இருக்கிறதா?
கும்மிருட்டில் ஒரு திண்ணையில் திருக்கோவலூரில் நான்காவது ஆளாக நாராயணனை தம்மில் ஒருவனாக கண்ட பேயாழ்வார் பாடிய அபூர்வ பாசுரம் தான் முதல் பாசுரமாக மூன்றாம் திருவந் தாதியில் இடம் பெறுகிறது.

'திருக்கண்டேன் திருமேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று '

''அடடா, இத்தனை நேரம் இந்த இருட்டில் நம்மோடு கூட் டத்தில் இடித்துக் கொண்டு நின்ற அந்த நாலாவது ஆள், நாராயணனா? லக்ஷ்மியோடு தரிசனம் தரும் அந்த திருமேனியையா பார்த்தேன்?, அந்த திவ்ய சேஷசயனனின் ஸ்யாமள நிறம் கண்ணில் தெரிந்ததே . கையில் பளபளக்கும் சுதர்சன சக்ரம், பாஞ்ச ஜன்யமும் கண்டேன், கண்டேன் கண்ணாரக் கண்டேனே. கொட்டும் மழையில் மை இருட்டில் அந்த ஆழி மழைக் கண்ணனின் நீல வண்ணனின் தரிசனத்தில் என் மனம் கொள்ளை போனதே இன்று'' என வர்ணிக்கிறார் பேயாழ்வார் .

'மனத்து உள்ளான், மா கடல் நீர் உள்ளான், மலராள்
தனத்து உள்ளான், தண் துழாய் மார்பன்,-- சினத்து
செருநர் உகச் செற்று , உகந்த தேங்கு ஒத வண்ணன்,
வரு நரகம் தீர்க்கும் மருந்து.',

என் மனதில் மட்டும் இல்லை, எல்லோர் மனத்திலும் இருப்பவன், நீண்ட பாற்கடலில் துயில்பவன், லக்ஷ்மி பிராட்டியை ஸ்ரீ தரனாக கொண்டவன், குளிர்ந்த துளப மாலை மார்பு நிறைய அணிந்தவன், அரக்கரை அழித்த அண்ணல், நரகம் எனும் நோயில் இருந்து உடனே நம்மை விடுபட வைக்கும் மருந்து அல்லவோ அவன் ? எத்தனை வாரத்தைகளில் வர்ணித்தாலும் இன்னும் சொல்லவேண்டியது நிறைய பாக்கி அல்லவோ இருக்கும் அவனைப் பற்றி.

'மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் அங்கே - பொருந்தியும்
நின்று உலகம் உண்டு, உமிழ்ந்து, நீர் ஏற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி'

அவனே மருந்து, அவனே செல்வம், அவனே என் அமுதம், அவன் யார்? வேங்கடவனாக நிற்பவன் ஏழுமலையான், , உலகமே தன்னுள் கொண்ட விஸ்வரூபன், அவன் மண்ணாக இந்த உலகையே உண்டவன், சிறு வாமனனாக மூவடி மண் தானம் பெற்று, ஓரடியால் மண், மற்றொரு அடியால் விண், மூன்றாம் அடிக்கு எது ? நின் சிரமா? என்று மஹாபலி சக்ரவர்த்தியின் தலைக்கு மேல் காலை உயர்த்தி நின்ற திரிவிக்ரமன்!

'நாமம் பல சொல்லி நாராயண என்று
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே -- வா மருவி,
மண் உலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண்'

அவனது ஸஹஸ்ர நாமங்களையும் சொல்லி, சுலபமாக ஓம் நமோ நாராயணாய ' என்று எட்டெழுத்து மந்திரமும் கூறு என் நெஞ்சே, அந்த மண்ணையும் விண்ணையும் தன்னுள் கொண்ட , வண்டுகள் சுற்றி மகிழும் குளிர் துளசிமாலை அணிந்த கண்ணனை, இமை மூடாமல் கண்டு கண் பெற்ற பயனை முழுதும் அனுபவிக்கவேண்டும் நம் கண்கள்.

'சென்ற நாள், செல்லாத செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள், என் நாளும் நாள் ஆகும் - என்றும்
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய்''

''ஒவ்வொருநாளும் திருநாள், ஆமாம் திருமால்நாள், எனவே, கடந்த நாள், நடக்கும் நாள், இனி கிடைக்கப் போகும் நாள், எல்லாமே எங்கள் திருமால் நாமத்தை வாயினிக்க உச்சரிக்கவே தான், எந்நாளும் இவனே எம் இறவாத எந்தை, அவன் திருவடிக்கே நாம் ஆளானோம், இதை மறவாது அவனைப் போற்றியே ஒயாமல் பாடு, பேசு, வாழ்த்து என் வாயே!

''தானே தனக்கு உவமன் - தன் உருவே எவ் உருவும்
தானே தவ உருவும் தாரகையும், தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இறை ''

ஒப்பாரில்லாத ஒப்பிலி அப்பன் அவன். அவனே அவனுக்கு நிகர். எல்லா உருவும் தனது உருவே ஆனவன். அவனே தவத்தின் உரு, விண்ணில் ஒளிர் தாரகை, எரிக்கும் சூரியன், நெடி துயர்ந்த மாமலை, எட்டு திசையும் நிறைந்தவன், அண்டத்தின் ஒளியான சூரிய சந்திரன், அவனே என் நாராயணன்''

''எய்தான் மராமரம் ஏழும் ராமனாய்
எய்தான் அம்மான் மறியை எந்திழைக்கு ஆய் எய்ததுவும்
தென் இலங்கைக் கோன் வீழ சென்று குரள் உருவாய்
முன் நிலம் கைக் கொண்டான் முயன்று''

என் நாராயணன் யாரென்று சொல்லட்டுமா? ராமனாக வந்து ஏழு பிரம்மாண்ட மராமரங்களை ஒரே அம்பால் துளைத்தவன், மாரீச பொய்(ன்) மானை அம்பெய்து கொன்று அதன் மூலம் தென்னிலங்கை ராவணனை வதம் செய்தவன், அவ்வளவு பெரியவன் ஒரு சிறு குள்ள வாமனனாக மூன்றடி மண் வரம் பெற்று மூவுலகும் ஈரடியால் அளந்தவன் இப்போது புரிகிறதா அவனை?

தாழ் சடையும், நீள் முடியும், ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்று மால் -- சூழும்
திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து!

இது என்னை மிகவும் கவர்ந்த பாசுரம். இதை முதலில் கேட்டது MS அம்மாவின் தேன் குரலில்.  இதோ அந்த பாட்டு.  கேளுங்கள்  

https://youtu.be/CNbX04yfdNo 
 பரந்த விரிசடையும் இருக்கிறது, அதே சமயம் நீண்ட அழகிய அலை அலையாக கூந்தல், அட இது என்ன கையில் சிவனின் மழுவா? அதே சமயம் விஷ்ணுவின் சக்கரமாகவும் தெரிகிறதே, பெரிய அரவம் சூழ்ந்து இருக்கிறது மாலையாக, பைந்நாக படுக்கையாகவும் தெரிகிறது, இந்த அழகிய நதி பாயும் திருமலையில் நிற்கும் என் தெய்வம் எப்படி ஒரே சமயத்தில் ஒரே உருவில் இணை பிரியா இரண்டாக, ஹரனாகவும் ஹரியாகவும் காட்சி தருகிறான். என்னே ஆச்சர்யம்! பேயாழ்வார் சுவாமிகளே, உம்மைப் போன்ற அபேத வைணவரை உலகம் போற்றுவதில் என்ன ஆச்சர்யம்?''

பொன் திகழ் மேனி, புரிசடையும் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும்
இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன்
ஒருவனங்கத்து என்றும் உளன் ''.

''அவன், அந்த சிவன், பொன்னார் மேனியன், விரித்த செஞ்சடையான், இவனோ மூவடியில் மூவுலகும் அளந்தான்.இரு உருவில் அவரவர் எங்கும் நிறைந்தாலும், வேறுபட்டாலும், ஒருவருள் ஒருவரே அவர்கள் இருவருமே என்றும்...'' சாஷ்டாங்க நமஸ்காரம் பேயாழ்வாரெ ... என்னே உயர் சிந்தனை, பரந்த நோக்கு''

இங்கே ஒரு கோவில் பற்றி சொல்கிறேன்.
சிவ - விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோவிலும், ('சங்கர நயினார் கோயில்' சங்கரன் கோயில் என்று வழக்கில் சுருக்கி சொல்கிறார்கள்.) அற்புதமான இந்த பெரிய   ஆலயத்தை தரிசிக்க எனக்கு பாக்யம் கிடைத்தது. மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியை அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றி யிருக்கிறார். குற்றாலநாதர் சித்ரசபை க்ஷேத்ரத்தில் பார்த்தேன். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றிச் சொல்கிறேன்:

திருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈஸ்வரன் கோயில்தான் இருந்ததாம். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங் களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம். ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிற போது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.

அவர் திருப்பாற்கடலுக்கு வந்து "எங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது? என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஒடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலே 'இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே!' என்ற ஏக்கத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால். "என்ன ஸ்வாமி! விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா?" என்று கேட்டார்.''
"இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்கே ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது?" என்றார் கோபமாக.
"அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்" -- கிழவர்.
''என்னய்யா சொல்கிறீர் நீர்? அங்கே தானே உள்ளே நுழைந்த பிறகு சிவன் கண்ணில் பட்டார். 
ஒடி வந்துவிட்டேன். ஏன் அய்யா பொய் சொல்கிறீர்?
''இல்லை நீர் சரியாக பார்க்கவில்லை. அது சிவனல்ல . விஷ்ணுவே தான்.சரியாக பார்க்காமல் வந்துவிட்டீர். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?''
''நீரா நானா யார் பொய் சொன்னது என்று பார்த்துவிட வேண்டும்" என்று கிழவர் வீம்பு பண்ண, வைணவரும் விடமாட்டேன் என்று மல்லுக்கு நிற்க ரெண்டு பேர் மத்யஸ்தம் பண்ணி ''நாங்கள் பார்த்து சொல்கிறோம்'' என்று சமாதானப் படுத்தி எல்லோருமாக உள்ளே சென்றார்கள்..

வாஸ்தவத்தில் அங்கே போய்ப் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாக ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கம் மாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

'அடடா! நாம் ஏமாந்து போய்விட்டோமே - மஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார்? என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம். கிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்!

திருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும்; அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்றுகொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈஸ்வரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறது. 

SRI LALITHA SAHASRANAMAM

  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்லோகங்கள்  101 -104   நாமங்கள்   491- 508

कालरात्र्यादि-शक्त्यौघ-वृता स्निग्धौदनप्रिया ।
 महावीरेन्द्र -वरदा  राकिण्यम्बा-स्वरूपिणी ॥ १०१॥ d

 Kalaratryadishaktyao -ghavruta snigdhao-dana priya
Mahavirendra varada  rakinyanba svarupini – 101

காளராத்ர்யாதி ஶக்த்யோ கவ்றுதா, ஸ்னிக்தௌதனப்ரியா |
மஹாவீரேம்த்ர வரதா, ராகிண்யம்பா ஸ்வரூபிணீ || 101 ||

मणिपूराब्ज -निलया वदनत्रय-संयुता ।
 वज्रादिकायुधोपेता  डामर्यादिभिरावृता ॥ १०२॥

Manipurabja nilaya vadanatraya sanyuta
Vajradikayudhopeta dayaryadibhiravruta – 102

மணிபூராப்ஜ னிலயா, வதனத்ரய ஸம்யுதா |
வஜ்ராதிகாயுதோபேதா, டாமர்யாதிபி ராவ்றுதா || 102 ||

 रक्तवर्णा मांसनिष्ठा  गुडान्न -प्रीत-मानसा ।
समस्तभक्त-सुखदा लाकिन्यम्बा-स्वरूपिणी ॥ १०३॥

 Rakta-varna mansanishta gudanna pritamanasa
Samsta bhakta sukhada  lakinyanba svarupini - 103

ரக்தவர்ணா, மாம்ஸனிஷ்டா, குடான்ன ப்ரீதமானஸா |
ஸமஸ்த பக்தஸுகதா, லாகின்யம்பா ஸ்வரூபிணீ || 103 ||
|
स्वाधिष्ठानाम्बुज -गता  चतुर्वक्त्र -मनोहरा ।
शूलाद्यायुध -सम्पन्ना पीतवर्णाऽतिगर्विता ॥ १०४॥

 Svadhishtananbujagata chaturvaktra manohara
Shuladyayudha sanpanna pitavarna tigarvita – 104

ஸ்வாதிஷ்டானாம்பு ஜகதா, சதுர்வக்த்ர மனோஹரா |
ஶூலாத்யாயுத ஸம்பன்னா,பீதவர்ணா,‌ அதிகர்விதா || 104 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (491-508) அர்த்தம்

* 491 * 
कालरात्र्यादिशक्त्यौघवृता - காளராத்ர்யாதி ஶக்த்யோக வ்ருதா--    
லலிதாம்பிகையை  எந் நேரமும் சக்திகள் சூழ்ந்த வண்ணமாக இருப்பார்கள்.  உதாரணமாக  காளராத்ரி,  கண்டிதா , காயத்ரி போன்றவர்கள்.  ஆம்.  ராகினியை சுற்றி காளராத்ரி போன்ற   பன்னிரண்டு  உதவியாளர்கள் அருகில் இருப்பார்கள். அவரவர் ஸ்ரீ சக்ரத்தில்  ஒவ்வொரு தாமரை இதழுக்கும் அதிகாரி.  காளராத்திரி  ருத்ரனின் தமோ குணத்தில் உருவானவள்.  மூன்று கண்ணு டையவள்.   செந்நிற பிழம்பாக  உதய சூர்யன் போல் சிவந்தவள்.  தலை பின்னல் கலைந்திருப்பவள்.  கருப்புநிற ஆடை உடுப்பவள்.  அவளது நான்கு கரங்களில்,  லிங்கம், புவனம் இரண்டிலும்  மற்ற இரண்டில் தண்டம்,  அபய வரம்  கொண்டவள்.  அவளை ஜபம் செய்தால்   எதிரிகள் அழிவர். துர்கை அம்சம் அவள். மரண காலத்தில் இறப்பவன் கனவில் வந்து அவன் மரணத்தை அறிவிப்பவள் என்று கூறுவதுண்டு.  எழுவத்தியேழாவது வருஷம், ஏழாவது மாதம், ஏழாம் நாள் இரவு கனவில் தோன்று பவள். அதன் பிறகு அந்த பக்தன்  சாஸ்திரங்கள் விதிக்கும் விதிகள் சிலவற்றிலிருந்து விலக்கு பெறுகிறான்.

* 492 *  
स्निग्धौदनप्रिया - ஸ்னிக்தௌதனப்ரியா -  
நெய் பிசைந்த சாதம் விரும்பி உண்பவள்.  ராகினிக்கு இந்த உணவு நல்ல ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று தெரியும்.

* 493 * 
 महावीरेन्द्रवरदा -மஹாவீரேந்த்ர வரதா --  
வீரர்களுக்கும்  மகரிஷிகளுக்கும்  வரம் தருபவள்.  சிவ சூத்ரம் ''மூன்று குணங்களையும்  வெல்வதை  வீரா என்றும் அப்படி முக்குணங்களை கட்டுப்பாட்டில் கொண்டவர்கள் விரேந்திரர்கள்  என்றும் பெயரிடுகிறது.  அவர்கள் துரியம் எனும் நாலாவது ஸ்தானத்துக்கு சென்று ஆனந்தம்  துய்ப்ப வர்கள்.   ராகினி இப்படிப்பட்ட உயர்நிலை அடையும் வரம் தருபவள்.

* 494 *  
राकिण्यम्बास्वरूपिणी -ராகிண்யம்பா ஸ்வரூபிணீ --  
லலிதைக்கு ராகினி, மஹா வீரேந்திர வரதா  என்ற பெயர்கள் உண்டு அல்லவா.   ராகினி  அம்பாள் ஸ்வரூபம் கொண்டவள் என்ற இந்த நாமமும் உண்டு என்கிறார் ஹயக்ரீவர்.

* 495 * 
मणिपूराब्जनिलया -மணிபூராப்ஜனிலயா  -- 
ஸ்ரீ சக்ர பத்து  இதழ் கொண்ட  தாமரையில்  உறைபவள்  என்பது நமது உடலில் மணிப்பூர சக்ரத்தை குறிக்கும். தொப்புள் அருகே. இதற்கான யோகினி லாகினி ஆவாள். இந்த சக்ரம்  பத்து இதழ் தாமரை. இதன் ஒவ்வொரு இதழிலும் பத்து பிந்துக்கள் பீஜங்கள் கொண்ட  சக்தி வாய்ந்தது.  அவற்றின் சக்தி பத்து சூரியன் என்றால் யோசியுங்கள்.  நன்றாக விழித்தெழுந்த குண்டலினி இந்த சக்ரத்தை தாண்டி கீழே செல்வதில்லை.

* 496 * 
वदनत्रयसंयुता - வதனத்ரய ஸம்யுதா --   
மூன்று முகம் கொண்ட லாகினி.   லலிதா சஹஸ்ரநாமம் இந்த சக்ரத்தை மூன்றாவது சக்ரம் என்கிறது.

* 497 *
वज्रादिकायुधोपेता - வஜ்ராதிகாயுதோபேதா--   
வஜ்ராயுதம் போன்ற  சக்தி ஆயுதம் தரித்தவள்.  இந்திரனின் வஜ்ராயுதம் போல்   லாகினி  இடியையும்  மற்ற சக்தி ஆயுதமும்  இரு கைகளில் தரித்தவள். மற்ற இரு கரங்கள் வர அபய முத்திரை காட்டுபவை.

* 498 *
डामर्यादिभिरावृता -டாமர்யாதிபி ராவ்ருதா  -    
டாமரி போன்ற   பத்து உபதேவதைகளை அருகில்  கொண்டவள்

* 499 * 
रक्तवर्णा -  ரக்தவர்ணா-  
ரத்த வண்ணமாக  காண்பவள் ஸ்ரீ லலிதை என்கிறது இந்த நாமம்.

* 500 * 
मांसनिष्ठा -மாம்ஸனிஷ்டா --  
சதையிலும் இருப்பவள்.  முதலில் சருமம், பிறகு ரத்தம்  இப்போது அதன் கீழ் உள்ள சதை எனும் மாமிசம்.  அதுவாகவும் இருப்பவள் அம்பாள். அறியாமையால்  பாயாமல் உண்டாகிறது. ஆகவே தனிமையை கண்டு அஞ்சுகிறார்கள்.என்னைத்தவிர வேறு எதுவுமே இல்லை, நானே அவள், அவளே என்னில் நானாக இருக்கிறாள் என்ற எண்ணம் பல மடைந்தால் எதைக்கண்டு எவரைக்கண்டு அஞ்சவேண்டும்? தைத்ரிய உபநிஷத் 11.7  இதை விளக்குகிறது.  ''கற்றவனாக, படித்த பண்டிதனாக இருந்தும்  தன்னை ப்ரம்மத்திலிருந்து வேறாக உணர்பவனுக்கு ப்ரம்மம் பயத்தை கொடுக்கும்.''

* 501 * 
गुडान्नप्रीतमानसा -குடான்ன ப்ரீதமானஸா -- 
 வெல்ல சாதம் பிடிக்கும் லாகினிக்கு . அதை நைவேத்தியமாக அளிப்பார்கள். சர்க்கரை பொங்கல் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

* 502 * 
 समस्तभक्तसुखदा -  ஸமஸ்த பக்தஸுகதா --
தன்னை வேண்டும் பக்தர்களுக்கு பாரபக்ஷமில்லாமல் அருளை வழங்குபவள் அம்பாள்  லாகினி உருவில் என்கிறது இந்த நாமம்.

* 503 *
लाकिन्यम्बास्वरूपिणी -லாகின்யம்பா ஸ்வரூபிணீ -- 
மறுபடியும் ஹயக்ரீவர் வலியுறுத்துகிறார்  அம்பாள்  லாகிநி  ஸ்வரூபத்திலும் காணப்படுபவள் என்று.

* 504 *
स्वाधिष्ठानाम्बुजगता -ஸ்வாதிஷ்டானாம்பு ஜகதா--  
ஆறு இதழ்  தாமரையில் வீற்றிருப்பவள். இந்த சக்ரம்  ஸ்வாதிஷ்டானம் எனப்படும்.   இந்தச்சக்ரத்தில் அமரும் யோகினியின் பெயர் காகினி . இன்னும் ஒன்பது  நாமங்கள்  காகினியைப் பற்றியே வரும்.  மூலாதார  சக்ரத்திற்கு கொஞ்சம் மேலே  இருப்பது தான் ஸ்வாதிஷ்டான சக்ரம்.  வருண பீஜம் சம்பந்தமானது. வருணபீஜம் வளமை, செல்வத்தை  அளிப்பது.

* 505 *
चतुर्वक्त्रमनोहरा -சதுர்வக்த்ர மனோஹரா -- 
நான்கு அழகிய முகங்களை கொண்டவள்  என்று இந்த நாமம் வர்ணிக்கிறது.  இது நான்காவது சக்ரத்தில்.  காகினி அழகி.  அழகு கதிர் வீசும் என்கிறது சௌந்தர்யலஹரி.(14)  மூலாதார சக்ரத்தில் இருந்து ஆஞ்ஞா சக்ரம் வரை  360 ஒளிக்கதிர்கள் வீசுகின்றன. வட்டமாக சுழன்று 360 டிக்ரீ பரிமாணம். 360 நாளும்.  என்றால் யோசியுங்கள்.

* 506 *
शूलाद्यायुधसम्पन्ना -ஶூலாத்யாயுத ஸம்பன்னா  -- 
ஈட்டி, சூலாயுதம்  போன்ற  ஆயுதம் தரித்தவள் காகினி. சிவனின் அம்சம் தானே அம்பாள்.   இவளுக்கும் நான்கு கரங்கள்.  சூலம், பாசம், கபாலம், அங்குசம், அவள் ஆயுதங்கள்.  சில நூல்கள் அவள் சங்கு சக்ரம், கதாயுதம், தண்டம், தாமரை மொட்டு  ஆகியவற்றை கரங்களில் ஏந்தியவள்  என்று வர்ணிக்கின்றன. ஆகவே  லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதும் ஏனைய  குண்டலினி தத்வ புத்தகங்கள் சொல்வதும்  சக்ர தேவிகளை பற்றிய சில மாற்றங்களை, மாறுபாடுகளை  கூறும்போது அதை   கவனித்தால் மட்டுமே போதுமானது. ஆராய்ச்சி வேண்டாம்.

* 507 *
पीतवर्णा -பீதவர்ணா,-   
பள பளக்கும் பொன்வண்ண ஆடை. பீதாம்பரம் உடுப்பவள்  காகினி. அவள் நிறத்துக்கு ஏற்றது. அவளும்  பொன்வண்ணமானவள். பொன்னம்மா.

* 508 * 
अतिगर्विता -அதி கர்விதா --   
காகினிக்கு  தன்னைப் பற்றி கொஞ்சம்  கர்வம் பெருமை உண்டு.  இருக்காதா பின்னே?  அவள் சிறந்த  பேரழகி அல்லவா?  லலிதாம்பிகை அப்படி அல்ல.  அவளிடம் தற்பெருமை இல்லை.  மற்றவர்களிடம் இல்லாதது தன்னிடம் கொஞ்சம் இருந்தால் எவருமே கொஞ்சம் பெரிய தலையோடு தானே அலைகிறோம்.   ஸ்ரீ லலிதை எல்லாம் எப்போதும் என்றும் உள்ளவள். அவளுக்கு எதற்கு பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும்.

சக்தி பீடம்                    சிருங்கேரி சாரதா பீடம்

கர்நாடகாவில், ஸஹ்யாத்ரி மலைகளில் அமைதியாக  துங்கபத்திரை  நதிக் கிழக்கு கரையில் குடியிருக்க அம்பாள் திட்டமிட்டிருக்கிறாள். சக்திவாய்ந்த நான்கு ஆன்மிக பீடங்களில் இது முதலானது.  சிக்மகளூர் தாலுக்காவை  சேர்ந்தது சிருங்கேரி. இங்கே அம்பாளின் பீடம் சாரதா பீடம் என்ற பெயர் கொண்டது.  8ம் நூற்றாண்டு ஆலயம்.

மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்த ஆதி சங்கரர் ஒரு கணம் நின்றார்.  இதென்ன ஆச்சர்யம்? எதிரே துங்கபத்ரா நதிக்கரையில்  ஒரு நாகம்  தலைவிரித்து குடை பிடித்து நிற்க  அதன் குடை நிழலில் அடியில் ஒரு  கர்ப்பிணி தவளை பிரசவித்துக் கொண்டிருக்கிறது. தான் விரும்பி லபக் என்று விழுங்கும் ஒரு ஆகாரத்திற்கு உற்ற தாய் போல்  ஒரு எதிரியின்  பிரசவகால உதவியா!  நிச்சயம் இந்த இடத்தில் என் தாய்க்கு ஒரு இடம் அமையவேண்டும்.  நமது பாக்கியம் அவரால் அங்கே சிருங்கேரி சாரதா பீடம் உருவானது. வித்யாரண்யர் எனும் குருவின்  சமாதியில் உருவான  பிற்கால ஆலயம்.  ஆறு வாசல். ஒருபெரிய ரதம் அமர்ந்திருப்பது போன்ற தோற்றம். வானளாவிய கோபுரம்.  பன்னிரண்டு தூண்கள் பன்னிரண்டு ராசியைக்  குறிப்பது. ராசி தூண்கள்  என்பார்கள். ஒவ்வொரு தூணிலும் ஒரு கர்ஜிக்கும் கோப சிங்கம். ஆ வென்று பிளந்த வாயில் ஒரு  கல் உருண்டை.தொட முடியும், உள்ளே நகரும் ஆனால்  வெளியே வராது.  தூரத்திலிருந்து பார்த்தால் துங்கபத்ராவில் ஓரு பெரிய அன்னம் கம்பீரமாக உட்கார்ந்திருப்பது போல்  காணும்  ஆலயம்.   இங்கே சாரதாவை ஸ்தாபித்த பின்  ஆதி சங்கரர் தனது அத்வைத பிரசாரம் மேற்கொண்டார்.
ஸரஸ்வதி தேவி தான் சாரதா.பாரதி. நின்ற கோலம்.  ஸ்ரீ சக்ரத்தில் சாரதா தேவி அமர்ந்த கோலம். கையில் ஜபமாலை. இன்னொன்றில் ஒரு பச்சைக் கிளி.  கொள்ளை அழகு. நவராத்ரி சமயம் பக்தர்கள் லக்ஷக்கணக்கில் கூடும் க்ஷேத்ரம்.   மங்களூரில் இருந்து பறந்து செல்லலாம்.  ரயில் ஷிமோகா, கடூர் வரை தூக்கி செல்லும்.  பஸ் நிறைய சிரிங்கேரிக்கு  ஓடுகிறது.  பெங்களூரிலிருந்து 336 கி.மீ.



AANGARAI ANNADHANAM SUBBAIYAR

 **ஆங்கரை அன்னதானம் சுப்பையர் ... நங்கநல்லூர் J K SIVAN **


**முகநூல் புகழ் வரகூரான் நாராயணன் நிறைய விஷயங்கள் வைத்திருப்பவர். அதில் அதிகமா னவை மஹா பெரியவா பற்றியது தான் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இது அவரது எள்ளு தாத்தாவின் அப்பா கதை- எனக்கு நேற்று வரகூரானிடமிருந்து மின்னஞ்சலில் வந்த விஷயம்.இதில் அந்த காலத்தில் எவ்வளவு தெய்வபக்தி, தர்ம சிந்தனை, இரக்கம், நேர்மை, நியாயம், எல்லோரிடமும் இருந்தது என்பது புரியும். ரோஜாமலரிடையே முள் இருப்பது போல் சில தீய குணங்கள் கொண்டவரும் இருந்ததும் தெரியவரும். வெளிச்சம் இருட்டு, பகல் இரவு, சேர்ந்து தான் வரும். **

**இதில் வரும் சம்பவத்தை ரெண்டு மஹான்கள் ஏற்கனவே சொல்லியிருப்பது ஆச்சர்யம். ஒன்று மஹா பெரியவா அந்த மனிதரின் எள்ளுப்பேரனுக்கு சொன்னது. இன்னொன்று உ.வே.சாமிநாதய்யரும் எழுதியிருக்கிறார். நான் கீழே தருவது தமிழ் தாத்தா நினைவில் இருந்து எழுதியதில் கொஞ்சம் :**

**''கொள்ளிடத்தின் வடகரையில் ஆங்கரை ஒரு ஊர். திருச்சிராப்பள்ளி ஜில்லா லாலுகுடிக்கு வடமேற்கே* இரண்டு மைல் தூரத்தில் பல ஊர்களுக்குச் செல்லும் சாலைகளுக்கு இடையே உள்ளது. ஆங்கரை அக்ர ஹாரத்தில் இருநூறுக்கு மேலே பிராமண வீடுகள். முக்காவாசிப்பேர் ஸ்மார்த்தப் பிராமணர்களுள் மழநாட்டுப் பிரஹசரணமென்னும் வகுப்பைச் சார்ந்தவர்கள். ரொம்பவும் சிவபக்தர்கள். முடிந்த வரை அதிதிகளை உபசரித்து அன்னமளிப்பவர்கள். பழைய காலத்தில் இந்த விருந்தோம்பல் வழக்கம் எல்லாச் சாதியினரிடத்தும் இருந்தது.**

**ஏறக்குறைய நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் ஆங்கரையில் சுப்பையரென்ற ஒருவர் இரண்டா யிரம் ஏகரா நன்செய்கள் நில எஜமானராக வாழ்ந் தவர். அவை ஏழு கிராமங்களில் பரவலாக இருந்தது. ஆகவே அவருடைய குடும்பம் பரம்பரையாகச் செல்வமுள்ள குடும்பம். சுப்பையரின் தெய்வ பக்தியும், ஏழைகளிடத்தில் அன்பும், தர்மசிந்தனை எல்லோரும் அறிந்தது. தினமும் விடி காலையில் ஆற்றில் ஸ்நாநம் செய்துவிட்டுப் பூஜையை முடித்துக் கொள்வார்; பிறகு தாம் போஜனம் செய்வதற்கு முன் தம் வீட்டுத் திண்ணையில் யாரேனும் அதிதிகள் வந்துள்ளார்களாவென்று பார்ப்பார்.**

**திரிசிரபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா முதலிய இடங்களுக்குப் பாதசாரிகளாகச் செல்பவர்களும் அவ்வூர்களிலிருந்து தங்கள் தங்கள் கிராமங்க ளுக்குச் செல்பவர்களுமாகிய வழிப்போக்கர்கள் அவருடைய வீட்டுக்கு வந்து திண்ணையில் எப்போ தும் தங்கி இருப்பார்கள். அவர்களைச் சுப்பையர் உள்ளே அழைத்துப் பசியாற அன்னமிட்டு உபசரிப்பது வழக்கம். அவர் அன்னமிடுவதை யறிந்து பல பிரயாணிகள் அவர் வீட்டுக்கு வருவார்கள். அவருடைய வீடானது ஒரே சமயத்திற் பலர் இருந்து சாப்பிடும்படி விசாலமானது. சுப்பையர் எல்லா வகையினருக்கும் அவரவர் களுக்கேற்ற முறையில் அவர் உணவளிப்பார். பசியென்று எந்த நேரத்தில் யார் வரினும் அவர்கள் பசியை நீக்கும் வரையில் அவரது ஞாபகம் வேறொன்றிலும் செல்லாது. வீட்டிற்கு இரவும் பகலும் இங்ஙனம் வந்து போவாரை உபசரித்து அன்னமிடுவதையே தன் வாழ்க்கையின் பயனாக கருதியவர். பசிப்பிணி மருத்துவர்.ஆகவே அவரு டைய புகழ் எங்கும் பரவியதில் ஆச்சர்யம் இல்லை. ஊர் உலகமே அவரை அவரை அன்ன தானமைய ரென்றும், அன்னதானம் சுப்பையரென்று தான் புகழ்ந்தது. **

**சுப்பையர் குடும்பம் மிகவும் பெரியது; அவருடைய சகோதரர்கள், அவர்களுடைய மனைவிமார், பிள்ளைகள், பெண்கள், மருமக்கள், எல்லோரும் ஒரே கூட்டு குடும்பம். அன்னதானம் செய்ய , வெளியே இருந்து சமையல்காரர்கள் யாரும் கிடையாது. வீட்டிலுள்ள பெண்களே சமையல் செய்வதும் வந்தோரை உபசரித்து அன்னமிடுவதுமாகிய செயல்களைச் செய்தார்கள். சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரையில் யாவரும் இலைகளைப் போட்டும், பரிமாறியும், பிற வேலைகளைப் புரிந்தும் தம்முடைய ஆற்றலுக்கேற்றபடி உரிய காரியங்களைக் கவனிப்பார்கள். **

**அதிதிகளுக்கு பரிமாற அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய்கள் எல்லாமே அவ்வப்போது வீட்டில் பெண்களே தயாரிப்பார்கள். சுப்பையர் வீடு ஒரு சிறந்த அன்ன சத்திரமாக திகழ்ந்தது. வீட்டில் எல்லோரும் தர்மத்திற்காக அன்புடன் உழைக்கும் பணியாளர்களாக இருந்தனர்.**

**"இப்படி இருந்தால் எப்படிப் பணம் சேரும்? எப்பொழுதும் இந்த மாதிரியே நடந்து வருவது சாத்தியமா?" என்று சிலர் சுப்பையரைக் கேட்பார்கள்.
"பரம்பரையாக, நடந்துவரும் இந்த தர்மத்தைக் காட்டிலும் மேற்பட்ட லாபம் வேறொன்றும் எனக்கு இல்லை. பசித்து வந்தவர்களுக்கு அன்னமிடுவதே சிவாராதனம் .. தெய்வம் எவ்வளவு காலம் இதை நடத்தும்படி கிருபை பண்ணுகிறதோ அவ்வளவு காலம் நடத்தியே வருவேன். நான் செய்வது கெட்ட காரியமில்லையென்ற திருப்தியே எனக்குப் போதும்" என்பார்**
**ஒரு சமயம் மழையின்மையாலும் ஆறுகளில் ஜலம் போதியளவு வாராமையாலும் நிலங்களில் விளைச் சல் குறைந்தது. ஆயினும் சுப்பையர் அன்னதானத் தைக் குறைக்கவில்லை. இப்படி ஒருவர் அன்னமிடு கிறாரென்ற செய்தியை அறிந்த பல ஏழை ஜனங்கள் அங்கங்கே உண்டான விளைச்சற் குறைவினால் ஆதரவு பெறாமல் சுப்பையர் வீட்டிற்கு வந்து உண்டு அவரை வாழ்த்திச் சென்றார்கள். இதனால் அக் காலத்தில் வழக்கத்திற்கு மேல் அவர் அன்னதானம் செய்ய நேர்ந்தது. ஆயினும் சுப்பையர் மனங் கலங்கவில்லை. நாயன்மார்களுடைய வரலாற்றை உணர்ந்திருந்த பரமசிவ பக்தராகிய அவர் அந்நாயன்மார்கள் இறைவன் சோதனைக்கு உட்பட்டுப் பின் நன்மை பெற்றதையறிந்த வராதலின், தம்முடைய நிலங்கள் விளைவு குன்றியது முதலியனவும் அத்தகைய சோதனையே என்றெண்ணினார். தர்மம் தலை காக்குமென்ற துணிவினால், எப்பொழுதும் செய்துவரும் சிறப்புக்குக் குறைவில்லாமல் அன்னதானத்தை நடத்தி வந்தார். பொருள் முட்டுப்பாடு உண்டான மையால் தம் குடும்பத்துப் பெண்பாலரின் ஆபரணங்களை விற்றும், அடகு வைத்தும் பொருள் பெற்று அன்ன தானத்திற்குப் பயன்படுத்தி வந்தார். அதனாற் குடும்பத்தினருக்குச் சிறிதேனும் வருத்தம் உண்டாகவில்லை; அப்பெண்களோ அந்த நகைகள் ஒரு நல்ல சமயத்தில் பயன்பட்டது கருதி மகிழ்ந் தார்கள். அந்தக் குடும்பத்திலுள்ள யாவரும் ஆடம்பரமின்றி யிருந்தார்கள்.**

**பொருள் தட்டுப்பாடு அவ்வருஷத்தில் நேர்ந்தமை யால் அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய 'கிஸ்தி'யை சுப்பையரால் செலுத்த முடியவில்லை. பெருந்தொகையொன்றை வரிப்பணமாக பாக்கி செலுத்த வேண்டியிருந்தது. அவ்வூர்க்கணக்குப் பிள்ளை, மணியகாரர் ஆகியவர்கள் வரி வசூல் செய்ய முயன்றார்கள். சுப்பையர் தம்முடைய நிலை மையை விளக்கினார். அவர்கள் சுப்பையருடைய உண்மை நிலையையும் பரோபகார சிந்தையையும் நன்கு அறிந்தவர்களாதலால் அவர் கூறுவது மெய்யென்றே எண்ணினர். ஆயினும் மேலதிகாரி களுக்கு எவ்விதம் பதில் சொல்லுவது??**

** "சுப்பையரே, நாங்கள் என்ன செய்வோம்! உடனே வரியை வசூல் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறதே!" என்றார்கள். சுப்பையர், "என்னால் வஞ்சனையில்லை யென்பது உங்களுக்கே தெரியும். நான் வரியைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக மேலதிகாரிகளுக்கே தெரிவியுங்கள். அவர்கள் இஷ்டம்போலச் செய்து கொள்ளட்டும். அவர்கள் நிலத்தை ஏலம் போடக் கூடும். தெய்வம் எப்படி வழி விடுகிறதோ அப்படியே நடக்கும்; அதுவே எனக்குத் திருப்தி" என்றார்.**

**சிலர் அவரிடம் வந்து, "இந்தக் கஷ்டகாலத்திற் கூட அன்னதானத்தை ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்? சிலகாலம் நிறுத்தி வைத்தால் வரியையும்கொடுத்து விடலாம்; உங்களுக்கும் பணம் சேருமே" என்றார் கள்.**

** "இந்தக் காலத்தில் அன்னம் போடாவிட்டால் இவ்வளவு நாள் நான் போட்டும் பயன் இல்லை; இப்போதுதான் அவசியம் இந்தத் தர்மத்தைச் செய்துவரவேண்டும். நஷ்டமென்பது எல்லோருக்கும் இருப்பதுதானே? பல ஏழைகள் பசியோடு வரும் போது நாம் சும்மா இருப்பதைவிட இறந்துவிடலாம். இப்பொழுது கடன்பட்டாவது இந்தத் தர்மத்தைச் செய்து வந்தால் நன்றாக விளையும் காலத்தில் உண்டாகும் லாபத்தினால் ஈடு செய்து கொள்ளலாம். இப்பொழுது செய்யாமல் நிறுத்திவிட்டால் அந்த நஷ்டத்திற்கு ஈடு செய்யவே முடியாது" என்றார் சுப்பையர்.**

**கணக்குப் பிள்ளையும் மணியகாரரும் நடந்ததைப் பேஷ்காரிடம் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், மலட்டா ரென்றும் சொல்வர்) தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தார்; அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை; தாசில்தாருக்குத் தெரிவித்தார். அவர் மிக்க முடுக் கோடு வந்து பயமுறுத்தினார். சில ஹிம்சைகளும் செய்து பார்த்தார். சுப்பையர் தம்முடைய நிலைமையை எடுத்துச் சொன்னார்; **

**தாசில்தார், "சுப்பையரே , இந்த அன்ன தானத்தை நிறுத்திவிட்டுப் பணத்தைக் கட்டும்"
"ஐயா, தாங்கள் அதை மட்டும் சொல்லக்கூடாது. எங்கள் பரம்பரைத் தர்மம் இது. இதை நிறுத்தி விடுவதென்பது முடியாத காரியம். என்னுடைய மூச்சு உள்ள வரையில் இதை நிறுத்த மாட்டேன்; எனக்கு என்ன துன்பம் வந்தாலும் வரட்டும்" என்றார் சுப்பையர்.

"ஹுஹும். முடியாது. இதெல்லாம் வேஷம்! அன்னம் போடுகிறேனென்று நீர் ஊரை ஏமாற்றுகிற வழி" என்கிறார் அதிகாரி.சுப்பையர் மேல் சில காரணங்களால் பொறாமை கொண்ட குமாஸ் தாக்கள் சிலர் தாசில்தாரிடம் அவரைப் பற்றி முன்னமே கோள் கூறி இருந்தனர். தாசில்தாரும் கோபக்காரர் ஆதலால் சுப்பையருடைய குணத்தை அறிந்து கொள்ளவில்லை**

**"சரி, உம்மால் பணம் கொடுக்கமுடியாவிட்டால் உம்முடைய நிலத்தை ஏலம் போடுவேன்" என்றார் தாசில்தார்."**

**''ஐயா, அவ்விதம் செய்வது அவசியமென்று உங்களுக்குத் தோன்றினால், தெய்வத்தினுடைய சித்தமும் அதுவாக இருக்குமானால், நான் எப்படி மறுக்கமுடியும்?" என்று சுப்பையர் பணிவாகக் கூறினார்.தாசில்தார் நிலத்தை ஏலம் போட்டார்; 'இந்த தர்ம தேவதையின் நிலத்தை ஏலம் எடுத்தால் நம் குடும்பமே நாசமாகிவிடும்' என்ற எண்ணத்தால் அவ்வூரிலுள்ளோரேனும் அயலூரினரேனும் வந்து ஏலம் எடுக்கத் துணியவில்லை. தம் அதிகார மொன்றையே பெரிதாக நினைத்த தாசில்தாருக்கோ கோபம் பொங்கியது; மீசை துடித்தது; கண்கள் சிவந்தன. **

**"இந்த மனுஷன் பொல்லாதவனென்று தெரிகிறது. இவனுக்குப் பயந்தே ஒருவரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இருக்கட்டும். இவனுக்குத் தக்கபடி ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லித் தாசில்தார் போய்விட்டார்.சுப்பையரைப் போலவே வேறு பலர் வரி செலுத்தவில்லை. ஆயினும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை சிறிதாதலின் எவ்வாறேனும் வசூல் செய்து விடலாமென்ற தைரியம் தாசில் தாருக்கு இருந்தது. சுப்பையர் பெருந்தொகை செலுத்த வேண்டியவராக இருந்தமையின் அவர்மீது தாசில்தாருக்கு இருந்த கோபத்துக்கு அளவில்லை. உடனே, பலரிடமிருந்து வரிவசூல் செய்யப் பட வில்லை யென்பதையும், அவர்களுள் பெருந்தொகை செலுத்தவேண்டிய சுப்பையர் முயற்சியொன்றும் செய்யாமல் இருப்பதையும், அவருடைய நிலத்தை ஏலம் எடுக்க ஒருவரும் துணியாததையும் ஜில்லா கலெக்டருக்கு எழுதித் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார்**
**எல்லாம் பரமசிவத்தின் திருவுள்ளப்படி நடக்கும்' என்ற மனச்சாந்தியோடு சுப்பையர் அன்னதானத் தைக் குறைவின்றி நடத்திவந்தார்.**

**தாசில்தாருடைய கடிதத்தைக் கண்ட கலெக்டர் லாலுகுடிக்கு வந்து 'முகாம்' போட்டார். அவர் ஒரு வெள்ளைக்காரர்; மதியூகி; எதையும் ஆலோசித்துச் செய்பவர்; தர்மவான்; நியாயத்துக்கு அஞ்சி ஒழுகுபவர்; தமிழ்ப் பயிற்சி உள்ளவர். பிறர் தமிழ் பேசுவதைத் தெளிவாக அறிவதோடு தாமே தமிழிற் பேசவும் தெரிந்தவர். அவர் லாலுகுடிக்கு வந்து தாசில்தாரையும் வரச் செய்து அவரிடம் சுப்பைய ரைப் பற்றி விசாரித்தார்.தாசில்தார் தம்முடைய அதிகாரமொன்றும் சுப்பையரிடத்திற் செல்ல வில்லையென்ற கோபத்தினால் அவரைப்பற்றி மிகவும் கடுமையாகக் குறை கூறினார்.**
** "அவன் பெரிய ஆஷாடபூதி. இவ்வளவு நிலம் வைத்திருக்கிறவனுக்குப் பணம் இல்லாமலா போகும்? ஏதோ சிலருக்குச் சோற்றைப் போட்டுவிட்டு அன்னதானமென்று பேர் உண்டாக்கிக் கொண்டு பணத்தை மறைவாகச் சேகரித்து வைத்திருக் கிறா னென்று நான் எண்ணுகிறேன். தன் வீட்டிலுள்ள நகை களைக் கூட ஒளித்து வைத்துவிட்டான். துரையவர் கள் சிறிதேனும் இரக்கம் காட்டாமல் அந்த மனுஷ னைத் தக்கபடி சிக்ஷிக்கவேண்டும்" என்றார்.**

**தாசில்தாருடைய பேச்சில் கோபம் தலைதூக்கி நிற்பதைக் கலெக்டர் உணர்ந்தார். அவருடைய வார்த்தைகளை அப்படியே நம்புவது அபாய மென்றெண்ணினார். ஆதலின், அந்தப் பக்கங்களில் இருந்த வேறு சிலரிடம் சுப்பையரைப் பற்றி இரகசியமாக விசாரித்தார். அவ்வந்தண உபகாரி யிடம் பொறாமை கொண்ட சிலரையன்றி மற்றவர் களெல்லாம் அவரைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார்கள்; அவர் செய்யும் அன்னதானத்தைப் பற்றி உள்ளங்குளிர்ந்து பாராட்டினார்கள். கலெக்டர் துரை எல்லாவற்றையும் கேட்டார்.**

**ஒருநாள் இரவு சுப்பையர் வழக்கம்போலத் தம்மு டைய வீட்டுத் திண்ணையிலே படுத்திருந்தார். பகலிலும் இரவிலும் யாவருக்கும் அன்னமிட்டபின்பு அகாலத்தில் யாரேனும் பசியோடு வந்தால் அவர் களுக்கு உதவும்பொருட்டு உணவு வகைகளைத் தனியே வைத்திருக்கச் செய்வது அவருடைய வழக்கம். சில சமயங்களில் மழை முதலியவற்றால் துன்புற்று வழிநடைப் பிரயாணிகள் நள்ளிரவில் வருவார்கள். அவர்களுடைய பசியைப் போக்கு வதற்கு அவ்வுணவு உதவும்.சுப்பையர் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது நெடுந் தூரத்திலிருந்து, "சாமீ! சாமீ!" என்ற ஒரு சத்தம் கேட்டது. அது சுப்பையருடைய தூக்கத்தைக் கலைத்தது. அவர் விழித்தெழுந்து சத்தம் கேட்கும் வழியே சென்றார். அக்கிரஹாரத்தின் கோடியி லிருந்து யாரோ ஒருவன், "சாமீ! சாமீ!' என்று கத்திக் கொண்டிருந்தான்.

"யாரப்பா அது? " என்று கேட்டார் சுப்பையர்.
"சாமீ! நான் பக்கத்திலுள்ள ஊர் தாழ்ந்த சாதி. வேறு ஊருக்குப் போய்த் திரும்பி வருகிறேன். பசி தாங்க முடியவில்லை. இவ்வளவு தூரம் நடந்து வந்தேன்; மேலே அடியெடுத்து வைக்க முடியவில்லை''
"அப்படியானால், சற்று நேரம் இங்கே இரு அப்பனே. ஏதாவது உனக்கு கொண்டு வருகிறேன்" சுப்பையர் தம் வீட்டுக்கு வந்தார். வந்து வெளிக்கதவைத் திறக்கச் செய்து சமையலறையில் இருந்த கறி, குழம்பு, ரஸம், மோர் முதலியவற்றைத் தனித்தனியே தொன்னைகளிலும் கொட்டாங்க ங்கச்சிகளிலும் எடுத்து, அன்னத்தை ஒரு பெரிய மரக்காலில் போட்டு அதன் மேல் கறி முதலியவற்றை வைத்து மேலே இலையொன்றால் மூடினார். அப்படியே அதை எடுத்துக்கொண்டு தெருவின் கோடிக்கு வந்து,

"இந்தா அப்பா! இந்த மரக்காலில் சாதம், குழம்பு, கறி, ரஸம், எல்லாம் வைத்திருக்கிறேன். அதோ இருக்கிறதே, அந்த வாய்க்காலுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு உன் ஊருக்குப் போ. முடியுமானால் மரக்காலை நாளைக்குக் கொண்டுவந்து கொடு; இல்லாவிட்டால் நீயே வைத்துக்கொள்"
சுப்பையர் வைத்த அந்த மரக்காலை அந்த ஏழை எடுத்துக்கொண்டு, “சாமீ! உங்களைத் தெய்வம் குறைவில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலை காக்கும்" என்று வாழ்த்திவிட்டுச் சென்றான். அவனுடைய பேச்சில் ஒருவிதமான நாக்குழறல் இருந்தது; "பாவம்! பசியினால் பேசக்கூட முடிய வில்லை! நாக்குக் குழறுகிறது! என்று சுப்பையர் எண்ணி இரங்கினார். அவன் பசியைத் தீர்க்க நேர்ந்தது குறித்து மகிழ்ந்து வீடு வந்து சேர்ந்தார்.**

**ஏற்கனவே இது நடந்த மறுநாள் லாலுகுடியில் 'முகாம்' செய்திருந்த கலெக்டர் சுப்பையரை தம்மிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராக சில நாள் முன்பே உத்தரவிட்டிருந்தார்.
விசாரணை நாளன்று சுப்பையர் உரியகாலத்தில் செல்லாமல் நேரம் கழித்துச் சென்றார்.அவர் கலெக்டர் துரையின் முன் நிறுத்தப்பட்டார்.**

நீர்க்காவி ஏறிப் பழுப்பு நிறமாயிருந்த அவர் வஸ்திரம் இடையிடையே தையலையுடையதாயும், சில இடங்களில் முடியப்பட்டும் இருந்தது; அவருடைய உடம்பில் விபூதி விளங்கியது; மார்பில் ருத்திராட்ச மாலை இருந்தது. அவர் நேரம் கழித்துவந்ததனாற் கோபம் கொண்டவரைப் போல் இருந்தார் கலெக்டர். முகத்திற் கோபக்குறிப்புப் புலப்பட்டது;
"இவரா சுப்பையர்?" என்று கேட்டார் துரை.
அருகிலிருந்த தாசில்தார், "ஆமாம்!" என்றார்.

கலெக்டர், " இவ்வளவு ஏழையாக இருப்பவரையா நீர் பெரிய பணக்காரரென்றும், வரிப்பணம் அதிக மாகத் தரவேண்டுமென்றும் எழுதியிருக்கிறீர்?" என்று கேட்டார்
தாசில்தார்: ''இதெல்லாம் வேஷம். இப்படி வந்தால் துரையவர்கள் மனமிரங்கி வரியை வஜா செய்யக் கூடுமென்ற வஞ்சக எண்ணத்தோடு வந்திருக் கிறார்''.

கலெக்டர் அவரைக் கையமர்த்திவிட்டுச் சுப்பை யரைப் பார்த்து,
"நீரா ஆங்கரைச் சுப்பையர்?" என்று கேட்டார்.
சுப்பையர்: ''ஆம்.கலெக்டர்'''
' நீர் ஏன் சரியான காலத்தில் வரவில்லை? சர்க்கார் உத்தரவை அலக்ஷியம் செய்யலாமா?''
சுப்பையர்: துரையவர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது: காலையில் எழுந்து ஸ்நானம் செய்து பூஜையை முடித்துக்கொண்டு நான் வருகிறவர் களுக்கு ஆகாரம் செய்விப்பது வழக்கம். இன்று அந்த வழக்கப்படியே யாவரும் போஜனம் செய்தபிறகு வந்தேன்.

கலெக்டர்: உம்முடைய வரிப்பணம் அதிகமாகப் பாக்கி இருக்கிறதே, தெரியுமா??
சுப்பையர்: தெரியும், என்மேல் வஞ்சகம் இல்லை; நிலம் சரியானபடி விளையாமையால் வரிப் பணத்தை என்னால் இப்பொழுது செலுத்த முடியவில்லை.
கலெக்டர்: அன்னதானம் மட்டும் எப்படிச் செய்கிறீர்?
சுப்பையர்: கிடைக்கும் நெல்லையெல்லாம் வைத்துக் கொண்டு செய்கிறேன். முன்பு அன்னதானம் செய்த து போக மிஞ்சுவதில் வரியைச் செலுத்துவேன். இப்பொழுது அது முடியவில்லை. அன்னதானத் திற்கே போதாமையால் என் வீட்டு நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியிருக்கிறேன்; சிலவற்றை விற்கவும் செய்தேன்.
கலெக்டர்: ''இவ்வளவு கஷ்டப்பட்டு நீர் அந்த அன்ன தானத்தை ஏன் செய்யவேண்டும்?''
சுப்பையர்: அது பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது.
கலெக்டர்: ''அன்னம் போடுவது பகலிலா ? இரவிலா?சுப்பையர்: இரண்டு வேளையும் போடுவதுண்டு. பாதசாரிகளாக வருகிறவர்கள் பசியோடு எப்போது வந்தாலும் போடுவது வழக்கம்.
கலெக்டர்: எந்தச் சாதியாருக்குப் போடுவீர்?சுப்பையர்: பிராம்மணருக்கும் மற்றச் சாதியா ருக்கும் அவரவர்களுக்கு ஏற்ற முறையில் போடுவோ ம். பசித்து வந்தவர்கள் யாரானாலும் அன்னமி டுவேன்.
கலெக்டர்: தாழ்ந்த சாதியருக்கும் போடுவதுண்டா?சுப்பையர்: ஆகா, போடுவதுண்டு, எல்லோரும் சாப்பிட்ட பிறகு போடுவோம்.
கலெக்டர்: இதுவரையில் அப்படி எத்தனை தரம் அந்த ஏழைகளுக்கு போட்டிருக்கிறீர்?
சுப்பையர்: எனக்கு நினைவில்லை; பலமுறை போட்டதுண்டு.
கலெக்டர்: சமீபத்தில் எப்போது போட்டீர்?
சுப்பையர்: நேற்றுக் கூட ஒரு ஏழை பாதிராத்தி ரியில் பசிக்கிறதென்று வந்தான்; சாதம் கொடுத் தேன்.
கலெக்டர்: அப்படியா! என்ன என்ன கொடுத்தீர்? எல்லாரும் சாப்பிட்டு மிச்சமான சோற்றையா கொடுத்தீர்?
சுப்பையர்: அகாலத்தில் யாராவது வந்தால் உபயோகப்படுமென்று ரசம், குழம்பு முதலியவற் றிலும் ஓரளவு வைத்திருப்பது வழக்கம். ஆதலால் நேற்று வந்தவனுக்கு அன்னம், கறி, குழம்பு, ரஸம், மோர் எல்லாம் கொடுத்தேன்.
கலெக்டர்: ''இலை போட்டா சாப்பாடு போட்டீர்?சுப்பையர்: இல்லை; அது வழக்கமில்லை. ஒரு மரக்காலில் அன்னத்தை வைத்து, அதன்மேல் தனித்தனியே தொன்னையிலும் கொட்டாங் கச்சிகளிலும் குழம்பு முதலியவற்றை வைத்துக் கொடுத்தேன்.

கலெக்டரோடு வந்திருந்த உத்தியோகஸ்தர்கள் யாவரும் இவ்வளவு விரிவாகக் கலெக்டர் விசார ணை செய்வதை நோக்கி வியப்புற்றார்கள்.
தாசில்தார், "கலெக்டர் ஐயா, இவர் சொல்வது எல்லாம் பொய்" என்று சொல்லி முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார்.
கலெக்டர்: ''உமக்கு அந்ததாழ்ந்த சாதி ஏழையைத் தெரியுமா?
சுப்பையர்: ''இருட்டில் இன்னாரென்று தெரிய வில்லை.
கலெக்டர்: ''அவனிடம் கொடுத்த மரக்காலைக் கொண்டு வந்து காட்டுவீரா?
சுப்பையர்: ''அதை அவன் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.**
**கலெக்டர்: ''அப்படியானால் நீர் அவனுக்கு அன்னம் கொடுத்ததற்குச் சாக்ஷி வேறு என்ன இருக்கிறது?
சுப்பையர்: சாக்ஷி எதற்கு? தெய்வத்துக்குத் தெரியும். அப்படி நான் செய்ததை வேறு யாரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும்?
கலெக்டர்: ''அந்த மரக்காலை அவன் திருப்பிக் கொடாவிட்டால் என்ன செய்வீர்?
சுப்பையர்: ‘முடியுமானால் கொடு, இல்லாவிட்டால் நீயே வைத்துக்கொள்' என்று நானே சொல்லிக் கொடுத்தேன்; அவன் கொடுக்காவிட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.
கலெக்டர், "அப்படியா!" என்று சொல்லிக் கொண்டே மேஜை முழுவதையும் தரை வரையில் மறைத்து மூடப்பட்டிருந்த துணியை மெல்லத் தூக்கினார். என்ன ஆச்சரியம்! அதன் கீழே ஒரு மரக்கால் வைக்கப் பட்டிருந்தது.
நீர் கொடுத்த மரக்கால் இதுதானா பாரும்!" என்று சொல்லித் துரை அதை எடுத்து மேஜையின்மேல் வைத்தார்.
சுப்பையர் திடுக்கிட்டார்; தம் கண்களையே அவர் நம்பமுடியவில்லை. கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தார். தாம் முதல்நாள் பாதிராத் திரியில் ஒரு தாழ்ந்த சாதி ஏழையிடம் ம் கொடுத்த மரக்கால் அங்கே வந்ததற்குக் காரணம் என்ன?**
அங்கே இருந்த யாவரும் ஒரு நாடகத்தில் மிகச் சுவையான காட்சியொன்றில் ஈடுபட்டு மெய்ம் றந்தவர்போல் ஆனார்கள்.**
கலெக்டர்: "என்ன, பேசாமல் இருக்கிறீர்! ராத்திரி நீர் செய்த அன்னதானத்துக்குச் சாக்ஷியில்லை யென்று எண்ணவேண்டாம். பாதி ராத்திரியில் வந்த அந்த ஏழை நான்தான்! நீர் கொடுத்த மரக்கால் இதுதான்! இந்த இரண்டு சாக்ஷியும் போதாவிட்டால், என்னுடன் அங்கே வந்த குதிரைக்காரன் வேறு இருக்கிறான். நீர் சொன்னதெல்லாம் உண்மையே. உம்முடைய வீட்டு அன்னத்தையும் கறி முதலியவற்றையும் நான் ருசி பார்த்தேன். உம்முடைய ஜன்மமே ஜன்மம்" என்றார் கலெக்டர்;**
**கலெக்டர் கண்களில் நீர் ததும்பியது; உள்ளத்தில் உண்டான உருக்கம் அவர் தொண்டையை அடைத் தது. சிறிது நேரம் அவராற் பேசமுடியவில்லை. பிறகு,
"உமக்கு எந்தக் காலத்திலும் குறைவே வராது. தெய்வம் உம்மைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலை காக்கும். உமக்காகத் தான் மழை பெய்கிறது" என்றார்.
அந்த வார்த்தைகளின் தொனியில் முதல்நாள் இரவு அந்த ஏழை , 'தெய்வம் உங்களைக் குறையில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலைகாக்கும்' என்று சொன்ன வார்த்தைகளின் தொனி ஒலிப்பதை அப்போதுதான் சுப்பையர் உணர்ந்தார்; தமிழைப் புதிதாகக் கற்றுக்கொண்ட வேற்று நாட்டாராகிய துரையின் பேச்சானது, பசியினால் நாக்குழறிப் பேசுபவனது பேச்சைப் போல ராத்திரியில் தமக்குத் தோன்றிய தென்பதையும் அறிந்தார். அவருக்கு இன்னது சொல்வதென்று தோற்றவில்லை.
கலெக்டர்: "அப்படியே அந்த நாற்காலியில் உட்கா ரும்! நீர், வரிப்பணத்தை மோசம் செய்ய மாட்டீ ரென்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் உம்முடைய மரக்காலை மோசம் செய்யாமல் இதோ கொடுத்துவிட்டேன்; எடுத்துக்கொள்ளும். உம்முடைய தர்மம் குறைவின்றி நடைபெற இந்த வரிப்பணம் உதவுமானால், அதை விட இந்த ராஜாங்கத்துக்கு வேறு லாபம் இல்லை. உம்மால் எப்போது முடியுமோ, அப்போது வரியைக் கட்டலாம்! உம்மை ஒருவரும் நிர்ப்பந்தம் செய்யமாட்டார். நான் இந்த ஜில்லாவில் இருக்கும் வரையில் உமக்கு ஒருவிதமான துன்பமும் நேராது" என்றார் கலெக்டர்.
பிறகு தாசில்தாரை நோக்கி,"உம்முடைய வார்த்தை யை நான் நம்பியிருந்தால் பெரிய பாவம் செய்த வனாவேன். இனிமேல் இந்த மாதிரி ஒருவரைப் பற்றியும் தீர விசாரியாமல் நீர் எழுதக்கூடாது" என்று கண்டித்துக் கூறினார்.
மேஜைத் துணியாகிய திரையை தூக்கியதும், அம்மேஜைக்கடியில் அவ்வந்தண வள்ளலது அன்னதானத்தை அளந்த மரக்கால் இருந்ததும், அதனைத் துரை எடுத்து மேஜையின்மேல் வைத்து மனமுருகிப் பேசிக் கண்களில் நீர் ததும்ப வீற்றி ருந்ததுமாகிய அக்காட்சிகளை நம்முடைய அகக்கண்ணால் நோக்கும்போது நமக்கே மயிர் சிலிர்க்குமாயின், அங்கேயிருந்து கண்ணால் பார்த்தவர்களுடைய உள்ளமும் உடலும் எப்படியிருந்திருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?**
(உ.வே. சா சொல்கிறார்: கும்பகோணம் கலா சாலைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த வித்வான் ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள், 1833-வருஷம் திருவானைக்காவில், திருமஞ்சனக் காவேரிக் கரையில், ஆங்கரைச் சுப்பையருடைய பரம்பரை யினர் சிலரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தனர். நானும் உடனிருந்தேன். அப்பொழுது செட்டியார், அவர்களைப் பாராட்டிவிட்டு இவ்வரலாற்றைக் கூறினார். அவர்களும் சொன்னார்கள். மேற்படி சுப்பையருடைய பெண்வழியிற்றோன்றிய மணக்கால் மகாஸ்ரீ கந்தசாமி ஐயரென்பவர்களாலும் சமீபத்தில் சில விஷயங்கள் அறிந்து கொண் டேன்.)இவருடைய பரம்பரையினருக்கும், இவருறவினர் பரம்பரையினருள்ளும் அன்ன தானமென்ற பெயரையுடையவர்கள் சிலர் உண்டு.
வரகூரான் நாராயணன் அப்பா அன்னதானம் ஐயர் ஆகவே அவர் இந்த சிறந்த வம்சத்தினர். வரகூரான் நாராயணனுக்கு நாம் அனைவரும் நமஸ்காரம் சாஷ்டாங்கமாக இருந்த இடத்திலிருந்தே செய்து வணங்குவோம். அவர் குடும்பம் ஒரு காலத்தில் எதேஷ்டமாக அன்னதானம் செய்தது. இவர் அளவடில்லாமல் மஹா பெரியவா விஷய தானம் செய்து வருகிறார். ஒன்றை ஒன்று மிஞ்சும் தானங்கள் அல்லவா?**


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...