Thursday, November 11, 2021

sri LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  

ஸ்லோகங்கள்  73-74   நாமங்கள்:  321 - 333
   

काम्या, कामकलारूपा, कदम्ब कुसुमप्रिया ।
कल्याणी, जगतीकन्दा, करुणारस सागरा ॥ 73 ॥

Kaamya Kamakala roopa Kadambha kusuma priya
Kalyani Jagathi kandha Karuna rasa sagara

காம்யா காமகலாரூபா கதம்ப குஸுமப்ரியா |
கல்யாணீ ஜகதீகந்தா கருணாரஸ ஸாகரா || 73

कलावती, कलालापा, कान्ता, कादम्बरीप्रिया ।
वरदा, वामनयना, वारुणीमदविह्वला ॥ 74 ॥

Kalavathi Kalaalapa Kaantha Kadambari priya
Varadha Vama nayana Vaaruni madha vihwala

கலாவதீ கலாலாபா காந்தா காதம்பரீ ப்ரியா |
வரதா வாமநயநா வாருணீ மத விஹ்வலா || 74

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (321 -333)  அர்த்தம்

* 321 *  काम्या -   காம்யா  -  
அன்பினால்  ஆளவந்தவள் அம்பாள்.  காமம் என்றாலே  உடல்பசி என்ற தப்பான எண்ணம் நிலவுகிறது. காமம் என்றால் வடமொழியில்  விருப்பம் என்ற பொது அர்த்தம். பூரண அன்பு. காமாக்ஷி என்றாலே  தயை, கருணை பொழியும் கண்களை உடையவளின்  அன்பு  என்று தான் பொருள் கொள்ளவேண்டும் .   காமம் என்றால் நாம் விரும்புவது. மோக்ஷம் கேட்கிறோமே .  தருவது யார்? யாரால் முடியும்?.  அம்பாள் ஸ்ரீ லலிதை ஒருவளால்  தான் அதை அனுக்ரஹம் செய்ய முடியும்.

* 322 *  कामकलारूपा -காமகலாரூபா --  
அன்புக்கு ஒரு உருவம் தேடினால்  கிடைப்பது ஸ்ரீ லலிதாம்பிகை தான்.  நுண்ணிய  காமகலா ரூபத்தில்  ஸ்ரீ பரமேஸ்வரன் கண்ணுக்கு மட்டுமே புலப்படுபவள்.

* 323 * कदम्बकुसुमप्रिया - கதம்ப குஸுமப்ரியா   --
கட்டு கட்டாக பல நிறங்களில் கதம்ப மலர்கள் அடர்த்தியாக இருந்தால் மயங்காத பெண் இல்லை. அம்பாள் அபரிமிதமாக  கதம்ப மலர்ப் பிரியை.  கதம்ப மலர் வனத்திலே வசிப்பவள் என்று அவளை சொல்வதுண்டு. ''கதம்ப வன வாஸினி''  .  ஐந்து புனித மரங்களில்  கடம்ப மரம் ஒன்று. மனோரஞ்சித மலர் தரும் மரம்.

* 324 * कल्याणी -கல்யாணீ  --  
 நல்லதே செய்பவள், தருபவள்,  நடத்தி வைப்பவள்  அம்பாள்.  கல்யாணம் என்றால் சிறந்த, அற்புத, புண்ய, புனித நிகழ்வு.அன்பு  மணம் வீசுவது, ஆகவே  மரியாதையாக  கல்யாணத்துக்கு  திரு மணம்  என்று பெயர். அதைப் புரிந்துகொண்டு அதன்படி வாழவேண்டும்.


* 325 * जगतीकन्दा -  ஜகதீகந்தா --
 இந்த ப்ரபஞ்சத்திற்கே  ஆணி வேர் ஸ்ரீ லலிதாம்பிகை.   இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம் பிரம்மம். அது அவளே அல்லவா?

*326*  करुणारससागरा - கருணாரஸ ஸாகரா --  
சுருக்கமாக சொல்வோமே  கருணைக் கடல். அது ஸ்ரீ லலிதாம்பிகை தான்.  தயை, கருணை, காருண்யம், அன்பு,  பாசம், நேசம் அனைத்தும் நம் மீது வைப்பவள்  நம் தாய் ஸ்ரீ அம்பாள் ஒருவள். அம்மாள் தான்  அம்பாள்.

*327* कलावती -  கலாவதீ --  
அம்பாள் 64 கலைகளின் ஸ்வரூபமானவள்.  எனவே அவள் நாமம் கலாவதி .  சௌந்தர்ய லஹரி 31 வது ஸ்லோகத்தில் “catuḥ-ṣaṣṭyā tantraiḥ sakalm”  ''சது சஷ்டிய  தந்த்ரை  சகலம் ''  அதாவது  இந்த 64 கலைகளும் தான் பிரபஞ்சத்தில் எல்லாம்  என்கிறது.  64 கலைகள் என்ன என்று  முன்பே சொல்லி யிருக்கிள்றன். வேண்டுமானால் மீண்டும்  பார்த்துக் கொள்வோம்.

*328* कलालापा -  கலாலாபா  --      
சிலர்  ஏதோ ஒரு பாஷையில் பேசினாலும்  அது புரியாவிட்டாலும், அவர்கள்  பேசும் தன்மை, குரலின் இனிமை நம்மை  மேலும் மேலும் கேட்கவேண்டும் என்று தேட வைக்கும்.  எனக்கு இந்தி தெரியாத போதும்  லதா மங்கேஷ்கர், தலத் மஹ்மூத்,  ரபி  பாடல்கள், அவர்கள் பாடுவது   மனதை  லயிக்க வைக்கும்.   ம்ருது பாஷிணி என்று அம்பாளுக்கு பெயர்.  ''கலையை  ஆலாபனை''    (''கலா-ஆலாபா) '' செய்வது போன்ற குரல் உடையவள் அம்பாள் என்கிறது இந்த நாமம்.  

வித்யைகள்  பதினெட்டு வகைப்படும்:  சிக்ஷா, கல்பா, வ்யாகர்ணம், நிருக்தம், ஜ்யோதிஷம்,  சந்தஸ், ரிக்வேதம், யஜுர்வேதம்,  சாமவேதம், அதர்வ வேதம்,  பூர்வ, உத்தர மீமாம்சம், நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம், ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வம், நீதி  சாஸ்திரம். இவையெல்லாம் நமக்கு ஒன்று கூட தெரியா விட்டாலும் பேராவது தெரிந்து கொள்வோம்.

*329*  कान्ता - காந்தா--  
காந்த சக்தி கொண்டு ஈர்ப்பவள் அம்பாள்.  வைத்த கண் வாங்காமல் என்று சொல்வோமே  அப்படி பார்க்க  வைப்பவள்  ஸ்ரீ லலிதாம்பிகை.

*330* कादम्बरीप्रिया - காதம்பரீ  -  
காதம்பரம்   ஒரு வகை மது.  கடம்ப மலர்களை பிழிந்து வடிகட்டி பெறுகிற  மது. மழை  நீர் கடம்ப மரத்தின் பொந்துகளில் நிரம்பி மலர்கள்  பூக்கின்ற போது அவற்றின் தேனோடு சேர்ந்து  வடிக்கின்ற  மதுவிற்கு  காதம்பரி  என்று பெயர்.  மிகுந்த போதை சுகம்  தருவது.     இடக்கை  வழிபாடு என்று தாந்த்ரீக சாஸ்திரத்தில் உண்டு.  அதில் ஐந்து ரகம்.  மது வர்க்கம்,  மாம்சம்,  மத்ஸ்யம்  எனும் மீன்,  மைதுனம் (இனச் சேர்க்கை) , முத்திரை, (சைகை).   அம்பாள்  இவ்வாறு மனதிற்கு பரப்பிரம்ம  போதை அளிப்பவள் என்று இந்த நாமத்தை புரிந்து கொள்ளலாம்.

*331* वरदा - வரதா  -  
வரம் தருபவள். வலது கரம் தான் வழக்கமாக வரம் தரும் கை .  அம்பாள் வலது உள்ளங்கை காட்டி வரம் அருளவில்லை.  அவளுடைய புனித திருவடிகள் வரம் தருபவை.  அவள் காம தாயினி.  கேட்டதை, விரும்பியதை அருள்பவள்.   சௌந்தர்ய லஹரியில்   நாலாவது ஸ்லோகம்  சொல்வதை கேளுங்கள்:

त्वदन्यः पाणिभ्यामभयवरदो दैवतगणःत्वमेका नैवासि प्रकटितवराभीत्याभिनया।
भयात्त्रातुं दातुं फलमपि च वाञ्च्छासमधिकं शरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ॥

tvadanyaḥ pāṇibhyāmabhayavarado daivatagaṇaḥ tvamekā naivāsi prakaṭitavarābhītyābhinayā|
bhayāttrātuṁ dātuṁ phalamapi ca vāñcchāsamadhikaṁ śaraṇye lokānāṁ tava hi caraṇāveva nipuṇau||


'அம்மா, நீ தான் சகல புவனத்துக்கும் அடைக்கலம் தருபவள். மற்ற தெய்வங்கள் எல்லாமே  வரம் கேட்கும் பக்தர்களுக்கு  கரங்களைக் காட்டி  அருள்கிறார்கள்.  நீ ஒருவள் தான் அம்மா, வரத  ஹஸ்தமோ, அபய ஹஸ்தமோ காட்டாதவள்.  ஏனெனில் உன் தாமரைத் திருவடிகள் பயம் தீர்ப்பவை,  வேண்டியதை விட பன்மடங்கு வாரி வழங்குபவை.''

332* वामनयना - வாம நயநா  --
அழகிய , கவர்ச்சியான விழிகள் கொண்டவள்  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி.   வாம: வினைப்பயன்  - அயனம்  என்றால் பாதை, வழி,  இப்படி எடுத்துக்கொண்டால் என்ன அர்த்தம் வரும்?  ''ஒருவன் செய்த  வினைப்பயன் நன்றாக இருந்தால் அது தானாகவே  அது வழி தேடி அம்பாளை அடையச் செய்யும்'' ஆஹா! இந்த அர்த்தம் அம்ருதமாக அல்லவோ இருக்கிறது! சந்தோக்யோபனிஷத் இதையே சொல்கிறது:  ''சர்வாணி வாமானி நயதி''  --   எதெல்லாம் நல்லதோ, நன்மையோ, பரிசுத்தமோ அது தோன்றும் இடம் அம்பாள் '' என்று பொருள் படுகிறது.

*333* वारुणी मदविव्हला - வாருணீ  மத விஹ்வலா  -  
பேரீச்சையை காய்ச்சி பிழிந்து வடிகட்டிய மது தான் வாருணீ. போதை தருவது. சுற்றுமுற்றும் எல்லாவற்றையும் மறக்கச்  செய்வது. அம்பாள்  தனது மனதில் சிவனையே தியானித்து மற்றதெதுவும் நினைவில் இன்றி சிவாநுபவத்தில் இருப்பதை இப்படி வாருணீ என்று ஹயக்ரீவர் கூறுகிறார்.பெரிய கைதட்டல் கொடுப்போம்.

சக்தி பீடங்கள்  51 என்றும்  சிலர்  108 என்றும் சொல்லட்டும்.  நம்மைக் காட்டிலும்  ஆதி சங்கரருக்கு  கூடவே தெரியும். அவர்  அஷ்டாதச (பதினெட்டு) சக்தி பீடங்களை குறிப்பிடுவதால் அவற்றை ஒவ்வொன்றாக அறிவோம்.
1. திரிகோணமலை  -  சங்கரி தேவி
2. காஞ்சிபுரம் - காமாக்ஷி தேவி
3. வங்காளம் -  ப்ரத்யும்னம் -  ஸ்ருங்களா தேவி
4. மைசூர்.  - சாமுண்டீஸ்வரி தேவி
5. ஆந்திரா - ஆலம்பூர் -   ஜோகுலம்பா தேவி
6.  ஸ்ரீசைலம் - பிரம்மராம்பா தேவி
7. மஹாராஷ்ட்ரா - கோல்ஹாபூர் -  மஹாலக்ஷ்மி
8.  மகாராஷ்டிரா - நந்தேத் -  ஏக வீரிகா தேவி
9. மத்திய பிரதேசம்  - உஜ்ஜைன்  - மகாகாளி
10. ஆந்திர பிரதேசம் - பித்தாபுரம் - புரூஹுதிகா தேவி
11. ஒடிஸ்ஸா: ஜெய்ப்பூர் - பிரஜா தேவி
12. அந்த்ரப்ரதேசம் - த்ரக்ஷராமம்  - மாணிக்யம்பா தேவி
13.- அஸ்ஸாம் - கௌஹாத்தி -   -  காமரூப தேவி
14. உத்தரபிரதேசம் -  பிரயாகை - மாதவேஸ்வரி தேவி
15. ஹிமாச்சல பிரதேசம் - ஜ்வாலா - வைஷ்ணவி தேவி
16. பிஹார் - கயா - சர்வமங்களா தேவி
17 உ. ப்ரதேசம் - வாரணாசி -  விசாலாக்ஷி தேவி
18  சட்டிஸ்கர் - தந்தேவாடா - தந்தேஸ்வரி  தேவி
மற்றும்  காஷ்மீரத்தில்  சரஸ்வதி தேவி

இன்றைய  சக்தி ஆலயம்:   ஸ்ரீ சங்கரி தேவி ,  திரிகோணமலை ஸ்ரீ லங்கா

ராவணேஸ்வரன் கட்டியது இந்த  சங்கரி ஆலயம் என்பார்கள். அப்படி என்றால் எத்தனை யுகங்களுக்கு முன்னால் . இப்போதிருக்கும் உருவம்  ராவணன் ஒரிஜினலாக கட்டியது  அல்ல. எந்த கட்டிடமும் அவ்வளது காலம் தாங்காது.  கோவிலைச்  சுற்றி அசோகவனம். இதில் தான் சீதையை கொண்டு வந்து ராவணன்  சிறை வைத்தான். சங்கரி ராவணனுக்கு சீதையை திரும்ப கொண்டு விடு என்று சொல்லி அவன் கேட்கவில்லை. ராமாயண கணக்குப்படி லங்கா நூறு யோஜனை தூரம். இப்போது 1300 கி.மீ. திரிகோண மலையில் சங்கரி ஆலயத்தை போர்த்து கீசியர்கள் நாசம் செய்தார்கள். தேவி பாகவதம் லங்கையை மணி த்வீபம் என்கிறது.
சதி தக்ஷனின் யாகத்தில் அக்னியில் தன்னை அழித்துக்கொண்டபோது சிவன் கோபமுற்று தக்ஷனை அழித்து அவள் உடலை சுமந்து கோர தாண்டவம் ஆடுகிறார். அவள் உடலின் பாகங்கள் சிதைந்து பல இடங்களில் பூமியில் விழுந்து 51 சக்தி பீடங்களாயிற்று. அவள் உடலின் ஒரு பாகம் விழுந்த இடம் ஸ்ரீலங்காவில் திருகோணமலையில் இந்த ஆலயம்.

அம்பாள் சங்கரி. 2500வருஷம் முற்பட்ட கோவில் இது. சோழ பாண்டிய பல்லவர்கள் இந்த கோவிலை பராமரித்திருப்பதாக சில ஏடுகள் சொல்கின்றன. மகாசேனன் என்ற சிங்கள ராஜா இந்த ஆலயத்தை அழித்து புத்தருக்கு ஒரு டகோபா அமைத்தான் என்று சரித்திரம் சொல்கிறது. தமிழ் பிரஜைகளால் மீண்டும் உருவான அற்புத சக்தி பீடம் இது. நவராத்ரி விசேஷம் இங்கே. எண்ணற்ற பக்தர்கள் வந்து வணங்கி ஆசி பெறுவார்கள். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...