Friday, November 5, 2021

SRI LALITHA SAHASRANAMAM


 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -     நங்கநல்லூர் J.K. SIVAN

ஸ்லோகங்கள்: 59-60   நாமங்கள்:  238-248. 
 
मनुविद्या चन्द्रविद्या चन्द्रमण्डल-मध्यगा ।
चारुरूपा चारुहासा चारुचन्द्र-कलाधरा ॥ ५९॥

Manu Vidya Chandra Vidya Chandra mandala Madhyaga
Charu Roopa Charu Hasa  Charu Chandra Kaladhara

மநுவித்யா சந்த்ரவித்யா சந்த்ரமண்டல மத்யகா |
சாருரூபா சாருஹாஸா சாருசந்த்ர கலாதரா || 59

चराचर-जगन्नाथा चक्रराज-निकेतना ।
पार्वती पद्मनयना पद्मराग-समप्रभा ॥ ६०॥

charaachara jagannadhaa chakraraja nikethana
parvathi padhmanayana  padmaraaga samapraba

சராசர ஜகந்நாதா  சக்ரராஜ நிகேதநா |
பார்வதீ பத்மநயநா பத்மராக ஸமப்ரபா || 60

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (238 - 248)  அர்த்தம்

* 238 *  
मनुविद्या -மநுவித்யா  - 
மனுவின் வாக்குக்கு  மஹத்வம் அதிகம். அவர்  என்ன சொல்கிறார்  ஸ்ரீ லலிதாம்பிகையை பற்றி  அம்பாள் ஸ்ரீ வித்யா ஸ்வரூபம் என்கிறார்.  

 239 *
चन्द्रविद्या -  சந்த்ர வித்யா -  
ஸ்ரீ வித்ய சந்திர மண்டலத்தில் மத்யமமாக இருப்பதால் சந்திரனும்  மனுவைத் தொடர்ந்து   அம்பாளை வழிபடுகிறான்.  முக்கியமாக  பதினைந்து  அம்பாள் உபாசகர்கள். அவர்கள் ஒவ்வொருவருமே அவரவர் பஞ்சதசி மந்த்ரங்களை உச்சாடனம் பண்ணுபவர்கள். அதற்காக பீஜாக்ஷரத்தில் மாறுபாடு இல்லை.  அந்த பதினைந்து  பேரும் யார் யார் ?

1. விஷ்ணு,  2 சிவன், 3. ப்ரம்மா 4. மனு  5 சந்திரன் 6  குபேரன் 7. லோபாமுத்திரை 8. அகஸ்தியர் 9 நந்திகேஸ்வரன் 10. சூர்யன் 11 ஸ்கந்தன் 12 மன்மதன் 13 சகரன் 14 துர்வாசர்  15 யமன்

* 240 *
चन्द्रमण्डलमध्यगा - சந்த்ரமண்டல மத்யகா -  
இந்த அகண்ட பிரபஞ்சத்தில்  சந்திரனைச் சுற்றியுள்ள  சந்திர மண்டலத்தில்  நடுநாயகமாக வீற்றிருப்பவள் என்கிறார்.  சந்திரமண்டலம் என்பது   நமது உடலில் சஹஸ்ராரத்தை குறிப்பதாகவும், அதன் நடுவே எனும்போது சக்ரமத்தியில் பிந்து வாக இருப்பதாக ஒரு கருத்து. சந்திரமண்டலம் என்பதே  ஸ்ரீ  சக்ரத்தைத்தான். சந்திரனுக்கு 16 கலைகள். அதனால் தான் பௌர்ணமி அன்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்வது.  சிவன் அக்னியின் சிரசிலும்  அம்பாள் சந்திரனின் சிரசிலும் இருப்பதாக  ஐதீகம்.

* 241 *
चारुरूपा - சாருரூபா -
 அம்பாள் அதிரூப சௌந்தர்யம் கொண்டவள்.  விவரிக்கமுடியாதவள்.

* 242 *
 चारुहासा -  சாருஹாஸா -  
அவள் அங்க லாவண்யத்தை போலவே அவளது புன்னகையும் அழகுவாய்ந்தது.  சந்திரனின் ஒளியோ என திகைக்க வைக்கும்  புன்னகை. அது அவளது பக்தர்கள் அனுபவிக்கும்  திவ்ய ஆனந்தத்தையும்  குறிக்கும்.

* 243 * 
चारुचन्द्रकलाधरा - சாருசந்த்ர கலாதரா -  
அம்பாள் வேறு  அரன் வேறா. இரண்டும் ஒன்றே. ஒன்றே இரண்டும். எனவே அவளும்  பிறை சூடி.  சாரு  என்ற சந்திர ஒளி.  

* 244 *  चराचरजगन्नाथा -சராசர ஜகந்நாதா  --   
அசையும் அசையா  சகல ஜீவராசிகளுக்கும் எஜமானி. தாவர ஜங்கம வஸ்துக்கள் அனைத்தும் அவள் கட்டுப்பாட்டில் அல்லவா?

* 245 * 
चक्रराजनिकेतना - சக்ரராஜ நிகேதநா -   
ஸ்ரீ சக்ர மத்தியில் காண்பவள் ஸ்ரீ லலிதை.  ஸ்ரீ சக்ர ராஜ  ஸிம்ஹாஸனேஸ்வரி .  சஹஸ்ராரம் தான் ஸ்ரீ சக்ரம். குண்டலினி சஹஸ்ராரத்தை அடையும் போது  மனம் வசப்படும். சகலமும்  கட்டுப்பாட்டில் வரும்.

* 246 *
पार्वती -  பார்வதீ --  
ஹிமகிரி தனயை.  ஹேமலதை .  ஹிமவான் புத்ரி.  சிவபத்னி.  எவ்வளவு அழகான பெயர் அம்பாளுக்கு!

* 247 *
पद्मनयना - பத்மநயநா   - அங்கயற்கண்ணி.  அன்றலர்ந்த தாமரை விழியாள் .

* 248 
पद्मरागसमप्रभा - *பத்மராக ஸமப்ரபா  - 
நவரத்தினங்களில்  பத்மராகம் என்ற ஒரு மாணிக்கக்  கல்  செக்க செவேல் என்று இருக்கும். செந்தாமரைக்கு சாப்பிடலாமா?  பத்மம் என்றாலே  தாமரை தானே.  பிரபை என்றால் ஒளி வட்டம்.  அம்பாளின் குண்டலினி சக்தி  அனலென உஷ்ணத்தோடு சஹஸ்ராரத்தில் பிரவேசிப்பதை குறிக்கிறது. செஞ்சுடர் மேனி சிவனை சேர்கிறாள் அம்பாள்.  தான் அவனாகிறாள்.   ப்ரம்மம்.   ப்ரம்மத்திற்கு ஐந்து கார்யங்கள் உண்டு. சிருஷ்டி,  ஸ்திதி,  லயம், திரோதானம்,  அனுக்கிரஹம்.

சக்தி ஆலயம்.    மாங்காடு காமாக்ஷி 

சுக்ரன் கோவில் கொண்டு பக்தர்களுக்கு, தன்னை நம்பியவர்களுக்கு  வாரி வழங்கும் இடம் ஒன்று  தொண்டைமண்டலம் எனும் சென்னை பகுதியை சேர்ந்த  நவகிரஹ ஆலயங்களில் ஒன்றான  சுக்ரன் (வெள்ளி)  அருள்பாலிக்கும் ஆலயம். அது மாங்காடு கிராமத்தில் இருக்கிறது.   ஒரு  சிவராத்திரி அன்று  21.2.2020  காலை இந்த கோவிலுக்கு நண்பர் ஸ்ரீ சந்திரசேகரன் குடும்பத்தோடு செல்லும் பாக்யம் கிடைத்தது.  எனக்கு சுக்கிரதசை.. வீடு தேடி நங்கநல்லூர் வந்து என்னை நவகிரஹ கோவில்களை தரிசனம் செய்ய கூட்டிச்  சென்றார்கள்.

சென்னையிலேயே நவகிரஹ ஆலயங்கள் இருப்பதை அநேகர் அறியமாட்டார்கள். அவற்றை பற்றி முன்பே விவரமாக இன்னொரு கட்டுரையில் எழுதி இருக்கிறேன். அதை மீண்டும் வேண்டுமென்றாலும் எழுதுகிறேன். இன்று நாம் அறியப்போவது அந்த நவகிரஹ ஆலயங்களுள் ஒன்றான சுக்ரன் என்றும் வெள்ளி என்றும் பெயர் கொண்ட நவகிரஹ ஆலயம். எல்லா நவக்ரஹாலயங்களும் புராதன சிவாலயங்கள் தான். தீவிர வைணவர்கள் நவகிரஹங்களை சுற்றுவதில்லை, ஒரு சிலவற்றை தவிர நவகிரஹங்களை வைணவ ஆலயங்களில் தேடவேண்டாம்.

சென்னையை அடுத்து மாங்காடு பிரபல காமாக்ஷி அம்மன் ஆலயத்தை தன்னுள் கொண்டு பிரசித்தி வாய்ந்தது. அதற்கு கூப்பிடு தூரத்தில் இருப்பது தான் வெள்ளீஸ்வரர் ஆலயம். ரெண்டு ஏக்கர் பரப்பில் அமைந்த கோவில். மாங்காட்டில் உள்ள மூன்றாவது பிரதான ஆலயம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில்.

மாங்காடு,  போரூரிலிருந்து பூவிருந்தவல்லி போகும் வழியில் குமணன் சாவடியில் கிழக்கே திரும்ப வேண்டும். அங்கிருந்து      3-4 கி.மீ. தூரம் தான். வண்டிகளில் சுலபத்தில் சென்றுவிடலாம். நடக்கும் பழக்கம் தான் மறைந்துவிட்டதே. சோழ  மண்டலத்தில் கஞ்சனூரில் சுக்ரன் கோவில் எப்படி ப்ரசித்தமோ அப்படி தொண்டை மண்டலத்தில் சென்னையில் மாங்காடு வெள்ளீசர் (சுக்ரனுக்கு வெள்ளி என்று பெயர் தெரியுமல் லவா?). சிவனுக்கு இங்கே இன்னொரு பெயர் பார்கவேஸ்வரர். கிழக்கு பார்த்த பெரிய லிங்கம்.

மாங்காடு பஸ் நிலையத்திலிருந்து 1 1/2 கி.மீ. குன்றத்தூரிலிருந்து வந்தாலும் 3 - 4 கி.மீ. தான்.   காமாக்ஷி தேவி சிவனை நோக்கி தவமிருந்த கோவில் தான் மாங்காடு காமாக்ஷி ஆலயம். 

அவள் ஒருநாள் சிவ தரிசனத்துக்கு இங்கு வந்தபோது சுக்ரன்(வெள்ளி) சிவனை வழிபடுவதை கண்டு இடையூறாக இருக்க கூடாது என்று திரும்பி விடுகிறாள். ஆலய வாயிலில் இரு பக்கங்களிலும் சுப்பிரமணியர் விநாயகர். விநாயகர் கையில் இங்கே இருப்பது மாம்பழம். அதனாலும் இந்த ஊர் பெயர் மாங்காடு. நிறைய மாந்தோப்புகள் இருந்த இடம்.

மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அகர்வால், சங்கர நேத்ராலயம் செல்லு முன் வெள்ளீஸ்வரரை தரிசித்தால் மேலே சொன்ன மற்ற  இடங்கள்  செல்ல  வேண்டி இருக்காது என்று பக்தர்கள் அனுபவத்தால் சொல்கிறார்கள்.

வாமனாவதாரம் ஞாபகம் இருக்கிறதா? அசுர சக்ரவர்த்தி மகாபலி தானதர்மங்கள் அநேகருக்கு கொடுத்து முடியும் தருணம் ஒரு குள்ள பிராமணன் வந்து தானம் கேட்கிறான். '' இவனுக்கு தானம் கொடுக்காதே இவன் சாதாரண குள்ள பிராமணன் இல்லை,  மாறுவேடத்தில் வந்திருக்கும் மஹாவிஷ்ணு., என்று அசுர குரு சுக்ராச்சாரியார் சொல்லியும் தடுத்தும் கேளாமல்    ''ஓ இவ்வளவு தானே, நீ கேட்ட மூன்றடி மண் தானத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறி  கிண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முனைகிறான் மஹாபலி. அப்போதும் அதை தடுக்க சுக்ராச்சாரியார் ஒரு வண்டு உருவில் மாறி  கிண்டியின் ஜலதாரை வழியை அடைத்துக்  கொள்கிறார். விஷ்ணுவுக்கு இந்த வித்தை தெரியாதா? வாமனன் தனது கையில் வைத்திருந்த தர்ப்பைப் புல்லினால் துளைப்   பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் கண்ணை தர்ப்பை தாக்கி அவர் ஒரு கண் பார்வை இழக்கிறார்.

பின்னர் மகாவிஷ்ணுவிடம் சுக்ராச்சாரியார் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்ப அருள வேண்டுகிறார். 

''சுக்ரா, பூலோகத்தில் தமிழ் பேசும் நல்லுலகத்தில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள். அவளது தவத்தை பூர்த்தி செய்ய பரமேஸ்வரன் பூவுலகம் வருவார். நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும்” என்று கூறினார். அவ்வாறே தவம் செய் து சிவனருளால் பார்வை பெறுகிறார். வெள்ளிக்கு பார்வை அருளிய ஈஸ்வரன் அதனால் வெள்ளீஸ்வரன் ஆனார். பக்தர்கள் தேங்காய் கொட்டாங்கச்சியில் தீபம் ஏற்றுகிறார்கள்.  இடது கண்ணில்  ஊனம்  அல்லது வியாதி நீங்க  இந்த  திருப்பதிகம் 16 முறை சொல்லவேண்டும். கண் சரியாகிவிடும் என்று கல்வெட்டு சொல்கிறது: தேவாரத்தில்  திருக்கச்சியேகம்பம்  என்று போட்டிருக்கிறது 

''உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை,
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! ''

இன்னொரு விவரம். விளையாட்டாக ஒரு நாள் பார்வதி சிவனின் கண்களை மூடிவிடுகிறாள். சூரிய சந்திரர்கள் சிவனின் இரு கண்கள். எனவே அவர்கள் ஒளியை அவள் மூடிவிட்டதால் பிரபஞ்சம் இருள் அடைய கோபத்தில் சிவன் அம்பாளை பூமிக்கு செல்ல சபிக்க மாங்காட்டில் வந்து அக்னியில் தவமிருந்து சிவனை மீண்டும் அடைகிறாள்.

இந்த ஆலயத்தில் இரு விநாயகர்கள், ஒருவர் ஒரு கையில் மாங்கனி, இன்னொருகையில் நெல் கதிர்கள். கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, இன்னொருகையில் விசிறி. வீரபத்திரருக்கு தனி சந்நிதி. வடமேற்கில் காணும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சிலை ஒரே கல்லினால் ஆனது. 
வெள்ளீசனுக்கு எதிரே அழகாக ஒரு நந்தி. அவர் அழகை வர்ணிக்க வார்த்தைகள் தேடிக் கொண்டி ருக்கிறேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...