Tuesday, November 16, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  --

ஸ்லோகங்கள்:  81-82    நாமங்கள்  366 - 378
  
परा, प्रत्यक्चिती रूपा, पश्यन्ती, परदेवता ।
मध्यमा, वैखरीरूपा,भक्तमानस हंसिका ॥ 81 ॥

Paraa Prathyak chidi roopa Pasyanthi Para devatha
Madhyama Vaikhari roopa Bhaktha manasa hamsikha

பரா ப்ரத்யக்சிதீ ரூபா பச்யந்தீ பரதேவதா |
மத்யமா வைகரீரூபா பக்த மாநஸ ஹம்ஸிகா || 81

कामेश्वर प्राणनाडी, कृतज्ञा, कामपूजिता ।
शृङ्गार रससम्पूर्णा,  जया, जालन्धरस्थिता ॥ 82 ॥

Kameshwara prana nadi Kruthagna Kama poojitha
Srungara rasa sampoorna Jayaa Jalandhara sthitha

காமேச்வர ப்ராணநாடீ க்ருதஜ்ஞா காமபூஜிதா |
ச்ருங்கார ரஸ ஸம்பூர்ணா ஜயா ஜாலந்தர ஸ்திதா || 82


  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (366 -378)  அர்த்தம்
 
* 366*   परा -  
பரா - 
எல்லாவற்றுக்கும்  உள்ளே  வெளியே  என்று  ஒரு  எல்லை  உண்டு.  அம்பாள் இரண்டிலும் வியாபிப்பவள். இங்கே  அவளை  வெளியே காணும் யாவிலும் தெரிபவள் என்று இந்த நாமம் உணர்த்துகிறது.   அம்பாளை  பிரகாசம்,விமர்ஸம்  என்றும்  சொல்வார்கள்.  பிரகாசம் என்பது ஒளி  சிவன்  விமர்சம் என்றால் சக்தி.   அவள்  ஒளியும் ஒலியும் ஆனவள்.  பரா என்பது மூன்று நிலை கொண்டது:    சிவம், சக்தி,  நரன் (மனிதன்).

* 367 *  
 प्रत्यक्चितीरूपा -ப்ரத்யக்சிதீ ரூபா --  
அம்பாள்  நம்மை  உள்  நோக்கி  ஞானம் பெற செய்பவள்  என்று உணர்த்தும் அற்புத நாமம் இது. அவளே  நமது  மனோசக்தி,  மனசாக்ஷி என்றும் சொல்லலாம். கதோபநிஷத் (II.i.1)  எப்படி விளக்குகிறது பாருங்கள்: “ஸ்வயம்புவான பரமேஸ்வரன் ஐம்புலன்களை அளித்தான்.  அவை வெளியே நாட்டம் கொண்டவையாகி விட்டது. அவற்றை உள்ளே திருப்புவது எளிதல்ல.  மாயை வசப்பட்டவை.  ஞானி மட்டுமே  ஐம்புலன்களை வெளியிலிருந்து மீட்டு அவற்றின் கவனத்தை உள்ளே ஆத்மலயம் அடைய செய்பவன் ''

* 368 *  
 पश्यन्ती -பஸ்யந்தீ  --  
எதிலும் எங்கும் அம்பாளையே, ஸ்ரீ லலிதாவையே  காண்பது, ஒலியின்   சப்த  பரிணாம வளர்ச்சியில் ரெண்டாவது நிலை பஸ்யந்தி.  முதல் நிலை  பரா (சிவனும் சக்தியும் கலந்தது)

* 369 *  परदेवता -பரதேவதா  -  
எல்லா தெய்வங்களின் சக்தியும் அம்பாளிடமிருந்தே பெறுவது என்று உணர்த்தும் நாமம் இது.   பராஆஆஆஆ   சக்தி அல்லவா அவள்?

* 370 * 
 मध्यमा - மத்யமா  -- 
எல்லாவற்றிலும் எதிலும் நடுநாயகம்  ஸ்ரீ லலிதாம்பிகை.   மோனத்திற்கும்   பேச்சின் முடிவுக்கும் இடைப்பட்ட நிலை. அதனால் தான்  பேச்சை குறை என்று மஹான்கள் ஞானிகள் அறிவுறுத்து கிறார்கள்.  

* 371 *
वैखरीरूपा -வைகரீரூபா  --   
வார்த்தைகளின் அலங்காரம்  அம்பாள் என்கிறது இந்த நாமம். வாக் தேவி. ஒலியின் கடை நிலை. பிராணன் இருக்கும் வரை தான் எல்லா பேச்சும்.

* 372 * 
 भक्तमानसहंसिका - பக்த மாநஸ ஹம்ஸிகா --  
மனதை  ஒரு பிரம்மாண்ட  ஏரியாக  உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.  உற்றுப்பாருங்கள்.  என்ன தெரிகிறது?  அதில் ஒரு அழகிய  அன்னம் மிதப்பது தெரிகிறதா?  அது தான் பக்தர்கள் மனதில் அம்பாள் தோன்றுவது ஆகும். கைலாச மலையில்  மானஸரோவர்  எனும் புனித ஏரி எண்ணற்ற ஹம்ஸங்கள் கொண்டது.  மனதை அவ்வளவு தூய்மையாக வைத்துக்கொண்டால் அம்பாள் அம்சமாக, ஹம்சமாக, அதில் குடியேறுவாள். ஹம்சத்தை,  அன்னத்தை  ஏன் நினைவுகூர்கிறோம்?  அது ஒன்று தான்  நீரும் பாலும் கலந்தாலும்  பாலை மட்டும் பருகக்கூடியது.

* 373 * 
कामेश्वरप्राणनाडी - காமேச்வர ப்ராணநாடி -  
அம்பாள் யார்?  காமேஸ்வரனின்  பிராண நாடி  என்கிறார் ஹயக்ரீவர் இந்த நாமம் மூலம். இதை விட ஒருவர் எப்படி அவளை விளக்க முடியும்?  வேதத்திலிருந்து கிடைத்த நாமம்.  சக்தி இல்லையேல் சிவன் இல்லை.

* 374 * 
 कृतज्ञा -  க்ருதஜ்ஞா -  
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் என்னென்ன நடைபெறுகிறதோ அந்த செயல்களின் பின்னணி, செயல் புரிபவை அனைத்தும் அம்பாளின் கருணையால் கண்காணிக்கப் படுவனவையே. அவளன்றி ஓர் அணுவும் அசையாது.   நமது செயல்கள் அனைத்துக்கும்  ஒன்பது சாட்சிகள் இருப்பதை உணரவேண்டும். அவர்கள் யார் தெரியுமா?    சூரியன்,  சந்திரன், யமன், காலம்,பஞ்ச பூதங்கள்.  இவைகளை மீறி என்ன செய்யமுடியும் நம்மால்?

* 375 * 
 कामपूजिता -காமபூஜிதா - 
மன்மதனால்  பூஜிக்கப்படுபவள் அம்பாள் என்கிறது இந்த நாமம். அவனுக்கு உயிரை மீட்டுக் கொடுத்ததே ஸ்ரீ லலிதாம்பாள் அல்லவா?   நாம் முடிந்த போதெல்லாம் 51 சக்தி பீடங்களை பற்றியும் அறிகிறோம் அல்லவா?  இது தவிர  நான்கு பீடங்கள் உண்டு,  காமகிரி பீடம், பூர்ணகிரி பீடம்,  ஜலந்தர பீடம் , ஒட்யாண பீடம் அவற்றைப்பற்றியும் இனி அறிவோம்.

* 376 * 
 श‍ृङ्गाररससम्पूर्णा - ச்ருங்கார ரஸ ஸம்பூர்ணா --  
 காந்தம்போல்  கவரும் அழகு வாய்ந்தவள் அம்பாள். காமகிரிபீடம் என்பது நமது தேகத்தில்  மூலாதார சக்ரம்.  பூர்ணகிரி சக்ரம் தான் தொப்புள்கொடி சக்ரம்

* 377 *
जया -   ஜயா  -  வெற்றித் திருமகள் அம்பாள்.  எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி தருபவளும்  கூட.  புலன்களை வெல்ல அருள்பவள்.  மாயையை வெல்ல சக்தியளிப்பவள்.

* 378 * 
 जालन्धरस्थिता - ஜலந்தர ஸ்திதா -    ஜலந்தர பீடம் என்பதை பற்றி மேலே குறிப்பிட்டேன் அல்லவா? அது நமது ஹ்ரிதய சக்ரம்.  

சக்தி பீடம்:    த்ரிபுர மாலினி சக்தி பீடம் : ஜலந்தர்  

பஞ்ச நதி பாயும் பாயும்  ஜலந்தரில் ஒரு சக்தி பீடம். பெயர்  மா  த்ரிபுரமாலினி தேவி சக்தி பீடம். வடக்கே பக்தர்கள் கூடும்  க்ஷேத்ரம்.   சதியின் உடலை சுமந்து சிவன் தாண்டவம் ஆடியபோது அவள் உடல் கூறாகி  51 இடங்களில் பூமியில் சிதறி அவை சக்தி பீடங்களாயின. சாதியின் இடது முலை (ஸ்தனம் )விழுந்த இடம் இந்த ஜலந்தர் என்று ஐதீகம்.  கோவிலின் வாசலில் ஹிந்தியிலோ பஞ்சாபி யிலோ ஸ்தல சரித்திரம் எழுதி வைத்திருக்கிகிறார்கள்.  திரிபுர மாலினிக்கு இருபுறமும்  ஹனுமான்  விக்னேஸ்வரர்கள்.   அரசமரம் ஸ்தலவிருக்ஷம் போல் நிற்கிறது.  வசிஷ்டர், வியாசர், மனு, ஜமதக்னி பரசுராமர் போன்ற மகா புருஷர்கள்  ரிஷிகள் அம்பாளை வழிபட்ட க்ஷேத்ரம். பெரிய குளம் ஒன்று அருகே இருக்கிறது. தேவி குளம் என்று பெயர்.

அமர்நாத் பனி லிங்க குகை போல் அம்பாளுக்கு ஒரு குகை கோயில்  வேறு கட்டி இருக்கிறார்கள். இங்கு மரணமடைந்தவருக்கு மறு பிறவியில்லை  என்று காற்றில் ஒரு வார்த்தை காதில் விழுகிறது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...