Wednesday, November 3, 2021

THEEPAVALI

 தீபாவளி கதையும் வாழ்த்தும்   -  நங்கநல்லூர்  J K  SIVAN 


வெகு காலமாக  பல நூற்றாண்டுகளாக,  தீபாவளி என்ற  ஒரு பண்டிகை தான் ஹிந்து குடும்பங்களை மகிழ்விப்பது  குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்று அனைவருமே  ஆவலாக எதிர்பார்த்து ஏற்பாடுகள் பண்ணுவது இந்த ஒரு பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு தான். தீபாவளி நமக்கு  ஒரு பிரதான பண்டிகை  நாடு முழுதும்  ஆவலாக எதிர்பார்ப்பது.  தீப வரிசை,  தீப ஆராதனை, தீப வழிபாடு என்று எப்படியெல்லாம் பெயர் வைத்தாலும்   உலக முழுதும்  ஹிந்துக்களுக்கு மன நிறைவைத் தரும் ஒரு பண்டிகை. தீபாவளி  ஐப்பசி கிருஷ்ண பக்ஷம்
 சதுர்தசி வருஷாவருஷம் வருவது.  இருளிலிருந்து நம்மை ஒளிக்கு கூட்டிச் செல்வது.  தீமையை அழித்து நன்மை தருவது.  ஆங்கிலமாசம்  அக்டோபர் நவம்பரில் கட்டாயம் வரும்.  தீபாவளி கிருஷ்ணனோடு சம்பந்தப்பட்டது. ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன் கேளுங்கள்.
தீபாவளி சமயம் மழை வந்தா எப்படி தாத்தா பட்டாசு வெடிக்க முடியும் ?'' என்றான் ஒரு பேரன்.
''மழை வரணும்டா . ''ஐப்பசி அடை மழை. அடுத்து கார்த்திகை கன மழை'' என்று அதுக்காக தான் சொல்லியிருக்கு.''
' போச்சுடா. எப்படி பட்டாசு வெடிக்கும் மழையிலே?''
''தீபாவளின்னா பட்டாசு வெடிக்கறது மட்டும் இல்லை. அது பேரிலே இருக்கிறமாதிரி தீப வழிபாடு தான் முக்கியம்.
''தீபாவளி பத்தி ஒரு கதை சொல்லேன்?''
''சரி நான் ஏற்கனவே உங்கப்பாவுக்கு சொன்ன கதை தான் இருந்தாலும் இன்னொரு தடவை கேட்டாலும்  உனக்கும்  அது சுகமாகத்தான் இருக்கும்: கேளு:
யார் பத்தி இது ?
''எது நான் சொன்னாலும்  எழுதினாலும் அதிலே  கிருஷ்ணன்  இருப்பானே. கிருஷ்ணன் கதை சொல்றேன் கேளு.
“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே!ன்னு  யார் சொல்லியிருந்தாலும் அதை முழுக்க தப்பு என்றும்  சண்டை  போடாதே. சரின்னு  தலையும் ஆட்டவேண்டாம். அதுக்கு இப்போது கொஞ்சம் கூட நேரமே இல்லை அதோ பார்  எதிரே  என்ன நடக்கிறது?
வெகு வேகமாக கிருஷ்ணன் வியர்க்க  விறுவிறுக்க தேரை ஓட்டிக்  கொண்டிருக்கிறான். அவன் வாழ்வில் தேரில்  சவாரி செய்ததை விட  ஒட்டியதே அதிகம் போல் இருக்கிறது. கிருஷ்ணன் தேர் ஓட்டியே  பாதி கிருஷ்ண அவதார நேரம் தீர்ந்திடுத்தோ?

ஏன் என்ன அவசரம் இப்போ? 
''ஆஹா! இடியோசை மாதிரி பிளிறலுடன் நரகாசுரனே எதிரே வருகிறான். பயங்கர கோபமும் ஆத்திரமும் அவனுக்கு!!. 
'ஆனானப்பட்ட முரன் என்கிற மஹா பலம் வாய்ந்த  என்  வலதுகை மாதிரியான அசுரனையும் கூட இந்த தந்திரக்கார கிருஷ்ணன்  கொன்று விட்டான். மலைபோல அல்லவா அவனை நம்பியிருந் தோம்? கஷ்டங்கள் தனித்தே வருவதில்லையா?” என் சகோதரி நக்ரதுண்டி தோல்வியே தெரியா தவள். அவளும் வெறுங்கையுடன் திரும்பியதல்லாமல் அவமானப்பட்டுமல்லவா அழுதுகொண்டு வந்தாள்!!!. என்ன ஆனாலும் சரி. வட்டியும் முதலுமாக இன்று கணக்கு தீர்க்கிறேன். இன்றோடு இந்த கிருஷ்ணன் பயல் ஒழிந்தான்!! --- இந்த எண்ணங்களுடன் நரகன் யுத்தத்தில் இறங்கினான்.

நரகாசுரன் படைகளும் கிருஷ்ணனின் த்வாரகை வீரர்களும் அங்கங்கு மோதிக்கொண்டிருக்க நரகன் கிருஷ்ணனையே குறி வைத்தான். அம்புகள் மழையென பொழிந்தன. யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பு, வீரர்களின் ஆக்ரோஷ சப்தம், இடியென முழங்கும் கதை களின் மோதல், வாட்கள் உலோக சப்தம் கூடிய உராய்வு, ரத்தமும் வலியும் பெருகி  வீரர்களின் மரண கூச்சல், மேலே பருந்துகளின் கொண்டாட்டம்,

இவற்றுக்கிடையே கிருஷ்ணனின் தேர் வளைந்து நெளிந்து சென்று நரகனின் தாக்குதலை, அம்புகளை எல்லாம் சாமர்த்தியமாக தவிர்த்தது. கிருஷ்ணனின் சரங்களும் குவிந்து சென்று நரகனை வாட்டின. நேரம் சென்றதே தவிர வெற்றி தோல்வி எதுவும் சொல்ல முடியாமல் யுத்தம் நீயா நானா என்று நீண்டது. 
முதலில் என்ன நடந்தது தெரியுமா? சத்யபாமா பாமா தேர் ஓட்டுவதில் அனுபவசாலி என நிரூபித்தாள். தேர் ஓட்டினாலும் அவ்வப்போது கிருஷ்ணனுக்கு ஆயுதம் தேர்ந்தெடுத்து உதவினாள். கிருஷ்ணனின் உடலிலும் வியர்வையும் ரத்தமும் ஆறாக பெருகி தேரில் வழிந்தது. நரகனோ ரத்தத்திலேயே குளித்துக்  கொண்டிருந்தான். மாலையும் வந்துவிட்டது. இரவு சற்று நேரத்தில் கவிந்து வரும். இரவில் அசுரர்களுக்கு பலம் அதிகரிக்கும். சத்யபாமா தேர் ஒட்டி தேர் தட்டில் யுத்தம் புரிந்து கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு திடீரென்று மின்னல் வெட்டு போல் அந்த முடிவு எடுக்கவேண்டும் என தோன்றியது. 

ஒரு இளம் சிரிப்பு கிருஷ்ணன்  முகத்தில் மின்னிற்று. கிருஷ்ணன் வாய் விட்டு சிரித்தான்.“ எனக்கும் வயதாகிவிட்டதே!! மறந்தே போனேன். ஒரு சிறு கதையை தொடர்  கதையாக்கி விட்டேனே !!””.

 ”பாமா!! தேரை யானை படைகள் பின்னால் செலுத்து. தேரை நிறுத்து. நீ தேர் தட்டுக்கு வா. நான்  செலுத்துகிறேன். இந்தா நான் கொடுக்கும் இந்த பாணங்களை நரகனின் மேல் விடாது செலுத்து.” மீண்டும் கிருஷ்ணனின் தேர் கண்ணில் தென்பட்டதும் நரகன் துரத்தினான். கிருஷ்ணனும் தேர் செலுத்திக்கொண்டே எப்படி அம்புகளை எய்ய வேண்டும் என்று வாய் ஓயாமல் பாமாவுக்கு சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வாறே பாமாவும் சரமாரி பொழிந்தாள். முதலில் நரகனின் குதிரைகள் மாய்ந்து விழுந்தன. கொடி அறுந்து விழுந்தது. அதற்கும் முன்பாக நரகனின் கிரீடமும் போட்டி போட்டுக்கொண்டு உருண்டு விழுந்தது. அவனது ரதத்தின் சக்கரங்களை ஓடித்தான் கிருஷ்ணன். ஓட முடியாமல் வில்லின்றி நரகன் தேர்க்காலில் விழுந்தான் நரகாசுரனை வாட்டியது பாமாவின் கணைகள்!!. 
கிருஷ்ணனின் சக்ரா யுதம் நரகனின் மார்பை இரண்டாக பிளந்தது . அரை உயிருடன் தடுமாறும் வார்த்தைகளில் நரகன் கஷ்டப்பட்டு பேசினான், இல்லை ஏசினான்.

''கிருஷ்ணா!!, நீ ஒரு பேடி. ஒரு பெண்ணை முன் நிறுத்தி யுத்தம் செய்தாய்,!! உன்னால் என்னை ஜெயிக்க முடியாதல்லவா?? 

“நரகா, நீ விரும்பியது அவ்வாறே அல்லவா?? நீ கேட்டபடியே தான் நான் உன் முடிவை தந்தேன்!!!

''என்ன உளறுகிறாய் நீ, என் முடிவை நான் கேட்டேனா?'

'“ஆம் நரகா, வரம் கேட்பதும் பெறுவதும் எளிதல்ல. கடும் தவம் செய்து பெற்றதை விரயம் செய்து உன் அழிவை நீ தேடிக்கொண்டாய்!! ஆனால் ஒன்று நிச்சயம். உன்னுடன் யுத்தம் செய்ய நான் மிகவும் பிரயாசைப் பட வைத்தாய். அப்போது தான், ''ஒரு பெண்ணால் மட்டுமே, அதுவும் தாய் மூலம்  உன் முடிவை வேண்டியவன்.  பூமாதேவியின் புதல்வனே, பாமா தான் பூமா. இப்போது தான்   நீ கேட்டு பெற்ற உன் வரம் என் நினைவுக்கு வந்தது. பூமாவான பாமா  உன்னை முடித்தாள். என்னு
டன் யுத்தம் செய்த நீ நற்கதியே அடைவாய்!!” 

“கிருஷ்ணா!! உன் பெருமை உணர்ந்தேன். மனிதர்களே மறந்து தவறு செய்யும்போது நான் கேவலம் ஒரு அசுரன் தவறு செய்வதில், மறந்ததில், என்ன ஆச்சர்யம்!!?இந்த நாளில் நம் யுத்தம் அனைவருக் கும் நினைவு வரட்டும் நான் உன் கையால் மடிவதில் எனக்கு பாக்யமே!”

“நரகா. உன் விதியை நீயே தேடிக்கொண்டாய். எனினும் நீ விரும்பியவாறே ஒவ்வொரு ஆண்டும் இந்த ஐப்பசி சதுர்த்தசி நரக சதுர்த்தசி என உன் பெயராலேயே தீபாவளி என ஒரு சிறந்த நாளாக மக்கள் கொண்டாடுவர். நமது யுத்தம் ஒரு சில வாண வேடிக்கைகளுடனும் (பட்டாசு) சரங்களுடனும், (தரை, விஷ்ணு) சக்கரங்களுடனும், ஒளியும் ஒலியுமாக நினைவுக்கு வரும் அனைவரும் இனிப்பு உண்டு வழங்கி, புத்தாடை உடுத்தி, கொண்டாடப்படும் நாள் ஆகும் திருப்தியா, நரகா??!. 

கண்ணன் இப்படி அருளினான்  நாம்  தீபாவளி அப்படி  கொண்டாடுகிறோம்.
''தாத்தா சூப்பர் கதை. என் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்றேன். 
''டேய்  பேராண்டி,  இது ஒரு பழங்கதை. வருஷாவருஷம் நினைவுக்கு வரும் கதை. எனக்கு எங்க தாத்தா ஆத்தங்கரையிலே மதகடியில் சொன்னது நினைவுக்கு வருது. நான் இப்போ சொன்னதை நீங்கல்லாம் ஞாபகம் வச்சிண்டு உங்களுக்கு தெரிஞ்சவாளுக்கு சொல்லணும்.  ஏன்  உன் பேரனுக்கும்  நீ சொல்லி தொடரணும் .கிருஷ்ணன் கதை பரவணும். 

ஒரு விஷயம் மறக்காதே. கிருஷ்ணனுக்கு பிடிச்ச மாடுகளை பறவைகளை பட்டாசு சத்தத்திலே பயப்படுத்தாதே. நிறைய விளக்கு ஏற்றி பிரார்த்தனை பண்ணு. கிருஷ்ணனைப் பாடு. அது தான் தீபாவளி. 
''எதுக்கு தீபம் தாத்தா?
''ராத்திரி தான் தீபம் அவசியம். ஏன். இருட்டை போக்க. அதுபோல் நமது உள்ளத்திலே இருக்கிற அஞ்ஞானம் என்கிற இருட்டு போக நாம ஞானம் என்கிற தீபத்தை ஏத்திக்கணும். இதை தான் வேதத்திலே '''தமஸோமாம் ஜ்யோதிர் கமய '' என்கிறோம். தாமச குணமாகிய அறியாமை என்கிற இருட்டு போக ஞானம் என்கிற ஒளியைக் கொடு '' என்று கிருஷ்ணனை கேட்கிறோம். 

எல்லோரும் இனிப்பு கொடுத்து மற்றவர்களை உறவினர்களை எல்லாம் அன்று சந்திக்கிறது ஒற்றுமையை வளர்க்க அன்பைப் பரப்ப, நேசம் வளர, புதிய ஆடை தரித்துக்கொள்வது கூட என்ன அர்த்தத்தில் தெரியுமா? இன்றிலிருந்து நான் இதுவரை செய்த தவறுகளை செய்யாமல் திருந்தி புத்தம் புதியவன். என் பாபங்கள் இன்று விடியலில் நான் குளித்த நீரில் கங்கை இருந்து அவற்றை அழித்து என்னை புனிதனாகட்டும் என்று உணர்வதற்காக. அதனால் தான் ''கங்கா ஸ்நானம் ஆச்சா? ன்னு  கேட்பது. குழாய் தண்ணி, கிணற்று தண்ணி, காசு கொடுத்து வாங்கின எந்த தண்ணியும் தீபாவளி அன்று காலை புனித கங்கை நீர் தான், புரிகிறதா'''
'பிரமாதம் தாத்தா''
 என் அன்பு நண்பர்கள், நட்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.-ஜே.கே. சிவன், ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...