Tuesday, November 9, 2021

ULLADHU NARPADHU

 உள்ளது நாற்பது -  நங்கநல்லூர்  J K  SIVAN -

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி -


33.  புதையல் இருந்தும் பிச்சைகாரன்.

என்னை யறியேனா னென்னை யறிந்தேனா
னென்ன னகைப்புக் கிடனாகு - மென்னை
தனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றா
யனைவரனு பூதியுண்மை யாலோர் - நினைவறவே 33

நாம்  பேசும்போது  என்ன சொல்கிறோம். ''ஸார்  என்னைப்பத்தி எனக்கு நல்லாவே  தெரியும்?  என்கிறோம், அல்லது எனக்கு  என்னை பத்தியே சரியா  தெரியாது நான் எப்படி  அவரைப் பற்றி சொல்வது?'' என்கிறோம்.  ரெண்டுமே  கை கொட்டி சிரிக்க லாயக்கான  சொற்கள்  என்கிறார்  ரமண மகரிஷி.   சுப்ரமணியை பற்றி எனக்கு தெரியாது, பாலுவைப் பற்றி தெரியும்  என்பது  போல் இருக்கிறது இது.  
நான் என்பதை ரெண்டாக பாவித்தால் தான் இப்படி பேசமுடியும்.  எங்கே இருக்கிறது ரெண்டு?  இருப்பது ஒன்று தானே.

ஞானிகள்  என்று யாருமே இல்லை.  ஞானம் மட்டும் தான் உள்ளது.மனத்தில் உதிக்கும் அகந்தை, அஹங்காரம் நீக்கிவிட்டால் எஞ்சியது ஞானம் மட்டுமே. அது ஒன்றே இருக்கும்போது  ஞானி யார்? ஞானம் தானே? ஆத்மாவை ஒரு வஸ்துவாக அறிய முடியாது.  எல்லாவற்றையும்  அறிகின்ற ''அறிவை'' எப்படி  அறிவது?

சூரிய வெளிச்சம் இருந்தால் தானே  மேகம்  சூரியனை மறைக்கிறது என்கிறோம்.  மேகத்தையே  சூரிய வெளிச்சம் இருந்தால் தானே காணமுடியும்.  இருட்டில் எங்கே இருக்கிறது மேகம் என்று சொல்ல முடியுமா?  ஆகவே இருப்பது ஒன்று.  அது பலவாக நமக்கு தெரிகிறது. ஞானம் இருந்தால் தான்  ஞானி, அஞ்ஞானி என்று பிரிக்க முடியும்.

உண்மையை, சத்தியத்தை, அறிய இன்னொருவர் வேண்டாம். உண்மை என்றாலே  ஸ்வயாநுபவம். ஒரு விளக்கை காண  இன்னொரு விளக்கு தேவையல்ல.

''கண்டவன் எவன்? என கருத்தினுள் நாட, கண்டவன் இன்றிட நின்றது கண்டேன்''  என்கிறார்  ரமணர்.  காண வேண்டியதை கண்டவன் யார்  என ஆராயும்போது,  கண்டவன்  நான்  என்று சொல்வதற்கு  ஒரு அகந்தை கிடையாதே, அகம்பாவம் இல்லையே? கண்டேன் என்று சொல்லவோ, காணவில்லை என்று சொல்லவோ  எதுவுமே, எவருமே  இல்லையே. 

இப்படி  நிஸ்சல மௌனத்தின் அருளொளியை தான் தட்சிணாமூர்த்தியின் மௌனம் விளக்குகிறது.    ''சொல்லாது சொல்லி, நீ   சொல்லற நில்  என்று சும்மா இருந்தாய்  அருணாசலா''  என்று ரமணர் சொல்வது இதைத்தான். சொல்லவேண்டியது முழுக்க மௌன உபதேசம் தான்.

ஒரு  மௌன சாது, கொஞ்சமும் அஹம்காரம் இல்லாதவர் மேல்  எமதர்மன் பாசக்கயிற்றை வீசும்போது, அந்த கயிற்றால்  அவரை  அடையாளம் காண இயலவில்லை.  கொஞ்சமாவது அஹம்காரம் இருந்தால் தான் அது எளிதில் பற்றும். ஒன்றுமில்லாததை அது எப்படி பிடிக்கும்?  அவரரைப் பிடிக்க வேண்டுமானால்  அவருக்கு முதலில் அஹம்காரம் உண்டாக்கவேண்டும் என்று  அவரை முகஸ்துதி செய்ய, பெருமைப்படுத்த  தேர்ந்த  சிலரை  யமராஜன் அனுப்பினான். அவர்கள்  சாதுவை  இடைவிடாது  முகஸ்துதியால் போற்ற,  மனம் தளர்ந்து அபிமானம் தலைதூக்க ஆரம்பிக்கும்போது  பாசக்கயிறு கெட்டியாக  சாதுவை  பிடித்துக் கொண்டது. 

எரிந்து சாம்பலான ஒரு கயிறோ, கட்டையோ, கயிறு, கட்டை போலவே  காணப்படும். தொட்டால் உதிர்ந்து விடும். ஞானத்தால்  எரிந்த அஹம்பாவம்  அகந்தைபோலவே  தோற்றமளிக்கும்.  ஒரு ஞானியை அது எந்தவிதத்திலும் பாதிக்கும் சக்தி அற்றது.  ஒரு ஞானி தான்  ஞானி  என்றோ அஞ்ஞானி என்றோ தோன்றாதவர்.

எவர்  இதயத்தில்  சர்வ  பூதங்களும்  புலன்களும் மனமும்  அகங்காரமும்  ஆத்மாகவே ஆகிவிட்டதோ அங்கே  எப்படி  மோகமோ, சோகமோ, சுகமோ, வேறு எதுவோ இருக்க முடியும்?   ஆத்மா என்பது  அறிவின்   ஸ்வரூபம். அதற்கு  அந்நியமாக  அறிவதற்கு வேறொன்றும் இல்லை. 

புதையல்  எப்படி  பூமிக்கடியில் எவர் கண்ணுக்கும் படாமல் மறைந்திருக்கிறதோ அது போல் ஆத்மானுபவம் எல்லோருக்கும்  கிடைக்கக்கூடியது. ஆனால்   புதையலை தேடி எடுப்பது போல் ஆத்ம விசாரம் பண்ணி தான் அதை பெறமுடியும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...