Monday, August 31, 2020

CHIDAMBARA SWAMIGAL

 






சிதம்பர ஸ்வாமிகள்  J K SIVAN 

சென்னைக்கு மிக அருகில் உள்ள ஒரு திவ்ய க்ஷேத்ரம்  திருப்போரூர். முருகன் கோவில் பிரசித்தம். நிறைய பேர்  போயிருப்பீர்கள்.   சுமார்  400  வருஷங்களுக்கு முன் அங்கே  ஒரு ஞானி இருந்தார்.  மதுரை மீனாட்சியின் செல்லக் குழந்தை என்று எல்லோரும் அவரை சொல்வார்கள்.  பெயர்  சிதம்பர ஸ்வாமிகள்.  மீனாட்சி அருளால் சிறுவயதிலிருந்து கவி பாடும் திறன். அவர் இயற்றியது தான் ஸ்ரீ மீனாட்சி பிள்ளைத் தமிழ்.

கோயம்புத்தூரை சேர்த்த அவிநாசி ரெட்டியா ருக்கு புத்ர பாக்யம் இல்லை.  ஒருநாள் அவர் வீட்டுக்கு ஒரு சிவபக்தர் யோகி  குமாரதேவர் வருகிறார். ''நீயும் உன் மனைவியும் இந்த விபூதியை உட்கொள்ளுங்கள். புத்ர பாக்யம் ஏற்படும்'' என்று ஆசிர்வதித்தார்.  பிறந்த குழந்தை தான் சிதம்பர ஸ்வாமிகள். குமார தேவரிடமே பாடம் கற்றார். குமாரதேவரின் குரு  சாந்தலிங்க ஸ்வாமிகளின் ஆசியும் பெற்றார். குமார தேவரிடம்  21 தீக்ஷை பெற்று ஞானியானவர்.

தியானத்தின் போது அடிக்கடி மயில் சிறகு விரித்து ஆடுவதன் காரணம் என்ன என்று குரு  குமாரதேவரிடம் கேட்கிறார். 

''நீ உடனே மதுரை சென்று மீனாட்சியை வழிபடு.. '' குரு உபதேசம் அவரை மதுரை சென்று அங்கயற்கண்ணி புத்திரனாக மாற்றிவிட்டது.  அம்பாள் மயிலுக்கு பதிலாக  அவர் கண் முன் நர்த்தனம் ஆடினாள் . ''மீனாக்ஷி கலிவெண்பா''  பிறந்தது.  கட்டாயம் ஒருமுறையாவது படிக்கவேண்டிய நூல்.

“சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே, சேயிழையே!
காராரும் மேனிக் கருங்குயிலே! –ஆராயும்
வேதமுதல் ஆகி நின்ற  மெய்ப்பொருளே! மின் ஒளியே
ஆதிபராபரையே!அம்பிகையே! –சோதியே!”

என்று கடகட வென்று  தமிழ் ஓடுகிறது. எளிதில் புரிகிறது. 

"அன்ன நடைச்சி, அருமறைச்சி, ஆண்டிச்சி
கன்னல் மொழிச்சி, கருணைச்சி- பன்னுதமிழ்
வாய்ச்சி, சடைச்சி, வடிவுடைய மங்கச்சி,
பேய்ச்சி, இளமுலைச்சி, பேதைச்சி - காய்ச்சியபால்
வெண்ணெய் மொழிச்சி, வெளிச்சி, வெளி இடைச்சி
அண்ணுபுரம் தீயிட்ட அம்படைச்சி"


என்றெல்லாம்  குழந்தையை  நாம் திருட்டு குட்டி, பொல்லாது,  நாக்குட்டி, பூனைக்குட்டி என்று கொஞ்சுவது போல் பலவாறாகப்  பார்த்து பரவசமடைகிறார்.   

மதுரை மீனாட்சி ஒருநாள்  ''வடக்கே போ  யுத்தபுரி என்றஊரில்  என் குமாரன் ஆலயத் தை புனருத்தாரணம் செய்''  என்று ஆணை யிட்டாள். புறப்பட்டுவிட்டார்  சிதம்பர ஸ்வாமி கள். யுத்த புரி  தான் திருப் போரூர்  முருகனை
தரிசிக்க ஆவல். வரும் வழியில் விருத்தாச லத்தில்  குரு குமார தேவர் முக்தி அடையப் போவதை உணர்ந்து அங்கே சென்று அவரை வணங்குகிறார்.கிளியனூரில் ஞானம்மை எனும் பெண்ணுக்கு  அருளாசி, அப்புறம் பொம்ம பாளையத் தில்  சிவஞானபாலைய சுவாமிகளோடு ஏழுநாட்கள் இரவு, பகல் பாராமல் விவாதம். 

திருப்போரூரில்  கந்தன்  ஆலயம் இல்லை.  யாரைக்கேட்டாலும் இங்கே  முருகன் ஆலயம் கிடையாதே என்று வேம்படி விநாயகர்  கோவிலைத்தான்  காட்டினார்கள்.   அந்த கோவிலை ஒட்டி ஏராளமான பனைமரங்கள் வளர்ந்த காடு.  பனங்காட்டில்  கந்தனைத் தேடி அலைந்தார்.

ஒருநாள்   பெண் பனை மரம் ஒன்றின் அருகே சுயம்புவாக  கந்தன் ஸ்வாமிகளுக்கு கிடைத் தான். பெரு மகிழ்ச்சியோடு அவனைத்   தனது
 குடிசைக்கு கொண்டு போய்   அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டார்.  ''முருகா  உன் கோவில் எங்கேடா?    தேடினார்.   கனவில் குரு  குமாரதேவர்  தோன்றி  விபூதி அணிவிக்கிறார்.  துல்லியமாக  முருகன் கோவில் இருந்த இடம் தெரிகிறது. குருவின் பாதார விந்தங்களில் விழுந்து எழுந்த போது  குரு  ஸ்வாமிநாதனாக காட்சி அளித்து  பல்லவர்கள் கால  கோவில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் தெரிகிறது.  சிதம்பர சுவாமிகளால் கோவில் புனருத்தா ரணம் பெற்றதன்   காரணம் எண்ணற்ற பக்தர்கள்  ஸ்வாமிகளிடம் விபூதி பெற்று நோய் குணமானது. பக்தர்கள் உதவியோடு கோவில் எழும்பியது. 

திருடர்கள் ஒருநாள் சுவாமிகள் குடிலில்  திருட வந்தபோது  அவரைத் தாக்க கைகளை ஒங்க, கைகள்அப்படியே  நின்றுபோனது. கண் குருடானது .   ஸ்வாமிகள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.  திருடர்கள் மன்னிப்பு கேட்டு, தாங்கள் திருடிய அனைத்து பொருள்களையும் கோவில் திருப்பணிக்கு சேர்ப்பித்தார்கள். 
இந்த நிகழ்ச்சி மேலும்  பக்தர்களிடம்  சென்றது .726 பாடல்களை கொண்ட  ''திருப்போரூர் சந்நிதி முறை '' நமக்களித்தார்.  இதைத் தவிர  திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம்,  விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, விருத்தாசலம் குமாரதேவர் பதிகம், பஞ்சதிகார விளக்கம் ஆகியவையும்  இயற்றினார். 

மீனாக்ஷி   இட்ட பணியாக  ஸ்வாமிகள் மூலம்  நமக்கு திருப்போரூர் முருகன் கோவில் கிடைத்தது.  மூலவர் சந்நிதி அருகே மண்ட பத்தில் தெற்கு பார்த்த   யந்திர ஸ்தாபனம்  இருக்கிறதே  அது  வேறு  எந்த  முருகன் கோவிலிலும் பார்க்க முடியாது.  ஸ்வாமிகள் அமைத்தது.  கூர்மம், அஷ்ட கஜங்கள் (எட்டு யானைகள்) அஷ்ட நாகங்கள், தேவ கணங்கள்  கொண்ட பீடம்.  அதன் மேல் இந்த  யந்த்ரம். சக்ரம்.  இதற்கான  விசேஷ பூஜை முறைக ளை வழக்கப்படுத்தினார்.  

கோவிலிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில்  கண்ணகப் பட்டு என்னும் கிராமத்தில் மடாலயம், ஒடுக்க அறை, பூஜை மடம் எல்லாம் அமைத்து அங்கேயே  ஸ்வாமிகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார்.  எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் குழுமினர். சிலர் தீக்ஷை பெற்றனர். 
1659 வைகாசி விசாக த்தன்று  மடாலயத்தின் ஒடுக்க அறைக்குள் இருந்து  சுரங்க வழியே அருகில் உள்ள சமாதிக் குழிக்குள், வழிபாட்டுப் பொருட்களுடன் சென்று வழிபாடு நடத்தி சமாதியின் உள்ளேயே அமர்ந்து பரிபூரணத் துவத்தை அடைந்தார்.  அவர் சமாதி அடைந்த  அதே நேரத்தில்  திருப்போரூர் முருகன் சந்நிதியில் மூலவரின் சந்நிதியில்  சிதம்பரம் சுவாமிகள் கூப்பிய கரங்களுடன்  நகர்ந்து  சுப்ரமணிய ஸ்வாமியோடு கலந்தது, ஐக்யமானதை  அன்று   முருகன் தரிசனம் செய்த பக்தர்கள்  பலர்  பார்த்தார்கள். பாக்கியசாலிகள்.கன்னக்கப்பட்டில்  யாரும் இதுவரை சிதம்பர ஸ்வாமிகள்  ஜீவ சமாதி என்றோ அதிஷ்டானம் என்றோ ஒன்றையும் ஏன் குறிப்பிடவில்லை???? மடாலயம் என்று மட்டும் ஏன் பெயர்??

ஒடுக்க அறையில் நிஷ்டை, யோகம் முதலானவற்றை சுவாமிகள் இப்போதும் அனுஷ்டித்து வருவதாக ஐதீகம். எனவே, அவருக்குத் தொந்தரவு கூடாதாம். எனவே  வழிபாடு இல்லை.  ஒரேயொரு விளக்கு மட்டும் 24 மணி நேரமும் சுடர் விட்டு எரிகிறது.  சுவாமிகள் பயன்படுத்திய சுரங்கத்தை  மேடையாக்கி  மூடிவிட்டார்கள்.இன்றும் அங்கே  அவர் உபயோகித்த  புலித்தோல்  ஆசனம், பாதரட்சை  இருக்கிறது. 

தினமும் காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 5 முதல் 7 மணி வரையிலுமாக இரண்டு வேளைகளில் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி தினங்களில் இரவு 7 முதல் நள்ளிரவு 12 மணி வரை அபிஷேகம், அலங்காரம், அன்னதானம், பஜனைகள் ஆகியவை சிறப்புற நடைபெறும். சுவாமிகளைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பலர், அன்றிரவு இங்கு தங்கி விட்டு, மறுநாள் காலையில் தரிசனம் முடித்து திரும்புகின்றனர். தவிர கிருத்திகை, ரோகிணி, விசாகம், பரணி ஆகிய நட்சத்திர தினங்க ளிலும் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் சிறப்பாக இருக்குமாம்.

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் J K SIVAN

ஒரு புண்யவான் விடை பெற்றார்.
27.8.2020 சாயங்காலம் 6.30மணிக்கு ஒரு பெரிய தலை சாய்ந்து விட்டது.

மஹாபெரியவாளோடு அரை நூற்றாண்டுக ளுக்கும் மேலாக நெருக்கமாக பழகி அவருக்கு உதவியாளனாக இருந்த ஒரு சாஸ்திரிகள், மேச்சேரி ராமநாத சாஸ்திரிகள் பிள்ளை மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். ஐம்பது வருஷங்களுக்கு மேலாக அனுஷ பூஜை விடாமல் கொண்டாடி எத்தனையோ மஹா பெரியவா பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியவர். அவர் பூஜைக்கு பெரியவா மூன்று தடவை வந்திருக்கிறார். பழைய மாம்பழம் ஆரிய கௌடா தெருவில் அயோத்தி மண்டபத்தில் அனுஷா பூஜை என்றால் பிரபலம். அனுஷம், ஜெயந்தி, ஆராதனை பூஜைகள் விசேஷமாக பண்ணியவர் மேச்சேரி சாஸ்திரிகள்.
மஹா பெரியவா பூஜைகள் பண்ணும்போது அவருக்கு பூஜை பண்ணி வைக்கும் வாத்யார் மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். இன்னொரு முக்கியமான விஷயம். மஹாபெரியவா 8.1.1994 அன்று மறையும்போது அவர் கடைசியாக பேசி ஆசிர்வதித்தது பட்டு சாஸ்திரிகளிடம் தான்.

பட்டு சாஸ்திரிகளுக்கு நாம் அனைவரும் எழுந்து நின்று நமஸ்கரித்துவிட்டு மானசீகமாக அவரது ஆசியைப் பெறுவோம். அத்தோடு அவர் சொன்ன மஹா பெரியவா பற்றிய சில விஷயங்களை அவர்சொல்வது போலவே இங்கே அளிக்க முயல்கிறேன்.


''நான் மேச்சேரி பட்டு சாஸ்திரி. இசையனூர் கோகிலா பாட்டி மஹாபெரியவாளுக்கு தாயார் ஸ்தானம் மாதிரி. பெரியவா அப்படி தான்பாட்டியை மடத்தில் மரியாதையோடு வச்சுண்டு இருந்தா. பெரியவாளுக்கு தினமும் பாட்டி தான் சாயந்திர வேளைகளில் சுற்றி போடுவா. அரிசிமாவுலே சொப்பு பண்ணி, நெய்விளக்கேத்தி, உப்பு மிளகா, கூரை ஓலை கொஞ்சம் எல்லாம் போட்டு கூப்புடுவா. பெரியவா உள்ளே வந்து தனி அறையிலே நிப்பா. பாட்டி அவருக்கு சுற்றி போடுவா. இந்த பாக்யம் யாருக்கு கிடைக்கும். நான் இசையனூர் பாட்டிக்கு ஆத்து வாத்யார். மடத்துக்கு போகும்போது என்னையும் கூப்பிட்டுண்டு போவா. ஒன்பது வயசிலிருந்து பெரியவா பழக்கம் எனக்கு.
மகா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது.

ஒரு மாலை நேரம்… அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். ‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மகாபெரியவாளோட பாதுகை யையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்கிரகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு, ஜயந்தி விழாவை நடத்தலாமே?’ன்னு என்னைக் கேட்டார்.

அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மகா பெரியவாளின் பஞ்சலோக விக்கிரகம் பண்ணுங்கோ. நிச்சயம் அது கைகூடும். இந்த மாம்பலத்துலயே மஹா பெரியவா தன்னுடைய கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்கோ '' என்று சொன்னார். ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், பஞ்சலோகத் திருமேனி பண்றதுக்கு, எல்லார் உதவியும் கிடைச்சுது.

அப்புறம்… மகாபெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்கிரகமா வடிக்க, சுவாமிமலைக்குப் போனோம். அங்கே… கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மகா பெரியவாள்மேல ரொம்ப பக்தி அவருக்கு. வயசானவர். ‘இத்தனை வயசுக்குப் பிறகும், மகாபெரியவாளோட பஞ்சலோக விக்கிரகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே’ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, விக்கிரகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு, பிரமாதமா தயாரிச்சு முடிச்சார். அந்த பெரியவாள் விக்கிரகம்தான், அவர் பண்ணின கடைசி விக்கிரகம்..

இந்த நேரத்துல, கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்கிரகத்தை வாங்கிண்டு வரணும்னா, சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவை. என்ன பண்றதுன்னு தெரியல. ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பா’னு தைரிய மா இருந்தேன். திடீர்னு ஒருநாள், கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு, அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ்குமார் அமெரிக்கா லேருந்து போன் பண்ணியிருக்கார்.

‘மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர், காஞ்சி மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ‘அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு’ன்னு அதிகாலைல, மகா பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்’னு கணேஷ்குமார் சொல்லிருக்கார். சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து, ‘இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்’னு முழு விவரமும் சொல்லிக் கொடுத்தா. எனக்கு ஆச்சர்யம். மகா பெரியவா அனுகிரஹத்தை நினைச்சு கண்கள் குளமாயிடுத்து. பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே இப்படி நடக்குமா? , 6,000 ரூபாய் திடீர்னு கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன். இத்த னைக்கும் எனக்குப் பணம் தேவைப் படறதுன்னு யார் கிட்டயும் நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. ஆனா, எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மகாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! ஆறு வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!

பணம் கைக்கு வந்ததும், வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே, ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி, சுவாமிமலையில ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு, வடவாம்பலம் வழியா வந்து, அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு, தீபாராதனை காட்டினோம்.

பூஜையெல்லாம் முடிச்சுட்டு, வண்டியைக் கிளப்பினா… ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்… வண்டி அசைவே னாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு. அந்த நேரத்துல, அந்த கிராமத்துலே இருக்கிற ஒரு விவசாயி ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த் தனை செஞ்சுட்டு தான் கூலி வேலைக்குப் போவாராம்.'' என்ன பக்தி பாருங்கோ. நாம் அவர் காலிலே விழுந்து நமஸ்கரிக்கணும்.''

எங்ககிட்ட வந்த அந்தக் குடியானவர்,'
‘என்ன நடந்துது?’ன்னு கேட்டார். ‘ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை’ன்னு சொன்னோம். அப்ப, அவர் சொன்ன வார்த்தைகள், எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!

‘மகா பெரியவாளும் அவரோட குரு ஆத்ம போதேந்திராளும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத் திட்டாங்க. ஆகவே இனிமே இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்’னார். அதோட நிக்காம, எங்களோட அவரும் சேர்ந்து, ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார்.


வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந் தது. வழியிலயும் எந்தவித அசௌகரி யமும் இல்லாம, விக்கிரகத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

மகா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மகான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்கிரகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார். இப்ப… பாதுகையோடு பஞ்சலோக விக்கிரகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து, பெரியவா ளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மகா பெரியவாளுக்கு கோயில்ங்கறது, பக்தர்களோட கோரிக்கைதான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார், பாருங்கோ!

ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்க ணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண் டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மகா பெரியவா, கருணா மூர்த்தியாச்சே!”

இதை நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மகானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.

WORRY OF DEATH

 அந்த முப்பது நாள் J K SIVAN

கோபன்னாவுக்கு வாழ்க்கை திடீரென்று ஒருநாள்வாழ்க்கை வெறுத்து விட்ட

து. மரகத பவனில் ஐந்து இட்டலி சாம்பார் சட்னியோடு சாப்பிட்டுவிட்டு ஆறாவது இட்டலியை விட்டெறிந்தான். அந்த அவசரத்திலும் காப்பியை விழுங்கிவிட்டு சைக்கிளை மிதித்துக்கொண்டு தெருமுனையில் இருந்த ப்ரவசன மண்டபத்துக்கு சென்றான். அங்கே ஒரு துறவி வந்திருப்பதை முதல் நாளே தெரிந்து கொண்டிருந்தான்.

நல்ல கும்பல். மெதுவாக உள்ளே சென்றுவிட்டான். பழம் போல் பளபளவென்று ஒளி வீசும் முகம் வெண்ணிற தாடி மீசைக்கு இடையே தெரிந்தது. நெற்றியில் பட்டை யாக வெண்ணீறு. கூர்மையான கண்கள். வயது எவ்வளவு என்று கணிக்கமுடியாத உடம்பை காவித்துணி மறைத்திருந்தது. குண்டு குண்டாக கழுத்து நிறைய ருத்ராக்ஷம்.
தடாலென்று கீழே விழுந்து வணங்கினான். சாமியார் தமிழ் தெரிந்தவர்.

''என்னப்பா உனக்கு கண்ணில் சோகம்? விசனமா இருக்கே ?''

''என்ன சொல்வேன் சாமி, வியாபாரத்தில் சாமர்த்தியமா கை நிறைய தான் சம்பாதிக் கிறேன். ஒரு சொந்த வீடு, சைக்கிள் இருக்கு. மனசிலே தான் நிம்மதியே இல்லை. திருப்தியே இல்ல. ஒண்ணு மேலே ஒண்ணா நிறைய பாவம் செய்துகிட்டே வரேன்னு மனசிலே ஏதோ அடிக்கடி சொல்லுது. அதே எண்ணம் திரும்ப திரும்ப வந்துகொண்டே இருக்கு. ரொம்ப தொந்தரவா இருக்கு. நீங்க ஊருக்கு வந்திருக்கிறது கேள்விப் பட்டேன் . உங்க கிட்டே இதுக்கு ஏதாவது அறிவுரை கேட்க தான் வந்தேன்.''

துறவி சிரித்தார். ''உண்மையை சொன்னா தைரியமா எடுத்துக்கு வியா?'''
'சரிங்க சுவாமி ''
''உனக்கு இன்னும் இந்த தொந்தரவு 30 நாளுக்கு தான் அப்பா, அப்புறம் 31வது நாள் ஒரு தொந்தரவும் உனக்கு கிடையாது.'
'''சந்தோஷமான விஷயம் இது சுவாமி. எதுக்கு இதைப் போய் தைரியமா எடுத்துக் கோன்னு சொல்கிறீர்கள்?'
'''30 நாளுக்கு அப்புறம் என்னன்னு நீ கேட்கலே நான் சொல்லலியே?'
'''சொல்லுங்கோ சுவாமி''
''நீ செத்துப்போய்டுவே. அப்புறம் உனக்கு ஒரு தொந்தரவும் இல்லைன்னு தான் சொன்னேன். போய்ட்டுவா'
'''ஐயோ'' என்ன சொல்றீங்க சுவாமி''

வீட்டுக்கு ஓடினான் கோபன்னா. அவசர அவசரமா என்னென்னவோ செய்தான். ஒவ்வொரு நாளும் காலண்டர் சீட்டை கிழிக்கும்போது பகீர் என்று வயிற்றில் ஒரு சுழற்சி. ஆளே மாறிவிட்டான். எப்போதும் ஏதோ ஒரு தீர்மானத்தோடு வேகவேகமாக ஏதேதோ செய்து கொண்டிருந்தான் நிறைய பேரைச் சென்று பார்த்தான். 30 நாள் ஓடி விட்டது. 31வது நாள் காலை படுக்கை விட்டு எழுந்தபோது அதிர்ச்சி. இன்று என்ன நடக்கப்போகிறதோ, எப்படி நான் சாகப்போகிறேன்?''

அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. ஊரில் துறவி இன்னும் இருக்கிறார் என்பதால் அவரிடம் ஓடினான்.
''சுவாமி உங்க ஆசிர்வாதம் தான் என்னை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறது'' என்றான்.
''அது இருக்கட்டும் அப்பா, இந்த முப்பது நாளில் எவ்வளவு சம்பாதித்தாய். எத்தனை பாவங்கள் புரிந்தாய். உன் மனசிலே எத்தனை எண்ணங்கள் தோன்றியது. விவரமாக சொல்லு'''

'சுவாமி இந்த முப்பது நாளில் நான் பணம் சம்பாதிக்க முயற்சிக்க வில்லை, பாவத்தை பற்றிய எண்ணமே இல்லை. எப்போதும் என் மரணத்தைப் பற்றிய சிந்தனையில் தான் இருந்தேன் '
''அமைதி அமைதி. என் அருமை அன்பா, நீ நீண்ட நாள் வாழ்வாய். உனக்கு மரணம் வெகுகாலத்துக்கு இல்லை ''

அவர் காலில் விழுந்து வணங்கிய கோபன்னா முதல் தடவையாக முப்பது நாளுக்குப் பிறகு சிரித்தான்.
' மகிழ்ச்சி சுவாமி. பின் எதற்கு எனக்கு 30 நாளில் மரணம் என்று சொன்னீர்கள்?'''

'''அப்பனே, உலகில் பிறந்தது எல்லாமே ஒருநாள் இறந்து போகத்தான் வேண்டும். அது இயற்கை விதி. நியதி.அதற்குள் செல்வத்தை சேர்க்க அலைகிறார்கள். பாபத்தை செய்ய துணிகிறார்கள். அதை எண்ணிப்பார்ப் பதில்லை. மரணத்தைப் பற்றிய எண்ணம் மனதில் வந்தபின் நீ பாபத்தைப் பற்றியோ, பணத்தைப் பற்றியோ சிந்திக்கவே இல்லை. முப்பது நாள் இல்லை, முப்பது நிமிஷத்தில் கூட மரணம் அணுகலாம். முப்பது வருஷம் கழித்தும் வரலாம். இந்த நினைப்பு மனதில் இருந்தால் தப்பு, பாபம் ஒன்றும் செய்ய தூண்டாது. பணத்தை சேர்க்க அலையாது. அதற்குள் நாலு பேருக்கு முடிந்தவரை நல்லதையே செய், நல்லதையே நினை. மனதில் இது ஞாபகத்தில் இருந்தால் வாழ்க்கை சீராக கடைசி நிமிஷம் வரை மகிழ்ச்சியளிக் கும். பாபம் நெருங்காது. மரணம் நிச்சயம் என்று புரியும், எப்போது என்ற பயம் இருக்காது. அமைதி நிலவும்.

அவரை வணங்கிவிட்டு கோபன்னா சந்தோஷமாக திரும்பினான். வழியில் வழக்கமாக அவன் மசாலாதோசையை தேடிச் செல்லும் மரகத பவன் கண்ணில் பட்டது. சைக்கிள் தானாகவே அங்கு நிற்கும். இன்று வழக்கத்துக்கு மாறாக எதிர்த்த பக்கம் பார்த்துக்கொண்டு சைக்கிளை மிதித்தான். நல்லதையே செய்யும் நல்லதையே நினைக்கும், பிறர்க்கு உழைக்கும் கோபன்னா இப்போது ஆசா பாசங்கள் விட்ட அற்புதமான மனிதன்.

Sunday, August 30, 2020

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்      J K  SIVAN                                                             


'உங்க பையன் சொல்றது நிஜம்''

பாலா  திரிபுர  சுந்தரி, ராஜராஜேஸ்வரி, மாதங்கி பற்றி சமீபத்தில் கூட ஒரு அற்புத அனுபவம் எழுதி இருந்தேன்.   ஆச்சர்யமாக எனக்கு  இது வரை அறிமுகம் ஆகாத ஒரு நண்பர் நெமிலி ஸ்ரீ பாலாவின் பக்தர்  டெல்லியிலிருந்து எனக்கு  டெலிபோன் செய்தார். டெல்லியில், 40 ஆண்டுகளுக்கும் மேலே வாசம். . தமிழ் பேசத்தான் தெரியும், படிக்கவோ, எழுதவோ தெரியாத பாலக்காட்டு பிராமணர்.
'' பாலா மேல்  நான் தமிழில் பாட்டு  கற்பனையா எழுதி இருக்கேன். எனக்கு தமிழ் எழுத தெரியாததால் அதை அப்படியே ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறேன். அதற்கு அர்த்தம் எழுதி உதவுகிறீர்களா. உங்களைபற்றி நிறைய கேள்விப்பட்டு உங்களோடு தொடர்பு கொண்டேன்''
''ஆஹா  அதற்கென்ன  அனுப்புங்கள் நான் முடிந்ததை செய்கிறேன் என்றேன்.''  150 க்கும் மேல் பாட்டுகள் கூரி யரில் அனுப்பியுள்ளார். அதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.   ரெண்டு நாளுக்குப் பிறகு  நெமிலியிலிருந்து குங்கும பிரசாதம், பாலா வின் படங்கள் ஒரு சின்ன பார்சல் கௌரியர்  எனக்கு அனுப்பா ஏற்பாடு பண்ணி இருக்கிறார். ரொம்ப சந்தோஷம் எனக்கு.
நெமிலி பாலா ஒரு  தனியார் இல்ல கோயிலில் மட்டுமல்ல  எண்ணற்றோர்  உள்ளக்கோயி லிலும்  உள்ளாள். மிக சக்தி வாய்ந்த குழந்தை.  அவளுக்கு சாக்லேட்,மிட்டாய்கள் தான் பிரசாதம். வருவோர்க்கு எல்லாம் இனிப்பு கள்.  முழுதும் தங்கத்தில் ஆன அவள் விக்ரஹம்  அதீத பக்தியோடு  வழிபடப் படுகிறது. நான் நண்பர்களோடு சென்று இரு முறை பார்த்திருக்கிறேன்.
ஆச்சர்யமாக இன்னொரு  நண்பர் இன்று மாலை  அவளைப்பற்றிய  மஹா பெரியவா சம்பந்தப் பட்ட  ஒரு அதிசயச் செயதி  அனுப்பி னார். அதைச் சுருக்கிச் சொல்கிறேன் கேளுங்கள்/படியுங்கள்.
ஒரு நாட்டுக்கோட்டை செட்டியார் பெரியவா பக்தர்.  நகரத்தார் பல ஆலயங்களுக்கு வாரி வழங்கிய தர்மிஷ்டர்கள். தெய்வபக்தி நிரம்பிய குடும்பங்கள்.  இந்த செட்டியார்  நேரம் கிடைத்தபோதெல்லாம் காஞ்சிபுரம் வந்து பெரியவா தரிசனம் செய்ய மறப்பதில்லை. ஒரு தடவை தனது ஆறு ஏழு வயது பிள்ளையோடு பெரியவா தரிசனத்துக்கு வந்தார்.
வரிசையில் நின்று  மெதுவாக  பெரியவா அருகில் வந்தபோது தட்டில் இருந்த பழங்கள், வில்வம் எல்லாம் மஹா பெரியவா எதிரே வைத்துவிட்டு  அப்பாவும் பிள்ளையும் நமஸ்கரித்தார்கள் .
மஹா பெரியவா அந்த செட்டியாருக்கும்  பையனுக்கும்  பிரசாதம் அனுகிரஹித்து ஆசிர்வதித்தார்.அவர்கள் நகர்ந்தனர். அடுத்தவர்கள் தரிசனம் செய்ய வேண்டுமே.  அப்போது அந்த பையன்
“அப்பா…! என்றான்.
''என்னடா  வா போகலாம்''
''குனிந்து உன் காதைக் கொடு சீக்கிரம்''
செட்டியார் குனிந்தார்.  பையன் ரஹஸ்யமாக ஏதோ சொன்னான்.  செட்டியார் பேந்த பேந்த விழித்தார்.  மஹா பெரியவா இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். செட்டியார் மஹா பெரியவாளை மீண்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை மீண்டும் பார்த்துவிட்டு பையனை மெதுவாக அழைத்துக்கொண்டு  திரும்ப முயற்சித்தார்.  பையன் மீண்டும்  அவர் காதில் ஏதோ சொன்னான்.பையன் நகர மறுத்தான்.  செட்டியார்  மஹா பெரியவாளை  மீண்டும் பார்த்தார்.   வாயைப் பிளந்தார் .பையன் விடவில்லை! அப்பாவின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்து, அங்கிருந்து நகராமல்  முணுமுணு வென்று ஏதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்.பையன் முணுமுணு வென்று மெல்லிதாக அப்பாவிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இருப்பதை  மஹா பெரியவா கவனிக்க தவறவில்லை.   அவர்களை பார்த்து புன்னகைத்தார்.
”உங்க கொழந்தை என்ன சொல்றான்?''
“ஒண்ணுமில்ல பெரியவா….! ஏதோ தெரியாம சொல்றான்”
”பரவாயில்ல, என்கிட்டே சொல்லுங்கோ''
''எப்படி சொல்றதுன்னு தெரியல சுவாமி.
உங்க மடியிலே  ஏதோ ஒரு  சின்ன கொழந்தை,  பச்சை கலர்ல, பட்டுப் பாவாடை கட்டிக்கிட்டு உக்காந்திருக்குதாம் அது யாருப்பா?…ன்னு கேக்கறான். ''எனக்கு ஒண்ணுமே புரியல, என் கண்ணுக்கு உங்க மடியில எந்த குழந்தையும் தெரியலயே  சுவாமி''
செட்டியார் நடுங்கிக் கொண்டே சொல்லி முடித்தார். குழந்தை சொல்வதை நம்பவும் முடிய வில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
மஹா பெரியவா அந்த பையனை பார்த்து தலையாட்டினார்.
“என்ன தாத்தா? நா பொய் சொல்லலேல்ல?” உங்க மடியிலே  ஒரு குழந்தை தெரியறது எனக்கு . அது யாரு? 'ன்னு அப்பாவை கேட்டேன். அப்பா சொல்லமாட்டேங்கறார்..
“ஒன் கொழந்தை சொல்றது நெஜந்தான்!
செட்டியார் மட்டுமல்ல  அருகில் இருந்தவர்கள் எல்லோருமே  பெரியவா சொன்னதை கேட்டு அதிர்ந்து போனார்கள்.
“என்னது? பெரியவா மடியில கொழந்தைன்னா
பாலா த்ருபுரஸுந்தரியாத்தான் இருக்கும்!.”
அத்தனை பேர் மனஸிலும் ஏறக்குறைய இந்த எண்ணந்தான்!  பெரியவா  விளக்கமாக சொன்னார்:
“நம்ப ஸ்ரீமடத்தோட குரு பாரம்பர்யத்துக்கு அப்டி ஒரு வரப்ரஸாதம்… ஒரு அனுக்ரஹம் இருக்கு. மடத்ல… ஸ்வாமிகளா இருக்கற எங்களோட மடியில, ஸாக்ஷாத் ஶாரதாதேவி ஒக்காந்துண்டு இருக்கறதா ஒரு ஐதீகம்! அது பல ஸமயங்கள்ள, “எங்களோட” கண்ணுக்கே கூடத் தெரியாமப் போறதுண்டு.! ஆனா, இப்டியொரு காக்ஷி, ஒரு குபேரனோட கண்ணுக்குத்தான் தெரியும்
'' குபேரனா?'''  என்று  எல்லோரும் திகைத்து நிற்க   பெரியவா மேலும் விளக்கினார்:
“உங்க பிள்ளை கண்ணுலே  பாலா  தெரிஞ்சி ருக்கா. ரொம்ப  ஸீக்ரம்… அவன்  குபேரனா ஆய்டுவான்”
மகா  பெரியவா  கையைத் தூக்கி ஆஶிர்வாதம் பண்ணினார். வியப்பின் விளிம்புக்கே போய் விட்டார்கள் எல்லாரும்! செட்டியாரோ தான் இப்போதிருக்கும்  ஏழ்மை நிலையை எண்ணிப் பார்த்தார்.
“குபேர அந்தஸ்தா!” கற்பனைகூட பண்ண முடியாதே!  எப்படி என்று  புரியவே இல்லை . எப்போ  மஹா பெரியவா சொன்னாரோ, இனி அது ஸத்யம். எனவே ஸாத்யம்!   மனசில் இந்த  நம்பிக்கையோடு செட்டியார்  பிள்ளை யோடு  ஊர் திரும்பினார். நாளாக நாளாக  இந்த  விஷயம் மறந்தே போனார்.
காலம் ஓடியது. வருஷம் ரெண்டு அதோடு சேர்ந்து நகர்ந்தது.   ஒருநாள்  செட்டியாரின்  தூரத்து உறவுக்காரர்   பலராம செட்டியாரைப் பார்க்க அவர்  ஊருக்கு வந்தார்.
''வாங்க  ஆனந்தம் செட்டியார் '' என்று அவரை வரவேற்றார் நமது செட்டியார். ஆனந்தம் செட்டியார் குளித்து சாப்பிட்டு விட்டு திண்ணையில்  அமர்ந்து பேச்சை ஆரம்பித் தார்.
''பலராமா , உனக்கு தெரியுமில்ல.  எனக்கு வயசாயிடுச்சி, ஆச்சியும் போயிட்டுது. இப்போதெல்லாம் கழனி, கடை வ்யாவாராம் ஒண்ணும்  முன்னே மாதிரி கவனிக்க முடியல. பரம்பரை சொத்துக்கு வாரிசு இல்ல. நல்லா யோசிச்சேன். சொந்தம் பந்தம் வுட்டுப் போகக்கூடாதுன்னு  தோணுச்சு. உன்னைப் பாக்க வந்தேன். உன் ரெண்டாவது பிள்ளையை எனக்கு சுவீகாரம் கொடுத்துடு. நான் அவனை நல்லா பாத்துக்குவேன், நீயும் வந்து அப்பப்போ பாத்துக்கோ,  என்னுடைய ஆஸ்தி பாஸ்தி எல்லாத்துக்கும் இனிமே உன்பிள்ளை, என் சுவீகாரப் பிள்ளை தான் நேர் வாரிசு. நம்ம குலதெய்வம் கோவில்லே திருவுளச்சீட்டு போட்டு உத்தரவு ஆயிடுச்சி. நேரே இங்கே வந்துட்டேன். சரின்னு சொல்லு ''
பலராம செட்டியாருக்கு தலை சுற்றியது.  ரெண்டு வருஷம் முன்னால்  காஞ்சி பெரியவா எதிரில் நடந்த சம்பவம், பெரியவா சொன்னது எல்லாம் மின்னல் வெட்டாக பளிச் பளிச் என்று திரும்ப வந்தது.
பையன்  பெரியவா மடியிலே  பாலாவை குபேரனாகத்தான் பார்த்திருக்கிறான் இல்லையா?  பெரியவா அவன் குபேரானாகப்போகிறான் என்று சொன்னது பொய்க்குமா?  காஞ்சி  காமாக்ஷி ஸ்வரூபம் அல்லவா மஹா பெரியவா. காமாக்ஷி தானே காமகலா காமேஸ்வரி, பாலா. ராஜ மாதங்கி..
பலராம செட்டியார் ரெண்டாவது மகன் ஆனந்தம் செட்டியாருக்கு சுவீகார புத்திரனாக ஏற்கப்பட்டு அவன் குபேரனாக ஆனதை எழுதவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...