Sunday, March 14, 2021

IRATTAI PULAVARGAL


         தமிழ்க்  களஞ்சியம்  --  நங்கநல்லூர்  J K  SIVAN 



இரட்டைப்  புலவர்களில் முடவர்  முதுசூரியர்,  அவரை  குருடரான  இளஞ்சூரியர் தோளில்  சுமந்து எங்கும்  செல்வார்கள்.  ஒருவர்  ரெண்டடி பாடுவார், மற்றவர் மீதி ரெண்டடி பாடி  முடிப்பார். ஒவ்வொரு ஊராக சென்று  ஆலய தரிசனம் செய்வார்கள்.  ஸ்தலங்கள்  ஸ்வாமிகள் மேல் பாடுவார்கள்,   பிரபுக்கள்,  குறுநில மன்னர்களைச்  சென்று  அவர்கள் சபையில் பாடி ப் பரிசு பெறுவார்கள்.    இரட்டைப் புலவர்கள்  பாடல்கள்  தமிழ்க்  களஞ்சியத்தில் விலையில்லா மாணிக்கங்கள்.

இவர்கள் வாழ்ந்த காலத்தில் தான்   ஆசுகவி, சிலேடைக் கவிகளில் வல்லவரான காளமேகப் புலவரும்  வாழ்ந்தவர்.  சிலேடைக்  கவிதை  என்றால்  ஒரு வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் இருக்கும்படியான  பாடல்கள்.
காளமேகப் புலவர்  அப்படிப்  பாடுவதில்  ப்ரஸித்தமானவர்.

ஒருமுறை  காரைக்கால்  அருகே  திருமலைராயன் பட்டினத்தை  ஆண்ட  மன்னன்  திருமலைராயன்  கவிஞர்கள், புலவர்களை   எல்லாம்  அழைத்து  ஒரு போட்டி வைத்தான்.  இந்தச்  சந்தர்ப்பத்தில் காளமேகம் வருவார், அவரை  எப்படியாவது  மடக்கித்  திணற அடிக்கும்படி கேள்வி கேட்டு பாட வைக்கவேண்டும். அவர் திணறி  பாடமுடியாமல் தலை குனிந்து நிற்க,  அவர் பெருமையைக் குலைக்கவேண்டும் என்று சில  புலவர்கள்  திட்டமிட்டார்கள். 

சபையில் எல்லா புலவர்களும் அமர்ந்திருக்க  திட்டமிட்டபடி, ஒரு  புலவர் காளமேகத்தைப் பார்த்து   கேள்வி கேட்கிறார். 

 "நீர் என்ன பெரிய கொம்பனா? நான்  சொல்லும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு  முருகனை பற்றி ஒரு பாடல் பாட முடியுமா?

''ஆஹா   இறைவன் அருளால்  முயற்சிக்கிறேன். என்ன வார்த்தைகள் என்று சொல்லுங்கள்''

''செருப்பு என்று ஆரம்பிக்க வேண்டும். விளக்குமாறு என்று முடிய வேண்டும்" 
இதைக்கேட்டு,  சபையே ஸ்தம்பித்து விட்டது. தமிழர்  தெய்வமான  முருகனைப் பாடும்போது  செருப்பு  விளக்குமாறு என்று எப்படி  வார்த்தைகளை  உபயோகிக்க  முடியும்  காளமேகம் வகையாக  சிக்கிக் கொண்டார்,  தவிக்கட்டும் என்று எண்ணம் அந்த புலவருக்கு.  பார்  உன்னை எப்படி  மடக்கி விட்டேன் என்ற பெருமிதத்தில் அவர் சிரித்தார்.  

'ஆஹா,  பாடுகிறேன் '' என்கிறார் காளமேகம்.   அடுத்த  கணமே 
பாட ஆரம்பித்தார்.

" செருப்புக்கு வீரரைச் சென்றுஉழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல --மருப்புக்கு
தண்தேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்கு மாறே !"

அர்த்தம்:  
'செரு  என்றால் யுத்தகளம் என்று ஒரு அர்த்தம் . செரு  புக்கு  என்றால்  போரில் சென்று,எதிரிப்படை வீரர்களைத் துன்பப்படுத்தும் , மலைக்குத் தலைவனான வேலேந்திய முருகனை நான் அடைய , தாமரையில் இருக்கும் வண்டே நீ வழி காட்டு"   விளக்கு  என்றால்   புரியும்படியாக சொல் என்று அர்த்தம். மாறு  என்பது அசைச்சொல். கவிதைகளில் வரும்.  அப்புறம் என்ன  திருமலைராயன் கவி காளமேகத்துக்கு நிறைய பரிசுகள் கொடுத்தான். மற்ற கவிஞர்கள் சாம்பார் சாதம் சாப்பிட்டுவிட்டு திரும்பினார்கள்.

இரட்டை புலவர்கள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேனே .  அவர்கள்  ஒரு சமயம்   திருவாரூர் சென்றபோது   கோவில் சுவற்றில்  கரித்துண்டால்   தலத்தில் இருந்தபோது, இரட்டை புலவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பாடலின்  முதல்  ரெண்டடியை  எழுதினார்கள். அந்த  ரெண்டு வரிகள்:

" நாணென்றால் நஞ்சிருக்கும்; நற்சாபம் கற்சாபம்;
பாணந்தான்...... ‍‍‍
அடுத்தவர்  மீதியை  எழுத முடியாமல்  அவசரமாக  அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்று சென்றுவிட்டார்கள்.  சில  காலம் சென்று அந்த கோவிலுக்கு மீண்டும் வந்தபோது  மீதி ரெண்டு அடியை யாரோ  எழுதி முடித்திருந்தார்கள்.   அருகே  சென்று  பார்த்தால்  கீழே காளமேகம் என்று பெயர்  பார்த்து மகிழ்ந்தார்கள்.
அந்தப்பக்கம்  காளமேகப்புலவர்  வந்திருக்கிறார்.  அவர்கண்ணில் முதல்  ரெண்டடி பட்டு அது முடியாமல் இருந்தது அவரை  முடிக்க தூண்டியது.    காளமேகம்   எழுதி முடித்த  மீதி ரெண்டு வரிகள்:
 
........மண்தின்ற பாணமே - தாணுவே
சீராருர் மேவும் சிவனே நீர் எப்படியோ
நேரார் புரம்எரித்த நேர்'.

அர்த்தம்:   
சிவபெருமான் முப்புரங்களை எரித்த போது பூமியைத் தேராகவும், சந்திர சூரியரைச் சக்கரங்களாகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் மண்ணை உண்ட கண்ணனை
(திருமாலை) அம்பாகவும் உபயோகித்தார் என்பது புராணம்.  அதை  கவனத்தில் கொண்டு  இரட்டையர்கள்  துவங்கியதை  அற்புதமாக சொல் நயத்தோடு   திறம்பட பாடினார் காளமேகம்.

'நாகப்பாம்பிடம்  விஷம் இருக்கும்.  நஞ்சு  என்றாலே நைந்து போவது என்று ஒரு அர்த்தம்.  நாண்  என்றால் வில்லின் கயிறு.  நல்ல வில்.   கல்லால்  ஆனது  மண் தின்று என்னால்  மக்கிப்போனது.   இப்படிப்பட்ட  வில்லை சிவ தநுஸுவை கையில் வைத்துக் கொண்டு திருவாரூரா,   சிவா, நீ எப்படியப்பா  திரிபுரத்தை  எரித்தாய்? என்று கேட்பது போல் கவிதை  முடிகிறது.

ஒரேகாலத்தில் வாழ்ந்தாலும்  ஒருவரை ஒருவர்  சந்திப்பது இயலாத காரியம்.  போக்குவரத்து கிடையாது. தொடர்பு கொள்ள வழியில்லை.  அப்படியும்  ஒரு ஊரில் காளமேகம் இருக்கிறார் என்று அறிந்து இரட்டைப் புலவர்கள் அங்கே சென்றபோது  அதிர்ச்சி.  காளமேகம் மரணம் அடைந்து அவரது உடல்  சிதையில் எரிந்து கொண்டிருந்தது.  கண்ணீர் மல்க  இரட்டையர்கள் பாடுகிறார்கள்:

''ஆசு கவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ் காள மேகமே! - பூசுரா!
விண்கொண்ட செந்தழலிலே வேகுதே ஐயையோ!
மண்தின்ற பாணம் என்ற வாய்.''

என்னரும் கவிஞரே, காளமேகமே ,  எங்கள்  பாடலை '' மண் தின்ற  பாணமே  ''  என்று  முடித்த  ஆசுகவியே, , உமது சக்தி வாய்ந்த  வாயை  வெந்தழல்   எரிக்கிறதே''

முடிந்தபோது  இன்னும் சொல்வேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...