Thursday, December 27, 2012

KRISHNA STORY 54 உடலும் ஆத்மாவும்



குட்டி   கதை 54       உடலும்  ஆத்மாவும் 

"ருக்மணி  ஒரு  வேலை  எனக்காக  செய்கிறாயா ?"  என்றான் கிருஷ்ணன்.
"என் பிராண நாதா  அது  என்  பாக்கியம், சொல்லுங்கள்"
 “இதோ  அந்த  யமுனை  நதியின்  அக்கரையில்  ஒரு  ஆஸ்ரமத்தில்  துர்வாச முனிவர்  வந்து தங்கியிருக்கிறார் "அவருக்கு  இன்று ஒரு  சிறந்த  விருந்து அளிக்க விரும்புகிறேன்.  உடனே தயார் செய்து நீயே  அதை கொண்டுபோய் அவருக்கு  பரிமாருகிறாயா?"
"உடனே செய்கிறேன்”
ருக்மணி  அறுசுவை உண்டி  தயாரித்து  நிறைய எடுத்துகொண்டு  யமுனை நதியை அணுகினாள். வெள்ளம் கரை புரண்டோடியது  எப்படி கடப்பது?  படகு ஒன்றுமே இல்லையே?  
" கிருஷ்ணா  நான் எப்படி அக்கரை போவது ?"     
",   அப்படியா நீ  யமுனையிடம் போய் "நித்ய  பிரம்மச்சாரி" உன்னை வழி  விடச்சொன்னார்" என்று சொல்." என்றான் கிருஷ்ணன் 
" யார் அந்த  நித்யப்ரம்மசாரி?"
"ஏன்,  நான் தான்!."
ருக்மணி மனதுக்குள் சிரித்தாள் தன்னையும் சேர்த்து  எட்டு  மனைவிகள்  கொண்ட கிருஷ்ணனா நித்ய பிரம்மச்சாரி!,  என்ன வேடிக்கை.  பரவாயில்லை,  கிருஷ்ணன் சொன்னதை செய்வது  என் கடமை"  யமுனையிடம் சொன்னவுடன் உடனே  வழிகிடைத்தது  அக்கரை  போனாள்.  ஆஸ்ரமத்தில் காத்து கொண்டிருந்த  துர்வாச  முனிவருக்கு அறுசுவை உண்டியை திருப்தியாக படைத்தாள். திரும்பி பார்த்த போது  யமுனை  பெரு வெள்ளத்துடன்  ஓடுவதை கண்டு  தயங்கினாள்.
"என்ன யோசிக்கிறாய்  ருக்மணி?"  என்றார்  துர்வாசர்.
"சுவாமி வெள்ளம் எப்போது வடிந்து எப்போது நான்  திரும்புவது?"   போய் யமுனையிடம்  " நித்ய உபவாசி கேட்கிறார்  வழி விடு"  என்று சொல்.  இப்போது தான்  மூக்கு பிடிக்க  வயிறு வெடிக்க  விருந்து சாப்பிட்ட இவரா  நித்ய உபவாசி??   வாய் திறக்காமல் சொன்னபடியே செய்தாள். அவர் பெரிய  கோபக்கார முனிவராச்சே. யமுனை உடனே வழிவிட்டாள்.  
கிருஷ்ணனிடம்  விஷயத்தை சொல்லும் போது அவளுக்கு  மனதில் ஒரே  குமைச்சல்,  என்ன  இது,  ஒருவர்  நித்ய பிரமச்சாரியாம் ஒருவர் நித்ய  உபவாசம் இருப்பவராம்! சம்திங்  ராங் என்று  யோசிக்கவே, "ருக்மணி, உனது மனதில் ஓடும்  எண்ணம் என்ன என்று எனக்கு தெரியும்  நானே  விளக்குகிறேன் உனக்கு. நீ பார்க்கும்   இந்த உடல் வேறு, உள்ளே இருக்கும்  நான்  வேறு,  துர்வாசர் உடலில் வாசம் செய்யும்  ஆத்மாவும் அவ்வாறே.  உடல் சம்பந்தப்பட்ட  எந்த ஆசை, பாசம், உணர்ச்சி, காலம், நேரம், உணவு,  உறவு, வேண்டியது, வேண்டாதது செய்யும் செயல் ஆத்மாவாகிய  எங்களுக்கு  கிடையாது.  எனவே  நீங்கள் நினைப்பது போல்  அல்லாமல்  நான் நித்ய  பிரம்மச்சாரி  துர்வாசர்  நித்ய உபவாசி. புரிகிறதா".  புரிகிற பக்குவம்  வந்தால் உனக்கு  இது விளங்கும்"    என்றான் கிருஷ்ணன்.  

Wednesday, December 26, 2012

krishna story 53 தூய பக்தி




குட்டிகதை 53          தூய பக்தி 

ஒரு  தடவை துக்காரம்   பண்டரிநாதனுக்கு ஒரு  லெட்டர் எழுதி   அது  பண்டரிபுரம்  போகும் பக்தர்கள்  மூலமாக கொடுத்து அனுப்பப்பட்டது.  அந்த பக்தர்  நேரே  பாண்டுரங்கன் ஒரு  செங்கலில் நின்று காட்சியளிப்பது  கண்டு சேவித்து வருத்ததுடன்  சொன்னார்
பாண்டுரங்கா,   பாவம், துக்காரம்   ரொம்ப உடம்பு  சரியில்லாமல்  இருப்பதால் நடந்து வந்து  உன்னை பார்க்க முடியவில்லை என்று வருத்தத்துடன்   உனக்கு  ஒரு  கடிதம் எழுதியுள்ளார்  நான்  அதை படிக்கவா --- தேவையே இல்லை ,உனக்குதான் அதில் என்ன  எழுதியிருக்கிறார் என்றே தெரியுமே-- என்று  அந்த  கடிதத்தை ரங்கனின் பாதத்தில் வைத்தார்.    
"ருக்மணி, நம்  துக்கா, ரொம்ப நோய்வாய்பட்டு  நம்மை பார்க்க  வரமுடியவில்லை என்று   விசனத்தோடு எழுதியதை பார்"
'நாதா,   நாமே சென்று அவரைப்   பார்த்து வருவோமே" என்றாள்  ருக்மணி. 
"நீ சொல்வது சரி,  ஆனால்   இங்கு நம்மை காண  வரும் பக்தர்கள்  எமாற்றமடைவார்களே,  நாம்  நம்   கருடனை அனுப்பி அவரை இங்கு  கொண்டுவர செய்வோம்.  என்று   துகாராமுக்கு ஒரு  பதில்  கடிதம்  எழுதினான்  விட்டலன் -  " அன்பு துக்கா, உன்னை  பார்க்காமல் எந்நாளும் இருக்க முடியவில்லை. கருடனை இந்த கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன்  அவன் மீது  ஆரோகணித்து  உடனே புறப்பட்டு வா. மற்றவை நேரில்-  உன்  பாண்டுரங்கன்"

தான்  போகமுடியாததால் தெருவில் பண்டரிபுரம் போகும்  பக்தர்களையாவது பார்ப்போமே என்று  வாசலில்  படுத்திருந்தார் துக்காராம். அவர் முன் நின்று கருடன் "விட்டலன் உங்களை  கையேடு அழைத்து வரச்சொன்னார். இதோ கடிதம்"  என்ற போது 
' ஐயோ, இது அபசாரம். நீங்கள்  நாராயணனை  தாங்கி செல்பவர், நானோ அவர் காலணி யிலிருந்து  விழும் தூசிக்கும் கீழானவன்  உங்கள்  மீது  ஏறி உட்காருவதா?   தங்கத்தால்  செய்தாலும்  செருப்புக்கு  இடம் காலின் கீழ் தானே, தலையில் அல்லவே!"  அவரையே  முடிந்தால் வரசொல்லுங்களேன்"  என்றார்  துக்காராம் 
கருடனிடம் செய்தி அறிந்த  விட்டலன் "  வா  ருக்மணி  நாமே  செல்வோம்"
பண்டரிபுரம் செல்வோர் வருவோரையே  ஏக்கமுடன் பார்த்திருந்த போது ஒருநாள்  கருடன் சர்வாலங்காரமுடன்  ருக்மணியோடு விட்டலனை துக்கா ராம் வீட்டுக்கு முன் இறக்கியவுடன் கிருஷ்ணன்  ஓடோடி வந்து துக்காராமை மார்போடு அணைத்து கொண்டான்.    பக்தனும்  பகவானும் ஒருவரையொருவர்   மனமார தழுவினர்.  

 இதுவல்லவோ  இணையில்லாத பக்தி பரவசம் 
  

moral stories 64 கடத்தல் திருமணம்




குட்டி கதை 64             கடத்தல்  திருமணம் 

சின்ன குழந்தையாக  இருந்தபோதே நிறைய  முனிவர்கள்,  ரிஷிகள்,ஏன், நாரதர் கூட பீஷ்மக ராஜாவின் அரண்மனைக்கு  வந்த போதெல்லாம்  சொன்னதென்ன?
"இந்த  குட்டி கிருஷ்ணனுக்கு என்று  பிறந்தவள்"  .
"யார் இந்த கிருஷ்ணன்"   என்று  அந்த  சிறுமி  கேட்டாள் 
அவனது கம்பீரம், அழகு,வீரம், சாதுர்யம், பழகும் இனிமை அன்பு, பண்புஇதெல்லாம் கேட்டு தெரிந்த பின் அவள் மனம் மெதுவாக அவனையே நினைத்து தன்னை அவன் மனைவி எனவே  எண்ண வைத்தது. கிருஷ்ணனுக்கும் அவளை பற்றிய சகல விவரங்களும் போய் சேர்ந்தது.  இவளே எனக்கு மனைவியாக தகுந்தவள் என்று கிருஷ்ணனின்  மனம் ஏற்றுகொண்டது.  ஒரே  ஒரு சிக்கல்.  மூத்த அண்ணன்.  தன் ஒரே தங்கை   தனது நண்பனுக்கு தான் என்று முடிவெடுத்தபின் ராஜாவின்  குடும்பம் அதற்கே  கட்டுப்பட்டது.  அந்த  நண்பனோ  கிருஷ்ணனின் பரம வைரி. என்ன செய்ய முடியும்? கல்யாணத்துக்கு நாளும் குறித்தாகிவிட்டது.  அவள் நன்றாக யோசித்த பிறகு மணந்தால் கிருஷ்ணன், அன்றேல், மரணம்.  அதற்குமுன்  இந்த  நிலைமையை கண்ணனுக்கு  எப்படி  சொல்வது?  இந்த  சிறைப் பறவை  வழி தேடியபோது  தான்  அரண்மனைக்கு  சுனந்தனன் என்கிற  ப்ராமணர்  வந்தார்.  
தனியாக அவரை சந்தித்து  கிருஷ்ணனுக்கு  ஒரு  கடிதம் கொடுத்து  எப்படியாவது  கிருஷ்ணனிடம் இதை கொடுத்து விடுங்கள்”  என்றாள்.
"கிருஷ்ணா, புவன சுந்தரா (உலகிலேயே  அழகா), அழகு, வீரம், தைர்யம், அறிவும், சாதுர்யம்  அனைத்திலும் சிறந்தவா!!  உன்னை  நான் பார்த்ததே இல்லை, உன்னை பற்றி கேள்விபட்டே  உன்னையே  என்  கணவனாக  வரித்து விட்டேன். எந்த அளவுக்கு உன் மேல் காதல் இருந்தால் வெட்கத்தை விட்டு அந்நிய புருஷன் உனக்கு இதை எழுதுகிறேன். புரிந்து கொள்உடனே என்னை வந்து காப்பாற்றி அழைத்து செல்.இன்னொருவன் எனக்கு  தாலிக்கயிறு  கட்டு முன்  தூக்கு கயிறு என் கழுத்தை அலங்கரித்து விடும். ஒருவேளை இந்த ஜன்மத்தில் உன்னை  அடைய முடியாவிட்டால்  அடுத்தடுத்த ஜன்மங்களிலாவது உன்னை  அடைய பாடு படுவேன். - -- உனக்காகவே  வாழும் ருக்மிணி"

துவாரகையில்  கிருஷ்ணன் அரண்மனை வீரர்களிடம் சுநந்தன் கிருஷ்ணனை பார்க்க வேண்டும்  என்று சொல்லி காத்திருந்தார்  "உள்ளே  விடு"  என்றான்.  கற்றறிந்த  ஒரு  பிராமணருக்கு உரிய உபசாரங்களை  அளித்தபின்  என்ன விஷயமாக  என்னை பார்க்க வந்தீர்கள் என்று  கிருஷ்ணன் கேட்டதற்கு எல்லா விவரங்களையும் சொன்னார் சுனந்தன்.  அந்த பெண்ணின்  அழகை வர்ணித்தார்.  அவள் கொடுத்த கடிதம் கிருஷ்ணன் கைக்கு வந்தது. புன்முறுவலுடன்  அதை படித்த கிருஷ்ணன்  தக்க வெகுமதியுடன் அவரை அனுப்பி வைத்ததோடல்லாமல்  "அவளை பார்த்து சொல்லுங்கள்,  கடிதம் கிடைத்தது.  தக்க தருணத்தில் வந்து அவளை காப்பாற்றுகிறேன் என்று  அவளிடம் சொல்லுங்கள்". என்று  சேதியும்  சொல்லி அனுப்பினான்.  

குல வழக்க  பிரகாரம் கல்யாணத்திற்கு முதல் நாள் மணப்பெண் தனியாக தோழிகளுடன்  ஊருக்கு  வெளியே  இருந்த  பார்வதி கோவிலில்
பூஜை செய்து பிரசாதம் பெற்றுக்கொள்ள  சென்றாள்.  அங்கு  ஒரு  ரதம் காத்திருந்தது.   மாறு வேடத்தில் கிருஷ்ணன்  அவளை  அங்கு  சந்தித்து அவளை கடத்தி சென்றான்.  ருக்மிணி கிருஷ்ணனுக்கு மனைவியாகவும் த்வாரகையில் ருக்மிணி ராணியும் ஆனாள்.  அவளை
எவன்  தாலி கட்ட  காத்திருந்தானோ  அவன் ஏற்கனவே கிருஷ்ணனின்  ஜன்ம வைரியாக இருந்த பின்னும்,  பொறுத்திருந்து  அவனுக்கு திருந்துவதற்கு கிருஷ்ணன் நிறைய சந்தர்ப்பங்கள்  கொடுத்தான்  வேறுவழியின்றி  கிருஷ்ணனிடம்  அவன்  உயிரிழந்ததை வேறு  ஒரு  குட்டி கதையில்  படிப்போமா??,

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...