Saturday, June 29, 2019

SOLITARY REAPER



காற்றினிலே ஒரு கீதம்.
J K SIVAN

குப்பம்மா வயலில் வேலை செய்பவள். பரம்பரை தொழில் அவளுக்கு. அவள் பிறந்தது ஒரு மரத்தடியில். ராசாத்தி வயலில் வேலை செய்யும் போது நிறை கர்ப்பம். அப்படியும் வேலைக்கு வந்து விட்டாள் . அறுவடை சமயம். கூலி கூட கிடைக்கும். சாப்பாடு போடுவார்கள். அவளுக்கு வயிற்றில் வளரும் சிசுவின் கர்ப்பவாஸ கணக்கு சரியாக தெரியாது. திடீரென்று வலி அதிகமாகி மற்ற பெண்கள் அவளுக்கு பிரசவம் பார்த்தது அந்த மரத்தடி அருகே நாலுபக்கம் துணியை சுற்றி விட்டு தான்.

குப்பம்மா வளர்ந்தது மரத்தடியில் தொங்கிய தூளியில் தான். மரத்தை சுற்றி ஓடி ஆடி தான். குடிசையில் தனியாக யாரிடம் விட்டுவிட்டு வருவது அவளை என்று ராசாத்தி கூடவே கூட்டிக்கொண்டு வருவாள்.

வயலில் வேலை செய்யும்போது பாடுவார்கள். கூட்டமாக தெம்மாங்கு மாதிரி நாட்டுப்பாடல்கள் நிறைய அவர்கள் கை வசம் இருந்தது. கேட்பதற்கு இனிமையாக இருக்கும். கற்பனை சுவாரசியமாக இருக்கும்.
ராகமும் இதுவரை கேட்காததாக இருக்கும். இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை.

ராமு கவிராயர் நாட்டுப்பாடல்களை விரும்பி கேட்பவர் எழுதுபவர். அவர் ஒரு வயல் கவிஞர். அவர் எழுத்துக்கள் வயல், கிராமம், ஏரி, குளம், கிணறு, ஏற்றம், வாய்க்கால், கால்வாய், இதுகளை பற்றியே மையம் கொண்டிருக்கும்.

ஒருநாள் காலை வழக்கம்போல் விடியலில் எழுந்து கிராம ஒற்றையடிப்பாதையில் நடந்து ஒரு வரப்பருகே செல்லும்போது குப்பம்மா தனியாக தூரத்தில் ஒரு வயலில் சோளம் அறுவடை செய்கிறாள். பாடிக்கொண்டே வேலை செய்கிறாள். காற்றில் அவளது இனிமையான குரல் தேனாக செவியில் பாய் கிறது. வார்த்தைகள் ஸ்பஷ்டமாக காதில் விழவில்லை. ஆனால் இனிமையான மனதை கிறங்க செய்யும் இசை . அதில் சோக இழை சேர்ந்து ஒலித்தது. மனதை வருடியது.
அது மானம்பார்த்த பூமி. அதிக மழை கிடையாது. பட்டா பட்டா பாக்யம் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட வறண்ட பூமி. மலையை ஒட்டி சரிவாக இருந்த வயல் என்பதால் எப்போதாவது மழை வந்தால் நிச்சயம் வயலுக்கு நீர் உண்டு.

கையில் கருக்கு அருவாள். கம்யூனிஸ்ட்கள் கொடியில் இருக்குமே சுத்தியோடு ஒரு கத்தி. அது மாதிரி. குப்பம்மாவின் பாட்டில் நெஞ்சில் இருந்த ஒரு கீறல், ஆறாத புண்ணின் சுமையோடு காற்றில் எதிரொலித்தது. எந்த குயிலின் இசையும் அதோடு போட்டி போட முடியாது. என்ன இனிமையான குரல்.
தூரத்தில் ஏதாவது கடல் இருந்தால் கூட அவள் குரலோசையை கேட்க அலைகளை நிறுத்தி காது கொடுத்து கேட்கும்.

என்ன பாடுகிறாள் ? அதில் ஏன் சோகம்? யார் சொல்வார்கள் அந்த ரகசியத்தை? எங்கோ எப்போதோ அவள் வாழ்க்கையில் ஒரு துயர சம்பவம் நடந்து அது மாறாத சோக நினைவை விட்டு விட்டு சென்றுவிட்டதா? ஏதோ ஒரு நாட்டு யுத்தத்தில், எங்கோ ஒரு பட்டாளத்தில் ஏதாவது ராஜா தோற்றுப்போய் அழுத சம்பவமா? கடந்த கால துயர சரித்திரமா அல்லது எதிர் காலம் பற்றிய பயமா? ஒரே புதிராக இருக்கிறதே.

கவிஞன் மேலே நடக்காமல் அங்கேயே சிலையானான். காற்றில் சோக கீதம் சுழன்று சுழன்று அவனை கட்டிப்போட்டது. அவள் கையில் இருந்தஅரிவாள் இயந்திரம் போல் கதிர்களை அறுத்துத்தள்ளிக் கொண்டிருந்தது. வேரோடு கற்றையாக பிடுங்கியது. கவிஞன் அந்த வயல் இருந்த பக்கமாக மலை சரிவில் ஏறினான். நடையை தொடர்ந்தான். வெகு தூரம் வெகுநேரம் அவன் பாதையில் அந்த சோக கீதம் தொடர்ந்தது. அதன் பிடியில் அவன் களித்தானா? கலங்கினானா? அவன் வெகு தூரம் சென்றுவிட்டான். அந்த கீதம் மெல்லிதாக குறைந்து குறைந்து காற்றோடு கலந்துவிட்டது. மௌனம். அவன் கவிதை வடித்தான். அதன் சாராம்சம்:


''அதோ பார் அவளை, தனியாளாய், வயலில், ஒரு நாட்டுப்புறத்து இளம்பெண்.
அறுவடை செய்து கொண்டே பாடுகிறாளே . நில், அல்லது அவளது கவனத்தை கவராமல் மெதுவாக நட. ஆஹா! அவள் எதையும் லக்ஷியம் செய்யாமல் அறுத்து அறுத்து கற்றைகளாக பயிரை கட்டுகிறாளே தெரிகிறதா? தனக்கு தானே பாடுகிறாள். என்ன பாட்டு, என்ன வார்த்தை. ஒன்றுமே காதில் விழவில்லை. ஆனால் அதில் இனம்புரியாத ஒரு சோகம் இழையோடி இருக்கிறதே. பிரம்மாண்டமான அந்த அமானுஷ்ய பிரதேசத்தில் அவளது இசை காற்றில் மிதக்கிறதே. கேள்.

எந்த குயிலும் அவளோடு போட்டிபோட முடியாது. என்ன கோர்வையாக இசை வெள்ளமாக பாய்கிறது.
யாத்ரீகர்கள் சுகம் பெற இது ஒரு அதிசயம். அரேபியாவில் பாலைவனத்தை கடக்கும்போது பாடுவார்களாமே அது போலவா? வார்த்தை தெரியாவிட்டால் என்ன நாதமும் கீதமும் போதுமே.
கடல் கூட கொந்தளிக்காமல் அமைதியுற்று கேட்கச் செய்யும் மந்திர இசை.
என்ன பாடுகிறாள் என்று யாராவது சொல்வீர்களா? ஏதோ பழங்கதையா, ராஜா ராணி சோக வரலாறா?
எல்லோருக்கும் இயற்கையாக ஏதோ ஒரு சோகம் இருக்குமே அதில் ஒன்றா, நெஞ்சின் வலியின் வெளிப்பாடா? தொடர்ந்து மேலும் மேலும் அலை அலையாக எழும்பும் அளவற்ற சோகச் சுருளா?

அவள் எதையோ பாடிவிட்டு போகட்டுமே. மீளாத்துயரத்தில் ஓயாத கதறலா? பாடிக்கொண்டே வேலை யில் ஈடுபடுகிறாள் . அவளது அரிவாள் அவள் சோக கீதத்துக்கு நாட்டியமாடுபவது போல் ஆடி அசைந்து வேகமாக கதிர்களை, செடிகளை வெட்டித்தள்ளுகிறதே. போதும் கேட்டது என்று கால் மேலே நடந்தாலும் காது அந்த இசையை விடாமல் உன்னிப்பாய் கேட்டுக்கொண்டு வருகிறது. நான் மலைமேல் மெதுவாக ஏறுகிறேன். என்னோடு அந்த இசையும் தொடர்ந்து வருகிறது. வெகுதூரம், தொலை தூரம் என்னை துரத்திக்கொண்டே வந்த அற்புத அதிசய சோக கீதம்.......இப்போது வெளியே கேட்கவில்லை. மனதில் ரீங்காரம் இடுகிறது. ''

நான் மேலே எழுதியது ஆங்கிலத்தில் ஆற்றங்கரை, ஏரிக்கரை கவிஞன் என்று பெயர் பெற்ற வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் 225 வருஷங்களுக்கு முன்பு எழுதிய ஒரு அருமையானகீழ்க்கண்ட பாடல். அதன் பெயர் THE SOLITARY REAPER. அதை தமிழ்படுத்தி குப்பம்மாவாக்கி விட்டேன்.

Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.

No Nightingale did ever chaunt
More welcome notes to weary bands
Of travellers in some shady haunt,
Among Arabian sands:
A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.

Will no one tell me what she sings?--
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago:
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again

Whate'er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;--
I listened, motionless and still;
And, as I mounted up the hill,
The music in my heart I bore,
Long after it was heard no more.

SIVAVAKKIYAR



சித்தர்கள், மஹான்கள்,          J K  SIVAN
சிவவாக்கியர்.
      

             சில பொன்னெழுத்துக்கள் 

சிவ வாக்கியர் எழுதும் ஆழ்ந்த கருத்துக்கள், தத்துவம்  மிக்க ஆனால்  எளிய தமிழ் நாலு வரிப்பாடல்கள் இணையற்றவை என்று அடிக்கடி சொல்கிறேனே. எத்தனைபேர்  அவரை தேடி படிக்கிறீர்கள்?
என்னால் முடிந்தவரை அவ்வப்போது    மூன்று நான்கு   தேர்ந்தெடுத்த பாடல்கள் தந்து கொண்டு இருக்கிறேன். இதை ரசித்தால்  அவர் திறமை புரியுமே.  ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு  பதம் என்பார்களே அது மாதிரி.

''ஸார்  நான் நாலு வேதமும் படிச்சவன் என்று மார் தட்டிக் கொள்வோர்  உண்டு. அப்படிப்  படித்தவர்  இந்த சுப்ரமணிய  சர்மா  என்று பிறர் தன்னை பற்றி  சொல்வதில் மகிழ்வோர்  ஏராளம். தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையும்  வளரும்.  அந்த வேதத்தின் உட்பொருளான பிரம்மத்தை, பரம்பொருளை,  அறிந்தவர் எத்தனை பேர்?  ஞானத்தை தரும் பரமனின் திருவடிகளை அதில் உணர்ந்து வணங்குபவர் எத்தனை பேர்? வேதம் என்ற எழுத்தும் அதை மனதில் நெட்டுரு போட்ட தும் மட்டுமே அறிந்த முட்டாள்களே, உங்கள் செயல் எது போல தெரியுமா?   பால் தெரிகிறது, அதை பார்க்கும்போதெல்லாம் அதனுள் தான் நெய்  மறைந்திருக்கிறது என்ற எண்ணம், உண்மை மனதில் தோன்றாதவர்களைப்  போல. 

மறையில் மறைந்திருக்கும் மாயவனை அறிந்து போற்றி வணங்கவேண்டும்.  தனது நெஞ்சிலே நஞ்ஜை நிறுத்திக் கொண்ட  நீல கண்டன் நமது நெஞ்சிலேயும் உள்ளானே. அந்த ஹாலஹால விஷமுண்ட  காலகாலனை அறவே மறந்துவிட்டு, ஐயோ காலன் வந்துவிடுவான்,ஆயுளை பறித்துக்கொண்டு போய்விடுவான் என்று சொல்கிறீர்களே.  கால சம்ஹார மூர்த்தியை நினைத்தால்  கனவிலும் காலன்  நெருங்கமாட்டானே,  வேடிக்கையாக இருக்கிறதே.  பாரதி சொன்னானே  ''காலா என்னருகில் வா உன்னை என் காலால் உதைக்கிறேன்''  என்று, அந்த  தைர்யம் வேண்டாமா நமக்கு? என்கிறார்  சிவ வாக்கியர்.  இப்போது அந்த பாடலை படித்துப் பாருங்கள் புரிகிறதா என்று.  புரியவில்லை என்றால் தவறு சிவனுடையது. சிவவாக்கியருடையது அல்ல.                                   
                                                               
''நாலுவேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே

கொஞ்சம் உயர்ந்த யோக தத்வம்  சொல்கிறார் சிவவாக்கியர்.  பிறக்கும்போதிருந்து  உள்ளே விளங்குகின்ற நாடி, பிராணனை, தூங்குகின்ற பாம்பாக சொல்வார்களே  அந்த குண்டலினியை பிராணாயாமத்தால் மூலாதார  சக்கரத்திலிருந்து மெள்ள மேலே எழுப்பி உச்சந்தலை  கபாலத்தில் உள்ள சஹஸ்ராரம் வரை கொண்டு  தாமரை தேன் துளிகளை, அம்ருதத்தை ருசிப்பவன். அப்படிப்பட்ட யோக சக்தி கொண்ட யோகி, வயதற்றவன், விருத்தாப்பியம்   பாலகன், அவன்  தேகம் --  பரமாச்சார்யரை   பார்த்திருக்கிறீர்களா?  --,அவர் தேகத்தை போல  தங்கமாக ஜொலிக்கும். தவயோகியாக பரமேஸ்வரனை ''பொன்னார் மேனியனே'' என்று  மனக்கண்ணால் கண்டு பாடியது தெரியாதா?   இது கற்பனை அல்ல. சர்வ சத்தியம், சத்தியம் சத்தியம் -  அந்த சிவன் மேல், பார்வதிமேல் சத்தியம் என்கிறார்  சிவவாக்கியர்.                                                                                                                                                                                                                                                                   ''உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம்உண்மையே.''

கடைசியாக நமது லௌகீக வாழ்க்கை  பற்றிய  ஒரு பாடலும் தருகிறேன்.  அப்போதே  தெரியும் சிவவாக்கியருக்கு நமது தினத்தந்தி, தமிழ் தினசரி பேப்பர்கள்  படிக்காமலேயே.  தான் காதலித்த, கைப்பிடித்த அழகியை மற்றொருவன் சுற்றி சுற்றி  வந்தால்  எவ்வளவு கோபத்தோடு அவனை வெட்டி வீழ்த்தி விடுகிறான்...இது தானே  வாட்சாப், யூட்யூபில் வரும் பட செய்திகள். 

'' அடே  மானுடா  ஒருநாள் நீதி தவறா  நடுவன் , யமன் வந்து  ''வா'',   என்று அந்த பெண்ணை கூட்டிச்செல்வானே  அப்போது எப்படி தடுப்பாய்? அவனை வெட்டுவாயா? எவ்வளவு அழகானதாக இருந்தாலும் ஒருநாள்  இந்த,  நல்ல,   நாலு பேர் பார்த்து மயங்கிய உடல்,  அப்படி காலன் வந்து கைப்பற்றிக் கொண்டு போகும்போது, நாற்றமெடுக்க தொடங்குமே , அதை உடனே இடுகாடு, சுடுகாடு  வரை தூக்கிக்
கொண்டு செல்லவேண்டும்.  ''இந்தாப்பா   இது இனிமேல் உனக்கு, இதை கொளுத்து , புதைத்துவிடு''  என்று வெட்டியானிடம், இப்போது அந்த ''ஸார்'' இடம்  கொடுத்து .அதற்கு பணமும் கட்டவேண்டும்.     சிவவாக்கியர் எல்லாம் தெரிந்தவராக இருக்கிறார்.                                                                                      
''வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன்நத்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும்என்பனே
நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்தநல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகை  கொடுப்பரே'' . 

Friday, June 28, 2019

 ஐந்தாம் வேதம்  J K  SIVAN 
  நான்காம்நாள் யுத்தம் 


                  கௌரவ சேனையின் நஷ்டம்


''சஞ்சயா, இதுவரை  நான்கு நாள்  ஆகிவிட்டது. இந்த யுத்தம் இன்னுமா முடிவு பெறவில்லை? என் மகன் துரியோதனன் அவனது  பெரும்படையால் இன்னுமா பாண்டவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை?''  என திருதராஷ்டிரன் அங்கலாய்த்தது  நான்காம் நாள் காலை அன்று .

கௌரவ சைன்யத்தில்,  அன்று காலை  பீஷ்மர்  எல்லோரையும் ஊக்குவித்து  சேனையில்   எங்கெங்கு எந்த வீரர்கள்  இருக்கவேண்டும்  என்று  தீர்மானித்தார்.  படையின் முன்னணியில் தானே  நின்றார். நாலா பக்கமும்  துர்மர்ஷணன் , சித்திரசேனன், துரோணர்,  துர்யோதனன், அவன் சகோதரர்கள், ஜெயத்ரதன்,  ஆகியோர்  தத்தம் பொறுப்பில் அவர் கட்டளைப்படி  சேனையை வழி நடத்தினார்கள்.

அரணாக  அவர்களைச் சுற்றி  போர் பழக்கம் செய்விக்கப் பட்ட யானைகள் அணிவகுத்து தயாராக  நின்றன. ஆயுதங்களை எறிவதற்கு அவற்றுக்கு சொல்லிக் கொடுத்திருந்ததால், தீப்பந்தங்களைக்  கூட  அவை  எதிரிகள் மீது வீச உபயோகப்பட்டன.

 பாண்டவ சைன்யத்தில் ஹனுமான் கொடியோடு  அர்ஜுனன் புறப்பட்டான்.  அவனை  எதிர்ப்பதே  முக்ய நோக்கம்  கௌரவ சேனைக்கு என்பது அவனை எதிர்க்க அணிவகுத்த  சேனையின் அமைப்பிலேயே அவன் கண்டு கொண்டு மகிழ்ந்தான்.  இரு கைகளாலும்  அம்பு எய்யும் திறமை வாய்ந்த அர்ஜுனன்  சென்ற இடமெல்லாம் ரத்த ஆறு அவனைப்  பின் தொடர்ந்தது. யமதர்ம ராஜனே  தங்களது  உயிரைப் பறிக்க  எதிரே  வந்து நிற்பது போல்  எதிரிகள் கலங்கினர்
முந்தைய  நாள் கதையே மீண்டும்  தொடர்கிறது. பீஷ்மர் துரோணர் அம்புகளை எளிதில் எதிர்த்து உடைக்கிறான்  அர்ஜுனன். அவனை வெல்ல முடியாமல் திணறுகிறது  கௌரவ சேனை. கௌரவ சேனையின்  எதிர்ப்புகளை தடுப்பதோடு நில்லாமல்  அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டி ருக்கிறான்.

''அரசே,  அஸ்வத்தாமன், பூரிஸ்ரவசோடும், சித்ர சேனன் மற்றும்  இரு  சேனாதிபதிகளோடும்   சூழ்ந்து கொண்டு அபிமன்யுவை தாக்கினார்கள். அவனோ  அஸ்வத்தாமன்  வில்லை உடைத்தான், சல்லியனின் தேர் கவிழ்ந்தது, சக்கரங்கள் உடைபட்டு ஓடின. பூரிஸ்ரவஸ் ரத்த  ஆடை பூண்டிருந்தான். அவன் தேர்க் குதிரைகள் பிய்த்துக்கொண்டு ஓடி விட்டன.

இருபதினாயிரம் த்ரிகர்த்தர்களும்  மத்ஸ்ய சேனையும்  அர்ஜுனனை இப்போது நேரடியாக தாக்கியதை அவன் சர்வ சாதாரணமாக எதிர்த்துக் கொண்டிருந்தான்.  ஒரு பக்கம்  தந்தையும்  ( அர்ஜுனன்) மறு பக்கம்  மகன் (அபிமன்யு) சேர்ந்து தாக்குவது கண் கொள்ளாக் காட்சியானது.

கேகயர்கள்  விலகி ஓடினர். பத்து அம்புகளில்  க்ரிதவர்மனின் தேரோட்டி  மரணமடைந்தான். அவன் தேர் நிலையாக  நின்றது. பீமன்  துரியோதனனையும் அவன் சகோதரர்களையுமே  தேடி  துரத்தினான். அவன் சபதம் நிறைவேற வேண்டாமா?
துருபதன் மகன் திருஷ்ட த்யும்னனோடு கடும் போர் செய்த புரூரவன் மகன்  தமனன் உயிரிழந்தான். வீராவேசமாக போரிட்ட  சாம்யமணி மகனும் திருஷ்ட த்யும்னன் வாளால் தலை இழந்தான்.   பீமன் கதாயுதத்தோடு தன்னை நோக்கி ஓடிவருவதை பார்த்து  துர்யோதனனும் அவன் சகோதரர்களும் அங்கிருந்து விலகி பாதுகாப்பாக  துரோணர் படையின் பின்னால் சென்றனர். விகர்ணன் அங்கே பீமனை எதிர்த்தான்.

'சஞ்ஜயா,   என்னை  எப்போதும் தூக்கமின்றி செய்பவன்  பீமன் ஒருவனே. அவனால்  என்னென்ன ஆபத்துக்கள் என் வம்சத்துக்கு நேரப்போகிறதோ என்ற கவலை  என்னை  பிடுங்கித் தின்கிறது. நீ சொல்லும் விஷயங்கள்  எல்லாமே என் மக்கள் படை கொஞ்சம் கொஞ்சமாக  நாசமாகிறது  என்று தான் இருக்கிறதே ஒழிய  பாண்டவர்களை நம் கௌரவ சேனை அழித்ததாக  இல்லையே.  என் மகன் தோற்றுக்கொண்டே வருவதை என் மனம்  ஏற்க மறுக்கிறதே'' என்று அரற்றினான் திருதராஷ்டிரன்.

சல்லியனுக்கும்  திருஷ்டத்யும்னனுக்கும்  உண்டான மோதலில் அபிமன்யுவும் சேர்ந்து  சேனையை தாக்கினான். சல்லியன்  தேரை இழந்தான். காயமுற்று விலகினான்.
அபிமன்யுவை எதிர்த்து  மகத அரசன் படையோடு போரிட்டு  கடைசியில் உயிரிழந்தான். துர்யோதனன், விகர்ணன்,துச்சாதனன், ஆகியோர் விரைந்தனர். பீமன் இதை பார்த்து விட்டான். துரியோதனனை  கண்டு மகிழ்ந்தான். துரியோதனனை பாதுகாத்து அவன் சகோதரர்கள்  துர்முகன்,   துச்சலன்,
துர்மர்ஷணன்,  சித்ரசேனன் ஆகியோர் தடுத்தனர்.  பத்து வீரர்கள் அபிமன்யுவை  எதிர்ப்பதை  பார்த்த பீமன்  வெகுண்டான்.   துர்யோதனன் த்ரிஷ்டத்யும்னனை  தாக்கினான்.

நகுல சகாதேவர்கள் அதற்குள் துர்யோதனனை தாக்குவதில் சேர்ந்துகொள்ள, பீமன்  துரியோதனை நெருங்கினான்.   பீமனை தடுக்க யானைகள்  விடப்பட்டன.  பீமன் யானைகளை  கொன்றான். அவனது  முரட்டு  பலம்  எதிரிகளை  அஞ்ச செய்தது.
அம்பு மாரி பொழிந்து கௌரவ சேனையை அழித்தார்கள். தன்னை எதிர்த்து ஏவிய மத யானையை ஒரே  பாணத்தில்  கொன்றான்  அபிமன்யு.    கொசுவை வேட்டையாடுவது போல்  பீமன் யானைப்  படையை நிர்மூலமாக்கினான்.  யானைப்படைகளை அழித்த பீமனைக் கொல்ல  ஒரு பெரும்படையை மீண்டும்
 துரியோ
தனன்  ஏவினான்.  

இதை  கவனித்த  சிகண்டி, சகாதேவன் ஆகியோர்  சாத்யகியோடு  பீமபாதுகாக்க சூழ்ந்து கொண்டனர்.

சாத்யகி  பூரிஸ்ரவசை அபாயமாக தாக்குவதை  கண்டு  துர்யோதனனின் சகோதரர்கள் உதவிக்கு வந்தனர். பீமன்  அவர்களை நோக்கி விரைந்தான். ''அரசே உங்கள் மகன் நந்தகன்  பீமனை தாக்கினான்.   பீமனின் மார்பில்  துரியோதனன்  ஈட்டிகளை எறிந்தான்.

''தேரோட்டி,   அதோ  பார், எதிரே துரியோதனனும் அவன் சகோதரர்களும் என்னை  எதிர்க்கின்றனர்.  நான் காத்திருந்த  சந்தர்ப்பம் இது.  தேரை  அவர்களுக்கு  அருகே செலுத்து''  என்று கட்டளையிட்டான் பீமன்.

நந்தகன் வில்லை  பாணங்களால் பீமன்  நொறுக்க அவன் வேறு  வில்லை எடுத்து  தாக்கினான்.பீமன் மார்பில்  ஈட்டி தாக்கியது.    திருதராஷ்டிரா, உனது 14  பிள்ளைகள் சேர்ந்து பீமனை தாக்கினார்கள்.   சல்லியனை எதிர்த்த பீமன் அவனைப்  படுகாயப்படுத்த  அவன் உயிர் தப்பி அங்கிருந்து அகன்றான்.

''அரசே, உன் மகன் சேனாபதி தான் முதலில்  உயிரிழந்தவன், அடுத்து  பீமன், (இவன் வேறு பீமன்.  துர்யோதனன் சகோதரன்),  பீமரதன் , சுஷேணன், வீரவாஹு,  ஜலசந்தன் , உக்ரன், ஆகியோரை  பீமசேனன் கொன்றான்.   பீமனை தடுக்க  பகதத்தன் ஒரு  பெரிய சேனையோடு விரைந்தான்.   கடோத்கஜன்  தந்தைக்கு உதவ ஒரு படையோடு அங்கே வந்து விட்டான்.

''பகதத்தன் பீமனிடம்  அகப்பட்டான். கடோத்கஜன்  மாய ஜாலங்களில்  வல்லவன்.  நிலைமையை உணர்ந்த பீஷ்மர்  அங்கே செல்வோம்''  என்று  துரோணரோடு  விரைந்தார்.

யுதிஷ்டிரன் தலைமையில்  சிகண்டி, திருஷ்டத்யும்னன் துருபதன்  விராடன்   ஆகியோர் பீமனுக்கு உதவ வந்தனர்.  சிகண்டி  பீஷ்மருக்கு குறி வைத்தான்.   இரவு நெருங்கி விட்டது. சூரியன்  அஸ்தமித்து நேரம் ஆகிவிட்டதே.   பீஷ்மர் இனி யுத்தம் தொடர்வதில் பயனில்லை என்று  உணர்ந்து   அன்றைய யுத்தம் இந்த அளவில்  நின்றது.

வெற்றி சங்க நாதத்தோடு  பாண்டவ சேனை அன்றைய வெற்றியில்  களித்தது. அன்றைய மாவீரன் பீமன் என்று எல்லோரும் அறிந்தது தானே.   துரியோதனன்  ஏழு சகோதரர்களை  பீமனிடம் பறிகொடுத்த துக்கத்தோடு  பாசறை திரும்பினான்.

''ஐயோ,  சஞ்சயா,  விதுரன் சொன்னதெல்லாம் நடக்கிறதே. யாராலும் வெல்ல முடியாத  பீஷமரே என் மக்களுக்காக  முன் நின்று போரை நடத்தினாலும் பாண்டவர்களை வெல்ல முடியவில்லையே. என் மக்கள் அழிந்து போகிறார்களே. எத்தனையோ மா வீரர்களும் சேர்ந்தும் அவர்களை வெல்ல முடியவில்லையே.  இது விதியின் செயலே  என் செய்வேன்'' என்று அழுதான் திருதராஷ்டிரன்.

''அரசே  எங்கு  நேர்மை, நீதி  பலம், இருக்கிறதோ  அங்கு வெற்றி நிச்சயம்  தானே. உன் மக்கள் செய்த  துரோகம் அவர்களை இப்போது தின்கிறது. செய்த தவறுக்கு  கூலி கொடுக்கிறார்கள்.  பீஷ்மர், துரோணர் விதுரர், கிருஷ்ணன் , நான் கூட, சொன்னதெல்லாம்  உங்கள்  யார் காதிலும் விழவில்லை. இப்போது மார்பில் அம்பாக பாய்கிறது.   உன் மகன் துரியோதனனும் இதையே தான்   பீஷ்மரிடம் கேட்டான்'' என்றான் சஞ்சயன். 

'' பீஷ்ம பிதாமகரே,  துரோணர், பகதத்தன், சல்லியன், கிருபர், அஸ்வத்தாமன்  நீங்கள் எல்லோரும் மூவுலகில் யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்று  இருந்தும் ஏன்  பாண்டவர்களை வெல்ல முடியவில்லை?  யாரை  அப்படி  மாபெரும் பலமாக  நம்பி அவர்கள்  போர் புரிகிறார்கள் எனக்கு உடனே பதில் சொல்லுங்கள்?'' என்றான் துரியோதனன்.

''இதோ பார்  துரியோதனா, எத்தனையோ முறை தொண்டை கிழிய நான் உனக்கு புத்திமதி சொன்னேன். பாண்டவர்களோடு நட்பு கொண்டால் உனக்கும் உலகுக்கும் நல்லது என்று.  நீ கேட்கவில்லை. அவர்கள் வெல்ல முடியாவர்கள். நாராயணனே அவர்களுக்கு துணை நிற்கிறான். மூவுலகும் போற்றும் மாவீரர்கள். இந்திரன்  வருணன், அக்னி, பிரம்மா, பரமசிவன் அனைவரின்  ஆசியோடும்,  ஆயுதங்களோடும்  பாண்டவர்கள் எதிரே நிற்கும்போது  யார்  அவர்களை வெல்ல முடியும்?'என்றார்  பீஷ்மர்.

இரவு மெதுவாக  நகர்ந்து ஐந்தாம்  நாள் பொழுது புலர்ந்தது. என்ன நடக்குமோ??   

சூர் சாகரம்   J K  SIVAN 
ஸூர்தாஸ்

 
                               ஹரி தர்சனம்

பாலும் கசந்ததடி, பஞ்சணை உறுத்துதடி, தூக்கம் மறைந்ததடி, கண்ணீர் பார்வையை  மறைத்ததடி, நெஞ்சம் பிளந்ததடி, இதயம் வெடித்ததடி, வாழ்க்கை வெறுத்ததடி, இன்னும் இது போன்ற எத்தனையோ வருத்தங்கள். யாருக்கு? ஒருவராக இருந்தால் அடையாளம் பெயர் சொல்லலாம். ஊரே இப்படி எனும்போது?   ஆம், பிருந்தாவனத்திலிருந்த அனைத்து கோபியர் நிலையும் இதே என்றபோது எப்படி சொல்வது?

ஏன் என்ற கேள்விக்கு வேண்டுமானால் பதில் சொல்கிறேன்.

அந்த ஊரின் ஜோதி வெளியேறிவிட்டது. மகிழ்ச்சி மதுராபுரி  நகருக்கு குடி பெயர்ந்தது. ஆனந்தம்  அடுத்த ஊருக்கு போகிறானே.

கோகுலத்தை விட்டு  பிருந்தாவனத்தை விட்டு,   கண்ணன் சென்றுவிட்டானே. கண்களே, இன்னுமொரு முறை அவனை கண்டு ஆனந்தியுங்கள். அவன் இதோ இன்னும் சற்று நேரத்தில் மறைந்து விடுவான்.
அவன் தாமரைக் கண்களை கண்டு மகிழ்ந்த எங்கள் கண்கள்   இனி  பனித்து , துயரத்தை தான் ஒவ்வொருநாளும் வெளிப்படுத்தும்.

எங்கே அவன்? அழகிய கரு நீல நெற்றியில் சிவந்த சிந்தூரத்திலகன். கண் முன்னாலேயே நிற்கிறதே அவன் கருநீல கழுத்தில் ஜொலிக்கும் வெண்ணிற முத்து மாலைகள்.     அவன பேசும்போதெல்லாம் எவ்வளவு அழகாக அவை அசையும்!   இத்தனை நாள் எங்களை மகிழ்வித்த அந்த தெய்வத்தை இனி பிருந்தாவனத்தில் எங்கே பார்க்கமுடியும்?

எங்கள் அனைவரையும் அன்பினாலே பிணைத்து இன்பமூட்டிய அவன் எங்கள் கயிற்றில் சுறுக்கை மாட்டி விட்டதை போல் அல்லவா இருக்கிறது இப்போது?

உள்ளே இத்தனை உணர்ச்சிகளை கழுத்து வரைக்கும் கொண்டுள்ள கோபியர் வெளியே துன்பத்தை துயரத்தை காட்டிக்  கொள்ளாமல் அன்றாட வேலைகளைச் செய்து கொண்டு பேசாமல் இருக்கிறார்களே, அடடா,   இது என்ன நிலைமை என்கிறார் சூர்தாஸ். அவர்கள் சிரித்து சாதாரணமாக இருப்பதாக காட்டிக்  கொண்டாலும் உள்ளே ஒரு தாங்கமுடியாத எரிமலையை அல்லவோ சுமக்கிறார்கள்!

கிருஷ்ணா, நீ இன்றி காசியே கூட அல்லவோ அமைதி இழந்து விட்டதாமே   அப்படி இருக்க  பிருந்தாவனத்தில் எங்கள் நிலையை சொல்லவா வேண்டும்''என்று கோபியர்கள் கூறுவதை கேட்டுவிட்டு சொல்கிறார் சூர் தாஸ் .

Hari darshan ki pyasi akhiyaan hari darshan ki pyasi
dekhyo chahe kamal nayan ko nis din rahat udaasi
akhiyaan hari darshan ki pyasi
kesar tilak motin ki maala vrindavana ke vaasi
neh lagaai tyag gayen trin sam daal gayen gal phansi
akhiyan hari darshan ki ......
kahoo ke mana ki ko jaanat logan ke man haasi
surdas prabhu tumhare daras bin leho karvat kashi ankhiyaan
hari darshan ki pyasi hari darshan ki........

 
    

 
  

Thursday, June 27, 2019

VIKRAMADHITHYAN STORIES

விக்கிரமாதித்தன் கதை J K SIVAN
                                                                          ராணியின்  தத்ரூப ஓவியம்  
போஜனின் மந்திரி   பலே  ஆள். ராஜதந்திரி.   ''அப்படித்தான் பஹுஸ்ருதன்   என்கிற மந்திரி நந்தவம்ச ராஜாவிடம் சொன்னான்'' ... என்று மொட்டையாக எதையோ  சொல்லி  போஜனின் ஆர்வத்தை கிளப்பியதோடல்லாமல்  நண்பர்களே ,வாசகர்களே , உங்களிடமும்  ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டானே.  ஆகவே  மறுநாள் காலை மந்திரியை பிடித்து போஜன் '' நேற்று என்னவோ சொன்னாயே யாரோ பஹுஸ்ருதன் என்பவன் சொன்னான் என்று என்ன அது சொல் என்றான்? மந்திரி தொண்டையைக்  கனைத்துக்கொண்டு சொன்ன விபரம்:   வடக்கே எங்கேயோ  வைசாலி   என்கிற  அழகிய ராஜ்யத்தை நந்தன் என்கிற ராஜா பரிபாலனம் செய்து வந்தான்.  புத்திசாலி. திறமை மிக்கவன், நல்ல குணங்கள் கொண்டவனும்  கூட.  அவனது வீரத்தால் அண்டை நாட்டு ராஜாக்கள் அவனை எதிர்க்காமல் நட்போடு பழகிவந்தார்கள்.  ராணி பானுமதி ராஜாவின் மனைவி. கொள்ளை அழகி.  ஒரே பிள்ளை ஜெயபாலன்.   ஆட்சியை அவன் திறம்பட நடத்த பெரிதும் உதவியவன்  மந்திரி பஹூஸ் ருதன்.   மந்திரியைக்  கேட்காமல் நந்தன் ஒரு துரும்பை கூட எடுத்து போடமாட்டான். ஒழுங்காக எல்லாம் எதிர்பார்த்தபடி  நடந்தால்,  அப்புறம்  கதை எதற்கு?   ஒருநாள் ஒரு சம்பவம் நடந்தது.  நந்தனின் மனைவி பானுமதி  அழகி. தேவலோக அப்ஸரஸ் போல் இருப்பாள்.  அழகான மனைவி ஆபத்தின் உறைவிடம் அல்லவா?   ஆகவே அவளை விட்டு எங்கும் பிரிந்திருக்க மாட்டான் நந்தன்.  அவள்  நிழல் அவன்.  அரசவை மண்டபத்தில் இருக்கும்போது கூட  அருகிலே ஒரு சிம்மாசனத்தில் அவளும் இருக்கவேண்டும்.  அவளுக்கு அந்தப்புரத்தில் சுதந்திரமாக இருக்க ஆசை. யார் கேட்பார்கள் அவள் விருப்பத்தை ? எங்கு போனாலும் அவன் பின்னால் ஒரு பல்லக்கில் திரைகளை மூடியபடி அவளை தூக்கி வர செய்வான்.  ராஜாவின் இந்த குணம்  மந்திரி பஹுஸ்ருதனுக்கு   பிடிக்கவில்லை. அரசன் செயல் எரிச்சலாக இருந்தது. அதனால் பானுமதிக்கு ஏதாவது ஒரு ஆபத்து உண்டாகும் என்று கவலை வேறு.  ராணிக்கும்  இப்படி அடிமையாக இருப்பது பிடிக்கவில்லை. என்ன செய்யமுடியும்? பதி சொல் தவறாத பாவை அவள்.  சமயம் பார்த்து ஒருநாள்  நந்தனிடம் மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தான் பஹுஸ்ருதன்:
''மஹாராஜா,   ஒரு முக்கிய விஷயம் சொல்லவேண்டும்.  இதை கேட்டவுடன் உங்களுக்கு பிடிக்காமல்; என் மீது கோபம் வரலாம். இருந்தாலும் நான் உங்கள் கவனத்துக்கு இதை கொண்டுவருவது என் கடமை.'' ''மந்திரி என்ன பலமாக ஏதோ பீடிகை போடுகிறாய். விஷயததை சொல்லு. எனக்கு தெரியும் நீ  எதையும் நாட்டு நன்மையும்  எனது நன்மையையும்  கருதியே நினைப்பவன்,  செய்பவன் என்று ''  மென்று விழுங்கிய மந்திரிக்கு கொஞ்சம் தைர்யம்  வந்தது. ''நன்றி மஹாராஜா. பட்டென்று மனதில் பட்டதை சொல்லி விடுகிறேன். இது மாதிரி நீங்கள் அரண்மனை சபைக்கு ராணியை அழைத்து வந்து பக்கத்தில் அமரவைப்பது தவறு. யார் கண், எண்ணம், பார்வை சிந்தனை,  எப்படி இருக்கும் என்று தெரியாது. இதனால் ராணிக்கும் ராஜ்யத்துக்கும்  உங்களுக்கும்  ஆபத்து ஏதாவது நேரலாம். ராணிக்கும் இப்படி பலர் முன்னிலையில் தென்படுபவது பிடிக்கவில்லை என்று உணர்கிறேன்'' ‘மந்திரி, நீ சொல்வது புதிதல்ல. எனக்கும் தெரியும். ஆனாலும் என்னால் அவளை தனியாக அந்தப்புரத்தில் விட்டுவிட்டு அமைதியாக இங்கே நாள் முழுதும்
  இருக்க முடியாதே.  என்ன செய்வேன்'' என்று அழாக்குறையாக நந்தன் பதிலளித்தான்.  மந்திரி யோசித்து வைத்திருந்த  ஆலோசனையை சொன்னான்:  ''எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்  ஒரு  திறமைசாலி ஓவியனை அழைத்து ராணி மாதிரி ஒரு உருவப்படம் வரைந்து அதை உங்கள் அருகே வைத்துக் கொள்ளுங்கள். அதை பார்க்கும்போது அடிக்கடி ராணியை  பார்ப்பது போல் இருக்கும். ராணிக்கும்  தொந்தரவு இல்லை.''  ''பஹுஸ்ருதா,   அருமையான யோசனை சொன்னாய். இந்தா என் பரிசு என்று கழுத்தில் இருந்த முத்து மாலையைக்   கழற்றி மந்திரிக்கு அணிவித்தான் நந்தன்.  சிறிது நாளில் ஒரு நல்ல ஓவியனை கொண்டுவந்து நந்தன் முன் நிறுத்தினான் மந்திரி . ‘ஓவியரே, நமது மகாராணியை மிகத் தத்ரூபமாக ஆளுயரத்தில் தாங்கள் வரைந்து தர வேண்டும். உம்மால் முடியுமா?’ என்று கேட்டான் நந்தன்.  ‘மகாராஜா! நான் ஒரு புஷ்பத்தை வரைந்தால், அதை நிஜமான பூ வென்று ஏமாந்து அநேக வண்டுகள்,  பூச்சிகள்,எல்லாம் வந்து மொய்க்கும்.. தேனின்றி  ஏமாந்து போகும்.  அநேகர் அதை பார்த்திருக்கிறார்கள்.  ஆகவே  உங்கள் ராணியை ஒருமுறை சரியாக நான் பார்த்துவிட்டால் அது போதும். அவரைப்போலவே  ஆளுயர வண்ண ஓவியம் என்னால்  வரைய முடியும்'' என்றான் ஓவியன்.  அரண்மனை அந்தப்புரம் அழைத்துப் போனார்கள்.   அவளைப்  பார்த்தவுடனே அவள் மிக உயர்ந்த ரக பெண்மணி என்று அறிந்துகொண்டான். அவனுக்கு தான் சாமுத்திரிகா லக்ஷண  சாஸ்திரம் நான்கு வகை பெண்கள் பற்றி  எல்லாம் நன்றாக  தெரியுமே. உயர்ந்த வகைப்  பெண் பத்தினி.    குலப்பெண், கற்புக்கரசியாக,,  பதிபக்தி மிக்கவளாக,  கடவுள் பக்தி நிறைந்தவளாக இருப்பவள்.  தேகத்தில் இயற்கையாகவே நறுமணம் வீசும். முகம் செண்பக மலராக புன்னகை பூத்தவாறு
 இருக்கும்.  கொடியிடை, நீண்ட கருத்த சுருள் சுருளான பின்புறம் வரை நாகம் போல் வளைந்த கூந்தல்,  பௌர்ணமி சந்திரன் முகம், அகல நீள கண்கள், மிருதுவான  பேச்சு,அழகிய உதடுகள்,கருணை மிக்க  இதயம்,
 இன்னும் எத்தனையோ  சிறப்புகள் கொண்டவள். அவளை அப்படியே ஓவியத்தில் சித்திரமாக்கினான் ஓவியன். அதைப் பார்த்த  நந்தன் அசந்து போய் ''ஏ ஓவியா,  அசாத்தியமாக வரைந்திருக்கிறாய். அப்படியே என் மனைவியை இதில் கொண்டுவந்து விட்டாய்....உனக்கு என்ன வேண்டும் சொல், பரிசு தருகிறேன்'' என்றான்.  ''மஹாராஜா, நான் உலகிலேயே சிறந்த ஓவியன். பல ராஜாக்கள் என்னை வா  என்னிடம் என்று வரவேற்கிறார்கள். நான் தங்களை  சந்தித்ததே உங்கள் அதிர்ஷ்டம்'' என்று சொல்லும்போது  நந்தனின் ராஜகுரு அங்கே வந்தபோது அவன் சொன்னது அவர் காதிலும் விழுந்தது.   அவருக்கும் சகல சாஸ்திரங்களும் தெரியுமே. ஓவியத்தை பார்த்தார்.  ''சிறந்த ஓவியர், நீர் நிச்சயம் பிரமாதமான கலைஞன் தான். ஆனாலும்  மகாராணியின் அங்கத்தை அப்படியே வரைந்திருக்கிறீர்களே,ஒரு சிறு தவறு இருக்கிறதே''  என்கிறார் ராஜகுரு ''அப்படி இருக்க முடியாதே சுவாமி, என்ன தவறு என்று நீங்கள் சுட்டிக்காட்ட முடியுமா?''  -  ஓவியன். ‘மகாராணியாரின் இடது துடையில் ஒரு சிறு கருப்பு மச்சம் உண்டு. அந்த மச்சத்தை நீ குறிப்பிட வில்லையே?
'என்கிறார்  ராஜகுரு. 
ராஜகுரு சொன்னதை கேட்ட ராஜா நந்தன் திடுக்கிட்டான்.  மகாராணியின் இடது துடை மச்சம் சமாச்சாரம் அவனை அதைப்பற்றியே எண்ண வைத்தது.  ‘அது எப்படி நானே கவனிக்காத  மச்சம்   இந்த ராஜகுருவுக்கு தெரிந்தது? ஏதோ குருட்டாம்போக்கில் பொய்யா? உடனே போய் அதை சோதிக்கவேண்டும் என்று அந்தப்புரம் ஓடினான் நந்தன்.   மகாராணி தூங்கிக்கொண்டிருந்தாள் அவள்  இடது துடையைப் பரிசோதித்தான். அடே  எப்படி ராஜகுரு சொன்னது போல் மச்சம் இருக்கிறது? ஆச்சர்யத்திற்கு பதில் ஆத்திரம் தான்  வந்தது. கண் சிவந்தது. நாசி துடித்தது. ராணிக்கும் ராஜகுருவுக்கும் கள்ள நட்பா?  இல்லாவிட்டால் எப்படி அவருக்கு இது தெரிந்தது. நானே இதுவரை  கவனித்ததில்லையே?'' நந்தன் தான் எதற்கும் மந்திரி பஹுஸ்ருதனை கன்சல்ட் பண்ணுவானே . கூப்பிட்டு விஷயம் சொன்னான். ''மந்திரி, ஏதோ தவறு நிச்சயம் நடந்திருக்கிறது. சந்தேகமாக இருக்கிறது. இந்த கள்ள ராஜகுருவை இப்போதே தண்டிக்கவேண்டும். மரண தண்டனை நிறைவேற்று'' . ராஜா  ஆத்திரத்தில்  ஆணையிட்டான் என தெரிகிறது. அவன் ஆணையை மீறமுடியாது. மந்திரி ராஜகுரு வீட்டுக்குச் சென்று நடந்ததை சொன்னான். ராஜகுரு மனம் வருந்தினார். ''ராஜ்யத்தை ஆள்பவனிடம் அன்பு, கருணை, நட்பு,  பாசம்  நன்றி, எதையும் எப்போதும் எதிர்பார்க்கமுடியாது என்பது உண்மையாகிவிட்டதே. இதைக் கேட்ட ராஜகுரு மனம் உடைந்து போனார். ‘ராஜ்ஜியத்தை ஆளும் அரசனுக்கு நட்பு, நன்றி, அன்பு, பாசம், உறவு ஏதும் கிடையாது என்பது எத்தனை உண்மை’ என்று எண்ணினார். நான் உத்தமானவன் என்ற உண்மை என்னை காப்பாற்றட்டும்.'' என்கிறார் ராஜகுரு.  மந்திரி பஹுஸ்ருதன் ராஜகுருவை ராஜா நந்தன் கண்ணில் படாமல் எங்கோ ஒரு மாளிகையில் தனியாக  ஒளித்து வைத்து அவர் உயிரை காப்பாற்றி னான்.ஒன்றிரண்டு வருஷங்கள் ஓடியது.   இளவரசன் ஜெயபாலன் ஒருநாள் வேட்டையாட கிளம்பினான்.  மந்திரி பஹுஸ்ருதன் பிள்ளை புத்திசாகரன் தான் அவன் நண்பன்.   அவர்கள் வேட்டையாட கிளம்பிய நேரம் சகுனம் சரியில்லை.  ஒரு  கறுப்புப் பூனை திடீரென்று  குறுக்கே  ஓடியது. ஒற்றை பிராமணன் எதிரே வந்தான்.  அகால  நேரத்தில் ஆந்தை அலறியது. ட்ட காலத்தில் ஆந்தையின் அலறல் சப்தம் கேட்டது .    தலையில் விறகு கட்டைகள் சுமந்து ஒருவன் கண்ணில்  பட்டான்.மேகங்கள்  கூடி  வானம் கறுத்தது.  மந்திரி  குமாரன், ''இளவரசே, இன்று நேரம் சரியில்லை, கெட்ட சகுனங்கள் தெரிகிறது.  இன்று வேட்டை வேண்டாம்.  இன்னொருநாள் போகலாம்.'' என்றான்.  இளங்கன்று பயமரியாதே. இளவரசன் ஜெயபாலன் ''அடே,  நண்பா,எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இப்போதே வேட்டைக்கு புறப்படுவோம். எது வந்தாலும் ஒரு கை  பார்க்கிறேன்'' என்றான். ‘ இல்லை நண்பா.  தெரிந்தும் சில காரியங்கள் செய்யக்கூடாது. ஒரு நிதானம் வேண்டும். விஷம் என்று தெரிந்தும், குடித்தால் என்ன செய்யும் பார்க்கலாம் என்றா குடிப்பார்கள்? விபரீதமான செயல் இது. விளையாட வேண்டாம்''   ஜெயபாலன் காதில் இதெல்லாம் ஏறவில்லை ,  வேட்டைக்கு கிளம்பிவிட்டான்.  அப்பன் நந்தனைப் போலவே பிள்ளை... அவன் பின்னால்  நாமும்  காட்டுக்கு போவோம். 

Tuesday, June 25, 2019

VIKRAMADHITHYAN STORIES

விக்ரமாதித்தன் கதை   J K  SIVAN 

                                                                       
                          சரவண  பட்டன்  கதை  


விக்ரமாதித்யனுக்கு  பிறகு  பல நூற்றாண்டுகளுக்குப்  பின் உஜ்ஜயினி ராஜாவானவன்  போஜன். அவன் எப்படி விக்ரமாதித்தனின்  32 படி,  அதில் பேசும் 32 பொம்மை  வைத்த பெரிய தங்க  சிம்மாசனத்தை அடைந்தான் என்பதை முதலில் சொல்லியாக வேண்டும். 


அதிர்ஷ்டம் எல்லாருக்கும் எப்போதும் அடிப்பதில்லை. அப்படி ஒரு  அதிர்ஷ்டம் ஏதாவது நம் வழியில் எதிர்பட்டாலும் நாம் அதைத் தாண்டிக்கொண்டோ,  சுற்றிக்கொண்டோ  போய்விடுகிறோம். அடைவதில்லை. அதிர்ஷ்டம் என்பது  யாரோ எப்போதோ  குருட்டாம்போக்கில் அடைவது என்று பலபேர்  அபிப்ராயம். அதிர்ஷ்டம் அடித்த அனுபவம் இது வரை இல்லாமல் என்னால் அது பற்றி அதிகம் சொல்ல முடியாது. ஆனால் போஜராஜன் அப்படிப்பட்ட ஒரு  அதிர்ஷ்டக்காரன் போல இருக்கிறது.

போஜனுக்கு எல்லா அரசர்களையும் போல் அடிக்கடி வேட்டையாட போகும் வழக்கமுண்டு. அவன் நல்ல ராஜா. குடிமக்கள் அவனது  நல்லாட்சியில் மகிழ்ந்தார்கள். அவன்  உஜ்ஜயினி ராஜ்யத்தில்  ஊருக்கு கடைசியில் உள்ள காட்டில் வேட்டையாட போனான்.  சில நாட்களுக்கு முன்பு ஏராளமான மக்கள் போஜனின் மந்திரியிடம் குறைகள் சொல்லி அது போஜன் காதுக்கு எட்டியது.  அது இந்த காட்டைப் பற்றியது தான். புலி,   சிறுத்தை, கரடி, ஓநாய், போன்ற மிருகங்கள் அடிக்கடி இரவில் காட்டை விட்டு வெளிவந்து,  க்ராம  வீடுகளில் நுழைந்து ஆடு, மாடு, கோழி, குழந்தைகள் ஆகியோரை கொன்று தின்று விடுகின்றன என்று மந்திரி மக்கள் சார்பாக சொன்னான்.  ஆகவே தான் போஜன் வேட்டையாடி, அந்த காட்டில் வசித்த கொடிய சில மிருகங்களைக்  கொல்ல  அங்கே வந்தான். மந்திரியோடும்,  அனுபவமிக்க  வேட்டையில் தேர்ந்த சிறு படையோடும், ஆயுதங்களோடு போஜன் காட்டில் நுழைந்தான்.  நிறைய புலி  சிங்கம்,கரடி  நரி ஓநாய்  ஆகியவை கொல்லப்பட்டன .   பகல்  உச்சி நேரத்தில் பசி அவன் வயிற்றைப்  பொசுக்கியது. 

குடிக்க நிறைய நல்ல நீர், சிரம பரிகாரம் பண்ண அந்த படைக்கு ஏற்ற நல்ல இடம்  எங்காவது கிடைக்குமா என்று தேடினார்கள்.  அலைந்தார்கள்.  காளி  கோயிலை சுற்றி இருந்த  ஒரு  பகுதியில் சற்று ஒதுக்குப்புறமாக  ஒரு பெரிய  சோளக்கொல்லை கண்ணில் பட்டது.   சுற்றிலும் நிறைய மரங்கள்  அரண்போல அமைந்து நடுவே பிரம்மாண்டமான ஒரு பெரிய  ஆளுயர சோளக்கொல்லை.    அருகே நிறைய மரங்களில்  உடனே பறித்து  சாப்பிட கொய்யாப்பழங்கள், வாழைப்பழங்கள் எல்லாமும்   இருந்தது.  ஒரு பெரிய  ஆழமான கிணறு படிக்கல்லோடு உள்ளே இறங்கி நீர் குடிக்க வசதியாக இருந்தது.   விடுவார்களா  போஜனின் படைவீரர்கள் இந்த  இடத்தை?   .திமுதிமுவென உள்ள  புகுந்தார்கள். 

அந்த பெரிய சோளக்கொல்லை வயலுக்கு  சொந்தக்காரன் சரவண பட்டன் என்ற ஒரு பிராமணன்.  போஜனும் அவனது ஆட்களும் வயலில் நுழைந்தபோது சரவணபட்டன்  வயல் நடுவே அவன் அமைத்திருந்த ஒரு உயரமாக பரண் மீது அமர்ந்துகொண்டு  முற்றிய சோளக்கதிர்களை  கடித்து தின்ன வரும் பறவைகளை கவண் கல்லால் அடித்து விரட்டிக்கொண்டிருந்தான்.  நாள் முழுக்க இதே வேலை.  

'அடடா ராஜா வீரர்களோடு வருகிறாரே அருகே காட்டில் வேட்டையாடி களைத்திருக்கிறார் போல இருக்கிறதே என்று '' வரவேண்டும் வரவேண்டும் மஹாராஜா''  என்று கத்தினான்.  '' இதோ கயிறு சொம்பு எல்லாம்  கிணற்றருகே வைத்திருக்கிறேன். நிறைய  நீர் மொண்டு  முகம் கைகால் கழுவி குளிர்ந்த நீர் குடியுங்கள். தோட்டத்தில் நிறைய பிஞ்சு தக்காளி, வெள்ளரி, வெண்டை, பயிறு எல்லாம் இருக்கிறது.  அதோ அந்த மரத்தில் மாம்பிஞ்சு, கொய்யா பழம் எல்லாம் கூட காய்த்திருக்கிறது.  எடுத்து நீங்களும் சாப்பிட்டு, குதிரைகளுக்கும் நீர், சோளத்தட்டை,  பயிறு எல்லாம் கொடுங்கள்''  என்று உபசரித்தான்.''  சோளக்கொல்லையில்  ராஜாவின் படை புகுந்தது அகப்பட்டதை எல்லாம் எடுத்து சாப்பிட்டு  கிணற்றில் நீர் பருகியது.  பரணில் இருந்து சரவண பட்டன் இறங்கி கீழே வந்ததும் அவன் குணம் மாறிவிட்டது. கோபம் ஆத்திரம், வெறுப்பு  இயலாமை எல்லாம் அவனிடம் வெளிப்பட்டது. 

''ராஜா, இதென்ன  அக்கிரமம். எப்படி என்னுடைய  வயலில், தோட்டத்தில் இத்தனை பேர் நுழைந்து கண்டதை   யெல்லாம் எடுத்து உண்டு நஷ்டப்படுத்துகிறார்களே. ஞாயமா? என் தோட்டம், பாழாகி விட்டதே.  எல்லையில்லாமல் போய்விட்டதே  அவர்கள்  அநீதிச் செயல்''  என்று கத்தினான்.  ''ராஜா நீங்கள் எனக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.  கஷ்டப்பட்டு  நான் உழைத்த பலன் வீணாகி விட்டதே'' என்று அலறினான்.

போஜன் அதிர்ந்து  போனான்.  ''இவன் என்ன பைத்தியமா?  இப்போது தானே பரண் மீதிருந்து  நம்மை    பார்த்து எவ்வளவு  சந்தோஷமாக முகமலர்ந்து   வரவேற்றான்.உபசரித்தான். அவன் வார்த்தையை  நம்பி வீரர்கள் உள்ளே நுழைந்து எடுத்து சாப்பிடுகிறார்கள். இப்போது ஓடிவந்து அக்கிரமம் அநியாயம் என்று அலறுகிறானே.!'' என்று  போஜனும்  மந்திரியும்  திகைத்தார்கள்.  சரி எல்லோரும் கிளம்புங்கள் என்று போஜன் உத்தரவிட எல்லோரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.  இதை கண்ட சரவணப்பட்டன் மகிழ்ந்து ''அப்பாடா சனி  இதோடு விட்டது''  என்று மீண்டும் பரணுக்கு சென்று மேலே   ஏறி நின்று அவர்கள் போவதை பார்த்தான்.  அடுத்த கணமே  அவன் குணம்   மாறியது.

‘ராஜா,  இன்ன  இது,  அபச்சாரம்.    ஏன் எல்லோரும்  சரியாக  உண்டு  சிரமபரிகாரம் பண்ணாமல்   பாதியிலேயே இங்கிருந்து  செல்கிறீர்கள். ஏழை என்னால் இயன்றதை உங்களுக்கெல்லாம் தர  நான்  பாக்யம் பண்ணி  இருக்கிறேன். நான்  சரியாக  உபசரிக்காமலிருந்தால் என்னை மன்னியுங்கள்.  ஆகாரம் ஆனவுடன் எல்லோரும் வந்து மர நிழலில் சிரமபரிகாரம் பண்ணவேண்டும்.  மாலையில்   பசுக்கள் வந்ததும்  பால் தருகிறேன். பிறகு செல்லலாம்'' என்று கெஞ்சினான். 

போஜன்  யோசித்தான். ஏன் இந்த  சரவணப்பட்டன்  மாற்றி மாற்றி  பேசுகிறான். ''மந்திரி நீர் சொல்லும்  இதற்கு என்ன காரணம்? ''

'' அரசே, நானும்  கவனித்தேன். பரண் மீது  இருந்து  பேசும்போது அவனிடம் மனித நேயம் பண்பு  இருந்தது.  பரணில் இருந்து கீழே இறங்கியவுடன் அவன் சாதாரண  மனிதனாக  பேசுகிறான்.''

''மந்திரி என்  மனதில் தோன்றியதை தான்   நீயும்  ஊர்ஜிதப்படுத்திவிட்டாய்.  நீ  அந்த பரண்  மேல் ஏறு . உன் நடத்தையும்  குணமும் மாறுகிறதா என்று சோதிக்கிறேன்.                                                                                                                                          
பரண் மீது  ஏறிய மந்திரி தான்  முற்றிலும் மாறி  இருப்பதை  உணர்ந்தான்.   அவன் மனதில் சாந்தம், கருணை எல்லாம்  நிரம்பியது. போஜராஜனிடம்  மாறுதலை  சொன்னான்.  அந்த  பரணை சோதித்தார்கள்.சாதாரணமாக  இருந்தது.   அந்த பரணில் எந்த வித்தியாசமும் இல்லாததால்  அந்த    இடத்தில் ஏதோ  ஆச்சர்யம்,  அதிசயம்,  ரஹஸ்யம், காந்த சக்தி இருக்கிறது.  அதை  முதலில் கண்டு    பிடிக்கவேண்டும்.  போஜன் சரவண  பட்டனைக்  கூப்பிட்டான்.    

'சரவணா,  நீ  இந்த  ராஜ்ஜியத்தின்  சிறந்த  விசுவாசியாக இருக்கிறாய். உனக்கு ஏதாவது பரிசு அளிக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.  நீ   இப்படி வயலில்  உழைத்து கஷ்டப்படவேண்டாம்.  உனக்கு பத்தாயிரம் பொற்காசுகள் கொடுத்து ஒரு   வீடு  வாசல் தோட்டம் எல்லாம் தந்து  நீ  சுகமாக வாழ கட்டளை  இடுகிறேன்.இந்த   காட்டுப்புற வயல் அரசாங்கத்தின் மேற்பார்வையில் கண்காணிக்கப்படும்''

''மஹாராஜா,  இந்த ஏழையின் மேல் இவ்வளவு  கருணையா?.   இதை பகவானின் அருளாக கருதுகிறேன் என்றான் சரவண பட்டன்.  மறுநாளே ஒரு  சிறு கிராமத்தை சரவண பட்டனுக்கு எழுதி வைத்து  அவனை அனுப்பிய  போஜன் அந்த வயலின் பரண் அடியே  மண்ணைத் தோண்ட ஆணையிட்டான். அவன் எதிர்பார்த்தபடி  ஏதோ பூமியில் புதைந்து  இருப்பதுதெரிந்தது. கண்ணைப்பறிக்கும் நவரத்ன கற்கள் பதித்த தங்க சிம்மாசனம் ஒன்று 32 படிகளோடும், அவற்றில் ஒவ்வொருபடியிலும் ஒரு  பெண் பொம்மையோடும்  பூமியில் புதைந்திருந்தது தெரிந்தது.   ஆச்சரியமடைந்த போஜன் அந்த தங்க சிம்மாசனத்தை   ஜாக்கிரதையாக சேதமில்லாமல் வெளிக்கொணர   விரும்பினான். '' ஓஹோ  இந்த  சிம்மாசனத்தில் அமர்ந்தவன் நேர்மையான அரசனோ,நியாயவானோ ,கருணாமூர்த்தியோ, வீரமகனோ போல்  இருக்கிறது. , யார் அவன்?  அவன் சிம்மாசனத்தின் மேல் பூமியில் ஒரு பரண் அமைத்து அதன் மேல் நின்றபடி, அமர்ந்தபடி,  இருந்தததால் தான் சரவண பட்டனும்  மந்திரியும் நற்குணங்கள் கொண்டவர் களாக மாறினார்களோ?  இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து  நானும் நல்ல நீதிமானாக ஆட்சி செய்வேன் என்று மனதில் எண்ணம் கொண்டான் போஜன். ஆனால்  அவனால் அந்த சிம்மாசனத்தை அப்புறப்படுத்த  முடியவில்லை.  மந்திரி, பெரியோர்கள், வேதவல்லுனர்கள் அறிவுரைப்படி, அந்த சிம்மாசனம் யாரோ மிக ஸ்ரேஷ்டமான  தெய்வீகமான  ஒரு ராஜாவால் உபோயோகிக்கப்பட்டது என்பதால் அநேக பூஜைகள், தான தர்மங்கள் செய்தபிறகு, வணங்கி அதை நகர்த்த முயன்றபோது அதைத்  தூக்க முடிந்தது.  

மனம் மகிழ்ந்த  போஜன்,   ''மந்திரி,  உமது ஆலோசனைப்படி செய்ததால் நல்ல பலன் கிடைத்தது. ஒரு நாட்டுக்கு உண்மையான பக்தி, பரோபகாரம் கொண்ட மந்திரி அவசியம், உம்மைப்போல''   என்றான் போஜன். 

''அரசே நீங்கள் சொல்வது  வாஸ்தவம்.   ஒரு மந்திரி தனது கடமையை செய்ய வேண்டியதை  உணர்த்துகிறது.அப்படித்தான்  ஒரு காலத்தில் நந்த வம்சத்தை சேர்ந்த ஒரு ராஜாவுக்கு  அருமையான பஹுஸ்ருதன் என்ற பெயர் கொண்ட புத்திசாலி மந்திரி ஒருவன் இருந்தான். ராஜாவை ஒரு பேராபத்திலிருந்து காப்பாற்றினான்'' என்றான் மந்திரி. 

''பஹுஸ்ருதன் அப்படி என்ன செய்தான்?'' என்று கேட்ட போஜன் போல நாமும் மந்திரி என்ன சொன்னான் என்று கேட்க  தயாராவோம். 

Monday, June 24, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J K  SIVAN                         
 2ம் நாள்   யுத்தம்             

                                                                    
                             பீமார்ஜுன  தாக்குதல்...

நண்பர்களே,  யுத்தம்   என்றால் இப்போது கடைபிடிக்கும் முறை வேறு,ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு நமது பாரத தேசத்தில் நடந்த யுத்தம் வேறு.  மனிதர்களுக்கு பலம், பயிற்சி, மரணத்தை கண்டு அஞ்சாத துணிவு, நேருக்கு நேர் நின்று பலரை சமாளிக்கும் திறமை, யானை குதிரை,தேர்  போன்ற சாதனங்கள், உடம்புக்கு கவசம், கூரிய வாள் , ஈட்டி, தடுக்க கேடயம், வில்,  பல வித ரகமான அம்புகள் இது அத்தனையும் தேவையாக இருந்தது.  யாருடன் மோதுகிறோம் என்று எதிராளி முகம் தெரிந்திருந்தது.  இப்போது அப்படியில்லை, மறைவு, எதிர்பாராத நேரத்தில் தாக்குவது, ஒளிந்து பலமிக்க குண்டுகளை வீசுவது. டாங்குகள், முழு இரும்புக்கவசம் பூண்டு அதற்குள்  மறைந்து  குண்டுகளை வீசுவது, சுடுவது, மேலே இருந்து    வேகமாக தாக்கி விட்டு ஓடிவிடுவது.  எங்கிருந்தோ ஒரு பட்டனை அமுக்கி, அழுத்தி, எங்கோ இருப்பவர்களை, அவர்கள் இடத்தையே நாசம் செய்வது என்ற வித்தை அப்போது தெரியாது.   இதை மனதில் வைத்துக் கொண்டு குருக்ஷேத்ரம் பயணம் செய்யவும். 


''அரசே,  உங்கள் மகன் துரியோதனனின்  கௌரவ  சேனை,   முதல்  நாள்  யுத்தத்தில்  பீஷ்மர்  தலைமையில்   வெகு அற்புதமாக  போர் புரிந்து பாண்டவர் அணிக்கு  மிகுந்த சேதம் விளைவித்தது'' என்று சஞ்சயன் கூற திருதராஷ்டிரன் மகிழ்ந்தான்.  தனது மகன் துரியோதனன்  போர்த்திறமையை மனதார மெச்சினான்.

பாண்டவர் பாசறையில் கிருஷ்ணன் தங்கியிருந்த கூடாரத்தில்  பாண்டவர்கள்  விசனத்தோடு அமர்ந்திருந்
தார்கள்.

''கிருஷ்ணா,  பீஷ்மரின் பலத்திற்கு முன்  ஈடு கொடுக்க முடியாததால் நமது சேனை பல உயிர்களை  இழந்தது வருத்தமாக இருக்கிறது.   யமனே எதிர் நின்று  உயிர்களை பறித்தது போல் அல்லவோ அவர் போரிட்டார். வயது ஒரு காரணமே  இல்லை என்று புரிய வைத்தாரே.  எப்படி  பீஷ்மரை எதிர்த்து எப்படி  வெற்றி பெறுவது?  நீ தான் உணர்த்தவேண்டும். அர்ஜுனன்  இன்னும் முழு மனதுடன் போர் புரியவில்லை என்று தான் எனக்கு படுகிறது. பீமன் ஒருவனே உதவ முடியுமோ என்று எனக்கு தோன்றுகிறது.  ஆனால்  பீமனால் புஜ  பல சாதனைகள் புரியமுடியுமே அன்றி  பீஷ்ம   த்ரோணர்களின் அஸ்த்ர வித்தைக்கு  பதில் ஈடு கொடுக்க முடியுமா என்று யோசிக்க முடியவில்லை'' என்றான் யுதிஷ்டிரன்.

''பீஷ்ம துரோணர்களின்  மந்திர சக்தி வாய்ந்த  அஸ்த்ரங்கள் நமது சேனையை அழித்துக் கொண்டு வருவதை தடுக்க ஏதாவது ஒரு  யுக்தி வேண்டும்'' என சொல்லிவிட்டு  யுதிஷ்டிரன் மௌனமானான்.

''யுதிஷ்டிரா, உன் சகோதரர்கள் பலம் நீ அறிந்தது தான். மகா சக்தி வாய்ந்தவர்கள்.  தவிர நானும் உனக்கு உதவுகிறேன், சாத்யகி, விராடன், துருபதன் ஆகிர்யோரோடு திருஷ்ட த்யும்னன் , சிகண்டி ஆகியோரும் உள்ளனர். கவலை வேண்டாம்.  பீஷ்மருக்கு யமன் சிகண்டி தான். துரோணரைக் கொல்ல  பிறந்தவன் திருஷ்ட த்யும்னன்.   மறந்து விடாதே''  என்றான் கிருஷ்ணன்.

 யுதிஷ்டிரன்  அருகே இருந்த திருஷ்டத்யும்னனனிடம்  ''நாளை யுத்தத்திற்கு நீ தலைமை பொறுப்பெடுத்துக்கொள் .  நாளை யுத்தத்துக்கு நாம் கிரவுஞ்ச  வியூகம் சேனை அமைப்போம். உள்ளே புக முடியாதபடி   மஹா ரதர்கள் அதிரதர்கள் உனக்கு  துணையாக இருப்போம்'' என்றான்.

மறுநாள் வியூகம் அவ்வாறே அமைத்து  வியூகத்தின் முக்ய  அங்கங்களில்  துருபதன் திருஷ்ட த்யும்னன், பீமன், சிகண்டி, நடுவே  அர்ஜுனன் ஆகியோர்  பலம் சேர்த்தனர்.   நகுல சஹாதேவர்கள்   யுதிஷ்டிரன் அந்த கிரௌஞ்ச வியூக  சிறகுகளாக  பொறுப்பேற்று பாதுகாத்தனர்.

 'அரசே,   பாண்டவர்களின் இந்த  க்ரௌஞ்ச வியூகத்தை பார்த்த  துரியோதனன் க்ருபரிடமும்  சல்லியன்,  அஸ்வத்தாமன்  ஆகியோரிடம் கலந்தாலோசித்தான்''       என  சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்  நடந்தது ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டு வந்தான்.

சங்கங்கள் முழங்கின. இரண்டாம் நாள் யுத்தம் ஆரம்பம் ஆகியது. முரசங்கள் பேரிகைகள் முழங்கின.

கிருஷ்ணன் பாஞ்ச ஜன்யத்தை முழங்கினான்.   எங்கும் எதிரொலித்த அந்த சப்தம் எதிரிகளின் இடையே ஒரு இனம் புரியாத நடுக்கத்தை உண்டு பண்ணியது. அர்ஜுனனின் தேவதத்தம் என்ற  சங்க நாதம் பாண்டவ சேனையின் நம்பிக்கையை  எதிரொலித்தது.  பீமனின் பவுண்ட்ரம் காதை செவிடாக்கியது.

குதிரைகள் தேர்களோடு  புழுதி பட  சூறாவளியாக எதிரிகளை நோக்கி  விரைந்தன.

''சஞ்சயா, என் மக்கள் எவ்வாறு இதை எதிர்த்தார்கள் என்று பார்த்து சொல்''
யுத்தமுறை தெரிந்த வீரர்கள், தங்களது சேனைகள், பக்க பல, உதவிகளோடு  தத்தம் எதிரிகளை  தாக்கினார்கள். எவர் எவரோடு மோதவேண்டும்  எப்படி சேனையை உபயோகிக்க வேண்டும். என்றெல்லாம்  ஏற்கனவே யோசித்திருந்தனர். பல முனை  வாழ்வா  சாவா   போராட்டம் நடந்தது.

தன்னை   எதிர்  நோக்கி நகர்ந்த பாண்டவ  சேனையைக் கண்டு துளியும் அஞ்சாமல் பீஷ்மர் அம்புச்
சரங்களை  நெருப்பென  பாண்டவர்களை நோக்கி  எறிந்தார், எரித்தார்.  அவரது வேகம், பலம்  சமாளிக்க இயலாமல் இருந்தது.  தேர்கள் எண்ணற்று  பொடியாயின,நொறுங்கின, குதிரைகள் காயமுற்று  உயிரிழந்தன. யானைகள்  கட்டுக்கடங்காமல்  சேனைகளில் புகுந்து துவம்சம் பண்ணின.

வேலும் வாளும் , வில்லும், கதையும், மோதின. எங்கும் சப்தம், பனிப்படலம் போல்  அம்புகள் மழையாகவும் திரையாகவும் தோன்றின.

''கிருஷ்ணா  நான் பீஷ்மரை கொல்லவில்லையானால் நம் சேனையில் அனைவரையும் அவர் ஒருவரே  கொன்று விடுவார். என்னை அவர் இருக்குமிடத்திலேயே கொண்டு செல்''  என்றான்  அர்ஜுனன்.
 அர்ஜுனன் ஒருவனே  பீஷ்மரை தடுத்து  நிறுத்த முடிந்தது.

பீஷ்மரின் அம்பு  வெள்ளம் பாண்டவ சேனையை சித்ரவதை  செய்தது.  அர்ஜுனன் மேல்  அம்புமாரி பொழிந்தார். நிறையவே  அவற்றை தன்  மீது வாங்கிக் கொண்டான் ஸ்ரீ கிருஷ்ணன்.

இன்றும்  திருவல்லிக்கேணி  ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் சென்று தரிசிப்பவர்கள் கண்ணன் முகத்தில் உடலில் எண்ணற்ற தழும்புகள் உள்ளதை காணலாம். எல்லாம் பீஷ்மர்  உபயம்.

பீஷ்மரை  அர்ஜுனன், அபிமன்யு,  சாத்யகி,  துருபதன் என்று அநேகர் தாக்கினார்கள்.   அர்ஜுனன்  கௌரவ சேனையை பிளந்தான்.  உள்ளே  ஊடுருவி சென்றான்.  முடிவற்ற பிரளயங்கள் ஒன்றை ஒன்று மோதுவது போல் அங்கே  பீஷ்மார்ஜுன யுத்தம்  நடந்தது.  உடல்கள் எங்கும் குவிய  ரத்தம் ஆறாக ஓடியது.  வானில் எண்ணற்ற கழுகுகள் வட்டமிட்டன. நிறையவே  ஆகாரம்  கீழே அவற்றிற்கு  மலையாக சேர்ந்து கொண்டே வந்தது. .

துரோணர்  த்ரிஷ்டத்யும்னனின் தேரை உடைத்த்தார். அவனது தேரோட்டியை  கொன்றார்.  அவனது நான்கு குதிரைகளும் தேரை விட்டு விலகி எங்கோ ஓடின.  பாஞ்சாலன் விராடன் சேனைகள்  துரோணரை வளைத்து நாலா  பக்கம் இருந்தும் தாக்கின.  துரோணர் சளைக்காமல்  அத்தனை வீரர்களையும் நடுங்க வைத்து  போர் செய்தார்.

கௌரவ சேனையின் ஒரு பக்கத்தில்   கலிங்கர்களின் சேனையை தனி ஒருவனாக  பீமன்  அழித்துக் கொண்டிருந்தான்.

'சஞ்சயா,   பீமனின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து எனக்கு சொல்''   என்றான் திருதராஷ்டிரன்.

துரியோதனன் கலிங்க சேனையை  பீமனைக் குறி வைத்து  தாக்குமாறு கட்டளையிட்டிருந்தான். அவர்கள் அவனை எதிர்த்தபோது  மரணத்தோடு விளையாடுகிறோம் என்று பாவம்  அவர்கள் அறியவில்லையே.   நிறைய  துணிகளை துவைத்து காயப்போட்டது போல் கலர் கலராக  எங்கே பார்த்தாலும் கலிங்க வீரர்களை கொன்று தள்ளினான் பீமன். உதவிக்கு வந்த  நிஷாதர்களுக்கும் அதே கதி.  சேதி  தேசத்து வீரர்கள் இதெல்லாம் கண்டு உயிர் தப்பி  ஓடி விட்டார்கள்.

 கலிங்க  ராஜன் எண்ணற்ற  அம்புகளை பீமன் மேல் எய்தான்.  பீமன் அவற்றை தடுத்து  கலிங்கனின் தேர் மீது தாவினான். தனது வாளால் அவனை இரண்டாக பிளந்தான். தலை தரையில் விழுந்தது. அவனுக்கு உதவியாக வந்தவர்களையும் கொன்றான். தொடர்ந்து எதிர்த்த  700 கலிங்க சேனா வீரர்களையும் தனி ஒருவனாக  பீமன்
கொன்றான்.  பீமனை கலிங்க சேனை சூழ்ந்ததைக் கண்ட  திருஷ்ட த்யும்னன் படையோடு அவனை அடைந்தான். எதிரிகள்  கலங்கினார்கள்.  பீஷ்மர்  பீமனின் வீர சாகசத்தை கண்டு மெச்சினார். அவனை நோக்கி வந்தார்.  பீஷ்மர் நெருங்குவதைக் கண்ட  சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோர் அவரை எதிர்த்து தாக்கினார்கள். சாத்யகி பீஷ்மரின் தேரோட்டியை கொன்றதும்  பீஷ்மரின் தேர் கட்டுக் கடங்காமல் அவரை  அங்கிருந்து விலகச் செய்தது.

சல்லியனின் வீரர்கள்  சாத்யகியை எதிர்த்தன.  திருஷ்டத்யும்னன் அங்கே  அவனுக்கு உதவ வந்துவிட்டான்.

அஸ்வத்தாமன்  அபிமன்யுவை தாக்கிக் கொண்டிருந்தான்.  துர்யோதனன் மகன் லக்கனகுமாரனை அபிமன்யு தாக்கி அவனை கொன்று விடுவான் போலிருந்ததால் பயத்தில் துரியோதனன் அங்கே நெருங்கினான்.

கிருபர்  துரோணர் பீஷ்மர்  ஆகியோர்  அர்ஜுனனை அங்கே வர விடாமல் அவனை தடுத்து  தாக்கிக் கொண்டிருந்தார்கள். 

''அஸ்வத்தாமா,  பார்த்தாயா,  அர்ஜுனன் வீரத்தை,  கிருஷ்ணன் தேரோட்ட எவ்வளவு லாகவமாக  கௌரவ சேனையை வாட்டி வதைக்கிறான்  அர்ஜுனன். அவன் ஒருவனே நம் சேனையை முற்றிலும் அழிக்கக் கூடியவன் என்று அல்லவோ தோன்றுகிறது.'' என்றார் பீஷ்மர்.

''அரசே,  இவ்வாறு யுத்தம்  தீவரமாக நடந்து தொடர்ந்து கொண்டிருந்த போது  சூரியனும் மேற்கே  கொஞ்சம் கொஞ்சமாக  இறங்கினான்.  இருள்  படர ஆரம்பித்தது.  அன்றைய யுத்தம் இந்தக் கட்டத்தில் நிறுத்த  ஏது வாயிற்று'' என்றான் சஞ்சயன்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...