Friday, June 28, 2019

 ஐந்தாம் வேதம்  J K  SIVAN 
  நான்காம்நாள் யுத்தம் 


                  கௌரவ சேனையின் நஷ்டம்


''சஞ்சயா, இதுவரை  நான்கு நாள்  ஆகிவிட்டது. இந்த யுத்தம் இன்னுமா முடிவு பெறவில்லை? என் மகன் துரியோதனன் அவனது  பெரும்படையால் இன்னுமா பாண்டவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை?''  என திருதராஷ்டிரன் அங்கலாய்த்தது  நான்காம் நாள் காலை அன்று .

கௌரவ சைன்யத்தில்,  அன்று காலை  பீஷ்மர்  எல்லோரையும் ஊக்குவித்து  சேனையில்   எங்கெங்கு எந்த வீரர்கள்  இருக்கவேண்டும்  என்று  தீர்மானித்தார்.  படையின் முன்னணியில் தானே  நின்றார். நாலா பக்கமும்  துர்மர்ஷணன் , சித்திரசேனன், துரோணர்,  துர்யோதனன், அவன் சகோதரர்கள், ஜெயத்ரதன்,  ஆகியோர்  தத்தம் பொறுப்பில் அவர் கட்டளைப்படி  சேனையை வழி நடத்தினார்கள்.

அரணாக  அவர்களைச் சுற்றி  போர் பழக்கம் செய்விக்கப் பட்ட யானைகள் அணிவகுத்து தயாராக  நின்றன. ஆயுதங்களை எறிவதற்கு அவற்றுக்கு சொல்லிக் கொடுத்திருந்ததால், தீப்பந்தங்களைக்  கூட  அவை  எதிரிகள் மீது வீச உபயோகப்பட்டன.

 பாண்டவ சைன்யத்தில் ஹனுமான் கொடியோடு  அர்ஜுனன் புறப்பட்டான்.  அவனை  எதிர்ப்பதே  முக்ய நோக்கம்  கௌரவ சேனைக்கு என்பது அவனை எதிர்க்க அணிவகுத்த  சேனையின் அமைப்பிலேயே அவன் கண்டு கொண்டு மகிழ்ந்தான்.  இரு கைகளாலும்  அம்பு எய்யும் திறமை வாய்ந்த அர்ஜுனன்  சென்ற இடமெல்லாம் ரத்த ஆறு அவனைப்  பின் தொடர்ந்தது. யமதர்ம ராஜனே  தங்களது  உயிரைப் பறிக்க  எதிரே  வந்து நிற்பது போல்  எதிரிகள் கலங்கினர்
முந்தைய  நாள் கதையே மீண்டும்  தொடர்கிறது. பீஷ்மர் துரோணர் அம்புகளை எளிதில் எதிர்த்து உடைக்கிறான்  அர்ஜுனன். அவனை வெல்ல முடியாமல் திணறுகிறது  கௌரவ சேனை. கௌரவ சேனையின்  எதிர்ப்புகளை தடுப்பதோடு நில்லாமல்  அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டி ருக்கிறான்.

''அரசே,  அஸ்வத்தாமன், பூரிஸ்ரவசோடும், சித்ர சேனன் மற்றும்  இரு  சேனாதிபதிகளோடும்   சூழ்ந்து கொண்டு அபிமன்யுவை தாக்கினார்கள். அவனோ  அஸ்வத்தாமன்  வில்லை உடைத்தான், சல்லியனின் தேர் கவிழ்ந்தது, சக்கரங்கள் உடைபட்டு ஓடின. பூரிஸ்ரவஸ் ரத்த  ஆடை பூண்டிருந்தான். அவன் தேர்க் குதிரைகள் பிய்த்துக்கொண்டு ஓடி விட்டன.

இருபதினாயிரம் த்ரிகர்த்தர்களும்  மத்ஸ்ய சேனையும்  அர்ஜுனனை இப்போது நேரடியாக தாக்கியதை அவன் சர்வ சாதாரணமாக எதிர்த்துக் கொண்டிருந்தான்.  ஒரு பக்கம்  தந்தையும்  ( அர்ஜுனன்) மறு பக்கம்  மகன் (அபிமன்யு) சேர்ந்து தாக்குவது கண் கொள்ளாக் காட்சியானது.

கேகயர்கள்  விலகி ஓடினர். பத்து அம்புகளில்  க்ரிதவர்மனின் தேரோட்டி  மரணமடைந்தான். அவன் தேர் நிலையாக  நின்றது. பீமன்  துரியோதனனையும் அவன் சகோதரர்களையுமே  தேடி  துரத்தினான். அவன் சபதம் நிறைவேற வேண்டாமா?
துருபதன் மகன் திருஷ்ட த்யும்னனோடு கடும் போர் செய்த புரூரவன் மகன்  தமனன் உயிரிழந்தான். வீராவேசமாக போரிட்ட  சாம்யமணி மகனும் திருஷ்ட த்யும்னன் வாளால் தலை இழந்தான்.   பீமன் கதாயுதத்தோடு தன்னை நோக்கி ஓடிவருவதை பார்த்து  துர்யோதனனும் அவன் சகோதரர்களும் அங்கிருந்து விலகி பாதுகாப்பாக  துரோணர் படையின் பின்னால் சென்றனர். விகர்ணன் அங்கே பீமனை எதிர்த்தான்.

'சஞ்ஜயா,   என்னை  எப்போதும் தூக்கமின்றி செய்பவன்  பீமன் ஒருவனே. அவனால்  என்னென்ன ஆபத்துக்கள் என் வம்சத்துக்கு நேரப்போகிறதோ என்ற கவலை  என்னை  பிடுங்கித் தின்கிறது. நீ சொல்லும் விஷயங்கள்  எல்லாமே என் மக்கள் படை கொஞ்சம் கொஞ்சமாக  நாசமாகிறது  என்று தான் இருக்கிறதே ஒழிய  பாண்டவர்களை நம் கௌரவ சேனை அழித்ததாக  இல்லையே.  என் மகன் தோற்றுக்கொண்டே வருவதை என் மனம்  ஏற்க மறுக்கிறதே'' என்று அரற்றினான் திருதராஷ்டிரன்.

சல்லியனுக்கும்  திருஷ்டத்யும்னனுக்கும்  உண்டான மோதலில் அபிமன்யுவும் சேர்ந்து  சேனையை தாக்கினான். சல்லியன்  தேரை இழந்தான். காயமுற்று விலகினான்.
அபிமன்யுவை எதிர்த்து  மகத அரசன் படையோடு போரிட்டு  கடைசியில் உயிரிழந்தான். துர்யோதனன், விகர்ணன்,துச்சாதனன், ஆகியோர் விரைந்தனர். பீமன் இதை பார்த்து விட்டான். துரியோதனனை  கண்டு மகிழ்ந்தான். துரியோதனனை பாதுகாத்து அவன் சகோதரர்கள்  துர்முகன்,   துச்சலன்,
துர்மர்ஷணன்,  சித்ரசேனன் ஆகியோர் தடுத்தனர்.  பத்து வீரர்கள் அபிமன்யுவை  எதிர்ப்பதை  பார்த்த பீமன்  வெகுண்டான்.   துர்யோதனன் த்ரிஷ்டத்யும்னனை  தாக்கினான்.

நகுல சகாதேவர்கள் அதற்குள் துர்யோதனனை தாக்குவதில் சேர்ந்துகொள்ள, பீமன்  துரியோதனை நெருங்கினான்.   பீமனை தடுக்க யானைகள்  விடப்பட்டன.  பீமன் யானைகளை  கொன்றான். அவனது  முரட்டு  பலம்  எதிரிகளை  அஞ்ச செய்தது.
அம்பு மாரி பொழிந்து கௌரவ சேனையை அழித்தார்கள். தன்னை எதிர்த்து ஏவிய மத யானையை ஒரே  பாணத்தில்  கொன்றான்  அபிமன்யு.    கொசுவை வேட்டையாடுவது போல்  பீமன் யானைப்  படையை நிர்மூலமாக்கினான்.  யானைப்படைகளை அழித்த பீமனைக் கொல்ல  ஒரு பெரும்படையை மீண்டும்
 துரியோ
தனன்  ஏவினான்.  

இதை  கவனித்த  சிகண்டி, சகாதேவன் ஆகியோர்  சாத்யகியோடு  பீமபாதுகாக்க சூழ்ந்து கொண்டனர்.

சாத்யகி  பூரிஸ்ரவசை அபாயமாக தாக்குவதை  கண்டு  துர்யோதனனின் சகோதரர்கள் உதவிக்கு வந்தனர். பீமன்  அவர்களை நோக்கி விரைந்தான். ''அரசே உங்கள் மகன் நந்தகன்  பீமனை தாக்கினான்.   பீமனின் மார்பில்  துரியோதனன்  ஈட்டிகளை எறிந்தான்.

''தேரோட்டி,   அதோ  பார், எதிரே துரியோதனனும் அவன் சகோதரர்களும் என்னை  எதிர்க்கின்றனர்.  நான் காத்திருந்த  சந்தர்ப்பம் இது.  தேரை  அவர்களுக்கு  அருகே செலுத்து''  என்று கட்டளையிட்டான் பீமன்.

நந்தகன் வில்லை  பாணங்களால் பீமன்  நொறுக்க அவன் வேறு  வில்லை எடுத்து  தாக்கினான்.பீமன் மார்பில்  ஈட்டி தாக்கியது.    திருதராஷ்டிரா, உனது 14  பிள்ளைகள் சேர்ந்து பீமனை தாக்கினார்கள்.   சல்லியனை எதிர்த்த பீமன் அவனைப்  படுகாயப்படுத்த  அவன் உயிர் தப்பி அங்கிருந்து அகன்றான்.

''அரசே, உன் மகன் சேனாபதி தான் முதலில்  உயிரிழந்தவன், அடுத்து  பீமன், (இவன் வேறு பீமன்.  துர்யோதனன் சகோதரன்),  பீமரதன் , சுஷேணன், வீரவாஹு,  ஜலசந்தன் , உக்ரன், ஆகியோரை  பீமசேனன் கொன்றான்.   பீமனை தடுக்க  பகதத்தன் ஒரு  பெரிய சேனையோடு விரைந்தான்.   கடோத்கஜன்  தந்தைக்கு உதவ ஒரு படையோடு அங்கே வந்து விட்டான்.

''பகதத்தன் பீமனிடம்  அகப்பட்டான். கடோத்கஜன்  மாய ஜாலங்களில்  வல்லவன்.  நிலைமையை உணர்ந்த பீஷ்மர்  அங்கே செல்வோம்''  என்று  துரோணரோடு  விரைந்தார்.

யுதிஷ்டிரன் தலைமையில்  சிகண்டி, திருஷ்டத்யும்னன் துருபதன்  விராடன்   ஆகியோர் பீமனுக்கு உதவ வந்தனர்.  சிகண்டி  பீஷ்மருக்கு குறி வைத்தான்.   இரவு நெருங்கி விட்டது. சூரியன்  அஸ்தமித்து நேரம் ஆகிவிட்டதே.   பீஷ்மர் இனி யுத்தம் தொடர்வதில் பயனில்லை என்று  உணர்ந்து   அன்றைய யுத்தம் இந்த அளவில்  நின்றது.

வெற்றி சங்க நாதத்தோடு  பாண்டவ சேனை அன்றைய வெற்றியில்  களித்தது. அன்றைய மாவீரன் பீமன் என்று எல்லோரும் அறிந்தது தானே.   துரியோதனன்  ஏழு சகோதரர்களை  பீமனிடம் பறிகொடுத்த துக்கத்தோடு  பாசறை திரும்பினான்.

''ஐயோ,  சஞ்சயா,  விதுரன் சொன்னதெல்லாம் நடக்கிறதே. யாராலும் வெல்ல முடியாத  பீஷமரே என் மக்களுக்காக  முன் நின்று போரை நடத்தினாலும் பாண்டவர்களை வெல்ல முடியவில்லையே. என் மக்கள் அழிந்து போகிறார்களே. எத்தனையோ மா வீரர்களும் சேர்ந்தும் அவர்களை வெல்ல முடியவில்லையே.  இது விதியின் செயலே  என் செய்வேன்'' என்று அழுதான் திருதராஷ்டிரன்.

''அரசே  எங்கு  நேர்மை, நீதி  பலம், இருக்கிறதோ  அங்கு வெற்றி நிச்சயம்  தானே. உன் மக்கள் செய்த  துரோகம் அவர்களை இப்போது தின்கிறது. செய்த தவறுக்கு  கூலி கொடுக்கிறார்கள்.  பீஷ்மர், துரோணர் விதுரர், கிருஷ்ணன் , நான் கூட, சொன்னதெல்லாம்  உங்கள்  யார் காதிலும் விழவில்லை. இப்போது மார்பில் அம்பாக பாய்கிறது.   உன் மகன் துரியோதனனும் இதையே தான்   பீஷ்மரிடம் கேட்டான்'' என்றான் சஞ்சயன். 

'' பீஷ்ம பிதாமகரே,  துரோணர், பகதத்தன், சல்லியன், கிருபர், அஸ்வத்தாமன்  நீங்கள் எல்லோரும் மூவுலகில் யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்று  இருந்தும் ஏன்  பாண்டவர்களை வெல்ல முடியவில்லை?  யாரை  அப்படி  மாபெரும் பலமாக  நம்பி அவர்கள்  போர் புரிகிறார்கள் எனக்கு உடனே பதில் சொல்லுங்கள்?'' என்றான் துரியோதனன்.

''இதோ பார்  துரியோதனா, எத்தனையோ முறை தொண்டை கிழிய நான் உனக்கு புத்திமதி சொன்னேன். பாண்டவர்களோடு நட்பு கொண்டால் உனக்கும் உலகுக்கும் நல்லது என்று.  நீ கேட்கவில்லை. அவர்கள் வெல்ல முடியாவர்கள். நாராயணனே அவர்களுக்கு துணை நிற்கிறான். மூவுலகும் போற்றும் மாவீரர்கள். இந்திரன்  வருணன், அக்னி, பிரம்மா, பரமசிவன் அனைவரின்  ஆசியோடும்,  ஆயுதங்களோடும்  பாண்டவர்கள் எதிரே நிற்கும்போது  யார்  அவர்களை வெல்ல முடியும்?'என்றார்  பீஷ்மர்.

இரவு மெதுவாக  நகர்ந்து ஐந்தாம்  நாள் பொழுது புலர்ந்தது. என்ன நடக்குமோ??   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...