Monday, June 3, 2019

VETRI VERKAI



அதி வீர ராம பாண்டியன்   J K  SIVAN 



            பனை  ஆலமர விதைகள்  என்ன சொல்கிறது? 

சிவ  சிதம்பரம், கோ. கணபதி  என்ற  ரெண்டு தமிழாசிரியர்கள்  நான் படித்த பள்ளியில்.  சிவசிதம்பரம்  கடுகடு. மாணவர்கள் நெருங்க  பயப்படுவோம். திட்டுவார். நல்ல தமிழ் பண்டிதர். கணபதி வாய் திறவாமல் புன்னகைப்பவர்.  எம் கே  தியாகராஜ பாகவதர் கிராப். வெள்ளை முழுக்கை சட்டை வெட்டி.  அருகே மட்டும் செல்லக்கூடாது.  சார்மினார் சிகரெட் நெடி  தாங்காது.  மடிப்பு கலையாத சலவை செய்த ஜரிகை அங்கவஸ்திரம்.   மிருதுவாக பேசுபவர். கையில் பிரம்பும் பேசும்.  அவர்  மூலம்  தான்   எனக்கு தூங்கு மூஞ்சி மரத்தடியில்  அதி வீர ராம பாண்டியன்  அறிமுகமானான்.   அவனது அருமையான நூல்   வெற்றி வேற்கை. அதற்கு  நறுந்தொகை என்ற பெயர் உண்டு என்று பல வருஷங்கள் தெரியாது.

அதி வீர ராம பாண்டியனை பற்றி அவ்வளவு நல்ல  ஒபினியன் இல்லை.  கொஞ்சம் பலான விஷயங்கள் பற்றி எல்லாம்  எழுதியவர் என்பார்கள்.  இவர் 16ம் நூற்றாண்டு  பாண்டிய ராஜா  (564–1604)   சமஸ்க்ரிதம் தெரிந்த ராஜா. இல்லாவிட்டால்  நைடதம் என்று  நளன்  கதை எழுத முடியுமா? வெற்றி வேற்கை என்னும் நீதி நூலைத் தவிர,  காசி காண்டம், கூர்ம புராணம், மாக புராணம்  எல்லாம் வேறு எழுதி  ஏனோ கொக்கோகம் எனப்படும் காமநூலையும் தமிழில்  எழுதி  விட்டார். அதனால் தான் பல கோயில்களையும் கட்டினாரோ?  தென்காசி சிவன்கோயில்  விஷ்ணு கோயில்  ரெண்டுமே  இவர் கட்டினது தான். இவருக்குச் சீவலமாறன் என்றும் பெயர். 

என் விஷயத்துக்கு வருவோம்.  பதினாலு வயதில் இந்த பாட்டு  எனக்கு  அர்த்தம் புரியவில்லை.  அந்த அளவுக்கு மனத்திலும் ஆழம் இல்லை.  மனப்பாடம் மட்டும் பண்ணியது நினைவிலிருக்கிறது.  ஒப்பிக்காவிட்டால் கணபதியின் பிரம்பு பேசுமே . பிரம்பினால் மனதில் படிந்த அற்புத பாடல்.  இப்போது ரசிக்கிறேன்.

''தேன்படு பனையின் திரள்பழத்து ஒரு விதை
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.''

வெயில் காலத்தில் இப்போது   நங்கநல்லூரில்  நுங்கு  விற்கிறார்கள்.  விலை  பனைமரம் உயரம்.  பனம்பழம்  சுவை சப்பு சப்பு என்று இருக்கும்.  நார்  ஜாஸ்தி.   அதன் விதை  பெரியது.  பனைமரம் நீளமாக உயரமாக வளர்வது. இப்போதெல்லாம் மறைந்து போய்விட்டது.  பனந்தோப்பு இருந்த இடம் எல்லாம் பல மாடி கட்டிடம் தான் உயரமாக இருக்கிறது.  அவ்வளவு உயரமாக இருந்தாலும் வளர்ந்தாலும் பனைமரத்தின் அடியில் வெயிலுக்கு நிற்க  நிழல் கிடையாது.   உயரமாக இருந்து என்ன பிரயோஜனம் லென்று கேட்கிறான் அதிவீர ராம பாண்டியன்.  அதே சமயம்  இந்த  ஆலம்பழத்தை பார். அதற்குள் எத்தனை குட்டி குட்டி கடுகு மாதிரி விதைகள். அடேயப்பா , அதிலிருந்தா இவ்வளவு பெரிய  ஆலமரம்  ஆயிரம் பேருக்கு  நிழல் தருகிறமாதிரி வளர்கிறது.   அடையார் ஆலமரம் பார்த்திருக்கிறீர்களா?
ராஜா யானை குதிரை படையோடு தங்க நிழல் கொடுக்கும்.  
இந்த பெரிய  பனம்பழ விதையிலிருந்து வரும் நீண்ட உயர பனைமரம்,  குட்டியாக உள்ள  ஆலம்பழ விதையிலிருந்து வரும்  பிரம்மாண்ட ஆலமரமும் நமக்கு என்ன நீதி சொல்கிறது? 

எவனை  அவன் ரொம்ப பெரிய மனிதன் என்று நினைக்கிறாயோ அவன் அப்படி இல்லை.  சாதாரணமான சில்லறை ஆள் என்று நீ   எடைபோட்டு புறக்கணித்தவன் சிறியவன் இல்லை.  
அவரவர் தகுதி பெருமை எல்லாம்  சரியான முறையில் கணித்து விட்டு  அப்புறம் பேசு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...