Thursday, June 20, 2019

VIKRAMADITHTHAN

                               
விக்ரமாதித்தன் கதை      J KSIVAN                               
                                          
                                                       
      1.    சமுத்ரகுப்தன் முதல் பர்த்ருஹரி வரை 

குப்தர்கள் ஆட்சி  இந்த நாட்டின்  சரித்திரத்தில் ஒரு  சிறப்பு அம்சம்.  சாணக்கியன் ஸ்தாபித்த ஹிந்து சனாதன தர்ம  ஆட்சி சந்திர  குப்தனுக்கு பிறகு  சமுத்திர குப்தன் அரசாண்டவன்.  வேத சாஸ்திரங்கள் கற்றவன்.   சிறந்த கல்விமான்களை தேடி பிடிப்பவன். மேலும் மேலும்   ஹிந்து சாஸ்திரங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன்.  உஜ்ஜயினிக்கு வந்தான்.  களைத்து போய்  ஒரு  பெரிய  அரசமரத்தடியில்  படுத்தான்.  அந்த மரத்தில் ஒரு ப்ரம்ம ராக்ஷஸன் வெகுகாலம் குடியிருந்தவன்.  சமுத்ரகுப்தனைக்  கண்டதும் பெருமகிழ்சசி பிரம்மராக்ஷஸனுக்கு  

“தூங்கும்  குப்தனை எழுப்பியது.  ''அடே , நீ யார். இந்த அடர்ந்த காட்டுக்குள் ஏன் வந்தாய்? ஆற்றின் அக்கரையில்  அல்லவோ உஜ்ஜயினி நகரம் உள்ளது. அங்கே போனால் உண்ண , தங்க வசதி கிடைக்குமே'' என்றது.

''நன்றி ஐயா, நீர் யாரென்று தெரியவில்லை. நான் சமுத்திர குப்தன்.  நன்றாக கற்றறிந்த ஒரு  ஆசானை தேடி அலைகிறேன். அவரை தேடி கண்டுபிடிக்கும் வரை உணவு, தங்குமிட வசதிகளில் அக்கறையில்லை.

சமுத்திர குப்தா, நான் வேதமறிந்த பண்டிதன். நானே உனக்கு ஆசிரியனாக இருக்க தயார். ஆறுமாதம் இரவு பகல் தொடர்ந்து நீ கற்கவேண்டும்.  அந்த ஆறுமாதம் நீ  உணவு தூக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.   அதற்கான சக்தியை நானே உனக்களிப்பேன்.  இன்னொரு விஷயம்.  ஆறு மாதம் என்னிடம் கற்றபின் நீ இங்கிருந்து போனபின், உனக்கு  கபகப என்று ஆறுமாத பசி எடுக்கும், ஆறுமாத தூக்கமும்  வரும். சரியா? சமாளிப்பாயா? சரி என்றால் உனக்கு பாடங்கள் கற்பிக்கிறேன்''
''சரி'' என்றான் குப்தன்.
ப்ரம்ம ராக்ஷஸன் அரசமரத்து இலைகளில் வேகமாக  எழுதி தள்ளினான். கீழே போட்டான். சமுத்திர குப்தன் எடுத்து ஒவ்வொன்றாக படித்தான்.  ஆறுமாதம்  இரவு பகலாக  எல்லாம் கற்றுக்கொண்டு ஆற்றைக்கடந்து உஜ்ஜயினி புறப்பட்டான்.  பசி கொன்றது. தூக்கமும் கண்ணை சுழட்டியது.  ஒரு இடத்தில் கீழே படுத்துவிட்டான்.  

அலங்காரவல்லி  என்று ஒரு பெண்மணி அவனை பார்த்து இவ்வளவு நோஞ்சானாக பசியோடு இருக்கிறானே என்று பரிதாபப்பட்டு ஒரு வைத்தியரிடம் கூட்டி போனாள் .  ''இவனுக்கு ஒரு நோயும் இல்லை. ஆறு மாதமாக சாப்பிடாதவன், தூங்காதவன்.   சாதம் சமைத்து சூடாக  அவன் உடல் முழுதும்  மூன்று  மாதம் அப்பி,  ஒத்தடம் கொடு.  தூக்கம் கலைந்து சரியாகிவிடுவான்'' என்றான் வைத்தியன்.  அவ்வாறே செய்தாள் அலங்காரவல்லி.  

மூன்று  கழிந்து சமுத்திர குப்தன் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தான்.  ''நான் எங்கே இருக்கிறேன்?என்று சினிமாவில் கேட்பது போல் கேட்டான்.   அலங்காரவல்லி  நடந்ததை சொல்லி ''நான் உன்னை காப்பாற்றினேன்  நீ என்னை கல்யாணம் செயது கொள்ளவேண்டும் '' என்கிறாள்.அடடா  இப்படி ஒரு ஆபத்தா, ப்ரம்ம ராட்சசன் எவ்வளவு நல்லவன் என்று எண்ணி  ''அதெல்லாம் முடியாதும்மா '' என்றான் சமுத்திர குப்தன்.  அலங்கார வல்லி  அழுதுகொண்டே போய் உஜ்ஜயினி ராஜாவிடம் சொல்லி நியாயம் கேட்கிறாள்.
ராஜா ரெண்டுபேர் கதையும் கேட்டான். கடைசியில் ''சமுத்திர குப்தா, நீ என் பெண்ணையும் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்'' என்று சொல்லிவிட்டான்.  ராஜா சொன்னது எதிரொலிப்பது போல  மந்திரி, ராஜகுரு இருவரும்  கூட ''எங்கள் பெண்களையும் நீ கல்யாணம் செய்துகொள்ளவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்கள்.  உஜ்ஜயினியில் சமுத்திர குப்தனுக்கு இவ்வாறு நான்கு மனைவிகள் கிடைத்தனர்.

ராஜகுரு பெண் மூலம்  வரருசி என்ற ஸமஸ்க்ரித பண்டித  கவிஞன் பிறந்தான். ராஜாவின் பெண் மூலம் விக்ரமாதித்தன் என்ற இளவரசன் பிறந்தான். மந்திரி பெண் மூலம் பட்டி  என்ற மந்திரிகுமாரன் பிறந்தான். அலங்கார வல்லி மூலம்  பர்த்ருஹரி பிறந்தான்.   ராஜா பர்த்ருஹரி எழுதிய  வைராக்கிய சதகம், சுபாஷிதம், நீதி சதகம் எல்லாம் அவ்வப்போது எழுதுகிறேன். படித்த ஞாபகம் இருக்கிறதா?.  
சமுத்திர குப்தன் உஜ்ஜயினி ராஜாவாகிறான்.   காலம் நகர்கிறது. சமுத்ரகுப்தன் கிழவனாகி இறக்கும்  சமயம் அழுகிறான்.  நான்கு பிள்ளைகளும்  அவனருகில்  நின்று அவனை தேற்றுகிறார்கள்.   பர்த்ருஹரி மூத்தவன்.  
சமுத்ரகுப்தன் அவனிடம்  ''பர்த்ருஹரி நீ மூத்த இளவரசன். அடுத்த ராஜா. ஆனால் உன் வமிசம் ராஜ வம்சம் இல்லை என்பதால்  நாட்டை ஆள முடியாதே  என்று தான் அழுதேன்'' என்கிறான். சமுத்திர குப்தன்.  '' அப்பா கவலைவிடுங்கள்.  நான்  நாட்டை ஆள்கிறேன். எனக்கு அப்புறம் என் வமிசம் ஆளாது. இது நிச்சயம்'' என்கிறான் பர்த்ருஹரி.

அசந்து போகாதீர்கள். பர்த்ருஹரி  பெயரும் புகழும் பெற்ற சிறந்த   ராஜாவாகி ஆயிரம் ராணிகள்  அவனுக்கு.   அவர்களில் அநங்கசேனா என்பவள் மேல் அலாதி மோகம்.  

உஜ்ஜயினியில் ஒரு பிராமணன் வெகுகாலம் தவம் செயது பூமி தேவி ப்ரத்யக்ஷம் ஆகிறாள்.
''ப்ராமணா, உன் தவத்தை மெச்சினேன். என்ன வரம் வேண்டும் கேள்?''
''எனக்கு வயதாகிவிட்டது. மூப்பு பிணி வந்துவிட்டது. நான் என்றும் இளமையோடு பலகாலம் இருக்கவேண்டும்?”

''அவ்வளவு தானே, இந்தா  இந்த தங்கநிற மாதுளையை சாப்பிட்டால் நீ என்றும் இளமையோடு இருப்பாய், திருப்தியா?'' என்று கொடுத்துவிட்டு மறைந்தாள்.

பிராமணன் யோசித்தான். ''நான் இனி இளமையோடு இருந்து என்ன பயன்?  இந்த நாட்டை ஆளும் அருமையான ராஜா பர்த்ருஹரி என்றும் இளமையோடு நீண்டகாலம் இருந்தால் எல்லோருக்கும் அது பயனளிக்குமே !''   அவனிடம் இந்த தேவலோக மாதுளையை கொண்டு கொடுக்கிறான் பிராமணன்.  விஷயம் அறிந்த பர்த்ருஹரி அவனுக்கு நிறைய  நிலம், செல்வம் எல்லாம் அளித்து மாதுளங்கனியை பெறுகிறான்.   ராஜா மனதில் ஒரு திடீர் எண்ணம். ''இந்த மாதுளங்கனியை என் காதல் ராணி அநங்கசேனாவிடம் கொடுத்து அவள் உண்டால்  நீண்டகாலம் இளமையோடு இருந்து மகிழ்விப்பாளே '' . மாதுளை இப்போது கைமாறி அநங்கசேனாவிடம் . அநங்கசேனா ராஜா பர்த்ருஹரி மனைவியாக இருந்தாலும் அவள் மனதை கொள்ளை கொண்டவன் அரண்மனை  அழகான ஒரு இளம்  ராஜாவின் தேரோட்டி.''   அவனிடம் கொடுத்தால் தனது  காதலன் என்று இளமையானவனாக இருப்பானே.''
தேரோட்டி க்கு  உள்ளபடியே ஏற்கனவே ஒரு பெண் மேல் காதல். அரண்மனை குதிரை லாயத்தை கழுவி பெருக்குபவள். தேரை குதிரையில் பூட்டும்போதெல்லாம் சிரித்து அவன் மனதை கொள்ளைகொண்டவள். அவளிடம் மாதுளங்கனி  செல்கிறது. அப்புறம்?  அந்த வேலைக்கார பெண் தங்க மாதுளையை ஒரு கூடையில் வைத்து வீட்டுக்கு எடுத்து செல்கிறாள். அந்த வழியாக எதேச்சையாக வந்த பர்த்ருஹரி கண்ணில் தங்க மாதுளங்கனி பட்டுவிட்டது. விசாரணை துவங்கி எல்லா உண்மைகளும் வெளிவந்து பர்த்ருஹரி அதிர்ச்சி அடைகிறான்.  நாடு, மனைவி, அரசாட்சி, எல்லாமே வெறுத்து விட்டது. பெரிய சூன்யமாகி விட்டது வாழ்க்கை. ஏமாற்றம். துரோகம்.  தம்பி விக்கிரமாதித்தனை அரசனாக்கி விட்டு துறவியாக செல்கிறான்.  இன்னொரு தம்பி பட்டி விக்கிரமாதித்தனின் மந்திரியாகிறான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...