Saturday, June 22, 2019

BARATHIYAR

                                                     
கண்டதுண்டோ கண்ணன் போல்..... J K SIVAN

 சென்னையை  மழை   ரொம்ப சோதித்து விட்டது.  எல்லா  கைகளும்  அரசியல்வாதிகளை, அரசாங்கத்தை சுட்டிக் காட்டுகிறதே. நியாயமா? நாம்  செய்வது சரியா?  மழைநீரை சேமிக்க வில்லையே. மரங்களை வெட்டி விட்டோமே. வீட்டுக்கு ஒரு மரம் வைத்து பிராயச்சித்தம் பண்ணுவோமா?  இனி மழைநீர் சேமிப்போமா?  ஏரி ஆறு குளம் எல்லாம் தூர்வாராமல் அங்கே வீடு கட்டினோம்.  பத்தாயிரம் பேர் இருக்கும் இடத்தில் லக்ஷங்கள் வாழ்கிறோம். பாதாளம் வரை  துளைத்து நீர் தேடி, கிணறுகளை இழந்துவிட்டோம். செய்வதெல்லாம் செய்துவிட்டு வருணனை  வேண்டினால், அவன் இடிக்காமல் சிரிக்கிறான்.
 நான் மிகவும் களைத்துப் போய்  விட்டேனடா கண்ணா.  அடுத்து அடுத்து   பல  நாட்களாக என்னை சுற்றி நிகழும் சம்பவங்களின்  செய்திகள் என்னை துன்புறு த்திவிட்டன. ஒரு பெரும் இழப்பை என் மனம் அனுபவித்தது. நம்பி  நம்பியே  நம்பியாண்டார் நம்பியாக  போய்விட்டோமோ?   எதுவுமே  உருப்படி இல்லையோ?  இப்படி  ஒரு நாடா?  இது ஒரு கேடா?
ஏதோ ஒரு பாட்டில் வருமே  அது உண்மை என்றே நீ  நிருபித்து விட்டாய்.   ''வஞ்சகன்  கண்ணனடா''  என்பதை நிரூபித்துக்கொண்டே வருகிறாய். இந்த உலகில் உள்ள நல்ல மணிகளை பொறுக்கித்  தேடி எடுத்துகொண்டு போய்விட்டு  வெறும்   உமியும் தவிடும் இங்கே நிறைய  விட்டு வைத்திருக்கிறாய்.  சரி எல்லாம்  ''போகட்டும் கண்ணனுக்கே''  என்று  தான்  இருக்கிறோம்.?
கண்ணா, நீ  உருவில் ஈடிணையற்றவன், அறிவுச்சுடர்.  அனைத்து  உயிர்களின் உள்ளே  ஊற்றாக ஒளிர்கின்றவன். ஒவ்வொரு உயிரிலும்  மற்றொன்றாக  உருவாகி  வளர்கின்றவன்.  உன்னை நான்  எப்படி  போற்றுவேன்?.  உன் கமலத் திருவடிகளை நெஞ்சில்  மாறாமல் வைத்து  வணங்குவது ஒன்றே  தான்  நான்  செய்யவேண்டியது.  என்னால் செய்ய முடிந்தது இது ஒன்றுதான் கண்ணா.
என்னோடு எப்போதும் இரேன். என்  ஆவியோடு  கலந்து இரு. என்னை விட்டு விடாதே.  என் இதயத்தைப்  பார். சுத்தமாக  உனக்காக அதை காலி செய்து வைத்திருக்கிறேனா  இல்லையா?. அதில் வந்து இரு.  அமர்ந்து கொள். அங்கேயே நிரந்தரமாக  இரு . எப்போது தேவையோ  அப்போது வெளியே  போய்  நீ  அழிக்க வேண்டிய  அசுரர்களை கொன்று விட்டு  உடனே திரும்பி வா.
என் எதிரே பார்க்கிறேனே  நீண்ட  கடல்,  அதன் மீது விடியலில்   உதிக்கும்  சூரியா, என் உள்ளக்கடலிலும் நீ தினமும் உதிக்கவேண்டாமா?.
உன்னை  நான் கண்டு வணங்கி  தொழ  வேண்டாமா?. சிவன் சம்ஹார மூர்த்தி.  நீயே தான் அது. என் உள்ளத்தில் எழும்  தீய எண்ணங்களை  சம்ஹரித்து விடு. நான் மட்டுமா உன்னை தொழுபவன்?. இந்த  ஈரேழு உலகமும்  உன்னை  தொழுகிறதே. தேவாதி தேவன் அல்லவா நீ.
இது மாங்காய் சீசன்.  ஒரு  மாங்காயை யாரோ தந்தார்கள். ஒரு கடி கடித்தேன். அப்பப்பா,   என்ன புளிப்பு!. எனக்குள்  சிரிப்பு.  ஏன் தெரியுமா?  உன்னை நினைத்து அதை கடித்தேன். அதன் புளிப்பு நீ தானோ என்று!!.
அப்படியென்றால்  பழுத்த  பழத்தின் இனிப்பும்  நீ தானே.  உடல் சரியில்லை  என்று படுக்கும்போது என் உடலில்  தோன்றிய  நோயும் நீ என்றே தான்  இருக்க வேண்டும். அந்த  நோய் தீர விரதம் இருந்தேனே அப்போது அந்த விரதமும்  நீயல்லவா?
இதோ நடக்கிறேன். எதிரே  தெரிகிறதே பெருங்கடல் என்னோடு கூடவே  வருகிறதே. அதிலிருந்து தான்  எத்தனை சுகமாக  குளிர்ந்த காற்று வீசுகிறது. இல்லை யப்பனே,  நீ  தான் அப்படி  என்னை மகிழ்வூட்ட என் உடலைத் தழுவுகிறாய்.  நீ வேறு காற்று வேறா?  பகல் பன்னிரண்டு மணி நேரத்திலும் இதே கடற்கரையில் நடந்திருக்கிறேனே.  கால்  செருப்பையும் மீறி  அனல்  வீசி  கால் உடல் எல்லாம்  என்னை காய்ச்சும்போது  அந்த கனலும் அனலும் கூட நீ தான்.    
ஒரு சிறு மழையே  போதும்.  கிராமங்கள் அல்ல  பட்டினங்களும் தான்.   சேற்றை வாரி  வேட்டியில் பூசும்.  அது சரி.   அந்த சேற்றைக்  குழம்பாக்கியது யார்.  நீ தானே?  அந்த  சேற்றின் குழம்பு  போலவே தான் என் உள்ளத்தில் ஊரும்  எண்ணங்களும்  மொத்தமாக  கலந்து குழம்பாகிறது.. என் எண்ணக் குழம்பிலிருந்து தானே  எல்லா குழப்பமும் வருகிறது....! அப்போது  நான் நாலா பக்கமும் திரும்பி பார்ப்பேனே.  அந்த திக்குகளில் எல்லாம் நீயே அல்லவோ எனக்கு உடனே நான்  தேடும் தெளிவாக  காட்சி அளிப்பவன்.
எனக்கு  இன்னும்  ஒன்று சரியாக தெரியவில்லையே.   உன்னை எப்படி  தொழுவது?  எப்படி வேண்டு                        மானாலும்  எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உன்னை  ''நினைத்தாலே தொழுவது''   தானே கண்ணா முறை?   நீ  தான்  சுலபமானவன்  ஆயிற்றே. ''கேட்டதும் கொடுப்பவனாயிற்றே  கண்ணா....'' உனக்கு இருப்பவன்,  இல்லாதவன்  எவருமே ஒன்று தானே.  முக்யமாக  எளியோரைச் சேர்ந்தவன் நீ. அதே சமயம் யார் உன்னைப்  போற்றினாலும் அவர்களுக்கும் அதே அன்பு கருணை.
ஆனால்  வஞ்சகம், பொய், பிறருக்கு துன்பம் செய்வோரை மட்டும் நீ  வேறு மாதிரி அணுகுகிறாயே, எப்படியப்பா? அப்போது மட்டும் உன்னிடம் கருணை, அன்பு எதையுமே காணுமே.  நீ  விசித்ரமானவன் கண்ணா.   உண்மையில்  துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் எனக்கு நன்றாக புரிய வைக்கிறாய் கண்ணா. ++ நான் மேலே சொன்னது  என் எண்ணத்தோடு  பாரதியாரின்  இரு பாடல்களின்  பொருளும் சேர்ந்தது.  அந்த இரு பாடல்களும் கீழே உள்ளவை தான். எல்லோருக்கும் தெரிந்தவை.  கண்ணனைப் போல்  பாரதியும் எளிமையானவர் தானே.
வருவாய், வருவாய், வருவாய் -- கண்ணா வருவாய், வருவாய், வருவாய்.
                  சரணங்கள்
உருவாய் அறிவில் ஒளிர்வாய் -- கண்ணா உயிரின் னமுதாய்ப் பொழிவாய் -- கண்ணா கருவாய் என்னுள் வளர்வாய் -- கண்ணா கமலத் திருவோ டிணைவாய் -- கண்ணா(வருவாய்)1
இணைவாய் எனதா வியிலே -- கண்ணா இதயத் தினிலே யமர்வாய் -- கண்ணா கணைவா யசுரர் தலைகள் -- சிதறக் கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)2
எழுவாய் கடல்மீ தினிலே -- எழுமோர் இரவிக் கிணையா உளமீ தினிலே தொழுவேன் சிவனாம் நினையே -- கண்ணா, துணையே, அமரர் தொழும்வா னவனே! (வருவாய்)
             கண்ணன் துதி
காயிலே புளிப்பதென்னே?  கண்ண பெருமானே! -- நீ கனியிலே இனிப்பதென்னே? + கண்ண பெருமானே! நோயிலே படுப்பதென்னே?   கண்ண பெருமானே! -- நீ நோன்பிலே உயிர்ப்பதென்னே?   கண்ண பெருமானே!
காற்றிலே குளிர்ந்ததென்னே?   கண்ண பெருமானே! -- நீ கனலிலே சுடுவதென்னே?   கண்ண பெருமானே! சேற்றிலே குழம்பலென்னே?   கண்ண பெருமானே! -- நீ திக்கிலே தெளிந்ததென்னே?    கண்ண பெருமானே!2
ஏற்றிநின்னைத் தொழுவதென்னே?    கண்ண பெருமானே! -- நீ எளியர் தம்மைக் காப்பதென்னே?    கண்ண பெருமானே! போற்றினோரைக் காப்பதென்னே?    கண்ண பெருமானே! -- நீ பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?    கண்ண பெருமானே!3
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!    கண்ண பெருமானே! -- நீ பொன்னடி போற்றி நின்றேன்,    கண்ண பெருமானே!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...