Friday, June 7, 2019

ONE EYED MOTHER

இது மூன்று வருஷங்களுக்கு இந்த தேதியில் எழுதி முகநூலில் வெளியானதை ஒரு அன்பர் VALLINAYAKI RAMAKRISHNAN நினைவு கொண்டு இன்று முகநூலில் வெளியிட்டிருக்கிறார். நன்றி இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் ஆசி தேவை.

ஒரு கண்ணம்மா!!! -J K SIVAN

''ஏண்டா கோபு கோவமா இருக்கே ? ஏன் புஸ் புஸ் ஸுனு காளைமாடு மாதிரி மூச்சு?
''இந்த அம்மா ரொம்ப மோசம் தாத்தா ?''
''ஏண்டா, இப்படி சொல்றே? என்னடா பண்ணா உங்கம்மா அப்படி?
''பின்னே என்ன தாத்தா, என் பிரண்ட்ஸ் என்னை கேலி பண்றா. எதுக்கு அவ என் ஸ்கூலுக்கு வரணும் ங்கறேன்? பிரெண்ட்ஸ் எல்லாம் ''அதோ அது தான் கோபு அம்மா -- ரோடு ரோல்லர் ஒண்ணு உருண்டுண்டே வருதே அதுதான் .'' என்று கேலி பண்றானுங்க . அம்மா ரொம்ப குண்டு, நொண்டி நொண்டி நடக்கிறா. எதுக்கு ஸ்கூலுக்கு வந்து எனக்கு அவமானம் தரணும் .'' தாத்தா.

''அதுக்கென்னடா பண்றது. அவளுக்கு பாவம் ஹார்மோன் ப்ராப்ளம். அதோடு காலில் முட்டி வலி. நடக்க முடியாமல் நடந்து உனக்கு ஓடி ஆடி எல்லா வேலையும் செய்றாளே. இன்னிக்கு தான் ''லாஸ்ட் டே.
ஸ்கூல் பீஸ்'' கட்டலைன்னா உன் பேர் அடிச்சிடுவான்னு சொன்னியாம். கையிலே பணம் இல்லேன்னு என்னை வந்து கேட்டா. நான் ஏதோ கொஞ்சம் சேர்த்து வைச்சதிலே கொடுத்தேன். அதை எடுத்துண்டு ஓடினா. நான் கூட நான் போகட்டுமா ஸ்கூலுக்குன்னு கேட்டேன். உங்களுக்கு உடம்பு முடியலே நீங்க பேசாம வெயிலிலே அலையவேண்டாம்னுட்டு தானே ஸ்கூலுக்கு போனா. அதோடு மத்யானம் ஆயிடுத்தே என்று உனக்கு சூடா சாதம் பண்ணி கொண்டு போனாலே. சப்பிட்டியோல்லியோ? சாப்பிட்டுட்டா அவளை திட்டறே?''

''சாப்பிடும்போது தான் பிரெண்ட்ஸ் ஜாடை மாடையா பேசினாங்கள்.'' நான் அவளை சத்தம் போட்டு அனுப்பிட்டேன். என்னமோ எனக்கு என் பிரண்ட்ஸ் எதிரே அம்மா வரதே பிடிக்கலே

''சீ அப்படியெல்லாம் சொல்லாதே. ஒரு கதை சொல்றேன் கேளு. அதுக்கப்புறம் தான் நீ பண்றது தப்பு என்று உனக்கு சுள்ளுன்னு உரைக்கும்.

கோடீஸ்வரனுக்கு சின்ன வயதிலிருந்தே அம்மாவை பிடிக்காது. காரணம் அம்மாவுக்கு ஒரு கண் கிடையாது. அவள் கையால் சாப்பிடுவதே பாவம், அவள் பள்ளிக்கூடத்துக்கு வந்துவிட்டால் மற்ற பிள்ளைகள் அவளை ஒத்தைக் கண்ணு பிசாசு என்று கேலி செய்து சிரிக்கும்போது நாக்கை பிடுங்கிக் கொண்டு செத்துவிடவேண்டும்போல இருக்கும். கன்னா பின்னா என்று அவளை கத்துவான் . உன்னை மாதிரி தான் கோடீஸ்வரனும். அம்மாவை ''ஏன் என் பள்ளிக்கூடத்துக்கு வந்தே '? என்று திட்டுவான்.

'நீ டிபன் பாக்ஸ் எடுத்துண்டு போக மறந்து போயிட்டியேப்பா உனக்கு பசிக்குமே ராஜா ''என்று எடுத்துக்கொண்டு வந்தேன் என்று சொல்வா.'' அவன் சரமாரியான திட்டுவான். பாவம் தலை குனிந்து வருந்துவாள். இருக்கும் ஒரு கண்ணிலேயிருந்து தாரை தாரையாக கண்ணீர் வரும். பேசாமல் உள்ளே போய்விடுவாள்.

கோடீஸ்வரன் உடம்பு சரியில்லாமல் ஒரு சமயம் ஆஸ்பத்ரியில் சேர்ந்தான். இரவும் பகலும் அவனருகில் சிச்ருஷை செய்த அவளுக்கு கிடைத்த பரிசு அவனுடைய கோப பேச்சு தான். எல்லா நர்ஸ்கள், பக்கத்து வியாதியஸ்தர்கள், அவர்களைப் பார்க்க வருபவர்கள் எல்லோரும் அவளை விசித்தரமாக பார்ப்பது அவனுக்கு அவமானமாக இருந்தது. அவளை விட்டு எங்காவது போய்விடவேண்டும் என்பதற்காகவே அசுரத் தனமாக படித்து டெல்லியில் ஒரு வேலை கிடைத்தது. '' உன்னிடம் சில நாள் வந்து தங்கலாமா'' என்று கேட்ட தாயை எட்டி உதைக்காத குறையாக வெறுத்தான்.

''அம்மா செத்து விட்டாள்'' என்று சொல்லியே ஒரு டில்லி பெண்ணை டில்லியில் கல்யாணமும் செய்து கொண்டான். வருடங்கள் சென்றது. அவனுக்கு ரெண்டு பிள்ளைகள்.

எதோ ஒரு முறை ஊருக்கு ஒரு விசேஷத்துக்கு வருகிறான் என்று கேள்விப்பட்டு அவன் தாய் அவன் தங்கியிருந்த ஹோட்டல் விலாசத்தை தேடி கண்டுபிடித்து அவனைப் பாக்க காத்திருந்தாள். அவளை கண்டதும் அவள் ஒற்றை கண் அவனை மிருகமாக்கியது. பழைய கதையே தான். திட்டு திட்டு என்று திட்டி அனுப்பினான். வாய் திறவாமல் தாய் திரும்பினாள்.

சில வருடங்களில் அவள் இறந்த செய்தி கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அவனுக்கு. இனி அவனைப் பார்த்து யாரும் சிரிக்க மாட்டார்களே!!.

தாய் இறந்து சில நாட்களில் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. தாய் தான் எழுதியது.

"என் மகனே, என்னை மன்னித்து விடு. உன்னை இளம் வயதிலிருந்தே என்னுடைய அவலக்ஷணத்தால் ஒரு கண் அம்மாவுடைய பையன் என்று எல்லோரும் கேலி செய்ய காரணமாயிருந்து விட்டேன். உன்னை பார்க்காமல் இருக்க முடியாத தாய்ப் பாசத்தால் உன்னைக் காண மீண்டும் மீண்டும் உன் முன் தோன்றி உன் மன அமைதியைக் கெடுத்தேன். நீ மூன்று வயதில் ஒரு விபத்தில் சிக்கி உன் அப்பா இறந்துபோனார் உனக்கும் ஒரு கண் போய் விட்டது. எப்படியோ டாக்டர்களிடம் மன்றாடி என் ஒரு கண்ணை உனக்கு அளித்து என் கண்ணினால் நீ உலகைக் கண்டு இன்புறுவதை பார்த்து பூரித்தேன்.
என்னை மன்னித்து விடு இதை சொன்னதற்கு. என் ஆசை மகனே!!-நீ நீடூழி சந்தோஷமாக வாழவேண்டுமடா.
-- - உன் ஒரு கண் குருட்டு அம்மா”

கோடீஸ்வரன் சிலையானான். அவனுடைய இரு கண்களிலிருந்தும் -(ஒன்றுதான் அம்மா கொடுத்தது என்று தெரிந்து விட்டதே) -- நயாகரா நீர்வீழ்ச்சி. கடவுளே என்னை மன்னிப்பாயா?? என அவன் வாய் ஓயாமல் புலம்பிக்கொண்டிருந்தது.

'' என்னடா கோபு, இந்த கதையை கேட்டாயே. ஒரு படமும் பார். எனக்கு கிடைத்தது இது. ஒரு கையில்லாத மகன் நோய் வாய்ப்பட்ட கிழ அம்மாவுக்கு வாயால் ஸ்பூனில் ஆகாரம் ஊட்டுகிறான் பார். இது தான் தாய் மகன் உறவு. புரிந்து கொள்.



கதையைக் கேட்ட கோபு ஓடி அம்மாகிட்ட போய் '' ஸாரி மா'' என்று அவளை கழுத்தைக் கட்டிக் கொண்டான் என்று நான் சொல்லாமலேயே நீங்கள் யூகித்திருக்க மாட்டீர்களா என்ன?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...