Friday, June 7, 2019

NARASIMMA




நரசிம்மா ஆ  ஆ  ஆ     J K  SIVAN                                                                                      8 திருக்கடிகை
யாருக்கு முதலில்  இந்த செங்குத்தான மலைமீது நரசிம்மரை ஆலயம் கட்டி அதில் ஆரோகணிக்க செய்யவேண்டும் என்று தோன்றியது? எப்படி கிட்டத்தட்ட  1300 படிகள் அமைத்தார்கள் என்பதை யோசிக்க சரியான நேரம் அந்த 1300 படிகள் நடந்து சிலுசிலுவென்று குளிர்ந்த காற்றில் ஒரு ஓரமாக உட்காரும்போது தான்.  யோசிக்க தடை செய்பவர்கள் உண்டு. அவர்கள் பேசாமல் காரியம் நிறைவேற்றுபவர்கள். குட்டியும் பெரிதுமாக  குடும்பத்தோடு  குரங்குகள். அவர்கள் உங்கள் யோசனையில் பங்கு கொள்ளவோ, அதை ஆதரிக்கவோ எதிர்க்கவோ விருப்பமில்லாதவர்கள். உங்கள் கையில் பையில் என்ன இருக்கிறது சாப்பிட என்பதிலேயே  திட சித்தம் கொண்டவர்கள். ஜாக்கிரதை.
கஷ்டப்பட்டு  குரங்குகளோடு மல்லுக்கட்டி அத்தனை படிகள் ஏறினால் ஆனந்தமாக ''வாடா தம்பி என்று வரவேற்கிறார்  யோக நரசிம்மர்.  ''என்னப்பா எங்களை பார்க்க இப்போ தான்  தோன்றிற்றா?  என்று புன்முறுவலோடு கேட்கிறார்  அமிர்தவல்லித் தாயார்.   பக்தர்கள்  படியேற சளைப்பதில்லை  என்பதை கூட்டம் சொல்கிறது. நமக்கு முன்னாலேயே  வசிஷ்டர், காஷ்யபர், ஜமதக்னி, விஸ்வாமித்ரர் எல்லாம்  ரயில் பஸ் இல்லாமலேயே வந்து தரிசித்த ஆலயம்.
இந்த மலையில் ஆலயம் தோன்ற  மூல காரணம் வழக்கம்போல பல்லவ ராஜாக்கள். மலையைக் கண்டாலே  கோவில் கட்டுபவர்கள்.  சைவ வைணவ கோவில்கள்  பாகு பாடு இன்றி அவர்களாலும் சோழர்களாலும்  தான் நமக்கு நிறைய கிடைத்தவை. 
சோளிங்கர் செல்ல விரும்புவோர் சென்னை - பங்களூர் வழியில்  அரக்கோணத்திலிருந்து பஸ் மூலம் செல்லலாம்.  அரக்கோணத்திலிருந்து மேற்கே  27 கி.மீ.     சோளிங்கர் ரயில்வேஸ்டேஷனிலிருந்து 9 மைல் .  சென்னையிலிருந்து நேராக பஸ்ஸிலும் போகலாம்.  மலையடிவாரத்தில்  உத்ஸவர் இருக்கிறார். எதிரே  இன்னொரு சிறிய மலையில்  ஆஞ்சநேயர் மற்ற  வானரர்கள்  சகிதம் காட்சி தருகிறார்.
 கீழே இருக்கும் (மூலவர் மேலே தான்) உத்சவருக்கு  பக்தவத்ஸலப் பெருமாள். (தக்கான்) என பெயர். பல வருஷங்களுக்கு முன்பு  ஒருமுறை இந்த தக்கான் குளத்தில் படியில் காலைவைத்து வழுக்கி நீரில் விழுந்து தட்டு தடுமாறி மேலே முட்டியில் காயத்தோடு கருங்கல்  படி ஏறிய அனுபவம் இப்போது   அதை எழுதும்போது காலில் வலி தெரிகிறது. 
உத்சவர் கோவில் பின்புறம்  ஆதிகேசவப் பெருமாளை  எல்லா நேரமும் தரிசிக்க முடியாது.  அவ்வப்போது திறப்பார்கள். அதிருஷ்டம் உள்ளவர்கள்  ஆதிகேசவர் தரிசனம் பெறலாம். மற்ற சந்நிதிகளில்  ஆண்டாள், ஆழ்வார்கள், தொட்டாசாரியார் அருள் பாலிக்கிறார்கள். 
சோளிங்கர் என்று ஏன் பெயர்?  இந்த ஸ்தலத்துக்கு புராண பெயர் கடிகாசலம் - திருக்கடிகை.  500 அடிக்கு மேல்  உயரம்.   யோக நரசிம்மரை  வைஷ்ணவர்கள்  அக்காரக்கனி என்று வாத்சல்யத்தோடு  தூய தமிழில் அழைப்பது  ஆனந்தமாக இருக்கும். இவ்வளவு உயரம் சென்றபோது  நரசிம்மர் அங்கே  நின்று கொண்டா இருப்பார்.  சௌகர்யமாக ஜிலுஜிலுவென்று  ஆனந்தமாக காற்றுவாங்கிக்கொண்டு கருணையோடு  கிழக்கு பார்த்தவாறு வீற்றிருக்கிறார்.   சதுர்புஜ நரசிம்மர். சங்கு சங்கரத்துடன். ஒன்பது படிகள் கீழே  அம்ருதவல்லி தாயார்  தனியே கோவில் கொண்டுள்ளார்.   தாயாரை தரிசித்தபின் தான்  நரசிம்மர் 
நான் போயிருந்த காலத்தில் படிக்கட்டும் மேலே  நிழல் இல்லை.  கீழே நெருப்பின் மேல் நடப்பது போல் வெறும் காலில் கருங்கல் படிகள் மேலே தாவித்தாவி  ஏறினேன்.  தலையில் துண்டை தலைப்பாகையாக தரித்து, கையில் கொம்பை சுற்றிக்கொண்டு  குரங்குகளிடமிருந்து காப்பாற்ற  மூக்குக்   கண்ணாடியை கழற்றி பைக்குள்  வைத்துக்கொண்டு  அரை க்குருடாக படியேறினேன்.
சோளிங்கர்களுக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும்  திருக்கடிகை புரிந்தது. இந்த க்ஷேத்ரத்தில்  ஒருவர்  ஒரு அரைமணிநேரம்  அதாவது ஒரு கடிகை காலம்  வாசம் செய்தாலே போதுமாம்.  மோக்ஷம் காத்துக்கொண்டிருக்குமாம்.  விசுவாமித்திரர் சாட்சி.  அவர் ஒரு கடிகை இங்கே குரங்குகளிடமிருந்து தப்பி  நரசிம்மனை கண்மூடி துதித்து ப்ரம்மரிஷியாகிவிட்டார் என்கிறது புராணம். 
கீழே  தக்கான்  குளம் போகிற பாதையில்  வரதராஜப் பெருமாள் ஸந்நிதியில்  கருட வாகனத்தோடு காட்சி தருகிறார்.  உச்சிக்கால வேளையில்  ஸேவை  கண்டிப்பாக கிடைக்கும். மற்ற சேவைகள் காரண்டீ இல்லை.    தொட் டாசாரியார்  வரதராஜன் சேவை  பெற்ற இடம்.  தொட்டாச்சாரியாரை தெரிந்துகொள்ள சில வரிகள்.  தொட்டாச்சார்யார் என்றால்  மஹா பெரிய  ஆச்சார்யார் என்று அர்த்தம்.  அவர் பேரு ஸ்ரீனிவாசாச்சாரி.16ம்  நூற்றாண்டு வைணவ வரதராஜ பக்தர்.  பொன்னடிக்கால் ஜீயர் சிஷ்யர்கள் அவரும் அவர் சகோதரர் அப்பாச்சியார் அண்ணாவும்.  அப்போதெல்லாம் பெயர்கள் அப்படித்தான் இருக்கும்.  தொடடப்பையங்கார்  எறும்பி என்கிற ஊரில் இருந்ததால்  எறும்பியார் என்றும் பெயர் பெற்றவர்.எறும்பியார் சந்நிதி சோளிங்கரில் உள்ளது. சோழ சிம்மபுரம் தான் தேய்ந்து  சோளிங்கர் ஆகிவிட்டதோ? ஒரு சின்ன கதை. ஒரு சமயம். அழகிய மணவாள ஜீயர் சுவாமி  ஸ்ரீரங்கத்திலிருந்து நிறைய  ஆபரணங்களை  காஞ்சி வரதராஜனுக்கு அளித்தார்.  வரதராஜனை  சேவிக்க வருமாறு  பி ரெண்டு சிறந்த வைணவபக்தர்கள்  சிறியப்பன் பெரியப்பன்  ஆகியோரை வரவழைத்தார். அவர்களால் செல்ல இயலவில்லை.  தொடடாச்சார்யார் கனவில் ஒரு அழகிய  ராஜா குதிரை மேல் வந்து  தூங்கும் அந்த ரெண்டு வைஷ்னவர்களை எழுப்பி வெளியே வந்து என்னை பார்க்கச் சொல் என்று கட்டளையிட்டான்.  ''ஐயா  அந்த ஆச்சார்யர்கள் உறங்கும்போது எப்படி எழுப்புவது?  என்று தயங்கினார். ராஜா  தன்னைப்பற்றி சில ஸ்லோகங்களை சொன்னான். தொட்டாச்சார்யார் அசையவில்லை. கோபம் கொண்ட ராஜா  சவுக்கை வீசி தொட்டாச்சார்யார் தோள்களில் காயப்படுத்தினான். ''என்ன சொல்கிறாய் நீ? அந்த ரெண்டு கிழவர்களாலும்  வைகாசி உத்சவத்துக்கு வந்து என்னை தரிசிக்க முடியாதா?' என்று சொல்லி மறைந்தான். பெரியப்பன் சிறியப்பன் இருவரையும் எழுப்பி தொட்டாச்சார்யார் நடந்ததைச்  சொல்ல ''ஆஹா  நீ  என்ன பாக்யம் செய்தவன் அப்பா,  அவரல்லவோ உன்னை தோளில்  தொட்டவர்? அவர் ஸ்பரிசம் பட நீ என்ன புண்யம் செய்தாயோ?  எம்பெருமானார் அல்லவோ வந்து எங்களை அழைத்திருக்கிறார். வா நாம் எல்லோரும் உடனே செல்வோம் அவனை தரிசனம் செய்ய''   காஞ்சியில் தரிசனம் தந்த வரதராஜன் அவர்களை தக்கான் குளம் அருகே கோயில் கொண்ட  சோளிங்கருக்கு  ஈர்க்கிறான்.  வரதராஜ சேவை அதி அற்புதமாக நடக்கிறது இங்கே. தொட்டாச்சார்யார் சேவை ஸ்ரீரங்கத்திலும்  உண்டு.  தொண்டைமண்டல ராஜா அச்சுத மஹாதேவ ராயன் ஒருதரம் குதிரைகள் பூட்டிய தேரில் சோளிங்கருக்கு அருகே எறும்பி எனும் ஊரில் வந்துகொண்டிருந்தபோது திடீரென்று குதிரைகள் கீழே விழுந்து இறந்தன. எதிரே பல்லக்கில் தொட்டாச்சார்யார் வந்தவர் கையில் ஜலத்தை எடுத்து  வரதராஜனை வேண்டி அந்த குதிரையில் மேல் தெளிக்க அவை உயிர் பெற்றன. ராஜா  தொட்டாச்சார்யார் வேண்டியபடி அந்த ஊரின் கிழக்கே தக்கான் பக்தவத்சலம்  ஆலயம் புனருத்தாரணம் செய்தான்.   பக்தவத்சல பெருமாள் தக்கான் என்ற பெயர் கொண்டவர். எட்டு வீதிகள் கோவிலை சுற்றி.  தொட்டாச்சார்யாரால் சோளிங்கர் நமக்கு  ஒரு ஸ்தலமாக கிடைத்துள்ளது எனலாம். ஆழ்வார்கள் பிரபந்தங்கள் பாடிய   மங்களாசாஸனம் செய்த  திவ்ய தேச  க்ஷேத்ரம்..  திருமங்கையாழ்வார்  பாடிய ஒரு பாசுரம்  மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை, என்னுள் புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை, தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த, அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே     --   நாலாயிர திவ்ய பிரபந்தம் பாசுரம்  1731  சின்ன மலையில்  ஹநுமானுக்கு  நான்கு கைகள்.  யோக ஆஞ்சனேய  இந்த மலை  350 அடி உயரம் தான்.  406 படிகள்.  3 நிலை ராஜகோபுரம். அடிவாரத்தில் பாண்டவ தீர்த்தம்,  ராம தீர்த்தம் சக்கர தீர்த்தம் உள்ளது.  துர்வாச முனிவர் சாபத்தால் பிடிக்கப்பட்ட புதனுக்கு சாபம் நீங்கிய ஸ்தலம்.  ஒரு கடிகை அதாவது 24 நிமிடம் இங்கு தங்கினால் மோட்சம் நமக்காக காத்திருக்கிறது என்பது ஐதீகம்.   கால் சுடசுட பொரிந்து போய் நானும் 15 நண்பர்களும்  மத்தியானம்  1 மணிக்கு  ஆகாரம் தேடினோம். பசி. ஒரு மாமி வீட்டில் ஏற்கனவே ஐந்து பேர் காத்திருக்க  எங்களுக்கும் சாதம் வடித்து தருகிறேன் வெய்ட் பண்ணுங்கள் என்றாள் . நானும் அந்த மாமிக்கு உதவியாக அப்பளம் பொறித்தேன். தேங்காய் துருவி  மிக்சியில் துவையல் நிறைய அரைத்தேன். வாழைஇலைகளை வெட்டி அலம்பி பரிமாறினேன். மாங்காயை துண்டாக்கி  அவசர ஊறுகாய் செயது கொடுத்து நிறைய நல்ல சாப்பாடு அனைவரும் சாப்பிட்டோம். ஆலயம்  காலை  5மணி முதல் உச்சி வெயிலில் 12 மணி வரை . மாலை  4மணிமுதல் 9மணிவரை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...