Saturday, June 1, 2019

NARASIMMA


நரசிம்மா ... ஆ ஆ ஆ -- 7 J K SIVAN


7. நரசிம்மர் பேரிலேயே ஒரு ஊர்.

சிங்கப்பெருமாள் கோவில் எனும் ஒரு திவ்ய தேசம் சென்னைக்கு அருகாமையில் இருக்கிறது. முன்பு மாதிரி கட்டை வண்டி, காளை வண்டி, குதிரை வண்டி என்று அவஸ்தைப் படாமல் அரசாங்க பஸ்ஸிலோ, தனியார் பஸ்ஸிலோ, சொந்த வாகனங்களிலோ செல்ல ஒன்று இரண்டு மணி நேரம் தான் ஆகும். சென்னையிலிருந்து 45 கிமீ. தூரம் தான். தாம்பரத்தில் இருந்து 25 கி.மீ. தான்.

சிங்கப்பெருமாள் கோவிலுக்கு பாடலாத்ரி நரசிம்மர் ஆலயம் என்றும் ஒரு பெயர். மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில். தாயாருக்கு அஹோபிலவல்லி என்று பெயர். 8ம் நூற்றாண்டு பல்லவ ராஜா கட்டிய கோயில். நரசிம்மர் மடியில் லட்சுமி. பிரம்மாண்ட புராணத்தில் இந்த ஆலயம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஹிரண்யனைக்கொன்றபோது உண்டான கோபம் தணியாமல் இந்த ஆலயத்தில் புஷ்கரணியில் ஸ்னானம் செய்தபோது கோபம் விலகியதாம். அந்த கோபம் தண்ணீரை சிவப்பாக்கியது என்பார்கள். இப்போதெல்லாம் கோவில் குளங்களில் நீர் இல்லாமல் வறண்டிருப்பதை பார்த்து நம் கண்கள் தான் சிவப்பாகிறது. சிங்கப்பெருமாள் கோவில் வைணவத்தில் ஆழ்வார் நரசிங்கதேவர், நரசிங்க விண்ணகர ஆழ்வார் ஆலயம் எனப்படுகிறது.

1.5 ஏக்கர் விஸ்தீரணத்தில் அமைந்துள்ள கோவில்.

உக்ர நரசிம்மன் பெயர் பாடலாத்ரி நரசிம்மர். வலது காலை மடக்கி, இடது காலை தொங்க விட்டுக்கொண்டு , சதுர் புஜங்களோடு, ஜம்மென்று ஆயிரம் வருஷங்களாக அமர்ந்திருக்கிறார். ஒரு கை சுதர்சன சக்கரம் எந்த, மறு கையில் பாஞ்சஜன்யம் சங்கு. ஒரு கரம் அபய ஹஸ்தம். மற்றொன்று ஊரு ஹஸ்தம். அதவாது மடியில் வைத்துக்கொண்டிருப்பது. நெற்றியில் முக்கண் விசேஷமாக எங்கும் காணப்படாத ஒரு காட்சி. அஹோபிலவல்லிக்கு தனி சந்நிதி. பிற்காலத்தில் தோன்றியது. அதேபோல் ஆண்டாள் சந்நிதி வலது ஓரத்தில். நரசிம்மரைப் பார்த்தபடி கருடாழ்வார். அவருக்கு பின்னால் கொடிமரம். இந்த ஆலயம் தென்கலை வைகானச ஆகம சம்பிரதாய வழிபாட்டை கொண்டது. வழிபாட்டு நேரம்: உஷத்காலம். காலை 8 மணிக்கு. காலசந்தி 10 மணிக்கு. சாயரக்ஷை 5 மணிக்கு. அர்த்த ஜாமம் இரவு 8 மணிக்கு. அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை.

நரசிம்மனை சுற்றி இந்த குகைக்கோயிலில் வலம் வரும்போது அழிஞ்சல் எனும் ஆபூர்வ மரத்தை பார்க்கலாம். புனித மரம். அதன் விதைகள் மரத்திலிருந்து வெடித்து காற்றில் சிதறி மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொண்டு அதில் இருந்து கிளைகள் உருவாகும். ஆண்டாள் தனது நாச்சியார் திருமொழியில் அழிஞ்சல் மரத்தை பற்றி சொல்லி இருக்கிறாள்.
த்வஜஸ்தம்பத்தை அடுத்த தூணில் ஆஞ்சநேயர் எல்லோராலும் வழிபடப்படுகிறார். பாரிஜாத மரம் தான் ஸ்தல வ்ருக்ஷம்.
இந்த குட்டி மலைக்கோவிலை பவுர்ணமி இரவுகளில் 12 முறை கிரிவலம் வருகிறார்கள்.
''உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம்'' என்ற ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டு எத்தனையோ நரசிம்ம பக்தர்கள் இங்கே தரிசிக்க வருகிறார்கள்.
காலையில் 7 மணிக்கு தான் திருக்கிறார்கள். உச்சி 12 மணி வரை. மாலை 4.30 முதல் 8.30 மணிவரை நரசிம்மரை தரிசிக்கலாம். தமிழக அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்.

சோளிங்கர் எனும் ஊரில் ஒரு அற்புத நரசிம்மர் மலைமேல் இருக்கிறார். அவரைப் பற்றியும் சொல்கிறேன்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...