Saturday, June 1, 2019

IDAIKKADAR

இடைக்காட்டு சித்தர் J K SIVAN

நான் செல்வந்தன்

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கம் அமைத்தபின் நான் பெரிய செல்வந்தன் ஆகிவிட்டேன். ஐந்து வருஷங்களில் ஆயிரக் கணக்கான நண்பர்கள், லக்ஷக்கணக்கான வாசகர்கள், நூற்றுக்கணக்கான நெருங்கிய அன்பர்கள்... அடேயப்பா, செல்வங்களில் சிறந்தது நட்புச்செல்வம் என்று கூசாமல் சொல்லலாம். கள்வர் பயமில்லாத, எவரும் திருடமுடியாத, வரி கட்டவேண்டாத, இந்த என் செல்வம் நாளுக்கு நாள் கூடி வருகிறது.

ஸ்ரீ கணபதி ராமன். திருநெல்வேலி ஆய்குடிக்காரர். கோயம்பத்தூரில் ஒரு காலும் சென்னையில் பெண் வீட்டில் ஒரு காலும் கொண்டவர். ஒருமுறை என்னை சந்தித்தபோது அவர் கொடுத்த பரிசு '' இடைக்காட்டு சித்தர் பாடல்கள் ''. ஒரே மூச்சில் அதை படித்தேன். இந்த 18ல் ஒரு சித்தர் 130 பாடல்களுக்கு சொந்தக்காரர். இடையர் குலத்தவர் என்பதால் நிஜப்பெயர் வழக்கம்போல யாருக்குமே ஞாபகம் இல்லை. நின்று நிலைத்த பெயர் இடைக்காடர். ஆடு மேய்த்தவர். நாம் ''சாயற பக்கம் சாயும் செம்மறி ஆடுகளாயிற்றே'' . நம்மை மேய்க்க சரியான கோனார் இவர்.

கொங்கணர் என்பவர் அவரது குரு. கிபி 10-15 ஆம் நூற்றாண்டுக் காரர். ஞானசூத்திரம் 70 என்ற நூல் இவர் எழுதியது. திருவண்ணாமலையில் சமாதி. இடைக்காடு என்பது இவர் வாழ்ந்த ஊர்.இவர் பாடல்களில் அவர் பேசுவது ஆடு, மாடு, அன்னம், மயில், குயில், புல்லாங்குழல், அறிவு, நெஞ்சம், இவைகளோடு. அவற்றிக்கு அறிவுரை சொல்வது. அவை மூலம் நமக்கு, நமக்கு, நமக்காக.

சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே –
யாவும்சித்தி என்று நினையேடா தாண்டவக்கோனே – பாடல் 14

தாந் திமித்திமி தந்தக் கோனாரேதீந் திமித்திமி
திந்தக் கோனாரேஆனந்தக் கோனாரே – அருள்
ஆனந்தக் கோனாரேஅண்ணாக்கை ஊடே அடைத்தே அமுதுண் – பாடல் 29
(யோகாசன முறை)பாலில் சுவைபோலும் பழத்தில் மதுப்போலும்நூலில் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே – பாடல் 50
எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே – பாடல் 56

பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய்நரிகள் போல்அலைந்தால் நன்மைஉண்டோ கல்மனமே – பாடல் 62

இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
அருள்துறையில் நிறுத்திவிளக்கு ஆக்குகநீ புல்லறிவே – பாடல் 72

கைவிளக்குக் கொண்டு கடலில் வீழ் வார்போலே
மெய்விளக்கு உன் உள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே – பாடல் 74

கற்றூணைப் போல்மனத்தைக் காட்டு மயிலே –
வரும்காலனையும் தூரத்தில் ஓட்டுமயிலே – பாடல் 89

அப்புடனே உப்பு சேர்ந்து அளவுசரி ஆனதுபோல்
ஒப்புறவே பிரம்முடன் ஒன்றிநில்லு மடவனமே (அன்னமே) –பாடல் 94

மோன நிலையில் முத்திஉண்டாம் என்றே
கானமாய் ஊதுகுழல் - கோனேகானமாய் ஊதுகுழல் – பாடல் 98

இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே – உன்
குரங்குமன மாடொன்று அடக்கிவிடு கோனே – பாடல் 133

ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோ
ணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களைகோடு போட்டு
படுக்கவைத்தபரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க கடைக்கண் திறந்து
காப்பீர்இடைக்காடர் ஸ்வாமியே!

இந்த இடைக்காட்டுச் சித்தர் வேறு சங்கப் புலவரான இடைக்காடர் வேறு. தமிழில் ஒரே பெயர் கொண்ட பலர் இருக்கிறார்கள். இல்லை. இருந்திருக்கிறார்கள். இவரது காலம் கி.பி. 15ம் நூற்றாண்டு எனலாம். கொங்கணச் சித்தரின் சீடர் பிறந்த இடம் மதுரைக்குக் கிழக்கே உள்ள இடைக்காடா அல்லது தொண்டை மண்டலத்தில் உள்ள இடையன் மேடா?
யாராவது ஆய்வு செய்து கொள்ளட்டும். ஒருசமயம் பொதிகை மலைச்சாரலில் வழக்கம் போல் ஆடு மேய்த்துக்
கொண்டிருக்கும் போது நவசித்தரில் ஒருவர் வருகிறார். ''எனக்கு ஆட்டுப்பால் கொஞ்சம் கொடுக்கிறாயா?'' என்று கேட்க , அவருக்குப் பால் கொடுத்து உபசரிக்கவே அந்த சித்தர் இடைக்காடருக்கு ஞானத்தை உபதேசித்து விட்டுச் செல்கிறார். அன்று முதல் ஆடுமேய்க்கும் இடைக்காடரும் ஒரு சித்தர்.

தமது சோதிட அறிவால் நாட்டில் வரப்போகும் கொடிய பஞ்சத்தை உணர்கிறார். முன்னெச்சரிக்கையாகத் தமது
ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக்கூடிய எருக்கிலை போன்றவற்றைத் தின்னக் கொடுத்துப் பழக்கினார். குறுவரகு என்னும் தானியத்தை மண்ணோடு சேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பிக் குடிசை கட்டிக் கொண்டார். எருக்கிலை தின்பதால் உடலில் அரிப்பெடுத்து ஆடுகள் சுவரில் உராயும் போது உதிரும் வரகு தானியங்களை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு வரப்போகும் பஞ்சத்துக்குத் தம்மை இப்போதே தயார் செய்து கொண்டார்.

அடுத்த கட்டுரையில் இடைக்காட்டு சித்தர் பற்றி இன்னும் கொஞ்சம் வரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...