Saturday, June 29, 2019

SOLITARY REAPER



காற்றினிலே ஒரு கீதம்.
J K SIVAN

குப்பம்மா வயலில் வேலை செய்பவள். பரம்பரை தொழில் அவளுக்கு. அவள் பிறந்தது ஒரு மரத்தடியில். ராசாத்தி வயலில் வேலை செய்யும் போது நிறை கர்ப்பம். அப்படியும் வேலைக்கு வந்து விட்டாள் . அறுவடை சமயம். கூலி கூட கிடைக்கும். சாப்பாடு போடுவார்கள். அவளுக்கு வயிற்றில் வளரும் சிசுவின் கர்ப்பவாஸ கணக்கு சரியாக தெரியாது. திடீரென்று வலி அதிகமாகி மற்ற பெண்கள் அவளுக்கு பிரசவம் பார்த்தது அந்த மரத்தடி அருகே நாலுபக்கம் துணியை சுற்றி விட்டு தான்.

குப்பம்மா வளர்ந்தது மரத்தடியில் தொங்கிய தூளியில் தான். மரத்தை சுற்றி ஓடி ஆடி தான். குடிசையில் தனியாக யாரிடம் விட்டுவிட்டு வருவது அவளை என்று ராசாத்தி கூடவே கூட்டிக்கொண்டு வருவாள்.

வயலில் வேலை செய்யும்போது பாடுவார்கள். கூட்டமாக தெம்மாங்கு மாதிரி நாட்டுப்பாடல்கள் நிறைய அவர்கள் கை வசம் இருந்தது. கேட்பதற்கு இனிமையாக இருக்கும். கற்பனை சுவாரசியமாக இருக்கும்.
ராகமும் இதுவரை கேட்காததாக இருக்கும். இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை.

ராமு கவிராயர் நாட்டுப்பாடல்களை விரும்பி கேட்பவர் எழுதுபவர். அவர் ஒரு வயல் கவிஞர். அவர் எழுத்துக்கள் வயல், கிராமம், ஏரி, குளம், கிணறு, ஏற்றம், வாய்க்கால், கால்வாய், இதுகளை பற்றியே மையம் கொண்டிருக்கும்.

ஒருநாள் காலை வழக்கம்போல் விடியலில் எழுந்து கிராம ஒற்றையடிப்பாதையில் நடந்து ஒரு வரப்பருகே செல்லும்போது குப்பம்மா தனியாக தூரத்தில் ஒரு வயலில் சோளம் அறுவடை செய்கிறாள். பாடிக்கொண்டே வேலை செய்கிறாள். காற்றில் அவளது இனிமையான குரல் தேனாக செவியில் பாய் கிறது. வார்த்தைகள் ஸ்பஷ்டமாக காதில் விழவில்லை. ஆனால் இனிமையான மனதை கிறங்க செய்யும் இசை . அதில் சோக இழை சேர்ந்து ஒலித்தது. மனதை வருடியது.
அது மானம்பார்த்த பூமி. அதிக மழை கிடையாது. பட்டா பட்டா பாக்யம் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட வறண்ட பூமி. மலையை ஒட்டி சரிவாக இருந்த வயல் என்பதால் எப்போதாவது மழை வந்தால் நிச்சயம் வயலுக்கு நீர் உண்டு.

கையில் கருக்கு அருவாள். கம்யூனிஸ்ட்கள் கொடியில் இருக்குமே சுத்தியோடு ஒரு கத்தி. அது மாதிரி. குப்பம்மாவின் பாட்டில் நெஞ்சில் இருந்த ஒரு கீறல், ஆறாத புண்ணின் சுமையோடு காற்றில் எதிரொலித்தது. எந்த குயிலின் இசையும் அதோடு போட்டி போட முடியாது. என்ன இனிமையான குரல்.
தூரத்தில் ஏதாவது கடல் இருந்தால் கூட அவள் குரலோசையை கேட்க அலைகளை நிறுத்தி காது கொடுத்து கேட்கும்.

என்ன பாடுகிறாள் ? அதில் ஏன் சோகம்? யார் சொல்வார்கள் அந்த ரகசியத்தை? எங்கோ எப்போதோ அவள் வாழ்க்கையில் ஒரு துயர சம்பவம் நடந்து அது மாறாத சோக நினைவை விட்டு விட்டு சென்றுவிட்டதா? ஏதோ ஒரு நாட்டு யுத்தத்தில், எங்கோ ஒரு பட்டாளத்தில் ஏதாவது ராஜா தோற்றுப்போய் அழுத சம்பவமா? கடந்த கால துயர சரித்திரமா அல்லது எதிர் காலம் பற்றிய பயமா? ஒரே புதிராக இருக்கிறதே.

கவிஞன் மேலே நடக்காமல் அங்கேயே சிலையானான். காற்றில் சோக கீதம் சுழன்று சுழன்று அவனை கட்டிப்போட்டது. அவள் கையில் இருந்தஅரிவாள் இயந்திரம் போல் கதிர்களை அறுத்துத்தள்ளிக் கொண்டிருந்தது. வேரோடு கற்றையாக பிடுங்கியது. கவிஞன் அந்த வயல் இருந்த பக்கமாக மலை சரிவில் ஏறினான். நடையை தொடர்ந்தான். வெகு தூரம் வெகுநேரம் அவன் பாதையில் அந்த சோக கீதம் தொடர்ந்தது. அதன் பிடியில் அவன் களித்தானா? கலங்கினானா? அவன் வெகு தூரம் சென்றுவிட்டான். அந்த கீதம் மெல்லிதாக குறைந்து குறைந்து காற்றோடு கலந்துவிட்டது. மௌனம். அவன் கவிதை வடித்தான். அதன் சாராம்சம்:


''அதோ பார் அவளை, தனியாளாய், வயலில், ஒரு நாட்டுப்புறத்து இளம்பெண்.
அறுவடை செய்து கொண்டே பாடுகிறாளே . நில், அல்லது அவளது கவனத்தை கவராமல் மெதுவாக நட. ஆஹா! அவள் எதையும் லக்ஷியம் செய்யாமல் அறுத்து அறுத்து கற்றைகளாக பயிரை கட்டுகிறாளே தெரிகிறதா? தனக்கு தானே பாடுகிறாள். என்ன பாட்டு, என்ன வார்த்தை. ஒன்றுமே காதில் விழவில்லை. ஆனால் அதில் இனம்புரியாத ஒரு சோகம் இழையோடி இருக்கிறதே. பிரம்மாண்டமான அந்த அமானுஷ்ய பிரதேசத்தில் அவளது இசை காற்றில் மிதக்கிறதே. கேள்.

எந்த குயிலும் அவளோடு போட்டிபோட முடியாது. என்ன கோர்வையாக இசை வெள்ளமாக பாய்கிறது.
யாத்ரீகர்கள் சுகம் பெற இது ஒரு அதிசயம். அரேபியாவில் பாலைவனத்தை கடக்கும்போது பாடுவார்களாமே அது போலவா? வார்த்தை தெரியாவிட்டால் என்ன நாதமும் கீதமும் போதுமே.
கடல் கூட கொந்தளிக்காமல் அமைதியுற்று கேட்கச் செய்யும் மந்திர இசை.
என்ன பாடுகிறாள் என்று யாராவது சொல்வீர்களா? ஏதோ பழங்கதையா, ராஜா ராணி சோக வரலாறா?
எல்லோருக்கும் இயற்கையாக ஏதோ ஒரு சோகம் இருக்குமே அதில் ஒன்றா, நெஞ்சின் வலியின் வெளிப்பாடா? தொடர்ந்து மேலும் மேலும் அலை அலையாக எழும்பும் அளவற்ற சோகச் சுருளா?

அவள் எதையோ பாடிவிட்டு போகட்டுமே. மீளாத்துயரத்தில் ஓயாத கதறலா? பாடிக்கொண்டே வேலை யில் ஈடுபடுகிறாள் . அவளது அரிவாள் அவள் சோக கீதத்துக்கு நாட்டியமாடுபவது போல் ஆடி அசைந்து வேகமாக கதிர்களை, செடிகளை வெட்டித்தள்ளுகிறதே. போதும் கேட்டது என்று கால் மேலே நடந்தாலும் காது அந்த இசையை விடாமல் உன்னிப்பாய் கேட்டுக்கொண்டு வருகிறது. நான் மலைமேல் மெதுவாக ஏறுகிறேன். என்னோடு அந்த இசையும் தொடர்ந்து வருகிறது. வெகுதூரம், தொலை தூரம் என்னை துரத்திக்கொண்டே வந்த அற்புத அதிசய சோக கீதம்.......இப்போது வெளியே கேட்கவில்லை. மனதில் ரீங்காரம் இடுகிறது. ''

நான் மேலே எழுதியது ஆங்கிலத்தில் ஆற்றங்கரை, ஏரிக்கரை கவிஞன் என்று பெயர் பெற்ற வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் 225 வருஷங்களுக்கு முன்பு எழுதிய ஒரு அருமையானகீழ்க்கண்ட பாடல். அதன் பெயர் THE SOLITARY REAPER. அதை தமிழ்படுத்தி குப்பம்மாவாக்கி விட்டேன்.

Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.

No Nightingale did ever chaunt
More welcome notes to weary bands
Of travellers in some shady haunt,
Among Arabian sands:
A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.

Will no one tell me what she sings?--
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago:
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again

Whate'er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;--
I listened, motionless and still;
And, as I mounted up the hill,
The music in my heart I bore,
Long after it was heard no more.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...