Tuesday, June 25, 2019

VIKRAMADHITHYAN STORIES

விக்ரமாதித்தன் கதை   J K  SIVAN 

                                                                       
                          சரவண  பட்டன்  கதை  


விக்ரமாதித்யனுக்கு  பிறகு  பல நூற்றாண்டுகளுக்குப்  பின் உஜ்ஜயினி ராஜாவானவன்  போஜன். அவன் எப்படி விக்ரமாதித்தனின்  32 படி,  அதில் பேசும் 32 பொம்மை  வைத்த பெரிய தங்க  சிம்மாசனத்தை அடைந்தான் என்பதை முதலில் சொல்லியாக வேண்டும். 


அதிர்ஷ்டம் எல்லாருக்கும் எப்போதும் அடிப்பதில்லை. அப்படி ஒரு  அதிர்ஷ்டம் ஏதாவது நம் வழியில் எதிர்பட்டாலும் நாம் அதைத் தாண்டிக்கொண்டோ,  சுற்றிக்கொண்டோ  போய்விடுகிறோம். அடைவதில்லை. அதிர்ஷ்டம் என்பது  யாரோ எப்போதோ  குருட்டாம்போக்கில் அடைவது என்று பலபேர்  அபிப்ராயம். அதிர்ஷ்டம் அடித்த அனுபவம் இது வரை இல்லாமல் என்னால் அது பற்றி அதிகம் சொல்ல முடியாது. ஆனால் போஜராஜன் அப்படிப்பட்ட ஒரு  அதிர்ஷ்டக்காரன் போல இருக்கிறது.

போஜனுக்கு எல்லா அரசர்களையும் போல் அடிக்கடி வேட்டையாட போகும் வழக்கமுண்டு. அவன் நல்ல ராஜா. குடிமக்கள் அவனது  நல்லாட்சியில் மகிழ்ந்தார்கள். அவன்  உஜ்ஜயினி ராஜ்யத்தில்  ஊருக்கு கடைசியில் உள்ள காட்டில் வேட்டையாட போனான்.  சில நாட்களுக்கு முன்பு ஏராளமான மக்கள் போஜனின் மந்திரியிடம் குறைகள் சொல்லி அது போஜன் காதுக்கு எட்டியது.  அது இந்த காட்டைப் பற்றியது தான். புலி,   சிறுத்தை, கரடி, ஓநாய், போன்ற மிருகங்கள் அடிக்கடி இரவில் காட்டை விட்டு வெளிவந்து,  க்ராம  வீடுகளில் நுழைந்து ஆடு, மாடு, கோழி, குழந்தைகள் ஆகியோரை கொன்று தின்று விடுகின்றன என்று மந்திரி மக்கள் சார்பாக சொன்னான்.  ஆகவே தான் போஜன் வேட்டையாடி, அந்த காட்டில் வசித்த கொடிய சில மிருகங்களைக்  கொல்ல  அங்கே வந்தான். மந்திரியோடும்,  அனுபவமிக்க  வேட்டையில் தேர்ந்த சிறு படையோடும், ஆயுதங்களோடு போஜன் காட்டில் நுழைந்தான்.  நிறைய புலி  சிங்கம்,கரடி  நரி ஓநாய்  ஆகியவை கொல்லப்பட்டன .   பகல்  உச்சி நேரத்தில் பசி அவன் வயிற்றைப்  பொசுக்கியது. 

குடிக்க நிறைய நல்ல நீர், சிரம பரிகாரம் பண்ண அந்த படைக்கு ஏற்ற நல்ல இடம்  எங்காவது கிடைக்குமா என்று தேடினார்கள்.  அலைந்தார்கள்.  காளி  கோயிலை சுற்றி இருந்த  ஒரு  பகுதியில் சற்று ஒதுக்குப்புறமாக  ஒரு பெரிய  சோளக்கொல்லை கண்ணில் பட்டது.   சுற்றிலும் நிறைய மரங்கள்  அரண்போல அமைந்து நடுவே பிரம்மாண்டமான ஒரு பெரிய  ஆளுயர சோளக்கொல்லை.    அருகே நிறைய மரங்களில்  உடனே பறித்து  சாப்பிட கொய்யாப்பழங்கள், வாழைப்பழங்கள் எல்லாமும்   இருந்தது.  ஒரு பெரிய  ஆழமான கிணறு படிக்கல்லோடு உள்ளே இறங்கி நீர் குடிக்க வசதியாக இருந்தது.   விடுவார்களா  போஜனின் படைவீரர்கள் இந்த  இடத்தை?   .திமுதிமுவென உள்ள  புகுந்தார்கள். 

அந்த பெரிய சோளக்கொல்லை வயலுக்கு  சொந்தக்காரன் சரவண பட்டன் என்ற ஒரு பிராமணன்.  போஜனும் அவனது ஆட்களும் வயலில் நுழைந்தபோது சரவணபட்டன்  வயல் நடுவே அவன் அமைத்திருந்த ஒரு உயரமாக பரண் மீது அமர்ந்துகொண்டு  முற்றிய சோளக்கதிர்களை  கடித்து தின்ன வரும் பறவைகளை கவண் கல்லால் அடித்து விரட்டிக்கொண்டிருந்தான்.  நாள் முழுக்க இதே வேலை.  

'அடடா ராஜா வீரர்களோடு வருகிறாரே அருகே காட்டில் வேட்டையாடி களைத்திருக்கிறார் போல இருக்கிறதே என்று '' வரவேண்டும் வரவேண்டும் மஹாராஜா''  என்று கத்தினான்.  '' இதோ கயிறு சொம்பு எல்லாம்  கிணற்றருகே வைத்திருக்கிறேன். நிறைய  நீர் மொண்டு  முகம் கைகால் கழுவி குளிர்ந்த நீர் குடியுங்கள். தோட்டத்தில் நிறைய பிஞ்சு தக்காளி, வெள்ளரி, வெண்டை, பயிறு எல்லாம் இருக்கிறது.  அதோ அந்த மரத்தில் மாம்பிஞ்சு, கொய்யா பழம் எல்லாம் கூட காய்த்திருக்கிறது.  எடுத்து நீங்களும் சாப்பிட்டு, குதிரைகளுக்கும் நீர், சோளத்தட்டை,  பயிறு எல்லாம் கொடுங்கள்''  என்று உபசரித்தான்.''  சோளக்கொல்லையில்  ராஜாவின் படை புகுந்தது அகப்பட்டதை எல்லாம் எடுத்து சாப்பிட்டு  கிணற்றில் நீர் பருகியது.  பரணில் இருந்து சரவண பட்டன் இறங்கி கீழே வந்ததும் அவன் குணம் மாறிவிட்டது. கோபம் ஆத்திரம், வெறுப்பு  இயலாமை எல்லாம் அவனிடம் வெளிப்பட்டது. 

''ராஜா, இதென்ன  அக்கிரமம். எப்படி என்னுடைய  வயலில், தோட்டத்தில் இத்தனை பேர் நுழைந்து கண்டதை   யெல்லாம் எடுத்து உண்டு நஷ்டப்படுத்துகிறார்களே. ஞாயமா? என் தோட்டம், பாழாகி விட்டதே.  எல்லையில்லாமல் போய்விட்டதே  அவர்கள்  அநீதிச் செயல்''  என்று கத்தினான்.  ''ராஜா நீங்கள் எனக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.  கஷ்டப்பட்டு  நான் உழைத்த பலன் வீணாகி விட்டதே'' என்று அலறினான்.

போஜன் அதிர்ந்து  போனான்.  ''இவன் என்ன பைத்தியமா?  இப்போது தானே பரண் மீதிருந்து  நம்மை    பார்த்து எவ்வளவு  சந்தோஷமாக முகமலர்ந்து   வரவேற்றான்.உபசரித்தான். அவன் வார்த்தையை  நம்பி வீரர்கள் உள்ளே நுழைந்து எடுத்து சாப்பிடுகிறார்கள். இப்போது ஓடிவந்து அக்கிரமம் அநியாயம் என்று அலறுகிறானே.!'' என்று  போஜனும்  மந்திரியும்  திகைத்தார்கள்.  சரி எல்லோரும் கிளம்புங்கள் என்று போஜன் உத்தரவிட எல்லோரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.  இதை கண்ட சரவணப்பட்டன் மகிழ்ந்து ''அப்பாடா சனி  இதோடு விட்டது''  என்று மீண்டும் பரணுக்கு சென்று மேலே   ஏறி நின்று அவர்கள் போவதை பார்த்தான்.  அடுத்த கணமே  அவன் குணம்   மாறியது.

‘ராஜா,  இன்ன  இது,  அபச்சாரம்.    ஏன் எல்லோரும்  சரியாக  உண்டு  சிரமபரிகாரம் பண்ணாமல்   பாதியிலேயே இங்கிருந்து  செல்கிறீர்கள். ஏழை என்னால் இயன்றதை உங்களுக்கெல்லாம் தர  நான்  பாக்யம் பண்ணி  இருக்கிறேன். நான்  சரியாக  உபசரிக்காமலிருந்தால் என்னை மன்னியுங்கள்.  ஆகாரம் ஆனவுடன் எல்லோரும் வந்து மர நிழலில் சிரமபரிகாரம் பண்ணவேண்டும்.  மாலையில்   பசுக்கள் வந்ததும்  பால் தருகிறேன். பிறகு செல்லலாம்'' என்று கெஞ்சினான். 

போஜன்  யோசித்தான். ஏன் இந்த  சரவணப்பட்டன்  மாற்றி மாற்றி  பேசுகிறான். ''மந்திரி நீர் சொல்லும்  இதற்கு என்ன காரணம்? ''

'' அரசே, நானும்  கவனித்தேன். பரண் மீது  இருந்து  பேசும்போது அவனிடம் மனித நேயம் பண்பு  இருந்தது.  பரணில் இருந்து கீழே இறங்கியவுடன் அவன் சாதாரண  மனிதனாக  பேசுகிறான்.''

''மந்திரி என்  மனதில் தோன்றியதை தான்   நீயும்  ஊர்ஜிதப்படுத்திவிட்டாய்.  நீ  அந்த பரண்  மேல் ஏறு . உன் நடத்தையும்  குணமும் மாறுகிறதா என்று சோதிக்கிறேன்.                                                                                                                                          
பரண் மீது  ஏறிய மந்திரி தான்  முற்றிலும் மாறி  இருப்பதை  உணர்ந்தான்.   அவன் மனதில் சாந்தம், கருணை எல்லாம்  நிரம்பியது. போஜராஜனிடம்  மாறுதலை  சொன்னான்.  அந்த  பரணை சோதித்தார்கள்.சாதாரணமாக  இருந்தது.   அந்த பரணில் எந்த வித்தியாசமும் இல்லாததால்  அந்த    இடத்தில் ஏதோ  ஆச்சர்யம்,  அதிசயம்,  ரஹஸ்யம், காந்த சக்தி இருக்கிறது.  அதை  முதலில் கண்டு    பிடிக்கவேண்டும்.  போஜன் சரவண  பட்டனைக்  கூப்பிட்டான்.    

'சரவணா,  நீ  இந்த  ராஜ்ஜியத்தின்  சிறந்த  விசுவாசியாக இருக்கிறாய். உனக்கு ஏதாவது பரிசு அளிக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.  நீ   இப்படி வயலில்  உழைத்து கஷ்டப்படவேண்டாம்.  உனக்கு பத்தாயிரம் பொற்காசுகள் கொடுத்து ஒரு   வீடு  வாசல் தோட்டம் எல்லாம் தந்து  நீ  சுகமாக வாழ கட்டளை  இடுகிறேன்.இந்த   காட்டுப்புற வயல் அரசாங்கத்தின் மேற்பார்வையில் கண்காணிக்கப்படும்''

''மஹாராஜா,  இந்த ஏழையின் மேல் இவ்வளவு  கருணையா?.   இதை பகவானின் அருளாக கருதுகிறேன் என்றான் சரவண பட்டன்.  மறுநாளே ஒரு  சிறு கிராமத்தை சரவண பட்டனுக்கு எழுதி வைத்து  அவனை அனுப்பிய  போஜன் அந்த வயலின் பரண் அடியே  மண்ணைத் தோண்ட ஆணையிட்டான். அவன் எதிர்பார்த்தபடி  ஏதோ பூமியில் புதைந்து  இருப்பதுதெரிந்தது. கண்ணைப்பறிக்கும் நவரத்ன கற்கள் பதித்த தங்க சிம்மாசனம் ஒன்று 32 படிகளோடும், அவற்றில் ஒவ்வொருபடியிலும் ஒரு  பெண் பொம்மையோடும்  பூமியில் புதைந்திருந்தது தெரிந்தது.   ஆச்சரியமடைந்த போஜன் அந்த தங்க சிம்மாசனத்தை   ஜாக்கிரதையாக சேதமில்லாமல் வெளிக்கொணர   விரும்பினான். '' ஓஹோ  இந்த  சிம்மாசனத்தில் அமர்ந்தவன் நேர்மையான அரசனோ,நியாயவானோ ,கருணாமூர்த்தியோ, வீரமகனோ போல்  இருக்கிறது. , யார் அவன்?  அவன் சிம்மாசனத்தின் மேல் பூமியில் ஒரு பரண் அமைத்து அதன் மேல் நின்றபடி, அமர்ந்தபடி,  இருந்தததால் தான் சரவண பட்டனும்  மந்திரியும் நற்குணங்கள் கொண்டவர் களாக மாறினார்களோ?  இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து  நானும் நல்ல நீதிமானாக ஆட்சி செய்வேன் என்று மனதில் எண்ணம் கொண்டான் போஜன். ஆனால்  அவனால் அந்த சிம்மாசனத்தை அப்புறப்படுத்த  முடியவில்லை.  மந்திரி, பெரியோர்கள், வேதவல்லுனர்கள் அறிவுரைப்படி, அந்த சிம்மாசனம் யாரோ மிக ஸ்ரேஷ்டமான  தெய்வீகமான  ஒரு ராஜாவால் உபோயோகிக்கப்பட்டது என்பதால் அநேக பூஜைகள், தான தர்மங்கள் செய்தபிறகு, வணங்கி அதை நகர்த்த முயன்றபோது அதைத்  தூக்க முடிந்தது.  

மனம் மகிழ்ந்த  போஜன்,   ''மந்திரி,  உமது ஆலோசனைப்படி செய்ததால் நல்ல பலன் கிடைத்தது. ஒரு நாட்டுக்கு உண்மையான பக்தி, பரோபகாரம் கொண்ட மந்திரி அவசியம், உம்மைப்போல''   என்றான் போஜன். 

''அரசே நீங்கள் சொல்வது  வாஸ்தவம்.   ஒரு மந்திரி தனது கடமையை செய்ய வேண்டியதை  உணர்த்துகிறது.அப்படித்தான்  ஒரு காலத்தில் நந்த வம்சத்தை சேர்ந்த ஒரு ராஜாவுக்கு  அருமையான பஹுஸ்ருதன் என்ற பெயர் கொண்ட புத்திசாலி மந்திரி ஒருவன் இருந்தான். ராஜாவை ஒரு பேராபத்திலிருந்து காப்பாற்றினான்'' என்றான் மந்திரி. 

''பஹுஸ்ருதன் அப்படி என்ன செய்தான்?'' என்று கேட்ட போஜன் போல நாமும் மந்திரி என்ன சொன்னான் என்று கேட்க  தயாராவோம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...