Monday, June 24, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J K  SIVAN                         
 2ம் நாள்   யுத்தம்             

                                                                    
                             பீமார்ஜுன  தாக்குதல்...

நண்பர்களே,  யுத்தம்   என்றால் இப்போது கடைபிடிக்கும் முறை வேறு,ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு நமது பாரத தேசத்தில் நடந்த யுத்தம் வேறு.  மனிதர்களுக்கு பலம், பயிற்சி, மரணத்தை கண்டு அஞ்சாத துணிவு, நேருக்கு நேர் நின்று பலரை சமாளிக்கும் திறமை, யானை குதிரை,தேர்  போன்ற சாதனங்கள், உடம்புக்கு கவசம், கூரிய வாள் , ஈட்டி, தடுக்க கேடயம், வில்,  பல வித ரகமான அம்புகள் இது அத்தனையும் தேவையாக இருந்தது.  யாருடன் மோதுகிறோம் என்று எதிராளி முகம் தெரிந்திருந்தது.  இப்போது அப்படியில்லை, மறைவு, எதிர்பாராத நேரத்தில் தாக்குவது, ஒளிந்து பலமிக்க குண்டுகளை வீசுவது. டாங்குகள், முழு இரும்புக்கவசம் பூண்டு அதற்குள்  மறைந்து  குண்டுகளை வீசுவது, சுடுவது, மேலே இருந்து    வேகமாக தாக்கி விட்டு ஓடிவிடுவது.  எங்கிருந்தோ ஒரு பட்டனை அமுக்கி, அழுத்தி, எங்கோ இருப்பவர்களை, அவர்கள் இடத்தையே நாசம் செய்வது என்ற வித்தை அப்போது தெரியாது.   இதை மனதில் வைத்துக் கொண்டு குருக்ஷேத்ரம் பயணம் செய்யவும். 


''அரசே,  உங்கள் மகன் துரியோதனனின்  கௌரவ  சேனை,   முதல்  நாள்  யுத்தத்தில்  பீஷ்மர்  தலைமையில்   வெகு அற்புதமாக  போர் புரிந்து பாண்டவர் அணிக்கு  மிகுந்த சேதம் விளைவித்தது'' என்று சஞ்சயன் கூற திருதராஷ்டிரன் மகிழ்ந்தான்.  தனது மகன் துரியோதனன்  போர்த்திறமையை மனதார மெச்சினான்.

பாண்டவர் பாசறையில் கிருஷ்ணன் தங்கியிருந்த கூடாரத்தில்  பாண்டவர்கள்  விசனத்தோடு அமர்ந்திருந்
தார்கள்.

''கிருஷ்ணா,  பீஷ்மரின் பலத்திற்கு முன்  ஈடு கொடுக்க முடியாததால் நமது சேனை பல உயிர்களை  இழந்தது வருத்தமாக இருக்கிறது.   யமனே எதிர் நின்று  உயிர்களை பறித்தது போல் அல்லவோ அவர் போரிட்டார். வயது ஒரு காரணமே  இல்லை என்று புரிய வைத்தாரே.  எப்படி  பீஷ்மரை எதிர்த்து எப்படி  வெற்றி பெறுவது?  நீ தான் உணர்த்தவேண்டும். அர்ஜுனன்  இன்னும் முழு மனதுடன் போர் புரியவில்லை என்று தான் எனக்கு படுகிறது. பீமன் ஒருவனே உதவ முடியுமோ என்று எனக்கு தோன்றுகிறது.  ஆனால்  பீமனால் புஜ  பல சாதனைகள் புரியமுடியுமே அன்றி  பீஷ்ம   த்ரோணர்களின் அஸ்த்ர வித்தைக்கு  பதில் ஈடு கொடுக்க முடியுமா என்று யோசிக்க முடியவில்லை'' என்றான் யுதிஷ்டிரன்.

''பீஷ்ம துரோணர்களின்  மந்திர சக்தி வாய்ந்த  அஸ்த்ரங்கள் நமது சேனையை அழித்துக் கொண்டு வருவதை தடுக்க ஏதாவது ஒரு  யுக்தி வேண்டும்'' என சொல்லிவிட்டு  யுதிஷ்டிரன் மௌனமானான்.

''யுதிஷ்டிரா, உன் சகோதரர்கள் பலம் நீ அறிந்தது தான். மகா சக்தி வாய்ந்தவர்கள்.  தவிர நானும் உனக்கு உதவுகிறேன், சாத்யகி, விராடன், துருபதன் ஆகிர்யோரோடு திருஷ்ட த்யும்னன் , சிகண்டி ஆகியோரும் உள்ளனர். கவலை வேண்டாம்.  பீஷ்மருக்கு யமன் சிகண்டி தான். துரோணரைக் கொல்ல  பிறந்தவன் திருஷ்ட த்யும்னன்.   மறந்து விடாதே''  என்றான் கிருஷ்ணன்.

 யுதிஷ்டிரன்  அருகே இருந்த திருஷ்டத்யும்னனனிடம்  ''நாளை யுத்தத்திற்கு நீ தலைமை பொறுப்பெடுத்துக்கொள் .  நாளை யுத்தத்துக்கு நாம் கிரவுஞ்ச  வியூகம் சேனை அமைப்போம். உள்ளே புக முடியாதபடி   மஹா ரதர்கள் அதிரதர்கள் உனக்கு  துணையாக இருப்போம்'' என்றான்.

மறுநாள் வியூகம் அவ்வாறே அமைத்து  வியூகத்தின் முக்ய  அங்கங்களில்  துருபதன் திருஷ்ட த்யும்னன், பீமன், சிகண்டி, நடுவே  அர்ஜுனன் ஆகியோர்  பலம் சேர்த்தனர்.   நகுல சஹாதேவர்கள்   யுதிஷ்டிரன் அந்த கிரௌஞ்ச வியூக  சிறகுகளாக  பொறுப்பேற்று பாதுகாத்தனர்.

 'அரசே,   பாண்டவர்களின் இந்த  க்ரௌஞ்ச வியூகத்தை பார்த்த  துரியோதனன் க்ருபரிடமும்  சல்லியன்,  அஸ்வத்தாமன்  ஆகியோரிடம் கலந்தாலோசித்தான்''       என  சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்  நடந்தது ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டு வந்தான்.

சங்கங்கள் முழங்கின. இரண்டாம் நாள் யுத்தம் ஆரம்பம் ஆகியது. முரசங்கள் பேரிகைகள் முழங்கின.

கிருஷ்ணன் பாஞ்ச ஜன்யத்தை முழங்கினான்.   எங்கும் எதிரொலித்த அந்த சப்தம் எதிரிகளின் இடையே ஒரு இனம் புரியாத நடுக்கத்தை உண்டு பண்ணியது. அர்ஜுனனின் தேவதத்தம் என்ற  சங்க நாதம் பாண்டவ சேனையின் நம்பிக்கையை  எதிரொலித்தது.  பீமனின் பவுண்ட்ரம் காதை செவிடாக்கியது.

குதிரைகள் தேர்களோடு  புழுதி பட  சூறாவளியாக எதிரிகளை நோக்கி  விரைந்தன.

''சஞ்சயா, என் மக்கள் எவ்வாறு இதை எதிர்த்தார்கள் என்று பார்த்து சொல்''
யுத்தமுறை தெரிந்த வீரர்கள், தங்களது சேனைகள், பக்க பல, உதவிகளோடு  தத்தம் எதிரிகளை  தாக்கினார்கள். எவர் எவரோடு மோதவேண்டும்  எப்படி சேனையை உபயோகிக்க வேண்டும். என்றெல்லாம்  ஏற்கனவே யோசித்திருந்தனர். பல முனை  வாழ்வா  சாவா   போராட்டம் நடந்தது.

தன்னை   எதிர்  நோக்கி நகர்ந்த பாண்டவ  சேனையைக் கண்டு துளியும் அஞ்சாமல் பீஷ்மர் அம்புச்
சரங்களை  நெருப்பென  பாண்டவர்களை நோக்கி  எறிந்தார், எரித்தார்.  அவரது வேகம், பலம்  சமாளிக்க இயலாமல் இருந்தது.  தேர்கள் எண்ணற்று  பொடியாயின,நொறுங்கின, குதிரைகள் காயமுற்று  உயிரிழந்தன. யானைகள்  கட்டுக்கடங்காமல்  சேனைகளில் புகுந்து துவம்சம் பண்ணின.

வேலும் வாளும் , வில்லும், கதையும், மோதின. எங்கும் சப்தம், பனிப்படலம் போல்  அம்புகள் மழையாகவும் திரையாகவும் தோன்றின.

''கிருஷ்ணா  நான் பீஷ்மரை கொல்லவில்லையானால் நம் சேனையில் அனைவரையும் அவர் ஒருவரே  கொன்று விடுவார். என்னை அவர் இருக்குமிடத்திலேயே கொண்டு செல்''  என்றான்  அர்ஜுனன்.
 அர்ஜுனன் ஒருவனே  பீஷ்மரை தடுத்து  நிறுத்த முடிந்தது.

பீஷ்மரின் அம்பு  வெள்ளம் பாண்டவ சேனையை சித்ரவதை  செய்தது.  அர்ஜுனன் மேல்  அம்புமாரி பொழிந்தார். நிறையவே  அவற்றை தன்  மீது வாங்கிக் கொண்டான் ஸ்ரீ கிருஷ்ணன்.

இன்றும்  திருவல்லிக்கேணி  ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் சென்று தரிசிப்பவர்கள் கண்ணன் முகத்தில் உடலில் எண்ணற்ற தழும்புகள் உள்ளதை காணலாம். எல்லாம் பீஷ்மர்  உபயம்.

பீஷ்மரை  அர்ஜுனன், அபிமன்யு,  சாத்யகி,  துருபதன் என்று அநேகர் தாக்கினார்கள்.   அர்ஜுனன்  கௌரவ சேனையை பிளந்தான்.  உள்ளே  ஊடுருவி சென்றான்.  முடிவற்ற பிரளயங்கள் ஒன்றை ஒன்று மோதுவது போல் அங்கே  பீஷ்மார்ஜுன யுத்தம்  நடந்தது.  உடல்கள் எங்கும் குவிய  ரத்தம் ஆறாக ஓடியது.  வானில் எண்ணற்ற கழுகுகள் வட்டமிட்டன. நிறையவே  ஆகாரம்  கீழே அவற்றிற்கு  மலையாக சேர்ந்து கொண்டே வந்தது. .

துரோணர்  த்ரிஷ்டத்யும்னனின் தேரை உடைத்த்தார். அவனது தேரோட்டியை  கொன்றார்.  அவனது நான்கு குதிரைகளும் தேரை விட்டு விலகி எங்கோ ஓடின.  பாஞ்சாலன் விராடன் சேனைகள்  துரோணரை வளைத்து நாலா  பக்கம் இருந்தும் தாக்கின.  துரோணர் சளைக்காமல்  அத்தனை வீரர்களையும் நடுங்க வைத்து  போர் செய்தார்.

கௌரவ சேனையின் ஒரு பக்கத்தில்   கலிங்கர்களின் சேனையை தனி ஒருவனாக  பீமன்  அழித்துக் கொண்டிருந்தான்.

'சஞ்சயா,   பீமனின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து எனக்கு சொல்''   என்றான் திருதராஷ்டிரன்.

துரியோதனன் கலிங்க சேனையை  பீமனைக் குறி வைத்து  தாக்குமாறு கட்டளையிட்டிருந்தான். அவர்கள் அவனை எதிர்த்தபோது  மரணத்தோடு விளையாடுகிறோம் என்று பாவம்  அவர்கள் அறியவில்லையே.   நிறைய  துணிகளை துவைத்து காயப்போட்டது போல் கலர் கலராக  எங்கே பார்த்தாலும் கலிங்க வீரர்களை கொன்று தள்ளினான் பீமன். உதவிக்கு வந்த  நிஷாதர்களுக்கும் அதே கதி.  சேதி  தேசத்து வீரர்கள் இதெல்லாம் கண்டு உயிர் தப்பி  ஓடி விட்டார்கள்.

 கலிங்க  ராஜன் எண்ணற்ற  அம்புகளை பீமன் மேல் எய்தான்.  பீமன் அவற்றை தடுத்து  கலிங்கனின் தேர் மீது தாவினான். தனது வாளால் அவனை இரண்டாக பிளந்தான். தலை தரையில் விழுந்தது. அவனுக்கு உதவியாக வந்தவர்களையும் கொன்றான். தொடர்ந்து எதிர்த்த  700 கலிங்க சேனா வீரர்களையும் தனி ஒருவனாக  பீமன்
கொன்றான்.  பீமனை கலிங்க சேனை சூழ்ந்ததைக் கண்ட  திருஷ்ட த்யும்னன் படையோடு அவனை அடைந்தான். எதிரிகள்  கலங்கினார்கள்.  பீஷ்மர்  பீமனின் வீர சாகசத்தை கண்டு மெச்சினார். அவனை நோக்கி வந்தார்.  பீஷ்மர் நெருங்குவதைக் கண்ட  சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோர் அவரை எதிர்த்து தாக்கினார்கள். சாத்யகி பீஷ்மரின் தேரோட்டியை கொன்றதும்  பீஷ்மரின் தேர் கட்டுக் கடங்காமல் அவரை  அங்கிருந்து விலகச் செய்தது.

சல்லியனின் வீரர்கள்  சாத்யகியை எதிர்த்தன.  திருஷ்டத்யும்னன் அங்கே  அவனுக்கு உதவ வந்துவிட்டான்.

அஸ்வத்தாமன்  அபிமன்யுவை தாக்கிக் கொண்டிருந்தான்.  துர்யோதனன் மகன் லக்கனகுமாரனை அபிமன்யு தாக்கி அவனை கொன்று விடுவான் போலிருந்ததால் பயத்தில் துரியோதனன் அங்கே நெருங்கினான்.

கிருபர்  துரோணர் பீஷ்மர்  ஆகியோர்  அர்ஜுனனை அங்கே வர விடாமல் அவனை தடுத்து  தாக்கிக் கொண்டிருந்தார்கள். 

''அஸ்வத்தாமா,  பார்த்தாயா,  அர்ஜுனன் வீரத்தை,  கிருஷ்ணன் தேரோட்ட எவ்வளவு லாகவமாக  கௌரவ சேனையை வாட்டி வதைக்கிறான்  அர்ஜுனன். அவன் ஒருவனே நம் சேனையை முற்றிலும் அழிக்கக் கூடியவன் என்று அல்லவோ தோன்றுகிறது.'' என்றார் பீஷ்மர்.

''அரசே,  இவ்வாறு யுத்தம்  தீவரமாக நடந்து தொடர்ந்து கொண்டிருந்த போது  சூரியனும் மேற்கே  கொஞ்சம் கொஞ்சமாக  இறங்கினான்.  இருள்  படர ஆரம்பித்தது.  அன்றைய யுத்தம் இந்தக் கட்டத்தில் நிறுத்த  ஏது வாயிற்று'' என்றான் சஞ்சயன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...