Sunday, June 16, 2019

VANCHINATHAN



        அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்
                                       J K SIVAN  

ஜூன் 17 - இன்று  வாஞ்சிநாதன் நினைவு நாள்  என்று  காலண்டரில் சீட்டு கிழிக்கும்போது காலையில் பார்த்தேன்.  அடேயப்பா 108 வருஷங்கள் ஆகிவிட்டதா அந்த மனிதன் உயிர் துறந்து. என்ன நடந்தது இன்றைக்கு சரியாக 108 வருஷங்களுக்கு முன்பு?   

அது வெள்ளையன் நம்மை ஆண்ட காலம். எல்லாம் அவன் இஷ்டப்படியே நாட்டில் நடந்தது. தனது மதத்தை பரப்பினான். நமது  அரிய , அருமையான, இணையற்ற,  இலக்கியங்கள், ஓலைச்சுவடிகள் ஒரிஜினல் சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய் விட்டான். அதையெல்லாம் அலசி நல்ல விஷயங்களை தான் எடுத்துக் கொண்டு, இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும்  இது தான் அதில்  கண்டது என்று நமக்கே ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதி   நாமும் ''ஆஹா, என்ன அறிவு,என்ன  ஞானம், நம்மால் முடியாததை எல்லாம் இந்த வெள்ளைக்காரன் நிறைய படித்து விவரமாக தந்திருக்கிறான் என்று இரு கைகளை கூப்பி அவனை வணங்குகிறோம்.  மாக்ஸ்முல்லர் ஒரு ஆள் போதுமே இதற்கு.   சரி  விஷயத்துக்கு வருவோம்.

ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் (Robert William Escourt Ashe) என்பவன் அப்போது  திருநெல்வேலி  கலெக்டர். அவனே ஜட்ஜ்.  திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள மணியாச்சி தொடருந்துச் சந்திப்பில் ரயில் வண்டி நின்றபோது, முதல் வகுப்பில் பயணம் செய்த அவன்  சுட்டுக் கொல்லப்பட்டான்.  சுட்டது  திருவாங்கூர்  ஸமஸ்தான  செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்கிற சங்கர அய்யர்.
 ஆஷைக் கொன்றபின்  தானும் அதே துப்பாக்கியால் தற்கொலை செயது கொண்டான். 

கொலை நடந்தபோது வாஞ்சியுடன் இருந்த சங்கர கிருஷ்ணய்யர் தப்பித்து ஓடிவிட்டாலும்  சீக்கிரமே பிடிபட்டு  சிறையில் தள்ளப்பட்டார். இதெல்லாம் தனிமனிதன் விரோதமாக இருந்தால் யார் நினைவில்  வைத்திருப்பார்கள்.  எல்லாம் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்க செயல்பாடுகள்.  1913ல் தூத்துக்குடியில் வாஞ்சிநாதனுக்கு ஒரு நினைவுச் சின்னம்  வைத்து அது  கவனிக்கப்படாமல்  பாழடைந்துள்ளதாம்.  

 ஏன் வாஞ்சி வெள்ளைக்கார கலெக்டரை சுட வேண்டும்? ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நாளுக்கு நாள் கொடூரங்கள்,அட்டூழியங்கள், கொடுமைகள் அதிகரித்தன. இதை தடுக்க, எதிர்க்க ஒரு இளைஞர் பட்டாளமே தயாராகி  இந்தியா முழுதும் இப்படி  தங்களால் இயன்ற எதிர்ப்பு  செயல்களில் ஈடுபட்டது.

செங்கோட்டை,குற்றாலம், தென்மலை, ஐந்தருவி என பல இடங்களிலும் வன பகுதிக்குள் ரகசிய கூட்டத்தை வாஞ்சிநாதன் குழுவினர் போட்டனர். ரகசியமாக பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.  ஆஷ் துரை   நெல்லை மாவட்டத்தின் ஹிட்லர்.  அவன் அதிகாரம் எல்லை மீறி வருவதை உணர்ந்த அந்த இளைஞர்கள் பட்டாளம் ஆஷ்துரையை தீர்த்துகட்ட களம் தேடியது. கண்காணிப்பை தீவிரபடுத்தியது நாட்கள் நகர்ந்தன.

ஆஷ்துரை நெல்லையிலிருந்து ரயில் மூலமாக மணியாச்சி வழியாக தனது மனைவியுடன் கொடைக்
கானலில் படிக்கும் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக செல்கிறான் என்ற தகவல் கிடைத்ததும்  12 இளைஞர்கள் தயாரானார்கள். இதில் யார் ஆஷ்துரையை கொல்வது என போட்டி? யார் ஆஷைக் கொல்வது என சீட்டுப்போட்டு பெயரை தேர்ந்தெடுத்ததில்  வாஞ்சிநாதன்  பெயர் வந்தது, பின் தான் தெரிந்தது எல்லாச் சீட்டிலும் வாஞ்சி பெயரை அவனே தந்திரமாக எழுதிக் குலுக்கினான்  என்று!!    தலா இரண்டு பேர் வீதம் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வேலை.  1911 ஜூன் மாதம் 17ம் தேதி மணியாச்சி ரயில்நிலையத்தில் துப்பாக்கியோடு வீர வாஞ்சிநாதனும், அவனுக்கு  உதவியாக சாவடி அருணாசலபிள்ளையும் காத்திருந்தனர்.

ஜிகு புகு ஜிகு புகு வென்று புகை மண்டலத்தோடு  ரயில் மணியாச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. வாஞ்சி நாதன் சாவடி அருணாசலம் பிள்ளை யிடம், ஆஷ்துரை பயணம்செய்யும் முதல்வகுப்பு பெட்டிக்கு அடுத்த இரண்டாவது வகுப்புபெட்டிக்கு அருகே நின்றுகொண்டார்கள்.    கலெக்டரின்  பாதுகாப்பு அதிகாரிகளை   ஏமாற்றி உள்ளே புகவேண்டுமே.  மற்றவர்கள்  அவர்களை சமாளித்துக் கொண்டி ருக்கையில்   வாஞ்சி  ''  நான் முதல்வகுப்பு பெட்டி அருகே சென்று ஆஷ்துரையை சுட்டு விட்டு தப்பி விடுவேன்.  என்  துப்பாக்கி சத்தம் கேட்டதும் நீங்கள் தப்பி விடுங்கள்''  என்று மற்றவர்களுக்கு வாஞ்சி கூறியிருந்தான்.    மெதுவாக யாரும் சந்தேகப்படாதவாறு முதல்வகுப்பு பெட்டி அருகேசென்று ஆஷ் துரையை சந்தித்து ''குட்மார்னிங் கலெக்டர் சார்''  என்றான்.  ஆஷ் துரை வெறுப்புடன் பதிலுக்கு  '' குட்மார்னிங்'' சொல்லி விட்டு   போ இங்கிருந்து கையை  ஆட்டி  சைகை காட்டினான்.   கண்ணிமைக்கும் நேரத்தில் வாஞ்சிநாதன் வேட்டியில்  மறைத்து  வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து  ஆஷ் துரையை நோக்கி சுட்டார்.துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட ஆஷ்  துரை கீழே  சாய்ந்தான்,  துப்பாக்கி சுடும் சத்தம்கேட்டதும் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம்  செய்து கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வாஞ்சி நாதனை பிடிப்பதற்கு அவன் அருகே ஓடினார்கள். வாஞ்சி நாதன் துப்பாக்கியை கையில் ஏந்தியபடி,   ''எனக்கு எதிரி ஆஷ் துரைதான். அவரை சுட்டு விட்டேன். எனக்கு நீங்கள் எதிரியல்ல கிட்டேவந்தால் உங்களையும் சுட்டு விடுவேன்''   என கூறியபடி கையில் துப்பாக்கியுடன் தலை  நிமிர்ந்து வீர  நடைபோட்டு சென்றார் விவேகம்கொண்ட வீர இளைஞன் வீரவாஞ்சி அதே ரயில்பெட்டியின் கழிவறையில் புகுந்து சரியாக காலை 10.50க்கு தன்னைதானே சுட்டுக்கொண்டு  மறைந்தான்.

நெல்லைகலெக்டர்     "ஆஷ்   துரை சுட்டுகொல்லப்பட்டார் ''    என்ற செய்தி   அதிக தகவல் தொடர்பு வசதி இல்லாத  அந்தக் காலத்திலேயே தேசமெங்கும் பரவியது.  ஒவ்வொரு  ஆங்கிலேயனுக்கும்  அன்று_முதல் மரணபீதி.  எந்த கருப்புத்  தமிழனும் வாஞ்சி நாதனாகவே தெரிந்தான்.

வாஞ்சிநாதனின் இறுதி முடிவு என்ன? அவன் உடலை   வெள்ளைக்காரர்கள் என்ன செய்தார்கள்? இன்று காலை இது எழுதும் வரை எனக்கு தெரியவில்லை. 
வாஞ்சியின் உடலையும், காய மடைந்த ஆஷ் துரையையும் மணியாச்சி  வழியாக வந்த சரக்கு ரயிலில் ஏற்றி திருநெல்வேலிக்கு கொண்டு போனார்கள். கங்கைகொண்டான்  பகுதிக்கு வந்தபோது  கொஞ்சம் உயிரோடு இருந்த ஆஷ் துரை கடைசி மூச்சையும் விட்டான்.  ஆஷ் துரையின் உடல் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் இங்கிலீஷ் சர்ச் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப் பட்டது. தற்போதும் இந்த கல்லறை நினைவிடமாக காட்சியளிக்கிறது. ஆனால் வாஞ்சியின் உடல் இறுதியில் என்ன செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை.
 வாஞ்சியின் உடல்  திருநெல்வேலி ஜங்க்ஷன்  பாலம் போலீஸ் நிலையத்தில் இரு நாட்கள் வைத்திருந்ததாக வரலாற்று குறிப்பு. அப்புறம் என்னாச்சு? 

செங்கோட்டை  என்கிற ஊரில் 1886-ம் ஆண்டு வாஞ்சிநாதன் பிறந்தான்.  விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக  ஈடுபட்டான். செங்கோட்டையில்  பள்ளியில் படித்து, பின்னர் பி.ஏ. படித்து, தொடர்ந்து வனத்துறையில் பணி யாற்றியது குறித்தெல்லாம் தகவல் இருக்கிறது. 

தென்னிந்தியாவில்  கஷ்டப்பட்டு பணம் சேர்த்து  வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள்   சொந்தமாக தூத்துக்குடியில் நடத்தி வந்த  `சுதேசி  ஸ்டீம்  நேவிகேஷன்’ நிறுவனம்  கப்பல் ஒட்டி வியாபாரம் செய்யக்கூடாது என்று வெள்ளைக்கார அரசாங்கம்  தடை விதித்தது.   தடையை மீறிய  வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.   அவர்களை மாடு போல் பிணைத்து  செக்கு இழுக்கச்செய்த கொடுமை.   இது தான்  வாஞ்சி திருநெல்வேலி கலெக்டராக அப்போதிருந்த ஆஷ் துரையை கொல்ல காரணம்.   

முதல் உலகப் போரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் 250 பேரை ஆங்கி லேயர்கள் கொன்று பஞ்சாப் மாநிலம் அஜ்நால் பகுதியிலுள்ள கிணற்றில் வீசியதை 157 ஆண்டு களுக்குப் பின் கடந்த ஆண்டு கண்டறிந்து மரியாதை செலுத்தப் பட்டுள்ளது. இதுபோல் வாஞ்சியின் உடல் என்ன செய்யப்பட்டது என் பதை கண்டறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வரலாற்று ஆய்வாளர் திவான் போன்றவர் களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாஞ்சிநாதன்  போன்ற வீர  தியாகிகள்  நினைவாக முடிந்தவரை இன்று  வந்தே மாதரம் சொல்வோமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...