Sunday, March 14, 2021

GEETHANJALI


 கீதாஞ்சலி    ---    நங்கநல்லூர்  J K  SIVAN 

தாகூர் 

35.   பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.

ரவீந்திரநாத் தாகூர்  ஒரு வங்காள தேச தியாகி. நோபல் பரிசு பெற்ற  கவிஞர். நமது தேசிய கீதத்தை இயற்றியவர்.  அவரது கீதாஞ்சலியை எனது வழியில் கிருஷ்ணனை  தோய்த்து நான் எழுதி வருகிறேன்.  

 35   Where the mind is without fear and the head is held high;
        Where knowledge is free;
       Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
       Where words come out from the depth of truth;
       Where tireless striving stretches its arms towards perfection;
       Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
       Where the mind is led forward by thee into ever-widening thought and action---
       Into that heaven of freedom, my Father, let my country awake.

இது மிகவும் பிரபலமான  பாடல்.  நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம் என்று பாரதியார் பாடி விட்டு போய்விட்டார். சுதந்திரத்தைப்  பார்க்க  கொடுத்து  வைக்காத துர்பாக்யசாலி.  நாட்டின் நிலையும் தெரியாது. அப்படித் தான் தாகூரும். கனவு கண்டிருக்கிறார். எவ்வளவு அழகான கனவு. பகல் கனவு அல்ல..  நல்லவேளை  அவர்கள் இருவரும்  சுதந்திரத்துக்குப் பிறகு நம்மைப் பார்க்கவில்லை.

எங்கு  எவர் மனத்திலும் பயம் என்பதே கடுகளவும் இல்லாமல்  தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
எங்கு  நான் இந்திய குடிமகன் என்று பெருமையுடன்  நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறோமோ,
எங்கு எதையும் கற்க வசதி, இலவசமாக எல்லோருக்கும்  உயர்ந்த ரக, முற்போக்கு கல்வியறிவு  கிடைக் கிறதோ,
எங்கு வார்த்தைகளில்  நாணயம், நேர்மை, சுத்தம், உண்மை  கலந்திருக்கிறதோ,
எங்கு  இந்த உலகம் ஒன்றே, நாம் எல்லோரும் ஒரு குடி மக்களே,  ஒரு கொடியில் மலர்ந்த மலர்கள் என்ற எண்ணம் வேரூன்றி இருக்கிறதோ, 
எங்கே  உலகம் துண்டாடப்படவில்லையோ, குட்டி குட்டியாக தன்னை சுற்றி சுவர் எழுப்பிக் கொள்ளாத  நாடுகள் நிறைந்த உலகமோ,
எங்கே எவன் எதை பேசினாலும் அது சத்தியத்தின் பிரதிபலிப்போ,  பொய் இல்லையோ,
 எங்கே எதைத்  தொட்டாலும்,  செய்தாலும்,   அதை  ஒழுங்கு, நேர்மை, சரியான சீரோடு அமைக்கின்ற ஓய்வற்ற, களைப்பில்லாத,  உற்சாக , உழைக்கும் கரங்கள் உள்ளதோ,
எங்கே  மக்கள். எதையும் யோசித்து, பிறகு யாவருக்கும்  பயனுள்ளதாக இருக்கும்படி செய்யும் எண்ணம் ர் மனதில் நிறைந்தவர்களாக  இருக்கிறார்களோ,  
எங்கே தீமை தரும்  பழைய வழக்கங்கள் இல்லையோ,
எங்கே  எல்லோர் மனத்திலும் கிருஷ்ணா நீ இருந்து வழிகாட்டி மேலும் மேலும் சுகமாக இருக்கும் சுபிக்ஷ பாதைக்கு அழைத்து செல்வாயோ,  
எங்கே  ஒவ்வொரு எண்ணத்திலும் ஒவ்வொரு செயலிலும் நீ உண்டோ,.
என் அப்பனே, கிருஷ்ணா, அங்கே  ஒரு அற்புதமான சுதந்திர நாடாக என் பாரத தேசம்.  ஒரு பூலோக ஸ்வர்கமாக உருவாகட்டும்.  அடிமைத்  தளையிலிருந்து  விடுபட்டு விழித்தெழட்டும்.''

ஐயோ,   தாகூரே,   இதென்ன இப்படி ஒரு பேராசை. எங்கள் இப்போதைய இந்தியா , நீ பார்க்காததை சொல்லட்டுமா?
இந்தியா ஒன்றல்ல, பல குட்டி  குட்டி  பிரதேசங்கள்,   வெவ்வேறு   மொழிகள்,  ஒன்றை பேசுபவனுக்கு மற்றொன்று பிடிக்காது. காற்று, மழை, தண்ணீர் எல்லாமே  இயற்கையை  கூறு போட்டு தடுத்து,  அவனவனுக்கு மட்டும், மற்றவனுக்கு கிடையாது. பொய்யைத் தவிர வேறு பேசமாட்டோம்.  எதற்கும், எல்லாவற்றிற்குமே , தொட்டால்  காசு,   கிடைத்தால்  காற்றைக்கூட பிடித்து, விற்போம்.  கல்வி கற்பதற்கல்ல. விற்பதற்கு.  சுயநலம் ஓன்றே எங்களுக்கு தெரிந்த  ஒரே  நலம்.    தாகூர் தாத்தா, பொதுநலம் என்றால் என்ன? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி யார்? அவர் என்ன ஜாதி? ஜாதிகள் இருந்தால் தான் கூட்டம் சேர்ப்போம், கொடி பிடிப்போம், நாட்டை ஆள்வோம். எங்கள் நாடு எங்களுக்கே என்று நாங்கள் சொல்லும்போது அதன் அர்த்தம் உங்களுக்கு தெரியாது  தாத்தா,  
இது வேறு உலகம்.    இது  நீங்கள் கனவு கண்டதல்ல.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...