Friday, March 19, 2021

NAAYANMAARGAL

 



      பக்தியின்  மானிட உருவங்கள்  --   நங்கநல்லூர்   J K  SIVAN --

ஸ்ரீ வைஷ்ணவத்தில் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாசுரம்  பாடியவர்கள், பிரபலமானவர்கள்.  அது போல்  சைவத்தில்  நான்கு  சிவனடியார்கள் தான்  பிரபலமானவர்களாக அறியப்படுகிறார்கள்.  அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் என்று. அவர்களை சைவ சமய குரவர்கள்  என்று சந்நிதி வைத்து கோயில்களில் வணங்குகிறோம்.  எண்ணற்ற சிவனடியார்களும் இவர்களைத் தவிர உண்டே.  அவர்களை அறுபத்து மூவர்  என்று கோவில்களில் ரெண்டு அடி  சிலையாக மட்டும் வரிசையில் பார்க்கிறோம். எல்லோரும் ஒரே மாதிரியாக சிலைகளாக நின்றாலும், அவர்கள் சரித்திரம் அற்புதமானது என்பதால் அவர்களை பற்றி அடிக்கடி எழுதுகிறேன்.  அவர்களை நாயன்மார்கள் என்கிறோம். 


இதுவரை 28  நாயன்மார்கள் சரித்திரம் அவர்கள் வாழ்ந்த ஊர், வழிபட்ட சிவாலயம் பற்றியெல்லாம் எழுதியதை எத்தனை அன்பர்கள் படித்தார்களோ?  என் மனதிருப்தியை எழுதுவதன் மூலம்  அடைகிறேன். எல்லோரும் இன்புற்றிருக்கவேயன்றி  வேறொன்றறியேன் பராபரமே.

சிவனடியாராக,  நாயன்மாராக இருக்க பிராமணராக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. பக்தி ஒன்று தான் பிரதானம்.    பக்தி  ஞானத்தை  விட  மட்டுமில்லை.  அதைவிட  மிக மிக உயர்ந்தது.  கல்வி மட்டும்  கைலாசத்துக்கு கொண்டு செல்லாது. கல்லறைக்கு தான் கொண்டு போகும். பக்தி அப்படி அல்ல. அது உண்மையாக தன்னலமின்றி  எவரிடமிருந்தாலும்  அங்கே  அன்பு, தன்னடக்கம், கருணை, உயிரையே திரணமாக நினைக்கும் தியாக குணம்  இருக்கும்.  அவர்  கடவுளுக்கு  பாத்திரமானவர், சமானமானவர்.அவர் திருவடிகளில்  அநேக கோடி நமஸ்காரம்.

நான்  படித்து  உங்களுக்கு சொல்லும்போது தான்  ஒவ்வொரு நாயன்மாரின் வாழ்க்கையும் எப்படி  தியாகத்தின் அடிப்படையில், தன்னலமின்றி, வறுமையிலும்  வளமாக இருந்தது.  சிவபக்தி எப்படி உறவை மிஞ்சி நின்றது என்று ஆனந்தித்தேன். உலக ஈர்ப்புகளை வென்றவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.  இவர்களை பற்றி உதாரண புருஷர்களாக ஏனோ பாட திட்டத்தில் இடம் பெற விடாமல்  விட்டு விட்டார்களோ தெரியவில்லை.  ஆழ்வார்கள், நாயன்மார்களிடம்  கர்வம், அகம்பாவம் காணோம்.  இருந்தால் அப்படி உயர்ந்திருக்க மாட்டார்களே.  அப்பர்  என்ற கிழவர்  சம்பந்தர் என்கிற  சிறுவனின்  பல்லக்கை சுமந்து வருகிறார்.  பிள்ளையை வெட்டி சமைத்து கொடு என்றதும் யோசிக்காமல்  எப்படி தான் ஒரு அப்பா அம்மாவுக்கு மனம் வந்ததோ? அவ்வளவு சிவபக்தியா?   பெற்ற பிள்ளை  நாகம் கடித்து இறந்தும்  அவனை மறைத்து வைத்து விட்டு வந்த  அதிதி சிவனடியாருக்கு  போஜனம் செய்ய யாரால் முடியும்?  பாசுரம் பதிகம் பாடாமலேயே  தமது வாழ்க்கையே ஒரு பாடமாக வாழ்ந்தவர்கள். 

ஒவ்வொருவர்  வாழ்க்கை வரலாறும் படியுங்கள் அவர்கள்  எவரையும்  காப்பி அடித்து வாழவில்லை.  மனதை தூய பக்தியால் நிரப்பி  பிறர்க்குதவியாளராக வாழ்ந்த  ஏழைகள், வறியவர்களுக்கு இந்த வரிசையில் உண்டு.
படியுங்கள். பலன் பெறுங்கள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...