Wednesday, March 17, 2021

THOLLAKAADHU SITHTHAR





 

தொள்ளைக்  காது சித்தர்   -- நங்கநல்லூர்  J K  SIVAN

அவர் யார், என்ன இயற்பெயர், எந்த ஊர், அப்பா அம்மா யார்?.  ஹுஹும்  இதெல்லாம் வழக்கம் போலவே  நமக்கு தெரியாதவை.  இந்த  விசித்திர மனிதரை  அடிக்கடி  புதுச்சேரியிலும்   அதற்கு  7-8 கி.மீ. தாண்டி  இருக்கும்  முரட்டாண்டி என்ற ஊரிலும்  மக்கள் பார்த்ததாக அறிகிறோம். அப்பா  இளம்  வயதிலேயே  மறைந்து தாயார் வளர்த்த பிள்ளை.    பெரியவனான பின்  அம்மா   கல்யாணம் பண்ணி வைக்க  ஏற்பாடுகள் செய்தாள்.  பையன் மிரண்டு போய்  விட்டான். மனைவியா?  ஐயோ எனக்கா?   வேண்டவே  வேண்டாம் இந்த ஆபத்து என்று  குலதெய்வம்  முத்து மாரி அம்மனிடம்  முறையிட்டான்.  

''என்னிடம் வாடா,''   என்று  அம்மன்  அழைப்பது கேட்டது.   அம்மன் குரலைக்  கேட்டவாறே  நடந்தான்
கிட்டத்தட்ட பத்து கி.மீ. தூரம் நடந்து முரட்டாண்டி எனும் ஊருக்கு வந்து சேர்ந்தான்.  அப்போது தான்  ஏதோ ஒரு மயக்கம் இதுவரை அவனைப் பிடித்திருந்தது நீங்கியது.   முரட்டாண்டியில் முத்துமாரி அம்மன் தரிசனம் கிடைத்தது.   இனி அவன் தொள்ளைக்காது சித்தர்.


முன்னூறு நானூறு வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களைப் பற்றி நமக்கு சரியான தகவல் தெரிவதில்லை. பராபரியாக காதில் விழுந்தது, எங்கோ எவரோ எழுதியது அதையெல்லாம் வைத்து  ஒருவாறு புரிந்து கொள்கிறோம்.  இதைப் படித்து விட்டு எவரோ   ''நீ சொன்னது சரியில்லை,, அது இப்படி நடக்கவில்லை'' என்று சொல்லும்போது சிரிப்பு வருகிறது.  ஏனென்றால் அப்படி சொல்பவருக்கு தான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க தெரியாது.  இன்னொரு முக்ய  சமாச்சாரம்.   ஏதாவது  பொய்  சொல்ல வேண்டிய விஷயம், அவசியம் இதில்  எல்லாம்  எதுவுமில்லை.  ஏதோ நல்ல விஷயம்  தெரிந்தது என்று சந்தோஷத்தோடு நிறுத்திக் கொள்ளும் வழக்கம் தான் எனக்கு. 

தொள்ளக்காது சித்தர்  நல்ல உயரமமாம். ஆறடிக்கு மேலே. அகன்ற நெத்தி,  ஒரு இம்மி இடைவிடாமல் அதில் பளீரென்று வெள்ளை விபூதி,  பளிச்சென்று ஒளிவிடும்  ஞானக்கண்கள்.  ரெண்டு நீண்ட  தொங்கிய காது கீழ் மடலிலும் பெரிய  துவாரம். எதற்கு என்று தெரியவில்லை!   அது தான் தொள்ளைக்காது  என்ற பெயரை  வாங்கித் தந்தது.  தொந்தி,  முழங்கால் சில்லு வரை  நீண்ட கைகள்.  ஆஜானு பாஹு.  கைகளில்  தாமரை  ரேகைகள்,  குரு மேடு,  சனிமேடு,  உயர்ந்து  ஜாதகன்   அருள் ஞானமுள்ளவன் என்று காட்டும்.   பிள்ளையார் தான் வழிகாட்டி.  

மணக்குள விநாயகர் ஆலயம் இருக்கும்  பகுதிக்கு  புதுச்சேரியில்   வெள்ளை பட்டணம்  WHITETOWN  என்று பெயர்.  ஆரம்பத்தில் ஆலயம் இருக்கும்  இடத்தின் அருகே  ஒரு குளம் இருந்தது.  அதன் பெயர்  மணல் குளம்   ஆகவே   இந்த குலத்தினருகே  ஒரு  பிள்ளையார் கோயில் தொள்ளைக்காது  சித்தரால் உருவானதால்  பிள்ளையாருக்கு  'மணல் குள விநாயகர்’ என்று பெயர். நாளாவட்டத்தில் 'ஸ்ரீமணக்குள விநாயகர்’ என பிரபலமானார்.

பிரெஞ்சுக்காரர்கள்  புதுச்சேரியை  ஆக்கிரமித்த போது   1688ல் இங்கே  ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டபோது  அது மணக்குள விநாயகர்  ஆலயம் அருகே  தான்.   கோட்டை உருவானது. அதன் பின்னால் தான்   மணக்குள விநாயகர் ஆலயம்.   ஹிந்து  பக்தர்களால்  தினமும்  இந்த பிள்ளையாருக்கு   நித்ய  அபிஷேக – ஆராதனைகள்  உத்சவங்கள் நடந்து இன்றும்  தொடர்ந்தது பிரெஞ்சுக்  காரனுக்கு   பிடிக்கவில்லை.  அவன் வழிபடும்  ஈஸ்டர்   சமயம் , தவிர  ஞாயிற்றுக்கிழமைகளில் மணக்குள விநாயகர் கோவில் உத்ஸவங்கள்  நடத்தக்கூடாது என்று ஆணையிட்டான்.  நல்லவேளை  நமது முஸ்லீம்  ராஜாக்கள், அதிகாரிகள் போல்  கோவிலை இடிக்கவில்லை. பக்தர்கள்   இந்த  ஆணையை எதிர்த்தார்கள்.  பிரெஞ்சுக்காரனின் அரசாங்க  வேலைக்குச் செல்லாமலும்   புதுச்சேரியை விட்டு  வெளியேறவும்  ஆரம்பித்தார்கள்.  ''என்னடா இது வம்பாகிவிட்டதே.  தொழிலாளர்கள் இல்லாமல் வேலைகள் எப்படி நடக்கும் . வேலைகளுக்கு   ஆள் வேண்டுமே'' என்ற பயத்தில் பிரெஞ்சு அரசாங்கம் ஆணையை  வாபஸ் பெற்று,   பழையபடி  பிள்ளையாருக்கு  வழிபாடுகள் நடந்தது.  

தொள்ளைக்  காது  சித்தருக்கு  புதுச்சேரி  மணக்குள விநாயகர்  இஷ்ட தேவதை.  காந்தம் போல்  அவரை விநாயகர்  கவர்ந்தார்.  ஆகவே  தினமும்  அங்கே  விநாயகரை தரிசிக்க   மணிக்கணக்காக அமர்ந்திருப்பார்.  மணக்குள விநாயகர்  ஆலயம்  தொள்ளைக்காது சித்தரால் வளர்ந்து பிரபலமாகியது.   பிள்ளையார் கோயிலியிலேயே சமாதி அடைந்து    பிரஹாரத்திலேயே  சித்தர் இன்றும்  இருக்கிறார்.  பாண்டிச்சேரி  சென்றால் மறக்காமல் சித்தரைப்  பார்த்து வணங்கவும்.

பாண்டிச்சேரி என்கிற  புதுச்சேரியில்   கள்ளுக்கடைகள் எத்தனையுண்டோ அத்தனை  கோவில்களும் உண்டு. எல்லாம் சோழ காலக்கோவில்கள்.  10- 12 வது நூற்றாண்டு கோவில்கள்.   அற்புத சித்தர்கள்  சமாதிகள் உள்ளன.  அருகே  அரவிந்தர் ஆஸ்ரமம்.  இந்தியாவில் ஒரு அழகான சுத்தமான  கோவில்  மணக்குள விநாயகருடையது என்ற புகழ் வாய்ந்தது.    பிரெஞ்சுக்காரன் வருவதற்கு முன்பே  இருந்த கோவில். பிரெஞ்சுக்காரன் காலத்தில் இவருக்கு வெள்ளைக்காரன் பிள்ளையார்  என்று பெயர்.

ஒரு பிரெஞ்சுக்காரன்  கோவில் அருகே  இருந்தான். அவனுக்கு ஹிந்து  பக்தர்கள் கூட்டமாக வந்து பிள்ளையாரை கும்பிடுவது பிடிக்காமல் ஆட்களை விட்டு பிள்ளையார் சிலையை தூக்கி கடலில் போட வைத்தான்.  கடலில் போட்ட பிள்ளையார்  அவர்கள் திரும்பி   வருவதற்கு முன்பே  ஆலயத்தில்  சந்நிதியில்  பழையபடி அமர்ந்திருந்தார். அவரை மறுபடியும் இவ்வாறு  தூரமாக கடலில் விட்டெறிந்தும் அவர் ஆலயத்திலேயே  திரும்பி வந்து  இருப்பதைக்கண்டு  பயந்த பிரெஞ்சுக்காரன் பிள்ளையார் பக்தனாக  மாறி   பிள்ளையார் கோவிலுக்கு நிறைய  தர்ம தானம்  செய்ததாக  சரித்திரம் சொல்லுகிறது. 

புதுச்சேரியில்  1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் மஹா கவி பாரதியார்  வசித்திருந்தார். மணக்குள விநாயகரைப் போற்றி அவர்  இயற்றிய  விநாயகர்   நான்மணிமாலை 40 பாடல்கள் கொண்டது.  அதில் ஒரு இடத்தில்  'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்று  தனது மனதில் இருந்த  ஆசையை  அந்த ஏழைக்கவிஞன் வெளிப்படுத்தியது  நிறைவேறி  இன்று   மணக்குள விநாயகர்  மூல விக்ரஹம்  சந்நிதி  விமானம் பொன்  தகடுகளால்  வேயப்பட்டு  பளபளவென்று ஜொலிக்கிறது.  புதுச்சேரியில்  ஒரே தங்கக்கோவில் இது தான்.  

 மணல் குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது. அங்கு  ஏதோ ஒரு  கிணறு அல்லது குளம்  இருந்ததன் அடையாளம் தான் வற்றாத நீர் சுரப்பது.  பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்கிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் என்ன? எங்கே செல்கிறது?  

கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்கள்   நான் கடைசியாக பார்த்தபோது அழகான ஒரு யானை.  லக்ஷ்மி  என்று பெயர்.  இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.  அதோடு படம்பிடித்துக் கொள்ளாதவர்கள் கொஞ்சம்  தான்.    பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர்.   உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர்,  அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது. 

 புதுச்சேரி வரும்  அனைத்து மதத்தினரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள். தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.  இந்த கோவிலில்  விநாயகருக்கு இங்கு சித்தி புத்தி  அம்மைகளோடு கல்யாணம் நடத்திக் கொண்டாடுகிறார்கள். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...