Thursday, March 11, 2021

MAHA SIVARATHRI

 



                   சிவராத்திரி'' மஹிமை  -- நங்கநல்லூர்  J.K. SIVAN

 சிவன் முழுமுதற் கடவுள். அவனை நெக்குருகி பாடிய ஞானிகள் மஹான்கள், பக்தர்கள்  அநேகர். ஒரு சிலரின் அற்புத  பாடல்களை மட்டும்  மகோன்னதமான மஹா சிவராத்திரியில் அறிவோம்., ஆனந்திப்போம், அருள் வேண்டி சிவானுபவத்தில் கரைவோம்

''ஓம்''  என்ற   பிரணவ சப்தத்தில் அஞ்சு கோடி மந்திர சக்தி  உள்ளது. நெஞ்சு அதை விடாது சப்திக்க வேண்டும். ''நம சிவாய '' என்ற அஞ்செழுத்தில் சகல சக்தி மட்டுமல்ல. பாப விமோசனமும் உள்ளது.

அஞ்சு கோடி மந்திரமு நெஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும் முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே -   சிவவாக்கியர் 

நமசிவாய என்று சொல்லும் அக்ஷரம் சிவனே இருக்கும் இடம். சகல அபாயத்திலிருந்து தப்ப உதவும் உபாயம். பிராணனை பாபத்திலிருந்து மீட்டு நற்கதி தர உதவும் மந்திரம் நமசிவாயம்

சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே -  சிவ வாக்கியர்.

''அடே பரம சிவா, நீ இருக்க எனக்கு வேறு யாரிடம் பயம்? எனக்கு நீ கொடுத்த பலம் எது தெரியுமா? என்னிரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி சிரமேல் கரம் குவித்து அரோ ஹரா ஓம் நமசிவாயா என்று கண்ணில் நீர் பெருக நெஞ்சுருக உன்னை நினைத்து கூப்பிடுவது ஒன்று தானே''.

பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா
கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே. - சிவவாக்கியர்.

''பராத்பரா, ஒன்றே ஒன்று அது நீ ஒன்று தான். பலவாகத் தோன்றும் எல்லாமே நீ ஒன்றே தான். அழுக்காறு கயமை, வஞ்சகம், காழ்ப்பு போன்ற என்னுள்ளே களிம்புகள் நிறைய இருந்தாலும் அவற்றை நீக்கி நானாகிய இந்த களிம்பேறிய தாமிரப் பாத்திரத்தை மும்மலமகற்றி , பளபளக்கச் செய்வதும் நமசிவாயா எனும் உன் நாமந்தான். அது தான் என்னுள்ளேயே நிலையாக நிற்கிறதே''.

ஒன்று மொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம்உம்முளே அறிந்ததே சிவாயமே. -  சிவவாக்கியர் 

சிவா, நீ ஆதி, அந்தம் மூல விந்து, நாதம், பஞ்ச பூதம். நீயே நமசிவாய என்கிற பஞ்சாக்ஷரம். வேறு என்ன இருக்கிறது சொல்ல?

ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாதம்ஐந்து எழுத்துமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே. சிவவாக்கியர் 

சிவனுக்கு எத்தனையோ பெயர்கள், அதில் ஒன்று ருத்ரன். சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள். அதனால் தான் அன்பே சிவம் என்கிறோம். சங்கம் வளர்ந்தது தமிழால் . தமிழை நேசித்தவன் ஈசன். அவனை நாமணக்க ''தென்னாடுடைய சிவனே போற்றி'' என்று வணங்குகிறோம்.

சிவராத்திரி வருஷத்துக்கு ஒருமுறை வருவது அல்ல. ஒவ்வொரு தேய்பிறையிலும் சதுர்த்தசி திதி அன்று சிவராத்திரி வழிபாடு நடக்கும். மாதத்துக்கு ஒன்று என்ற கணக்கில் வருஷத்தில் 12 சிவராத்ரி. ஆகவே மாசி மாத சதுர்த்தசி திதி அன்று வரும் சிவராத்திரி ''மஹா சிவராத்திரி'' .

எனக்கு  தினமுமே சிவராத்திரி. ராவெல்லாம்  கண் முழிப்பவன்.  இன்று   நாள் பூரா உபவாசம் இருந்து  பக்தர்கள் , ருத்ரம் சமகம், திருவாசகம், தேவாரம் ஓதுவார்கள். ஸ்தோத்திரங்கள் பூஜை உண்டு. நாலு காலம் என்று நாள் பூரா கோலாகலமாக நாடு முழுதும் கொண்டாடுவார்கள்.

நாலு காலம் பற்றி சொல்கிறேன். சிவனின் சிரசு எங்கிருக்கிறது என்று பிரமன் அன்னபக்ஷியாக மாறி தேடினான். கண்டே பிடிக்க முடியவில்லை. ஆகவே முதல் காலம் ப்ரம்ம தேவன் செய்கிற பூஜை. சிவன் அபிஷேகப் பிரியன். கங்கை, காவிரி, புனித நதி ஜலங்கள் , தேன் , பால், இளநீர், தயிர், பஞ்சாம்ருதம், விபூதி, பன்னீர், சந்தனம், எலுமிச்சை பழ, கரும்பு சாறு, அன்னம் என்று பலவித அற்புத அபிஷேகங்கள் கண்ணுக்கு விருந்து.   முக்கியமாக பஞ்சகவ்யாபிஷேகம் விசேஷம். (பஞ்சகவ்யம்: பசும்பால், தயிர், நெய், பசு கோமியம், பசுஞ்சாணி இவை கலந்தது.) பல வித புஷ்பங்களால் அர்ச்சனை நடக்கும். தாமரைப் பூ விசேஷம்

அடுத்த கால பூஜை, ரெண்டாம் காலம் இரவு ஒன்பது மணி வாக்கில் ஆரம்பம். பிரத்யேகமாக அது ஸ்ரீ மஹா விஷ்ணு சிவனுக்கு செய்யும் பூஜை. சிவன் வராகமாக அவதரித்து சிவனின் திருவடி தேடி பாதாளம் கடந்து சென்றது நினைவிருக்கும். ஸ்வர்ணபுஷ்பம் என்று வெள்ளி நாணயங்களால் , வெள்ளி மலர்களால் அர்ச்சனை செய்வார்கள்.

உமாதேவி சிவனை பூஜிப்பது மூன்றாம் கால பூஜை. தேனை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது அற்புத காட்சி. வில்வார்ச்சனை நடக்கும். நள்ளிரவு 12 முதல் விடியற்காலை 3 மணி வரை நிறைய கோவில்களில் இதை கொண்டாடுவது வழக்கம்.

கடைசியாக நாலாவது கால பூஜையை யார் செய்வது என்றால், சகல விண்ணுலக முப்பது முக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சிவ கணங்கள் பூமியில் நாம் சர்வ பூதகணங்கள் எல்லோரும் வணங்கும் பூஜை நேரம். சூரியோதயம் வரை நடப்பது.

பார்வதி  நான் சொல்வதைக் கேள்:   இது நான் உவக்கும் திதி. என் பக்தன் என்னை மனதில் நினைத்து உபவாசம் இருக்கும் நாள். வேறு எந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும் எனக்கு வேண்டாம். நான்கு வகையில் நான்கு வேளைகளில் ஆலயத்தில் ஒவ்வொரு காலத்திலும் (மூன்று மணி நேரம்) அபிஷேகித்து வில்வ அர்ச்சனை செய்வது போதும். எனக்கு எந்த ஆபரணமும் அலங்காரமும் வேண்டாம். அபிஷேகங்களை பால், தயிர், நெய்,தேன் என்று நாலு காலமும் செய்யும் அபிஷேகம் பரம திருப்தி அளிக்கிறது. 

மறுநாள் காலை நித்ய கர்மாநுஷ்டானம் முடித்த பின் பிராமண அதிதி போஜனம் (பாரணை) செய்த பின்னர் உபவாசத்தை முடித்தல். பார்வதி, இது ஒன்றும் பெரிய கோலாகல பண்டிகை இல்லை. மனதையும் உடம்பையும் சுத்தமாக கட்டுப்பாட்டில் வைப்பதற்கான ஒரு சிறு வழி'' என்கிறார் பரமசிவன்

''பார்வதி உனக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன் கேள். காசியில் ஒரு வேடன். அன்று முழுதும் அடர்ந்த காட்டில் வேட்டையாடி அவன் பிடித்த சிறு மிருகங்கள் பறவைகளை கொன்று சாயந்திரமாக வீட்டுக்கு தூக்கிக் கொண்டு போகிறான். அவனது தொழில், ஜீவனம் அது. இருட்டிவிட்டது. களைப்பு பசி. தூக்கம் வேறு கண்ணைச்  சுற்றியது. ஒரு மரத்தின் அடியில் சற்று இளைப்பாறினான். அன்று தான் நான் சொன்ன சிவராத்திரி என்று அவனுக்கு எப்படி தெரியும்? இரவாகி விட்டதால், மரத்தடியில் இருப்பது ஆபத்து. இரவில் கொடிய வன விலங்குகள் பசியோடு வந்து அவனை விழுங்கிவிடும். ஆகவே  ஒரு மரத்தில் ஏறி ஒரு கிளையில் அமர்ந்தான். கொண்டு  வந்த வலையில் இருந்த பறவைகள், சிறு மிருகங்களை ஒரு மரக்கிளையில் கட்டி வைத்தான். அது வில்வ மரம் என்றும் அவனுக்கு தெரியாதே.   தூக்கத்தில் சாய்ந்து மரக்கிளையிலிருந்து கீழே விழாமல் இருக்க  இரவு முழுதும் விழித்திருந்தான். 

மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்ததும்   அவனுக்கு தெரியாது.  இருட்டு வேளை . தூக்கத்தை விரட்ட பொழுது போக்க, மரத்தின் கிளைகளில் இருந்த இலைகளை பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்டுக் கொண்டிருந்தான். அது என் மேல் விழுந்தது. பனி த்துளிகள் இலையோடு சேர்ந்து அவனால் என் மேல் குளிர்ச்சியாக அபிஷேகமாகியது.

பொழுது விடிந்தது. கீழே இறங்கி  பறவை  மிருகங்கள்  வலையை மூட்டையை தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தான். 

அன்று அவன்  காலம் முடியப்போகிறது என்றும் அவனுக்கு தெரியாது. போகும் வழியில் பசியோடு இருந்து இரவு முழுதும் விழித்தவன் மயங்கி விழுந்து இறந்தான். எம தூதர்கள் அந்த ஜீவனை எடுத்துக்கொண்டு போகும்போது என் பூத கணங்கள் அவனை எமதூதர்களிடம் இருந்து மீட்டு கைலாசம் கொண்டுவந்தார்கள். எமதூதர்களும் சிவகணங்களுக்கும் விவாதம். சிறிய கைகலப்பு. எமதூதர்கள் தோற்றனர். எமனுக்கு செய்தி போயிற்று. என்ன காரணத்துக்காக எமதூதர்களிடமிருந்த அந்த வேடனின் ஜீவனை சிவகணங்கள் கைப்பற்றின என்று கேட்க யமதர்மன் வந்த போது நந்திகேஸ்வரன் அவனை நிறுத்தி சிவராத்திரி மஹிமை பற்றி கூறி அந்த வேடன் என்னை திருப்திப்படுத்தியதைக்  கூறினான். யமதர்மன் ஆச்சர்யமடைந்து வேடனின் ஜீவனை கைலாசத்தில் விட்டு திரும்பினான்.


விஷயம் மெதுவாக பார்வதி மூலம் எங்கும் பரவி பூலோகத்தில்  வருஷாவருஷம்  நாம்  சிவராத்திரி மஹிமை அறிந்து  வைபோகமாக கொண்டாடி  இன்று எங்கும்  பூலோக கைலாசமாக காட்சி தருகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...