Thursday, March 4, 2021

COVISHIELD


 

ஒரு நாள் விடுமுறை  எழுத்துக்கு  -   நங்கநல்லூர் J K   SIVAN 

நேற்று  ஒரு புது அனுபவம்.   என்  2 வயது   குட்டி  பேத்திக்கு  மாதாமாதம்  அல்லது குறிப்பிட்ட கால அவகாசத்தில் கொடுக்கவேண்டிய  ஊசிகளை அவளது டாக்டர்  கோட்டூர்புரத்தில்  போடுவார். நேற்று ஒரு இன்ஜெக்ஷன் போட அவளை அழைத்துக் கொண்டு போனபோது நானும் கூடவே  உதவிக்கு சென்றேன்.   டாக்டர் ஒரு எமெர்ஜென்சி  டெலிவரிக்காக  அருகே இன்னொரு  ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தார்.  அவருக்கு போன் பண்ணியபோது    அங்கே  குழந்தையை கொண்டுவரச் சொன்னார்.   மாஸ்க் அணிந்துகொண்டு யார் மீதும் படாமல் மடியாக எதையும் தொடாமல்  அங்கே சென்றோம். அதுவும் ஒரு பெரிய  ஆஸ்பத்திரி.  அங்கே  குழந்தைக்கு ஊசி போட்டார். வீல் வீல் என்று அழுதது.  அதற்கென்று சில பொம்மைகளை இது மாதிரி டாக்டர்கள்  வைத்திருப்பதால் அதன் கவனம் விளையாட்டு பொம்மை மீது சென்று ஊசியை மறந்து சிரித்தது.  அப்போது  எதிரே  அந்த ஆஸ்பத்திரியின் கிளை ஒன்று எதிர்பக்கம் பெரிசாக தெரிந்தது. அதில்  ஆஸ்பத்திரி முகப்பை விட பெரிய  ஒரு அறிவிப்பு  COVID VACCINATION.  என் மகன் டாக்டரை கேட்டு  எனக்கு கோவிஷீல்டு வாக்சினேஷன் போடுவது பற்றி விசாரித்தபோது,  உடனே  டாக்டர் அங்கே உள்ள ஒரு நர்ஸுக்கு போன் பண்ணி உடனே எனக்கு  வாக்சினேஷன் போட ஏற்பாடு செய்த்துவிட்டார்.  நான் இதை எதிர்பார்க்கா ததால்  ஆதார் அட்டை எடுத்துச் செல்லவில்லை.   மொபைலில்  SOFT காபி  இருந்ததால் அதை வைத்துக்கொண்டு  250 கட்டியாச்சு.  மேலே  மாடிக்கு போங்கோ என்றார்கள்.


அங்கே  ஐம்பது அறுபது பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். சிலர்  ஊசி போட்டுக்கொண்டவர்கள், முகத்தை சுளித்து கையை தடவி விட்டுக்கொண்டிருந்ததை பார்த்து  கொஞ்சம்  கலக்கமாக இருந்தது.  என்னை உற்றுப் பார்த்த நர்ஸ்   ''நான் உங்களை பார்த்திருக்கிறேன்,  நீங்கள்  முகநூலில் எழுதுபவரா?'' என்று கேட்டபோது ஆச்சர்யம்.  

''ஆமாம்  கொஞ்சம் சீக்கிரம் அனுப்பி விட முடியுமா?''
பத்து நிமிஷத்தில் உள்ளே போனேன் இடது கை சட்டையை தூக்கிவிட்டு  பஞ்சால் சுத்தம் செய்து  ''நறுக்''.
சின்ன ஊசி தான்.  0.3ML     எறும்பு கடிக்கிறமாதிரி  இருந்தது.   வெளியே  ரிசெப்ஷனில்  சில மாமிகள்  நிறைய கேள்விகள் கேட்டார்கள். என் பக்கத்தில் இருந்த ஒரு முதியவருக்கு பாகற்காய்  பிட்லை  சாப்பிடலாமா,  என்ன டயட்  போன்ற கேளிவிகளை கேட்டுக்கொண்டிருந்தார்?  நடுநடுவே நீங்கள் யார் என்ன செயகிறீர்கள் என்று என்னிடம்  வேறு  கேள்விகள்.  
''இது ஆக்ஸ்போர்ட் வாக்ஸின்  தானே, ''  என்றார்.
''இந்தியாவில்  மருந்து   லேபரட்டரியில் தயார்செய்தது.'' என்றேன்.    டெலிபோனில்  யாரிடமோ உரக்க  ''நான்  கோவிட்  வாக்சினேஷன் குதிக்க வந்திருக்கேன்.  அரைமணியிலே வந்துடுவேன்..''
என்  அருகே வந்து  இருமிக்கொண்டே  உட்கார்ந்தார், நான் எழுந்து தூரமாக போய்விட்டேன். 

 நேற்று எல்லாம்  ஜுரமோ, தலைவலியோ  எந்த தொந்தரவும் இல்லை.  ராத்திரி ஆரம்பித்தது உடம்பு பூரா  வலி. மராத்தான்  ரேஸ்  ஓடினால்  போல ஒரு  அங்குலம் அங்குலமாக உடம்பு பூரா வலி.  இன்றும்  இருந்தாலும் அவ்வளவு இல்லை.  DOLO 650  சாப்பிடுங்கோ  என்று சொன்னார் டாக்டர். இந்த வலி  உள்ளே  கோவிட்  தடுப்பு  மருந்து வேலை செய்வதால்  என்று சொன்னார். 

  நேற்று இன்று ரெண்டுநாளும்  கம்ப்யூட்டர் பக்கமே  போகவில்லை.  முதுகு வலி.  இப்போது தான் வெந்நீ ரில் ஒரு  குளியல் போட்டுவிட்டு வந்து உட்கார்ந்தேன்.  சூடாக   மிளகு ஜீரக ரசம்  சுட்ட அப்பளம், பசியை தீர்த்தது.

ஐந்து வயதில் சூளைமேட்டில்  அப்பாதுரை எங்களை  வகுப்பில்  வரிசையாக நிற்க வைத்து  ஹெட்மாஸ்டர் அறைக்குள் அனுப்பி, அங்கே ஒரு குண்டு டாக்டர் கடுகடுவென்று உற்றுப்பார்த்து,  மேசையில் ஒரு  ஸ்டவ்வில்  வெந்நீர் கொதிக்க அதில் ஊசியை போட்டு எடுத்து மருந்து தடவி  ஒரு திருகு திருகியபோது  உச்சிமண்டை பிளந்தது போல் கத்தியது  ஞாபகம் வந்தது. அப்புறம் ஒருவாரம்  பள்ளிக்கூடம் போகவில்லை,  கையில் அம்மை இந்நாகுலேஷன் ஊசி   வைஷ்ணவர்கள்  சக்ரம்   குத்திக்  கொள்வது போல்  வைத்து அழுத்தி திருகினார்.     ஒருவாரம் வலி,  கை  அப்பமாக  வீங்கி, கொப்புளங்கள் ....... இன்னும் அந்த  தழும்பு இருக்கிறது.

கோவிஷீல்டு அனைவரும் வாக்ஸின்  குத்திக்கொள்வது  அவசியமாகிவிட்டது.  லக்ஷக் கணக்கானோர் பயமின்றி திரியலாம்.   28 நாளுக்குப் பிறகு இன்னொரு  டோஸ்  மேலே சொன்ன அளவு  போய் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்.






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...