Wednesday, March 24, 2021

ADHYATHMA RAMAYANAM

 

ஒரு மலையாள கவியின் பரிசு....  நங்கநல்லூர் J.K. SIVAN. 

துஞ்சத்து எழுத்தச்சன் என்ற பெயர் கேட்டதுண்டா?. கேட்டிருப்பவர்கள் அவர் எழுத்தை படித்ததுண்டா? அத்யாத்ம ராமாயணத்தை மலையாளத்தில் கிளிப்பாட்டாக அசாத்யமாக பாடியிருக்கிறாரே. படிக்காத மலையாளிகளை மன்னிக்கா தீர்கள். தண்டனையாக அவர்களுக்கு அந்த புத்தகத்தை வாங்கி பரிசாக கொடுத்து விடுங்கள். படித்துவிட்டு சொல்லச் சொல்லுங்கள். யார் இந்த எழுத்தச்சன்?

மலையாளத்துக்காரர்கள் ஊர் குடும்பம் வீட்டின் பெயரை முதலில் வைத்து தான் அறிமுகம்செய்துகொள்பவர்கள். துஞ்சத்து ராமானுஜன் '' எழுத்தச்சன்'' തുഞ്ചത്ത് രാമാനുജൻ എഴുത്തച്ഛൻ, பிறக்கும் போதே ''எழுத்துக்கு அப்பா'' என்ற பேருடன் பிறந்தவரோ? எழுத்தச்சன் என்பது ஒரு குலம் என்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய மலையாள கவிஞர்.மலையாளத்துக்கு அப்பா அவர் தான். த்ரிகண்டியூர் என்ற ஊரில் பிறந்து தனக்கு ஒரு பெண் குழதை பிறந்தபின் சந்நியாசியாக சுற்றியவர். பாலக்காடு சித்தூரில் தனக்கு ஒரு மடம் அமைத்துக் கொண்டவர் . ஐநூறு வருஷ சமாச்சாரம். சிலர் அவர் ஒரு பிரம்மச்சாரி என்கிறார்களே.  அப்படியானால்
தனிமை யிலே  இனிமை  காண முடிந்தவரை.  


 ராமாயணம் மஹாபாரதம் எல்லாம் , அதிகம் புஸ்தகம் பக்கம் போகாத,  தெருவில் அவசரமாக ஒரு டீ குடிக்க நடக்கும் சாதாரண மலையாளி கூட,  வேட்டியை மடித்து டப்பா கட்டு கட்டிக்கொண்டு நின்று ரசித்து புரிந்து கொள்ளும்படியாக எழுதியவர்.

15- 16ம் நூற்றாண்டில் மலையாளிகள் மத்தியில் புயலாக பக்தியை கிளப்பிய அற்புத எழுத்தாளர்கள் எழுத்தச்சனும் பூந்தானம் நம்பூத்ரியும் என  சொல்லலாம்.  எழுத்தச்சனின் கிளிப்பாட்டு அத்யாத்ம ராமாயணம், மஹாபாரதம், இதர தோத்திர பாடல்கள் பிரபலமானவை. அவரும் பூந்தானம் நம்பூத்ரியும் இரு கண்களாக போற்றக்கூடியவர்கள். பூந்தானத்தின் ''ஞானப்பான'' பாடல்களை கொஞ்சம் நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம். வடமொழி சமஸ்க்ரிதத்தில் நாராயணீயம் எழுதிய மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி மிக முக்கியமான மற்றொரு பக்திமான்.

திடு திப் என்று எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணத்தில் ஒரு காட்சி மட்டும் சொல்கிறேன். இது அல்வா கடையில் கொஞ்சூண்டு கேட்டு வாங்கி சாப்பிடுவோமே  அந்த கொசுறு, சாம்பிள்.   பிறகு விலாவாரியாக எழுத்தச்சனோடு ராமாயண பூங்காவில் உலாவுவோம்.   அத்யாத்ம ராமாயணத்தில் 7000 ஸ்லோகங்கள்  .

ராவண வதம் முடிந்து ஹனுமான் மூலம் சீதைக்கு செய்தி சொல்லி அனுப்புகிறார் ராமர். அவள் அதை எப்படி எதிர் கொள்கிறாள்?

கண் மூடி சதா சர்வ காலமும் ராம த்யானத் திலேயே ஈடுபட்டிருக்கும் சீதை கண் விழித்து  எதிரே பார்க்கிறாள்.  அனுமன் கை  கூப்பி  நிற்கிறான்.  ராமனி ன் வெற்றியை, ராவணன் அழிவை சந்தோஷத்தோடு எடுத்து சொல்லிவிட்டு, சீதையின் பதிலை எதிர்பார்க்கிறார்.

''''ஏன் இன்னும் ராமன் வரவில்லை? எப்போது ராமர் வருவார் அதை முதலில் சொல்?'' என்கிறாள் சீதை.

சில மூதாட்டிகளை அனுப்பி அவளை மங்கள ஸ்நானம் செய்வித்து, புத்தாடை, ஆபரணங்கள் பூட்டி ஒரு பல்லக்கில் அழைத்து வாருங்கள்''. என்கிறார் ராமர். விபீஷணனும் வானர வீரர்களும் அனுமனும் அவளை தரிசிக்க ஆவலாக சூழ்ந்து கொள்கி றார்கள். விபிஷணன் வானரர்களை   களைத்திருக்கும் சீதை அருகில் சென்று தொந்தரவு செய்யவேண்டாம் என்று விலக்குகிறான்.

ராமர் இதை கவனித்து ''விபீஷணா, வானரர்களைத் தடுக்காதே. அன்னையைக் காண ஆசைப்படுகிறார்கள்.

''சீதா,  உனக்கு  பல்லக்கு வேண்டாம்' அவர்கள் உன்னை கண்ணாரக் காணட்டும். நீ நடந்து வா சீதா. உன்னை வானர சைன்யம் பார்க்கட்டும்'' ராமர்.

''நாதா,  எனக்கு மண்ணில் ஒரு குழி வெட்டி அதில் தீ மூட்டுங்கள் என்கிறாள் சீதை.   தீ  மூட்டியதும்  அக்னி  ஜ்வாலையை நெருங்கிய சீதை ''அக்னி தேவா, என் பதிவ்ரதா பரிசுத்தத்தை உலகம் அறியட்டும். நான் இத்தனை காலமும் வேற்று மனிதன் எவனையும் ஏறெடுத்தும் பாராமல் ராம சிந்தனையிலேயே இருந்ததைப்  பரிசோதனை செய்'.   
 அக்னியை மூன்று முறை வலம் வந்து வேண்டியவாறு தீயில் கலந்து விடுகிறாள்.

மாய சீதா  மறைந்து   நிஜமான  ராமனின்  சீதை அக்னியிலிருந்து  வெளிப்பட்டு ராமனை அடைகிறாள். ராமனை இந்த்ராதி தேவர்கள் போற்றிப் புகழ்கிறார்கள். உலகத்தில் இனி தேவர்கள் ராக்ஷச பயமின்றி நிம்மதியாக தம் த்யானத்தில் ஈடுபட முடியும். உயிர்கள் பீதியின்றி இனி வாழ வகை செய்த ஸ்ரீ ராமா உன்னை போற்றி வணங்குகிறோம்'' என்று மனதார வாழ்த்துகிறார்கள் இந்த்ராதி தேவர்கள். 

''ஸ்ரீ ராமா தாங்கள் புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பவேண்டும் '' என்று விபீஷணன் கூறுகிறான். வானர சேனாதி பதிகளும் விபீஷணனும் ராமனுடன் சேர்ந்து திரும்ப விழைகிறார்கள். சீதை வானர சேனாதிபதிகளின் மனைவிகளும் கூட வரவேண்டும் என்று சொல்கிறாள். எல்லோரும் பாரத்வாஜ ஆஸ்ரமம் அடைகிறார்கள். ஒரு இரவு எல்லோரும் அங்கு தங்கவேண்டும் என்று உபசரிக்கிறார் பாரத்வாஜ மகரிஷி. ஹனுமனை உடனே அயோதிக்குச் சென்று தனது வரவை அறிவிக்க அனுப்புகிறார் ராமர். ராமர் அயோத்தி அரசனாக முடி சூட்டப்படுகிறார். உடன் வந்திருந்த வானர வீரர்களும் விபீஷணனும் பட்டாபி ஷேகத்துக்குப் பின் தக்க பரிசுகளோடும் மரியாதைகளோடும் தத்தம் ஊர் திரும்புகிறார்கள். அயோத்தியில் ராம ராஜ்யம் உலகப்புகழ் பெறுகிறது. கடைசி அத்யாயத்தில் இராமாயணம் படிப்பதால், கேட்பதால் விளையும் பலன் சொல்கிறார் எழுத்தச்சன். 

மலையாள கிளிப்பாட்டை  நமது நண்பர்  ஸ்ரீ P .R .ராமச்சந்திரன் அழகாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

இனி மலையாளத்தில் அத்யாத்ம ராமாயண ஸ்லோகம் பார்க்கலாம். ஆங்கிலத்தில் PRR மொழிபெயர்ப்பும் தமிழில் எனது குறிப்பும்  முடிந்தவரை  தொடரும்..


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...