நானும் கிரிக்கெட் விளையாடியவன் தான். என் காலத்தில் மகிழ மரம், ரங்கநாதம்பிள்ளை காம்பௌண்ட் சுவரில் கரிக்கோடு தான் ஸ்டம்ப் என்பதால் விக்கெட் கீப்பர் கிடையாது. தென்னைமட்டை வெட்டி வைத்திருப்பார்கள். அது தான் பேட் . ஒவ்வொரு பக்கமும் 11 பேர் கிடையாது. ரன் அவுட் பண்ணும் வழக்கம் இல்லை. ரன் ஓடும்போது பாப்பிங் கிரீஸ் லைன் இல்லாததால் எதையும் தொடாமல் திரும்பி ஓடி வந்து ரெண்டு மூன்று நாலு என்று நாம் சொல்லும் எண் தான் ரன். அவரவர் ரன் அவரவர்களே எண்ணி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Saturday, March 6, 2021
TEST CRICKET MY EXPERIENCE
நானும் டெஸ்ட் கிரிக்கெட்டும் - நங்கநல்லூர் J K SIVAN
நாலு ஐந்து பேர் ஒரு பக்கம் இருந்தாலே அதிசயம். ஆறு ஏழு இருந்தால் அது ஒரு சில தம்பி தங்கைகளை சேர்த்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தால். அவர்கள் கணக்கில் வரமாட்டார்கள். பழைய டென்னிஸ் மஞ்சள் கலர் கவர் பால். அம்பயர் கிடையாது. போலிங் போடுபவன் யார் எப்படி அவுட் என்று முடிவெடுப்பான். அவன் தான் ரெண்டு பக்கமும் கேப்டன். கேட்ச் பிடிப்பதை விட விடுவது அதிகம். பந்து அடிக்காமலேயே ஓடுவோம். தப்பாக ரன் சொல்வோம். ரங்கநாத பிள்ளை தோட்ட கிணற்றில் பந்து விழுந்தால் மேட்ச் முடியும். பக்கெட், சொம்பு கயிற்றில் கட்டி மிதக்கும் பந்தை வெளியே நைசாக எடுக்கும் வரை எல்லோரும் வேடிக்கை பாப்போம். யார் வீட்டிலே யாவது பந்து விழுந்தால், அப்போது ரன் ஓடினால் செல்லாது. ஆனால் அடிக்கடி அடுத்த வீட்டு பலராம பிள்ளை வீட்டில் பந்து விழுந்தால் கொடுக்க மாட்டார்கள். மேச் க்ளோஸ். கெஞ்சி பந்தை மீட்போம்.
நான் வளர்ந்த பின் 1964ல் வேலையில் சேர்ந்த பிறகு தான் முதல் முதலாக ஒரு கிரிக்கெட் டெஸ்ட் மேச் , இந்தியா - இங்கிலாந்து ஐந்து நாள் ஸிரிஸ் மேட்ச் மெட்றாஸ் கார்ப் பொரேஷன் (அப்புறம் நேரு) ஸ்டேடியத்தில். பாஸ் கிடைத்தது. ஒருநாள் பார்க்கலாம் என்று அனுமதித்ததால் கொள்ளை ஆனந்தம். பார்க் ஸ்டேஷனில் இறங்கி நடந்து காலை எட்டு மணிக்கே சென்று விட்டேன். அப்போதெல்லாம் டிக்கெட் வாங்கி பார்க்கும் பழக்கம் இல்லை. யாரவது பாஸ் கொடுத்தால் தான் மேட்ச். காலரியில் A B C D என்று போட்டிருப்பதை பார்த்து வாசலில் அந்த பக்கம் போ இந்தப்பக்கம் போ என்று அனுப்புவார்கள். தண்ணீர் சாப்பாடு மூட்டை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுவோம். எனக்கு கிரிக்கெட் அவ்வளவாக நுணுக்கங்கள் தெரியாமல் ரசிப்பேன். சில ஹீரோக்கள் எனக்கென்று உண்டு.
பெரியமேடு, பார்க் ஸ்டேஷன் அருகே ஸ்டேடியம் இருந்ததால் பக்கத்தில் இருந்த பெரிய கட்டிட மாடியில் ஏறி நின்று பார்க்க முடியாத ரசிகர்கள் ஸ்டேடியம் அருகே மரத்தில் தொங்கிக் கொண்டு மணிக்கணக்காக மேட்ச் பார்ப்பார்கள். ரேடியோக்களில் ரன்னிங் கமெண்ட்ரி கொரகொரவென்று கேட்டு இருமலோடு இந்தியில் இங்கிலீஷில் பேச்சுமூலம் கிரிக்கெட் கேட்பவர்கள் ஜாஸ்தி. பொறுத்திருந்து மறுநாள் செய்தித்தாளில் படிக்கும் ஜாதி அதிகப்படியான ரசிகர்கள்.
நான் போனது முதல் நாள் மேட்ச் மட்டும் தான். குந்தரன் என்பவர் விளாசு விளாசு என்று விளாசி கிட்டத்தட்ட இருநூறு ரன்கள் எடுத்தார். அவர் அவுட்டாகியும் அம்பயர் அவுட் கொடுக்காத அதிர்ஷ்டம். கேட்ச் கோட்டைவிட்டதால் கொஞ்சம். இப்போது மாதிரி வீடியோ DRS ரிவ்யூ கிடையாதே. மூன்றாம் அம்பயர் பிறக்கவில்லை. சில அருமையான இந்திய வீரர்கள் பெயர் இன்னும் நினைவில் இருக்கிறது. திலீப் சர்தேசாய், விஜய் மஞ்சரேகர் , பட்டாடி நவாப் தான் கேப்டன். சலீம் துர்ரானி, ஜெயசிம்மா , சந்து போர்டே , இங்கிலாந்து வீரர்கள் வெள்ளையாக பேண்ட் ஷார்ட் போட்டுகொண்டு வெள்ளை தொப்பியோடு வெயிலில் ஓடி ஆடி பந்தை போட்டு, பிடித்து ஆக்ரோஷமாக விளையாடினார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஆள் யாரென்று தெரியாது. எல்லோரும் ஒரேவிதமாக ஆடையணிந்து சிவப்பாக இருப்பதால் அடையாளம் தெரியாது. சில பெயர்கள் டிட்மஸ், பார்ரி நைட், கென் பாரிங்டன், மைக் ஸ்மித் தான் கேப்டன். மேட்ச் பார்த்தால் கூட மேச் பார்த்துக் கொண்டே ரன்னிங் கமெண்ட்ரி கேட்பவரிடமிருந்து விபரம் சேகரிப்பேன். இந்த ஐந்து நாள் விளையாட்டில் இந்தியா ஜெயித்த மேட்ச் அது என்பதை பேப்பரில் படித்து தான் அறிந்துகொண்டேன்.
ஐந்து நாட்களும் சேர்ந்தாற்போல் ஒவ்வொரு பந்து வீச்சையும் மட்டையடியும் விடாமல் பார்த்ததில்லை.
இப்போது ஒரு வார காலத்தில் ஒரு பந்து விடாமல் கிரிக்கெட் டெஸ்ட் மேச் ரெண்டு பார்த்தேன். மூன்றாவது நான்காவது இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் மேச்கள். ஒன்று இரவும் பகலும், ஒன்று காலை முதல் மாலை வரை.
கடந்த மூன்று நாளாக எனக்கு உடல் வலி. கொரோனா தடுப்பு கோவிஷீல்டு ஊசி போட்டு அந்த இடத்தில் வலி தொட்டால் இருக்கிறது. அழுத்தக்கூடாது, தேய்க்கக்கூடாது. உடல் வலி பாதிக்கு மேல் ரெண்டு நாளாக இல்லை. இந்தியா இங்கிலாந்து நான்காவது மேட்ச் அகமதாபாத் மொடேரா மைதானத்தில் நடப்பதை காலை 9.லிருந்து மாலை 5 வரை பார்த்தேன். மூன்றே நாளில் இன்று போட்டி முடிந்து இந்தியா வென்றுவிட்டது. எவ்வளவு நுணுக்கம் அந்த விளையாட்டில் இருக்கிறது, பந்து வீசும் லாவகம், பந்தை எதிர்பார்த்து ஆட்களை நிறுத்துவது, இடது வலது கை சுழல் வீச்சு, வேகப்பந்து விவரங்கள் புரிந்தது. பந்தை கழுகு போல் கவனிக்கும் அம்பயர்கள், அவர்கள் சொல்வது சரி என்றும் தப்பு என்றும் நிரூபிக்க ரெவியூ வீடியோக்கள், நடுநடுவே அறுவை ஜோக் பேசும் கம்மெண்ட்டேடர்கள். என் டிவியில் இங்கிலிஷ் கமெண்ட்ரி வராததால் தமிழ் கமெண்ட்ரி தான் கேட்க நேர்ந்தது. அதனாலென்ன.
கவாஸ்கர் விளையாட ஆரம்பித்து இன்று 50 வருஷம் என்று அவர் தலையைக் காட்டினார்கள். தலைக்கு கவசம் போடாமல் ஆடிய தலைக்கு வந்த ஆபத்தான பந்துகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித் த அதிர்ஷ்டன் , தீரன். முதலில் பத்தாயிரம் ஓட்டங்கள் எடுத்த மா வீரன் என்றெல்லாம் அறிந்தேன்.
அஷ்வின், அக்ஷர், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் போன்றோர் அசகாய சூரர்கள் என்று நிரூபித்ததைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. நடுநடுவே புயல் காற்றில் சிக்கி சட்டையிழந்து கையது கொண்டு மேலது போர்த்திய ஆளுக்கு ஒரு பெண் டியோடரண்ட் எனும் நாற்ற நாசினி நீட்டி இந்தா முதலில் பூசிக்கொள் என்று கொடுக்கும் விளம்பரம் நாற்றமெடுத்தது. குமட்டியது. இன்னும் சில பேவார்ஸ் விளம்பரங்கள்.. சரி சரி , ஒவ்வொருவரும் பிழைக்க வேண்டாமா? வேறு வழியில்லை அப்போதெல்லாம் சில வினாடிகள் கண்ணயர்ந்தேன். மைதான சப்தம் கேட்டு மீண்டும் விழித்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
ABHIVADHANAM. - J K SIVAN A couple of days ago I wrote about performing Abhivaadhanam to elders as directed in Vedhas and traditional...

No comments:
Post a Comment