Thursday, August 20, 2020

PESUM DEIVAM


பேசும் தெய்வம்        J K  SIVAN  


           
                    அப்பா கொடுத்த  உயிர் 

1978-79   காலகட்டத்தில் மஹா பெரியவா கர்நாடக தேசத்தில் ஹம்பி என்கிற ஊரில்  கேம்ப்  போட்டிருந்தார்.    வித்யாரண்ய மடத்தில்   சிலநாள்  வாசம், பிறகு  கமலாபுரம்,  பம்பாஸரோவர்,  சபரி  ஆஸ்ரமம்,  ரிஷ்யமுகம், ஹேமகூடம், மால்யவந்தம், போன்ற க்ஷேத்ரங்கள்.   ஹோசூரில்  வசந்த நவராத்ரி பூஜை நிகழ்த்தினார். 

ஹம்பியில்  ஒரு  அற்புதமான  ஒரு பழைய  கலைச்சிற்ப பொக்கிஷம்  ஸ்ரீ விருபாக்ஷர் ஆலயம் என்று இருக்கிறது.  அதில் தேர் திருவிழா. பழைய தேர்  சிதிலமடைந்து புது தேர் பெரியவா சென்றபோது ஊர்வலம் வந்தது.  மஹா பெரியவா அந்த தேரை நிர்மாணித்த  விஸ்வகர்மாவை   
ஆசிர்வதித்தார்.   அந்த  சிற்பிக்கு  தோடா , சால்வைகள் பிரசாதங்கள் எல்லாம் கௌரவப்  பரிசாக  அளிக்கப்பட்டது. 

நான்  ஹம்பியைப் பற்றி, அதில் உள்ள ஆலயத்தைப் பற்றி  விவரமாக அப்புறம் எழுதுகிறேன். அதை  இதோடு  இப்போது  சேர்க்க  வேண்டாம்.    அதற்கு முன்  ஒரு அருமையான  பெரியவா பக்தர், இல்லை, பக்தை  பற்றி சொல்லி ஆகவேண்டும். மிக ருசிகரமான  நான் படித்த ஒரு  தகவல் இது. 

கர்நாடகாவில் பெல்லாரி ஜில்லாவில் ஹோஸ்பெட் என்கிற ஊர் இருக்கிறது  ஹம்பிக்கு  அருகில் உள்ள ஊர்.   ஹோஸ்பெட் ஊரில் டாக்டர்  ஆனந்தவல்லி என்று பெரியவாளின்  பக்தை  ஒருவள்.  ஹம்பியில் காஞ்சி  பெரியவா வந்திருக்கும் சமாச்சாரம் காதில்  கேட்டது முதல் தினமும் ஹம்பிக்கு  ஓடி  வந்துவிடுவாள். அவரைப் பார்க்காமல் பேசாமல் போகவே மாட்டாள்.    அவளுக்கு  அவரோடு  யார் இருக்கிறார்கள், என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார் பெரியவா என்பதெல்லாம் ரெண்டாம் பக்ஷம். மனதில்  நினைத்ததை  வார்த்தைகளில்  கடகடவென்று  கொட்டிவிடுவாள்.  பெரியவா  மஹா ஸ்வாமியை   வாய் நிறைய ''அப்பா  அப்பா'' என்று  தான் நொடிக்கு நூறு தடவை கூப்பிடுபவள்.   ஐந்து நிமிஷம்  அவள் பெரியவா கிட்டே பேசினாள்   என்றால் குறைந்தது  ஐம்பது ''அப்பா''  அதில்  நிச்சயம் இருக்கும். 

 ஒரு பாசமான செல்லப்பெண்   வயதான அப்பா மேல் எவ்வளவு அக்கறை கொள்வாளோ,  எப்படி உரிமை கொண்டாடுவாளோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லை  ஆனந்தவல்லியின் அணுகு முறையில்.  பெரியவாவை விட அவள்  கை  பேச்சில் ஓங்கியிருக்கும். அவர் குரல் அமுங்கி விடும். 
அவர் எப்படி இதை அனுமதித்தார்? அவருக்கா  தெரியாது?

''அப்பா  நீங்க  இப்படியெல்லாம் பட்னி  கிடக்கக்  கூடாது.  ஆமாம் நான் சொல்லிட்டேன்  பா. . கண்டிப்பா நீங்க  பாலாவது  சாப்பிடணும்.  அதுலே  தப்பில்லை''  என்று  மஹா பெரியவா கிட்டேயே சாஸ்திரம்  சொல்லுவாள். 

''அப்பா, அடிக்கடி  இனிமே   நீங்க  பழ ரசம்  தினமும் ரெண்டு வேளை   சாப்பிடணும். இந்தந்த பழங்கள், காய்கள் தான்  உங்களுக்கு  நல்லது'' என்று லிஸ்ட் கொடுப்பாள்.  மஹா பெரியவா பதிலே பேசாமல் அவளை ரசித்துக்கொண்டிருப்பார்.   அவள் போனபிறகு  சிஷ்யர்கள் தங்களுக்குள்  ஒருவரை ஒருவர்  பேரைச்சொல்லி  அதோடு  அப்பா  நிறைய சேர்த்து கேலி செய்து விளையாடு வார்கள். 

''என்னப்பா சந்துரு,  சாப்பிட்டியாப்பா,  பாலு  நன்னா  தூங்கினியாப்பா, ...  இது போல.  ஆனால்  டாக்டர் ஆனந்தவல்லியின்  ''அப்பா''  தனி ரகம். அதில் வேஷம்  வேடிக்கை கிடையாது. .  ஒளி வீசும் சுத்தமான  பக்தி ரசம் தோய்ந்த  வைரம் அவள் வார்த்தைகள் . 

ஒரு நாள்  நடுராத்திரி.  திடீரென்று  பெரியவா தங்கிய இடத்தின் கதவைத் தட்டி ''அப்பா அப்பா'' என்று உரத்த குரலில் டாக்டர் குரல். 

கதவைத் திறந்து  சிஷ்யர்கள்  டாக்டர் நிற்பதை பார்த்துவிட்டு   அவளை திரும்பிப்  போகச் சொன்னார்கள்.  

என்ன இது நடு  ராத்திரியில் அட்டகாசம். இங்கே  ராத்திரி வேளையில் பெண்கள் வரக்கூடாது. போய்விட்டு காலையில்  வாம்மா ''   

அவள் கேட்பதாக இல்லை. மறுபடியும் உரத்த குரலில்  ''அப்பா  அப்பா .''   நடுநிசியில்  அவள் குரல் எங்கும் கேட்டது.  சிஷ்யர்களுக்கு ரொம்ப கோபம். 

''நீ  ஒரு டாக்டர்  என்கிறே? நாங்கள் சொல்வது உனக்கு புரியலே?  முதல்லே  இங்கிருந்து போம்மா''

''அங்கே என்னடா  இரைச்சல்? யார் வந்திருக்கா?'' 
 பெரியவா குரல் உள்ளே இருந்து கேட்டது. தொடர்ந்து மஹா பெரியவா அங்கே  வாசல் வரை வந்து  விட்டார்.  அவரைப் பார்த்த அடுத்த  வினாடி  டாக்டர்  தரையில் தடாலென்று விழுந்தாள். 

''எழுந்திரு  இங்கே வா ? என்ன விஷயம், எதுக்கு இப்போ வந்தே?'' 

சிஷ்யர்கள்  பெரியவா  வருவார் என்று   எதிர்பார்க்கவில்லை. அவர் கொஞ்சமும் கோபப்படாமல் அவளோடு பேசியதில்  அதிர்ச்சி. 

''அப்பா,  அப்பா,  உங்க கிட்டே சொல்றதுக்கு தான் ஓடோடி வந்தேன் பா.   நான்  இன்னிக்கு  ஒரு கிராமத்துக்கு போனேன் பா.   பாவம் ஒரு சின்ன வயசு  பொண்ணு  பா. ரொம்ப  உடல்நிலை மோசமா இருந்ததுப்பா,  எவ்வளவோ  என்னாலான தெல்லாம் செஞ்சேன் பா.  அவளை பொழைக்க வைக்க முடியலேப்பா.  போய்ட்டாப்பா''.
டாக்டர் வாய்விட்டு  அழுதாள்.

 ''அப்பா  அப்பா,   அப்புறம் நடந்ததை சொல்றேன் கேளுங்கப்பா.  கண்ணுலே ஜலம்  விட்டு அழுதேன் பா.  அப்பா அப்பான்னு  உங்களை நினைச்சு 108 தடவை கூப்பிட்டேன் பா.'' செத்துப்  போனவ  கண்ணை திறந்தாப்பா''. உயிர் வந்துடுத்துப்பா.  அவளுக்கு மருந்து எல்லாம் கொடுத்து  பாத்துக்க சொல்லிட்டு வந்தேன் பா.    நாள் முழுக்க நேரம்  அந்த  ஊரிலயே  செலவாயிடுத்து பா.  உங்களை பாக்க,  இதை  வந்து  உடனே சொல்ல முடியலேப்பா.   எப்படியும் இன்னிக்கு ராத்ரிக்குள்ளே  யாவது சொல்லணும் தான் வந்தேன் பா ''

''நீ  ராத்ரி நேரம்  இங்கே  வந்திருக்க வேண்டாம் . நான் இப்போ  முழிச்சிண்டு இருந்தேன்.   பரவாயில்லை. நான் இங்கே இல்லேன்னா  நீ என்ன பண்ணியிருப்பே?''

ஒருநிமிஷம்  பெரியவாளுக்கு டாக்டர் பதில் சொல்லவில்லை.

''எனக்கு அப்பாவைப்  பாக்கணும்னு தோணித்து பா.  அந்த  வேகத்தை அடக்க முடியலை பா. 
ராத்ரியோ, பகலோ, உங்களை எப்படியும் பாத்துடுவேன் என்று நம்பிக்கை இருந்துது பா . அதனாலே வந்தேன் பா.   எங்க அப்பாவை பார்க்க  எனக்கு நேரம் என்ன, வேளை என்ன,  பா?''

மகா பெரியவா அந்த  பூரண பக்தையை அவள் மனதை அறிந்தவர்.   எனவே அவளுக்கு  ஆசீர்வாதங்கள் தந்து  அனுப்பினார் ''

''உங்களை பார்த்தாச்சு ப்பா.  நான் இப்போ போறேன் பா. காலம்பற  விஸ்வ ரூப தரிசனத்துக்கு வந்துவிடுவேன் பா''

மறுநாள் காலை ஐந்து மணிக்கு வந்து நின்றாள்.  சிஷ்யர்களுக்கு அவள்  அம்பாளாக தோன்றினாள் .  இப்படி  ஒரு  அதீத பக்தியைக்   கேள்விப்பட்டதுண்டா,  பக்தையைப்  பார்த்ததுண்டா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...