Wednesday, August 19, 2020

O RAMA NEE NAMAM

 


ஓ ராமா .   நீ  நாமம்..எந்த ருசி ரா?     J .K. SIVAN 


ராமா  நீ  பிறந்த  அயோத்தியில்  உனக்கு  ஒரு அற்புதமான  கோவில் தயாராகப்போகிறது. அடிக்கல் அஸ்திவாரம் கல் நல்ல நாள் பார்த்து  பிரதிஷ்டை பண்ணியாகி விட்டது.  குறைந்தது ஆயிரம் வருஷங்களாவது உன்னை உன் ஆலயத்தில் எத்தனையோ  பேர்  வந்து தரிசிப்பார்கள்.   உன் ஆலயம் மீண்டும் நிர்மாணித்தபோது இருந்தவர்கள்  அதிர்ஷ்டக்காரர்கள், புண்யவான்கள் என்று  அவர்கள் புகழும்போது  நானும் ஒரு அதிர்ஷ்டக்காரன், புண்யவான் என்று என்  ஆத்மா மகிழும்.

ராமனைப் பற்றி ரெண்டு பாட்டுகளை பற்றி சொல்கிறேன். என்னை மட்டுமல்ல. அநேகரைச்  சுண்டி இழுத்த அற்புத பாடல்கள். ஒன்று தனக்குவமை இல்லாத ஸ்ரீ மதுரை சோமு பாடிய ''ஓ ராம, நீ நாமம் எந்த ருசிரா.... மறைந்த என் தமையன் ஜம்புநாதய்யர் இதை அற்புதமாக பாடுவார்.  என்னைப்போலவே  அவருக்கும் சங்கீதமும் தெரியாது தெலுங்கும்  புரியாது.

பத்ராசல ராமதாசர் க்ரிதி இது.

ஓ ராமா நீ நாமம் ஏமி ருசி ரா
ஸ்ரீ ராம நீ நாம எந்த ருசி ரா

அடே ஓ ராமா, ஸ்ரீ ராமா, உன் நாமம் என்ன அருமையான, எவ்வளவு இனிமையான ருசியப்பா என்று துவங்கும் அற்புத பாடலை பத்ராசல ராமதாசரைப் போலவே அணு அணுவாக ருசித்து ரசித்து பூர்வி கல்யாணி ராகத்தில் பாவ பூர்வமாக  மதுரை சோமு பாடும் அழகுக்கு ஈடேது.  அந்த கம்மல் குரலில்  பூர்வி கல்யாணி  ராகத்தில் எவ்வளவு அற்புதமாக செவிக்கு  இன்பம் தருவார். 

நான் வேலை செய்த கப்பல் கம்பெனியில் மதிய உணவுக்கு  எதிரே  மவுண்ட் ரோட்டில், (இப்போது அண்ணா சாலை )  ஹோட்டல் சியாம பிரசாத் என்ற  உடுப்பி ஹோட்டல். அதில் மதிய உணவு  ருசியாக இருக்கும்.  எங்களுக்கு  மாதாந்திர டிக்கெட் உண்டு.  நான் உட்கார்ந்த மேஜையில் எனக்கு அடுத்த நாற்காலி காலி அதில் ஒருவர் அவசரமாக பசியோடு வந்து அமர்ந்தார், மாநிறம்,  ரெட்டை நாடி  என்று சொல்ல முடியாது.  உதட தூக்கி வாரப்பாட  கேசம், கம்மல் குரல், வெள்ளை ஜிப்பா வின் கையை மடக்கி மேலே தூக்கி விட்டுக்கொண்டார். அருகில் இருந்த என்னை பார்த்தார்.  சார்  மதுரை.....   ஆமாம்பா, என்கிறார்  மதுரை சோமு,. சிறிது நேரத்தில் அவருக்கு அடுத்த நாற்காலியில் குன்னக்குடி வைத்யநாதன். இருவரும்  எங்கோ போய்விட்டு சாப்பாட்டு நேரத்தில் அங்கே வந்திருக்கிறார்கள்.  அளவு சாப்பாடு தான். இருந்தாலும்  போதுமானது.  
''சார்  நான் உங்கள் ரசிகன், நிறைய பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பேன்.  ஓ ராம,,,, ரொம்ப பிடிக்கும்..''
''சந்தோஷம்  பா.  நீங்க என்ன பண்றீங்க?''
''இதோ எதிரே  ''தன் பில்டிங்''  ஒரு கப்பல் கம்பெனியில் வேலை செய்கிறேன்.'' 
இப்போது அந்த  சந்திப்பை நினைத்துப் பார்க்கிறேன்.. மதுரை சோமுவின்  குரலை உங்களோடு மீண்டும் ஒருமுறை கேட்க  அந்த  ஓ ராம  பாட்டை  யு ட்யூபில்  கேளுங்கள்.  லிங்க் தருகிறேன்.  
https://youtu.be/-RHNf-retck
அதோடு அடுத்த பாட்டு பற்றியும் சொல்கிறேன். அதுவும் இன்னொரு மதுரை காரர் பாடியது. மதுரமான இந்த இரண்டு பாடல்களும் ராமனைப் பற்றி மதுரை காரர்கள் பாடியது அவன் அருளாலே தான்.

''ஓர ஜோபுஜு.... ''   கன்னட கௌளை என்று ஒரு ராகம். அதிகம் பாடப் படாத ஒரு சுக ராகம். மிக அழகாக, மனதை மயிலிறகால் வருடினார் மதுரை மணி அய்யர்.

ஆஹா எவ்வளவு அருமையான பாடல். 1767ல் தஞ்சாவூர் ஜில்லை திருவாரூரில் பிறந்து தனக்கென ஒரு பாணியில் தெலுங்கில் ராமனை துதித்து சதா சர்வகாலமும் ராமனே மூச்சாக வாழ்ந்த ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் பாடல். ராகத்திற்கென்றே பாடலா, பாடலுக்கேற்ற ராகமா, பாவத்திற்கேற்ற ராகமா, தாளம் கூடவே பிறந்ததா!! அல்லது பக்தியில் எல்லாமே கலந்தது தானா? ஒருவேளை ராமன் மேல் பாடியதால் அலாதி சுகமா? சங்கீத மும்மூர்த்தியில் ஒருவரான தியாகராஜஸ்வாமிகள் மட்டுமே இந்த ரகசியம் அறிவாரோ? எத்தனை வருஷங்கள், எவ்வளவு பாடகர்கள் பாடியிருக்கிறார்கள், இன்னும் எங்கெங்கேயோ நான் இதை எழுதும்போது யாராவது பாடிக்கொண்டே தான் இருப்பார்கள்!

ராமனின் பிள்ளையாகவே அவர் பிறந்தார். ஆம் அப்பா பெயர் ராமப்ரம்மம். அம்மா சீதம்மா --- சீதம்மா மாயம்மா எவ்வளவு வாஸ்தவமான பாடல். அம்மாவைப் பெற்ற தாத்தா கிரிராஜர் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் கவி.
தனது குரு சொண்டி வெங்கட்ராமணய்யாவின் முன்னிலையில் அரங்கேற்றம் .ஆஹா அப்போது தான் இயற்றிய பாடலை அவர் பாடினார். இன்றும் சாஸ்வதமாக அது பஞ்ச ரத்ன கீர்த்தனைகளில் ஒன்றாக அமைந்து நம்மை எல்லாம் மகிழ்விக்கிறது. எந்தரோ மஹானுபாவுலு''

இப்போது தியாகராஜ ஸ்வாமிகளின் இந்த பாடல் பற்றி மட்டும் சொல்கிறேன்.

'' ஓர ஜூபு ஜூசேதி ந்யாயமா
ஓ ர(கூ)த்தம நீவண்டி வானிகி

நீர(ஜா)க்ஷ முனு நீ தாஸுலகு
நீ(கே)டி வாவுலு தெல்பவே (ஓ)

மான(மி)ஞ்சுகைன நீகு தோச லேக
போயின வைன(மே)மி புண்ய ரூபமா
தீ3ன ரக்ஷ(கா)ஸ்ரித மானவ
ஸந்தான கான லோல த்யாகராஜ நுத (ஓ)

இதன்  அர்த்தம் :

ஹே ராமச்சந்திரா, நீ செய்வது உனக்கே நன்றாஇருக்கிறதா? என்னை நேராகப் பார்க்க விருப்பமில்லை தானே. அதனால் தான் பார்த்தும் பார்க்காமலுமாக உன் கடைவிழிக் கண்ணால் அலட்சியமாக பார்க்கிறாயா? அடே ரகுகுலத்தில் உதித்த உத்தமா! இது நியாயமா? சொல். இது உன்போன்றோர் செய்யும் காரியமா?

ஓஹோ, தாமரைக் கண்ணனே, ஒருவேளை நான் முன் பின் தெரியாதவனோ. உன் தொண்டர்களில் ஒருவன் இல்லையோ, உன்னோடு எந்த வித உறவும் கொள்ளாத வெளி ஆசாமியோ? செல்லப்பா, நீ சொல்லப்பா.
எதற்கு என்மேல் இந்த கடைவிழிப் பார்வை?

நீ புண்ணியனாயிற்றே ராமா, மானம் என்பது துளியேனும் ஒருவேளை உனக்கு தோன்றவில்லையா? ஏதாவது காரணமோ ? நீ எளியவர்களைக் காப்பவன் என்று உலகமே சொல்கிறதே. நான் எளியவன் இல்லையா, என்னைப் பார்த்தால் அல்லவோ உனக்கு புரியும்? உன்னைத் சார்ந்தவர்களின் சந்தானமே! இசையில் மகிழ்பவனே, எனக்குத் தெரிந்த இசையெல்லாம் உன் மீது அல்லவோ இந்த தியாகராஜன் பொழிகிறேன். அப்படியிருந்தும் என் மீது கொஞ்சூண்டு கடை விழி ஓரப்பார்வை மட்டும் தானா? இதை விட வேறு வழி இல்லையா என்னைப் புறக்கணிக்க?

இந்த லிங்கை    https://youtu.be/QUcNrJop1PI கிளிக் செய்தால் மதுரை மணி அய்யர் உங்களுக்கும் பாடிக் காட்டுவார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...