Wednesday, August 19, 2020

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம்    J K  SIVAN  





                         ''  இந்தாங்கோ  குடிக்க ஜலம்''    
  

நங்கநல்லூரில்  ராஜ  ராஜேஸ்வரி கோவில்  போனதுண்டா?  எங்கே இருக்கிறது?
கேள்வி கேட்பவர்களுக்கு உடனே கிடைக்கும் பதில்:   ''ஆஹா    16 படி மேலே   16படி கீழே இறங்கி  மேலே  அம்பாளை தரிசித்து இருக்கிறேனே . அது தில்லைகங்கா  நகர்  என்கிற  பகுதியில் 16வது தெருவில் இருக்கிறது.  கட்டாயம் போய் பாருங்கள் ''

நங்கநல்லூரில் இருப்பவர்களுக்கே  இங்கே  இன்னொரு புராதன 500  வருஷ  ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி கோவில் இருக்கிறதே   அது தெரியுமா ?  தெரிந்தால் சந்தோஷம்.  தெரியாவிட்டால் இதோ கொஞ்சம் விஷயம். உடனே சென்று தரிசியுங்கள்.  இந்த கோவிலுக்கு ஒரு தனி விசேஷம் உண்டே அது தெரியாது இல்லையா? அதையும் சொல்கிறேன்.

மஹா பெரியவா  நடந்தே  எல்லா  சிவஸ்தலங்களும் செல்பவர்.  ஒருதடவை ஒரு பெரிய  சுற்றுலா மாதிரி  ஒரு ஆலய தர்சனம்.  

திரிசூலம் மலைகள் அடியில் ஒரு அருமையான  அமைதியான  திரிசூலநாதர் கோவில் இருக்கிறது. அதற்கு விஜயம் செய்துவிட்டு   திருசூலநாதர்  திரிபுர சுந்தரி  தரிசனத்துக்குப் பிறகு  மெதுவாக வடக்கு நோக்கி நடந்து  வந்தார். அப்போது மீனம்பாக்கத்துக்கும்  பரங்கிமலைக்கும் இடையே  இப்போது இருக்கும்  பழகன் தங்கள்  ரயில் நிலையம் கிடையாது.   பரங்கிமலை ரயில் நிலையம் அருகே ஒரு அற்புதமான தொன்றுதொட்ட  சிவாலயம்  இருக்கிறது.  நந்தீஸ்வரர்  பிருங்கி மகரிஷிக்கு தரிசனம் கொடுத்த இடம். பிருங்கி மலை தான் பறங்கி மலை ஆகிவிட்டது.  அம்பாள் ரொம்பவே அழகாக இருப்பாள். ஆவுடை நாயகி என்று பெயர்.  அவர்களை தரிசிக்க  மஹா பெரியவா நடந்து வந்தார்.  

நங்கநல்லூர் அப்போது உருவாக வில்லை.  பழவந்தாங்கல் என்கிற கிராம பெயர். அதன் வழியாக நடந்துவந்தார். வெயில் நேரம்.  இப்போது நேரு உயர்நிலைப்பள்ளி இருக்கிறதே  நேரு காலனி,  நங்கநல்லூரில் அந்த பக்கமாக வந்தார்.  பள்ளி மைதானத்துக்கு பின் புறம் ஒரு அரசமரம்.  அதன் அடியில் சற்று இளைப்பாறலாம் என்று அமர்ந்தார். 

கூட வந்தவர்கள்  சற்று தள்ளி வெவ்வேறு  இடங்களில் அமர்ந்து சிரம பரிகாரம் செய்தார்கள்.  மஹா
பெரியவாளுக்கு தாகம் தொண்டை யில் வறட்சி.   மெல்லிய குரலில்  சற்று தள்ளி அமர்ந்திருந்த மடத்து தொண்டர்களில் ஒருவர் பெயர் சொல்லி அழைத்தார்.    மறுபடியும்  அவர் பெயரைச் சொல்லி,  ''கொஞ்சம்  
குடிக்க ஜலம்  கொண்டுவாடா ''  என்றதும் கூட  அந்த  தொண்டர் காதில் விழவில்லையோ, என்னவோ,  அந்த தொண்டர்  அருகே எங்கோ சென்றார். 

சரி  அவன்  வரட்டும், அதுவரை  தாகத்தோடு காத்திருப்போம் என்று மஹா பெரியவா தீர்மானித்துவிட்டார் .  தாகத்தை லக்ஷியம் பண்ணாமல்   கண்ணை மூடி  ஜெபத்தில் ஆழ்ந்துவிட்டார். 

அடுத்த  ஒரு சில  நிமிஷங்களில்  ஒரு சிறு பெண் குழந்தை குரல் கேட்டது.  கண்ணைத்திறந்து பார்த்த மஹா பெரியவா முன் லக்ஷணமாக  ஒரு சிறு பெண் கையில்  ஒரு சுத்தமான   சொம்பு  நிறையஜலத்தோடு பெரியவர்  எதிரில் நின்றாள் . 

''இந்தாருங்கள்  குடிக்க  நீர்  கேட்டீர்களே'' என்று சொம்பை நீட்டினாள். 

மிக சந்தோஷத்தோடு    சொம்பு ஜலத்தைபருகி விட்டு  அந்த பெண்ணிடம் சொம்பை திருப்பிக் கொடுத்தார். முகத்தில் புன்னகையோடு அந்த பெண்  சொம்பை வாங்கிக்கொண்டு,  அவரை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள் .
தொண்டரும் அருகே வந்து நின்றார்.  

'யாரடா அந்த குழந்தை, அது கிட்டே   ஜலத்தோடு சொம்பை கொடுத்து அனுப்பினே?''

''பெரியவா  க்ஷமிக்கணும். நீங்க  ஜலம் கேட்டதே எனக்கு தெரியாது. நான் எந்த குழந்தையும்  இங்கே பாக்கலியே . யார் கிட்டேயும்  தீர்த்த  சொம்பு  கொடுத்து அனுப்பலையே ''

சுற்று முற்றும் ஜன நடமாட்டம் இல்லாத இடம்.  மஹா பெரியவா மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்தார்.
 
அந்த குழந்தையின் முகம், அவள் உடை  ஆபரணம் எல்லாமே  அவர் மனதில்  அந்த குழந்தை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி என்று புரிந்துவிட்டது.  அடடா  அம்பிகையே அல்லவோ வந்து எனக்கு ஜலம்  கொடுத்திருக்கிறாள்''

அந்த ஊர்  கிராம பெரியவர்களை எல்லாம் அழைத்துவரச் சொன்னார்.  பெரியவா வந்திருக்கும் செய் தி
அதற்குள் பரவிவிட்டதால்  ஊர்மக்கள் தரிசனத்துக்கு வந்துவிட்டார்கள். 

"இந்த இடத்தில்  ஸ்ரீ  வித்யா  ராஜராஜேஸ்வரி எங்கோ  பூமிக்கடியில் இருக்கிறாள்.  உடனே  ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிப்பேசி   தோண்டி  கண்டுபிடியுங்கள்''  என்று சொன்னார் மஹா பெரியவா.

மஹா பெரியவா பரங்கிமலை நோக்கி நந்தீஸ்வரர்  ஆலயத்துக்கு பிரயாணம் தொடங்கிவிட்டார்.  ஊர்க்காரர்கள் சும்மா இருப்பார்களா. 

மஹா பெரியவா சொன்ன இடத்தில், தோண்டிப்பார்த்தார்கள்.   குழந்தை வடிவான அம்பிகை கிடைத்தாள் , தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரி  விக்ரஹமும்  கிடைத்தது.    காஞ்சிபுரத்திற்கு சென்று மஹா பெரியவாளுக்கு விஷயம் சொன்னார்கள்.  அம்பாள் பெயர்    '' ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி '' ஒரு ஆலயம் எழுப்பி  அம்பாளை பிரதிஷ்டை பண்ணி   நித்ய பூஜை விடாமல் செய்ய  ஏற்பாடு பண்ணுங்கள்''

இந்த  விஷயம் தெரிந்தவர்கள் அந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்ய தவறவில்லை.  நான் பலமுறை சென்றிருக்கிறேன். அமைதியான ஆலயம்.   பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து  நேரு காலனி   2வது தெருவில் இந்த ஆலயத்துக்கு  நடந்தோ, ஆட்டோ ரிக்ஷாவிலோ கூட வரலாம்.  டெலிபோன்:  +91 93821 20248


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...